Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, 14 October 2022

மனிதத்தின் மரணம்.

            கண்ணா, சுபத்ரா ரெண்டுபேரும் சாப்பிட வாங்க என்று தன் பிள்ளைகளை அழைத்துவிட்டு, தன் கணவன் வாசுதேவனையும் சாப்பிட அழைத்து வந்தாள் தேவகி. அனைவரும் சாப்பிட்டபின் பாத்திரங்களை கழுவி ஒதுங்கவைத்து தன் அறைக்குச் சென்றாள். கட்டிலில் கணவன் பலத்த யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று என்னவென்று கேட்க, வாசுதேவன் தன் மனைவியிடம் பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர்களின் பள்ளி படிப்பு, கல்லூரி சேர்ப்பது, தங்களின் நிதி நிலமை என்று அனைத்தும் பேசிவிட்டு உரங்கினர்.



மறுநாள் காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருக்க மனைவி தந்த காலை உணவை உண்டுவிட்டு சுவரொட்டி ஒட்டும் தன் வேலைக்கு கிளம்பி சென்றார் வாசுதேவன். "ஏங்க இந்த டிரெயினேஜ் நாலுநாளா அடைச்சிட்டு இருக்கே கார்பரேஷன் ஆஃபிசுக்கு போன் பண்ணி சுத்தம் செய்ய வரசொல்லலாமில்லையா. குழந்தைங்க இருக்க இடம். இன்ஃபெக்‌ஷனானா என்ன செய்யிறது? நாந்தான் வேலை பளுவில் மறந்துடறேன். நீங்க கொஞ்சம் பாருங்களேன்” என்று தன் பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். ”சரிங்க பார்க்கிறேன். நானும் மறந்துதான் போயிடறேன். இப்பவே போன் செஞ்சிடறேன்” என்றுவிட்டு போன் செய்ய சென்றார் மற்றொருவர்.

போன் செய்த சற்றுநேரத்தில் டிரெயினேஜ் சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மை பணியாலர்கள்  வந்தனர். ஒருவர் உள்ளே இறங்கி சுத்தம் செய்துகொண்டிருக்க, மற்றொருவர் மேலிருந்து உதவியபடி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறை இருந்தபோதும் ஆங்காங்கே இப்படி நடப்பதுண்டு. எந்த சட்டங்களையும் ஒழுங்காக பின் பற்றாதவர்களாலும், அவர்களை கடுமையாக கண்டித்து சட்டங்களை பின் பற்ற வலியுறுத்தாத அரசு அதிகாரிகளாலும்தான் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.



ஒரு சராசரி மனிதனின் சிந்தனை எப்பொழுதும் குடும்பம், வேலை, பணம், உணவு உரக்கம் இவற்றை மட்டுமே சுற்றிவரும். பசிக்கோ ருசிக்கோ உணவு உண்டால் போதும் அது செறித்து அடுத்த வேலை உணவு கிடைத்தால் போதும் என்பது மட்டுமே பெரும்பாலானோர் கொள்கை. இதுதான் கசப்பான எதார்த்தமான உண்மை. இப்படி டிரெயினேஜ் அடைப்பு வந்தால் மட்டுமே அவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கிறது, அதற்காக தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஞாபகம் வரும். 

தன் துருநாற்றத்தை தானே தாங்க இயலாது அடுத்தவரை சுத்தம் செய்ய அழைப்பர்.  25 சதவிகிதம் வீட்டில் சமைத்து, 75 சதவிகிதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்டதெல்லாம் கழிவுகளாய் வெளியேறிக்கொண்டிருந்தது. இது போதாதென்று குட்டி குட்டி காகிதங்கள், முடி, சிகரட் துண்டங்கள், பாலித்தின் பொருட்கள், சின்ன சின்ன நெகிழி பொருட்கள், பெண்களின் நேப்கின்கள் என்று அனைத்து அறுவருப்பு பொருள்களையும் அழகாக தன்னை அழுக்குப்படுத்திக்கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்.



சட்டென்று விஷ வாயு தாக்க மூச்சுத் திணறியது. “ஐயோ! காப்பாற்றுங்கள்!” என்று அலறித் துடித்தார். விஷவாயு தாக்கியதில் தடுமாறி தன்னிலை இழந்தார். சாக்கடை கழிவுகள் வாய், மூக்கு, கண், காது என்று அனைத்து உறுப்புகளிலும் புகுந்து உயிரை சூரையாட தொடங்க, வாந்தியும் இருமலும் ஏற்பட்டு கண்கள் செருகி மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். முறையான பாதுகாப்பு இல்லாததால் உடனே விஷவாயு மூளையையும் தாக்கிவிட, மரணத்தை மடமடவென்று நெருங்கிக்கொண்டிருந்தார். உடனே மேலே நின்றிருந்தவர் குதித்து காப்பாற்ற முயல,அவரும் அந்த மரண வேதனையில் சிக்கிக்கொண்டார். . உயிர் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். யார் இறந்தாலும் இறப்புதான் உரியவர்க்கு அது இழப்புதான். அப்படி இருக்கையில் இவர்களை மட்டும் முறையாக பாதுகாக்காமல் இருப்பது என்ன ஞாயம்?



வெளிநாடுகளில் தனிமனித சுதந்திரத்தைப் பற்றியோ அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றியோ யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை. யார் சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் தலையிடுவதில்லை. ஆனால் சமூக ஒழுக்கத்திற்கு சின்ன கேடு வந்தாலும் சும்மா விடுவதில்லை. எல்லா துறைகளில் பணிபுரிபவருக்கும் முறையான பாதுகாப்பு கொடுக்கின்றனர். ஆனால் நம் இந்திய நாட்டில் தனிமனிதரைப் பற்றி புறணி பேசவே சரியாக இருக்கிறது. அண்டைநாட்டின் கலாச்சாரம் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களைப் போல் சமூகக் கட்டுப்பாடு வேண்டாமோ.



தன் வேலைகளை முடித்துக்கொண்டு அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வாசுதேவன். அப்போது பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று ஓடிச்சென்று பார்த்தார். பார்த்தவர் எதையும் யோசிக்காமல் குடும்பம் உயிர் அனைத்தையும் துச்சமாய் எண்ணிவிட்டு உடனே குதித்துவிட்டார் அவர்களைக் காப்பாற்ற. 

இயற்கையான ஒரு விஷயத்தைக் கேலிக்கூத்தாக்கி கைக்கொட்டி சிரித்திருக்கிறோம். ஆனால் அது கேலி செய்யும் விஷயமல்ல கேடு செய்யும் விஷம் என்பதை மறந்து போனோம். வாயு பிரச்சனைகளைப் பற்றியும் அதன் தீர்வு பற்றியும் ஒவ்வொரு மனிதனும் மருத்துவரை அனுகியும் சமூக ஊடகங்களிலிருந்தும் தெரிந்துகொள்கின்றனர். தன்னைக் காத்துக்கொண்டால் மட்டும் போதுமா? தன் நாட்டைக் காக்க வேண்டாமா? உலகிலேயே மிகக் கொடிய விஷமென்றால் அது மனிதந்தான். உடலளவிலும் சரி. உள்ளத்தாலும் சரி. மனித விஷத்திடமிருந்து மனிதர்களைக் காப்பாற்ற மனிதர்களான அரசாங்க அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்? எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறையும், அது தொடர்பான சட்டங்களும் வந்தபின்னும்  இன்றளவும் நிகழும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு என்ன முடிவு? கேள்விக்குறிதான்.



அங்கு இருந்தவர்கள் போலிசுக்கு தகவல் கொடுக்க, மீட்புப் பணி உடனடியாக நடைபெற்றது. மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு,அவர்களின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

அடுக்கலையில் வேலையாக இருந்த தேவகி அண்ணி என்ற அன்பான அழைப்பில் வெளியே வந்து பார்த்தாள். தன் கணவருடன் வேலை செய்யும் ஒருவர் நின்றிருந்தார். ”வாங்க தம்பி. காஃபி எடுத்துட்டு வரேன் உள்ள வாங்க. அவர் எங்கே? இன்னும் அவருக்கு வேலை முடியலையா?” என்று கேட்டபடி காஃபி எடுக்க உள்ளே செல்லபோனாள். அதை தடுத்த அவர், “வேண்டாம் அண்ணி. வெளிய போகனும் நீங்களும் வாங்க. கொஞ்சம் அவசரம்.” என்று பதட்டமாய் அழைத்தார். அவர் முகத்திலிருந்த பதட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு உள்ளே கிலி பரவியது. நடுக்கத்துடன், “எ.எங்கே போகனும் தம்பி? யாருக்கு என்ன?” என்று திக்கித் திணறியபடி கேட்டாள்.

“அது. வந்து. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரை போகணும் அண்ணி வாங்க ப்ளீஸ். எல்லாம் சொல்றேன். இப்போ வாங்க” என்று தழுதழுத்த குரலில் அழைக்க, அதற்குமேல் எதுவும் கேட்காமல் கிளம்பிவிட்டாள். மனமெல்லாம் பாரமாய் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். உள்ளே செல்ல செல்ல தேவகிக்கு பயம் அதிகரித்தது. அங்கே தன் கணவரை சுயநினைவற்ற நிலையில் கண்டதும் பயமும் பதட்டமும் உச்சத்தை அடைந்து கதறலாய் வெளி வந்தது. “ஐயோ! என்னங்க. என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிங்க. எந்திரிங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று பதறித் துடித்தாள். வாசுதேவனின் உடன்பிறவா சகோதரரான அவர் நடந்ததைச் சொல்ல, அழுது கரைந்தாள் மனிதநேயத்தின் மறுவுருவான வாசுதேவனின் காதல் மனைவி.  



சிகிச்சைப் பலனின்றி அந்த இரண்டு தூய்மை பணியாளர்களும் முதல் நாளே இறந்துவிட, மறுநாள் வாசுதேவனின் உயிரும் விண்ணில் பறந்தது. அந்த 24 மணிநேரமும் தேவகி தன் சுயத்திலேயே இல்லை. பித்துப்பிடித்தவள் போல் வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதிசயம் நிகழ்ந்து மீண்டும் தன் காதல் கணவன் தன்னிடமே வந்துவிடமாட்டாரா என்று ஏங்கினாள். விதி போடும் கணக்கிலிருந்து தப்பிவிட முடியுமா? அவளின் பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்க்கவில்லை. உழைப்பு, நட்பு, மனிதநேயம் மூன்றையும் ஒன்றாக விழிங்கிக்கொண்டது மரணம்.

மூவரின் உடலும் போஸ்ட்மாட்டம் செய்து அவரவர் குடும்பத்திடம்  ஒப்படைத்தனர். மருத்துவமனையே அதிரும்படி வெடித்து அழுதார்கள் அவர்களின் குடும்பத்தினர். அப்பாவியான தேவகியையும், அவளின் இளங்கன்றுகளையும் பார்க்கும்போது அனைவருக்குமே கண்கள் கலங்கியது. தனியொரு பெண்ணாய் தன் பிள்ளைகளுடன் அமரர் ஊர்தியில் கணவனின் உடலோடு அவரது சொந்த ஊரான மதுரைக்கு பயணப்பட்டாள். தங்களுடன் வருகிறேன் என்ற தன் கணவரின் மானசீக சகோதரரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். இடைவிடாது அழுத  பிள்ளைகளை இறுக்கி அனைத்துக்கொண்டு புழுவாய் துடித்தாள். 



மதுரையில் பிறந்து வளர்ந்த வாசுதேவன் தன் பக்கத்து வீட்டு தோழியான தேவகியை காதல் மணம் புரிந்துகொண்டார். இரண்டு வீட்டாருமே அவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். தன் நண்பரின் உதவியுடன் அவர்கள் குடியிருக்க வாடகை வீட்டை பார்த்துவிட்டார். அந்த நண்பரின் உதவியுடனே தனக்காக வேலையும் தேடிக்கொண்டார். தன் மனைவியை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினார். அவள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே தன் கஷ்டங்கள், வாங்கும் கடன்கள், வரும் செலவுகள் பற்றியெல்லாம் பெரிதாக பகிர்ந்துகொள்ளமாட்டார். அவரை பொருத்தவரை அவளும் பிள்ளைகளும் சந்தோஷமாக இருந்தால் போதும்.

கணவனின் காதல் சிறையில் ஆசையாய் அடைப்பட்டுக்கொண்டவள் உலகம் தெரியாத பெண்ணாகவே வாழ்ந்தாள். இனி அவளின் எதிர்காலம் என்ன? 



வாசுதேவனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு திரும்பிவிட்டாள். வீட்டின் உரிமையாளர் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரியவர குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த வீட்டின் மூத்த மகனான மகேஷ் அவனால் முடிந்தவரை அவர்களுக்கு மன ஆறுதல் அளித்து, பெரும்பாலான நேரத்தை அவர்களுடனே செலவிட்டான். எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் சொல்லிக்கொடுத்தான். 

அவர்களின் ஆறாத்துயர் பற்றி முகநூலில் கட்டுரை வெளியிட்டு ஒரு பெரும் தொகையை வசூலித்துக்கொடுத்து உதவினான். கணவனின் கடன் பெரிய அளவில் இருப்பது தெரியவர மேலும் கலங்கினாள் அவள். தையல் கலை தெரிந்திருந்ததால் தையல் எந்திரங்கள் வாங்கி வேலை செய்யலாம் என்று மகேஷ் ஆலோசனை கூற அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. வேலைநேரத்தில் இறந்ததால் ஒப்பந்தக்காரர்களே தூய்மைப் பணியாளர்களின் மனைவிகளுக்கு அவர்களின் சார்பில் வேலை கொடுத்துவிட,   வாசுதேவன் பணியாளர் இல்லாததால் வெறும் பத்து லட்சத்தோடு நிறுத்திக்கொண்டது அரசு.



“சாப்பிடு சுபாக்குட்டி. ஏன் இப்படி படுத்துற? இப்படி சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று தன் மூத்தமகளை கடிந்துகொண்டிருந்தாள். “ என்னால சாப்பிட முடியல அம்மா! எனக்கு அப்பா வேணும். படிக்கமுடியல, தூங்கமுடியல, விளையாட முடியல. எல்லா இடத்துலையும் அப்பாதான் தெரியிரார். நான் இனி அப்பாகிட்ட அது வேணும் இது வேணும்னு கேட்கமாட்டேன். நல்லா படிச்சு நல்ல பொண்ணா இருப்பேன். எனக்கு அப்பா மட்டும் கூட இருந்தால் போதும்மா.” என்று தன் அன்னையின் மடி சாய்ந்து அழுதாள் வாசுதேவனின் செல்லக்குட்டி சுபத்ரா.

தேவகியின் செல்ல மகனாக கண்ணனும் வாசுதேவனின் பாசக்கிளியாக சுபத்ராவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். சந்தோஷத்தால் கட்டிய அழகான குருவிக்கூட்டைப் பிரித்ததில் விதிக்கு என்ன லாபமோ. சுபத்ராவின் அழுகையை கேட்டபடி வந்த மகேஷ், “அப்பா உன் கூடவேதான் இருக்கார். உன்னை தெய்வமாய் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார். உன் சந்தோஷத்தில் அவர் கண்கள் சிரிக்கும். உன் துக்கத்தில் அவரின் இதயம் இரத்தம் வடிக்கும். நீ நல்லா சாப்பிட்டு நல்லா படிச்சாதான் அப்பாவுக்கு ஆத்ம நிம்மதி கிடைக்கும். சாப்பிடு.” என்று தேற்றினான். அவன் பேசுவது கொஞ்சம் புரிந்தாலும் அழுது துடித்தாள் பெண். 

மகளின் அழுகையை காணக்காண தேவகிக்கும் அழுகை பொங்கியது. “உங்க அப்பா போனபோதே நானும் போயிருப்பேன். உங்களுக்காக மட்டும்தான் உயிர் வாழ நினைக்கிறேன். நீங்களும் இப்படி பண்ணா நான் என்ன செய்வேன். உங்க அப்பா வேணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா. நானும்தான் அவர் அன்புக்கு ஏங்குறேன். என்ன செய்யறது நம்மை இப்படி விட்டுட்டு போயிட்டாரே பாவி மனுஷன்” என்று மகளை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள். “என்ன இது? அவ சின்ன குழந்தை. அவளுக்கு நீங்க ஆறுதல் சொல்லணும். நீங்களே சின்ன பிள்ளை போல அழுதா அவளுக்கு யார் ஆறுதல் சொல்றது. உங்க பிள்ளைகளுக்காக நீங்களும், உங்களுக்காக அவங்களும் வாழ்ந்தே ஆகணும். முதல்ல கண்ணை துடைச்சிட்டு அவளை சமாதானபடுத்தி சாப்பிட வையுங்க.” என்று சற்று அழுத்தமாகவே கூறினான் மகேஷ். பிள்ளைகளை அதட்டி உருட்டி சாப்பிட வைத்துவிட்டு பெயருக்கு தானும் உண்டுவிட்டு எழுந்தாள். அவர்களுக்கு மேலும் சமாதானம் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, இவர்களும் உரக்கத்தைத் தழுவினர்.



பிள்ளைகளுக்காக ஓரளவு தேறிக்கொண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள தொடங்கியிருந்தாள் தேவகி. வாசுதேவன் வாங்கியிருந்த கடனை ஓரளவு அடைத்துவிட்டாள். தையல் எந்திரங்கள் வாங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை வங்கியில் பிள்ளைகளின் பெயரில் வைப்பு நிதியாக போட்டுவிட்டாள். நாட்கள் அதன் போக்கில் செல்ல, விதி விடுவேனா என்று துறத்தியது. “டேய் ஸ்கூல்லருந்து வந்ததிலிருந்து போன் பாக்குற. ஒழுங்கா வெச்சிட்டு போய் படி” என்று சேட்டைக்கார கண்ணனை மிரட்டினாள் தேவகி. “அம்மா, இன்னும் கொஞ்சநேரம் ப்ளீஸ்.” என்று சொல்லி சொல்லியே நேரத்தை கடத்தினான் அந்தக் குறும்புக்காரன்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பொங்கி எழுந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக போனைப் பிடுங்கிக்கொண்டு நன்றாக வெளுத்து வாங்கிவிட்டாள். கோபம் அடங்கியதும் பிள்ளையை அடித்து திட்டிவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவனை கொஞ்சி கெஞ்சி சாப்பிட தின்பண்டம் கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள். சற்று நேரத்தில் கண்ணன் சைக்கிளை எடுத்து போவது தெரிந்தது. பிள்ளை விளையாடிட்டு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.



வெகுநேரம் சென்றும் பிள்ளை வராததை எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது. வாசலிலேயே விழிவைத்து காத்திருந்தாள். அப்போது தன் நண்பர்கள் சூழ இரத்த களரியோடு வந்தான் கண்ணன். “டேய். கண்ணா என்னடா இதெல்லாம் என்ன ஆச்சுடா. ஐயோ கடவுளே” என்று கத்தினாள். “அவனை நாய் கடிச்சிடிச்சு ஆண்ட்டி” என்றான் வந்த நண்பர்களுள் ஒருவன். நாயின் கோரதாண்டவத்தை தன் செல்ல பிள்ளையின் காலில் பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். “பாவி. சொன்னா கேட்டாதானே. இப்படி வந்து என் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டிட்டியே.” என்று புலம்பியபடி உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றாள். சிகிச்சை அளிக்கப்பட்டது. மகனின் வலியை காணக்காண துடித்தது அந்த பேதை உள்ளம். ஆயிரக்கணக்கில் செலவழிந்தபோதும் மகன் சரியானால் போதும் என்றிருந்தது. ஒருமணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.



“அம்மா. ரொம்ப வலிக்குது அம்மா ஏதாவது பண்ணுங்க. என்னால தாங்க முடியல. ரொம்ப ரொம்ப எரியிது. வலிக்குது அம்மா.” என்று துடித்தது ஏழாம் வகுப்புப் படிக்கும் அந்தச் சின்ன குறுத்து. மகனின் தலையை கோதிக்கொடுத்து, ”சரியா போய்டும். அப்பா நம்ம கூட சாமியா இருக்கார். அவர் உன் வலி போக்குவார். நம்மை கலங்க விடமாட்டார்” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டாள். பதினோறாம் வகுப்பு படிக்கும் சுபத்ரா தம்பியின் இன்னொரு அன்னையாகி அவனின் கைப்பிடித்து ஆறுதல் கூறினாள். “கவலப்படாதடா தம்பி நீ சீக்கிரம் சரியாய்டுவ. அம்மா போல நானும் உன்னை என் உயிராய் பார்த்துப்பேன். நம்ம சீக்கிரம் விளையாடலாம். இந்தா சாப்பிடு” என்று தன் கையிலிருந்த இட்டிலியை தம்பிக்கு ஊட்டினாள். மகளின் அக்கரையிலும் அன்பிலும் அன்னையின் கண்கள் பனித்தது. இந்த பாசமும் புரிதலும் இவர்களிடம் கடைசிவரை இருக்க வேண்டும் என்று தன் வாசுவிடம் வேண்டிக்கொண்டாள்.

மேலும் நான்கு இட்டிலிகளைக் கொண்டு வந்து தாயின் அருகே அமர்ந்து அவளுக்கும் ஊட்டினாள் சுபாக்குட்டி. ”சாப்பிடுங்க அம்மா. எங்களுக்காக. ப்ளீஸ். அப்பாதான் இல்லை. எங்களுக்கு நீங்களாவது கடைசிவரை வேணும் அம்மா.” என்று மகள் கண்கள் கலங்க, துக்கம் தொண்டையை அடைத்து உணவு உள்ளே செல்ல மறுத்தாலும், பிள்ளைகளுக்காக உண்டாள். பின் சுபத்ராவையும் சாப்பிடவைத்து இருவரையும் தன் மடிசாய்த்து தூங்க வைத்தாள். உரக்கம் வருமா அவளுக்கு? கணவனின் புகைப்படத்தைப் பார்த்து உள்ளம் ஊமையாய் அழுதது. இன்னும் இதுபோல எத்தனையோ பிரச்சனைகளையும் சந்தோஷங்களையும் அவள் தனியே எதிர்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடன் இருக்கும்போது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தும், தனிமையில் கணவனின் நினைவுகளுடன் போராடியும் நாட்களை கழிக்க வேண்டும். கைம்பெண்ணின் சடங்குகள் ஒழிந்திருக்கலாம். ஆனால் காதல் பெண்களின் உள்ளத்தை மாற்ற இயலுமா?

அவளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியில் சரி செய்ய முடியும். அதற்கு மற்றவரும் முன் வரலாம். ஆனால் கட்டியவனின் அன்பு? மறு காதலும் மறுமணமும் மருந்தாய் இருக்கலாம். அது அவரவர் உள்ளத்தையும், உள்ள சூழலையும் பொருத்ததாயிற்றே. லட்சத்தில் ஒரு வாய்ப்பாக அவள் மறுமணம் புரிந்தாலும், அதுவரை அவளின் நிலை? தன் காதல் கண்ணாளனின் புகைப்படத்தைப் பார்த்தபடி கண்களில் வழியும் நீரோடு உரங்கிப்போனாள். ஜன்னலிலிருந்து வீசிய சில்லென்ற காற்று அவள் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுச் சென்றது.

முற்றும்.


 

Wednesday, 14 April 2021

'கலாவின் காலை வணக்கம்'.



விடியும்போதே கலா தன் காதலன் நினைவுடனே கண்களை மெல்லத் திறந்தாள். எதிரே நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் காதலன் புகைப்படத்தில் அவளைப்பார்த்தபடி காதலாக சிரித்தான்.

2 நிமிடம் அவள் அதன்மீதிருந்து கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பார்க்க பார்க்க கண்களிலும் இதழ்களிலும் சிரிப்பு வழிகிறது.

ஒரு  நிமிடம்தான் பின்பு பெருமூச்சுவிட்டுக்கொண்டாள். ச்செ இந்த கவின் ஏன் இப்படி செய்கிறான்? ஒரு காலத்தில் என்னை எப்படியெல்லாம் அன்போடு பார்த்துக்கொள்வான். தினமும் எனக்கு காலை வணக்கம் சொல்லி என்னை எழுப்பிவிடுவானே. இப்போது என்பொழுது அவன் நினைவுடனே தனிமையாக விடிகிறதே என்று நினைத்துக்கொண்டாள். அவன் முகம் அவளுக்கு ப்ரகாசத்தை கொடுத்தாலும் அவனின் நினைவுகள் அவள் மனதுக்கு வேதனையை கொடுத்தது.

அவள் அன்னை வட்சலா கலாவுக்கு காபியும் காலை உணவும் அவள் அறைக்கே எடுத்து வந்தாள்.

”ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா? பொம்பளப்பிள்ளையா லட்சனமா சட்டுனு எழுந்துக்காம இப்படி கவினைப்பாத்துட்டே எவ்ளோ நேரம்தான் படுத்துட்டுருப்ப? எழுந்து கிளம்பித்தொலை. எல்லாம் கல்யானத்துக்கு அப்பறம் பார்த்துக்கலாம்” என்றபடி உணவு மேசையில் வைத்துவிட்டு சென்றாள்.

