Monday 29 March 2021

’மது கிண்ணத்தில் மங்கையின் கண்ணீர்.’

நேரம் காலை பத்தை நெருங்கிக்கொண்டிருக்க, பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள். தாய் மாலதி கொடுத்த காலை டிஃபனையும் மறுத்துவிட்டாள். அவள் ஏனென்று கேட்டதற்கு ஃப்ரன்ஸ் பார்ட்டி கொடுக்குறாங்க என்று மட்டுமே சொல்லிவிட்டு ஓடினாள். சமீபத்தில் அவள் மேற்கொண்டிருக்கும் புதிய பழக்கம் இன்னும் வேகத்தையும் ஆர்வத்தையும் கூட்ட, தன் வெளிநாட்டுக் காரில் பறந்தாள் 25 வயதே பூர்த்தியான மதுமிதா.

மதுமிதா ராஜசேகரன் மாலதியின் ஒரே பெண். அடையாரில் பிரபலமான நகை வியாபாரி என்பதாலும், பரம்பறை சொத்தே கோடி பெறும் என்பதாலும் மதுமிதாவிற்கு பணத்தைச் செலவழிப்பதெல்லாம் தண்ணிப்பட்ட பாடு. ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் செலவழித்தபோதும், அவள் கண்களில் கண்ணீரோ நெஞ்சில் வருத்தமோ என்றுமே கொண்டதில்லை. அதற்காக ராஜசேகரனும் மாலதியும் நவீன நாகரீகத்தில் ஊறியவர்கள். பெண்ணிற்கு செல்லம் கொடுத்தே சீரழித்துவிட்டனர் என்றும் சொல்லிவிடமுடியாது.

நேர்மைக்குப் பேர்போன இருவரும், தங்கள் பெண்ணும் தங்களைப் போலவே இருப்பாள் என்று தப்புக்கணக்குப் போட்டனர். அளவுக்கு மீறிய சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு, அருமைமகள் அதைத் தப்பாகப் பயன்படுத்தமாட்டாள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையைத் தூள் தூளாக்கிய மதுமிதாவின் தவறா? அல்லது அளவான சுதந்திரத்தை அளிக்காத பெற்றோரின் தவறா? இவர்களில் யார் செய்த தவறோ, ஒரு குடும்பமே அழியக் காரணமாகிவிட்டது.

மனைவி தெய்வானைக் கொடுத்த பழைய சாதத்தையும் பச்சைமிளகாயையும் அமிர்தமாய் எண்ணி உண்டுமுடித்த நாச்சிமுத்து, அவளைத் தன் அருகில் இழுத்து ரகசியமாய் ஒரு பெரிய ஆசையை வெளியிட்டுவிட்டுக் கிளம்பினார். அவர் வெளி வாசலை அடைந்ததும், அவர் பெற்ற மூன்று செல்வங்களும் வழிமறித்து மனு கொடுக்க ஆரம்பித்தனர்.

”அப்பு, நாளைக்கு காலேஜ்ல சேர அப்லிகேஷன் வாங்கப் போவோமா? தேதி முடிஞ்சிடும். அப்புறம் சீட் கிடைக்காது அப்பு. கைல கண்டிப்பா ஒரு 2000ஆவது இருக்கனும் அப்பு” என்றான் அவரின் மூத்தமகன் முத்துப்பாண்டி. கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவன் தலையை வருடி, “சரிய்யா. கண்டிப்பா போவோம்” என்றார் கட்டிட வேலை செய்யும் நாற்பது வயதைத் தாண்டிய நாச்சிமுத்து.

“அப்பு, எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்க. ஒரு 500 ரூபா தரியா? நானும் டூர் போகவா? ஆசையா இருக்கு அப்பு” என்று எதிர்பார்ப்பே உருவாய் கேட்டான் இளயமகன் துரைச்சாமி. மூத்தமகனைப்போல், அவனையும் செல்லம் கொஞ்சிவிட்டு சரி என்று ஒப்புதலளித்தார். கடைக்குட்டி மல்லிகாவோ, கோடைக்காலத்திற்கு ஏதுவாய் பலாப்பழமும் நொங்கும் கேட்க, “என் செல்லச் சர்க்கரைக்கட்டி. நீ கேட்டு நான் மாட்டேனு சொல்வேனா? கண்டிப்பா வாங்கியாரேன் என்றார் சிரிப்புடன்.

மூவரின் மனுவையும் ஏற்றுக்கொண்டு, மனைவிக்கு என்ன வேண்டும் என்பதைப்போல் அவளைத் திரும்பிப்பார்க்க, அவள் கண்களில் காதலைத் தவிர வேறெதையும் அவரால் காணமுடியவில்லை. தன் இனிய குருவிக்கூட்டைக் கண் நிறைய நிறப்பிக்கொண்டு, வேலைக்குக் கிளம்பினார் அந்தப் பாட்டாளி.

