Friday 3 July 2020

அமைதியும் ஓர் ஆயுதம்தான்.

 அழகாகவே விடிந்திருந்தது அவனின் காலைப்பொழுது. கணினிக்கு அருகிலிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டே நாவல் படித்தபடி உறங்கிப்போனான் மதியழகன். விடிந்ததும் கணினியை நிறுத்திவிட்டு டிவியை உயிர்ப்பித்து சுபவியின் புதுப்புது அர்த்தங்கள் கேட்டுக்கொண்டு அவன் அன்னை அங்கயர்க்கன்னி கொடுத்த டீயை அருந்தினான்.
 நேற்றிரவு அலைபேசியில் வந்த அழைப்புகளுக்கு பதிலளித்துவிட்டு பின் குளித்துவிட்டு பள்ளிக்கு தயாரானான். மதியழகன் அவன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறான்.
 ஆறடிக்கு சற்று குறைவான உயரம், செதுக்கிய முகம், நறுக்கிய மீசை, கவரக்கூடிய குறுநகையுமாய் மதியழகன் என்ற பெயருக்கேற்றபடி மதியும் அழகும் கொண்ட கம்பீரமான ஆண்மகன்.
 விழியில் ஒளி இல்லாவிடினும் அவன் முகத்தில் என்றும் அறிவுச்சுடர் வீசிக்கொண்டிருக்கும். ஆம் மதியழகன் பிறவியிலேயே பார்வையற்றவன். வாக்கிங் ச்டிக்கின் உதவியிலும், அது இல்லாவிட்டாலும் தனியே சென்று வருவான். அவன் வேலைகளை அவனே செய்து கொள்வான்.
 படிப்பில் மட்டுமல்லாமல் பொது அறிவிலும் கெட்டிக்காரன். எந்த துறையாக இருந்தாலும் அதைபற்றி மற்றவர்களோடு அவர்களுக்கு இணையாய் சளைக்காமல் விவாதிப்பான்.


 பள்ளியில் நுழைந்ததும் தன் தலைமை ஆசிரியை கண்டவுடன் குட்மார்னிங் மேடம், என்றான். அவரோ அவனை அவமதிக்கும் பொருட்டு அவனோடு உடன் வந்த ஆசிரியருக்கு மட்டும் பதில் வணக்கம் சொன்னார். இது இன்று நேற்று நடப்பவை அல்ல இவன் இந்த பள்ளிக்கு வந்தது முதல் நடந்துவரும் பணிப்போர். பார்ப்போம் யாருக்கு வெற்றி என்று.
 தலைமை ஆசிரியரான குணவதி மதியழகனை எப்போதும் கண்காணித்துக்கொண்டிருப்பார். அப்போதுதானே அவன்மீது குறை கண்டுபிடித்து வசைபாட முடியும். அதில் ஏனோ அவருக்கு ஒரு ஆனந்தம் போலும்.
 ஒருநாள் அவன் தன் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் அவனே அறியாதபடி அவன் வகுப்பறைக்குள் வந்து அமர்ந்துக்கொண்டார். வகுப்பு முடிந்ததும் அவனை அழைத்து மிச்டர் மதியழகன் வகுப்பில் பாடம் நடத்தும்போது நின்று பாடம் நடத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று பொறிந்து தள்ளினார். மாணவர்களை படிக்கசொல்லிவிட்டுத்தான் அவன் அமர்ந்துக்கொண்டான் என்பதை அவர் அறியாமல் இல்லை.
 மதியழகனுக்கு அவரோடு வார்த்தைக்கு வார்த்தை வாதிடுவது ஏனோ பிடிக்கவில்லை. காலம் பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான். வெகுவிரைவில் அவனே அவருக்கு பதில் சொல்ல நேரிடும் என்பது அவனுக்கு பிறகுதான் தெரிந்தது.
 என்னதான் அவர் அவனை குறை சொன்னாலும் அவன் எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் தன் கடமைகளைச் செய்ய தவறமாட்டான். தேர்வு தாள்களை திருத்தி சரியான நேரத்தில் மதிப்பெண்களை சமர்ப்பிப்பது முதல் பாடக்குறிப்புகள் எழுதுவதுவரை எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கும் என்ன பயன்?