”ஆமாம் உன் மாப்பிள்ளை மன்மதன் பாரு? அழகு சொட்டுது அதான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு தெரியும் போய் வேலையப்பாரும்மா” என்று கத்தினாள். 

கலாவும் கவினும் கல்லூரி காதலர்கள். அதோடு கலாவின் அப்பா ராகவனும் கவினின் அப்பா ராஜசேகரும் தொழில்முறை நண்பர்கள். வட்சலாவும் கவினின் அம்மா அபிராமியும் உயிர் தோழியர். குடும்ப நட்பும்,  இருவரும் ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம் என்று வளர்ந்ததால் அவர்களின் நட்பு கல்லூரியிலிருந்தே காதலாய் மாறியது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளப்போகின்றனர்.

 முன்பெல்லாம் கவினும் கலாவும் அலைப்பேசி நிருவனத்திற்கு பெருத்த லாபம் ஈட்டித்தருவார்கள். மணிக்கணக்கில் பேசுவார்கள். கலாவுக்கு காலை வணக்கம் சொல்லாமல் கவினின் பொழுதும் அதை கேட்காமல் கலாவின் பொழுதும் விடியாது. அதை கலா மிகவும் ரசித்தாள். போகப்போக பேசும் நேரம் மிகவும் குறைந்து போனது. காலை வணக்கம் சொல்வதும் நிறுத்தப்பட்டது.

 கவின் பெங்கலூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்திலும் கலா அதே நிறுவனத்தின்  சென்னைக்கிளையில் பணிபுரிந்ததால் பார்த்துக்கொள்ளும் நேரங்கள் குறைவுதான். தொலைப்பேசிதான் அவர்களுக்கு எல்லாம். ”நீ எனக்கு காலை வணக்கம் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது சொல்லு” என்று கவினுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவன் சொல்லவில்லை. நாட்கள் போகபோக அவள் மனம் வேதனையும் கோபமும் கொண்டது. அதனால்தான் இந்த சலிப்பெல்லாம்.

மனதில் எரிச்சல் மூண்டாலும், கடமையின் காரணமாக அலுவலகம் கிளம்பிச் சென்றாள் கலா. மாலையில் அவளை அழைத்த கவின் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு வெகுநேரம் பேசினான். அவள் மனதுக்கு நெருக்கமான வகையில் கலா நினைத்தபடி உன்மையான அன்பொழுக பேசினான். இதுதான் நேரம் என்று நினைத்து கலா கேட்டே விட்டாள்.

"கவின் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்று கொஞ்சும் குரலில் கேட்டாள். "என்னமா" என்றான் அவனும் அன்புடன். "உங்களுக்கு உன்மையாவே என்னை பிடிச்சிருக்கா? எனக்கு எது பிடிக்கும்னு சொன்னாலும் நீங்க செய்யறதில்ல. ஒரு காலை வணக்கம்கூட சொல்லுறதில்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கவின். நான் உங்கள் அன்பை பெரிதும் இழக்கிறேன்" என்றாள் அழுகையை அடக்கியபடி.

"ஒரு விஷயம் நடக்கலனா அது ஏன் நடக்கலனு யோசிச்சுப்பாரு. நான் உனக்கு உர்ச்சாகமான குரலில் காலை வணக்கம் சொல்லும்போது நீ மெதுவான குரலில் சோர்வாக சொன்னால்  எனக்கு எப்படி சொல்லத்தோனும்? நீ எந்த மனநிலையில் இருக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும். அதனால்தான் பெரும்பாலும் நான் சொல்வதில்லை." "சரி இதற்கு பதில்  நேரில் சொல்கிறேன்" என்றாள் கலா.

அதன்பிறகு 2 வாரங்கள் கழித்து ஒரு பூங்காவில் காலை 10 மணியளவில் இருவரும் சந்தித்தனர். சிறப்பான அலங்காரத்துடன் வந்திருந்தாள் கலா. கலாவின் கண்களுக்காக மட்டுமே தன்னை பார்த்து பார்த்து அழகு செய்துகொண்டு வந்திருந்தான் கவின். மல்லிகை பூச்சரத்தை நீட்டி காலை வணக்கம் சொல்லி கலாவை ஏறிட்டான் அவன்.

அவள் முகம் நானத்தால் சிவந்து விழிகள் மூடின. குரல் காற்றில் கலந்தபடி மெதுவான காலை வணக்கத்தை அவள் இதழ்கள் வெளியிட்டது. கவின் அந்த அழகு முகத்தையும் அவனுக்காகவே தேக்கிவைத்து வைத்து தினமும் காலை வெளியிட்ட அந்த மோன நிலையை அவன் அலைப்பேசியில் பதிவு செய்து கொண்டான். திரும்ப திரும்ப பார்த்தான். சே இதையா சோர்வு கவலை என்று நினைத்தேன்? கலாவின் கன்னத்தை கிள்ளி மன்னிப்பு வேண்டி இனி இந்த வெட்கத்திற்காகவே தினமும் சொல்கிறேன் என்ற வாக்குறுதி தந்தான்.

அன்றிரவு அந்த புகைப்படத்தை அவன் நாட்குறிப்பில் ஒட்டிவிட்டு, காதலியின் நானச்சிறையில் காலை வணக்கம் கூடவா அடைப்பட்டுவிட்டது? என்று எழுதினான்.

முற்றும்.












 

Saturday, 3 April 2021

’உயிரிலே கலந்தவள்.’


காலை ஏழுமணிக்கே கண்விழித்து, முதல்வேலையாக தன் பக்கத்துவீட்டு உயிர் தோழியான கமலியைக் காணச் சென்றுவிட்டாள் லில்லி. பக்கத்து வீடு என்பதால் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே அவரவர் வீடு செல்வர். மற்றபடி, 5 வயது லில்லியும் 3 வயது கமலியும் இணைபிரியா தோழிகள். 7 வயது மகள் பூந்தளிரும் 5 வயது மகள் லில்லியும் பூவிழிராஜன் பூங்கொடி தம்பதியர் பெற்ற இரண்டு தங்கங்கள். பூவிழிராஜன் கூலிவேலை செய்ய, பூங்கொடி இல்லத்தரசியாக கோலோச்சுகிறாள்.

“வாடா லில்லிகுட்டி கமலி பாப்பா இன்னும் எழுந்துக்கலை. அவ எழுந்துக்குறதுகுள்ள நாம போய் பால் வாங்கிட்டு வரலாம் வா” என்று கமலியின் பெரிய அக்கா செவ்வந்தி அவளைத் தூக்கிக்கொண்டு பால் பூத்திற்குச் சென்றாள். கமலிக்கு ஒரு வயதாகியிருக்கும் நிலையில், உடல்நலக்கேட்டால் அவள் தந்தை முத்தழகன் தவறியிருக்க; நர்சிங் படித்த தாய் முல்லையோ ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து தன் மாமியாரின் உதவியுடன் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்கிறாள். பால் வாங்கிக்கொண்டு வந்தபோது கமலி தூங்கி எழுந்துவிட்டிருந்தாள். லில்லியை அவளுடன் விளையாடவிட்டுவிட்டு செவ்வந்தி அவள் முதல் தங்கை ரோஜாவுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.

காலையில் தொடங்கிய அவர்களின் விளையாட்டு மதியம் ஒருமணிக்கு கமலியின் பாட்டி குறிஞ்சி உணவு உண்ண அழைத்தபோதுதான் முடிவுக்கு வந்தது. சாதத்தில் சர்க்கரைக் கலந்து சாப்பிட வேண்டுமென்று கமலி அடம்பிடிக்க, லில்லி அவளை கேலி செய்து சிரித்தாள். லில்லியையும் பாட்டி சாப்பிடச்சொல்ல, அவள் தன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு வருவதாக சொல்லிவிட்டு ஓடினாள். வீட்டிற்கு வந்தவள் கமலி சாதத்திற்கு சர்க்கரைக் கேட்டதை தாய் பூங்கொடியிடம் சொல்லிச் சிரித்தபடி சாப்பிட்டு முடித்தாள்.

மீண்டும் தொடங்கிய விளையாட்டில் சிறிதுநேரத்திலேயே செவ்வந்தியும் ரோஜாவும் சேர்ந்துகொள்ள, இரவுவரை அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது. ஒருகட்டத்திற்குமேல் பொறுக்கமுடியாத கமலியின் பாட்டி தன் மூன்று பேத்திகளின் கண்களில் துளியோண்டு அமர்தாஞ்சலத்தைத் தடவ, அவர்கள் அழுதுகொண்டே உறங்கிவிட்டனர். அவர்கள் உறங்கிய பின்னரே வீட்டிற்கு வந்த லில்லியும் எப்போதடா காலை வரும் கமலியைப் பார்க்க என்று நினைத்தபடி உறங்கினாள்.

இப்படியே இரண்டு வருடங்களும் பசுமையாகக் கழிய, ஒருநாள் கமலியின் குடும்பம் அவர்கள் வீட்டைக் காலி செய்துகொண்டிருந்தனர். லில்லியால் அவர்களின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. கண்களில் ஏக்கம்வழியப் பார்த்திருந்தாள். இயல்பிலேயே லில்லிக்கும் கமலிக்கும் அபார ஞாபகசக்தி இருந்ததால் இந்த இரண்டு வருட நட்பும் அதன் நினைவுகளும் அவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பொருட்களனைத்தும் பேக் செய்துவிட்டதால் ரோஜா லில்லியின் கரும்பலகையைக் கேட்டாள். மறுக்காமல் லில்லி எடுத்துவந்து தந்தாள். அவர்கள் காலி செய்த சில மாதங்களிலேயே லில்லியின் குடும்பமும் காலி செய்துவிட, இரு குடும்பத்திற்கும் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிற்று.

லில்லி எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது கமலி தன் அன்னையுடன் லில்லியைக் காண வீட்டிற்கு வந்தாள். “இந்தக் கமலி பாப்பா லில்லியைப் பார்த்தே ஆகனும்னு அடம்பிடிச்சது. நீங்க இங்க பக்கத்து தெருவில்தான் இருக்கிங்கன்னு கேள்விபட்டேன். அதுதான் வந்தோம்” என்றாள் முல்லை. பூங்கொடி சிரித்தபடி அவர்களுக்கு தேநீர் கொடுத்தாள். “லில்லிக்கும் கமலின்னா கொள்ளைப் பிரியம். இன்னும் மறக்காம அவளைப் பற்றியே பேசிட்டிருப்பா” என்று தன் மகளின் தலையைச் செல்லமாகக் கோதினாள் பூங்கொடி. லில்லிக்கும் கமலிக்கும் தங்கள் நட்பை நினைத்துப் பெருமையாக இருந்தது.

பேசுவதற்கு நிறைய இருந்தாலும் இருவரையும் வெட்கம் தடுத்தது. புதிதாகப் பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. சிறிதுநேரத்தில் கமலி கிளம்பிவிட, லில்லிக்கு துக்கமாக இருந்தது. அதன்பிறகு பலவருடங்கள் தோழியர் இருவரும் சந்திக்கவே முடியவில்லை. லில்லி பள்ளிப்படிப்பும், பட்டப்படிப்பும் முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறாள். ஊடகத்துறையில் ஒளித்திருத்துபவரான முகிலரசனுடன் திருமணமாகியிருந்தது. 

லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. தன் நண்பர்கள் அனைவரிடமும் கமலியுடனான நட்பைச் சொல்லி மகிழ்வாள். வாடகை வீட்டில் வசித்ததால் ஊர் மாறி ஊர் சென்றதில் மறுபடியும் சந்திக்கமுடியவில்லை. முகவரியைத் தொலைத்தவர்களால் அகத்தில் மலர்ந்த நட்பைத் தொலைக்கமுடியவில்லை. கமலி என்ற பெயரைக் கேட்டாலே லில்லி அவர்களின் பின்னணியை விசாரித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள்.