வீட்டிலிருந்து சீறிப்பாய்ந்த மதுமிதாவின் கார் ஒரு உயர்தர மதுபாணக்கடையின் முன்பு நின்றது. ஆம்! சமீபத்தில் அவளுக்கு வந்திருக்கும் புதிய பழக்கம் மது அருந்துவதுதான்! அவளுக்காகவே காத்திருந்த இரண்டு ஆண் நண்பர்களும், 3 பெண் தோழிகளும் சேர்ந்து முடிந்தமட்டும் மது அருந்திவிட்டு மதியம் 3 மணிவரை கொட்டம் அடித்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், பீச், பார்க் டிஸ்கோதே என்று இரவு பத்துமணிவரை ஊர் சுற்றிவிட்டு கடைசியாய் ஒரு ரௌண்ட் மதுவையும் அருந்திவிட்டே கடனே என்று வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குக் கிளம்பிய மதுவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லியே அனுப்பிவைத்தனர் சற்று நிதானத்திலிருந்த நண்பர்கள். என்ன பயன்? காரை எடுத்த மதுவிற்கு நேரம் செல்ல செல்ல கண்கள் சொருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல தான் நிதானமிழக்கிறோம் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி காரை ஓட்டினாள். நிதானம் முழுவதுமாய் இழப்பதற்குள் வீட்டை அடைய வேண்டுமென்று நினைத்தவள் காரை முழுவேகத்தில் பறக்கவிட்டாள்.

கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற கார் நடைபாதையருகே அப்பாவியாய் நடந்து சென்றுகொண்டிருந்தவர்மேல் முழுவீச்சில் மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதைந்து, உறுப்புகள் ஆங்காங்கே சிதறி, பூமித்தாய்க்கு உடனடி இரத்த அபிஷேகம் நடக்க, துள்ளத்துடிக்க அந்த உடலைவிட்டு வெளியேறியது உயிர் பறவை. இடிக்கப்பட்டவர் இடுகாட்டில். இடித்தவளோ காற்றுப்பையில் பத்திரமாய். கார் மோதிய அடுத்தநொடி அதிலிருந்த ஏர்பேக் வெடித்து மதுவை தனக்குள் அடைத்துக்கொண்டு வெளியே குதித்து காப்பாற்றியது.

இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட கொடூரத்தில், மதுவின் போதை முழுவதுமாய் இறங்கிவிட்டிருக்க, அதிர்ச்சியில் சற்றுநேரம்  உரைந்திருந்தவள், கணநேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவள், எதுவும் நடக்கவில்லை என்று மனதிற்குள் உறுபோட்டவாரே உறங்கிவிட்டாள். பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்ததால் அந்நேரத்தில் அவளைக் கேள்விகளால் துளைக்கவும் ஆளில்லாமல் போயிற்று.

உறங்கியவளை விதி விட்டுவிடுமா? சிசி டீவியின் உபயத்தால் அடுத்தநாள் காலையே மதுவின் ரகசியம் அம்பலமாகிவிட, தாய் தந்தையர் அவளை அடித்து துவைத்தனர். ஆனால் அழுதே பழகியிராத மதுவிற்கோ வலித்ததே தவிர, அழுகை வரவில்லை. அதற்கும் சேர்த்தே வாங்கிக்கட்டினாள்.

எவ்வளவு அடித்தும் ஆத்திரம் குறையாத ராஜசேகரன், தான் பெற்ற மகளின் மீது தானே வலிய சென்று புகார் கொடுத்துவிட்டார். தாய் மாலதியும் அதைத் தடுக்கவில்லை.  உள்ளே சென்ற மதுமிதாவோ சிறிது நாட்களிலேயே நண்பர்களின் செல்வாக்கில் வெளியே வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவளை கண்டுகொள்வாரில்லை. அவளின் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதால் வெளியே செல்லவும் வழியின்றி வீட்டு சிறையில் கைதியானாள்.

சிறைக் கைதிக்கு எதற்கு வகைதொகையான உணவு? எளிய உணவை மட்டுமே கொடுக்கும்படி வேலையாட்களுக்கு உத்தரவிட்டுவிட்டாள் மாலதி. பாலும் தயிரும், பருப்பும் நெய்யும் உண்டு பழகிய மதுவிற்கு காரசாரமான எளிய உணவு தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ததில், உணவு உண்பதையே முடிந்தவரை தவிர்க்க ஆரம்பித்தாள். இத்தனைத் துன்பத்திலும் மதுவின் கண்கள் மட்டும் நனையாமல் அப்படியே இருந்தது. அவள் தவறின் வீரியத்தை ஆழ்மனம் இன்னும் உணரவில்லை போலும்.

சிறிது நாட்கள் கழித்து ஓர் மாலை வேளையில் மதுவை பெற்றோர் அவர்களுடன் வெளியே அழைத்தனர். மறுப்பின்றி அவளும் அவர்களுடன் கிளம்பினாள். கார் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. மாலதி கதவை இரண்டுமுறை மெல்ல தட்டிவிட்டு காத்திருக்க, கதவைத் திறந்தாள் ஓர் சிறுமி. மதுவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் நின்று கொண்டனர் பெற்றவர்கள்.