 சராசரி மனிதனுக்கு இருப்பது போல அவனின் சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கும். குடும்பத்தில் மின்னல் போல் வந்து போகும் சின்னசின்ன சண்டைகள், சொல்லமுடியாத நெருடல்கள் மனதில் இருந்தபோதும் அவன் தன் வீட்டிலும், பள்ளியிலும் தன் நண்பர்களிடத்திலும் இதழ்விரிய புன்னகை பூத்தபடியேதான் பேசுவான்.
 எல்லாவற்றையும் வேறு கோணத்தில் பார்க்கும் இயல்பு அவனுக்கு. பள்ளி வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையையும் ஒன்றாய் கலந்துவிட கூடாது என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை.. அதிகமாகவே தெரிந்திருந்தது. அதுவே அவன் வெற்றிக்கு வழிவகுத்தது. 12ஆம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சிகளை கொடுத்தான்.
 ”மேடம்,” என்றபடி தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்தான். வேண்டுமென்றே வேலை செய்யும் பாவனையில் வெகுநேரம் காக்க வைத்தார். பிறகு ”என்ன வேணும் உங்களுக்கு?” என்று அலட்சியமாக கேட்டார். “எனக்கு ஒரு மணிநேரம் பெர்மிஷன் வேண்டும்” என்றான். ”அதெல்லாம் கொடுக்கமுடியாது” என்று கண்டிப்பாக மறுத்தார். ஆனால் மற்ற ஆசிரியர் கேட்டதும் கொடுத்துவிட்டார்.
 மதியழகன் ஒருநாள் தன்னைப்போலவே ஆசிரியையாக பணிபுரியும் ஒரு தோழியிடம் அலைபேசியில் தொடர்புகொண்டான். அவள் தன் வகுப்பறையில் நடக்கும் எல்லாவற்றையும் புலம்பி தீர்த்தாள். ”அண்ணா, என் வகுப்பில் யாரும் படிக்கமாட்டுறாங்க. யாருக்கும் ஒரு சின்ன விஷயம் கூட புரிவதில்லை. கஷ்டமா இருக்கு அண்ணா. நான்தான் சரியாக சொல்லித்தரவில்லையோ என்று கூட தோன்றுகிறது.” எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவன் அவளை ஊக்குவிக்கும் வழியில், ”பிடிப்பில்லா படிப்பும், முயற்சியில்லா தேர்ச்சியும், ஒழுங்கில்லா கல்விமுறையும் ஒருங்கே பெற்ற சமுதாயம் இது. இதில் யாரை குறை சொல்லி என்ன பயன். 100 சதவிகித குற்றத்தில் மாணவர்களுக்கும் பங்குண்டு. மற்றபடி அவர்களை மட்டுமே குறை காண முடியாது.” என்றான். இப்படித்தான் போறபோக்கில் எதையாவது சொல்லி அடுத்தவர்களை ஊக்குவிப்பான்.
 ஒருநாள் மதியழகன் தன் சக ஊழியரின் உதவியோடு தேர்வு தாள்களைத் திருத்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அங்கே வந்த தலைமை அன்னை அவனுடனிருந்த ஆசிரியரைப் பார்த்து, ”இங்க பாருங்க சார், உங்க வேலைய மட்டும் நீங்க பார்த்தா போதும். அடுத்தவங்க வேலையெல்லாம் செய்ய தேவையில்ல. போங்க” என்று கடுமையாக பேசினார். அதற்கு பிறகு அவர் மதியழகனோடு அந்த வேலையை தொடர முடியவில்லை. அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 தேர்வு தாள்களை ஒலித்து வைப்பது பாடக்குறிப்பு நோட்டை எடுத்து வைப்பது இப்படி எத்தனை இடையூறுகளைத் தரமுடியுமோ அத்தனையும் செய்தார் தலைமை அன்னை. ஆனால் மதியழகன் மீண்டும் நூறு விழுக்காடு தேர்ச்சிதான். இதைக்கண்டு அனைத்து ஆசிரியர்களும் வியந்தனர்.
 ”அண்ணா, உங்களை யார்யாரெல்லாம் அவமானப்படுத்தினாங்களோ அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டீங்க அண்ணா. உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு அண்ணா. உங்க மாணவர்களுக்கு உங்கள்மேல் நல்ல மதிப்பு இருக்கு அதான் இதற்கு காரணம்.” என்று பாராட்டினாள் அவன் தங்கை தமிழரசி. சின்ன புன்னகையுடன் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொன்னான்.



