கண்ணா, சுபத்ரா ரெண்டுபேரும் சாப்பிட வாங்க என்று தன் பிள்ளைகளை அழைத்துவிட்டு, தன் கணவன் வாசுதேவனையும் சாப்பிட அழைத்து வந்தாள் தேவகி. அனைவரும் சாப்பிட்டபின் பாத்திரங்களை கழுவி ஒதுங்கவைத்து தன் அறைக்குச் சென்றாள். கட்டிலில் கணவன் பலத்த யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று என்னவென்று கேட்க, வாசுதேவன் தன் மனைவியிடம் பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர்களின் பள்ளி படிப்பு, கல்லூரி சேர்ப்பது, தங்களின் நிதி நிலமை என்று அனைத்தும் பேசிவிட்டு உரங்கினர்.
மறுநாள் காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருக்க மனைவி தந்த காலை உணவை உண்டுவிட்டு சுவரொட்டி ஒட்டும் தன் வேலைக்கு கிளம்பி சென்றார் வாசுதேவன். "ஏங்க இந்த டிரெயினேஜ் நாலுநாளா அடைச்சிட்டு இருக்கே கார்பரேஷன் ஆஃபிசுக்கு போன் பண்ணி சுத்தம் செய்ய வரசொல்லலாமில்லையா. குழந்தைங்க இருக்க இடம். இன்ஃபெக்ஷனானா என்ன செய்யிறது? நாந்தான் வேலை பளுவில் மறந்துடறேன். நீங்க கொஞ்சம் பாருங்களேன்” என்று தன் பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். ”சரிங்க பார்க்கிறேன். நானும் மறந்துதான் போயிடறேன். இப்பவே போன் செஞ்சிடறேன்” என்றுவிட்டு போன் செய்ய சென்றார் மற்றொருவர்.
போன் செய்த சற்றுநேரத்தில் டிரெயினேஜ் சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மை பணியாலர்கள் வந்தனர். ஒருவர் உள்ளே இறங்கி சுத்தம் செய்துகொண்டிருக்க, மற்றொருவர் மேலிருந்து உதவியபடி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறை இருந்தபோதும் ஆங்காங்கே இப்படி நடப்பதுண்டு. எந்த சட்டங்களையும் ஒழுங்காக பின் பற்றாதவர்களாலும், அவர்களை கடுமையாக கண்டித்து சட்டங்களை பின் பற்ற வலியுறுத்தாத அரசு அதிகாரிகளாலும்தான் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
ஒரு சராசரி மனிதனின் சிந்தனை எப்பொழுதும் குடும்பம், வேலை, பணம், உணவு உரக்கம் இவற்றை மட்டுமே சுற்றிவரும். பசிக்கோ ருசிக்கோ உணவு உண்டால் போதும் அது செறித்து அடுத்த வேலை உணவு கிடைத்தால் போதும் என்பது மட்டுமே பெரும்பாலானோர் கொள்கை. இதுதான் கசப்பான எதார்த்தமான உண்மை. இப்படி டிரெயினேஜ் அடைப்பு வந்தால் மட்டுமே அவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கிறது, அதற்காக தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஞாபகம் வரும்.
