Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

Monday, 15 August 2022

காலதேவனின் தீர்ப்பு.


நதிக்குத் துணை இரு கரைகள் மட்டும்தான். ஒரு நல்ல சிந்தனையாளனுக்குத் துணை, அவனைப் போல் சிந்திக்கும் சக மனிதந்தான். என்ற வரிகளுக்கேற்ப ஒரே அலை வரிசையில் சிந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து, பேசி, பழகி காதல் கொண்டால் எப்படி இருக்கும்? காமம் கடந்த காவியக் காதலாக இருக்கும். காதலர்களின் உடல்கள் அழிந்தாலும், அவர்களின் உள்ளமும், அதில் பொங்கிவந்த காதல் வெள்ளமும், என்றும் வாழும். அழகான அரிதான காதலென்றால் அது இதுதான்.



பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல, அன்பு, பண்பு, அழகு, அறிவு , ஒழுக்கம், சமூக அக்கறை, என்று அனைத்தையும் வார்த்தெடுத்த தங்கச் சிலைகளாக மனிதர்கள் பிறப்பது எல்லாக் காலத்திலும் மிக மிக அரிதான ஒன்று. அப்படி அரிதாகப் பிறந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், உயர்ந்த காதலையும், குருஞ்சி மலர் என்னும் நாவலில் தமிழ் தூரிகை கொண்டு ஓவியம் வடித்திருக்கிரார் என் உள்ளத்தைத் தன் எழுத்துக்களால் உரையவைத்து, உருகவைத்த எழுத்தாளர் திரு நா. பார்த்தசாரதி அவர்கள்.



அரவிந்தன்: அரவிந்தன் என்பதர்க்கு அறிவார்ந்த விந்தை மனிதன் என்று பொருள். கம்பீரமான அழகும், கவர்ந்திழுக்கும் புன்னகையும், கருணை உள்ளமும், வற்றாத அருவி போன்ற அறிவும் கொண்டவனாக இருப்பினும், அகந்தையோ, ஆணவமோ சிறிதும் இல்லாமல், அன்பு, அறம், அகிம்சை இவை மூன்றும் தானும் பின்பற்றி, மற்றவர்களுக்கும் போதிக்கும் விந்தை மனிதன். சாப்பிடுவதில்கூட, சமூகத்திற்குப் போகத்தான் தனக்கு என்று நினைக்கும் தன்னலமற்ற இளைஞன்.



பூரணி: பூரணி என்பதற்கு பூரணத்துவம் என்று பொருள். தங்கப் பதுமை போன்ற அழகும், தேனருவி போன்ற தமிழும் கொண்ட தன்மானம் நிறைந்த பெண்ணாய்த் திகழ்பவள் பூரணி. பண்புக்கும் பெண்மைக்கும் இலக்கணமாய், உடன் பிறந்த தம்பி தங்கைக்கு இளம் தாயாய், அவர்களுக்கு அமுதளிப்பதில் அன்னபூரணியாய் வாழ்ந்து, சமூக நலனுக்கும், தமிழ் பணிக்கும், தன்னைப் பூரணமாய் அர்ப்பணித்தவள் பூரணி.



பண்பின் சிகரங்களான இவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும், கடந்துவந்த இன்ப துன்பங்களும், கடக்க முடியாத மெல்லிய உணர்வுகளின் கோர்வையே இந்த குறிஞ்சி மலர் கதை.



தமிழையே தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த பேராசிரியரும் பூரணியின் தந்தையுமான அழகிய சிற்றம்பலத்தின் இறப்பிற்கு பிறகு கவலைகளை மட்டுமே தன் ஆதரவாக கொண்டு, குடும்ப பொறுப்பை தலையிலும், பசி மயக்கத்தை உடலிலும், பாச மயக்கத்தை உள்ளத்திலும் கொண்டிருந்த நேரத்தில்தான் மீனாட்சி அச்சகத்தில் பணிபுரியும் சமூக நலம்விரும்பியான அரவிந்தனை சந்திக்கிறாள் பூரணி. தந்தையின் புத்தகங்களை வெளியிடும் நிமித்தமாக தன்னை காணவரும் அரவிந்தனை திருடி தன் உள்ளத்துக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள் அவள். தமிழர் பண்பு பட்டினியால் தெருவில் மயங்கிக்கிடந்தபோது  தன் கவியுள்ளம் பொங்க பாடும் அரவிந்தன், அவளை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு கிடைத்தபோது பக்தியும் காதலும் கலந்த உள்ளத்தை அவளுக்காய் அற்பணிக்கிறான்.



அதன்பிறகு இருவரின் இதயத்திலும் காதலோடு உயர்ந்த கருத்துக்களும் மணத்தது. இரசாயன மாற்றம் நிகழும் பேச்சுக்களை பேசி மகிழும் சராசரி காதலர்களாக இல்லாமல் சமூக சிந்தனைகளைத் தூண்டும் சீறிய கருத்துக்களைப் பேசினர். புற அழகையும் உள்ளத்து உணர்வுகளை எழுதுவதில் கூட எழுத்தாளர் தமிழோடு சுவையாக விளையாடி இருப்பது என்னைக் கவர்ந்தது. எண்ணங்களால் பாலம் அமைத்து இருவரும் கைக்கோர்த்து நடந்தனர். மணமாலையை மனதுக்குச் சூட்டி உவகைக் கொண்டனர்.

காதலன் காதலியை கௌரவித்து உயரத்தூக்கிப் பார்த்து ரசிப்பதே உண்மைக் காதல். கருத்துப் புதையலை தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கும் காதலியை உலகறிய செய்ய பாடுபடும் அரவிந்தன், உலகை நேசிக்கும் அரவிந்தனின் உடல் நலனையும் உள்ளத்து நலனையும் பேணிக்காக்க தவிக்கும் தாயாய் பூரணி. இதைவிட இலக்கிய காதலுக்கு அடையாளம் வேறென்ன வேண்டும்?



அழகிய கொடிகளாக இருப்பினும் அது நன்றாக படர கொழுகொம்பு துணையாக வேண்டும். அதுபோல அரவிந்தனும் பூரணியும் வாழ்வில் உயர்ந்தோங்க துணை புரிந்த கொழுகொம்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா. "களவுக்குப் போகும் பணத்தை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா, பூட்டுக்கு மேலே பூட்டைப்போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா” என்று நினைக்கும் வள்ளண்மை கொண்ட மங்கலேஸ்வரி அம்மா பூரணிக்கும் அவள் தம்பி தங்கைக்கும் இன்னொரு தாயானார். முதலாளியாக சம்பளத்தை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடாமல் அரவிந்தனுக்கு தேவையானதைச் செய்து தோள்கொடுக்கும் தோழனாய், தாங்கிப்பிடித்து நல்வழிப்படுத்தும் தகப்பனானார் மீனாட்சி சுந்தரம்.



நெருங்கிய தோழிகளாக இருப்பினும் இம்மியளவும் என் கவலைகளை யாரிடமும் வெளியிடமாட்டேன் என்று தன்மானம் காக்கும் பூரணியின் தேவைகளை தானாக புரிந்துகொண்டு நாங்கள் எங்கள் தோழிக்கு செய்வோம் இது எங்கள் கடமை. இதை மறுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை என்று உரிமைகீதம் பாடும் கமலாவும் காமாட்சியும் பூரணி சாய்ந்துகொள்ளும் தோள்களானார்கள். அமைதிக்கு இலக்கணம் அரவிந்தன் என்றால், புரட்சிகரமான கருத்துக்களுக்கு இலக்கணம் முருகானந்தம். முரட்டுத் தோற்றமாக இருந்தாலும் மென்மையான மனம் கொண்ட முருகானந்தம், எதிர்மறை கருத்துக்களை நாங்கள் கொண்டிருந்தாலும் எங்கள் நட்பை எவரும் பிரிக்க இயலாது என்று சொல்லி நட்பிற்கு இலக்கணமானான்.



அன்னையாய் வாழும் அக்காவிற்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்யாமல் அவள் கஷ்டங்களை புரிந்து பாசத்தை மட்டுமே பரிசளிக்கும் தம்பி தங்கை பூரணியின் குழந்தைகளானார்கள். பூரணியின் சொற்பொழிவையும் அவள் அன்பான அறிவுரைகளையும் கேட்டு நடக்கும் மங்கலேஸ்வரியின் மகள்களான வசந்தாவும் செல்லமும் பூரணியின் உடன்பிறவா சகோதரிகளானார்கள். நல்லவர் நல்லவரோடு சேரும்போது நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு நல்லதொரு சான்று மேலே குறிப்பிட்டுள்ள கதா பாத்திரங்கள்.



அழகான பறவைகள் மீட்டும் அனுராகங்களுக்கிடையில் அபஸ்வரம் தோன்றுவதைப் போல இக்கதையிலும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். கடைசிவரை கோபம் கொள்ளக்கூடாது, குறுநகைக்கொண்டே வாகைசூட வேண்டும். அகிம்சையே அரவிந்தனின் கொள்கையென வாழ்ந்த அரவிந்தனின் உள்ளத்தையே உலுக்கிப்போடுகிறது இவர்களின் செயல். சில மனிதர்கள் தன் வேலையை தானும் ஒழுங்காக செய்யமாட்டார்கள், அதே வேலையை அடுத்தவர்கள் முறையாக செய்ய நினைத்தாலும் விடமாட்டார்கள். இந்தக் கதையில் வரும் புதுமண்டபத்து அச்சகக்காரரை போல. பர்மாவிலிருந்து சூதும் சூட்சுமத்தையும் சம்பாதித்துக் கொண்டுவருகிறார் பர்மாக்காரர். இவர்களின் வரவால் அழகாய் அமைதியாய் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த அரவிந்தன் பூரணி வாழ்க்கையே ஆட்டம் காண்கிறது. நேர்மைக்காக இவர்களிடமிருந்து அரவிந்தன் பெறும் கொடுமையான பரிசுகள் ஏராளம்.



உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கும் அரவிந்தன் பூரணியை மணம் முடித்துக்கொள்வதுதான் மகத்தான லட்சியம் என்று வற்புறுத்துகிறார்கள் அவர்களின் நலம்விரும்பிகள். எண்ணத்தால் வாழும் வாழ்க்கை மட்டும் சில காலத்திற்கு போதும் என்கிறான் அரவிந்தன். என்னவன் எண்ணம் எதுவோ அதுவே என் எண்ணம் என்கிறாள் பூரணி. மனிதவெள்ளத்தின் நடுவே ஒளிதீபம் ஏந்திச் செல்லும் கனவு காணும் பூரணி ஒருபுறமும், மனிதகுலத்தில் பிறந்த சராசரி பெண்ணாக தன் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் பூரணி ஒரு புறமுமாக அரவிந்தனின் இதயத்தில் ஆட்சி செய்து அவனை இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவிட்டார்கள். இதில் யாருடைய கனவு நிரைவேறிற்று? இரண்டு பூரணிகளுள் அரவிந்தன் அடைந்த பூரணி யார்? உயரே செல்லும் போட்டியில் வெற்றிப்பெற்றது யார்? இதையெல்லாம் நான் சொன்னால் சுவை குன்றிவிடும். நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது சுதந்திரமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படி கட்டுப்பாடோடு வாழ்ந்தாலும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் என்பதே சுதந்திரம். இதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டால் தரணியே பண்பட்டு விளங்கும்.



ஆண்டவன் என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் காலம் என்பது அனைவருக்கும் பொதுவான உண்மை. பூமி சுழலும்போது மாறுவது காலங்கள் மட்டுமல்ல அனைவரது கோலங்களும்தான். சில காலம் இன்பத்தில் மிதந்தவர் பல காலம் துன்பத்திற்கு ஆளாகலாம். பல காலம் துன்பத்தில் உழன்றவர் சில காலமாவது இன்பமாய் வாழலாம். இது காலதேவனின் கணிக்க முடியா தீர்ப்பு. நடமாடும் மனிதர்களான நாம் அனைவருமே ஓடும் காலச்சிறையில் ஆயுள் கைதிகள். சுதந்திரமாய் சுற்றிவரும் பூமியில் நாம் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதிகள். இந்த அழுத்தமான உண்மையை உணர்வோர் மட்டுமே இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சமநிலை இதயத்தோடு இறுதிவரை இவ்வுலகில் உய்ய முடியும்.



தமிழென்னும் உளிகொண்டு காலத்தின் மதிப்பையும், காதலின் மகத்துவத்தையும், பண்பாட்டின் புனிதத்தையும், மனிதநேயத்தின் மாண்பையும் எல்லோரது இதயத்திலும் அழியா சிற்பமாய் செதுக்கிய எழுத்தாளர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


                             

Saturday, 6 March 2021

- வாழ்க்கைத் தேர்வு

ஒரு மனிதனின் சாமர்த்தியமே அவன் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதில்தான் இருக்கிறது. சிலர் அதில் வெற்றி காணலாம். சிலருக்கு அது தோல்வியில் முடியலாம். சிலருக்கு அது எப்படி தேர்ந்தெடுப்பது என்றே தெரியாமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு பாதையை தேர்வு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பப் பாவம். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு பூவேலி இருக்கிறது. சில பெண்களுக்கு முள்வேலி இருந்தாலும் அதையே பூவேலியாக நினைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இதிலிருந்து அவர்களால் விடுபட முடியாது. விடுபடவும் விரும்பமாட்டார்கள். இந்தச் சமூகமும் இதிகாசங்களும், கலாச்சாரம் என்ற பெயரில் அவர்களை அப்படி பழக்கிவைத்திருக்கிறது? ஒருவேளை அவர்களைப் பிடிக்காமல் வலுக்கட்டாயமாக அந்த பூவேலியிலிருந்து வெளியேற்றினால், யாருமில்லா கானகத்தில் தொலைந்த குழந்தையாய் திக்குத் தெரியாமல், செய்வது அறியாமல் தவியாய் தவிப்பார்கள். மற்றொரு பாதையை வகுத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கண்ணீர் காவியம்தான் இல்லம்தோறும் இதயங்கள். எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய இந்நாவல் எல்லாகால பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். வாழ்க்கைப் பாடம். பெண்மையை மதிக்காதவர்களுக்கும், பெண்மைக்கு துரோகம் செய்பவர்களுக்கும் இது மறக்கமுடியாத, மறக்கக்கூடாத சாட்டையடி. ஆனால், இப்படிப்பட்ட சாட்டையடிகளுக்கு எல்லா அநியாயக்காரர்களும் பணிவார்களா? மிரண்டு பின்வாங்கி பெண்மையின் மேன்மைக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குவார்களா? இல்லை. என்ற பதிலிருப்பது வருத்தம்தான்.

எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நிகழத்தான் செய்கிறது. அப்போது வெளியே தெரியாமலும் கவணிக்கப்படாமலும் இருந்த கொடுமைகள் இப்போது தொழில்நுட்பத்தின் உதவியால் கவணிக்கப்படுகிறது. கவனிக்கத்தான்படுகிறதே தவிர குறைந்தபாடில்லை. எத்தனை புதுமைப் பெண்களும், புரட்சிப்பெண்களும் உருவானாலும், அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் சாதாரணநிலையில் இருப்பவர்கள்தான். அப்படித்தானே அநியாயக்காரர்கள் நினைக்கிறார்கள். இந்த விமர்சனத்தையும் நாவலையும் படிப்பவர்கள் அப்படி எண்ணிவிடாமல், உங்களையும் ஒருமுறை சுய அலசலில் ஈடுபடுத்தி நிறைகுறைகளைச் சரிபார்த்துக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி. எழுதப்படுகிற எல்லாப் படைப்புகளும் யாராவது ஒருவர் மனதிலாவது தைக்காதா? அவரை நல்வழிப்படுத்தாதா? என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்தான் எழுதப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பிற்கு செவிசாய்க்கலாமே!

ஒரு பெண்ணின் உலகம் மிகச் சிறியது. திருமணத்திற்கு முன் பிறந்த வீடு. திருமணத்திற்கு பின் புகுந்த வீடு. என்னதான் பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியுலகத்தை எட்டிப்பார்த்தாலும், அவர்களின் பாதுகாப்பாக நினைப்பது இரண்டு வீடுகளைத்தான். சில பெண்கள் வெளியுலகத்தைக் காண விருப்பமில்லாமல் வீட்டையே உலகமாக எண்ணி மகிழ்வர். அப்படி மகிழ்ந்திருந்தவள்தான் மணிமேகலை.

மிராசுதார் அருணாச்சலத்தின் மகளான மணிமேகலை, தன் இளம் பருவத்தில் சொந்தக்காரனும் தோழனுமான வெங்கடேசன் மீது தோன்றிய மானசீகக் காதலை தந்தைக்காகவும் தமயனுக்காகவும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, எஞ்சினியர் ஜெயராஜை மணந்துகொண்டாள். அவளின் பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி. வளமான வீடுதான். செல்வத்திலும், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையிலும், வாய் பேச்சிலும் எந்த குறைச்சலும் சொல்லிவிடமுடியாது.

திருமணமாகி 3 வயது மகனிற்கு தாயாகும்வரை மணிமேகலை மகிழ்ச்சியாகவே இருந்தாள். கணவனின் காதல் மழையில் விடாது நனையத்தான் செய்தாள். ஆனால் என்ன செய்வது? வியாதிக்கு ஏழைப்பணக்காரன், மகிழ்ச்சியாக இருப்பவன், சோகமாக இருப்பவன் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாதே. அவளுக்கும் வந்தது தொழுநோய். ஆனால் அதனாலெல்லாம் அவள் பாதிக்கப்படவில்லை. பெருவியாதியைவிட ஒரு பெரும் வியாதியான சந்தேகம் இருக்கிறதே. அதனால்தான் அவள் பாதிக்கப்பட்டாள். ஆரம்பத்திலேயே அவளது நோய் கண்டுபிடிக்கப்பட்டு பூரணமாக குணமாகிவிட்டபோதும், தனக்கும் அது வந்துவிடுமோ என்ற சந்தேகத்தால் மணிமேகலை சித்திரவதை செய்யப்பட்டாள்.

நோயைப்பற்றி தெரிந்ததும் மணிமேகலையின் புகுந்த வீட்டார் அவளை அன்போடும் அனுதாபத்தோடும்தான் பார்த்துக்கொண்டனர். ஆனால் மணிமேகலையின் மாமியார் தம்பியான இராமபத்திரனின் மூளைச்சலவையால், மணிமேகலை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வேலை செய்யாமல் இருப்பதில் ஆரம்பித்து, கணவனின் புறக்கணிப்பு, நோய் பற்றிய சந்தேகப் பேச்சுகள், பெற்ற பிள்ளையை அவளிடம் கொடுக்க மறுப்பது, தனியறை, தனி தட்டு என்று முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வீட்டைவிட்டு விரட்டாத குறைதான்.