 சில நாட்கள் கழித்து பள்ளி ஆண்டுவிழாவிற்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த வருடம் அந்த விருதை யாருக்குக் கொடுப்பது என்று தலைமை அன்னை பள்ளி நிர்வாக அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தபோது அனைவருமே மதியழகன் பெயரை பரிந்துரைத்தனர். தலைமை அன்னைக்கோ என்னவோ போலாகிவிட்டது.
  சிறப்பு விருந்தினர்களைப் பற்றி அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மதியழகன் ஒரு நல்ல ஆலோசனை சொன்னான். ”பெரும்பாலும் அனைத்து பள்ளியிலும்மாவட்ட ஆட்சியர், மருத்துவர், காவல் அதிகாரி, வங்கியில் வேலை பார்ப்பவர்கள் என்றுதான் கூப்பிடுவார்கள். ஏன் நாம் சில பிரபல பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் அழைக்க கூடாது? அவர்கள் பேசும் பேச்சு மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி படைக்கும் திறனையும் சிந்தனை திறனையும் வளர்க்கும். அவர்கள் பறக்கும் காற்றாடிக்கு உதவும் நூல் போன்றவர்கள்.”
 ”அது சரி ஆனால் அப்படிப்பட்ட பிரபல எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் எங்கு போய் எப்படி அழைப்பது?” என்று ஒரு ஆசிரியர் வினவினார். ”எனக்கு சிலரை தெரியும் உங்களுக்கு விருப்பமெனில் நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. அவர்களை நான்தான் ஏற்பாடு செய்தேன் என்று தலைமை அன்னைக்கு தெரிய வேண்டியதில்லை.”மற்றொரு ஆசிரியர் அதை ஆமோதித்ததால் சொன்னபடியே மதியழகன் பிரபல எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான பூமிநாதன், கண்ணுக்கினியாள் ஆகியோரை அழைத்திருந்தான். அவர்களும் அவனின் அழைப்பிற்கிணங்கி மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டனர்.
 விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அனைத்து ஆசிரியரின் வீட்டிற்கும் தலைமை அன்னையே சென்றார். மதியழகனின் வீட்டிற்கும் சென்றிருந்தார். அவன் தன் மனதிலும் முகத்திலும் எந்த விரோதத்தையும் வெறுப்பையும் காட்டிக்கொள்ளாமல் சுமூகமாய் பேசி விருந்தளித்து தன் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்தான். அவன் அறையில் நிறைய புத்தகங்களையும் கணினியும் பார்த்ததும் வியப்பாக இருந்தது. அதிகம் பேசாமல் ”உங்கள் மகனுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்க இருக்கிறோம். அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும்” என்று அழைப்பிதழை கொடுத்துவிட்டு புறப்பட்டார்.