சிறுவயது தோழி கமலியின்மீது வைத்துவிட்ட அலாதி பாசத்தினாலேயே லில்லிக்கு தன் அலுவலகத் தோழியான கமலியை ரொம்ப பிடிக்கும். அவள் என்ன தவறு செய்தாலும் அவளை மன்னித்து அப்படியே ஏற்றுக்கொள்வாள். முகநூலில் கமலியின் விவரங்களைப் பகிர்ந்தும் கமலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. தன் தோழி கமலி எங்கேயோ சந்தோஷமாக இருக்கிறாள். எப்படியாவது அவளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்போடு லில்லி தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தாள். தாய் வீட்டில் சிறிது நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாமென்று வந்திருந்த வேளையில் ஒருநாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. லில்லி நிதானமாக எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு காலை உணவையும் உண்டுவிட்டு டீவி பார்ப்பதும், அலைபேசியில் தன் கணவனுடன் சேட் செய்வதுமாக  நேரத்தை நகர்த்திக்கொண்டிருந்தாள். தந்தை பூவிழிராஜன் காலையிலேயே வெளியே சென்றுவிட்டிருக்க, தாய் பூங்கொடியும் லில்லியும் மட்டுமே வீட்டிலிருந்தனர். பூந்தளிரை விழுப்புரத்தில் தனியார் அலுவலகத்தில் பெரிய பதவியிலிருக்கும் பூவண்ணனுக்கு மணமுடித்திருந்தனர். மதியம் ஒருமணிக்குமேல் “லில்லியம்மா,” என்று அழைத்தபடி சிலர் உள்ளே வந்தனர். யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் போல என்று லில்லி தன் அறையில் அமர்ந்தபடி நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே அவர்கள் லில்லியின் அறைக்கே வந்துவிட்டிருந்தனர்.

“லில்லி, என்னை யார்னு தெரியுதா?” என்று கேட்டவளை லில்லி சற்றுநேரம் உற்றுநோக்கிவிட்டு தெரியவில்லை என்றாள். ”நாந்தான் ரோஜா கமலியின் அக்கா” என்றதும் லில்லியால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. இன்ப அதிர்ச்சி தாக்கியதில் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். “வாங்க அக்கா. எப்படி இருக்கிங்க?” “நல்லா இருக்கேன். நீ எப்படிமா இருக்க? இவன் என் தம்பி கணியமுதன். இவங்க என் குழந்தைகள்” என்று ரோஜா தன்னுடன் வந்தவர்களை அறிமுகபடுத்தினாள். லில்லிக்கு கணியமுதனைத் தெரியாதபோதும் அவர்களின் உறவுக்காரனாக இருப்பான் போல என்று எண்ணிக்கொண்டு ஒரு ஹாய் சொல்லிவைத்தாள். ”அம்மா வரலையா அக்கா?” “அவங்களுக்கு கொஞ்சம் வேலைம்மா. இன்னொருநாள் வரேன்னு சொன்னாங்க.”

ரோஜா லில்லியின் படிப்பு மற்றும் வேலைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்பொழுதே கணியமுதன் செவ்வந்திக்கும் ஃபோன் செய்ய, அவளும் தன் குழந்தைகளுடன் ஆவலாய் லில்லியைக் காண வந்தாள். அவர்களையும் லில்லி அன்போடு உபசரித்தாள். இத்தனை வருடம் கழித்தும் தன் கமலியின் குடும்பம் அவள்மேல் அதே நேசத்துடன் இருப்பதை எண்ணி பெருமையாக இருந்தது லில்லிக்கு. அவர்களைப் பற்றி கேட்டபோது இங்குதான் பக்கத்து தெருவில் அவர்களது மாமியார் வீடு என்றனர். எங்கெங்கோ அலைந்துவிட்டு மறுபடியும் பக்கத்து பக்கத்து தெருவிலிருந்தும் இத்தனை வருடம் பார்க்கமுடியவில்லை என்பதைச் சொல்லிச் சிரித்துக்கொண்டனர். ”நேத்து அம்மாவை கோவிலில் பார்த்தேன்மா. அதுதான் அவங்ககிட்ட வீடு எங்கேன்னு கேட்டேன். இங்கேயே இருந்ததால இன்னைக்கே உன்னைப் பார்க்கலாம்னு வந்தோம்” என்றாள் ரோஜா.

“நீ ரொம்ப வருஷமா தேடிட்டு இருந்த உன் தோழியை உன்கிட்ட கொண்டுவந்து சேர்த்துட்டேன் பார்த்தியா?” என்று சிரித்தாள் லில்லியின் தாய் பூங்கொடி. அனைவரும் சிரிக்க, நேரம் அழகாக கழிந்தது. ”கமலி எங்கே அக்கா? அவ ஏன் வரலை? என்னை மறந்துட்டாளா?” லில்லியின் ஆர்வத்தைப் பார்த்த ரோஜா சிரித்துக்கொண்டே, “அவ உன்னை மறக்குறதா? நீ வேறம்மா. அவ உன்னைப்பத்தி பேசாத நாளே இல்லை. அவளை தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருக்கோம். இன்னும் இரண்டு வாரம் கழிச்சு இங்க வருவா” என்றாள். “பாட்டி எப்படி இருக்காங்க அக்கா?” “பாட்டி இறந்துட்டாங்க” என்றான் கணியமுதன்.

“நான் கமலியை எங்கெல்லாமோ தேடினேன். முகநூலில் அவள் விவரங்களைப் பகிர்ந்தேன். ஆனால் முழுத் தோல்வி எனக்கு.” அதற்கு கணியமுதன், “கமலியும் அப்படித்தான். ஏதோ ஒருவிதத்தில் அவளைக் கவரும் பெண்களிடமெல்லாம் அவர்கள் பெயர் லில்லியா எனக் கேட்பாள். உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். வார்த்தையே வரவில்லை. அப்புறம் எனக்கு ஒரு காதலியிருக்கா. இன்னும் சில மாதங்களில் கல்யாணம். அவகிட்டையும் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கேன். அவளுமே உங்களைத் தேடினா. இப்போ அவகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா” என்றான். இவன் ஏன் இவ்வளவு ஆர்வமாக பேசுகிறான்? இவனை நான் இதற்கு முன் பார்த்ததாக நினைவே இல்லையே. இவனுக்கு எப்படி என்னைப்பற்றி தெரியும்? எப்படி என்னைப் பிடிக்கிறது? ஒருவேளை கமலி சொல்லியிருப்பாளோ என்று நினைத்துக்கொண்டாள் லில்லி.

அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்தாள் பூங்கொடி.  “கமலி ஃபோன் நம்பர் இருக்கா? தரமுடியுமா?” லில்லி ஆவலாய் கேட்டாள். கணியமுதன் எண்களைச் சொல்ல, அதை  சந்தோஷமாகவே தன் அலைபேசியில் பதிவு செய்துகொண்டாள். அதற்குமேல் லில்லியின் முழுகவணம் அவர்களிடத்தில் இல்லை. வெளியே கேட்பதற்கு மட்டும் பதில் உரைத்தாலும், உள்ளுக்குள் கமலியிடம் பேசும் தருணத்தைப்பற்றி கற்பனை செய்துகொண்டிருந்தாள். தன் குரலைக் கேட்டதும் கமலி எப்படி ரியாக்ட் செய்வாள். அவளிடம் என்ன பேசலாம்? என்று யோசித்தாள். “எல்லோரும் ஒருநாள் வெளியே சென்று வரலாம்” என்று செவ்வந்தி சொன்னபோது கமலியும் இங்க வரட்டும் சேர்ந்து போகலாம் என்றுவிட்டாள். “ஒருநாள் எங்க வீட்டுக்கு வாம்மா” என்று ரோஜா அழைத்தபோது கமலியுடன் அவர்கள் வீட்டில் செலவழிக்கப்போகும் நேரங்களை எண்ணி மகிழ்ந்தாள்.

பூங்கொடியிடம் சொல்லிவிட்டு கமலியின் குடும்பம் வாசலுக்குச் சென்றுவிட கணியமுதன் மட்டும் லில்லியின் அறையில் தேங்கிநின்றான். “லில்லி, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். யார்கிட்டையும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. உங்க அம்மா அப்பாகிட்ட கூட சொல்லக்கூடாது” என்று தயக்கமாகச் சொல்ல, லில்லிக்கு படபடப்பாக இருந்தது. “என்ன? என்ன சொல்லணும்?” என்றாள் பயத்துடன். “அது. வந்து. இப்போ கணியமுதன்தான் கமலி” என்றான். அவளுக்கு புரியவில்லை என்றாலும் ஏதோ விவரீதம் என்றுமட்டும் உள்ளுணர்வு சொல்லியது.

“என்ன சொல்றீங்க. எனக்கு புரியலை.” “கமலிதான்மா கணியமுதனா மாறியிருக்கா.” அப்பொழுதும் அவளால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒருவேளை கமலி இறந்துவிட்டாளா? அவள் ஆவி இவனுள் புகுந்துவிட்டதா? என்று நினைத்துக்கொண்டு, “ஏன் அப்படி?” எனக் கேட்டாள். “மருத்துவர்கள் ஆண்களுக்கான அறிகுறிகள்தான் அதிகம் தெரிகிறது. அதனால் அப்படி மாறிவிடுவதுதான் நல்லது என்றார்கள். எத்தனையோ மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே இந்த முடிவு” என்றபோதுதான் அவன் சொன்னதன் பொருள் புரிந்து அதிர்ந்தாள். உடல் நடுங்கியது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவனை நன்றாக பார்த்தாள். அவளால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் கண்களுக்கு அவன் ஒரு ஆணாக மட்டுமே தெரிந்தான்.கிட்டதட்ட 20 வருடங்களுக்குமேல் கடந்துவிட்டதால் லில்லிக்கு கமலியின் முகம் நினைவிலில்லை. அவள் பெயரும் அவளுடன் பழகிய நினைவுகளும் இதயத்தில் பதிந்த அளவு முகமோ சாயலோ பதியவில்லை.

திருநிறைச் செல்வி, திருமதி என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டிய என் கமலி திருநம்பியாக மாறிவிட்டாளா? கடவுளே என்ன கொடுமை இது? உள்ளுக்குள் வருந்தினாலும் மேலே விசாரித்தாள். “அப்போ கமலியைத் தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருப்பதாகச் சொன்னது?” ”அது. இந்த ஊர் உலகத்துக்கு. எங்க பேர் கெட்டுடக்கூடாதுன்னு அப்படி சொல்லி வெச்சுருக்காங்க. என்னால் உன்னிடம் பொய் சொல்லமுடியவில்லை. உனக்கு மட்டும் நான் என்னைக்கும் கமலிதான். உன்னைப் பார்த்ததும் கமலியா உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சிக்கணும் போல இருந்தது. நீ என்னைத் தேடினதைப் பற்றி தெரிஞ்சதும் கண் கலங்கிடிச்சு. ஆனா கணியமுதனா என்னால் எதையும் வெளிப்படுத்தமுடியலை.” “அப்போ நீங்க தந்த நம்பர்?” “அது என் நம்பர்தான்.” “நிஜமாவா?” “ஆமாம்மா. வேணும்னா அழைத்துப்பார்.”

சொல்லியவன் சாதாரணமாகக் கிளம்பிவிட, கேட்டவளோ பித்துப்பிடித்தவள் போல் அப்படியே அசையாமல் அமர்ந்துவிட்டாள். மேலே யோசிக்கவே பயமாக இருந்தது. இப்போ என்ன செய்வது? என்ற கவலை வேறு. தாய் பூங்கொடி அவளை சாப்பிட அழைத்தபோதுதான் சுயநினைவிற்கு வந்தவள் பாத்ரூமிற்குச் சென்று வெடித்து அழுதாள். நூற்றில் ஒன்றாக இது பொய்யாக இருக்கக்கூடாதா? கமலி என்னிடம் சும்மா விளையாடினேன் என்று சொல்லமாட்டாளா என்ற நப்பாசையில் வெளியே வந்து வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் கொடுத்த கமலியின் எண்ணிற்கு அழைத்தாள்.

கணியமுதன்தான் எடுத்தான். “சொல்லும்மா. இப்போ நம்புறியா?” “ம். என்னோட பழகிய நிகழ்வுகள் ஏதாவது ஞாபகம் இருக்கா?” “ஓ! இருக்கே!” “என்ன அது?” “நாம சின்ன வயசுல விளையாடும்போது கதவு லாக் பண்ணிட்டு திறக்கத் தெரியாம விழிச்சோம். கதவை ரொம்பநேரமா தட்டினோம். உங்க அப்பா வந்து சுவறேறி குதிச்சு திறந்துவிட்டு நம்மளை திட்டினார்.” இதற்குமேல் என்ன இருக்கிறது? என்னவென்று விசாரிப்பது? எப்படிப்பட்ட நிகழ்வு இது. எனக்கும் கமலிக்கும் மட்டுமான தனிப்பட்ட நிகழ்வு. இத்தனை வருடமானாலும் மறக்கமுடியாத நினைவு. அதை இவன் குரலில் கேட்கும்படி நேர்ந்துவிட்ட கொடுமையை என்னவென்று சொல்வது?  எங்கேயோ இருந்த தோழியைப் பக்கத்தில் காட்டிவிட்டு, என்பால் அவள் கொண்ட நேசத்தை நிறம் மாறாமல் திருப்பிக்கொடுத்துவிட்டு அதை முழுவதுமாக அனுபவிக்கமுடியாமல் செய்துவிட்டாயே விதியே! என்று வெதும்பினாள்.