உள்ளே சென்ற மது வீட்டைச் சுற்றி கண்களைச் சுழலவிட, மின்சாரம் தாக்கியதைப்போல் அதிர்ந்து நின்றாள். பயத்தில் இதயம் படபடவென்று அடித்தது. வீட்டின் ஒரு மூளையில் சட்டத்திற்குள்ளிருந்து தன் குடும்பத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் நாச்சிமுத்து. ஆம்! குருவிக்கூட்டின் தலைவனான அதே நாச்சிமுத்து! தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு, நண்பர் ஒருவரைச் சந்தித்து பிள்ளைகளின் தேவைக்காக பணம் ஏற்பாடு செய்துவிட்டு, கடைக்குட்டியான அவர் பெண் மல்லிகா கேட்ட பழங்களையும், காதல் மனைவிக்கு காதல் பரிசாய் மல்லிகைப்பூவையும் வாங்கிக்கொண்டு நிறைவான மனதுடன் வீட்டை அடைவதற்காய் நடந்து வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கோர விபத்து நடந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் வீதி விபத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, கருணையுள்ளம் கொண்ட ஓர் மனிதர் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஆம்புலன்சையும் போலீசையும் அழைத்தவர், அவர்களுடன் சேர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, நாச்சிமுத்து பர்சிலிருந்த முகவரிக்கு அவர் சடலத்தை எடுத்துச் சென்றார். விஷயத்தைக் கேட்ட அடுத்தநொடி வீடே அதிரும்படியான அழுகுரல் எழுந்தது. அன்புச் சங்கிலியின் முதல் கண்ணி அறுந்துவிட்டதே! ஆலமரத்தின் ஆணிவேர் சாய்ந்து அவர்களின் சந்தோஷத்தை அடியோடு வீழ்த்திவிட்டதே!

சடலத்தைச் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்ததெனப் புறப்படாமல், தெய்வானைக்குத் துணை நின்று இறுதிச் சடங்குகளை முடித்து, அவர்களுக்கு தன் முகவரியைக் கொடுத்துவிட்டு, உதவி வேண்டுமென்றால் தயங்காமல் அழைக்கும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கால் வயிறும் அரை வயிறுமாய் அவர்கள் நாட்களைக் கடக்க, ஒருநாள் மதுவின் பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். முதலில் கோவத்துடன் பேசிய அனைவரும், தங்களின் எதிர்காலத்தை எண்ணி பயத்தில் கதறினர். அவர்களைத் தேற்றி, தெய்வானைக்கு நல்ல சம்பளத்தில் முழுநேர வேலையும், மூத்தமகன் முத்துப்பாண்டிக்கு பகுதிநேர வேலையும் போட்டுக்கொடுத்துவிட்டு, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்ல வேண்டியதற்கான அவசியத்தையும் தைரியத்தையும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

அப்போது சென்றவர்கள்தான் இப்போது மகளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ”வாங்க ஐயா. வாங்கம்மா.” தெய்வானை அவர்களை அன்போடு உபசரித்தாள். அவர்களும் தெய்வானையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்களின் நலனை விசாரித்தவாரே உள்ளே வந்து அமர்ந்தனர். அதுதான் எளியவர்கள்! விரோதியாகவே இருந்தாலும் தங்களால் தரமுடிந்த மன்னிப்பை யாசிப்பவர்களிடம் ஒரு கட்டத்திற்குமேல் பகைமைப் பாராட்டமாட்டார்கள். வாழ்க்கையின் பின்னே ஓட சலிக்காதவர்களுக்கு பகையின் பின் ஓடுவது பெறும் சலிப்புதான். மகள் செய்த தவறுக்கு நேர்மையான பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம். அதுவுமில்லாமல் பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்துத் தன்மானத்தைச் சீண்டாமல், தாங்களே தங்கள் வாழ்வை வாழ வழிகாட்டியவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்தது.

தெய்வானையின் உபசரிப்பில் அதிர்விலிருந்து மீண்ட மதுமிதா “என்னை மன்னிச்சிடுங்க. தவறு நடந்துடுச்சு. தெரியாம செய்துட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் கல்யாண பொறுப்பை நான் ஏத்துக்குறேன்” என்றாள். அவள் பெற்றோரை இவர்களுக்கு முன்பே தெரிந்ததால் பண உதவிகள் செய்திருப்பார்கள் என்று நினைத்திருப்பாள் போலும்.

தெய்வானை சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் மௌனிக்க, அந்த இடைப்பட்ட வேளையில் முத்துப்பாண்டி மதுவிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினான். அவள் அதிர்ந்து என்ன இது? எனக் கேட்க, ”வாங்கிக்கோங்க. இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொன்னாங்க. நீங்க வருவிங்கன்னு உங்களுக்காக வாங்கி வெச்சோம். நல்ல சரக்கு. குடிங்க” என்றான். அவள் அதைக் கையில் வாங்கி வெறித்துப் பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பெற்றோரையும் தெய்வானையையும் மாறி மாறி பார்த்தாள்.