தன் துருநாற்றத்தை தானே தாங்க இயலாது அடுத்தவரை சுத்தம் செய்ய அழைப்பர். 25 சதவிகிதம் வீட்டில் சமைத்து, 75 சதவிகிதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்டதெல்லாம் கழிவுகளாய் வெளியேறிக்கொண்டிருந்தது. இது போதாதென்று குட்டி குட்டி காகிதங்கள், முடி, சிகரட் துண்டங்கள், பாலித்தின் பொருட்கள், சின்ன சின்ன நெகிழி பொருட்கள், பெண்களின் நேப்கின்கள் என்று அனைத்து அறுவருப்பு பொருள்களையும் அழகாக தன்னை அழுக்குப்படுத்திக்கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
சட்டென்று விஷ வாயு தாக்க மூச்சுத் திணறியது. “ஐயோ! காப்பாற்றுங்கள்!” என்று அலறித் துடித்தார். விஷவாயு தாக்கியதில் தடுமாறி தன்னிலை இழந்தார். சாக்கடை கழிவுகள் வாய், மூக்கு, கண், காது என்று அனைத்து உறுப்புகளிலும் புகுந்து உயிரை சூரையாட தொடங்க, வாந்தியும் இருமலும் ஏற்பட்டு கண்கள் செருகி மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். முறையான பாதுகாப்பு இல்லாததால் உடனே விஷவாயு மூளையையும் தாக்கிவிட, மரணத்தை மடமடவென்று நெருங்கிக்கொண்டிருந்தார். உடனே மேலே நின்றிருந்தவர் குதித்து காப்பாற்ற முயல,அவரும் அந்த மரண வேதனையில் சிக்கிக்கொண்டார். . உயிர் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். யார் இறந்தாலும் இறப்புதான் உரியவர்க்கு அது இழப்புதான். அப்படி இருக்கையில் இவர்களை மட்டும் முறையாக பாதுகாக்காமல் இருப்பது என்ன ஞாயம்?
வெளிநாடுகளில் தனிமனித சுதந்திரத்தைப் பற்றியோ அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றியோ யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை. யார் சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் தலையிடுவதில்லை. ஆனால் சமூக ஒழுக்கத்திற்கு சின்ன கேடு வந்தாலும் சும்மா விடுவதில்லை. எல்லா துறைகளில் பணிபுரிபவருக்கும் முறையான பாதுகாப்பு கொடுக்கின்றனர். ஆனால் நம் இந்திய நாட்டில் தனிமனிதரைப் பற்றி புறணி பேசவே சரியாக இருக்கிறது. அண்டைநாட்டின் கலாச்சாரம் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களைப் போல் சமூகக் கட்டுப்பாடு வேண்டாமோ.
தன் வேலைகளை முடித்துக்கொண்டு அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வாசுதேவன். அப்போது பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று ஓடிச்சென்று பார்த்தார். பார்த்தவர் எதையும் யோசிக்காமல் குடும்பம் உயிர் அனைத்தையும் துச்சமாய் எண்ணிவிட்டு உடனே குதித்துவிட்டார் அவர்களைக் காப்பாற்ற.
இயற்கையான ஒரு விஷயத்தைக் கேலிக்கூத்தாக்கி கைக்கொட்டி சிரித்திருக்கிறோம். ஆனால் அது கேலி செய்யும் விஷயமல்ல கேடு செய்யும் விஷம் என்பதை மறந்து போனோம். வாயு பிரச்சனைகளைப் பற்றியும் அதன் தீர்வு பற்றியும் ஒவ்வொரு மனிதனும் மருத்துவரை அனுகியும் சமூக ஊடகங்களிலிருந்தும் தெரிந்துகொள்கின்றனர். தன்னைக் காத்துக்கொண்டால் மட்டும் போதுமா? தன் நாட்டைக் காக்க வேண்டாமா? உலகிலேயே மிகக் கொடிய விஷமென்றால் அது மனிதந்தான். உடலளவிலும் சரி. உள்ளத்தாலும் சரி. மனித விஷத்திடமிருந்து மனிதர்களைக் காப்பாற்ற மனிதர்களான அரசாங்க அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்? எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறையும், அது தொடர்பான சட்டங்களும் வந்தபின்னும் இன்றளவும் நிகழும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு என்ன முடிவு? கேள்விக்குறிதான்.
அங்கு இருந்தவர்கள் போலிசுக்கு தகவல் கொடுக்க, மீட்புப் பணி உடனடியாக நடைபெற்றது. மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு,அவர்களின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.