அதுவும் அவள் பிறந்த வீட்டிற்கு சென்று சிறிதுகாலம் தங்கிவிட்டு வருகிறேன் என்று போய்விட்டு வந்தபின் நடந்தேறிவிட்டது. பிறந்தவீட்டிலும் அவமானப்பட்டு வந்த மணிமேகலை புகுந்த வீட்டாராலும் துரத்தியடிக்கப்பட்டாள். எல்லா வீடுகளிலும் எந்த நிலையிலும் மாறாத அன்புகொண்ட இதயங்கள் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட இதயங்கள் மணிமேகலையின் வீடுகளிலும் இருந்தன. அவர்கள் மணிமேகலையை பெற்ற தந்தையும் மாமனாரும்தான். பாவம் வயது முதிர்ந்த அவர்களால் மணிமேகலைக்கு என்ன செய்யமுடியும் உள்ளுக்குள்ளே மருகி தவிப்பதைவிட?

பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே. அப்படித்தான் இருந்தது கம்பௌன்டர் மணியின் குணச்சித்திரம். மாத்திரைகள் வாங்கிவந்து கொடுப்பதிலும், மணிமேகலைக்காக அனுதாபப்பட்டு அவள் குடும்பத்தாரிடம் பரிந்து பேசுவதிலும், அரக்கோணத்திலிருந்து அவளைச் சென்னை அழைத்து வருவதிலும் உதவிய மணி, மணிமேகலையின் தனிமையானச் சூழலைப் பயன்படுத்திக்கப் பார்ப்பான். மன உறுதிகொண்ட மணிமேகலை தப்பித்துவிட்டாள். ஆனால் நிஜத்தில்? பெண்களின் மிகப்பெரிய பலவீனம் அன்பு. அவர்களின் மிகப்பெரிய பலமும் அதுதான். நேசிப்பதையும், நேசிக்கப்படுவதையும் உயிராய் மதிப்பவர்கள் பெண்கள்.

இதைத்தான் கயவர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் அனைவரையும் உலுக்கி உருக்குலைத்துப்போட்ட பொள்ளாச்சி கொடூரங்கள். பலவந்தப்படுத்தி பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது வேறு. ஆனால் பாசத்தையும் பலவீனத்தையும் பயன்படுத்திப் பெண்களைச் சிக்கவைப்பதை எப்படி தவிர்ப்பது?

இரண்டே வழிகள். வறண்டபூமிதான் மழைக்காக ஏங்கும். வறட்சியே இல்லாமல் பார்த்துக்கொண்டால்? அன்பும் பாசமும் கிடைக்காத பெண்கள்தான் அதைத் தேடித் திரிந்து தடுமாறி தடம் மாறுவார்கள். கொடுக்க வேண்டியவர்களே அதைக் கொடுத்துவிட்டால்? பெண்கள் பாதுகாப்பான சுதந்திரத்தோடு இருப்பார்கள் அல்லவா? இந்தக் காலத்துப் பெண்கள் பாசத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. காசு, பணம், கார், பங்களா, உயர் படிப்பு, வெளிநாட்டு உத்தியோகம் என்றுதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அதையெல்லாம் பெண்கள் வாழ்க்கையை வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தான் கேட்பார்களே தவிர, அதையே வாழ்க்கையாக எண்ணிவிடமாட்டார்கள்.

பணத்தைக்கூட பெண்கள் தனியாக சம்பாதித்துக்கொள்வார்கள். ஆனால் பாசம்? எல்லா ஆண்களும் இதை ஒரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட அரக்கியின் இதயத்திலும் பாசமெனும் ஊற்று கொஞ்சமாவது ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டால் பாதிக்குமேல் வெற்றிதான். இன்னொன்று, தவறு செய்பவரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டப் பெண்ணின் குண அலசலில் ஈடுபடுவது. பெண்ணை இழிவுப்படுத்துவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். என்ன தவறு செய்தாலும், அதனால் பாதிக்கப்படுவது பெண் என்ற திமிரில்தான் பல குற்றங்கள் நிகழ்கிறது. ஒரு பெண்ணைப்பற்றி இன்னொரு பெண்ணே இழிவாக பேசும் அழகு நம் கலாச்சாரத்திற்கு மட்டுமே உரியது.

முள்ளின்மேல் சேலை விழுந்தாலும், சேலையின்மேல் முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான் என்று எழுதிவைத்த புண்ணியவான் எவனோ. அல்லது புண்ணியவதி எவளோ?! அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வெறும் சேலைக்கு மட்டுமே பொருந்தும் இந்த வாக்கியத்தைப் பெண்ணுக்குப் பொறுத்தி அவர்களை நம்பவைத்து, அவர்கள்தான் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொடுமையை என்னவென்று சொல்வது? இது மாற வேண்டும். தன்னைச் சுற்றி என்ன தவறு நிகழ்ந்தாலும், அதைத் தைரியமாக வெளியில் சொல்லலாம் என்ற மன உறுதி வரவேண்டும். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்ற பாதுகாப்பும் உத்திரவாதமும் கிடைக்கவேண்டும். தவறு செய்பவர்களுக்கு பயமும் துன்பமுமே வாழ்க்கையாக வேண்டும். சேலைமேல் முள்விழுந்தால் முள்ளுக்குத்தான் சேதம் என்ற புதுமை வரவேண்டும்.

உடன்பிறந்த அண்ணனான இராமலிங்கமும், தம்பி சந்திரனும் காட்டத் தவறிய பாசத்தை, உடன்பிறவா அண்ணன்களான இரத்தினமும், கூத்து கோவிந்தனும் மணிமேகலைக்குக் கொட்டிக்கொடுத்தனர். கோவிந்தனின் உதவியால் மணிமேகலை ஒரு இச்த்தீரியா (hysteria) நோயாளியிடம் வீட்டு வேலைக்கு சேர்ந்தாள். ஒருநேரம் அன்பால் குளிப்பாட்டப்படுவதும், மற்றொரு நேரம் அடிகளாலும் வார்த்தைகளாலும் அபிஷேகிக்கப்படுவதுமாக அவளின் நாட்கள் கழிந்தன. காமாட்சியின் இந்த இருவேறுப்பட்ட ரூபத்தில், மணிமேகலை புரிந்துகொள்வதாக எழுத்தாளர் குறிப்பிட்ட விஷயம் என்னை மிகவும் கவர்ந்த ஓர் எதார்த்தம்.

பெண்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஓற் உண்மையும் கூட. ‘டார்லிங்’ என்று சொல்பவரைவிட என்னடி ‘இழவெடுத்தபய மவளே’ என்று சொல்பவரின் அன்பு மாறாத ஒன்றென்று எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் உண்மை. அன்பை அவரவர் அவரவருக்கு தெரிந்தவிதத்தில்தான் வெளிப்படுத்தமுடியும். தேனொழுக பேசுவது உண்மையான அன்புமில்லை. முரட்டுத்தனமாக நடப்பவர்களிடம் அன்பே இருக்காது என்பதுமில்லை. இனிப்பான பேச்சை பல ஆண்கள் பெண்களை தன் வலையில் விழவைக்கப் பயன்படுத்தும் யுக்தி. வாழவைக்கத் தெரிந்தவர்களுக்கு பேசத்தெரியாது. பேச்சு மட்டுமே இருப்பவர்களால் பெண்ணை வாழவைக்கமுடியாது.

மாத்திரை சரியாக எடுத்துக்கொள்ளாததால் மணிமேகலையின் நோய் மீண்டும் கூர்மை பெற, வெங்கடேசனால் செங்கை மாவட்டத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கியவர்களுக்காக ஒரு ஒதுங்கிய பகுதியிலுள்ள இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். திருமணமான பின்னும் தன்மேல் மாறாத அன்பைப் பொழியும் வெங்கடேசனின் அன்பால் மணிமேகலை உணர்ச்சிமயமானபோது, அவன் கம்பீரத்துடன் அவள் சொன்னதையே திருப்பிச் சொன்னான். அன்பு என்பது ஓர் மாபெரும் சக்தி. அதன் ரூபம் மாறுமே தவிர சக்தி மாறாது. நான் ரூபம்தான் மாறியிருக்கிறேனே தவிர என் அன்பு மாறவில்லை என்றபோது மணிமேகலை அந்த வார்த்தைகளில் உயிர்த்தெழுந்தாள்.

அந்த இல்லத்தின் நிர்வாகியான மதர், தேவதாசிகளைப்பற்றிய ஆய்வுப்படிப்பிற்காக தன் தமக்கை மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைச் சந்தித்தபோது, ஆயிரம் தேவதாசிகளைப்பற்றி ஆராய்வதைவிட ஒரு அபலைக்காவது ஆதரவளிப்பது பின்னாளில் உங்களுக்கே பாதுகாப்பாக அமையும் என்ற அறிவுரைப்படி, தேவதாசிகளைவிட தொழுநோயாளிகளுக்குத்தான் ஆதரவு தேவை. அவர்கள் வாழ விரும்பினாலும் வாழமுடிவதில்லை என்பதை அறிந்து தமிழ்நாட்டில் செங்கை மாவட்டத்தில் அந்த இல்லத்தைத் துவக்கினார். உறுப்புகள் சுகமாக இருப்பவர்களின் கைத்தொழில்களாலும், மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்களின் நன்கொடையாலும் அந்த இல்லம் இயங்கிக்கொண்டிருந்தது. மதரின் இறப்பிற்கு பின் மணிமேகலை தானாகவே முன் வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

பணநெருக்கடி வந்தபோது தன் தாலி முதற்கொண்டு அனைத்து நகைகளையும், சேமித்துவைத்திருந்த பணம் அனைத்தையும் இல்லத்திற்கே செலவிட்டாள். அதையும் மீறிய நெருக்கடி வந்தபோது, வெங்கடேசன், இரத்தினம், கூத்து கோவிந்தன் ஆகியோரின் உதவியுடன் கணவனிடம் போராடி 60 பவுன் நகைகளையும் ஜீவனாம்ச பணத்தையும் வாங்கினாள். அண்ணன் தம்பியுடன் போராடி அப்பா அவள் பெயரில் எழுதிவைத்த சொத்துக்களை வாங்கினாள். ‘அன்னை மார்கிரேட் அருளில்லம்’ என்ற புதிய பெயரில் இல்லத்தைச் சிறப்பாக நிர்வகித்தாள். தொழுநோயாளிகளின் குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு இல்லம் துவங்க வேண்டும் என்ற மணிமேகலையின் புதிய திட்டத்தோடு கதைமுடியும்.

என்னதான் நாம் குணக்குன்றாக இருந்தாலும், இருக்க முயற்சித்தாலும் சில இயல்புகளைத் தவிர்க்க முடியாது. துர்நாற்றம் பிடிக்காது, மற்றவர் உபயோகித்ததை உபயோகிக்கப் பிடிக்காது, வாந்தி பிடிக்காது, மனித கழிவுகளை சுத்தம் செய்யப் பிடிக்காது, இரத்தம் பிடிக்காது, தூய்மையாக இல்லாதவரிடம் பழகப்பிடிக்காது, நோயால் பாதிக்கப்பட்டவரிடம் நெருங்கிப்பழகப் பிடிக்காது. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் மனதில் ஏற்படும் சஞ்சலங்களைத் தவிர்க்கமுடியாது. மேலே குறிப்பிட்டவையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இருப்பவர்களும் இருக்கலாம். ஆனால் அந்த இயல்புகள் இருப்பது முற்றிலும் தவறு என்றில்லை.

எல்லா நோயாளிகளுக்கு தன் நோயின் வீரியம் தெரியும். அவர்களே நெருங்கிப்பழக விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பது தானும் மனிதர்கள்தான் என்று தன்னைச் சுற்றியிருப்போர் நினைக்க வேண்டும். பரிவோடு ஒரு பார்வை, அனுசரணையான பேச்சு, குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதைத் தருவதால் நமக்கு என்ன நோய் தொற்று வந்துவிடப்போகிறது? வியாதியைப்பற்றி மருத்துவர் சொல்வதை முழுமையாக நாம் நம்புவது மட்டுமின்றி, நோயாளியையும் நம்பவைக்க வேண்டும். ஒரு நோயின் மிகச்சிறந்த மருந்து நம்பிக்கைதான்.

மணிமேகலையின் இல்லத்து நிர்வாகி உயிருடன் இருந்த வேளையில், சமூக சேவை செய்கிறேன் என்று சில பெண்கள் வருவார்கள். நயமாகப் பேசி நன்கொடையும் கொடுக்க முன்வருவார்கள். நிர்வாகி அவர்களுக்கு பழச்சாறு எடுத்துவரச் சொல்வார். முதலில் சரி என்றவர்கள், அங்கு சமைக்கப்படும் அனைத்துமே தொழுநோயாளிகள் சமைத்தது என்று சொன்னதும் ஒவ்வொரு காரணம் சொல்லி தெறித்து ஓடிவிடுவார்கள். மதரும் நாசூக்காக நன்கொடையை மறுத்துவிடுவார்.

சேவை என்பது கட்டாயத்திற்காகவோ, பேர் புகழிற்காகவோ, பகட்டிற்காகவோ செய்வது இல்லை. அது மனமுவந்து மற்றவருக்காக மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட குண இயல்புகளைக் கொண்டவர்களால் எல்லா சேவைகளையும் முகச்சுளிப்பில்லாமல் செய்யமுடியாது. மீறி செய்தால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாமல், நிறைவில்லாத சேவையாகதான் இருக்கும். எனவே நம்மால் என்னமுடியுமோ அதை நிறைவாக செய்தாலே போதும்.

கடவுள் பாவங்களைச் சுமக்க தைரியசாலிகள் யாரென்று பார்த்துதான் அதைக் கொடுப்பாராம். இதுவும் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம். மிகுந்த மனவுளைச்சலில் இருந்தபோது நான் படித்த இந்த வார்த்தைகள் எனக்கே ஒரு தெளிவையும் தைரியத்தையும் கொடுத்தது. மனக்கஷ்டங்களைத் தாங்கும் அளவுக்கு நான் தைரியசாலி என்று காலமும் கடவுளும் நினைத்திருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து கஷ்டங்களையும் தைரியமாக கடந்து, தன்னையும் காத்து, தன்னைப்போன்ற பிறநோயாளிகளையும் காக்கவேண்டும் என்ற வாழ்க்கைப்பாதையை மணிமேகலையால் தேர்வு செய்யமுடிந்தபோது ஏன் நம்மால் முடியாது? நமக்கான வாழ்வை நாமே தேர்வு செய்வோம். அதை வேட்கைக்கொண்டு வெற்றிபெறுவோம்.

 

Wednesday, 20 January 2021

‘நானே என் முதல் ரசிகன்’

சமீபத்தில் வாசிப்பைவிட எழுத்தும் பதிப்பும் அதிகமாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் பெண் எழுத்தாளர்கள் இணயத்தில் நிறைய எழுதுகிறார்கள். காதல், நட்பு, காமெடி, பாசம், குடும்பம் இப்படி உள்ளத்து உணர்வுகளைமையமாகவைத்து எழுதி வருகின்றனர். இதற்கெல்லாம் பெரிய முன்மாதிரி எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன் அவர்கள்தான்.

வீட்டு வேலை, படிப்பு, பணிச்சுமை இதற்கிடையில் பொழுதுபோக்காக ரமணி சந்திரன் நாவல்களைப் படித்து, அவர் எழுத்தில் கவரப்பட்டு, நாமும் இப்படி எழுதினால் என்ன? என நினைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்கள் எத்தனையோ பேர். இப்போது கிண்டிலில் பெண்கள் ராஜியம்தான் நடக்குது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறும் விஷயம் என்னவெனில், அப்படிப்பட்ட குடும்ப கதைகளுக்குள் நிச்சயம் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனை அடங்கியிருக்கும். பெயரைப் பார்த்துவிட்டு இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்று கடந்துவிடக்கூடாது.

எல்லா காலத்திலும் சமூகப் பிரச்சனைகளை ஒரு நாவலாக சித்தரிப்பது இருக்கிறதுதானே? எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், எழுத்தாளர் சிவசங்கரி போன்றவர்களைக் கூட எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட கதை என்று  கடந்துவிடமுடியாத கதைதான் எழுத்தாளர் ஸ்ரீகலாவின் தாயுமாணவன். குறுநாவல் என்றாலும் அனைவரும் வாசிக்கக்கூடிய வாசிக்க வேண்டிய கதை.

தாயுமானவன் என்ற பெயரைப் படித்ததும் முதலில் நமக்கு என்ன தோன்றும்? ஒரு தந்தை தன் குழந்தைமேல் தாயைப்போல் பரிவு காட்டுகிறார். அல்லது கணவன் மனைவியின் மீது செலுத்தும் அன்பு தாய்க்கு நிகரானது. இப்படித்தானே தோன்றும். ஆனால் இது எதுவுமே இல்லை!

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை கணவன், பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் சொல்வதில் தொடங்கி, மசக்கை அனுபவித்து, குழந்தையின் வளர்ச்சியை அனுஅனுவாய் ரசித்து, அதன் அசைவுகளை உயிருக்குள் சேமித்து, இரவும் பகலும் குழந்தைக்காக தன்னை கவணத்துடன் பார்த்துக்கொண்டு, பயம், கவலை, வேண்டுதல் போன்ற மனச்சுமைகளோடு பிரசவ வலியையும் தாங்கி குழந்தையை பெறுகிறாள்.

தன் இரத்தத்தை விருந்தாக்கி, முத்தத்தை மருந்தாக்கி, உடலுறுப்புகள் வளர்கிறதா, உணர்வுகள் புரிகிறதா, உரக்கம் வருகிறதா, உடல்நலம் சீராய் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து குழந்தையின் பாதுகாப்பு கவசமாகிறாள்.

முதல்நாள் பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கி, அன்றாட வாழ்வில் நடப்பவைகளைக் கேட்டு பூரிப்பதில் தோழியாகிறாள். பாடமும் பண்பும் பயிற்றுவித்து பிள்ளையை பெரியோர் போற்றும் புகழோனாக்குவதில் நல்ல ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறாள். இப்படியே குழந்தை வளர்ப்பு தெளிந்த நீரோடையாகவே இருந்துவிட்டால் சரி. ஆனால் விதி ஓடையில் கல்லெறிந்து கலைத்துவிட்டால்? இறுதிவரை போராட்டம்தான்.

அதுதான் நடந்தது இந்த கதையில் வரும் தாய் ரங்கநாயகிக்கும் மகன் சியாமள கிருஷ்ணனுக்கும். சியாமளகிருஷ்ணன் தன் 10 வயதுவரை கிருஷ்ணனாகதான் இருந்தான். அக்கா, அண்ணன், தம்பியுடன் சந்தோஷமாகவே வாழ்க்கையைக் கடத்தினான். அவனின் 11ஆவது வயதில் பெண்களுக்கு வரவேண்டிய மாதவிடாய் சுழர்ச்சி வரவே, தாய் தந்தையர் பயந்துபோய் மருத்துவரிடம் சென்றனர். அவரோ (intersex) இருபாலுடல் அமைப்பினன் என்று தீராத துன்பச் செய்தியை தன் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறினார்.