தெய்வானை மெல்ல வாய் திறந்தாள். “நீ சொன்ன படிப்பு, வேலை, கல்யாணம் இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். ஒரு பைசா செலவில்லாம செய்ய வேண்டிய விஷயத்தைச் சொல்றேன் செய்யறியாம்மா?” “சொல்லுங்க.” எங்க வீட்டுக்காரோட கடைசி ஆசையை நீ நிறைவேத்தி வைக்கனும். முடியுமா?” ”என்ன ஆசை?”

ஒரு நிமிஷம். தெய்வானை உள்ளே சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தாள். “இது என்ன தெரியுமா? நான் மணக்க மணக்க வெச்சிருக்க பச்சமொச்ச கச்ச கருவாட்டுக் குழம்பு. எங்க வீட்டுக்கார் போகும்போது. ”இந்தா புள்ள, நீ பச்சமொச்ச கச்ச கருவாட்டுக்குழம்பு வெச்சு எம்புட்டு நாளாச்சு. இன்னிக்கு வையி புள்ள. சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. நாள் முச்சூடும் மாடாட்டம் ஒழைச்சிட்டு சாயந்தரம் வந்து ஒங்கையால சோறு உங்குறது அலாதி சந்தோசம். நீ மணக்க மணக்க சோறாக்கி, மனசு நெறைய காதலோட பரிமாறனும். அதே மனசு நெறைய காதலோட உள்ளுக்குள்ள சப்புக்கொட்டி ருசிச்சாலும் வெளிய சின்ன சின்ன கொற சொல்லிகிட்டே சாப்பிடனும். ஏழைங்க நமக்கு இதவிட வேற என்ன புள்ள சந்தோஷம் இருக்கப்போகுது” என்று காதலாய் பார்த்தபடிச் சொல்ல, அந்தக் காதலுக்கு சற்றும் குறையாத காதலுடன் பார்த்தபடி. “சரிங்க செஞ்சி வெக்கறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்று விடைகொடுத்தாள்.

அவர் போனதுக்கு அப்புறம் நான் தினமும் இந்த குழம்பு செய்யறேன். அவர் சாப்பிடவே மாட்டுறார். நீ முடிஞ்சா அவரை ஒரு வாய் சாப்பிட வை. இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செஞ்சிட்டா மேலே சொன்ன மூனு விஷயத்தை செய்ய அவசியமே இருக்காது.” என்றுவிட்டு விம்மி வெடித்து அழுதாள். பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து அழ, அந்த கதறல் மதுவின் உயிரை உலுக்கியது. சிறிது சிறிதாய் மது ஊற்றி மதுமிதா வளர்த்த பாவமரம் அவர்களின் கதறல் சூறாவளியில் வேறோடு சாய்ந்தது. என்ன சொல்ல முடியும் இதற்கு மதுமிதாவால்? 

மதுமிதா அந்தக் குழம்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் அவள் அன்னை இந்த குழம்பு செய்ததும், அந்த மணம் அவளுக்கு பிடிக்காமல் தூக்கி வீசியதும் நினைவுக்கு வந்தது. வாழ்க்கை சின்ன சின்ன ஆசைகளாலும் சந்தோஷங்களாலும் நிறைந்தது. அதை அள்ளிக்கொடுக்கும் ஒரு உயிரின் இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற உண்மை அவள் மூளைக்கு ஏறி இதயத்தைத் தாக்கியது. இன்னமும் அவள் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணமும், தெய்வானை வைத்திருந்த குழம்பும் பூதாகரமாய் நின்று அவள் செய்த தவறின் முழு வீரியத்தை உணர்த்த, வாழ்க்கையில் முதல்முறையாக கண்ணீர் சிந்தினாள் மது. அவள் கண்களைத் தாண்டி சிதறிய கண்ணீர் துளிகள் மதுகிண்ணத்தில் விழுந்து மதுவோடு மதுவாய் கலந்தது.


 

Saturday 6 March 2021

- வாழ்க்கைத் தேர்வு

ஒரு மனிதனின் சாமர்த்தியமே அவன் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதில்தான் இருக்கிறது. சிலர் அதில் வெற்றி காணலாம். சிலருக்கு அது தோல்வியில் முடியலாம். சிலருக்கு அது எப்படி தேர்ந்தெடுப்பது என்றே தெரியாமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு பாதையை தேர்வு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பப் பாவம். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு பூவேலி இருக்கிறது. சில பெண்களுக்கு முள்வேலி இருந்தாலும் அதையே பூவேலியாக நினைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இதிலிருந்து அவர்களால் விடுபட முடியாது. விடுபடவும் விரும்பமாட்டார்கள். இந்தச் சமூகமும் இதிகாசங்களும், கலாச்சாரம் என்ற பெயரில் அவர்களை அப்படி பழக்கிவைத்திருக்கிறது? ஒருவேளை அவர்களைப் பிடிக்காமல் வலுக்கட்டாயமாக அந்த பூவேலியிலிருந்து வெளியேற்றினால், யாருமில்லா கானகத்தில் தொலைந்த குழந்தையாய் திக்குத் தெரியாமல், செய்வது அறியாமல் தவியாய் தவிப்பார்கள். மற்றொரு பாதையை வகுத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கண்ணீர் காவியம்தான் இல்லம்தோறும் இதயங்கள். எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய இந்நாவல் எல்லாகால பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். வாழ்க்கைப் பாடம். பெண்மையை மதிக்காதவர்களுக்கும், பெண்மைக்கு துரோகம் செய்பவர்களுக்கும் இது மறக்கமுடியாத, மறக்கக்கூடாத சாட்டையடி. ஆனால், இப்படிப்பட்ட சாட்டையடிகளுக்கு எல்லா அநியாயக்காரர்களும் பணிவார்களா? மிரண்டு பின்வாங்கி பெண்மையின் மேன்மைக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குவார்களா? இல்லை. என்ற பதிலிருப்பது வருத்தம்தான்.

எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நிகழத்தான் செய்கிறது. அப்போது வெளியே தெரியாமலும் கவணிக்கப்படாமலும் இருந்த கொடுமைகள் இப்போது தொழில்நுட்பத்தின் உதவியால் கவணிக்கப்படுகிறது. கவனிக்கத்தான்படுகிறதே தவிர குறைந்தபாடில்லை. எத்தனை புதுமைப் பெண்களும், புரட்சிப்பெண்களும் உருவானாலும், அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் சாதாரணநிலையில் இருப்பவர்கள்தான். அப்படித்தானே அநியாயக்காரர்கள் நினைக்கிறார்கள். இந்த விமர்சனத்தையும் நாவலையும் படிப்பவர்கள் அப்படி எண்ணிவிடாமல், உங்களையும் ஒருமுறை சுய அலசலில் ஈடுபடுத்தி நிறைகுறைகளைச் சரிபார்த்துக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி. எழுதப்படுகிற எல்லாப் படைப்புகளும் யாராவது ஒருவர் மனதிலாவது தைக்காதா? அவரை நல்வழிப்படுத்தாதா? என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்தான் எழுதப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பிற்கு செவிசாய்க்கலாமே!

ஒரு பெண்ணின் உலகம் மிகச் சிறியது. திருமணத்திற்கு முன் பிறந்த வீடு. திருமணத்திற்கு பின் புகுந்த வீடு. என்னதான் பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியுலகத்தை எட்டிப்பார்த்தாலும், அவர்களின் பாதுகாப்பாக நினைப்பது இரண்டு வீடுகளைத்தான். சில பெண்கள் வெளியுலகத்தைக் காண விருப்பமில்லாமல் வீட்டையே உலகமாக எண்ணி மகிழ்வர். அப்படி மகிழ்ந்திருந்தவள்தான் மணிமேகலை.

மிராசுதார் அருணாச்சலத்தின் மகளான மணிமேகலை, தன் இளம் பருவத்தில் சொந்தக்காரனும் தோழனுமான வெங்கடேசன் மீது தோன்றிய மானசீகக் காதலை தந்தைக்காகவும் தமயனுக்காகவும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, எஞ்சினியர் ஜெயராஜை மணந்துகொண்டாள். அவளின் பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி. வளமான வீடுதான். செல்வத்திலும், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையிலும், வாய் பேச்சிலும் எந்த குறைச்சலும் சொல்லிவிடமுடியாது.

திருமணமாகி 3 வயது மகனிற்கு தாயாகும்வரை மணிமேகலை மகிழ்ச்சியாகவே இருந்தாள். கணவனின் காதல் மழையில் விடாது நனையத்தான் செய்தாள். ஆனால் என்ன செய்வது? வியாதிக்கு ஏழைப்பணக்காரன், மகிழ்ச்சியாக இருப்பவன், சோகமாக இருப்பவன் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாதே. அவளுக்கும் வந்தது தொழுநோய். ஆனால் அதனாலெல்லாம் அவள் பாதிக்கப்படவில்லை. பெருவியாதியைவிட ஒரு பெரும் வியாதியான சந்தேகம் இருக்கிறதே. அதனால்தான் அவள் பாதிக்கப்பட்டாள். ஆரம்பத்திலேயே அவளது நோய் கண்டுபிடிக்கப்பட்டு பூரணமாக குணமாகிவிட்டபோதும், தனக்கும் அது வந்துவிடுமோ என்ற சந்தேகத்தால் மணிமேகலை சித்திரவதை செய்யப்பட்டாள்.

நோயைப்பற்றி தெரிந்ததும் மணிமேகலையின் புகுந்த வீட்டார் அவளை அன்போடும் அனுதாபத்தோடும்தான் பார்த்துக்கொண்டனர். ஆனால் மணிமேகலையின் மாமியார் தம்பியான இராமபத்திரனின் மூளைச்சலவையால், மணிமேகலை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வேலை செய்யாமல் இருப்பதில் ஆரம்பித்து, கணவனின் புறக்கணிப்பு, நோய் பற்றிய சந்தேகப் பேச்சுகள், பெற்ற பிள்ளையை அவளிடம் கொடுக்க மறுப்பது, தனியறை, தனி தட்டு என்று முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வீட்டைவிட்டு விரட்டாத குறைதான்.