அடுக்கலையில் வேலையாக இருந்த தேவகி அண்ணி என்ற அன்பான அழைப்பில் வெளியே வந்து பார்த்தாள். தன் கணவருடன் வேலை செய்யும் ஒருவர் நின்றிருந்தார். ”வாங்க தம்பி. காஃபி எடுத்துட்டு வரேன் உள்ள வாங்க. அவர் எங்கே? இன்னும் அவருக்கு வேலை முடியலையா?” என்று கேட்டபடி காஃபி எடுக்க உள்ளே செல்லபோனாள். அதை தடுத்த அவர், “வேண்டாம் அண்ணி. வெளிய போகனும் நீங்களும் வாங்க. கொஞ்சம் அவசரம்.” என்று பதட்டமாய் அழைத்தார். அவர் முகத்திலிருந்த பதட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு உள்ளே கிலி பரவியது. நடுக்கத்துடன், “எ.எங்கே போகனும் தம்பி? யாருக்கு என்ன?” என்று திக்கித் திணறியபடி கேட்டாள்.
“அது. வந்து. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரை போகணும் அண்ணி வாங்க ப்ளீஸ். எல்லாம் சொல்றேன். இப்போ வாங்க” என்று தழுதழுத்த குரலில் அழைக்க, அதற்குமேல் எதுவும் கேட்காமல் கிளம்பிவிட்டாள். மனமெல்லாம் பாரமாய் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். உள்ளே செல்ல செல்ல தேவகிக்கு பயம் அதிகரித்தது. அங்கே தன் கணவரை சுயநினைவற்ற நிலையில் கண்டதும் பயமும் பதட்டமும் உச்சத்தை அடைந்து கதறலாய் வெளி வந்தது. “ஐயோ! என்னங்க. என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிங்க. எந்திரிங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று பதறித் துடித்தாள். வாசுதேவனின் உடன்பிறவா சகோதரரான அவர் நடந்ததைச் சொல்ல, அழுது கரைந்தாள் மனிதநேயத்தின் மறுவுருவான வாசுதேவனின் காதல் மனைவி.
சிகிச்சைப் பலனின்றி அந்த இரண்டு தூய்மை பணியாளர்களும் முதல் நாளே இறந்துவிட, மறுநாள் வாசுதேவனின் உயிரும் விண்ணில் பறந்தது. அந்த 24 மணிநேரமும் தேவகி தன் சுயத்திலேயே இல்லை. பித்துப்பிடித்தவள் போல் வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதிசயம் நிகழ்ந்து மீண்டும் தன் காதல் கணவன் தன்னிடமே வந்துவிடமாட்டாரா என்று ஏங்கினாள். விதி போடும் கணக்கிலிருந்து தப்பிவிட முடியுமா? அவளின் பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்க்கவில்லை. உழைப்பு, நட்பு, மனிதநேயம் மூன்றையும் ஒன்றாக விழிங்கிக்கொண்டது மரணம்.
மூவரின் உடலும் போஸ்ட்மாட்டம் செய்து அவரவர் குடும்பத்திடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையே அதிரும்படி வெடித்து அழுதார்கள் அவர்களின் குடும்பத்தினர். அப்பாவியான தேவகியையும், அவளின் இளங்கன்றுகளையும் பார்க்கும்போது அனைவருக்குமே கண்கள் கலங்கியது. தனியொரு பெண்ணாய் தன் பிள்ளைகளுடன் அமரர் ஊர்தியில் கணவனின் உடலோடு அவரது சொந்த ஊரான மதுரைக்கு பயணப்பட்டாள். தங்களுடன் வருகிறேன் என்ற தன் கணவரின் மானசீக சகோதரரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். இடைவிடாது அழுத பிள்ளைகளை இறுக்கி அனைத்துக்கொண்டு புழுவாய் துடித்தாள்.