அதாவது இருபால் உடலமைப்பு என்றால் வெளிப்படையாக ஆணாக இருந்தாலும், உள்ளுறுப்புகளில் அதிகப்படியாக பெண்ணிற்கு  இருக்க வேண்டிய கர்பப்பை இருக்கும். அதனால் மாதவிடாய் போன்ற பெண்கள் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அன்றுமுதல் அவன் தந்தைக்கு வேண்டாதவனாகிவிட்டான். உடன்பிறப்புகள் ஒதுக்கும் பொருளானான். காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு எனும்போது கடவுளனுப்பிய பிரதிநிதியான தாய்க்கு மட்டும் அது பொருந்தாதா? ரங்கநாயகி தன் மகன் சியாமளகிருஷ்ணனை முழுமையான கிருஷ்ணனாக மாற்றவே தன் வாழ்நாளை செலவிட்டார்.

அவனைப் படிக்கவைத்தார். அவன் ஆயுள் முழுமைக்குமான தன்னம்பிக்கையைக் கொடுத்தார். காதல் கிட்டாத நிராசையில் அவன் கலங்கியபோது மகப்பேறு மருத்துவம் படிக்கச் சொன்னார். அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனாலும், அவனால் பிரசவம் பார்க்கப்படும் அனைத்து குழந்தைகளும் அவன் குழந்தைகள் என நினைக்கச் சொன்னார். சியாமளகிருஷ்ணனும் இதையெல்லாம் மனதில் கொண்டு பிரபலமான மகப்பேறு மருத்துவரானான்.

தாயின் அறிவுரைப்படி சாதித்துவிட்டான். இநி தாயுமானவனாக வேண்டாமா? குழந்தைக்காக சிகிச்சைப்பெற வந்த பெண்ணிற்கு கர்பப்பையில் பிரச்சனை இருப்பதால் அதை நீக்கும் நிலை வரவே, அவர்களிடம் தன்னைப்பற்றிச் சொல்லி தன்னிடம் அதிகப்படியான உறுப்பாக இருந்த கர்பப்பையை தானமாக கொடுத்தான். பின்னர் மேற்படி சிகிச்சைகளை மேற்கொண்டு, அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தான். தன் கர்பப்பை மூலம் உதித்த குழந்தைக்கு தானே மானசீக தாயானான். தாயுமானவனானான்.

விதி அனைவருக்கும் பூப்பாதையை விரித்துவைத்திருப்பதில்லை. பலருக்கும் முள்பாதையைத்தான் விரித்துவைத்திருக்கும். அந்த முள்பாதையைப் பூப்பாதையாக மாற்றுவது மனிதனின் பொறுப்பு. திறமையும், திடமான நம்பிக்கையும், சரியான வழிகாட்டுதலும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடலாம்.

பெண் என்பவள் தோற்றுக்கொண்டே ஜெயிப்பவள். எத்தனைத் தோல்விகளைச் சந்தித்தபோதும் மீண்டும் ஜெயிக்க என்னவழி என்று தேடித்தேடி அதை கையாள்பவள். இயல்பிலேயே பெண்ணின் குனம் இதுவாக இருக்க, அவளே தாயாக இருந்தால்? சிறந்த தாயானவள் தன் மகன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனை சரியான பாதையில் வழிநடத்திச்சென்று இலக்கை அடையச் செய்வாள்.

இந்தக் கதையில் வரும் ரங்கநாயகியும் அப்படித்தான். ஊரும் உறவும் தன் மகனை ஒதுக்கிவிட்டபோதும், அவன் என்மகன். ஜெயிக்கப்பிறந்தவன். எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவன் என்று தானும் போராடி அவனையும் உலகத்தோடு போராடவைத்து இலக்கை அடையச் செய்தாள். இந்த உலகில் எத்தனையோ ரங்கநாயகிகள் வாழ்ந்து, மறைந்து, மீண்டும் பிறந்து, இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தன்னிடம் இருந்த குறையான கர்பப்பையை தானமாக கொடுத்து, தன் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கி மற்றவருக்கும் வாழ்வின்மேல் ஒரு பிடித்தத்தைக் கொடுத்து தாயுமானவனான சியாமளகிருஷ்ணனைப் போல ஏன் மற்றவரால் இருக்கமுடியாது? தானம் என்ற ஒரு சிறு செயல் எத்தகைய விந்தைகளை நிகழ்த்தியிருக்கிறது.

ஆறு மாதம் முன்பு விகடனில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சக்ரவர்த்தியின் கட்டுரை வெளிவந்தது. அதில் அவர் இருபால் உடலினன் என்றும், பலவித போராட்டங்களைச் சந்தித்து ஊடகத்துறையில் 20 வருஷங்களுக்குமேல் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முழு காரணமும் அவர் அம்மாதான் என்று பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.

 

Sunday, 1 November 2020

பாமர பக்தியும், பணக்காரன் யுக்தியும்


”போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ? உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்.” “தம்பி போன ஜென்மத்துல நீ செய்த புண்ணியம். உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு.” “ அத்தான், ஏழேழு பிறவிக்கும் நாமே கணவன் மனைவியா இருக்கணும்.” “அம்மா அடுத்த ஜென்மத்துலையும் நானே உன் மகனா பிறக்கணும்.”


இப்படி ஜென்மம் என்ற வார்த்தையும், அதைப் பற்றிய நினைவுகளும் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முந்தைய ஜென்மங்களில் என்னவாக இருந்திருப்போம் என்று தெரியாதபோதே அன்றாட நிகழ்வுகளுடன் ஜென்மங்களை பொருத்திப்பார்த்து சிலாகித்துக்கொள்கிறோம். முன் ஜென்ம நினைவுகள் வந்துவிட்டால்? நல்லவை நடந்திருந்து, நல்ல நினைவுகலிருந்தால் வாழ்க்கை மேலும் ஜெகஜோதியாக இருக்கும். துக்கமும் நிராசையும் இருந்திருந்தால்? வாழ்க்கை அதோகதிதான்!


கவிஞர் கண்ணதாசனுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் கறி குழம்பைப் போன்றது. புலமை மிக்கவர்களால் மட்டுமே படிக்கக்கூடியது. ஏழை வீட்டில் எப்போதும் கறி வேகுமா? அதனால்தான் நம் கவிஞர் கண்ணதாசன் கறி குழம்பின் உப்பு, புளி, காரம் குறையாமல், அதே சுவையில் ஏழை வீட்டின் ரசிகையான ரசமாக மாற்றிக்கொடுத்திருக்கிறார். பாமரன் வீட்டிலும் பாட்டு ஒலிக்குதென்றால் அதற்கு காரணம் கண்ணதாசனே!


பிறவி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது பெருங்கவியைப் பற்றி என்ன பேச்சு? காரணம் இருக்கிறதே! சரசுவின் சௌந்தரிய லஹரி என்ற புத்தகத்தின் ஆசிரியர் கண்ணதாசனாயிற்றே! காலையில் கடவுள் பஜனையும், மாலையில் நாத்திகப் பிரச்சாரமும் செய்யக்கூடிய ஒரே கவிஞர் அவரன்றி வேறு யாரு?

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா, கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்ற பாடலை எழுதியதும் அவர்தான். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று கடவுளைச் செல்லமாக சாடி எழுதியதும் அவர் கைகள்தான். இந்த முரண்பாட்டையும் ரசிக்கவைத்தது இவரின் முத்தமிழ். சரசுவின் சௌந்தர்ய லஹரியை ஆத்திகனாக இருந்தபோது எழுதியிருக்கிறார். 


வடநாட்டில் ஒரு சிறுவனுக்கும், இளம் பெண்ணிற்கும் பூர்வஜென்ம நினைவுகள் வந்ததாக படித்தவர், தனக்கும் அப்படிமுன் ஜென்ம நினைவு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததன் விளைவே இந்நாவல். இதைப்போலவே இன்னொரு கதையும் எழுதியிருக்கிறார். இந்தக் கதை தினமணிகதிர் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கிறது.


தத்துவக் கதையாகவும் இல்லாமல், பகவத்கீதையின் முறையையும் கையாளாமல், ஒரு பிறவிக்கும் இன்னொரு பிறவிக்கும் இடையிலிருக்கும் ஜாடைகளையும் பின்பற்றாமல், தமிழ் ரசிகர்களுக்கு சுவையூட்டும் வகையில் மட்டுமே இந்தக் கதையை எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் ஒரு ராகத்தின் பெயரை வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு ஒரு சில அத்தியாயங்களுக்கு ஒரே பெயர் வைத்து நம்மைச் சோதித்திருக்கிறார்.


படித்துவிட்டு அந்தக் குறிப்பிட்ட நோக்கத்தைக் கண்டுபிடியுங்களேன்! ஒரு புத்தகம் எழுதும்வரைதான் எழுத்தாளருக்குச் சொந்தம். எழுதி வெளியிட்டபின், அதன் வெற்றியும் தோல்வியும் வாசகர்களுக்குச் சொந்தம் என்ற வாக்கியத்திற்கிணங்க, இந்தக் கதையின் போக்கு சரியா தவறா என்பதை படிப்பவர்களிடமே விட்டுவிட்டார்.


இந்தக் கதையின் நாயகி சரசுவின் சந்தோஷமே சௌந்தர்யலஹரிதான். அவளுக்கு மிக பிடித்த, அதிகம் பயன்படுத்தக்கூடிய வார்த்தை கிருஷ்ணா கிருஷ்ணா என்பதுதான். இயல்பான ஆசைகள் அனைத்தையும் துறந்து இறைவனிடம் சரண்புகுந்திருக்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் பெற்றோருக்கு வேதனையாக இருந்தது. இளையவர்கள் 10 பேர் கூடி அரட்டையடிக்கும் இடத்தில் ஒரு முதியவர் வந்து அமர்ந்துகொள்ளும்போது ஏற்படுமே ஒரு சங்கடம், அத்தகைய சங்கடத்தைத்தான் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள் சரசு.


எப்போதடா இல்லறத்தின் இனிமையை அனுபவிப்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தங்கையை மேலும் கஷ்டப்படுத்தாமல், பிடிவாதமாக பெற்றோரிடம் சண்டையிட்டு திருமணத்தை நடத்திவைத்துவிட்டாள். அண்ணன் அண்ணியை பார்க்க வந்த மாப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான ஜெயச்சந்திரன் அவர்களைக் கொடைக்கானலுக்கு அழைக்க, சரசுவையும் உடனழைத்துச்செல்ல விரும்பினர். முதலில் மறுத்த சரசு கோவில்களைப் பார்க்கலாம் என்றதும் கிளம்பிவிட்டாள்.


கொடைக்கானலுக்கு சென்றவர்கள் சாது சன்யாசினியான சாரதாம்மையாரின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சித்தம் கலங்காமல் வீடு போய் சேர்ந்தால் போதும் என்றெண்ணி போன அவசரத்தில் வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இதற்குமேலும் அக்காவை தனியே விட விரும்பாத பாமா சரசுவையும் அவள் பெற்றோரையும் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினாள்.


சரசுவைப்போலவே கடவுள் பக்தி கொண்ட தணிகைவேலன் என்றவனை திருமணம் செய்துவைத்தனர். கணவனுக்கு ஏதோ தீராத நோயிருப்பது தெரிந்தும், தனக்கு விதித்தது இவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு சரசு சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள். 4, 5 மாதங்கள் கடந்தநிலையில்தான் அவளுக்கு தன் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வரத்தொடங்கியது.


கணவனையும் மாமியாரையும் சமயபுரத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும் அழைத்துச் சென்ற சரசு, 12 நூற்றாண்டிற்கு முன்பு தானொரு தாசி மகள் அபரஞ்சியாக பிறந்தாலும் உத்தமப்பெண்ணாக வளர்ந்ததையும், தன்னைத் தொட்ட முதல் ஆடவனான வணிகன் நவகோடியையே கணவனாக ஏற்று காதல் வாழ்க்கை வாழ்ந்ததையும், இது பிடிக்காத அவள் தாய் சிங்காரவடிவு அபரஞ்சியை அரசரின் உடமையாக்கியதையும், இளவரசன் தான் இறைஞ்சிக்கேட்டதையும் பொருட்படுத்தாமல் இழிசெயல் செய்ததையும், துர்கையின் ஆயுதத்தால் தன்னை மாய்த்துக்கொண்டு, தானில்லாத உலகில் வாழ விரும்பாத நவகோடி தன்னுடன் மரித்ததையும் நினைவுகூர்ந்தாள். அதன்பின் அபரஞ்சி மேட்டைத் தோண்டி, அபரஞ்சியின் நகைகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள்.


அடுத்து, கோபிச்செட்டிப்பாளையம் நோக்கி செல்லும் சரசு குடும்பத்தோடு நாமும் பயணிப்போம். ஊரைத் தாண்டியுள்ள ஒரு மலைப் பிரதேசத்தில் கார் நின்றதும் அங்கிருந்த ஏரியைப் பார்த்தாள் சரசு. அவள் சிந்தனை 600 ஆண்டுகள் முன் நோக்கிச் சென்றது. கொங்குநாட்டைப் பல்வேறு மன்னர்கள் ஆண்ட சமயமது. அந்த ஏரிக்கரைக்கு பக்கத்திலிருக்கும் பண்ணாரிமேட்டுப்பட்டி பஞ்சாயத்து சபைத் தலைவர் பார்த்திபனாருக்கும் அவரின் முதல் தாரமான அன்னபூரணிக்கும் மூத்த மகளாகப் பிறந்தாள் தங்கம்.


அழகுப் பதுமையாய் வளரும் வஞ்சிக்கொடியின் வயது ஏற ஏற, விவாகம் நடக்க வேண்டுமே என்ற வருத்தத்திற்கு உட்பட்டாள் அன்னை அன்னபூரணி. அதைப்பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அவள் கணவர் பார்த்திபனாரும் இரண்டாம் தாரமான மகேஷ்வரியும், அவர்கள் மகள் பொற்கொடிக்கு வணிகன் அரசநாராயணனை நிச்சயித்தனர்.


இந்தக் கொடுமையைக் காணப் பிடிக்காமல் தங்கத்தின் குடும்பத்தார் அன்னபூரணியின் தங்கையான தெய்வநாயகி வீடிருக்கும் ராயகௌண்டன்பட்டிக்கு சென்றனர். பாவம் அவர்களுக்கென்ன தெரியும். அதுதான் அரசநாராயணனின் ஊரென்று. புரவியில் வரும்போது பார்த்துவிட்ட தங்கத்தைத்தான் திருமணம் செய்வேனென்று பொற்கொடியுடனான திருமணத்தை நிறுத்தி, குறித்த முகூர்த்தத்தில் தங்கத்தின் கழுத்தில் தாலிகட்டிவிட்டான் அரசநாராயணன்.


பார்த்திபனார் பஞ்சாயத்தைக் கூட்டினார். தாயின் அறிவுரைப்படி தங்கம் தான் வயது வந்தவள் என்றும், தானே மனமுவந்து மணம்புரிந்துகொண்டதாக சொல்லிவிட, பஞ்சாயத்து பொடிப்பொடியானது. மரணத்தருவாயிலிருந்த மனைவி அன்னபூரணியைக் கண்டுகொள்ளாமல் பார்த்திபனார் வந்தவழியே திரும்பிவிட்டார். தாயைப் பறிகொடுத்த தங்கம் தன் கணவனுடனும், உடன்பிறந்தோருடனும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றபோது, பார்த்திபனார் ஆட்களின் கைவண்ணத்தில் கத்திக்குத்து பெற்றான் அரசநாராயணன்.


உயிர் பிழைத்துக்கொண்டவன் விட்டுவிடுவானா பார்த்திபனை? 12ஆம் நாளே கொன்று குவித்துவிட்டான். அக்கா மகேஷ்வரியின் கோலத்திற்குப் பழிவாங்க படையெடுத்தான் சித்திரன். அனைத்துக் காவலர்களையும் கொன்றுவிட்டு, அரசநாராயணனைக் கட்டிப்போட்டுவிட்டு, அவன் கண் முன்னே தங்கத்தை சிதிலப்படுத்திக் கத்தியால் குத்திக்கொன்றான்.


நினைவிலிருந்து மீண்ட சரசு, இப்போது மணந்திருக்கும் தணிகைவேலந்தான் போனஜென்மத்தில் அவளைச் சீரழித்தச் சித்திரன் என்று கூறி, அவனுடன் வாழ விருப்பமில்லை என்று திட்டிவிட்டுத் தன் கிராமத்திற்குப் புறப்பட்டாள். தங்கை பாமா கொடைக்கானலுக்குச் சென்றதை அறிந்ததும், கோபிச்செட்டிப்பாளையம் போய் அரசநாராயணனை பார்க்க விரும்பினாள்.

சாரதாம்பாளின் உபயத்தில் தங்கையின் கணவன் ராஜேந்திரந்தான் அரசநாராயணனென்றும், அவர் தம்பி ஜெயச்சந்திரந்தான் நவகோடி என்றும் தெரிந்துகொண்டாள் சரசு. அதுதான் அவள் வாழ்க்கை அதோகதியாவதற்கான முதல்படி. பின் படிப்படியாக என்ன நடந்திருக்கும் என்பதை படித்தே தெரிந்துகொள்ளுங்கள்.


பொழுதுபோக்கிற்காக இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் அவ்வளவே. ஏழேழு ஜென்மத்திலும் பெண்களுக்குத் துன்பங்கள்தான் நேரிடும் என்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது இக்கதை. முதலிரண்டு ஜென்மங்களில் துன்பங்கள் நேர்ந்திருந்தாலும், நிகழ்ஜென்மத்தில் சந்தோஷமாக வாழ்வதைப்போல படைத்திருக்கலாம்.


ஆண்மீகரீதியில் செல்லவேண்டும் என்பதற்காகவும், அவர் சொன்னபடி தமிழ் ரசிகர்களுக்குச் சுவையூட்டும்படி எழுதவேண்டும் என்பதற்காகவும், நிகழ்ஜென்மத்திலும் துயரங்களை எதிர்கொள்ளும் பெண்ணாக சித்தரித்திருக்கிறார். எல்லா காலங்களிலும் இப்படியும் சில ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்ன செய்வது! இந்தக் கதையிலிருந்து இன்னொரு விஷயமும் புரிகிறது. பக்தர்கள் தன்னிடம் சரண்புக கடவுள் கையாளும் யுக்தி கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என்று!


கண்ணதாசன் அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரத்தால் பக்திப் பற்றிய என் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்கிறேன். ஒரு விஷயத்தை அளவுக்கு மீறி நேசிக்கும்போதும், அதைப் பற்றியே யோசிக்கும்போதும், அது நம்மை அடிமைப்படுத்தி ஆட்கொண்டுவிடுகிறது. பக்தியும் அப்படியே. அதன் அளவை மீறும்போது அடுத்தவரைப் பாதித்துவிடுகிறது.


உரக்கப்பாடி சாமி கும்பிடும் சத்தமும், சாமியாடவைத்து குறிகேட்கும் சத்தமும் சுற்றுப்புறத்தை பாதிக்கும் என்ற எண்ணம் இன்றுவரை வந்தபாடில்லை. தோணும்போது ஆலயம் தொழுது, காசு இருப்பின் கற்பூரம் காட்டி, ஆசைப்பட்டால் அர்ச்சனை செய்து, வசதியிருந்தால் பசித்தவனுக்கு பிரசாதம் தருவதே போதுமான பக்தி! இதுவே பாமரனின் பக்தி. தங்கநகைப் பூட்டி, வெள்ளிவேல் சாற்றி, வேண்டுதல் பெயரில் வியாபாரம் செய்வது பணக்காரன் தன் பாவங்களைக் கரைக்கக் கையாளும் யுக்தி.