 விழாநாள் வந்தது.தலைமை அன்னை வந்திருக்கும் விருந்தினர்களுக்கு வரவேற்புரை நிகழ்த்தி அவர்களுக்கு மரியாதை செய்தார். விழா குத்துவிளக்கு ஏற்றி இனிதே தொடங்கியது. மாணவ மாணவியர் தங்கள் கலைத்திறனைக் காண்பிக்கும் வண்ணம் இசை, நடனம், கவிதை, நாடகம் நடத்தினர். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. படிப்பிலும் விளையாட்டிலும் முதலாவதாக வந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 விழா தொடங்கிய சில நேரத்திலேயே தலைமை அன்னைக்கு ஓர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது. வந்த விருந்தினர்கள் யாவரும் மதியழகன் தங்களை அழைத்ததாகவும் அவனின் அன்பிற்கும் மரியாதைக்கும் இணங்கியும் அவன் சிறந்த ஆசிரியர் விருது வாங்க இருப்பதை தாங்கள் கண்டு தங்கள் கைகளால் தரவேண்டும் என்பதற்காகவும் வந்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
 தலைமை அன்னைஇதை கேட்டவுடனே ஆடிப்போய்விட்டார். அவனை அவமானப்படுத்திய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து வருந்தினார். முதல்முறையாக கண்களில் நீர் கோர்த்தது. இனி வாழ்வில் யாரையும் இப்படி நடத்தக் கூடாது என்று உணர்ந்தார். பார்வையற்றோரையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்குள்ளும் அறிவும் திறமையும் இருக்கிறது என்று புரிந்துகொண்டார்.
 மதியழகன் பேச தொடங்கினான். தலைமை அன்னை தன் மனதை ஒருமுகப்படுத்தி அவன் பேசுவதை கவனிக்க தயாரானார். ”அனைவருக்கும் என் முதல் வணக்கம். எனக்கு இந்த விருதை வழங்கியதற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். என் மாணவர்கள் நான் வகுப்பறையில் கற்பிக்கும் விதத்தை அழகிய நாடகமாக்கியிருந்தார்கள். அதற்கும் என் நன்றிகள். அந்த நாடகத்திலிருந்து நான் கற்பித்தது மாணவர்களுக்கு புரிந்திருக்கிறது என்பது தெரிகிறது. மிகவும் மகிழ்ச்சி.
 இங்கு நான் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. இப்போதைய ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாகலாம் .இப்போதைய மாணவர்கள் ஆசிரியர்களாகலாம். அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இதை சொல்கிறேன். ஆசிரியர்கள் மாணவர்களின் தலைமை. தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களின் தலைமை. ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்துவது போல தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களை வழிநடத்த வேண்டும். அவர்கள் செய்யும் நல்லதை ஊக்குவித்து நியாயமான தவறாக இருந்தால் திருத்த வேண்டும்.
 சின்னச்சின்ன விஷயத்தையும் வரவேற்க வேண்டும். கண்டிப்பைவிட கனிவும் பாராட்டலும்தான் நல்ல தலைமைப் பண்பு. முதலில் இந்த உறவுகளில் ஒற்றுமை வேண்டும். எல்லோருக்கும் சில சொந்த பிரச்சனைகளிருக்கும் அதையெல்லாம் மறந்துவிட்டு மறைத்துவிட்டுத்தான் பள்ளிக்கு வருகிறோம் ஒரு மாறுதலுக்காக. இங்கேயும் இடையூறுகள் தொடர்ந்தால் எப்படி?
 எனக்கு இந்த கல்விமுறையில் உடன்பாடு இல்லை. மதிப்பெண்கள் தாகத்தை மட்டும்தான் தீர்க்கும். அறிவு ஒன்றே வாழ்க்கையை மெறுகேற்றும். புரிதல் இல்லாத படிப்பு ஏட்டுச்சுறக்காய் போலத்தான். எத்தனையோ விஷயங்களை மாணவர்களுக்கு சொல்ல நினைத்திருந்தாலும் நேரமில்லாத காரணத்தால் சொல்லித்தர இயலவில்லை.
 படிக்காவிட்டாலும் தேர்ச்சியடைய முடியும் என்ற தைரியத்தில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. முகநூல் வாட்சப் இதிலிருக்கும் ஆர்வத்தை படிப்பில் காட்டுவதில்லை. ஒழுக்கக்கல்வி என்று ஒன்று இருப்பதையே அனைவரும் மறந்துவிட்டோம். அதனால்தான் மழலைமாறாத முகமும் விடலை பேச்சும் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.
 என் மாணவன் ஒருவன் நாடகத்தில் வகுப்பறையில் நான் சில பொதுக்கருத்துக்களைப் பாடத்திற்கு தேவையான விதத்தில் பொருத்தி சொல்வதாக சொல்லியிருந்தான். அது உண்மைதான். அது இங்கு அமர்ந்திருக்கும் நம் விருந்தினர்களின் கருத்துக்கள்தான். நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். தலைவர்களின் பேச்சுக்கள் கேட்கவேண்டும் என்பது என் கருத்து. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம் தரும்.
 தேவையில்லாமல் அடுத்தவரை புறம் சொல்வதை விட்டுவிட்டு நம் கடமைகளைச் செய்தாலே போதும். பாடப்புத்தகங்கள் போக இன்னபிற புத்தகங்களையும் படியுங்கள். மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு புரிந்து படிக்க தொடங்குங்கள்.
 ஒரு சின்ன கதையோடு என் உரையை முடிக்கிறேன். ஒரு தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்து பள்ளிக்கு அனுப்பினாள். சிறிது நேரம் கழித்து தன் குழந்தைக்கு அடிப்பட்டதாக அவளுக்கு தகவல் வந்தது. கதரியபடி ஓடிச்சென்று பார்த்தாள். தன் குழந்தை இல்லை என்றதும் திருப்தியடைந்தாள். ஆனால் அடிப்பட்ட அந்த குழந்தையை பற்றி அவளின் தாய் பாசம் நினைக்கவிடவில்லை. இப்படி தாயின் அன்பு கூட சில நேரங்களில் சுயநலமாகும். ஆனால் நம்மை போன்ற ஆசிரியரின் அன்பு பொதுநலமானது புனிதமானது. நமக்கு மாணவர்கள்தான் முதல் பிள்ளைகள். அப்படிப்பட்ட ஆசிரியர் பணிக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டுமென்று கூறி இந்த சிறந்த விருதையும் இந்த இனிய நேரத்தில் எனக்கு பேச வாய்ப்பையும் தந்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை கூறி என் உரையை முடிக்கிறேன் வணக்கம்.”
 மதியழகனை தொடர்ந்து மேலும் சில விருந்தினர்கள் பேசியபின் இரவு உணவு முடிந்து விழா இனிதே நிறைவேறியது. மதியழகன் குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்து அவனை பாராட்டினர்.


