Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 26 January 2021

மீண்டுமோர் சுதந்திர காற்று

    

போராட்ட விளக்கினில் குருதி எண்ணை ஊற்றி, தியாகத் திரித்தூண்டி ஏற்றிவைத்த தீபவொளி சுதந்திரம்.


எத்தனை உயிர் பறவைகள் வானில் பறந்திருக்கும். எத்தனை உறுப்புகள் குருதியில் குளித்திருக்கும்.


எத்தனை சிறைவாசம் எத்தனை அன்னியாதவாசம், அதன்பின்னே கிடைத்ததிந்த சுதந்திர சுவாசம்.


தெரிந்த தியாகிகள் சிலர். தெரியாத தியாகிகள் பலர்.


தெரிந்த தியாகத்திற்கு எழுத்துக்கள் சாட்சி. தெரியாத தியாகத்திற்கு எது சாட்சி?


மென்மையும் மேன்மையும் பொருந்திய பெண்களில் புயலாய் புறப்பட்டு புதுமை செய்தவர்தான் எத்தனை.


ருசியறிந்து உண்ண உணவிருந்தும் பசிக்குக்கூட உண்ண மனமிருந்ததில்லை.


அரண்மனை அந்தப்புறங்கள் ஆயிரமிருந்தும் ஆழ்ந்த நித்திரை கொண்டதில்லை.


பட்டுப்பீதாம்பரங்கள் பலயிருந்தும் போட்டுக்கொள்ள பொழுதிருந்ததில்லை.


எழுதி தீர்க்க ஏராளமிருந்தும் எழுத்து சுதந்திரம் இருந்ததில்லை.


எடுத்துக்கூற கருத்துக்கள் இருந்தும் பேச்சு சுதந்திரம் பெற்றதில்லை.


அடிமைத்தனம், அடிமைத்தனம் ஆங்காங்கே அடிமைத்தனம். ஆங்கிலேயரின் அடிமைத்தனம்.


அரும்பாடுபட்டு இரவுப்பொழுதில் தூங்கும் வேளையில் வாங்கினோம் சுதந்திரத்தை வெள்ளையரிடம். அதை பகலில் விழித்துக்கொண்டிருக்கும்போதே பரிகொடுத்தோம் இந்தியக்கொள்ளையரிடம்.


இன்றும் இந்தியா குருதியில் குளிக்கத்தான் செய்கிறது.


இன்றும் இந்திய வளங்கள் சுரண்டத்தான்படுகிறது.


இன்றும் இந்தியப்பெண்கள் பாதுகாப்பின்றித்தான் நடமாடுகிறார்கள்.


இன்றும் இந்திய நாகரீகம் சீர்குலைந்துதான் போகிறது.


இன்றும் எழுத்துக்கும் பேச்சுக்கும் எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.


ஆனால் அதற்கு காரணம் வெள்ளையர்கள் அல்ல நம் இந்தியர்கள்.


அன்று இந்தியனுக்கு எதிரி வெள்ளையன். இன்று இந்தியனுக்கு எதிரி இந்தியன்.


அன்றைய சுதந்திரத்தை அவர்கள் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.


இலஞர்களே இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.

முயல்வோம் மீண்டுமோர் உண்மையான முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க.


இனி இந்தியரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவது இந்தியர் கையில்.


 

Wednesday, 13 January 2021

'நான் காணும் உலகம்'

சுருங்கிவிட்ட உலகம் சுயநலத்தின் கூடம்!

கொடூரப்புள்ளிகளால் இடப்பட்ட கோலம்!

நாட்டிலோ தந்திர ஆட்சி!

வீட்டிலோ எந்திர ஆட்சி!

பாசத்தைப் பங்குவைக்க ஆளில்லை!

பணத்தைப் பந்திவிரிக்க பாய்ந்து வருவோர் ஏராளம்!



இலையுதிர காணேன்!

ஈசலைப்போல் கொலையுதிரக் கண்டேன்!

அள்ளிக்கொடுக்கக் காணேன்!

வேறோர் பொருள் மட்டும் கொள்ளையடிக்கக் கண்டேன்!