இப்போது பாமரனும் சரி, பணக்காரனும் சரி. பக்தியைவிட யுக்தியைத்தான் விரும்பிச் செய்கின்றனர். கண் போன்ற கல்விக்குச் செலவழிக்க மனமில்லாமல், கடன் வாங்கியேனும் காளியம்மன் வேண்டுதல் கணக்கை முடிக்க நினைக்கின்றனர்.


பக்திக்கும் பூர்வஜென்ம ஞாபகத்திற்கும் என்ன தொடர்பு? இரண்டுமே நம்பிக்கை தான். நிரூபிக்கப்பட்ட உண்மை இல்லை. இந்தப் புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், பூர்வஜென்ம ஞாபகங்களால் வரும் இடையூறுகள் ஆன்மிகரீதியில் எதிர்கொள்ளப்படுகிறதே அன்றி அறிவியல்பூர்வமாக அல்ல!


நூற்றில் ஒரு வாய்ப்பாக பூர்வஜென்ம ஞாபகங்கள் உண்மையாக வருமேயானால், சரசுவை போல சௌந்தர்ய லஹரி பாடிக்கொண்டு சாரதாம்மையாரின் பின்னால் போகாமல், சாதாரணப் பெண்ணாய் மனநல மருத்துவரை அணுகி அறிவுப்பூர்வமாக செயற்பட்டால், சிக்கல்களைப் பதமாய் நீக்கி வாழ்வைச் சீராக வைத்துக்கொள்ளலாம்.


கடவுளை கம்ளைண்ட் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கும் காவலதிகாரியாகப் பார்க்காமல், கைக்குலுக்கும் நண்பனாக நாம் எப்போது நினைக்கப்போகிறோம்? பக்தி என்பது பார்வைக்கு எட்டாத பரமாத்மாவிற்கு படையல் போடுவது மட்டுமல்ல. பக்தி என்றால் நேசம்.


தேசத்தை நேசிப்பவர்களை தேசபக்தர்கள் என்றுதானே சொல்கிறோம். இறைவனைப் போல, இறைவனைவிடவும் அதிகமாக இதயங்களை நேசிப்போம். ஆண் பெண்ணையும், பெண் ஆணையும், பெற்றோர் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும், மாணவர்கள் ஆசிரியர்களையும் பக்தி செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏழைத்தொழிலாளிகளை பணக்கார முதலாளிகள் பக்தி செய்தால், ஏற்ற தாழ்வுகள் ஓடிவிடும். வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடும்.


மனிதம் மலர்ந்திருக்கும் மனமெல்லாம் மாதவன் வாழும் ஆலயமென்று நான் மட்டும் சொல்லவில்லை. தன் வரிகளின் சுழலுக்குள் நிரந்தரமாய் சிக்கவைத்துச் சென்ற கவிஞர் கண்ணதாசனே சொல்லியிருக்கிறாரே!


இதோ இப்படி!


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும். 

நிலை உயரும்போது பணிவு கொண்டாள் உயிர்கள் உன்னை வணங்கும்.


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம். 

அன்பு நன்றி கருணைக் கொண்டவன் 

மனித வடிவில் தெய்வம்.


இதில் மிருகம் என்பது கள்ளமனம். உயர் தெய்வம் என்பது பிள்ளைமனம். இந்த ஆறு கட்டளை அறிந்தமனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம். 

        ஆம்! ஆறு கட்டளை அறிந்தமனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.


 

Friday, 16 October 2020

உண்மையின் உரத்த குரல்

சத்தியம்! இது சத்தியம்! எல்லாம்வல்ல இறைவனின் ஆணை! சொல்லப்போவது யாவையும் உண்மை -.

உண்மையை ஏற்பதும் எதிர்கொள்வதும் எல்லோருக்குமே ஒரு பெரிய சவால்தான். அந்த சவாலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், துக்கமும் சந்தோஷமும் சரிவிகிதத்தில் கிடைக்கும். வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டுமோ, அதே அளவு தைரியம் சாவதற்கும் வேண்டும். அதேபோலத்தான் பொய் சொல்வதற்கும் எந்தளவு துணிச்சல் வேண்டுமோ, அதைவிட பலமடங்கு துணிச்சல் உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் வேண்டும்.

உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வர். பலர் உண்மையை எதிர்கொள்ள தைரியமில்லாமல் ஓடி ஒளிவர், சிலர் தனக்கு மிகவும் நெருங்கியவரிடம் மட்டும் உண்மையை ஒப்புக்கொள்வர், இன்னும் சிலர் தன்னை நேசிக்கும் ஒருவரிடம் மட்டுமாவது நூறு சதவிகிதம் உண்மையைப் பகிர்ந்துவிட்டு நிர்மலமான மனதுடன் நிம்மதியாக வாழ்வர். ஆனால் இந்தப் புத்தகத்தை எழுதிய மனிதர் சற்று வித்தியாசமாக, தான் நேசிப்பவர்களிடமும், தன்னை நேசிப்பவர்களிடமும், தன் நடிப்பை ரசிக்கும் ரசிகர்களிடமும், தன் தொடரை வாசிக்கும் வாசகர்களிடமும் உண்மைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

சுமார் 13, 14 வருடங்களுக்குமுன் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதியதே இந்தப் புத்தகம். சொல்லாததும் உண்மை. நெகிழவைத்து, நெஞ்சை கலங்கவைத்து, அதிரவைத்து, அடுத்தது என்னவருமோ என்று எதிர்பார்க்கவைக்கும் உண்மைகள் அடங்கிய புத்தகம்.

கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை என்று, அடையார் சிக்னலில் கார் நின்ற கணங்களில் சந்தித்த இறுதி ஊர்வல நிகழ்வையும், அப்போது தோன்றிய நினைவுகளையும் விளக்குவதில் தொடங்கும் இந்நூல், திடுக்கிடவைக்கும் உண்மைகளோடு, தடுக்கிவிழ இருப்போரையும் சற்றே தன்னம்பிக்கையோடு நடமாடத் தூண்டும்படியாக அமைந்திருக்கிறது.

சிறுவயது பருவம், இளமையில் வறுமை, ஈடில்லா உழைப்பு, உறுதிகொண்ட நெஞ்சம், ஊக்கப்படுத்திய சுற்றம், எண்ணிலடங்கா சாதனைகள், ஏறி சென்ற ஏணிப்படிகள். இப்படி சராசரி வரலாற்றுத் தொகுப்பாக இல்லாமல், தான் செய்த தவறுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதன்மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், கசப்பும் இனிப்பும் கலந்தபடி கடந்துவந்த நிகழ்வுகள், நெஞ்சில் நிலைத்துவிட்ட நினைவுகள், விந்தையான மனிதர்கள், வாழ்வின்மேல் கொண்ட ஆசை என்று அனுபவங்களின் தொகுப்பாக எழுதியிருக்கும் புதுமையான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம், வியப்பை சம்பாதிக்கவோ, வெளிப்படைத்தன்மையை விளம்பரப்படுத்தவோ, வெற்றிப்பெற்ற வினாடிகளை வீரமுழக்கம் செய்யவோ, பரிதாபங்களை பார்சலில் பெற்றுக்கொள்ளவோ, செல்வாக்கை செழிக்கவைக்கவோ அல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தன் வாழ்வின் இன்ப துன்பங்களைக் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, தனக்கு தான்தான் சித்ரகுப்தன் என்று அவரே இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை என்றுதான் எனக்குத் தோன்றியது. தான்பட்ட கஷ்டங்களிலிருந்து மற்றவருக்குப் பாடம் சொல்வது ஒருவகை. தெரிந்தோ தெரியாமலோ தான் பிறரைக் கஷ்டப்படுத்தியதிலிருந்து மற்றவருக்கு பக்குவம் சொல்வது இன்னொருவகை. இதில் இந்தப் புத்தகம் இரண்டாவது வகை.

பிரகாஷ்ராஜ் யார்? இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நல்ல மகன், காதல் கணவர், பாசமான தந்தை, குணமான மனிதர். இவையனைத்தையும் தாண்டி அவர் ஒரு பயணி, Traveller. அவரின் மின்னஞ்சல் முகவரியும் அப்படித்தான் இருப்பதாகத் தெரிய வந்தது. பணத்தை சம்பாதிப்பதும் செலவழிப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்து ரசிப்பது. அப்படித்தான் வாழ்ந்தார், வாழ்கிறார், இனியும் வாழப்போகிறார். தாயின் கருவிலிருந்து ஒருமுறை மட்டுமே பிறந்தாலும், தனக்குத்தானே பலமுறை பிறவியெடுத்துக்கொள்கிறார். தன்னை எப்போதும் குழந்தையாக நினைத்துக்கொண்டு கவலை எனும் குப்பைக்கூளங்களை நெருப்பிலிட்டு குதூகலத்தை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்கிறார்.

இந்த புத்தகத்தில் பெரும்பாலான மனித உணர்வுகளை அழகாக கையாண்டிருக்கிறார். அதில் முதல் உணர்வு. பயம்! பயங்கரவாதத்தால் ஏற்படும் பயம்! பாதுகாப்பின்மையால் ஏற்படும் பயம்! செக்கிங் என்ற பெயரில் செய்யும் இம்சைகளால் வரும் பயம். குண்டுவெடிப்பைப்பற்றி அவருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் உரையாடல் நெஞ்சில் பல ஈட்டிகளை ஒன்றாகப் பாய்ச்சுகிறது.

குண்டுவெடிப்பவங்களைப் பார்த்தா சாமிக்கு பயமாப்பா? ஏன் அவங்க கண்ணைக்குத்தலை? நான் விடுற காத்தாடி பார்டர் தாண்டி பறந்தா என்ன பண்ணுவாங்கப்பா? மும்பை ட்ரையின்ல பாம்வெடிச்சாங்களே அங்கேயும் பார்டர் இருக்காப்பா? இந்தக் கேள்விகளுக்கு யாரால பதில் சொல்லமுடியும்? அப்படி முடிஞ்சிருந்தா பிரச்சனைகள் எப்பவோ பார்டர் தாண்டி பறந்திருக்கும். 

அடுத்தது காதல்!

காதலை ஒரு காலத்தில் காவியம் என்றனர். இன்று காலவிரயம் என்கின்றனர். பெற்றோருக்கு காதலைப்பற்றி தெரியவில்லை என்று பிள்ளைகள் ஆதங்கப்படுகிறார்கள். பிள்ளைகளுக்கு மட்டும் என்ன தெரிகிறது? எதற்காக உயிரே உயிரே என்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. எதற்காக உடனடி பிரேக் அப் செய்கிறார்கள் என்றும் புரியவில்லை. ஊரையே எதிர்த்து கல்யாணம் செய்து, கல்யாணத்திற்கு பிறகு காதலை கோட்டைவிடுகிறார்கள். அல்லது ஒருமுறைதான் ஒரு காதல்தான் என்று தற்கொலை செய்து பெற்ற பாவத்திற்கும், பழகிய பாவத்திற்கும் மற்றவர்களை தண்டிக்கிறார்கள்.

எதுதான் காதல்? எப்படி இருக்க வேண்டும் காதல்? எப்படிப்பட்டதாக காதல் இருக்கக்கூடாது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை நம் நடிகர் பிரகாஷ்ராஜ் உணர்வுப்பூர்வமான கதைகள், கவிதைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள்மூலம் விளக்கியிருக்கிறார்.அவர் காதலிகளை காதலிக்கவில்லை. காதலை காதலிக்கிறார். அதனால்தான் காதலிகள் மாறினாலும் காதலின் தீவிரம் அப்படியே இருக்கிறது. அவருக்கு காதல் உடலிலும் உள்ளத்திலும் நிகழும் அழகான மாற்றம். அது அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இவர் எப்படிப்பட்ட காதலர்? டாக்டர் க்ருதியா எழுதிய இந்த கஜல் பாட்டைப்போலவாம்.

காதல் என்பது காவியம்தான். அதில் நான்

எழுத்தாய் சிறைபட விரும்பவில்லை.


காதல் என்பது நூலகம்தான். அதில் நான்

பல பேர் கைப்பட விரும்பவில்லை.


காதல் என்பது சந்நிதிதான். அதில் நான்

சிலையாய் இருப்பதில் விருப்பமில்லை.


காதல் என்பது சொர்க்கம்தான். அதில்

போனவர் யாரும் திரும்பவில்லை. அதனால்

காதலை எப்படித்தான் நம்புவதோ?’ இந்த கேரக்டர்தான் பிரகாஷ்ராஜ். 

தாய்மை! 

கணவன் இல்லாமல் நர்ஸ் வேலை செய்து 3 பிள்ளைகளையும் வளர்த்து, கஷ்டமே தெரியாமல் பார்த்துக்கொண்டது மட்டுமல்லாமல் சுயமாக சிந்தித்து வாழவும் கற்றுத்தந்த அவர் தாயைப்பற்றிய நெகிழ்வான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். 77 வயதான தன்னை ஒரு தேவதைப்போல பார்த்துக்கொள்வதாக அவர் தாய் மகிழ்ச்சியாக பேட்டியளித்திருக்கிறார்.

தன் மகன் சித்தார்த்தன் இறந்தபோது, தாய்மையின் பலமெல்லாம் ஒன்று திரட்டி அவர் மனைவி அவர் கன்னத்தில் அறைந்ததை அவமானமாக எண்ணாமல், அவர்களுக்குத் தரமுடிந்த ஆறுதல் என்று தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். பத்துமாதம் சுமந்தவருக்கே இழப்பு அதிகம் என்றெண்ணி வேலைகளை ஒதுக்கிவிட்டு அவர் மனைவிக்கு அமைதியான ஆறுதலளித்தார்.

பிள்ளையின் இழப்பை இன்னொரு பிள்ளை கொஞ்சமேனும் மறக்கவைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தவருடமே ஒருவருக்கொருவர் ஒரு குட்டி தேவதையை பரிசளித்துக்கொண்டனர். தாய்மையை அவர் பூஜிப்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? 

நட்பு!

அறையில் தன் காதலியோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கதவு தட்டப்பட்டது. ஜன்னலில் எட்டிப்பார்த்தபோது வெளியே அவர் நண்பன் முகம்நிறைய சோகத்தைத் தாங்கியபடி நின்றிருந்தார். அந்தக் காதலியோ நண்பனின் தோழி. கதவை திறக்க வேண்டாம் என்று காதலி சொல்ல, நான் பிறகு பார்க்கிறேன். கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் என்று நண்பனை அனுப்பிவிட்டார். பிறகு பார்க்கவே முடியாமல் போனது. ஒருமணிநேரத்தில் ஃபோன் தான் வந்தது. நண்பன் தற்கொலை செய்துகொண்டார் என்று. நண்பனுக்கு கடைசி ஆறுதலைத் தரமுடியாத குற்ற உணர்ச்சி இன்னும் அவர் இதயத்தை வாள்கொண்டு அறுக்கிறது. அப்போதிலிருந்து யார் கஷ்டம் என்று வந்தாலும் 5 நிமிடம் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலாக பேசிவிட்டே செல்கிறார்.

இன்றைய அவசர உலகில் நாம் செய்யும் மாபெரும் தவறு இதுதான். நேரமில்லை, வேலை இருக்கு, பிறகு பார்க்கலாம்.இந்த 3 வார்த்தைகளையும் எப்போதும் உபயோகித்து நட்பையும் உறவையும் தள்ளிவைக்கிறோம். ஆனால் நாம் அருகில் செல்ல நினைக்கும்போது காலம் கடக்காமல் இருக்குமா? நிச்சயம் இல்லை. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நேரத்தையும் அன்பையும் நம்மைத் தேடி வருவோருக்கு தயங்காமல் பகிர்ந்தளிப்போம். 

பக்தி!

பெரும்பாலான நாத்திகர்கள் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையை எதுவும் சொல்வதில்லை. அந்த நம்பிக்கையால்  அடுத்தவருக்கு பாதிப்பு வரும்போதுதான் எதிர்க்கிறார்கள். பிரகாஷ்ராஜ் அவர்களும் அப்படித்தான். அம்மாவின் வாழ்வில் ஒரே ஒரு பிடிமானமான பிரார்த்தனையை அவர் மதிக்கிறார். மனைவியின் பூஜை முறைகளை எதிர்க்கவில்லை. மகளை பள்ளியில் சேர்க்கும்போது மதத்தை போடமாட்டேன் என்று கோர்ட்டில் வாதாடிதான் பள்ளியில் சேர்த்திருக்கிறார். மரணத்தின் விளிம்பைத் தொட்டபோதும் அவரைக் காப்பாற்றியவரைத்தான் நினைத்தாரே தவிர கடவுளை அல்ல. அதே பிரகாஷ்ராஜ் அவர்கள் விதவைகள் விசேஷங்களுக்கு போகக்கூடாது போன்ற மற்றவரை பாதிக்கும் மூட நம்பிக்கைகளை ஆதரிக்கவில்லை.

ஒரு நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டுமென்றால், அதற்கு ஈடாக இன்னொரு நம்பிக்கையைத் தரவேண்டும். இல்லையென்றால் அந்த நம்பிக்கையில் கைவைக்கக்கூடாது என்பதைக் கன்னட எழுத்தாளர் ஆனந்தன் எழுதிய ‘நான் கொன்ற பெண்’ கதையின் வழியே அழகாகச் சொல்லியிருக்கிறார்.

திமிர்! வெற்றி!

தோல்வியில் வரும் திமிர்தான் வெற்றிக்கு வழி செய்யும். வெற்றியில் வரும் திமிர் நம்மை அசிங்கமாக்கிவிடும். எனக்கு இருக்கும் பயம் வெற்றிதான் என்னும்போது உண்மையை ஏற்காமல் இருக்கமுடியுமா? ஆபாசபடங்களில், அருவா சண்டைக் காட்சிகளில் பெறும் வெற்றியைவிட அழகிய தீயே, மொழி, பொய் போன்ற படங்களின் வெற்றியே நிஜமான வெற்றி என்ற அழகான உண்மையை அற்புதமாக எழுத்தாக்கியிருக்கிறார்.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம். தான் இல்லாமல் எதுவும் நடக்காது என்றிருந்தவரை தான் நலமாக அழகாக இருந்தால் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறமும் அழகாக இருக்கும் என்று மாற்றிய அவர் கல்லூரி நாடக ஒத்திகை அனுபவம் சுவாரசியமானது.

காமம் கோபம்! 

காமத்தைப்பற்றிய மனநல மருத்துவர், கவிஞர்கள் ஆகியோரின் கூற்றுகள் உண்மையாக இருப்பின், இவரின் கூற்றும் சரியே. நான் கோபக்காரந்தான். எனக்கு ஏன் கோபம் வரும்? எப்போது கோபம் வரும் என்று எனக்குத் தெரியாது. இதைப் புரிந்து என்னை அப்படியே ஏற்றுக்கொண்டால் மட்டுமே என்னோடு தொடர்ந்து நட்பு பாராட்டமுடியும் என்ற வார்த்தைகள் எனக்கே என்னை ஞாபகப்படுத்தியது. நான் என் நண்பர்களிடம் வைக்கும் முதலும் கடைசியுமான நிபந்தனை இதுதான். அவர்களும் இதைப் புரிந்து இன்றுவரை நட்பாக இருக்கிறார்கள்.