 காரில் செல்லும்போது குணவதிக்கு மனம் பொறுக்கவில்லை. நடந்ததை நினைத்து நினைத்து மனம் வெதும்பினார். ஏற்கனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்ததால் மதியழகனுக்கு சில மாதங்களில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலைக் கிடைத்தது.
 ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த மதியழகன் பள்ளி படிப்பு, இளங்கலை, முதுகலை, இளநிலை ஆசிரியர் படிப்பு,  இளநிலை ஆய்வுப்படிப்பையும் முடித்து  முதுநிலை ஆசிரியர் தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சிப்பெற்று இன்று  முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றப்போகிறான். தன் ரிலீவிங் ஆர்டரை வாங்க தலைமை அன்னையின் அறைக்கு சென்றான். குணவதி அவனை வருத்தத்துடன் நோக்கி, ”மதியழகன் நீங்கள் இங்கு பணி புரிந்தவரையில் நான் உங்கள் மனதை என்னால் இயன்றவரை எவ்வளவோ காயப்படுத்திவிட்டேன். அதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் இப்பொழுது செல்லும் பள்ளியில் உங்கள் பணியை செம்மையாக செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இங்கிருந்து இனிய நினைவுகளை மட்டும் எடுத்து செல்லுங்கள்” என்றார். ”அதெல்லாம் ஒன்றுமில்லை மேடம். பரவாயில்லை. வருத்தப்படாதீங்க” என்று மதியழகன் கணிவுடன் பேசினான்.
 சில நாட்களில் புதிய பள்ளியில் சேர்ந்து தன் பணியை தொடங்கினான். குடியிருக்க பக்கத்தில் ஒரு வீடும் கிடைத்துவிட்டது. எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த ஒருநாளில்தான் அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளி முடித்து அவன் வீடு வந்து உடை மாற்றி களைப்பாறிக்கொண்டிருந்தபோது அவன் அலைப்பேசி ஒலித்தது. திரையில் ஒளிர்ந்தது குணவதி. அதிர்ச்சியில் சிலநொடிகள் உறைந்துவிட்டு பின் மெல்ல சமாளித்து அழைப்பை ஏற்றான். ”வணக்கம் மேடம், நலமாக இருக்கிறீர்களா?” என்றான். மறுமுனையில் மிகவும் இயல்பான குரலில் ”என்ன மதியழகன் உங்க பள்ளி வாழ்க்கை எப்படி போகிறது? சக ஊழியரின் தோழமை, மாணவர்களின் அணுகுமுறை எல்லாம் பிடித்துவிட்டதா?” என்றார். ”பிடிச்சிருக்கு மேடம். எல்லாம் நல்லா இருக்கு.” மதியழகனும் மிகவும் இயல்பாகவே பேசினான். சிறிது நேர பேச்சுக்குப்பின் ”எதாவது தேவை என்றால் என்னை அழையுங்கள். நம் நட்பு இனிதே தொடரட்டும்” என்று அழைப்பை துண்டித்தார். அவனும் தன் தலைமை அன்னையின் மனமாற்றம் கண்டு மனம் மகிழ்ந்து தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டான். முற்றும்.