பெண்ணுள்ளம் மதிக்கும் மனிதன் காணேன்!

பேதையவள் உடல் தின்னும் மிருகம் கண்டேன்!

அள்ளிப்பருகக் குடிநீர் காணேன்!

ஆறாய் பாயும் குறுதி கண்டேன்!


சாலைவிதிகள் மதிக்கக் கானேன்!

சாரை சாரையாய் விபத்துகள் கண்டேன்!

பாப்பாக்கள் ஆடும் ஆட்டங்கள் காணேன்!

அவை பாதுகாப்பு வளையத்தில் சிறைப்படக் கண்டேன்!


பிஞ்சை ரசிக்கும் நெஞ்சங்கள் காணேன்!

அதையும் புசித்து ரசிக்கும் ராட்சதம் கண்டேன்!

பசியும் பஞ்சமும் மறையக் காணேன்!

லஞ்சமும் வஞ்சமும் நிறையக் கண்டேன்!


வியாதிகளில்லா வீடுகள் காணேன்!

விதம்விதமாய் நோய்கள் கண்டேன்!

சுயநலம் பேணாத் தலமைக் காணேன்!

சூழ்ச்சிகள் நிறைந்த ஆட்சியைக் கண்டேன்!


அறிவை வளர்க்கும் கல்வியைக் காணேன்!

அரசியல் பேசும் கல்வியைக் கண்டேன்!

எழில் கொஞ்சும் இயற்கைக் காணேன்!

ஏய்ச்சிப்பிழைக்கும் செயற்கைக் கண்டேன்!


மூர்க்கங்கள் யாவும் முகவிழியால் காணேன்!

மூடியவிழிக்கு நன்றிகள் சொல்வேன்!


இயற்கையே! எனையாளும் விதியே! இறையே!

உம் மூவர் மீதில் ஆணை!


எப்போது அரக்கம் ஒழியக் காண்பேனோ!

எப்போது இரக்கம் பிரக்கக் காண்பேனோ!

எப்போது இதயம் மதிக்கக் காண்பேனோ!

எப்போது இல்லாமை விலகக் காண்பேனோ!


எப்போது எல்லாரும் எல்லாம் பெறக் காண்பேனோ!

எப்போது சமத்துவம் சமநீதி காண்பேனோ!

எப்போது அன்பும் அமைதியும் மலரக் காண்பேனோ!

எப்போது பண்பும் பொதுநலமும் மிளிரக் காண்பேனோ!


எப்போது மாண்புற வாழக் காண்பேனோ!

எப்போது மனிதம் சிறக்கக் காண்பேனோ!


அப்போதே என் விழிகள் திறக்கக் கேட்பேன்!

சாட்சிகளே, பதில் சொல்லுங்கள்!

இந்தத் தரணி சிறக்குமா?

என் விழிகள் என்றேனும் திறக்குமா?


பின் குறிப்பு:

வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை கொளுத்திவிட்டு புதியவைகளை புகுத்துவதற்கு பதில் நாட்டிற்கு தேவையில்லாத கொடூரங்களை கொளுத்திவிட்டு  அன்பும் அமைதியும் புகுத்துவோம்.

அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!


 

Monday, 7 December 2020

இதுதான் என் அடையாளம்.

எத்தனையோ அடையாளங்கள்!

எடுத்துக்காட்டவே விதம்விதமாய் அட்டை வகைகள்!


சேய் என்று தாய் சொன்னாள்!

 செல்வமகள் என்று தந்தைச் சொன்னார்!


பசியாறும் முன்னே பெற்றவர் பெற்றார் என் பிறப்புச் சான்றிதழ்!

சாமிக்கு சான்றிதழில்லை!

சாதிக்கோ சான்றிதழ் ஏராளம்!


குடும்பத்தார் இவரென்று குடும்ப அட்டைச் சொன்னது!

குறைப்பாட்டுச் சான்றிதழும் கூடவே வந்தது!


படிக்கச் செல்லவும் அட்டை வேண்டும்!