மதுரையில் பிறந்து வளர்ந்த வாசுதேவன் தன் பக்கத்து வீட்டு தோழியான தேவகியை காதல் மணம் புரிந்துகொண்டார். இரண்டு வீட்டாருமே அவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். தன் நண்பரின் உதவியுடன் அவர்கள் குடியிருக்க வாடகை வீட்டை பார்த்துவிட்டார். அந்த நண்பரின் உதவியுடனே தனக்காக வேலையும் தேடிக்கொண்டார். தன் மனைவியை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினார். அவள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே தன் கஷ்டங்கள், வாங்கும் கடன்கள், வரும் செலவுகள் பற்றியெல்லாம் பெரிதாக பகிர்ந்துகொள்ளமாட்டார். அவரை பொருத்தவரை அவளும் பிள்ளைகளும் சந்தோஷமாக இருந்தால் போதும்.
கணவனின் காதல் சிறையில் ஆசையாய் அடைப்பட்டுக்கொண்டவள் உலகம் தெரியாத பெண்ணாகவே வாழ்ந்தாள். இனி அவளின் எதிர்காலம் என்ன?
வாசுதேவனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு திரும்பிவிட்டாள். வீட்டின் உரிமையாளர் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரியவர குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த வீட்டின் மூத்த மகனான மகேஷ் அவனால் முடிந்தவரை அவர்களுக்கு மன ஆறுதல் அளித்து, பெரும்பாலான நேரத்தை அவர்களுடனே செலவிட்டான். எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் சொல்லிக்கொடுத்தான்.
அவர்களின் ஆறாத்துயர் பற்றி முகநூலில் கட்டுரை வெளியிட்டு ஒரு பெரும் தொகையை வசூலித்துக்கொடுத்து உதவினான். கணவனின் கடன் பெரிய அளவில் இருப்பது தெரியவர மேலும் கலங்கினாள் அவள். தையல் கலை தெரிந்திருந்ததால் தையல் எந்திரங்கள் வாங்கி வேலை செய்யலாம் என்று மகேஷ் ஆலோசனை கூற அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. வேலைநேரத்தில் இறந்ததால் ஒப்பந்தக்காரர்களே தூய்மைப் பணியாளர்களின் மனைவிகளுக்கு அவர்களின் சார்பில் வேலை கொடுத்துவிட, வாசுதேவன் பணியாளர் இல்லாததால் வெறும் பத்து லட்சத்தோடு நிறுத்திக்கொண்டது அரசு.
“சாப்பிடு சுபாக்குட்டி. ஏன் இப்படி படுத்துற? இப்படி சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று தன் மூத்தமகளை கடிந்துகொண்டிருந்தாள். “ என்னால சாப்பிட முடியல அம்மா! எனக்கு அப்பா வேணும். படிக்கமுடியல, தூங்கமுடியல, விளையாட முடியல. எல்லா இடத்துலையும் அப்பாதான் தெரியிரார். நான் இனி அப்பாகிட்ட அது வேணும் இது வேணும்னு கேட்கமாட்டேன். நல்லா படிச்சு நல்ல பொண்ணா இருப்பேன். எனக்கு அப்பா மட்டும் கூட இருந்தால் போதும்மா.” என்று தன் அன்னையின் மடி சாய்ந்து அழுதாள் வாசுதேவனின் செல்லக்குட்டி சுபத்ரா.
தேவகியின் செல்ல மகனாக கண்ணனும் வாசுதேவனின் பாசக்கிளியாக சுபத்ராவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். சந்தோஷத்தால் கட்டிய அழகான குருவிக்கூட்டைப் பிரித்ததில் விதிக்கு என்ன லாபமோ. சுபத்ராவின் அழுகையை கேட்டபடி வந்த மகேஷ், “அப்பா உன் கூடவேதான் இருக்கார். உன்னை தெய்வமாய் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார். உன் சந்தோஷத்தில் அவர் கண்கள் சிரிக்கும். உன் துக்கத்தில் அவரின் இதயம் இரத்தம் வடிக்கும். நீ நல்லா சாப்பிட்டு நல்லா படிச்சாதான் அப்பாவுக்கு ஆத்ம நிம்மதி கிடைக்கும். சாப்பிடு.” என்று தேற்றினான். அவன் பேசுவது கொஞ்சம் புரிந்தாலும் அழுது துடித்தாள் பெண்.