20 comments:

  1. அமைதி என்பது பீரங்கியைவிட வலிமையையும் ஆற்றலும் ஏதிர் வினையாற்றக்கூடியதும் கூட. மனம் மாறி மன்னிப்புக்கேட்ட தலைமை அன்னையும் பாராட்டுக்குரியவர்.

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  2. மதியழகன் இனியாவது நிம்மதியாக இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  3. நல்லதொரு பகிர்வு. தலைமை அன்னை போன்றவர்களும் இங்கே நிறைய! மனம் திருந்தினாரே அதற்காகவே அவரையும் பாராட்டலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். வில்லனோ வில்லியோ கடைசியில் திருந்திதானே ஆக வேண்டும்.

      Delete
  4. இது ஒரு உண்மை சம்பவம். அதுவும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த உண்மை சம்பவம். தனியார் பள்ளியாக இருந்தால் பார்வையற்றவரை உள்ளேயே விட்டிருக்கமாட்டார்கள்.. அரசு பள்ளியில் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்கிறார்கள். ஏன் இதை இப்படி எழுதினேன் என்றால் இந்த ஆசிரியர் இரண்டுமுறை 100 சதவிகித தேர்ச்சி கொடுத்ததும், 98 சதவிகிதத்திற்கு கீழே தேர்ச்சி சதவிகிதம் இல்லாமல் இருப்பதும் உண்மை. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்குப் பள்ளி என்ன செய்கிறது? விருதுகளை அவரவரே விண்ணப்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும். கதையிலாவது இந்த ஆசிரியருக்கு தனியார் பள்ளியில் நல்ல விருது கிடைக்கட்டும் என்றுதான் இப்படி எழுதினேன்.

    ReplyDelete
  5. மனதை நெகிழச் செய்தது சம்பவக் கதை.
    வாழ்த்துகள் தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      Delete
  6. அபி
    அற்புதம். இந்த கதையை படிக்கும் போது வாசிப்பாளர் தினத்திற்கு நீங்கள் எஸ்.ரா வை அழைத்தது அவர் உங்களை வாழ்த்தி பேசியது என் நினைவுக்கு வருகிறது.
    Great work. Keep it up my best wishes
    Vidya

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம். ஆனால் குறிப்பாக இந்தக் கதையைப் படிக்கும்போது ஏன் உங்களுக்கு அவர் வாழ்த்து நினைவுக்கு வருகிறது என்று புரியவில்லை.