பயணம் செய்யவும் அட்டை வேண்டும்!


வாக்கைப் பதிக்கவும் அட்டை வேண்டும்!

வறுமானத்தைக் கணிக்கவும் அட்டை வேண்டும்!


அலுவலகம் செல்லவும் அட்டை வேண்டும்!

ஆயுள் முழுமைக்கும் ஆதார் வேண்டும்!


பெண் இவளென்று இயற்கை சொன்னது!

பேசும் மொழி தமிழென்று சூழல் சொன்னது!


மண் இதுவென்று பாரதம் சொன்னது!

மதம் இந்து என்று மனிதன் சொன்னது!


மனிதம் எதுவென்று யார் சொல்வது?


என் தங்கை இவள் என்று தமயன் சொன்னாலும்,

என் மனைவி இவளென்று கணவன் சொன்னாலும்,


என் தாய் இவள் என்று குழந்தை சொன்னாலும்,

என் பாட்டி இவளென்று பெயரன் சொன்னாலும்,


எழுத்தாளர் இவளென்று நட்பு சொன்னாலும்,

பேச்சாளர் இவளென்று பெருமை கொண்டாலும்,


வானொலித் தொகுப்பாளர் இவளென்று வாழ்த்துச் சொன்னாலும்,

வாழ்வில் நான் ரசிக்கும் அடையாளம் டெய்லர் மகளென்பதே!


இது என் பள்ளி தந்த அடையாளம்!

இன்பத்தை அள்ளித்தந்த அடையாளம்!


இதுவும் ஓர் அடையாளம்!

இதுவே என் அடையாளம்!


 

Sunday, 29 November 2020

’என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்’

சிலிர்க்கவைக்கும் குளிரழகு,

வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு!


மலர்களின் மணமழகு,

மெய் தீண்டும் காற்றழகு!


வளர்ந்து நிற்கும் மரமழகு,

அந்த மரங்கள் தரும் நிழலழகு!


பறவைகளின் ஒலியழகு,

பாய்ந்துவரும் அலையழகு!


படிப்பென்றால் வரிகள் அழகு,

நடிப்பென்றால் வசனம் அழகு!


பேச்சென்றால் குரலழகு,

பாடும் பாட்டென்றால் ராகம் அழகு!


அநீதியற்ற நாடழகு,

அழுகுரலில்லா வீடழகு!


அள்ளிக்கொடுக்கும் உள்ளங்கை அழகு,

ஆபத்தில் உதவும் தோழமை அழகு!


இரவை நிறைக்கும் கனவுகள் அழகு,

இதயம் ததும்பும் நினைவுகள் அழகு!


உயிர் தந்த பெற்றோர் அழகு,

உடல் சுமக்கும் பூமித்தாய் அழகு!


உள்ளத்தை நேசிக்கும் உறவழகு,

உலகை வெல்லச்செய்யும் அறிவழகு!


மென்மை நிறைந்த பெண்மை அழகு,

அதை மேன்மைபடுத்தும் ஆண்மை அழகு!


நனைத்துச்செல்லும் மழையழகு,

நகைத்துப் பேசும் மழலை அழகு!


வறுமையில்லா இளமை அழகு,

அந்த வறுமையை விரட்டும் திறமை அழகு!


வார்த்தை மணியால் கோர்க்கப்படும் கவிதை அழகு,

அதை எழுத வித்திடும் கற்பனை அழகு!


மானிடர்க்கெல்லாம் மனம் அழகு,

அந்த மனமே என் அகவிழி காணும் பேரழகு!


அழகென்பது யாதெனில்,

கண்ணால் கண்டு ரசித்துவிட்டு கடந்து செல்வதல்ல.


உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!

ஆம்! அழகென்பது உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!