மகளின் அழுகையை காணக்காண தேவகிக்கும் அழுகை பொங்கியது. “உங்க அப்பா போனபோதே நானும் போயிருப்பேன். உங்களுக்காக மட்டும்தான் உயிர் வாழ நினைக்கிறேன். நீங்களும் இப்படி பண்ணா நான் என்ன செய்வேன். உங்க அப்பா வேணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா. நானும்தான் அவர் அன்புக்கு ஏங்குறேன். என்ன செய்யறது நம்மை இப்படி விட்டுட்டு போயிட்டாரே பாவி மனுஷன்” என்று மகளை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள். “என்ன இது? அவ சின்ன குழந்தை. அவளுக்கு நீங்க ஆறுதல் சொல்லணும். நீங்களே சின்ன பிள்ளை போல அழுதா அவளுக்கு யார் ஆறுதல் சொல்றது. உங்க பிள்ளைகளுக்காக நீங்களும், உங்களுக்காக அவங்களும் வாழ்ந்தே ஆகணும். முதல்ல கண்ணை துடைச்சிட்டு அவளை சமாதானபடுத்தி சாப்பிட வையுங்க.” என்று சற்று அழுத்தமாகவே கூறினான் மகேஷ். பிள்ளைகளை அதட்டி உருட்டி சாப்பிட வைத்துவிட்டு பெயருக்கு தானும் உண்டுவிட்டு எழுந்தாள். அவர்களுக்கு மேலும் சமாதானம் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, இவர்களும் உரக்கத்தைத் தழுவினர்.
பிள்ளைகளுக்காக ஓரளவு தேறிக்கொண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள தொடங்கியிருந்தாள் தேவகி. வாசுதேவன் வாங்கியிருந்த கடனை ஓரளவு அடைத்துவிட்டாள். தையல் எந்திரங்கள் வாங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை வங்கியில் பிள்ளைகளின் பெயரில் வைப்பு நிதியாக போட்டுவிட்டாள். நாட்கள் அதன் போக்கில் செல்ல, விதி விடுவேனா என்று துறத்தியது. “டேய் ஸ்கூல்லருந்து வந்ததிலிருந்து போன் பாக்குற. ஒழுங்கா வெச்சிட்டு போய் படி” என்று சேட்டைக்கார கண்ணனை மிரட்டினாள் தேவகி. “அம்மா, இன்னும் கொஞ்சநேரம் ப்ளீஸ்.” என்று சொல்லி சொல்லியே நேரத்தை கடத்தினான் அந்தக் குறும்புக்காரன்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பொங்கி எழுந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக போனைப் பிடுங்கிக்கொண்டு நன்றாக வெளுத்து வாங்கிவிட்டாள். கோபம் அடங்கியதும் பிள்ளையை அடித்து திட்டிவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவனை கொஞ்சி கெஞ்சி சாப்பிட தின்பண்டம் கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள். சற்று நேரத்தில் கண்ணன் சைக்கிளை எடுத்து போவது தெரிந்தது. பிள்ளை விளையாடிட்டு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.
வெகுநேரம் சென்றும் பிள்ளை வராததை எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது. வாசலிலேயே விழிவைத்து காத்திருந்தாள். அப்போது தன் நண்பர்கள் சூழ இரத்த களரியோடு வந்தான் கண்ணன். “டேய். கண்ணா என்னடா இதெல்லாம் என்ன ஆச்சுடா. ஐயோ கடவுளே” என்று கத்தினாள். “அவனை நாய் கடிச்சிடிச்சு ஆண்ட்டி” என்றான் வந்த நண்பர்களுள் ஒருவன். நாயின் கோரதாண்டவத்தை தன் செல்ல பிள்ளையின் காலில் பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். “பாவி. சொன்னா கேட்டாதானே. இப்படி வந்து என் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டிட்டியே.” என்று புலம்பியபடி உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றாள். சிகிச்சை அளிக்கப்பட்டது. மகனின் வலியை காணக்காண துடித்தது அந்த பேதை உள்ளம். ஆயிரக்கணக்கில் செலவழிந்தபோதும் மகன் சரியானால் போதும் என்றிருந்தது. ஒருமணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.