”உன்னைப் பார்த்ததை எனக்கு தெரிந்த அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். என் வருங்கால மனைவி மலர்விழியிடமும் சொல்லிவிட்டேன். அவ உன்னைப் பார்க்க துடிக்கிறா. அப்புறம் எனக்கு தெரிஞ்ச ஒரு அக்காகிட்ட சொன்னேன். அவங்க என்னடா சின்ன வயசு தோழிய பார்த்த சந்தோஷக்களை அப்படியே உன் முகத்துல சொட்டுதேன்னு சொல்லி சிரிச்சாங்க” என்று சந்தோஷித்தான். லில்லியால் அவன் சந்தோஷத்தில் கலந்துகொள்ளமுடியாமல் வெறும் ம் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். “நானும்தான் என் நண்பர்களிடம் சொல்ல நினைத்திருந்தேன். ஆனா இப்போ என்னன்னு சொல்றது? சின்ன வயசு தோழி கிடைச்ச சந்தோஷத்தை சொல்றதா? அவ இப்படி ஆகிவிட்ட வருத்தத்தை சொல்றதா? எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டாள். என் கமலி எங்கேயோ ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு நினைச்சேனே! இப்படியாகுறவர எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ! யார் யாரெல்லாம் அவளைக் கேலி செஞ்சியிருப்பாங்களோ! அந்த நேரத்தில் நான் அவ பக்கத்தில் இல்லாமல் போனேனே!” என்று நினைத்து அழுதாள்.

லில்லியால் அந்த தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. கமலிக்கும் கணியமுதனிற்குமிடையில் அவள் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. இரண்டு மூன்றுமுறை கணியமுதனும் மலர்விழியும் லில்லியின் வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்தனர். கணியமுதன் சொன்னதைப் போல் மலர்விழிக்கும் லில்லியைப் பார்த்ததில் சந்தோஷமே.

கணியமுதனைப் பற்றி தெரிந்துகொள்ள லில்லி மலர்விழியிடம் தனியாக அலைபேசியில் பேச நினைக்க, கணியமுதனும் மலர்விழியின் எண்ணைக் கொடுத்தான்.. அந்த அலைபேசி உரையாடலில் கணியமுதனின் பதினைந்தாவது வயதில்தான் அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தது. மலர்விழிமேல்கொண்ட அலாதி காதலே கணியமுதனின் இந்த மாற்றத்திற்குக் காரணமென்று மலர்விழி சொல்ல, லில்லி கொதித்துப்போனாள். வேறு வழியில்லாமல் நடந்ததாக இதுவரை நினைத்திருந்தது வேண்டுமென்றே நடந்ததாக மலர்விழி சொல்வதை லில்லியால் ஏற்கமுடியவில்லை. “அப்படி அவளும் அவள் காதலும்தான் முக்கியமென்றால் அதன்பிறகு என்னை ஏன் சந்திக்க வேண்டும்? என்னை ஏன் இப்படி இரண்டிற்குமிடையில் தவிக்கவிட வேண்டும்? என் கமலி எங்கேயோ இருக்கான்னு நான் நிம்மதியா இருந்திருப்பேனே! அவன் காதல் என் நட்பை மறைச்சுடுச்சா? சே இவன் என் கமலி இல்லை! என் கமலியாக இருந்தால் இப்படி செய்வாளா?” என்று மனதிற்குள் கோபம் கொண்டாள்.

அதன்பின் வந்த நாட்களில் லில்லி கணியமுதனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க நினைத்தாள். பேசுவதைத் தவிர்த்தபோதும் லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. கமலி மட்டும் இருந்திருந்தால் இப்படியா வீட்டிலிருப்போம்? எப்படியெல்லாம் அரட்டையடிப்போம், ஊர் சுற்றுவோம், கடைக்குப்போவோம் என்று வருந்தினாள். லில்லியொன்றும் திருநம்பி திருநங்கைகளை தவறாக நினைக்கும் ரகமல்ல. சகமனிதர்களாக அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் மனம் கோனாமல் பழக வேண்டுமென்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் கமலியின் இடத்தில் கணியமுதனை வைத்துப்பார்க்க அவளுக்கு மனம்வரவில்லை. கமலிமேல் வைத்திருக்கும் அதே நேசத்தை கணியமுதன்மேல் வைக்கவும் முடியவில்லை. நன்கு யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள் லில்லி. அது. கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரிப்பது என்று!

கணியமுதனிற்கு அழைத்தாள். பரஸ்பர நலம்விசாரிப்பிற்கு பின் “கணியமுதன், நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” “கேளும்மா.” “நீங்க மலர்விழிக்காகவும் அவங்கமேல வெச்சிருக்க அன்புக்காகவும்தான் இப்படி மாறிட்டீங்களா?” “இல்லம்மா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. அவளும் அப்படித்தான் நினைச்சிருக்கா. ஆனா நான் மருத்துவர் சொல்றதைக் கேட்டுதான் இப்படி செஞ்சேன். வேற எந்த காரணமும் இல்லைம்மா.” லில்லிக்கு யார் சொல்வது உண்மை என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. இதைப் பற்றி மேலே ஆராயவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டாள். அவள்தான் புது முடிவை எடுத்துவிட்டாளே! அதை கணியமுதனின் மனதை புண்படுத்தாமல் சொல்ல வேண்டுமே என்ற யோசனை மட்டும்தான் அவளுக்கு.

“கணியமுதன், நான் ஒன்னு சொன்னா தவறா நினைச்சிக்கமாட்டீங்களே?” “சொல்லும்மா.” “அது. நான் கமலிமேல் நிறைய அன்பு வெச்சுருக்கேன். அவ என் தேவதை. இத்தனை வருஷமா என் கமலி எங்கேயோ சந்தோஷமா இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தேன். மன்னிச்சிடுங்க கணியமுதன். உங்களை என்னால் கமலியாக நினைத்துப்பார்க்கமுடியவில்லை. உங்களை நான் கணியமுதன் என்ற புதிய நண்பனாக நிச்சயம் ஏற்கிறேன். ஆனால் உங்களை கமலியாக நினைக்கவோ அல்லது அவள்மேல் வைத்திருக்கும் அதே அளவு பிரியத்தை உங்கள்மீது வைப்பதோ என்னால் முடியாது. என் கமலிக்குன்னு ஒரு தனி இடம் இதயத்தில் இருக்கு. அது அவளுக்கு மட்டும்தான். நா சொன்னது தவறா இருந்தா மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” “பரவாயில்லைமா நீ கமலிமேல் எவ்வளவு பாசம் வெச்சுருக்கன்னு புரியுது. அந்த பாசம்தான் உன்னை இப்படி பேசவைக்குது. நீ என்னை எப்படி நினைத்தாலும் எனக்கு பரவாயில்லை. உன்னைப் பார்த்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி. உன் நட்பு மட்டும் இருந்தால் அதுவே போதும்” என்றான். அவனுக்கும் அவள் மனநிலை நன்கு புரிந்தது. கமலியாக இருந்த தன்மேல் அவள்கொண்ட அலாதி அன்பை நினைத்து கண்கள் கலங்கியது.

சிறிதுநேரம் பேசிவிட்டு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு அலைபேசியை அணைத்தாள். மீண்டும் கமலியின் நினைவில் ஒருபாட்டம் அழுது தீர்த்தவள், கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரித்தாள். கணியமுதனை தன் புதிய நண்பன் என்று இதயத்திற்கு கட்டளைப் பிறப்பித்தவள், கமலியைத் தன் உயிரில் கலந்து கரைத்துவிட்டிருந்தாள். இனி அவள் இயல்பாக இருப்பாள். கணியமுதனுடன் சாதாரணமாக பேசி பழகுவாள். அவளைப் பொறுத்தவரை கணியமுதன் என்ற நண்பன் வேறு. உயிரோடு உயிராய் கலந்துவிட்ட அவள் தோழி கமலி  வேறு!



 

Monday, 29 March 2021

’மது கிண்ணத்தில் மங்கையின் கண்ணீர்.’

நேரம் காலை பத்தை நெருங்கிக்கொண்டிருக்க, பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள். தாய் மாலதி கொடுத்த காலை டிஃபனையும் மறுத்துவிட்டாள். அவள் ஏனென்று கேட்டதற்கு ஃப்ரன்ஸ் பார்ட்டி கொடுக்குறாங்க என்று மட்டுமே சொல்லிவிட்டு ஓடினாள். சமீபத்தில் அவள் மேற்கொண்டிருக்கும் புதிய பழக்கம் இன்னும் வேகத்தையும் ஆர்வத்தையும் கூட்ட, தன் வெளிநாட்டுக் காரில் பறந்தாள் 25 வயதே பூர்த்தியான மதுமிதா.

மதுமிதா ராஜசேகரன் மாலதியின் ஒரே பெண். அடையாரில் பிரபலமான நகை வியாபாரி என்பதாலும், பரம்பறை சொத்தே கோடி பெறும் என்பதாலும் மதுமிதாவிற்கு பணத்தைச் செலவழிப்பதெல்லாம் தண்ணிப்பட்ட பாடு. ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் செலவழித்தபோதும், அவள் கண்களில் கண்ணீரோ நெஞ்சில் வருத்தமோ என்றுமே கொண்டதில்லை. அதற்காக ராஜசேகரனும் மாலதியும் நவீன நாகரீகத்தில் ஊறியவர்கள். பெண்ணிற்கு செல்லம் கொடுத்தே சீரழித்துவிட்டனர் என்றும் சொல்லிவிடமுடியாது.

நேர்மைக்குப் பேர்போன இருவரும், தங்கள் பெண்ணும் தங்களைப் போலவே இருப்பாள் என்று தப்புக்கணக்குப் போட்டனர். அளவுக்கு மீறிய சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு, அருமைமகள் அதைத் தப்பாகப் பயன்படுத்தமாட்டாள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையைத் தூள் தூளாக்கிய மதுமிதாவின் தவறா? அல்லது அளவான சுதந்திரத்தை அளிக்காத பெற்றோரின் தவறா? இவர்களில் யார் செய்த தவறோ, ஒரு குடும்பமே அழியக் காரணமாகிவிட்டது.

மனைவி தெய்வானைக் கொடுத்த பழைய சாதத்தையும் பச்சைமிளகாயையும் அமிர்தமாய் எண்ணி உண்டுமுடித்த நாச்சிமுத்து, அவளைத் தன் அருகில் இழுத்து ரகசியமாய் ஒரு பெரிய ஆசையை வெளியிட்டுவிட்டுக் கிளம்பினார். அவர் வெளி வாசலை அடைந்ததும், அவர் பெற்ற மூன்று செல்வங்களும் வழிமறித்து மனு கொடுக்க ஆரம்பித்தனர்.

”அப்பு, நாளைக்கு காலேஜ்ல சேர அப்லிகேஷன் வாங்கப் போவோமா? தேதி முடிஞ்சிடும். அப்புறம் சீட் கிடைக்காது அப்பு. கைல கண்டிப்பா ஒரு 2000ஆவது இருக்கனும் அப்பு” என்றான் அவரின் மூத்தமகன் முத்துப்பாண்டி. கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவன் தலையை வருடி, “சரிய்யா. கண்டிப்பா போவோம்” என்றார் கட்டிட வேலை செய்யும் நாற்பது வயதைத் தாண்டிய நாச்சிமுத்து.

“அப்பு, எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்க. ஒரு 500 ரூபா தரியா? நானும் டூர் போகவா? ஆசையா இருக்கு அப்பு” என்று எதிர்பார்ப்பே உருவாய் கேட்டான் இளயமகன் துரைச்சாமி. மூத்தமகனைப்போல், அவனையும் செல்லம் கொஞ்சிவிட்டு சரி என்று ஒப்புதலளித்தார். கடைக்குட்டி மல்லிகாவோ, கோடைக்காலத்திற்கு ஏதுவாய் பலாப்பழமும் நொங்கும் கேட்க, “என் செல்லச் சர்க்கரைக்கட்டி. நீ கேட்டு நான் மாட்டேனு சொல்வேனா? கண்டிப்பா வாங்கியாரேன் என்றார் சிரிப்புடன்.

மூவரின் மனுவையும் ஏற்றுக்கொண்டு, மனைவிக்கு என்ன வேண்டும் என்பதைப்போல் அவளைத் திரும்பிப்பார்க்க, அவள் கண்களில் காதலைத் தவிர வேறெதையும் அவரால் காணமுடியவில்லை. தன் இனிய குருவிக்கூட்டைக் கண் நிறைய நிறப்பிக்கொண்டு, வேலைக்குக் கிளம்பினார் அந்தப் பாட்டாளி.