                                                                                             

Thursday, 25 June 2020

பார்வை



பனி இல்லாமல் உறைய வைக்கும்;
பாஷை இல்லாமல் உருக வைக்கும்;
புதுப்புது கவிதை படைக்கச்செய்யும்;
பூலோகம் தன்னை ரசிக்கச்செய்யும்!
வார்த்தைக்கு  வெட்கம் தடைவிதித்தாலும்,
கைஜாடைக்கு கண்ணியம் தடைவிதித்தாலும்,
கண்ணசைவுகள் எண்ணத்தை பிரதிபலிக்கும்!
பாசத்தைக் கண்டால் பக்கத்தில் அழைக்கும்.
வேஷத்தைக் கண்டால் விலக்கி நிறுத்தும்.
ஒவ்வொரு பார்வையிலும் ஓர் அர்த்தம், 
உணர்ந்து கொள்ள ஓர் அகராதி  வேண்டும்.
நூதன உறுப்பே,
நீ நவரசத்தின் சாளரம்.
நேர்த்தியான ஓவியம்.
காதலைச் சுறக்கும் நயனங்களே,
நீ கவிஞனின் கவிதை.
கனவுலகின் தேவதை.
இமைக்குடிசைக்குள் வசிக்கும் விலோசனமே, யார் கற்பித்தப் பாடம் இதழோடு உங்களையும் சேர்ந்து சிரிக்கச்சொல்லி?
வெளிச்சத்தை வீசும் விழியே
அதை விடாது அடைகாக்கும் இமையே
வா வேறோர் பிறவியில் என்னிடம் வா
அழகாய் அலங்கரிப்பேன்!  அருமையாய்  பாதுகாப்பேன்!
அதுவரை இதயத்தில் அந்தரங்கமாய் உன்னை உபசரிக்கிறேன்!

Sunday, 14 June 2020

இக்கால பெரியார் (பேராசிரியர் சுபவீரபாண்டியன்)

சாதியே சத்தமின்றி சென்றுவிடு, சொற்களால் உன்னை விரட்டியடிக்க ஓர் சமத்துவ மனிதர் இருக்கிறார்.
 மூட நம்பிக்கையே வாய்மூடிக்கொண்டு ஓடிவிடு, முழக்கமிட்டு முழக்கமிட்டே உன்னை ஒழித்துவிட ஓர் புரட்சியாளர் இருக்கிறார்.
 சாதகமே கவனமாய் இருந்துகொள், சனங்களை உன்னிடமிருந்து காப்பாற்ற ஓர் பகுத்தறிவாளர் இருக்கிறார்.
 இந்துமதமே இனியாவது விழித்துக்கொள், உன்னுள் வேரூன்றியிருக்கும் களையாவும் அகற்ற இத்தலைமுறையின் பெரியார் இருக்கிறார்.
 அந்நாளின் வீரபாண்டியன் ஆங்கில ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார். இந்நாளின் வீரபாண்டியன் சாதிய ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுகிறார்.
 புலாலோ மரக்கறியோ பேதம் பாராமல் உண்ணச்சொல்லி ஏழை எளியோர்க்கும் ஈயத்தூண்டும் மாமனிதரவர்.
 உரைத்தலைப்பின் சாவி கொண்டே உள்ளத்தின் பூட்டை திறக்கும் வித்தை கற்றவர்.
 சாதியம் ஒழிய வேண்டுமெனில் காதலையும் ஓர் ஆயுதமாய் கொள் எனும் தந்தையவர்.
 கல்விக்கண் திறந்த காமராஜர், கண்டங்கள் தாண்டிப் பிறந்த நெல்சன்மண்டேலா காஞ்சிதனில் அவதரித்த அண்ணா பற்றி நம்மை தம் கல்லூரிக்கு வரவழைக்காமலே கற்பித்த பேராசிரியர் அவர்.
 போரும் குருதியும் காணும் மக்களுக்கு போரும் அமைதியும் புகட்டியவர்.
 மறைந்த பெரியாரின் கொள்கைதனை மறக்கமுடியாவண்ணம் மீண்டும் மெருகூட்டி தருபவர்.
 ஒரு நிமிட செய்தியால் பலவருடமாய் நாம் மறந்த கருத்தைத் தினம்தோறும் தேன்கலந்த மருந்தாய் பருகச்செய்பவர்.
 எழுத்தென்னும் ஒளிக்கொண்டு குடிமக்களின் கூம்பிய சிந்தனை மலரை மலரச்செய்யும் எழுத்தாளரவர்.
 சிரிக்கவைக்கும்படி பேசினாலும் சிரித்துக்கொண்டே பேசினாலும் சிந்திக்க தூண்டும் கருத்தினை சிறப்புடன் பேசும் பேச்சாளரவர்.
 உலக விடுதலை போராளிகளின் உன்னத நினைவினை உள்ளம் உருகும்படி உரையாற்றிய தமிழரவர்.
 பண்பாட்டை மறந்து முறன்பாட்டை நாடுவோர்க்கு சுதந்திரத்தின் உண்மையை சுட்டிக்காட்டியவர்.
 அறிவியல் ஆன்மீகத்தால் அவனியின் நிலையை ஆதாரப்பூர்வமாய் சொன்னவரே, நுகர்வனவற்றை நுகர்வோம். துறப்பனவற்றை துறப்போம்.
 வானியல் சோதிட உண்மைதனை உடைத்து உறக்க பேசியவரே, மனிதநேய புனிதத்தையும் மனித சடங்கின் தீட்டையும் யாம் மறவோம்.
சுயமரியாதை விரும்பியே, தொடுவானம் தூரமில்லை என்றறிந்தோம்.
 ஒற்றைச்சிறகில் பறக்க நினைக்கும் சமூகத்தை புரிந்தோம்.
 படிப்பே நாடி துடிப்பு என்றுணர்ந்தோம்.
மனிதருள் கருப்பு வெள்ளை நிறம் பிரியோம்.
 பொதுநலனே தன்நலனாய் கொள்ளும் தலைவரே,
 நின் பொதுச்சேவையின் தேவை நீளட்டும்.
நின் கைகள் பல நூறு புத்தகங்கள் எழுதட்டும்.
 நின் திருவாய்மொழியால் பல ஆயிரம் பேச்சுக்கள் ஒலிக்கட்டும்.
இக்கால பெரியாரே, நீவீர் வாழிய வாழியவே.