கணவன் மனைவி வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். எப்படி இருந்தால் வாழ்க்கையில் காதலின் தித்திப்பு குறையாமல் இருக்கும் என்பதையும் தான் படித்த, தான் அனுபவித்த அனுபவங்கள் மூலம் வார்த்தை ஓவியம் வரைந்திருக்கிறார். சொன்ன கையளவு உண்மைக்கே அவர் தண்டிக்கப்படுவதாகவும், இழப்புகளைச் சந்திப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவரின் இந்த வெளிப்படையான தைரியத்திற்காகவே உண்மைகளை ஏற்கலாம். 

எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும்போது மேலே குறிப்பிட்ட பாடலும், நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள், உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள் என்ற பாடலும்தான் நினைவு வந்தது.

செய்த உணவு சுவையாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்று தேவையான பொருட்களால் அலங்கரிப்பதுபோல, சொன்ன விஷயங்கள் மேலும் சுவையாக இருக்க இலக்கியத்தை இணைத்துச் சொல்லியிருப்பது இனிமையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நடிப்பு ஆர்வத்தோடு படிக்கும் ஆர்வமும் சரிவிகிதத்தில் இருப்பதும் புரிகிறது.

எல்லோரும் பிரகாஷ்ராஜ் ஆகமுடியாது என்றாலும், இந்த புத்தகத்தைப் படிக்கும்போதாவது, பொய் என்ற போலி முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, நமக்கு நாமே நம் வாழ்வின் அழகான பக்கங்களைப் புரட்டிப்பார்த்துக்கொள்வோம். செய்த தவறுகளும் புரியும். செய்ய வேண்டிய நன்மைகளும் தெரியும்.

             

Thursday, 23 July 2020

உலகத்தில் சிறந்தது எது?

’பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
பசித்த முகம் பார்த்து, பதறும்நிலைப் பார்த்து பழம் தரும் சோலையது
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவிலது
தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து அணைக்கின்ற தெய்வமது’
அது தூய்மை, அது நேர்மை, அது வாய்மை, அதன் பேர் தாய்மை.

கேள்வியையும் பதிலையும் மட்டும் தெரிந்துகொண்டால் போதுமா? அந்தப் பதில் அழுத்தமாக இருக்க வேண்டாமா? எதற்கும் ஒரு உதாரணம் இருந்தால்தானே அது அழுத்தமான பதிலாகும்? இதோ! அந்த உதாரணம் எழுத்தாளர் சிவசங்கரியின் ‘அம்மா’ என்ற குறுங்கதையில்.

வித்யா என்ற இந்தியப் பெண், அமெரிக்க வாழ் இந்தியனான ராஜுவை மணந்து அமெரிக்கா செல்கிறாள். லூயிவில்லின் அழகிலும், கணவன்மேல் கொண்ட அன்பிலும், வேலைப் பளுவைக் குறைக்கும் எந்திரங்கள் தந்த மயக்கத்திலும் அமெரிக்கா சென்றவள் அங்கு சென்ற சில மாதங்களிலே அந்த ஊர் கற்பித்த சோம்பேறித்தனத்தில், எந்திரங்களிடம் வீட்டு வேலைகளை சரியான முறையில் ஒப்படைக்கவும் ஒரு எந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தொடங்குகிறாள்.

இன்றைய தலைமுறையின் நிலைமை இதுதான். ஆரம்பத்தில் அழகாகத் தெரியும் அமெரிக்கா நாளாக நாளாக ஒரு சலிப்பைக் கொடுக்கிறது. ஆனாலும் வெளிநாட்டின் மோகம் விடவில்லையே! படிப்பு, வேலை, வாழ்க்கை, வாய்ப்புகள் இப்படி ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் தனிமையைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை எங்கிருந்தாலும் தொடர்பு கொள்கிறார்கள், கண்ணும் கருத்துமாக கண்காணிக்கிறார்கள், வருவோம் வருவோம் என்ற நம்பிக்கைத் தந்து, வந்தும் போகிறார்கள். ஆனால் பல பிள்ளைகள்? அதற்கும் ஆயிரம் காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோருக்கு வீடே ஒரு முதியோர் இல்லம்போல. அவர்களுள் சிலர் தங்களைத் தனிமையிலிருந்துக் காத்துக்கொள்ள சமூகச் சேவை செய்கிறார்கள்.

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பிள்ளைகள் மீதும் தவறு இருக்கிறது, பொறுப்பாகவும் பொறுப்பைப் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்த்தப் பிள்ளைகள் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டப் பொறுப்புகளைச் செய்யப் போகும்போது அதைப் புரிந்துகொள்ளாமல் தங்களை வருத்திக்கொள்ளும் பெற்றோர் மீதும் தவறு இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் இந்திய வாழ்க்கை வரும் காலங்களில் வெறும் நினைவாகவே இருக்கப்போகிறது. இங்கு இல்லாத வாய்ப்புகளா? அப்படியே வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாமே. அசிங்கத்தை அப்புறப்படுத்தாமல் அனைவருமே அந்த இடத்தைவிட்டுப் பறந்துவிட்டால் யார் அந்த வேலையைச் செய்வது? பள்ளத்தில் விழுந்துகிடப்பவனைக் கைக்கொடுத்துத் தூக்கிவிடுவதுதானே பலம்? என்னதான் வாய்ப்புகள் வெளிப்படையான காரணம் என்றாலும், வெளிநாட்டின் மீதுகொண்ட வெறித்தனமான ஆசையும் குடும்பச் சூழலிலிருந்துத் தப்பித்துக்கொள்வதும் ஒரு காரணம்தான்.

என்னதான் இந்தியர் அன்பு பாசம் நிறைந்தவர்களாக இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. கலாச்சாரம் நம்மை அப்படி செதுக்கிவைத்திருக்கிறது. கட்டுக்கோப்பான கலாச்சாரத்தில் பெற்றோரின் பாசச்சிறகுகளில் பொத்திவைத்து வளர்க்கப்பட்ட வித்யாவால் அமெரிக்க மக்களின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அவள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்க் டோரா தம்பதியருக்கு 4 பிள்ளைகள். இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். அந்தக் குடும்பத்திற்கு வித்யாவின் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். வித்யாவும் டோராவும் தோட்டத்தில் நின்றிருந்தபோது டோராவின் பெண் ஜென்னிக்கு விபத்து என்ற செய்தி வந்தது. இந்தியத் தாயான வித்யா பதைபதைக்க, அமெரிக்கத்தாயான டோராவோ சிலநொடிகள் வெறித்துப் பார்த்துவிட்டுப் பின் மெல்ல அந்த இடத்திற்குச் சென்றாள்.

அடிப்பட்டு இரத்த வெள்ளத்திலிருந்த ஜென்னியை வித்யா தூக்கப்போக, டோரா அதைத் தடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் வந்ததும் ஜென்னியை அனுப்பிவிட்டு மருத்துவமனைக்குப் போகவில்லை. வித்யா அதைப் பற்றிக் கேட்டதற்கு வீட்டிற்குச் சென்று மார்கிற்கு ஃபோன் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றாள். அதன்படியே மார்கிற்குத் தகவல் சொல்லிவிட்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கும் டோரா முதலில் கேட்ட கேள்வி ஜென்னிக்கு உயிர் இருக்கிறதா? இதைக் கேட்ட வித்யாவின் கோபம் உச்சத்தை எட்டியது. மார்க் வந்ததும் ஜென்னி ஆபத்தான நிலையில் இருக்கிறாள் அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு டோராவும் மார்க்கும் வீட்டிற்கு கிளம்பினர். வீட்டிற்கு வந்த வித்யா டோராவின் தாய் பாசத்தை விமர்சித்து கணவனிடம் விவாதித்தாள். ராஜுவும் அவளுக்கு எதார்த்தங்களைப் புரியவைக்க முயன்று தோற்றான்.

அடிப்பட்டிருப்பவரைத் தூக்கக்கூடாது என்பது அங்குள்ள விதி. தூக்கத் தெரியாமல் தூக்கி அதிலேயே உயிர் போய்விட்டால்? அதனால் முறையான அட்டெண்டர்களுடன் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். ஜென்னி அவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்ததால்தான் டோராவின் வாயிலிருந்து அப்படி ஒரு சந்தேகமான வார்த்தை வந்திருக்கும். ஒரு குழந்தைக்காக இருவருமே மருத்துவமனையில் இருந்துவிட்டால் வீட்டிலிருக்கும் 3 குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது? இதுதான் எதார்த்தங்கள். இதனைத் தப்பாக அர்த்தப்படுத்திக்கொண்ட வித்யா டோராவை பாசமற்ற ஜடம் என்றாள்.

குழந்தைகளின்முன் தன் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கும் டோராவின் தூய்மையான தாய் பாசத்தை வித்யா புரிந்துகொள்ளும் நேரமும் வந்தது.

இந்தியத் தாயான வித்யாவையே அமெரிக்கத் தாயான டோராவின் கால்களில் விழத்தூண்டிய நெகிழ்ச்சியான தருணமது. அது என்ன தெரியுமா? சிறுநீரகம் செயலிழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வளர்ப்புமகள் ஜென்னிக்கு டோரா தன் சிறுநீரக உறுப்பையே கொடுக்க முடிவு செய்ததுதான்!

வெள்ளைக்காரிகளெல்லாம் கெட்டவர்களும் இல்லை. இந்தியப் பெண்களெல்லாம் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்படவேண்டியவர்களுமில்லை. எல்லா நாட்டுப் பெண்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

பாரெங்கும் தாய் பாசம் ஒன்றுதான். அது வெளிப்படும் தன்மைதான் வேறு. பதற்றப்படாமல் புத்திசாலித்தனமாகவும், சொந்தப் பிள்ளை வளர்ப்புப் பிள்ளை என்ற பாகுபாடு பாராமல் பொதுநலமாகவும் முடிவெடுத்த டோரா பூஜையில் வைக்கப்படவேண்டிய மலர்களுள் ஒன்று.

இந்தக் கதையை அமேசானில் படிக்க



Thursday, 9 July 2020

அன்புக்கரங்கள்



புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும். மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும். என்ன புதுப்படம் பற்றிச் சொல்லப் போகிறேன்னு  நினைத்தீர்களா? இல்லை! போதைப் பழக்கம் சம்பந்தப்பட்ட புத்தகம்.

’நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம், இன்னிக்கி இராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்.’ இப்படி ஒவ்வொரு நாளும் பெண்களை ஏமாற்றி குடிக்கிறவரைக் குடித்துவிட்டு, கடைசியில் ‘போதை வந்தபோது புத்தி இல்லையே. புத்தி வந்தபோது நண்பரில்லையே.’ என்று பாடும் ஆண்கள்தான் எத்தனை!

மதுவை அனுமதிக்கின்ற அரசாங்கத்திடமும் தவறு இருக்கிறது, பாட்டிலில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு அதை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளும் மனிதர்களிடமும் தவறு இருக்கிறது. மது மெல்லக் கொல்லும் விஷம் என்றால், மற்ற போதைப் பொருட்கள் கொஞ்சம் வேகமாய் கொல்லும் விஷம். அப்படிப்பட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, தானும் சீரழிந்து தன்னைச் சுற்றியிருப்போரையும் சீரழிப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் நாவல்தான் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய “அவன்”.

பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்?
1. தங்களின் ஆசைகள் மற்றும் கனவுகளைப் பிள்ளைகள்மேல் திணிக்கக்கூடாது.
2. பிள்ளைகளின் நிறை குறைகளை மற்ற பிள்ளையோடு ஒப்பிட்டுத் திட்டக்கூடாது.
3. பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்கள் அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற உதவ வேண்டும்.
4. ஆரோக்கியமான இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
5. தானும் நல்ல கலாச்சாரத்தைப் பின்பற்றி, பிள்ளைகளுக்கும் அதைப் பின்பற்றச் சொல்லித்தர வேண்டும்.
6. நல்ல குணம், நல்ல பண்புகள், நல்ல வார்த்தைகள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், சுயக்கட்டுப்பாடு இவைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

இந்தத் தகுதிகள் எதுவுமே இல்லாத பெற்றோரின் பிள்ளைகள் போதைப் பழக்கத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகும் கொடுமையே இந்நாவல்.

நவீன நாகரிக வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாமல் தங்களின் ஆசைகளைப் பிள்ளைகளின்மேல் திணிக்கும் பெற்றோருக்குப் பிறந்த ப்ரேம், பணத்தை வாரி இரைக்கும் அப்பாவிற்கும், பூஜை புனஸ்காரத்தில் மூழ்கி பிள்ளைக்கு அதிக சுதந்திரம் கொடுக்கும் அம்மாவிற்கும் பிறந்த சுனில், வேறு வாழ்க்கையைத் தேடிப்போன அம்மாவிற்கும், விட்டேற்றியாய் ஊர் சுற்றும் அப்பாவிற்கும் பிறந்த பரத், கணவனை இழந்தாலும் பிள்ளைகளைக் கரை ஏற்றக் கஷ்டப்படும் தாய்க்குப் பிறந்த அப்புசாமி. இவர்கள் ஒரே கல்லூரியில் படித்து சுனிலின் தூண்டுதலால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட போதை பொருட்கள் தெரியுமா? கஞ்சா, ப்ரௌன் ஷுகர், மாத்திரை. இவர்களின் போதைப் பழக்கத்திற்கு பெற்றோர் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் மட்டுமே காரணமில்லை. தவறான நட்பு, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற சுயநல மனப்பான்மை, இளம் வயதிற்கே உண்டான அதீத ஆர்வம் மற்றும் இதுதான் ஆண்பிள்ளைத்தனம் என்ற அவர்களின் வரையறை. இவையும் அவர்களின் தீய பழக்கங்களுக்குக் காரணம்.

பிறகு ஏன் பெற்றோரின் தகுதிகளைக் குறிப்பிட்டேன் என்றால், மேலே குறிப்பிட்டிருக்கும் தகுதிகளை உடைய பெற்றோரின் பிள்ளைகள் தடம் மாறிப்போவது குறைவு. அப்படியே போனாலும் அதை அந்தப் பெற்றோரால் வெகுவிரைவில் சரி செய்யமுடியும். இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பதே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னதான் கவனமாக வளர்த்தாலும் எங்கேயோ தவறு நேர்ந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் ஐந்துப் பிள்ளைகளை எளிதாக வளர்த்தார்கள். இந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது. பாவம்! இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் முதலில் பிள்ளை வளர்ப்பில் கோட்டைவிட்டாலும், பிறகு அதை சரி செய்யத்தான் முயன்றார்கள். ஆனால் அப்படி முயலும் வேளையில் அனைத்தும் கைமீறிவிட்டது.

கொடிது கொடிது சிகரெட் கொடிது, அதனினும் கொடிது மது, அதனினும் கொடிது கஞ்சா, அதனினும் கொடிது ப்ரௌன் ஷுகர், அதனினும் கொடிது மாத்திரை. இதில் முதலிரண்டு கொடிதைப் பற்றி ஊரறிந்தும் உலகறிந்தும் யாரும் நிறுத்துவதாய் இல்லை. அதனால் அடுத்திருக்கும் மூன்று கொடிதைப் பற்றிப் பார்ப்போம்.

“க்ராஸ், பாட்வீட், மரிவானா என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த வஸ்துவை தமிழில் கஞ்சா என்பார்கள். காயவைத்து பொடி செய்யப்பட்ட இலைத்துகள்களான கஞ்சாவை, சிகரட்டை விரல்களால் உருட்டி அதில் அடைக்கப்பட்டிருக்கும் புகையிலை துகள்களை ஒரு பேப்பரில் கொட்டி, அதனோடு இந்த கஞ்சா துகள்களை கலந்து, சிகரெட் பேப்பரை விரல்களால் உருட்டி, கஞ்சா புகையிலைக் கலவைக்கு நேராக வாயில் வைத்து உறிஞ்சி அந்தக் கலவை இறுகிக்கொள்ள மேலும் ஒருமுறை உருட்டி ஜாயிண்ட் சிகரெட் தயாரித்துக் குடிக்கிறார்கள்.”

கஞ்சாசெடிப் பற்றியும், அந்தச் செடியில் இருக்கும் பிசினான ஹஷீஷ் பற்றியும், அதிலிருக்கும் ரசாயன பொருட்கள் பற்றியும் நாவலுக்குள் சென்று அறிந்துக் கொள்ளுங்கள்.

இந்நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனோதத்துவ நிபுணரான டாக்டர் தேவர் கொடுத்திருக்கும் தகவல்களை நாமும் தெரிந்துகொள்ளலாம். கஞ்சாவைப் பிடித்ததும் முதலில் உண்டாவது 'இலேஷன்' (elation), அதாவது சட்டென்று லேசாகி மனசாலும் உடம்பாலும் மிதக்கும் உணர்வு. அடுத்து ஸைனெஸ்தீஸியா (Synaesthesia)… ஒரு புலனின் வேலையை இன்னொன்று செய்ய முற்படுவது. அதாவது, 'பாட்டை நான் பார்க்கிறேன்' என்று கண் சொல்வது. உதாரணம் புரிகிறதா? 'ஐ கான் ஸீ தி ம்யூசிக்' (I can see the music) என்று சொல்லும் நபர்கள் ஏராளம், ஏராளம்.

கஞ்சாவை குடித்தபின் இனிப்பு சாப்பிட வேண்டும் போலிருக்குமாம். எனக்கு அதிசயமாகத் தோன்றிய தகவல் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு அபூர்வமாக மருத்துவர்கள் கஞ்சாவை பரிந்துரை செய்கிறார்களாம்.

சிறு வயதிலிருந்தே தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட சுனில், பரத்தின் பிறந்தநாளன்று ப்ரேமையும் பரத்தையும் அவன் அறைக்கு வரவழைத்து கஞ்சாவை பழக்கிவிடுகிறான். ப்ரேமின் நிர்பந்தத்தால் அப்புசாமியும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். இதனால் ப்ரேம், பரத் மற்றும் அப்புவின் நடவடிக்கைகளில் நிறைய மாறுதல் ஏற்படுகிறது. அதைப் பற்றி பெற்றோர் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்கள்.
பிறகு கஞ்சாவை வாங்கப்போன இடத்தில், புதிதாய் ருசித்துப் பார்க்க மாத்திரையை வாங்குகிறார்கள். “மாத்திரை, ஆஸிட் என்று பலவிதமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் எல்.எஸ்.டி. – லைஸர்ஜிக் ஆஸிட் டைஈதைலமைட் (Lysergic Acid Diethylamide) – ஒருவிதக் காளானிலிருந்து தயாரிக்கப்படும் போதை மாத்திரையாகும். விழுங்கின இருபது நிமிஷத்திலிருந்து அரைமணிக்குள் நேராக மத்திய, ஆடோனாமஸ் நரம்புக் கூட்டத்தைப் பாதித்து, நிஜத்தை உடைத்து பங்கப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், இல்லாததை இருக்கிற மாதிரி கற்பனை பண்ண வைப்பதில் இது ராஜா.”