“அம்மா. ரொம்ப வலிக்குது அம்மா ஏதாவது பண்ணுங்க. என்னால தாங்க முடியல. ரொம்ப ரொம்ப எரியிது. வலிக்குது அம்மா.” என்று துடித்தது ஏழாம் வகுப்புப் படிக்கும் அந்தச் சின்ன குறுத்து. மகனின் தலையை கோதிக்கொடுத்து, ”சரியா போய்டும். அப்பா நம்ம கூட சாமியா இருக்கார். அவர் உன் வலி போக்குவார். நம்மை கலங்க விடமாட்டார்” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டாள். பதினோறாம் வகுப்பு படிக்கும் சுபத்ரா தம்பியின் இன்னொரு அன்னையாகி அவனின் கைப்பிடித்து ஆறுதல் கூறினாள். “கவலப்படாதடா தம்பி நீ சீக்கிரம் சரியாய்டுவ. அம்மா போல நானும் உன்னை என் உயிராய் பார்த்துப்பேன். நம்ம சீக்கிரம் விளையாடலாம். இந்தா சாப்பிடு” என்று தன் கையிலிருந்த இட்டிலியை தம்பிக்கு ஊட்டினாள். மகளின் அக்கரையிலும் அன்பிலும் அன்னையின் கண்கள் பனித்தது. இந்த பாசமும் புரிதலும் இவர்களிடம் கடைசிவரை இருக்க வேண்டும் என்று தன் வாசுவிடம் வேண்டிக்கொண்டாள்.
மேலும் நான்கு இட்டிலிகளைக் கொண்டு வந்து தாயின் அருகே அமர்ந்து அவளுக்கும் ஊட்டினாள் சுபாக்குட்டி. ”சாப்பிடுங்க அம்மா. எங்களுக்காக. ப்ளீஸ். அப்பாதான் இல்லை. எங்களுக்கு நீங்களாவது கடைசிவரை வேணும் அம்மா.” என்று மகள் கண்கள் கலங்க, துக்கம் தொண்டையை அடைத்து உணவு உள்ளே செல்ல மறுத்தாலும், பிள்ளைகளுக்காக உண்டாள். பின் சுபத்ராவையும் சாப்பிடவைத்து இருவரையும் தன் மடிசாய்த்து தூங்க வைத்தாள். உரக்கம் வருமா அவளுக்கு? கணவனின் புகைப்படத்தைப் பார்த்து உள்ளம் ஊமையாய் அழுதது. இன்னும் இதுபோல எத்தனையோ பிரச்சனைகளையும் சந்தோஷங்களையும் அவள் தனியே எதிர்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடன் இருக்கும்போது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தும், தனிமையில் கணவனின் நினைவுகளுடன் போராடியும் நாட்களை கழிக்க வேண்டும். கைம்பெண்ணின் சடங்குகள் ஒழிந்திருக்கலாம். ஆனால் காதல் பெண்களின் உள்ளத்தை மாற்ற இயலுமா?
அவளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியில் சரி செய்ய முடியும். அதற்கு மற்றவரும் முன் வரலாம். ஆனால் கட்டியவனின் அன்பு? மறு காதலும் மறுமணமும் மருந்தாய் இருக்கலாம். அது அவரவர் உள்ளத்தையும், உள்ள சூழலையும் பொருத்ததாயிற்றே. லட்சத்தில் ஒரு வாய்ப்பாக அவள் மறுமணம் புரிந்தாலும், அதுவரை அவளின் நிலை? தன் காதல் கண்ணாளனின் புகைப்படத்தைப் பார்த்தபடி கண்களில் வழியும் நீரோடு உரங்கிப்போனாள். ஜன்னலிலிருந்து வீசிய சில்லென்ற காற்று அவள் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுச் சென்றது.
முற்றும்.