      Delete
  7. அமைதியையும் ஒரு ஆயுதமாக கருதி கதைக்கு கமெண்ட் போடாமல் அமைதியாக இருக்க முடியலை.
    உண்மை சம்பவத்தை கதையாக வடித்த உனக்கு வாழ்த்துக்கள்.
    மதியழகன் என்பவனை லொயொலாவில் ஆங்கில இலக்கிய மாணவனாக சந்தித்திருக்கிறேன்.
    அவன் தான் உன் கதை மனிதனோ?
    //மதிப்பெண்கள் தாகத்தை மட்டும்தான் தீர்க்கும். அறிவு ஒன்றே வாழ்க்கையை மெறுகேற்றும்//
    அணைவரும் உணர வேண்டியது.

    ஒரு சிறு எதிர்ப்பார்ப்பு:
    இது வரை வந்த அணைத்து கதைகளிலும் பார்வையற்றவரை முக்கிய பாத்திரமாக கொண்டு அவர் மூலம் அறிய கருத்துக்களை உணர்த்துகிறாய்.
    அந்த எல்லையை படிப்படியாக கடந்து சமூகத்தின் பல்வேறு நிலையில் உள்ள பல்வகை மனிதர்களையும் சித்தரிக்கும் விரிவான சித்திரமாக உன் எதிர்கால கதைகள் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிஅரவிந் சார். நீங்கள் அமைதியாக இருந்தால் கருத்துக்களம் சுவாரசியமாக இருக்காது. மதியழகன் பெயர் மாற்றப்பட்டவன். உங்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் பூர்த்திச் செய்ய முயர்ச்சிக்கிறேன்.

      Delete
  8. அமைதின்னா என்ன விலைன்னு கேட்கும் ஆள் நான்.. எல்லாம் சரி எழுத்துருவை கொஞ்சம் பெருசாக்கலாமே!!??உத்து பார்த்து பார்த்து கண் வலிக்குது

    ReplyDelete
    Replies
    1. ஹை, வாங்க மேடம். எனக்கு ஒரு கம்பனி கிடைச்சிடிச்சி. எனக்கும் அமைதிக்கும் ரொம்ப தூரம். ஆனா பாவம் என்னை முதல்முதலா பார்க்குறவங்க. நான் அமைதின்னு நினைச்சு ஏமாந்து போய் உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் நொந்து போயிடுறாங்க. இந்த கமெண்ட்காகவே எழுத்துருவை பெருசாக்கிடுறேன்.

      Delete
  9. கதை அருமை அபி!

    நல்ல கருத்துகளையும் சொல்லியிருக்கீங்க. மதியழகன் இனி மகிழ்வோடு இருப்பார். சமூகத்தில் யாரும் தாழ்த்தியில்லை. எல்லோரும் சமமானவர்களே. மனிதர்களே.

    கீதா

    ReplyDelete
  10. அமைதி மிகச் சிறந்த் ஆயுதம். என்றாலும் ஒரு சில இடங்களில் பேசத்தான் வேண்டுமோ என்றும் கூடத் தோன்றும் சண்டையிடாமல் அதே சமயம் அழுத்தமாகப் பதிய வேண்டும் ஏதேனும் ஒரு வகையில்.

    நல்லா சொல்லியிருக்கீங்க

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா மேடம். நானும் அப்படித்தான். யாரா இருந்தாலும் தப்பைச் சுட்டிக்காட்டிடுவேன். ஆனா அதுக்கான வார்த்தைகளை மனசுக்குள்ள நிறையமுறை கோர்த்துப் பார்த்துப்பேன். என்னதான் கவனமா இருந்தாலும் கோவத்துல வார்த்தைகள் கடுமையா வந்துடும்.

      Delete