“இந்த மாத்திரைத் தரும் போதையை ட்ரிப் பயணம் என்பார்கள். அந்தப் பயணம் நல்லதாகவும் அமையலாம் கெட்டதாகவும் அமையலாம்.” இதை வாங்கிய இடத்திலேயே விழுங்கிவிட்டு வண்டியில் சென்ற பரத்தும் ப்ரேமும் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து விபத்துக்குள்ளாகிறார்கள்.

நியூயார்க்கில் பார்பரா என்ற பதினெட்டு வயது பெண் பேபி சிட்டர் வேலைக்கு சென்றிருக்கும்போது, குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தன் காதலன் ஷெராடோடு இந்த மாத்திரைகளை விழுங்கியது மட்டுமல்லாமல் குடிக்கவும் செய்கிறாள். சுயநினைவை இழந்த அவர்கள் உரித்தக் கோழியை அடுப்பில் வைப்பதற்கு பதிலாக உறங்கும் குழந்தையை அடுப்பில் வைத்துவிடுகிறார்கள். இரண்டுமணிநேரம் கழித்து வந்த குழந்தையின் தாய்க்கு கிடைத்தது கருகிய குழந்தைதான். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த உண்மை சம்பவத்தைப் படித்தபோது மனது கனத்துப்போனது. அதுவரைப் புரியாத போதை பழக்கத்தின் கொடூரம் புரிந்தது.

சுனில் ஊருக்கு சென்றிருப்பதாலும், பரத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், அப்புவின் குடும்பச்சூழல் காரணமாகவும் அவர்களால் கல்லூரி சுற்றுலாவிற்கு செல்ல இயலவில்லை. தனியே செல்லும் ப்ரேம் அவர்களின் கல்லூரியில் வேறு துறையில் படிக்கும் மாணவனான விஜய் மற்றும் அவன் நண்பன் மூலம் ப்ரௌன் ஷுகருக்கு அடிமையாகிறான்.

“ஹெராயின் அல்லது ப்ரௌன் ஷுகர், வெள்ளைப்பொடிபோல் இருக்கும். அதிலும் கலப்படம் செய்து பழுப்பு சர்க்கரையாக தயாரித்து விற்கிறார்கள். சில இடங்களில் இதை பள்ளிக் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் கலந்துகொடுத்து அப்பாவியான அவர்களின் வாழ்வை சீரழிக்கிறார்கள்.

இதை 4 வகையாக பயன்படுத்துகிறார்கள். சிகரெட்டில் அடைத்துப் புகைப்பது, மூக்குப்பொடிபோல் போடுவது, சேஸ் செய்வது மற்றும் தண்ணீரில் கலந்து ஊசிப்போட்டுக்கொள்வது. சிலர் இதன் தாக்கத்தால் உடனே இறந்துபோகிறார்கள். 4 நாட்களுக்குள் மனிதரைத் தன் வசப்படுத்தும் இந்த ப்ரௌன் ஷுகரை உடனே நிறுத்தினால் கோல் டர்க்கி வந்துவிடும்.”

கோல் டர்க்கி: விடாமல் தோன்றும் கொட்டாவிகள், உடலெங்கும் குத்தீட்டு நிற்கும் மயிர் கால்கள், மூக்கிலும் கண்ணிலும் வழியும் நீர், தொண்டை வறட்சி, வாந்தி மற்றும் மோஷன், உடலெங்கும் பரவும் வலி. இவையனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இம்சிப்பது. இது ப்ரௌன் ஷுகர் எடுத்துக்கொண்ட உடனே சரியாகிவிடும்.
ப்ரௌன் ஷுகரை உபயோகிக்கத் தொடங்கிய ப்ரேம் பணத்திற்காக வீட்டிலிருக்கும் பொருட்களை திருடி, வேலைக்காரன் மேல் பழி வந்தபோது வாய்மூடி மௌனியாகி, பரத்திற்கு பழக்கிவிட்டு, தெரிந்தவர் கடையில் திருடி,  தெரிந்தவர்களிடம் ப்ரௌன் ஷுகரை விற்று, அப்புசாமிக்கும் பழக்கிவிடுகிறான்.

ப்ரௌன் ஷுகர் சரியாக விற்காத காரணத்தால் கலப்படம் செய்து விற்றதில் கமலி என்ற அப்பாவி பெண் பலியாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைத் தெரிந்த ப்ரேம், அடுத்தப் போதைப் பொருளான நாய் கொடைகளைத் தேடி கொடைக்கானலுக்கு செல்கிறான். வீட்டைவிட்டுப் போகிறேன், என்னைத் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு சென்றதால் பெற்றோர் அவனைத் தேடி அலைகின்றனர்.

அப்போதுதான் ப்ரேமின் படிப்பு நின்றது, அவன் நண்பர்களின் நிலைப்பற்றி ப்ரேமின் பெற்றோருக்கு தெரியவருகிறது. பாம்புக்கடி, தேள்கடி இதன்மூலம் ஏறும் விஷத்தைக்கூட  போதையாக எடுத்துக்கொண்டவர்கள் இருக்கிறார்களாம். என்ன பயங்கரங்கள்! போதைப் பொருட்களைப் பற்றிய ஒரு குட்டி வரலாறும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதிலுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகள் போதை ஊசிகளை பயன்படுத்துகிறார்கள் என மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றினை நடத்தியது. 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 18 முதல் 75 வரை உள்ள பெரியவர்கள் என இரண்டு விதமாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 30 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறுகிறது ஆய்வறிக்கை. இது நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.3 விழுக்காடாகும். பெரியவர்களை பொறுத்தவரையில் 15 கோடியே 10 லட்சம் பேருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாசலப்பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் சரிபாதி ஆண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறதாம்.  10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேருக்கும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் பேருக்கும் கஞ்சா பழக்கம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகளும் 1 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் போதை ஊசி பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் 10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 1 கோடியே 10 லட்சம் பேரும் போதை மாத்திரைகளை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறிஞ்சும் வகையிலான போதை பொடிகளை 30 லட்சம் குழந்தைகளும் 60 லட்சம் பெரியவர்களும் பயன்படுத்துவதாக கூறுகிறது. 10 முதல் 17 வயது வரை உள்ள 2 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 10 லட்சம் பேரும் கொகைன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும்  வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் தினகரனில் வெளியிடப்பட்ட செய்தி இது.

ப்ரேமிற்கும் அவன் நண்பர்களுக்கும் என்ன ஆனது என்று 26 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறிய நூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். போதைப் பொருட்கள் பற்றிய நிறைய விஷயங்களை நம்மை அதிரவைக்கும்படி பல மனோதத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை சந்தித்து கலந்தாலோசித்து அறிய தகவல்களாக கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.

ஆர்வக்கோளாறில் செய்யும் செயல்கள்தான் வாழ்க்கையையே கோளாறாக்கிவிடுகிறது. போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது புதிய உலகில் சஞ்சரிப்பது போலத்தான் இருக்கும். அதன் விளைவைச் சந்திக்கும்போதுதான், ஏற்கனவே பழகிய எதார்த்தமான அழகான உலகைவிட்டு வெகுதூரம் பிரிக்கப்பட்டிருப்பது தெரியவரும். அப்படி நிதர்சனம் புரியும்போது, அதை ஏற்க உடலும் மனமும் ஒத்துழைக்காத நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இளைஞர்களே, பெரியவர்களே, பெண்களே, உலகின் மிகச் சிறந்த போதை எது தெரியுமா? அன்பு. அந்த அன்பிற்கு அடிமையாகிவிட்டால், அளவோடு அடிமையாகிவிட்டால், மற்ற எந்தப் போதைப் பொருட்களும் தேவையே இல்லை. விஷத்தை உறிஞ்சும் சக்தி தண்ணீருக்கு இருப்பதுபோல் அதே தன்மை மனரீதியாக அன்பிற்கும் இருக்கிறது.

போதைப் பழக்கத்திலிருந்து மீளத்துடிப்போருக்கு யோசிக்காமல் அன்புக் கரங்கள் நீட்டி அவர்களை அந்தப் புதைகுழியிலிருந்து மீட்போம்.

இந்நூலை அமேசானில் படிக்க:


பின் குறிப்பு:
பிக் பூஸ்டர் என்ற யூடியூப் சேனலில் என் கவிதை மற்றும் முல்லா கதைகளை  அப்லோட் செய்கிறேன்.சப்ஸ்க்ரைப் செய்து பார்க்கவும்.

Tuesday, 30 June 2020

யாருக்கு வெற்றி?


பிரியத்தோடு செஞ்சிதர பிரிஞ்சி பிடிக்கும்.
என் நாசியை துளைக்கும் மணத்தில் வறுக்கும் எறால் பிடிக்கும்.
முட்கள் வஞ்சிக்காத வஞ்சிரமீன் பிடிக்கும்.
காரசார கருணைக்கிழங்கு பிடிக்கும்.
உயிர்பிரியும் நொடியிலும் உருளைக்கிழங்கு வறுவல் பிடிக்கும்.
பிசியா இருந்தாலும் பிசிபிலாபாத் பிடிக்கும்.
தோணும்போதெல்லாம் தோசை சாப்பிட பிடிக்கும்.
மகிழ்ச்சியான தருணங்களில் மட்டன் பிரியானி பிடிக்கும்.
தளதளனு பெசஞ்சு தர தயிர்சாதம் பிடிக்கும்.
புள்ளையார் தம்பிகோவில் புலியோதரை பிடிக்கும்.
குட்டித்தொண்டைக்குள்ள கொடகொடையிர காரகுழம்பு பிடிக்கும்.
பாரமான மனதை லேசாக்குற சாம்பார் பிடிக்கும்.
காசில்லாத வீட்டின் ரசிகையான ரசம் பிடிக்கும்.
அம்மா பண்ணிதர குருமா அலுக்காம பிடிக்கும்.
மொத்ததுல உணவுக்காக வாழாம வாழ்க்கைக்காக உணவு உண்ணும் கொள்கை பிடிக்கும்.

இப்படிச் சொல்லும்போதே யூகித்திருப்பீர்கள் உணவு சம்பந்தப்பட்ட புத்தகம் என்று. ஒரு சிலருக்கு புத்தகத்தின் பெயர்கூட தெரிந்திருக்கலாம். ஆம் எழுத்தாளர் திரு. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உணவு யுத்தம்.
இது கட்டுரைத்தொகுப்பு. நாற்பது அத்தியாயங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேலான தகவல்களைக் கொண்டது இந்நூல். உணவுகள் பற்றிய புத்தகங்களுக்கு என்னென்னவோ பெயர்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கு ஏன் உணவு யுத்தம் என்று பெயர் வைத்திருக்கிறார்?
இது உணவுகளுக்கிடையே நடக்கும் யுத்தம். ஆரோக்கியமான உணவுகளை அழித்துவிட்டு, ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் உணவுகள் ஆட்சியில் அமரும் யுத்தம். 
உணவுக்கும் உடலுறுப்புகளுக்குமிடையே நடக்கும் யுத்தம். உடலுறுப்புகள் தன் இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்ளப் போராடுகிறது. சில உணவுகள் அதன் இயக்கத்தை நிறுத்தியேத் தீருவேன் என்று போராடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் இதில் எது ஜெயிக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து அறியப்படாத பலத்  தகவல்களைத் தந்திருக்கிறார். இவர் செல்லும் சிறு பயணத்தில்கூட ஏதேனும் ஒரு தகவல் நிச்சயமிருக்கும். ஏன் இவர் பயணம் செல்வதே தகவல் திரட்டத்தான்.
உணவு வகைகள், உணவு அரசியல், உணவு வரலாறு,உலக உணவுகள், இலக்கியத்தில் உணவு. இப்படி உணவு உலகை ஒரு புத்தகத்தில் அடக்கிவிட்டார்.
எல்லா உணவுகளிலும் புகுந்து ஒரு விளாசு விளாசியிருக்கிறார். இட்லியில் ஆரம்பித்து இறுதியில் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் சொன்ன கதையோடு முடியும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது எனக்கு பயமாக இருந்தது. இதுவரை உண்டதெல்லாம் சரியா தவறா என்று யோசிக்கத் தூண்டியது. எதைத் தவிர்ப்பது? எதை உண்பது? என்ற ஆழ்ந்த குழப்பத்திலிருந்தேன்.
அந்தக் குழப்பத்தைப் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அவர் அதைத் தீர்த்துவைத்தார். ‘எல்லாமே உண்ணலாம். ஆனால் அளவோடு உண்ண வேண்டும்’ என்றார். 
‘எல்லாமே’ என்று அவர் குறிப்பிட்டது தமிழ் உணவுகளை. தோசைக்குள் மசாலாவை வைத்து மசால் தோசை என்று தருவதைப் போல, தன் அனுபவங்களுக்குள் தகவல்களைப் புகுத்தி சுவாரசியமாக தருவதில் வல்லவர் அவர்.
உணவகங்களுக்குச் சென்று ‘மெனுகார்ட் ப்ளீஸ்’ என்று ஸ்டைலாகக் கேட்டுவிட்டு கார்ட் வந்ததும் அது ஏதோ பாடப்புத்தகம்போல பலமுறை படிக்கிறோம். அதில் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்குள் பாவம் சர்வரின் நிலை. ஆனால் அந்த மெனுகார்ட் எப்படி வந்தது தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள்.
''மெனு எனும் உணவுப் பட்டியலை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சீனர்கள். அந்தக் காலத்தில் சீன வணிகர்கள் பயண வழியில் உணவகங்களுக்கு வரும்போது அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து தங்களின் விருப்ப உணவைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நீண்ட உணவுப் பட்டியல் தரப்பட்டது.
மெனு என்ற சொல் பிரெஞ்சுகாரர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள Minutes. இதன் பொருள், 'சிறிய பட்டியல்’ என்பதாகும். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உணவுப் பட்டியல் ஃபிரான்ஸில் அறிமுகமானது.
உணவுப் பட்டியல் அறிமுகம் ஆவதற்கு முன்பாக உணவின் பெயர்களை ஒரு கரும்பலகையில் எழுதிப் போட்டிருப்பார்கள். இன்றும்கூட சிறிய உணவகங்களில் கரும் பலகைகளில்தானே உணவுப் பட்டியல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அது ஃபிரெஞ்சு நாட்டு மரபு. விரும்பிய சுவைக்கேற்ப பட்டியலில் உள்ள உணவைத் தேர்வு செய்தவன் பெயர்  la carte.
ரெஸ்டாரென்ட் என்பதும் ஃபிரெஞ்சு சொல்லே. ஃபிரெஞ்சு புரட்சியின் பிறகே ஃபிரான்ஸில் நிறைய உணவகங்கள் உருவாக ஆரம்பித்தன. சமையல்காரரை செஃப் என அழைக்கிறோம், இல்லையா? Chefde cuisine  என்ற ஃபிரெஞ்சு சொல்லில் இருந்தே அது உருவாகியது. அதன் பொருள் சமையலறையின் தலைவர் என்பதாகும்.
இதுதான் இந்தப் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் தகவல். எப்படி? முதல் தகவலே இப்படியென்றால் முழுதும் படித்தால்?

நம்மிடம் யாராவது என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் என்னசொல்வோம்? சாம்பார் சாதம், ஃப்ரைடுரைஸ். ஏன் தயிர் சோறு, புளிசோறு சொன்னா என்ன? சோறு என்று சொன்னா ஒழுங்கா பேசத்தெரியாதவங்க. லோக்கல் ஸ்லாங்னு நினைப்பாங்களா? சோறு என்பது தமிழ்ச்சொல். அந்தச் சொல்லிற்கு நிகரான வேறு சொற்கள் எவ்வளவு  இருக்கிறது தெரியுமா? அடிசில், கூழ், அழினி, அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் தமிழில் உள்ளன.
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக் கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்றுகூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.
இதுவும் இந்தப் புத்தகத்திலுள்ள முத்துமணிகள். அதைப் படித்துக் கோர்த்து, உங்கள் அறிவுக்கும் மனதுக்கும் மாலையாக்கிக்கொள்ளுங்கள்.
இட்லி செய்வது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். ஒரு சிலர் அவரவர் பக்கத்து இட்லிகளைச் செய்வார்கள். ஆனால் இட்லியின் வரலாறு? 30 வகையான இட்லியிருக்கிறது என்னும் குறிப்பு? இவையனைத்துமே இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
முனியாண்டி விலாஸ், பாரதவிலாஸ் தெரியும். மரணவிலாஸ்? சாலையோர மோட்டல்களாம். தரமில்லாத உணவை, தூய்மையற்ற இடத்தில் சாப்பிட்டால் அது மரணவிலாஸ்தானே.
இந்தியாவில் 2002 முதல் 2005ஆம் ஆண்டிற்குள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,500 என்ற புள்ளிவிவரம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. 
அப்போதே அப்படியென்றால் இப்போது? நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. பன்னாட்டு உணவகங்கள் பன்னாட்டு உணவு வகைகளின் பட்டியல்களைவிட அதிகம், விவசாயிகளின் தற்கொலையும் அதன் காரணங்கள் அடங்கியப் பட்டியல்கள்.
‘என்ன ருசி இல்லை இந்த தமிழ் உணவில்,
ஏன் மனதைச் செலுத்த வேண்டும் அயல் உணவில்,
ஒழுங்காய் உண்டுப் பாரு நம் உணவை,
நீளும் உன் ஆயுள் நூறுவரை.