வீட்டிலிருந்து சீறிப்பாய்ந்த மதுமிதாவின் கார் ஒரு உயர்தர மதுபாணக்கடையின் முன்பு நின்றது. ஆம்! சமீபத்தில் அவளுக்கு வந்திருக்கும் புதிய பழக்கம் மது அருந்துவதுதான்! அவளுக்காகவே காத்திருந்த இரண்டு ஆண் நண்பர்களும், 3 பெண் தோழிகளும் சேர்ந்து முடிந்தமட்டும் மது அருந்திவிட்டு மதியம் 3 மணிவரை கொட்டம் அடித்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், பீச், பார்க் டிஸ்கோதே என்று இரவு பத்துமணிவரை ஊர் சுற்றிவிட்டு கடைசியாய் ஒரு ரௌண்ட் மதுவையும் அருந்திவிட்டே கடனே என்று வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குக் கிளம்பிய மதுவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லியே அனுப்பிவைத்தனர் சற்று நிதானத்திலிருந்த நண்பர்கள். என்ன பயன்? காரை எடுத்த மதுவிற்கு நேரம் செல்ல செல்ல கண்கள் சொருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல தான் நிதானமிழக்கிறோம் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி காரை ஓட்டினாள். நிதானம் முழுவதுமாய் இழப்பதற்குள் வீட்டை அடைய வேண்டுமென்று நினைத்தவள் காரை முழுவேகத்தில் பறக்கவிட்டாள்.

கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற கார் நடைபாதையருகே அப்பாவியாய் நடந்து சென்றுகொண்டிருந்தவர்மேல் முழுவீச்சில் மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதைந்து, உறுப்புகள் ஆங்காங்கே சிதறி, பூமித்தாய்க்கு உடனடி இரத்த அபிஷேகம் நடக்க, துள்ளத்துடிக்க அந்த உடலைவிட்டு வெளியேறியது உயிர் பறவை. இடிக்கப்பட்டவர் இடுகாட்டில். இடித்தவளோ காற்றுப்பையில் பத்திரமாய். கார் மோதிய அடுத்தநொடி அதிலிருந்த ஏர்பேக் வெடித்து மதுவை தனக்குள் அடைத்துக்கொண்டு வெளியே குதித்து காப்பாற்றியது.

இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட கொடூரத்தில், மதுவின் போதை முழுவதுமாய் இறங்கிவிட்டிருக்க, அதிர்ச்சியில் சற்றுநேரம்  உரைந்திருந்தவள், கணநேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவள், எதுவும் நடக்கவில்லை என்று மனதிற்குள் உறுபோட்டவாரே உறங்கிவிட்டாள். பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்ததால் அந்நேரத்தில் அவளைக் கேள்விகளால் துளைக்கவும் ஆளில்லாமல் போயிற்று.

உறங்கியவளை விதி விட்டுவிடுமா? சிசி டீவியின் உபயத்தால் அடுத்தநாள் காலையே மதுவின் ரகசியம் அம்பலமாகிவிட, தாய் தந்தையர் அவளை அடித்து துவைத்தனர். ஆனால் அழுதே பழகியிராத மதுவிற்கோ வலித்ததே தவிர, அழுகை வரவில்லை. அதற்கும் சேர்த்தே வாங்கிக்கட்டினாள்.

எவ்வளவு அடித்தும் ஆத்திரம் குறையாத ராஜசேகரன், தான் பெற்ற மகளின் மீது தானே வலிய சென்று புகார் கொடுத்துவிட்டார். தாய் மாலதியும் அதைத் தடுக்கவில்லை.  உள்ளே சென்ற மதுமிதாவோ சிறிது நாட்களிலேயே நண்பர்களின் செல்வாக்கில் வெளியே வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவளை கண்டுகொள்வாரில்லை. அவளின் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதால் வெளியே செல்லவும் வழியின்றி வீட்டு சிறையில் கைதியானாள்.

சிறைக் கைதிக்கு எதற்கு வகைதொகையான உணவு? எளிய உணவை மட்டுமே கொடுக்கும்படி வேலையாட்களுக்கு உத்தரவிட்டுவிட்டாள் மாலதி. பாலும் தயிரும், பருப்பும் நெய்யும் உண்டு பழகிய மதுவிற்கு காரசாரமான எளிய உணவு தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ததில், உணவு உண்பதையே முடிந்தவரை தவிர்க்க ஆரம்பித்தாள். இத்தனைத் துன்பத்திலும் மதுவின் கண்கள் மட்டும் நனையாமல் அப்படியே இருந்தது. அவள் தவறின் வீரியத்தை ஆழ்மனம் இன்னும் உணரவில்லை போலும்.

சிறிது நாட்கள் கழித்து ஓர் மாலை வேளையில் மதுவை பெற்றோர் அவர்களுடன் வெளியே அழைத்தனர். மறுப்பின்றி அவளும் அவர்களுடன் கிளம்பினாள். கார் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. மாலதி கதவை இரண்டுமுறை மெல்ல தட்டிவிட்டு காத்திருக்க, கதவைத் திறந்தாள் ஓர் சிறுமி. மதுவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் நின்று கொண்டனர் பெற்றவர்கள்.

உள்ளே சென்ற மது வீட்டைச் சுற்றி கண்களைச் சுழலவிட, மின்சாரம் தாக்கியதைப்போல் அதிர்ந்து நின்றாள். பயத்தில் இதயம் படபடவென்று அடித்தது. வீட்டின் ஒரு மூளையில் சட்டத்திற்குள்ளிருந்து தன் குடும்பத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் நாச்சிமுத்து. ஆம்! குருவிக்கூட்டின் தலைவனான அதே நாச்சிமுத்து! தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு, நண்பர் ஒருவரைச் சந்தித்து பிள்ளைகளின் தேவைக்காக பணம் ஏற்பாடு செய்துவிட்டு, கடைக்குட்டியான அவர் பெண் மல்லிகா கேட்ட பழங்களையும், காதல் மனைவிக்கு காதல் பரிசாய் மல்லிகைப்பூவையும் வாங்கிக்கொண்டு நிறைவான மனதுடன் வீட்டை அடைவதற்காய் நடந்து வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கோர விபத்து நடந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் வீதி விபத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, கருணையுள்ளம் கொண்ட ஓர் மனிதர் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஆம்புலன்சையும் போலீசையும் அழைத்தவர், அவர்களுடன் சேர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, நாச்சிமுத்து பர்சிலிருந்த முகவரிக்கு அவர் சடலத்தை எடுத்துச் சென்றார். விஷயத்தைக் கேட்ட அடுத்தநொடி வீடே அதிரும்படியான அழுகுரல் எழுந்தது. அன்புச் சங்கிலியின் முதல் கண்ணி அறுந்துவிட்டதே! ஆலமரத்தின் ஆணிவேர் சாய்ந்து அவர்களின் சந்தோஷத்தை அடியோடு வீழ்த்திவிட்டதே!

சடலத்தைச் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்ததெனப் புறப்படாமல், தெய்வானைக்குத் துணை நின்று இறுதிச் சடங்குகளை முடித்து, அவர்களுக்கு தன் முகவரியைக் கொடுத்துவிட்டு, உதவி வேண்டுமென்றால் தயங்காமல் அழைக்கும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கால் வயிறும் அரை வயிறுமாய் அவர்கள் நாட்களைக் கடக்க, ஒருநாள் மதுவின் பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். முதலில் கோவத்துடன் பேசிய அனைவரும், தங்களின் எதிர்காலத்தை எண்ணி பயத்தில் கதறினர். அவர்களைத் தேற்றி, தெய்வானைக்கு நல்ல சம்பளத்தில் முழுநேர வேலையும், மூத்தமகன் முத்துப்பாண்டிக்கு பகுதிநேர வேலையும் போட்டுக்கொடுத்துவிட்டு, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்ல வேண்டியதற்கான அவசியத்தையும் தைரியத்தையும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

அப்போது சென்றவர்கள்தான் இப்போது மகளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ”வாங்க ஐயா. வாங்கம்மா.” தெய்வானை அவர்களை அன்போடு உபசரித்தாள். அவர்களும் தெய்வானையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்களின் நலனை விசாரித்தவாரே உள்ளே வந்து அமர்ந்தனர். அதுதான் எளியவர்கள்! விரோதியாகவே இருந்தாலும் தங்களால் தரமுடிந்த மன்னிப்பை யாசிப்பவர்களிடம் ஒரு கட்டத்திற்குமேல் பகைமைப் பாராட்டமாட்டார்கள். வாழ்க்கையின் பின்னே ஓட சலிக்காதவர்களுக்கு பகையின் பின் ஓடுவது பெறும் சலிப்புதான். மகள் செய்த தவறுக்கு நேர்மையான பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம். அதுவுமில்லாமல் பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்துத் தன்மானத்தைச் சீண்டாமல், தாங்களே தங்கள் வாழ்வை வாழ வழிகாட்டியவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்தது.

தெய்வானையின் உபசரிப்பில் அதிர்விலிருந்து மீண்ட மதுமிதா “என்னை மன்னிச்சிடுங்க. தவறு நடந்துடுச்சு. தெரியாம செய்துட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் கல்யாண பொறுப்பை நான் ஏத்துக்குறேன்” என்றாள். அவள் பெற்றோரை இவர்களுக்கு முன்பே தெரிந்ததால் பண உதவிகள் செய்திருப்பார்கள் என்று நினைத்திருப்பாள் போலும்.

தெய்வானை சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் மௌனிக்க, அந்த இடைப்பட்ட வேளையில் முத்துப்பாண்டி மதுவிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினான். அவள் அதிர்ந்து என்ன இது? எனக் கேட்க, ”வாங்கிக்கோங்க. இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொன்னாங்க. நீங்க வருவிங்கன்னு உங்களுக்காக வாங்கி வெச்சோம். நல்ல சரக்கு. குடிங்க” என்றான். அவள் அதைக் கையில் வாங்கி வெறித்துப் பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பெற்றோரையும் தெய்வானையையும் மாறி மாறி பார்த்தாள்.

தெய்வானை மெல்ல வாய் திறந்தாள். “நீ சொன்ன படிப்பு, வேலை, கல்யாணம் இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். ஒரு பைசா செலவில்லாம செய்ய வேண்டிய விஷயத்தைச் சொல்றேன் செய்யறியாம்மா?” “சொல்லுங்க.” எங்க வீட்டுக்காரோட கடைசி ஆசையை நீ நிறைவேத்தி வைக்கனும். முடியுமா?” ”என்ன ஆசை?”

ஒரு நிமிஷம். தெய்வானை உள்ளே சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தாள். “இது என்ன தெரியுமா? நான் மணக்க மணக்க வெச்சிருக்க பச்சமொச்ச கச்ச கருவாட்டுக் குழம்பு. எங்க வீட்டுக்கார் போகும்போது. ”இந்தா புள்ள, நீ பச்சமொச்ச கச்ச கருவாட்டுக்குழம்பு வெச்சு எம்புட்டு நாளாச்சு. இன்னிக்கு வையி புள்ள. சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. நாள் முச்சூடும் மாடாட்டம் ஒழைச்சிட்டு சாயந்தரம் வந்து ஒங்கையால சோறு உங்குறது அலாதி சந்தோசம். நீ மணக்க மணக்க சோறாக்கி, மனசு நெறைய காதலோட பரிமாறனும். அதே மனசு நெறைய காதலோட உள்ளுக்குள்ள சப்புக்கொட்டி ருசிச்சாலும் வெளிய சின்ன சின்ன கொற சொல்லிகிட்டே சாப்பிடனும். ஏழைங்க நமக்கு இதவிட வேற என்ன புள்ள சந்தோஷம் இருக்கப்போகுது” என்று காதலாய் பார்த்தபடிச் சொல்ல, அந்தக் காதலுக்கு சற்றும் குறையாத காதலுடன் பார்த்தபடி. “சரிங்க செஞ்சி வெக்கறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்று விடைகொடுத்தாள்.

அவர் போனதுக்கு அப்புறம் நான் தினமும் இந்த குழம்பு செய்யறேன். அவர் சாப்பிடவே மாட்டுறார். நீ முடிஞ்சா அவரை ஒரு வாய் சாப்பிட வை. இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செஞ்சிட்டா மேலே சொன்ன மூனு விஷயத்தை செய்ய அவசியமே இருக்காது.” என்றுவிட்டு விம்மி வெடித்து அழுதாள். பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து அழ, அந்த கதறல் மதுவின் உயிரை உலுக்கியது. சிறிது சிறிதாய் மது ஊற்றி மதுமிதா வளர்த்த பாவமரம் அவர்களின் கதறல் சூறாவளியில் வேறோடு சாய்ந்தது. என்ன சொல்ல முடியும் இதற்கு மதுமிதாவால்? 