அதுவும் அவள் பிறந்த வீட்டிற்கு சென்று சிறிதுகாலம் தங்கிவிட்டு வருகிறேன் என்று போய்விட்டு வந்தபின் நடந்தேறிவிட்டது. பிறந்தவீட்டிலும் அவமானப்பட்டு வந்த மணிமேகலை புகுந்த வீட்டாராலும் துரத்தியடிக்கப்பட்டாள். எல்லா வீடுகளிலும் எந்த நிலையிலும் மாறாத அன்புகொண்ட இதயங்கள் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட இதயங்கள் மணிமேகலையின் வீடுகளிலும் இருந்தன. அவர்கள் மணிமேகலையை பெற்ற தந்தையும் மாமனாரும்தான். பாவம் வயது முதிர்ந்த அவர்களால் மணிமேகலைக்கு என்ன செய்யமுடியும் உள்ளுக்குள்ளே மருகி தவிப்பதைவிட?

பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே. அப்படித்தான் இருந்தது கம்பௌன்டர் மணியின் குணச்சித்திரம். மாத்திரைகள் வாங்கிவந்து கொடுப்பதிலும், மணிமேகலைக்காக அனுதாபப்பட்டு அவள் குடும்பத்தாரிடம் பரிந்து பேசுவதிலும், அரக்கோணத்திலிருந்து அவளைச் சென்னை அழைத்து வருவதிலும் உதவிய மணி, மணிமேகலையின் தனிமையானச் சூழலைப் பயன்படுத்திக்கப் பார்ப்பான். மன உறுதிகொண்ட மணிமேகலை தப்பித்துவிட்டாள். ஆனால் நிஜத்தில்? பெண்களின் மிகப்பெரிய பலவீனம் அன்பு. அவர்களின் மிகப்பெரிய பலமும் அதுதான். நேசிப்பதையும், நேசிக்கப்படுவதையும் உயிராய் மதிப்பவர்கள் பெண்கள்.

இதைத்தான் கயவர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் அனைவரையும் உலுக்கி உருக்குலைத்துப்போட்ட பொள்ளாச்சி கொடூரங்கள். பலவந்தப்படுத்தி பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது வேறு. ஆனால் பாசத்தையும் பலவீனத்தையும் பயன்படுத்திப் பெண்களைச் சிக்கவைப்பதை எப்படி தவிர்ப்பது?

இரண்டே வழிகள். வறண்டபூமிதான் மழைக்காக ஏங்கும். வறட்சியே இல்லாமல் பார்த்துக்கொண்டால்? அன்பும் பாசமும் கிடைக்காத பெண்கள்தான் அதைத் தேடித் திரிந்து தடுமாறி தடம் மாறுவார்கள். கொடுக்க வேண்டியவர்களே அதைக் கொடுத்துவிட்டால்? பெண்கள் பாதுகாப்பான சுதந்திரத்தோடு இருப்பார்கள் அல்லவா? இந்தக் காலத்துப் பெண்கள் பாசத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. காசு, பணம், கார், பங்களா, உயர் படிப்பு, வெளிநாட்டு உத்தியோகம் என்றுதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அதையெல்லாம் பெண்கள் வாழ்க்கையை வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தான் கேட்பார்களே தவிர, அதையே வாழ்க்கையாக எண்ணிவிடமாட்டார்கள்.

பணத்தைக்கூட பெண்கள் தனியாக சம்பாதித்துக்கொள்வார்கள். ஆனால் பாசம்? எல்லா ஆண்களும் இதை ஒரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட அரக்கியின் இதயத்திலும் பாசமெனும் ஊற்று கொஞ்சமாவது ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டால் பாதிக்குமேல் வெற்றிதான். இன்னொன்று, தவறு செய்பவரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டப் பெண்ணின் குண அலசலில் ஈடுபடுவது. பெண்ணை இழிவுப்படுத்துவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். என்ன தவறு செய்தாலும், அதனால் பாதிக்கப்படுவது பெண் என்ற திமிரில்தான் பல குற்றங்கள் நிகழ்கிறது. ஒரு பெண்ணைப்பற்றி இன்னொரு பெண்ணே இழிவாக பேசும் அழகு நம் கலாச்சாரத்திற்கு மட்டுமே உரியது.

முள்ளின்மேல் சேலை விழுந்தாலும், சேலையின்மேல் முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான் என்று எழுதிவைத்த புண்ணியவான் எவனோ. அல்லது புண்ணியவதி எவளோ?! அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வெறும் சேலைக்கு மட்டுமே பொருந்தும் இந்த வாக்கியத்தைப் பெண்ணுக்குப் பொறுத்தி அவர்களை நம்பவைத்து, அவர்கள்தான் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொடுமையை என்னவென்று சொல்வது? இது மாற வேண்டும். தன்னைச் சுற்றி என்ன தவறு நிகழ்ந்தாலும், அதைத் தைரியமாக வெளியில் சொல்லலாம் என்ற மன உறுதி வரவேண்டும். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்ற பாதுகாப்பும் உத்திரவாதமும் கிடைக்கவேண்டும். தவறு செய்பவர்களுக்கு பயமும் துன்பமுமே வாழ்க்கையாக வேண்டும். சேலைமேல் முள்விழுந்தால் முள்ளுக்குத்தான் சேதம் என்ற புதுமை வரவேண்டும்.