நூடுல்ஸில் காய்கறிகள் இருக்கு. அது குழந்தைகளுக்குச் சத்து. சாதா மேகிதான் சாப்பிடக்கூடாது என்று நூடுல்சைக் குழந்தைகளுக்குக்கூட கொடுக்கிறோம். சமைக்க நேரமில்லாதவர்கள், சமைக்கத் தெரியாதவர்கள், உடனடியாக உணவு உண்ண வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கும் முதல் உணவு நூடுல்ஸ். இது சீன உணவு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதன் பின்னணி என்ன? இதை உண்பதால் வரும் கேடுகள் என்னென்ன? முதலில் அதைப் படித்துவிட்டு நூடுல்ஸை உண்ணலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.
தூக்கம் போகனுமா? டீ,  புத்துணர்வு வர வேண்டுமா?  டீ,  தலைவலிக்கிறதா? டீ,  டென்ஷனை விரட்டனுமா டீ. இப்படி நம்மை உயிர்ப்பிக்கப் பருகும் பாணம் டீ. இதிலும் நிறைய வகைகள் இருக்கின்றன.
பிளாக் டீ, க்ரீன் டீ, லெமன் டீ இப்படி எத்தனையோ டீ. இதில் எது நல்ல டீ? எல்லோருமே நல்ல டீயைக் குடிக்கிறோமா? நல்ல டீயை எப்படி தயாரிப்பது? அட! 
இதையெல்லாம் நானே சொல்லிவிட்டால் அப்புறம் எழுத்தாளர் என்னைத் திட்டிவிடுவார். உங்களுக்கும் சுவாரசியம் இருக்காது. படித்துப்பார்த்துக் குடித்துக்கொள்ளுங்கள்.
அளவோடு குடித்து உடல்நலத்தைப் பேணுங்கள்.  நரைமுடிக்குச் சாயம் தீட்ட வேண்டிய வேலையிருக்காது. பித்தம் தலைக்கேறிச் சத்தமாக வாந்தி எடுக்க வேண்டி வராது.
உணவு விதிகள் பற்றியும், அந்த விதிகள் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் பற்றியும், கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கத்திப்படம் பார்த்ததிலிருந்து நான் குளிர்பானங்கள் குடிப்பதை விட்டுவிட்டேன். அதில் குளிர்பானங்கள் தயாரிக்க எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, அதனால் விவசாயிகளின் பாதிப்பு. இதைக் கேட்டபின் குடிக்க விரும்பவில்லை. ஒருகாலத்தில் நானொரு கோக் பைத்தியம். மற்ற பானங்களும் குடிப்பேன். சிறு வயதில் கோலிசோடா விரும்பிக் குடிப்பேன்.
நீண்ட வருஷங்களுக்கு பின் சமீபத்தில் ஒரு உணவகத்தில் கோலிசோடா குடித்தேன். யார் பேச்சைக் கேட்டுக் குளிர்பானம் குடிப்பதை விட்டேனோ, அவரே கோக் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் என்பதை மறக்கவுமில்லை.
இந்த புத்தகத்திலிருக்கும் பகீர் பானங்கள் அத்தியாயத்தைப் படிக்கும்போது பகீரென்று இருந்தாலும், அதை நான் நிறுத்திவிட்டதை எண்ணி சந்தோஷமாக இருக்கிறது.
குளிர்பானங்களின் வரலாறு, சோடா வரலாறு,  சோடாமூடி கண்டுபிடிப்பு, குளிர்பானங்களிலிருக்கும் வேதியல் பொருட்கள், அதனால் விளையும் தீமைகள், பழங்கால பானங்கள், குளிர்பானங்கள் பற்றிய புத்தகம். இவையனைத்தையும் காலவரிசைப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
மறக்கடிக்கப்படும்  பானங்களான சர்பத், மோர், லஸ்சி, ஜிகிர்தண்டா, ஜல்ஜீரா, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றை ஞாபகப்படுத்தியிருக்கிறது இந்நூல். ஐஸ்கிரீம் பற்றிய வரலாறும் ஐஸ் ஹௌஸ் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பறித்துச் சாப்பிடும் பழங்களில் கலப்படம் பண்ணமுடியுமா? பண்ணமுடியும். அதில்தான் அதிகமாக கலப்படம் பண்ணமுடியும் என்கிறது இந்தப் புத்தகம்.
வாழைப்பழம், ஓட்ஸ், பிஸ்கட், பாயசம், பால்பௌடர், பீட்சா, பர்கர், ப்ராய்லர்கோழி, பரோட்டா, சமோசா, உருளைக்கிழங்கு, சிப்ஸ், வேர்க்கடலை, காஃபி, காய்கறிகள்.
இவைகளை இதுவரைச் சாப்பிடமட்டும்தான் செய்திருக்கிறோம். இனியாவது இவைகளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை தெரிந்துகொள்ளலாமே.

எனக்கு முன்பெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் என் பிறந்தநாளை கேக்வெட்டி விமரிசையாகக் கொண்டாடியதில்லை. இரண்டுமுறை என் தோழிகள் கேக் வாங்கி வந்து வெட்டச்சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவே. அம்மா செய்த கேசரி கேக், சாக்லேட். இவ்வளவுதான் என் பிறந்தநாள் கொண்டாட்டம்.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவே பிறந்திருக்கிறேன் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துப் பிறந்தநாள் காணும் பேர்வழிகள்தான் எத்தனை. பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்தவருக்குச் சந்தோஷம் என்பதைவிட பல நிறுவனங்களுக்கு வியாபாரம்.
கேக் வடிவமைப்பதே ஒரு கலையாகிவிட்டது இப்போது. மெழுகுவர்த்தி அதற்குமேல். பெயர் தாங்கியப் பிறந்தநாள் பாடல்களைக்கூட எடுத்துக்கொள்ளலாம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் துவக்கம் ஒன்று இருக்கும் அல்லவா? இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் துவக்கத்தைத் தெரிந்துகொள்ள. கேக் வரலாறு, ரொட்டி வரலாறு, பேக்கரி வரலாறுகளைத் தெரிந்துகொள்ளக் கொஞ்சம் இந்தப் புத்தகத்தைத் திறந்து 15 மற்றும் 16ஆவது அத்தியாயங்களைப் படியுங்கள்.
உணவுகளுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தில் யாருக்கு வெற்றி என்பது நம் கையில்தான் இருக்கிறது. பன்னாட்டு உணவு மோகத்தை விடுத்து இந்திய உணவுகளைத் தேர்வு செய்து உண்போம். முதலில் நாம் சாப்பிட வேண்டியதை நாமே முடிவு செய்வோம். வெற்றி ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்திய உணவிற்கும்தான்.
கடலலையில் நிற்கும்போது அதன் அழகிலும் குளிர்ச்சியிலும் மயங்கி ஆழத்திற்குச் சென்றுப் பார்க்க ஆசைக் கொள்வதைப்போல. ஆரோக்கியமான உணவுகளின் சுவையில் மயங்கி ஆர்வம்கொண்டு அதன் ஆழம் சென்று பார்த்திருப்பதன் வெளிப்பாடே இந்த உணவு யுத்தம். இந்த மதிப்புரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் இந்தப் புத்தகத்திலுள்ள சிறுதுளிகள். இதன் பெருந்துளிகளை இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


நூல் குறிப்பு :
உணவு யுத்தம்,
எஸ் ராமகிருஷ்ணன்,
தேசாந்திரி பதிப்பகம்,
விலை ரூ.275


கடைசியாக இந்தப் புத்தகத்தில் நான் பெரிதும் ரசித்த கேள்வி பதில்கள்.:
பிரிக்க முடியாதது என்னவோ?
தியேட்டரும் பாப்கார்னும்!
சேர்ந்தே இருப்பது?
பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!
சேராமல் இருப்பது?
வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!
சொல்லக் கூடாதது?
பாப்கார்ன் விலை!
சொல்லக் கூடியது?
காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!
பாப்கார்ன் என்பது?
பகல் கொள்ளை!
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!

Tuesday, 23 June 2020

அதுவும் ஓர் மனிதச் சமூகம்


நான் கொஞ்சநாள் முன்பு ஒரு குறும்படம் பார்த்தேன். அந்தப் படத்தின் பெயர் கற்பினியான திருநங்கை. திருத்தாயவளே.
அந்தப்படத்தில், திருநங்கை ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தன் குழந்தையைக் காணோமெனத் தேடியலைந்துக் கண்டுகொள்ளும் தாய் அந்தத் திருநங்கையைக் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறாள்.

பத்துமாதம் சுமந்திருந்தால்தானே உனக்குத் தாய்மையின் வலி புரியும் என்ற வார்த்தையைக் கேட்டு அவள் உடைந்து அழுகிறாள். உடனே ஓர் மருத்துவரை அனுகி தன்னால் தாயாக முடியுமா என்று ஆலோசிக்கிறாள்.

அந்த மருத்துவரோ வாடகைத்தாய் முறையைப் பரிந்துரைக்கிறாள். இங்கே பாவப்பட்டவர்கள் திருநங்கை மட்டுமல்ல. சூழ்நிலைக் காரணமாகத் தன் கருவறையை வாடகைக்கு விடும் அனைத்துப் பெண்களுமே பாவப்பட்டவர்கள்தான்.

தன்னால் தாயாக முடியாதநிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெறத் துடிக்கிறாள் ஒரு பெண். இது வாடகைத்தாய்மூலம் பிறந்தக்குழந்தை என்று மற்றவருக்குத் தெரிவிக்கப்போவதுமில்லை, வாடகைத்தாய் யாரென்று மற்றவருக்குக் காட்டப்போவதுமில்லை. தாய்மையின் முழு வீரியம் தெரியாமல் தனக்குப் பணம் கிடைத்தால் போதும், தன் பிரச்சனைகள் தீர்ந்தால் போதுமென்று அந்தப் பாவத்திற்கு உடன்படுகிறாள் ஒரு பெண்.

மசக்கையும், பிரசவ வலியையும் அனுபவித்துப்பெறும் குழந்தையை மயக்கம் தெளியும் முன் மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் கொடுமையை மருத்துவமும் அனுமதிக்கிறது, மனிதர்களும் அனுமதிக்கிறார்கள். ஒருவருக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயம் மற்றவருக்கு பெரும் துக்கத்தைக்கொடுக்கும் என்பதை உணருவதுமில்லை.

தாயாகத் துடிப்பவளுக்கும், தாயாக முடிந்தவளுக்கும் தாய் பாசம் என்ற உணர்வு ஒன்றுதான் என்பதையும் புரிந்துகொள்வதில்லை.

சரி இந்தத் திருநங்கை விஷயத்திற்கு வருவோம். மருத்துவரின் டெர்ம்ஸ்  அண்ட் கண்டிஷன்ஸ்கு ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக சம்மதிக்கிறாள். அதன்படி குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிடுகிறாள். ஆனால் தாய்மை அந்தக் குழந்தையைப் பார்க்கத்துடிக்கிறது.
மருத்துவரை  தொல்லை செய்து அதைத் தூரத்திலிருந்துப் பார்க்க அனுமதிப் பெற்று அந்தக் குழந்தையைத் தேடிச்சென்று பார்க்கிறாள். அந்தக் குழந்தை அவளை அம்மா என்று அழைக்கிறது.   இதோடு இந்தக் குறும்படம் முடிகிறது. அதன்
 லிங்க்.

ஆனால் திருநங்கை தனுஜாசிங்கம் அளிக்கும் பேட்டியில் உலகில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பில்லை என்று இந்தக் குறும்படத்தை வன்மையாகக் கண்டிக்கிறாள். பிறப்பில் ஆணாக இருக்கும் திருநங்கைகளுக்கு கர்பப்பை இருக்காது
என்கிறாள்.


மற்றொரு வீடியோவில் திருநங்கை பிறப்பால் அப்படியாவதில்லை. குறிப்பிட்ட வயதில் அப்படியாகிறார்கள். அவர்களின் மனநிலையின் அழுத்தம் பற்றியும், அவர்களை எப்படி அனுக வேண்டுமென்றும், சாதித்தத் திருநங்கைகளில் சிலரையும்

 உதாரணம் காட்டப்படுகிறது.

இப்படி அவர்களைப் பற்றிய ஆய்வு வீடியோக்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது நாம் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். இவ்வளவு விஷயம் இங்கே சொல்லப்பட்டதன் காரணம்? வாடாமல்லி.எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி புத்தகம்.

பொதுவாக நாவல்கள் முதலில் சந்தோஷமாய் ஆரம்பித்துப் போகப்போகதான் வலிகளை உணர்த்தும். ஆனால் 43 அத்தியாயங்களைக் கொண்ட  இந்த நாவலில்  முதல் அத்தியாயத்திலிருந்து  இருதி அத்தியாயம்வரை வலி, வலி, வலி மட்டுமே.

எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் சுயம்பு அவனுக்குள் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் கஷ்டங்களைச் சகிக்க முடியாமல் ஊருக்குச் செல்கிறான். அவன் ஊர் சென்று சேரும்வரை அனுபவிக்கும் இன்னல்கள்தான் முதலிரண்டு அத்தியாயங்கள். பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் அவன், இயல்பாய் பேருந்தில்வரும் ஒரு பெண்ணின் பக்கத்தில் அமர்ந்து அவள் அழகை ரசிக்கிறான். பெண்போல் அவள்மேல் சாய்கிறான்.

அவனை ஆணாகவும் கெட்டவனாகவும் பாவிக்கும் மற்றவர்கள் அடித்துத் துன்புறுத்தி கீழே இறக்கிவிடுகிறார்கள். சாக நினைத்தும் முடியாமல் கஷ்டப்பட்டு ஊருக்குச் செல்கிறான்.
அங்கும் அவனுக்குத் துன்பமே. கல்லூரிக்கு போகமாட்டேன் என்றதும், அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்பதை உணராத பெற்றோர் அடித்து, கெஞ்சி அறிவுரைச் சொல்லிக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். பலன் என்னவோ பூஜியம்தான்.

அவனின் உடற்கோளாறுகளை உணராதவர்கள் மனநிலைப் பாதிக்கப்பட்டவன், பெண்களைக் கற்பழிக்க முயல்பவன் என்று விரட்டிவிடுகிறார்கள். இங்கே சில விஷயங்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

இந்த நாவல் வெறும் திருநங்கையின் கஷ்டங்களை மட்டும் உணர்த்தும் நாவலல்ல. எந்தநிலையிலும் சுயம்புவைக் கைவிடாத மூர்த்தி முத்துவின் நட்பு, என்னதான் சண்டை வந்தாலும் ஆபத்துக்கட்டத்தில் ஈகோப்பார்க்காமல் இணைந்து செயல்படும் மாணவர்களின் ஒற்றுமை,  தம்பியைப் படிக்கவைக்க பதிவாளர் காலில் விழும் அண்ணனின் பாசம், தன் பிள்ளைப் படிக்காமல் போனாலும் அவன் நண்பர்களைத் தன் பிள்ளைகளாக ஏற்கும் தந்தையின் பெருந்தன்மை, தாய்க்கும் மேலாக வளர்க்கும் அக்காவின் அன்பு என்று அனைத்து உணர்வுகளையும் அளவு குறையாமல் சரிசமமாய் உணர்த்துகிறது.

பெண்ணாக மாறும்  சுயம்பு தன் கல்லூரியில் படிக்கும் டேவிட்டைக் காதலிக்கிறாள். ஆணான சுயம்புவை அவன் ஊரில் வசிக்கும் மலர்கொடி காதலிக்கிறாள். இருவரின் காதலும் நிரைவேறப்போவதில்லை. ஆனால் இரண்டிலும் உன்னதமும் துயரமும் இருக்கிறது.

வீட்டிற்கு அழைத்து வந்த அவனை அடுத்த வருடமாவது கல்லூரிக்கு அனுப்பிவிடலாம் என்று பெற்றோர் கனவுகாண அந்தக் கனவிலும் மண்ணையள்ளிப்போடவைக்கிறது அவன் ஹார்மோன் மாற்றங்கள்.

சேலைக்கட்டிக்கொண்டுதான் தன் காதலன் டேவிட்டிற்கு கடிதம் எழுதவேண்டுமென்று சேலைக்கட்டி அடி வாங்குகிறான். செத்துப்போன சீத்தாலக்‌ஷ்மி பேய்தான் பிடித்திருக்கிறது என்று அதற்கான சடங்குகளைச் செய்ய, அந்த மூடத்தனமும் அவனுக்கு எதிராகவே அமைகிறது. சேலைக்கட்டியதால் ஊர் கலவரத்தை ஏற்படுத்தியவன், அந்தக் கலவரம் முடியும் முன்னமே மீண்டும் அந்தத் தவறைச் செய்கிறான்.

  அடியும் சூடும் வாங்கியவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  மீண்டும் அதேத் தவறைச் செய்து அவன் அக்கா கல்யானத்தையும் நிறுத்திவிடுகிறான். அத்துடன் அவன் குடும்பத்தாரின் உறவையும், உயிராய் நினைத்த அக்காவின் அன்பையும் மனம்துடிக்க இழக்கிறான்.
அவன் சேர்க்கப்பட்ட மருத்துவமனையிலிருக்கும் திருநங்கை பச்சையம்மாளிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவனை மகளாக ஏற்றுக்கொள்கிறாள். வேறுவழியின்றி அவளுடன் சென்றவன் விபச்சார கேசில் மாட்டிக்கொள்கிறான். இங்கு பச்சையம்மாளின் உண்மையான அன்பும் பரிதவிப்பும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது.

அவனை வீட்டிற்குக் கொண்டுச் செல்லும் வழியில், தப்பித்து ரயிலேறி டெல்லிக்குச் செல்கிறான். இதற்கிடையில் சுயம்புவின் குடும்பம் நிலைக்குலைந்துபோய்விட்டது. தம்பியின் நினைப்பில் அக்கா படுத்தபடுக்கையாகிவிட்டாள். டேவிட்டும் முத்துவும் வந்து பார்த்துவிட்டு, டேவிட், அலி பற்றியும் பாலினமாற்றம் பற்றியும் விளக்குகிறான்.

டெல்லி செல்லும் முன் பச்சையம்மாவுடன் இருந்த நேரத்தில் கடைசி நம்பிக்கையாய் குடும்பத்திற்கு மணியார்டர் அனுப்ப, அது யாருக்கும் தெரியாமல் அவன் அண்ணி கோமளத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.
திருநங்கைகளின் பூஜை, வரலாறு என்று அவர்கள் சொல்லும் கடவுள் நம்பிக்கையுடைய கதை, மற்றும்  அவர்களின் சடங்குகளைப்பற்றியும்  விளக்கியிருக்கிறது இந்நாவல். பாதி ஆணாகவும், பாதிப் பெண்ணாகவும் இருப்பவர்களை முழுப்பெண்ணாக மாற்றச் சுயநினைவுடன் இருக்கும்போதே ஆநுறுப்பை வெட்டி அசால்ட்டாய் போடும் கொடும் சடங்கும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அன்னை இந்திராகாந்திதான்முதல்முதலாக  அலிகளையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அப்படிப்பட்ட அன்னையின் சாவிற்கு மகள்களான திருநங்கைகள் படும் துயரங்களையும், அந்தச் சமயத்தில் டெல்லியில் நடக்கும் கோரங்களையும் உருக்கமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சு. சமுத்திரம்.
டெல்லி சென்ற சுயம்பு மீண்டும் பச்சையம்மாவைச் சந்திக்கிறானா? இதில் வரும் கங்காதேவி,  மேகலை, நீலிமா, நசிமா இவர்கள் யார்? கடைசியில் சுயம்புவும் அவன் குடும்பமும் என்ன ஆனது? என்பதையெல்லாம் இந்நாவலைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நமக்கு என்னச் சொல்லித்தருகிறார்களோ, பெரும்பாலும் நாம் அதைத்தான் பின்பற்றுகிறோம். திருநங்கையர் அறுவறுப்பானவர்கள் என்று மற்றவர் சொல்ல, நாமும் அதையே கேட்டுவந்தோம். இந்த நாவலைப் படித்தபிந்தான் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் உடலூனமுற்றவர்களைவிட கொடுமை என்று புரிகிறது.

அவர்களும் மனிதப்பிறவிகள், அதுவும் ஓர் மனிதச்சமூகம் என்பதும் தெரிகிறது. நீங்களும் படித்து அவர்களைப் புரிந்து நேசிக்கவில்லை என்றாலும், அறுவறுப்பாய் நினைக்கக்கூடாது என்று எண்ணுங்கள்.

இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு 1994. Source Shodhganga தளத்தில் உள்ள ஆய்வுக் கட்டுரை.
இதன் முதல் பதிப்பை வானதி பதிப்பகம் ஜூன் மாதம் 1994ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போது இதன் விலை ரூபாய் 80. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.
இந்நூலிற்கு அமரர் ஆதித்தனார் ஐம்பதாயிரம் ரூபாய் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதில் பரிசுத்தொகை பத்தாயிரத்தை எழுத்தாளர் அலிகளின் நலனிற்காக கொடுத்துவிட்டார்.
விக்கிப்பீடியா தளத்தில் உள்ள பக்கத்தில் இவரது முழுமையான நூல்கள் பட்டியல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வாடாமல்லி இடம்பெறவில்லை.
வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

வாடாமல்லி
சு. சமுத்திரம்
சாரதா பதிப்பகம்
பக்கங்கள் : 359
பதிப்பு : 1
வெளியிடப்பட்ட ஆண்டு : 2015
விலை : ரூ.120

இந்நூலை அமேசானில் படிக்க:

Saturday, 13 June 2020

குடும்பத்தின் தூண்.

வட இந்தியாவில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை மிகவும் பிரபலம். அந்த பண்டிகையன்று ஆண்கள் கைகளில் பெண்கள் ராக்கி என்ற பாசக்கையிறைக்கட்டி அண்ணனாக ஏற்றுக்கொள்வர். அதன் அர்த்தம்  எந்த சூழ்நிலையிலும் அந்த ஆண்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது.
அப்படி எந்த ராக்கிக்கயிறும் கட்டாமல், பெண்களுக்கு பாதுகாப்பையும் ஆண்களுக்கு நல்ல வழிக்காட்டுதலையும் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
எழுத்துலகில் தனித்தன்மை பெற்றவர். கவிதை, கதை, கட்டுரை, நாவல், நாடகம், சொற்பொழிவு என்று எல்லா வகையிலும் தன் எழுத்துத்திறனை காண்பித்தது மட்டுமன்றி தான் நினைக்கும் கருத்துக்களை எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லாமல் தைரியமாக வெளிப்படுத்தியவர். அதற்கு சிறந்த உதாரணம், அவர் தன் தலைவனாக ஏற்றுக்கொண்ட பெரியாரையே மறுத்து தன் கருத்தில் உறுதியாக இருந்தது.
அண்ணாவின் நூல்களில் பெண்களுக்கென்று ஒரு தனி இடமிருக்கும். அக்காலத்தில் பெண்களுக்காக தன் எழுத்தின்மூலம் குரல் கொடுத்தவர்.
ஒரு பெண் விலைமாதுவாகிவிட்டால் அவளை ‘விலைமாது’ என்று இந்த உலகம் தூற்றுகிறது. கல் எறிந்தும், தவறான வசவுகளைப் பேசியும் அவர்களை துன்புறுத்துகிறது. எத்தனையோ பெண்கள் இந்த இழிநிலையையும் சித்திரவதையையும் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.
பரிசுத்தத்தைப்பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசும் இந்தச் சமுதாயம்  பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்ட பெண்களின் பின்னணியில் இருக்கும் ஆண்களைப்பற்றி பேசுவதே இல்லை.
எத்தனையோ பெண்கள் தன் கணவனாலேயே இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய கணவனும், கணவானுமான ஒருவனின் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கும் நூல்தான் ரங்கோன் ராதா.
1947இல் திராவிட நாடு என்ற இதழில் வெளிவந்தது. பின்பு 1953 ல் சென்னையிலுள்ள பாரி நிலையம் நூலாக வெளியிட்டது. 2002 ல் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது.
1956ஆம் ஆண்டில் காசிலிங்கம் இயக்கத்தில், மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில், கலைஞரின் கதைவசனத்தில்,  சிவாஜிகணேசன் மற்றும் பானுமதி நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
இந்த நாவலின் கதாபாத்திரங்களான நாகசுந்தரமும் பரந்தாமனும் நண்பர்கள். நாகசுந்தரத்தின் பக்கத்து வீட்டில் ரங்கோனிலிருந்து ஒரு குடும்பம் குடிவருகிறார்கள். முதலில் அவர்களைப்பற்றி தெரியாத நாகசுந்தரம் ரங்கோனிலிருந்து வந்திருக்கும் பேரழகி ராதாவைப்பற்றி பரந்தாமனிடம் சொல்கிறான்.
பரந்தாமனுக்கும் ராதாவின்மேல் ஈர்ப்பு வருகிறது. ராதாவை பார்க்கத்துடிக்கிறான். அதைப்பற்றி நாகசுந்தரத்திடம் பேச,  அப்போது நாகசுந்தரம் ராதா தன் தங்கை என்றும், ராதாவின் தாய்தான் அவனுக்கும் தாய் என்றும், அவர்களை தாய் தங்கை என்று வெளியே சொல்லமுடியாதபடி அவன் தாய் தவறான பாதையில் போய்விட்ட பரிதாபக்கதையையும் சொல்கிறான்.
"உன் தாய் 20 வருடங்களுக்கு முன்னே இறந்துவிட்டதாக சொன்னாயே?" என்று பரந்தாமன் கேட்க, "ஆம். அவள் இறந்ததும் உண்மை, இப்போது இருப்பதும் உண்மை" என்று அந்த கொடுமையான கதையைச் சொல்கிறான்.
அது ரொம்பவும் கொடுமையான பகுதிதான். கல்லையும் கரைக்கும் பகுதி. ஆண்களைக்கூட அழவைக்கும் பகுதி. கணவனின் அரக்கத்தனத்தால் முழுவதுமாய் உடைந்துவிட்ட பேதை,  தானும் ஒரு கொடுமையை செய்துவிட்டு, தன் ஆசைக்குழந்தைக்காக தன்னைத்தானே சாகடித்துக்கொண்ட கொடுமையான சாவு அது!  அண்ணாவின் அற்புதமான எழுத்துக்கள் அவை. அதை நான் எழுதுவதைவிட நீங்களே படித்துப்பாருங்கள்.
கோட்டையூர் தர்மலிங்கமுதலியார் வீரராகவமுதலியாரின் பெரிய பெண்ணான ரங்கத்தை மணந்துகொள்கிறார்.
அவளை மணக்கும் சமயத்தில் வீரராகவமுதலியாருக்கு சொத்து எதுவும் இல்லாததால் ரங்கத்தை அன்பாகவே பார்த்துக்கொள்கிறார். சமூகத்தில் தர்மலிங்கம் அன்பான வள்ளல். மரியாதைக்குரியவர்.
சில வருடங்கள் இருவரும் இன்பமாக வாழ்கிறார்கள். அதன்பின் கேஸ்  போட்டிருந்த வீரராகவமுதலியாரின் சொத்துக்கள் அவர்பக்கம் தீர்ப்பாகிவிட தர்மலிங்கம் அவரின் இரண்டாவது பெண்ணையும் மணந்து மீதிப்பாதி சொத்தையும் அடைய திட்டமிடுகிறார்.
அதைத் தெரிந்துகொண்டு கண்டித்த ரங்கத்திற்கு பேய்பிடித்துவிட்டதாக ஊருக்குள் பரப்பிவிடுகிறார். அனைவரும் அதை நம்பி அவளை செய்யும் கொடுமைகள் எண்ணிலடங்காதது.
இதில் இன்னும் வருந்தவைக்கும் விஷயம் என்னவென்றால் ரங்கம் தன் மகள்போல் வளர்த்த அவள் தங்கை தங்கமும் அந்த திருமணத்தில் ஆசைக்கொண்டு ரங்கத்திற்கு எதிராக சதி செய்கிறாள்.
அந்த கொடுமைகளை படிக்கும்போது போலிப்பூசாரிகள் மற்றும்  மந்திரவாதிகளின் சேட்டைகள்  மட்டுமல்லாமல், பொதுவாக மக்கள்  பேய்பிடித்திருக்கிறது என்று கிளப்பிவிடும் வதந்திக்கு பின் இப்படி ஒரு கதை  இருந்தாலும் இருக்கும் என்பது தெரிகிறது.
தர்மலிங்கம் ரங்கத்தின் தங்கையான தங்கத்தை மணக்கிறார்.
சில மாதங்கள் கழித்து ரங்கத்திற்கு நாகசுந்தரம் பிறக்கிறான். அவன் பிறப்பின் பின்னும் சில கண்ணீர் கதைகள் இருக்கிறது.
நாகசுந்தரம் பிறந்து ஒரு வருடம் கழித்து ரங்கம் தன் கணவனைவிட்டு பிரிகிறாள். இல்லை கொடுமையான முறையில் பிரிக்கப்பட்டாள்.
பிரிந்தவள் எப்படி தவறான பாதைக்கு சென்றாள்? எப்படி ரங்கோன் சென்றாள்? ராதாவின் தந்தை யார்? ரங்கோன் சென்றபின் ரங்கம் சந்தோஷமாகதான் இருந்தாளா?
தன் தந்தையான தர்மலிங்கத்தை நாகசுந்தரம் என்ன செய்தான்? இந்த துயரக்கதையை கேட்டபின் பரந்தாமன் ராதாவை ஏற்றுக்கொள்வானா? இதை தெரிந்துக்கொள்ள இந்நாவலைப் படியுங்கள்.
ஒரு குடும்பத்தின் தூண் பெண்கள்தான். அந்த தூண் சாய்ந்துவிட்டால் குடும்பம் சிதறி சீரழிந்து போய்விடும்.
தர்மலிங்கம் போன்ற சில ஆண்கள் அந்த தூணை அவர்களே சாய்த்துவிட்டு பெண்கள்மேல் பழியைச் சுமத்திவிடுகிறார்கள்.
பெயரில் தர்மத்தை வைத்துக்கொண்டு அதர்மங்களை மட்டும் செய்துவரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையல்ல.  அவர்கள் வாழ்ந்த,  வாழ்கின்ற, இனியும் வாழப்போகிற நிஜங்கள்.

Tuesday, 9 June 2020

தொலைத்துவிட்ட வைரக்கல்


 சிட்டிசன் படத்தில் அஜித் தமிழக வரைப்படத்திலிருந்து அத்திப்பட்டி என்ற ஒரு முழுக்கிராமமே தொலைந்து போய்விட்டதைக் குறிப்பிட்டார். அதுபோல
மக்கள் இதயத்திலிருந்தும் கூகுள் ஆண்டவரிடமிருந்தும் நிறைய தியாகிகள் தொலைந்து போய்விட்டார்கள். அப்படி ஒருவர் இருந்திருக்கிறாரா? என்று வியக்கும் வண்ணம் அவர்கள்
ஊர் பேர் எதுவும் தெரிவதே இல்லை. அப்படி தொலைந்து விட்ட தியாகிகளில் ஒருவர்தான் சத்யசேவா கிராம ஆசிரமத்தை நிறுவிய ராஜாராமன் என்ற காந்திராமன். ராகங்களை இசைக்கருவிகளால் வாசிக்கமுடியும் அல்லது மனிதரின் குரலால் பாடமுடியும். ஆனால் ஆத்மாக்களுக்கும் ராகமுண்டு அது உள்ளத்து உணர்வுகளால் இசைக்கக்கூடியது. பரிசுத்தமான இரு உள்ளங்கள் இணைந்து மீட்டிய ராகத்தைத்தான் நா. பார்த்தசாரதி ஐயா அவர்கள் தான் எழுதிய ஆத்மாவின் ராகங்கள் என்னும் நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். தேசத்தை பக்தி செய்யும்
ஒருவரும், தேசபக்தரை பக்தி செய்யும் ஒருத்தியும் உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழ்ந்த கதையிது. இந்த கதையை முதல்முறை நான் படிக்கும்போது எனக்குள் எழுந்த உணர்வைச்
சொல்ல வார்த்தை இல்லை. இப்படி எத்தனை தியாக தீபங்கள் நமக்கு தெரியாமல் அணைந்துபோய் இந்தியச்சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்கும் என்று தோன்றியது. இந்த நாவலின்
முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இதில் இரண்டு சகாப்தங்கள் வருகிறது. மகாத்மா காந்தியின் போராட்டங்களும், அந்த மகாத்மா காந்தியை பக்தி செய்யும் மகாத்மாவான
காந்திராமனின் போராட்டங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. நா.பா அவர்கள் ராஜு என்ற பெயரில் பத்திரிக்கையாளராக இருப்பதாகவும், காந்திராமனின் இறப்புச்செய்தி
அவருக்கு டெலிப்ப்ரிண்டரில் வருவதாகவும், அதை வெளியிட இரவென்றும் பாராமல் அவர் தன் ஊழியரோடு அலுவலகத்திலிருந்து வெளியிடுவதாகவும் இந்த நாவலின் முதல் அத்தியாயம்
தொடங்குகிறது. 1930ஆம் ஆண்டு. உப்புச்சத்யாகிரகம் நாடெங்கும் பரவி தலைவர்கள் கைதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலமது. அப்போது முதல் 1947ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம்
15ஆம் தேதிவரை அவர்மேற்கொண்ட சுதந்திர போராட்டங்களும், சத்யசேவா ஆசிரமத்தை நிறுவியதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. படிக்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. மே மாதம்
6ஆம் தேதி வெளியிடப்பட்டு 7ஆம் தேதி மதுரைக்கு வந்த சுதேசிமித்திரன் பத்திரிக்கையில் மகாத்மா காந்தி அவர்கள் கைதான செய்தி வருகிறது. இந்நிலையில் ராஜாராமனும்
அவர் நண்பர்களும் அவர்களின் கொதிப்பை வெளிப்படுத்தவும், நாட்டின்மீதுள்ள பற்றால் தாங்களும் ஏதாவது செய்து சிறை செல்ல வேண்டுமென்று அந்நியத்துணிக்கடை மறியல்
மற்றும் கள்ளுக்கடை மறியல் நடத்த திட்டமிடுகிறார்கள். இங்கிருந்துதான் இவர்களின் முதல் போராட்டம் துவங்குகிறது. அந்நியத்துணிக்கடை மரியல் நடத்தி முதல்முறை வேலூர்
சிறையில் சி. வகுப்பில் சிறைக்கைதியாகிறார். தாயின் உடல்நிலை மோசமாக இருந்தபோதும், தாயின் இறப்பிற்கும் பரோலில் செல்ல மறுக்கிறார். அவரின் சிறை அனுபவங்களையும்,
அவர் சந்தித்த தியாகிகளின் நட்பையும் பற்றி நா. பார்த்தசாரதி ஐயா அவர்கள் தன் எழுத்துக்களால் அழகாக அலங்கரித்திருக்கிறார். வேலூர் சிறையின் சுகமான பயனுள்ள அனுபவங்களைப்போல
இரண்டாம் முறை கடலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது ராஜாராமன் அனுபவிக்கும் துன்பங்களையும் மனமிளகும்படி எழுதியிருக்கிறார். வடக்கு சித்திரை வீதியில் அவர் திலகர் வாசகசாலை இருந்தது. அந்த   மொட்டைமாடிக்கு எதிரிலிருக்கும் வீட்டின்  மாடியறையிலிருந்த மதுரவள்ளியை சந்திக்க நேர்ந்தது..
 முதலில் அவள் வசிக்கும் இடத்தால் அவளையும் தவறாய் புரிந்துகொண்டவர் அவளின் பரிசுத்தமான
அன்பை புரிந்துகொள்கிறார். அவள் அவரை காதலிக்கவில்லை. பக்தி செய்கிறாள் என்பதை உணர்கிறார். ஊரரிய உலகரிய நீங்கள் தேசத்திற்காக தியாகம் செய்யுங்கள், ஊரரியாமல்,
உலகரியாமல், புகழை எதிர்பார்க்காமல் உங்களுக்காக அந்தரங்கமாக தியாகம் செய்யும் என் உரிமையை தடுக்காதீர்கள் என்ற வார்த்தைகளை படிக்கும்போது, எனக்கு நா. பாவின்
பேனாவிலிருந்து வடிவது எழுத்துக்களா அல்லது சித்திரத்துளிகளா என்ற சந்தேகம் கலந்த இனிய ஆச்சரியம் தோன்றுகிறது. தெளியலேது ராமா பக்தி மார்கமு. ராமா உன்னை பக்தி
செய்யும் மார்க்கம் தெரியவில்லையே என்று உருகி உருகிப்பாடி அவரின் உயர்ந்த மனதை ஜெயிக்கிறாளே தவிர, வேண்டாத உணர்வுகளை தூண்டவில்லை. இதுதான் நா. பாவின் சிறப்பு.
காதலை நாகரிகம் என்ற வார்த்தைக்கும் மேலாக தெய்வீகம் பொருந்தியதாக மாற்றும் வல்லமை இருக்கிறது. ஒரு பெண்ணாய் நான் நா.பாவின் இப்படிப்பட்ட உயர்ந்த எழுத்துக்களை
படிக்கும்போது பெருமையடைகிறேன். அவள் என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறாள் என்பதை நாவலை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்தரங்கம் என்ற வார்த்தையை கேட்கும்போதே
பலருக்கும் கற்பனைகளும், கருத்துக்களும் வேறெதையோ நோக்கித்தான் பயணிக்கும். ஆனால் நா. பாவின் அந்தரங்கம் என்ற வார்த்தை இதயத்தின் உள்ளே எவருக்கும் தெரியாமல்
புதைந்துகிடக்கும் அதீத அன்பை மட்டுமே குறிப்பதாகும். இது என்னை வியக்கவைக்கும் விஷயம். அழகு, ரசனை ஆகியவற்றை வர்ணிக்கும்போதும் நாகரிகத்தமிழில் மட்டும்தான்
எழுதுவார். படிக்கும்போது பூக்கள் மணப்பதுபோல இதயத்திலும் நறுமணம் கமழும். இந்த நாவலில் என்னைக்கவரும் வகையில் ஒரு அழகான சோகக்குயிலின் குரலை வர்ணித்து ஒரு
பாடல் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அவை. எல்லையிலாததோர் காட்டிடை நல் என்று ஆரம்பிக்கும் பாடல். இவர்களின் தெய்வீக காதல் பெண்ணின் தாய்க்கும்,
காந்திராமனுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய வந்து திருமணம் உறுதி செய்யப்பட்டது. காந்திராமன் 10 வருடங்களுக்கு முன் சுதந்திரம் கிடைக்கும்வரை தானும் தன் நண்பர்களும்
திருமணம் செய்வதில்லை என்று சத்தியம் செய்திருப்பதாகவும், சுதந்திரம் கிடைத்தவுடன் திருமணம் செய்வதாகவும் வாக்களித்தார். சுதந்திரம் கிடைத்துவிட்டது, ஆனால்
இவர்களின் திருமணம் நடக்கவில்லை. ஏன்? சுதந்திர போராட்டத்தில் இறந்துவிட்டார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். படித்துப்பார்த்து ஏனென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆத்மாக்களின் ராகங்களை நா. பா அவர்கள் அந்த ஆத்மாக்களிடமே சமர்பித்துவிடுகிறார். அப்படி செய்தபோது அந்த மோன ராகங்களை அவர் கேட்பதைப்போல் உணர்கிறார். படித்துப்பாருங்கள்.
இப்படியும் சில ராகங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.