பின் குறிப்பு:
இந்த வாழ்த்துக்கவிதை சுபவீரபாண்டியன் ஐயா அவர்களின் இதுதான் ராமராஜியம் என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்றபோது எழுதி மேடையில் படித்துக்காட்டியது.


Wednesday, 10 June 2020

வற்றா வறுமை.

நதி வற்றிப்போய் உயிரினங்கள் கதியற்று போயின!
நிலத்தடி நீர் வற்றிப்போய் தாவரங்கள் தலைசாய்ந்துவிட்டன!
குளம் குட்டையே வற்றிவிட்டது,   வற்றாத ஜீவநதி வறுமை மட்டுமே!
எத்தனை உணவு வகை இருந்தும் என்ன?   ஏழையின் தட்டு இன்னும் காலியாகத்தான்   இருக்கிறது!
பேரிரைச்சலுக்கு மத்தியில்  பிச்சைக்காரனின் குரல் தனித்து ஒலிக்கிறது !
பால் பொருட்கள் வியாபாரம், பச்சிளம் குழந்தைக்கு எங்கே ஆகாரம்?
ஊரும் உணவும் சார்ந்திருந்த காலமென்ன, ஒரு பருக்கைக்கூட கிடைக்காமல்   உயிரைவிடும் காலமென்ன!
ஆசைக்கு உணவுண்ட வேளையென்ன,   , காசுக்கு உணவுண்ணும் வேளையென்ன!
விரோதிக்கு விருந்தோம்பிய நாட்களென்ன,  விருந்தினரையே விழையா நாட்களென்ன!
பாஸச்சிறைக்கு ஏங்குவோரை பசிச்சிறை பிடித்துக்கொள்கிறது!
பறக்க துடிப்போரை பட்டினி இறக்கத்தூண்டுகிறது!
சத்துள்ள உணவுக்கு பங்களாவாசம், சேற்றில் உழலும் மனிதருக்கோ வடிகஞ்சியே வாழ்நாள் சுவாசம்!
 பணம்கொடுத்தால் பண்டமாம்; இங்கே பணமே முடக்கமாம்!
வறுமையின் நிறம் சிவப்பென்றார் அவர்
பாவம் அவரால் நிறத்தைத்தான் தரமுடிந்தது, நிரந்தர முடிவை தரமுடியவில்லை!
இறைவனாலே  முடியாதபோது, இயக்குனரால் எப்படி முடியும்?
உலகே,  விட்டுவிடு வீணான ஏக்கம்.
வரியோரின் வயிறும் வடிக்கின்ற கண்ணீரும் வற்றிவிட்டால் வாழ்வில் பிடிப்பேது.
வேட்கை கொண்டு வெற்றிப்பெறாவிட்டால் இதயத்தில் துடிப்பேது.
வறுமையே வருந்தும் காலம்வரும்;
வணங்காமுடியை வணங்கவைக்க நேரம்வரும்;
காத்திருப்போம் விடியும்வரை அல்ல, விடியல் வரும்வரை.