மதுமிதா அந்தக் குழம்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் அவள் அன்னை இந்த குழம்பு செய்ததும், அந்த மணம் அவளுக்கு பிடிக்காமல் தூக்கி வீசியதும் நினைவுக்கு வந்தது. வாழ்க்கை சின்ன சின்ன ஆசைகளாலும் சந்தோஷங்களாலும் நிறைந்தது. அதை அள்ளிக்கொடுக்கும் ஒரு உயிரின் இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற உண்மை அவள் மூளைக்கு ஏறி இதயத்தைத் தாக்கியது. இன்னமும் அவள் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணமும், தெய்வானை வைத்திருந்த குழம்பும் பூதாகரமாய் நின்று அவள் செய்த தவறின் முழு வீரியத்தை உணர்த்த, வாழ்க்கையில் முதல்முறையாக கண்ணீர் சிந்தினாள் மது. அவள் கண்களைத் தாண்டி சிதறிய கண்ணீர் துளிகள் மதுகிண்ணத்தில் விழுந்து மதுவோடு மதுவாய் கலந்தது.


 

Monday, 4 January 2021

கலையாத கனவு.

அந்த அரசுப் பள்ளியிலுள்ள கடிகாரம் சரியாய் 9 முறை அடித்து ஓய்ந்த வேளை தாய் துர்காவின் கையைப்பிடித்தபடி உள்ளே நுழைந்தாள் ஏழு வயது சிறுமி அனுபமா.அவள் ஜீவா துர்காவின் ஒரே செல்லப் பெண்.


ஏழ்மையிலும் இனிமை காணும் குடும்பம். அத்தைமகன் மாமன் மகளென்பதால் மாமியார் மறுமகள் சண்டைக் காட்சிகளெல்லாம் இல்லை.அனு பிறந்தபோது மட்டும் சற்று துவண்ட குடும்பம் அதன்பின் தேறிக்கொண்டது.


அனைவரிடமும் அனுவைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு துர்கா கிளம்ப, தன் இருக்கையில் அமர்ந்தாள் அனு.அவள் பக்கத்து இருக்கையில் அவள் வயதை ஒத்த ஒரு பெண். அவள் அனுவிடம் மெல்ல பேசத் தொடங்க, இருவரும் சற்று நெருங்கினர்.


பள்ளியில் அனுவிற்குக் கிடைத்த முதலும் கடைசியுமான தோழியவள். இடைவேளை நேரத்தில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, அனு மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்.ஏன் நானும் மற்றவரைப் போல் இல்லை என ஏங்கினாள்.


“நானும் விளையாட வரட்டுமா மீனா?” என்று ஆசைப் பொங்கக் கேட்ட அனுவை தான் இப்போது வருவதாகச் சொல்லி சென்றுவிட்டாள் அனுவின் ஒரே தோழி மீனா. சற்று நேரத்தில் ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, தான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை அனுவிற்கு.


அப்படியும் “நான் என்ன மிஸ் செய்யனும்?” என்று கேட்கத்தான் செய்தாள். ஆனால் அவரோ இதென்னடா நமக்கு வந்த தொல்லை என்று நினைத்தபடி “நீ அப்புறம் பிள்ளைங்ககிட்ட கேட்டு எழுதிக்கோம்மா” என்றுவிட்டார்.


யாருக்குமே தன்னைப் பிடிக்காதபோது யாரிடம் கேட்பது என்று வருந்தினாள் அனு. தன் அவசரத் தேவைக்குக் கூட யாரையும் கேட்க முடியாத தன் நிலையை நினைக்கும்போது அவளுக்கு கண்ணீர் பொங்கியது.


வீட்டிற்கு வந்து அனு தன் தாய் துர்காவிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவளைப் போகப் போக சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்திவிட்டு தனிமையில் தன் மகளை நினைத்து கண்ணீர் சிந்தினாள்.


மறுநாள் பள்ளியில் அனுவின் எழுதுகோள் பெட்டியை ஒரு பையன் மெல்லத் திருடிக்கொண்டான். அனு அதை உணர்ந்தாலும் கேட்க பயமாக இருந்தது. தோழி மீனாவிடம் சொன்னாள்.


அவள் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொடுத்தாள். ஆனால் மீனா அந்த பக்கம் நகர்ந்ததும் அவன் மறுபடியும் அதை எடுத்துக்கொண்டான்.இந்தமுறை அனுவே தைரியமாக அவனைக் கேட்க, அவன் அது அவனுடையது என்று சொல்லி ஏமாற்றினான்.அனுவின் மனதில் ஓர் பாதுகாப்பின்மை தோன்றியது.


இதை துர்காவிடம் அவள் சொல்ல, புது எழுதுகோள் பெட்டி வாங்கிக் கொடுத்தாள்.மகளை சமாதானப்படுத்தினாலும், வாய்விட்டே அழுதாள் துர்கா.மாமியார் தனம் அவளைத் தேற்றினார்.


“காக்கா அவ கண்ணைக் குத்திடுமோன்னு மூடி மூடி வைச்சேனே! கடவுள் குத்திடுவார்னு நினைக்கலயே அத்தை! நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணோம்னு நமக்கு இந்த சோதனை அத்தை!” எனக் கதறித் தீர்த்தாள். ”அழாதம்மா மரத்த வெச்சவன் நிச்சயம் தண்ணி ஊத்துவான்” என்று தன் வாக்கு விரைவில் பலிக்கப்போவது தெரியாமல் இயல்பாய் சொன்ன அந்த நொடியில் வானத்து தேவதைகள் ததாஸ்து சொல்லிச் சென்றனர்.


மகளைப் பற்றிய கவலையுடன் அன்றைய உரக்கத்தில் ஆழ்ந்திருந்த துர்காவிற்கு கனவு வந்தது. வெண்ணிற ஆடையணிந்த ஒரு மனிதர் வந்தார். கையில் துர்கா இதுவரைப் பார்த்திராத பொருட்களை வைத்திருந்தார்.


“மகளே! நான் சொல்லும் இடத்திற்கு உன் மகளை அழைத்துச் செல். அவளுக்கான படிப்பும் பாதுகாப்பும் காத்திருக்கிறது.” என்றுவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் சொன்ன வார்த்தைகள் அப்படியே மனதில் தங்கிவிட்டது.


கனவை நம்பி உடனே செயற்பட மனது இடம் தராததால் அதை அப்படியே தனக்குள் புதைத்துக்கொண்டாள். நாளாக நாளாக அனுவின் கஷ்டங்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.


அவளால் அந்த பள்ளியில் பொருந்த முடியாத நிலை வரவே துர்கா பள்ளிக்கே சென்று புகார் செய்தாள். ஆனால் அந்த ஆசிரியரோ ”இதோ பாரும்மா உங்க பெண்ணைப் பார்த்துக்க எங்களுக்கு தெரியலை. அது மட்டுமே எங்க வேலையுமில்லை. நீங்க வேற பள்ளியில் சேர்த்துக்கோங்க” என்று திடமாக சொல்லிவிட்டார்.


வேறு வழியின்றி அனுவை அழைத்துக்கொண்டு துர்கா வெளியே வர, அவளைத் தடுத்து நிறுத்தியது ஒரு பெண்மணியின் குரல். “அம்மா எனக்கு தெரிஞ்ச ஒரு பள்ளி இருக்கு. அங்கே உங்க பொண்ணு மாதிரி குழந்தைங்க படிக்கிறாங்க. விலாசம் தரேன் கூட்டிட்டு போய் பாருங்க.” என்று தன் கையில் வைத்திருந்த விலாசத்தை நீட்டினார்.


நன்றி சொல்லி அதை வாங்கிய துர்கா படித்துப் பார்க்காமலே பத்திரப்படுத்தினாள். வீட்டிற்கு வந்தவள் எந்திரத்தனமாகவே நாளை ஓட்டினாள். அன்று இரவு மீண்டும் அதே கனவு. அட்சரம் பிசகாமல் அதே வார்த்தைகள்.


அதைக் கேட்ட துர்காவிற்கு ஏதோ தோன்ற, உடனே எழுந்துபோய் தன் கைப்பையில் வைத்திருந்த விலாசத்தைப் பார்த்தாள். பார்த்தவள் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. காலையில் கணவனிடம் அந்த பெண்மணியைப் பற்றி மட்டும் சொல்லி அந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.


பார்வையற்றோருக்கான சிறப்புப்  பள்ளி கட்டிடம் அவர்களை வரவேற்றது. உள்ளே சென்ற அவள் தலைமை ஆசிரியரிடம் தங்களைப் பற்றிச் சொல்ல, அவர் அனுவிற்கு சில சோதனைகளை வைத்து புத்திசாலி பெண் என்று சிலாகித்து பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.


சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தைப் பற்றி இயல்பாய் கேட்டாள் துர்கா. “அவர்தான் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரையில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரையில்” என்று அவரைப் பற்றி சொல்ல, அவள் மனம் இனிய அதிர்வை உள் வாங்கியது.


தலைமை அன்னைக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர். அன்று இரவு துர்கா உரங்க செல்லும் முன் தன் அலைப் பேசியில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு உரங்கினாள்.


 நள்ளிரவில் அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது துர்காவின் குரல். “உம் விழியின் ஒளியை இழந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உம்மையும் ஒளிமையமாக்கி, மற்றவர் வாழ்க்கையையும் ஒளிமையமாக்கிய உமக்கு கோடி நன்றி.”


பின் குறிப்பு: இன்று பிறந்தநாள் காணும் பிரெயில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரெயில் அவர்களுக்கு இந்தக் கதையைக் காணிக்கையாக்குகிறேன். உடல் மரித்தும் உயர்ந்து நிற்கும் நின் பேரும் புகழும் இன்றுபோல் என்றும் ஒளி மங்காதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

Sunday, 26 July 2020

’கடவுளின் பிரதிநிதி’ தொடர்ச்சி.

இதன் முந்தைய பகுதியைப் படிக்க்

3

அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் பார்த்து. “உங்களுக்கு உங்க அம்மாகிட்ட பேசனுமா?” “பேசனும்தான் ஆனா அம்மாதான் இல்லையே?” என்று ஆவலும் ஏக்கமும் நிறைந்தக் குரலில் கேட்டது ஒரு மழலை. ”இல்லை இருக்காங்க. அவள் பெயர் நிலவினி. அவதான் உங்களைப் பார்த்துக்கச்சொல்லி என்னை  இங்க அனுப்புனாங்க. அப்பாவை நினைச்சு அழக்கூடாது. அம்மா இருக்கேன். அப்பாவும் தெய்வமா இருந்து வழிநடத்துவார்னு சொன்னாங்க. சீக்கிரம் உங்களைப் பார்க்க வரேன்னு சொன்னாங்க.”

பிஞ்சு இதயங்கள் என்றும் பச்சைமண். அதில் எதை விதைத்தாலும் ஆழப்பதிந்துவிடும். அதிலும் பாசத்திற்காக ஏங்கும் இவர்களுக்கு பாசம் காட்ட இன்னும் ஒரு இதயம் இருக்கிறது என்று தெரிந்தால் மகிழ்ந்து போவார்கள் என்பதைப் புரிந்துகொண்டவள், “முகிலப்பா எப்படியோ அப்படித்தான் நிலவினி உங்களோட அம்மா. வெளியூரில் வேலையில் இருப்பதால் உங்களைப் பார்க்க வரவில்லை. பேசமுடியவில்லை. முகிலப்பா பார்த்துப்பார்னு நிம்மதியா இருந்தாங்க.” என்றாள்.

தங்களை வேலை காரணமாக பார்க்க வராத அம்மாவை அவர்களால் நம்பவோ ஏற்கவோ இயலவில்லை. அவர்கள் தமிழழகியை நம்பாத பார்வை பார்க்க, அதைப் புரிந்துகொண்டவள் ”நீங்க அவளை ஒருமுறை அம்மான்னு கூப்பிடுங்க. அவ உங்க அம்மா இல்லன்னா உங்ககிட்ட பேசமாட்டா. உங்க அம்மாவா இருந்தா எப்படி பேசுறான்னு நீங்களே பாருங்க.”

முகிலனைப்பற்றியும் இந்த இல்லத்தைப்பற்றியும் நிலவினிக்குத் தெரிந்திருந்ததால் நம்பிக்கையுடன் அவளை அழைத்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.