உடன்பிறந்த அண்ணனான இராமலிங்கமும், தம்பி சந்திரனும் காட்டத் தவறிய பாசத்தை, உடன்பிறவா அண்ணன்களான இரத்தினமும், கூத்து கோவிந்தனும் மணிமேகலைக்குக் கொட்டிக்கொடுத்தனர். கோவிந்தனின் உதவியால் மணிமேகலை ஒரு இச்த்தீரியா (hysteria) நோயாளியிடம் வீட்டு வேலைக்கு சேர்ந்தாள். ஒருநேரம் அன்பால் குளிப்பாட்டப்படுவதும், மற்றொரு நேரம் அடிகளாலும் வார்த்தைகளாலும் அபிஷேகிக்கப்படுவதுமாக அவளின் நாட்கள் கழிந்தன. காமாட்சியின் இந்த இருவேறுப்பட்ட ரூபத்தில், மணிமேகலை புரிந்துகொள்வதாக எழுத்தாளர் குறிப்பிட்ட விஷயம் என்னை மிகவும் கவர்ந்த ஓர் எதார்த்தம்.

பெண்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஓற் உண்மையும் கூட. ‘டார்லிங்’ என்று சொல்பவரைவிட என்னடி ‘இழவெடுத்தபய மவளே’ என்று சொல்பவரின் அன்பு மாறாத ஒன்றென்று எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் உண்மை. அன்பை அவரவர் அவரவருக்கு தெரிந்தவிதத்தில்தான் வெளிப்படுத்தமுடியும். தேனொழுக பேசுவது உண்மையான அன்புமில்லை. முரட்டுத்தனமாக நடப்பவர்களிடம் அன்பே இருக்காது என்பதுமில்லை. இனிப்பான பேச்சை பல ஆண்கள் பெண்களை தன் வலையில் விழவைக்கப் பயன்படுத்தும் யுக்தி. வாழவைக்கத் தெரிந்தவர்களுக்கு பேசத்தெரியாது. பேச்சு மட்டுமே இருப்பவர்களால் பெண்ணை வாழவைக்கமுடியாது.

மாத்திரை சரியாக எடுத்துக்கொள்ளாததால் மணிமேகலையின் நோய் மீண்டும் கூர்மை பெற, வெங்கடேசனால் செங்கை மாவட்டத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கியவர்களுக்காக ஒரு ஒதுங்கிய பகுதியிலுள்ள இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். திருமணமான பின்னும் தன்மேல் மாறாத அன்பைப் பொழியும் வெங்கடேசனின் அன்பால் மணிமேகலை உணர்ச்சிமயமானபோது, அவன் கம்பீரத்துடன் அவள் சொன்னதையே திருப்பிச் சொன்னான். அன்பு என்பது ஓர் மாபெரும் சக்தி. அதன் ரூபம் மாறுமே தவிர சக்தி மாறாது. நான் ரூபம்தான் மாறியிருக்கிறேனே தவிர என் அன்பு மாறவில்லை என்றபோது மணிமேகலை அந்த வார்த்தைகளில் உயிர்த்தெழுந்தாள்.

அந்த இல்லத்தின் நிர்வாகியான மதர், தேவதாசிகளைப்பற்றிய ஆய்வுப்படிப்பிற்காக தன் தமக்கை மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைச் சந்தித்தபோது, ஆயிரம் தேவதாசிகளைப்பற்றி ஆராய்வதைவிட ஒரு அபலைக்காவது ஆதரவளிப்பது பின்னாளில் உங்களுக்கே பாதுகாப்பாக அமையும் என்ற அறிவுரைப்படி, தேவதாசிகளைவிட தொழுநோயாளிகளுக்குத்தான் ஆதரவு தேவை. அவர்கள் வாழ விரும்பினாலும் வாழமுடிவதில்லை என்பதை அறிந்து தமிழ்நாட்டில் செங்கை மாவட்டத்தில் அந்த இல்லத்தைத் துவக்கினார். உறுப்புகள் சுகமாக இருப்பவர்களின் கைத்தொழில்களாலும், மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்களின் நன்கொடையாலும் அந்த இல்லம் இயங்கிக்கொண்டிருந்தது. மதரின் இறப்பிற்கு பின் மணிமேகலை தானாகவே முன் வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