Friday, 5 June 2020

என் வாக்கு விற்பனைக்கல்ல.


பணத்தால் உன் குணத்தை விலை பேசும் பதவிப்பிரியரே, என் வாக்கு விற்பனைக்கல்ல.
கோடி கொடுத்தாலும், குடம்குடமாய் கொடுத்தாலும்,
நியாயவிலைப் பொருட்களை நியாயத்திற்கு புறம்பாய்  கொடுத்தாலும்,
புடவை கொடுத்து பெண்ணின் ஆர்வத்தை கவர்ந்தாலும்,
வேட்டி தந்து வளைக்க முயன்றாலும்,
என் வாக்கு விற்பனைக்கல்ல.
என் வீட்டுத் தென்றல் காற்றைப் போல்,
என் வீட்டு நீரைப்போல்,
என் மாடி நிலா வெளிச்சம் போல்,
என் வீட்டில் கேட்கும் கிண்கிணிச் சிரிப்பைப் போல்,
என் சுற்றத்தின் உள்ளத்தில் பொங்கும் உவகைப் போல்,
என் வாக்கும் விற்பனைக்கல்ல.
பெட்டித்தந்து புட்டித்தந்து உன் பெருச்சாளித்தனத்தை கண்டும் காணா பெட்டிப்பாம்பாக்க பார்க்கிறாயா?
பஞ்சத்தில் அடிப்பட்டு மஞ்சத்திலே மடிவேனே தவிர. லஞ்சத்தில் நெஞ்சமிழந்து உன் வஞ்சத்திற்கு வழிவகுக்கமாட்டேன்.
உடமையை விலைப்பேசு விற்றுவிடுகிறேன்.
உரிமையை விலைப்பேசாதே விட்டுக்கொடுக்கமாட்டேன்.
உன்னை நான் நிர்ணயிப்பது அரசியல் சட்டம். என் விலையை நீ நிர்ணயிப்பது உன் ஊழல் வாழ்க்கைக்கு நீ வகுக்கும் ஐந்தாண்டு திட்டம்.
எதற்கு விலை கொடுக்கிறாய்?
எதை விலை பேச முயல்கிறாய்?
வாக்கையா?
அல்ல! அல்ல!
பாரதத்தின் வாழ்க்கையை!
நாட்டின் பாதுகாப்பில் நீக்குபோக்காயிருப்பவர் தான் வாக்கை விலை பேசுவார்.
போக்குவரத்தின் போதும் பொதுநலத்தை நினைப்பவர் தன் நாக்கால் மக்கள் மனதை வெல்வார்.
நரம்பில்லாத நாக்கு நாற்புறமும் சுழலுமாம்,
அல்ல அல்ல,
நன்னாக்கிற்கு நரம்புகள் உண்டு,
அவை உண்மை என்னும் ஸ்ருதி மீட்டும்!
கொள்கை, கடமை, தொண்டு, எனும் மூன்றெழுத்தை மனதில் கொண்டு துணிந்து நில்.
உன்னை எதிர்ப்பவரை வெற்றி கொள்.