பணநெருக்கடி வந்தபோது தன் தாலி முதற்கொண்டு அனைத்து நகைகளையும், சேமித்துவைத்திருந்த பணம் அனைத்தையும் இல்லத்திற்கே செலவிட்டாள். அதையும் மீறிய நெருக்கடி வந்தபோது, வெங்கடேசன், இரத்தினம், கூத்து கோவிந்தன் ஆகியோரின் உதவியுடன் கணவனிடம் போராடி 60 பவுன் நகைகளையும் ஜீவனாம்ச பணத்தையும் வாங்கினாள். அண்ணன் தம்பியுடன் போராடி அப்பா அவள் பெயரில் எழுதிவைத்த சொத்துக்களை வாங்கினாள். ‘அன்னை மார்கிரேட் அருளில்லம்’ என்ற புதிய பெயரில் இல்லத்தைச் சிறப்பாக நிர்வகித்தாள். தொழுநோயாளிகளின் குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு இல்லம் துவங்க வேண்டும் என்ற மணிமேகலையின் புதிய திட்டத்தோடு கதைமுடியும்.

என்னதான் நாம் குணக்குன்றாக இருந்தாலும், இருக்க முயற்சித்தாலும் சில இயல்புகளைத் தவிர்க்க முடியாது. துர்நாற்றம் பிடிக்காது, மற்றவர் உபயோகித்ததை உபயோகிக்கப் பிடிக்காது, வாந்தி பிடிக்காது, மனித கழிவுகளை சுத்தம் செய்யப் பிடிக்காது, இரத்தம் பிடிக்காது, தூய்மையாக இல்லாதவரிடம் பழகப்பிடிக்காது, நோயால் பாதிக்கப்பட்டவரிடம் நெருங்கிப்பழகப் பிடிக்காது. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் மனதில் ஏற்படும் சஞ்சலங்களைத் தவிர்க்கமுடியாது. மேலே குறிப்பிட்டவையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இருப்பவர்களும் இருக்கலாம். ஆனால் அந்த இயல்புகள் இருப்பது முற்றிலும் தவறு என்றில்லை.

எல்லா நோயாளிகளுக்கு தன் நோயின் வீரியம் தெரியும். அவர்களே நெருங்கிப்பழக விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பது தானும் மனிதர்கள்தான் என்று தன்னைச் சுற்றியிருப்போர் நினைக்க வேண்டும். பரிவோடு ஒரு பார்வை, அனுசரணையான பேச்சு, குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதைத் தருவதால் நமக்கு என்ன நோய் தொற்று வந்துவிடப்போகிறது? வியாதியைப்பற்றி மருத்துவர் சொல்வதை முழுமையாக நாம் நம்புவது மட்டுமின்றி, நோயாளியையும் நம்பவைக்க வேண்டும். ஒரு நோயின் மிகச்சிறந்த மருந்து நம்பிக்கைதான்.

மணிமேகலையின் இல்லத்து நிர்வாகி உயிருடன் இருந்த வேளையில், சமூக சேவை செய்கிறேன் என்று சில பெண்கள் வருவார்கள். நயமாகப் பேசி நன்கொடையும் கொடுக்க முன்வருவார்கள். நிர்வாகி அவர்களுக்கு பழச்சாறு எடுத்துவரச் சொல்வார். முதலில் சரி என்றவர்கள், அங்கு சமைக்கப்படும் அனைத்துமே தொழுநோயாளிகள் சமைத்தது என்று சொன்னதும் ஒவ்வொரு காரணம் சொல்லி தெறித்து ஓடிவிடுவார்கள். மதரும் நாசூக்காக நன்கொடையை மறுத்துவிடுவார்.

சேவை என்பது கட்டாயத்திற்காகவோ, பேர் புகழிற்காகவோ, பகட்டிற்காகவோ செய்வது இல்லை. அது மனமுவந்து மற்றவருக்காக மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட குண இயல்புகளைக் கொண்டவர்களால் எல்லா சேவைகளையும் முகச்சுளிப்பில்லாமல் செய்யமுடியாது. மீறி செய்தால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாமல், நிறைவில்லாத சேவையாகதான் இருக்கும். எனவே நம்மால் என்னமுடியுமோ அதை நிறைவாக செய்தாலே போதும்.

கடவுள் பாவங்களைச் சுமக்க தைரியசாலிகள் யாரென்று பார்த்துதான் அதைக் கொடுப்பாராம். இதுவும் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம். மிகுந்த மனவுளைச்சலில் இருந்தபோது நான் படித்த இந்த வார்த்தைகள் எனக்கே ஒரு தெளிவையும் தைரியத்தையும் கொடுத்தது. மனக்கஷ்டங்களைத் தாங்கும் அளவுக்கு நான் தைரியசாலி என்று காலமும் கடவுளும் நினைத்திருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து கஷ்டங்களையும் தைரியமாக கடந்து, தன்னையும் காத்து, தன்னைப்போன்ற பிறநோயாளிகளையும் காக்கவேண்டும் என்ற வாழ்க்கைப்பாதையை மணிமேகலையால் தேர்வு செய்யமுடிந்தபோது ஏன் நம்மால் முடியாது? நமக்கான வாழ்வை நாமே தேர்வு செய்வோம். அதை வேட்கைக்கொண்டு வெற்றிபெறுவோம்.