   ஃபோனை எடுத்த நிலவினி தமிழ் என்று சொல்லும் முன் அம்மா! என்று 15 குரல்களும் ஒரே நேரத்தில் கேட்டது. முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நின்றிருக்க, மீண்டும் அதே குரல்கள் இன்னும் சத்தமாய். அம்மா! அவள் அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள். மூன்றாம் முறையாக அம்மா! என்றதும் அவள் உடலும் மனமும் இனிய ஸ்வரங்களால் மீட்டப்பட்டதைப்போல் உணர்ந்தாள். வயிற்றை மென்மையாய் அழுத்திக்கொண்டாள். தாய்மையின் உணர்வுப் பிரவாகத்தில் அவள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது.

“அக்கா இவங்க எங்ககிட்ட பேசமாட்டுறாங்க. இவங்க எங்க அம்மா இல்.” “ஐயோ வேண்டாம்! அந்த வார்த்தையைச் சொல்லிடாதீங்க! என்னை அம்மான்னு கூப்பிட்ட வாயால அப்படி சொல்லாதீங்க. அம்மாதான்! நான் உங்க அம்மாதான்! நான் உங்க அம்மாவேதான்! உங்ககிட்ட பேசாம பார்க்காம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க!” என்று கதறினாள். அவள் கதறலில் அவர்கள் எதைக்கண்டனரோ அவள் தாய்மையிடம் தங்களை ஒப்படைத்து நின்றனர்.

”அழாதீங்கம்மா! ஏன் எங்களைப் பார்க்க வரல? ஏன் எங்ககிட்ட பேசல?” என்று அம்மாவைச் செல்லமாய் திட்டியதுஓர் குட்டி ஆண் சிங்கம். “வேலை அதிகமா இருந்ததுப்பா அதான் வரல. அதோட முகில் அப்பா உங்களைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிறார். என் குழந்தைங்க நிம்மதியா இருக்காங்கன்னு தோனுச்சு. அதான் வரல.” “அப்பா சாமிகிட்ட போயிட்டாங்கம்மா. நீங்க இங்க வாங்க அம்மா. ப்லீஸ். பயமா இருக்கும்மா வாங்க” என்று கெஞ்சியது ஓர் பெண் கிளி.

“கண்டிப்பா வரேன்மா. நீங்க எல்லாரும் நல்லா சாப்பிடனும். படிக்கனும். தூங்கனும். யாரையும் தொல்லை செய்யக்கூடாது. சரியா? ”சரி அம்மா” என்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனித்தனியே பேசினாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழழகியை உணவு எடுத்துவரச் சொல்லி ஊட்டச்சொன்னாள். அம்மாவின் அன்பில் நனைந்துகொண்டே ஒரு பருக்கைக்கூட மிச்சம் வைக்காமல் உண்டனர்.

“நிலா, இவங்கநிம்மதியா தூங்கி ஒரு வாரமாகுது. உங்கிட்ட பேசிய சந்தோஷத்துல அமைதியா தூங்கட்டும் ஒரு பாட்டுப்பாடுடி.” என்றாள் தமிழழகி.  “கண்டிப்பா பாடுறேன்டி.” அவள் மெல்லப்பாடினாள்.

‘கண்ணே கண்மணி எந்தன் பொன்மணி கண்ணுறங்கு
அன்னை மடியில் அலுப்புத் தீர கண்ணுறங்கு
கண்கள் முழுதும் கனவுகள் சுமந்தே கண்ணுறங்கு
அம்மா அதனை பலிக்க வைப்பேன் கண்ணுறங்கு
கட்டிக் கரும்பே கண்ணீர் நிறுத்திக் கண்ணுறங்கு
கவலைவிடுத்து இதழை மலர்த்திக் கண்ணுறங்கு
மரகத கல்லே மாணிக்கத் தேரே கண்ணுறங்கு
மார்பின் மெத்தையில் சுகமாய் நீயும் கண்ணுறங்கு. அபி

 அவள் பாடிக்கொண்டிருக்க குழந்தைகள் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் தூக்கம் கலையாதபடி தமிழழகி வெளியே வந்தாள். ஷெண்பகத்திடம் நடந்ததைச் சொல்லிவிட்டு நிலவினியின் வீட்டிற்குச் சென்றாள்.

4.

    “வா தமிழ்.” தமிழழகி அறைக்குள் வந்து நிலவினியைப் பார்த்தாள். அவள் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி தெரிந்தது. நீண்டகால தேடல் கிடைத்துவிட்ட நிம்மதி தெரிந்தது. அவள் அருகில் அமர்ந்த தமிழழகி. “நான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்லமாட்டேன் நிலா தெரிஞ்சிதான் செய்தேன்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்தபோது உன் ஃபோன் வந்தது. அனிச்சப்பூ மாதிரி இருக்க உன் மனம், மென்மையான குணம், கணிவான பேச்சு இது எல்லாம் அந்தக் குழந்தைகளை ஆறுதல்படுத்தும்னு நினைச்சேன். அந்தக் குழந்தைங்களுக்கு அப்பா இருந்தார், அத்தை ஷெண்பகம்மா இருக்காங்க, அக்கா நா இருக்கேன். அவங்க மனசுல நிறப்பப்படாத இடம் அம்மா. இதுவரை அவங்களுக்குக் கிடைக்காத அந்த உறவைக் கொடுக்கத் தோனுச்சி. அதுக்கு நீதான் சரியானவளா இருப்பேன்னு நினைச்சேன். கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொல்ற உனக்குள்ள இவ்வளவு தாய்மை உணர்வு இருக்கும்னு எனக்கு இன்னைக்குதாண்டி புரிஞ்சது.”

“மறுக்கப்படுற ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது பயமோ, ஏக்கமோ துயரமோ இருக்கும்டி. படிப்பு, விளையாட்டு வேலைன்னு 30 வருஷத்தை ஓட்டியாச்சு. வேலைக் கிடைக்கிறவர காதலைப் பத்தி யோசிக்கல. கல்யாணம்னு வரும்போது, மத்தவங்க வாழ்க்கை அனுபவங்களைக் கேட்கும்போதுதான் நானும் காதலிச்சிருக்கலாமோன்னு தோனுது. இத்தனை வருஷம் வராத காதல் இனிமேலா வரப்போகுது? பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி சபையில நிக்க வெச்சு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு அடுத்தப் பெண்ணைத் தேடிப்போற கல்யாணச் சடங்கை நினைச்சா எரிச்சலா இருக்கு. அதனாலதான் கல்யாண ஆசை இல்லன்னு சொல்றேன்.”

வெளிய அப்படிச் சொன்னாலும் உள்மனசுல கல்யாணம் என்ற அந்த வார்த்தைய கேட்கும்போதே வெட்கம், சந்தோஷம், வருத்தம் ஏக்கம் எல்லாம் வரும். யாராவது கல்யாண செய்தி சொன்னா, பத்திரிக்கை கொடுத்தா நாமும் இப்படி எல்லோருக்கும் கொடுப்போமான்னு தோனும்.

மண்டபத்துக்குப் போய் மேளச்சத்தம் கேட்டாலே மூச்சு முட்டுற மாதிரி இருக்கும். கச்சேரி கேட்டா கண்ணு கலங்கும்.  ஆனா இந்த ஏக்கங்களுக்காக மனசுக்கு பிடிக்காத ஒருத்தர மணமுடிக்க முடியுமா?” “ஆசை இல்லன்னு சொல்றதுக்கு பின்னாடி இவ்வளவு துயரமா!” தமிழின் கண்கள் கலங்கியது.

“கல்யாண ஆசைய மறைக்க முடிஞ்ச என்னால தாய்மைய மறைக்க முடியலடி. என் அக்கா குழந்தைங்க அவங்க அம்மாவைக் கூப்பிடும்போது என்னை அப்படிக் கூப்பிட யாரும் இல்லையேன்னு ஏக்கமா இருக்கும். சித்தின்னு கூப்பிடுற குழந்தைங்ககிட்ட அம்மான்னு கூப்பிட சொல்லமுடியுமா? குருவிக்கூடு மாதிரி இருக்கக் குடும்பங்களைப் பார்க்கும்போது எனக்கும் கவிதையா ஒரு குடும்பம் வேணும்னு தோனும்.

 யாராவது கர்பமா இருக்கேன்னு சொன்னா அந்த சந்தோஷம் எனக்கு கிடைக்காதான்னு தோனும். என் கைகள் என்னையும் அறியாம என் வயிற்றைத் தடவிப்பார்க்கும். காலமெல்லாம் தாய்மை வரம் கிடைக்காமலே போயிடுமோன்னு தோனும். எதிர்காலத்தை நினைச்சி, அப்போ என்னோட இருக்கப்போற தனிமைய நினைச்சு பயமா இருக்கும்.

அப்புறம்." “ஐயோ! போதும்டி இதுக்குமேல சொல்லாத என்னால தாங்கமுடியலடி. ஏன்? ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற?” “வருத்தத்தைதான் நீ போக்கிட்டியேடி. ஒரு குழந்தைக்கு தாயாக முடியாம ஏங்கிய என்னை 15 குழந்தைகளுக்கு தாயாக்கிட்டியே.” “அப்படின்னா? இனி என்ன செய்யப்போற? நீ என் வாசல் முன்னாடி ஏத்திவெச்சிருக்க தாய்மை என்ற அகல் விளக்கு காத்துல அணையாம காலமெல்லாம் பாதுகாக்கப்போறேன். இனி என் வாழ்நாளெல்லாம் நாந்தான் அவங்களுக்குத் தாய்.”

தமிழால் நிலவினி சொல்வதை மறுக்கவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. அவள் இந்த வழக்கைக் கடவுளிடமும் காலத்திடமும் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றாள். மறுநாள் முதல் நிலவினிக்குப் புது வாழ்க்கைத் தொடங்கியது. வாழ்வில் பற்றில்லாமல் இருந்தவள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். தன்னை அழகுபடுத்தி ரசித்தாள். நானும் அம்மாவாகிட்டேன் என்று மனதுக்குள் ஸ்ரீராமஜெயம் எழுதினாள்.

அவள் குழந்தைகளுக்கு தினமும் போன் செய்து பேசினாள். நேரில் வரச்சொல்லி அழும் அவர்களை வேலை இருப்பதாகக் காரணம் சொல்லிச் சமாளித்தாள். உண்மையில் அவர்களை நேரில் பார்க்க தயக்கமாக இருந்தது. எங்கே அந்தக் குழந்தைகள் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள். அந்தக் காரணத்தை நினைத்துத் துடித்தாள். குழந்தைகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று அறிவு சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது.

தினமும் சலிக்காமல் அன்பு முத்தங்களை வாரி வழங்குவாள். அந்த முத்தத்திற்காகவே அந்தக் குழந்தைகள் காலையில்  கண்விழிப்பர். அந்த அன்பு மயக்கத்திலே அவர்கள் கண் துயில்வர். அந்தப் பிஞ்சு உள்ளங்கள் ஷெண்பகத்திடம் பேசும் முதல் மற்றும் இறுதி வாசகம். ”எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தாங்க அத்தை” என்பதுதான். ஷெண்பகமும் நிலவினியின் தாய்மையில் நெக்குருகிப்போவார்.

நிலவினியின் வீட்டிற்கு இது தெரிய வந்தபோது அவள் தாய்மையின் உறுதிக்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேநேரம் அவர்களாலும் அந்தக் குழந்தைகளின் அன்பைத் தவிர்க்கமுடியவில்லை.

தொடரும்.

Sunday, 19 July 2020

கடவுளின் பிரதிநிதி.


1.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்டுவரும் அந்த இல்லம் காலைப் பரபரப்பில் இருந்தது.

பெற்றோரை இழந்தவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சுமார் 15 பிள்ளைகள் இருந்தனர். அங்குப் பணிபுரியும் தாமரை என்ற பெண்மணி மணியடித்து அனைவரையும் காலை உணவு உண்ண அழைத்தாள். உணவு உண்ணும் முன்பு அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்காக வரிசையில் நின்றனர். நிர்வாகியான ஷெண்பகம் அங்கு வர, அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பிரார்த்தனை தொடங்கப்பட்டது.

கடவுளே, நாங்கள் சாப்பிடப்போகும் இந்த வேளையில், எத்தனையோ பேர் இந்த உணவு கூடக் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். எங்களுக்காக இன்றைய உணவை அளித்தமைக்கு நன்றி. எங்களைப்போலவே இருக்கும் அனைத்து ஆதரவற்ற மனிதர்களுக்கும், உணவு, உடை, உறைவிடம், படிப்பு ஆகியவை கிடைக்க அருள்புரிவீராக.”

 பிரார்த்தனை முடிந்ததும் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களின் முகங்களில் உணவு உண்ணப்போகும் மகிழ்ச்சி இல்லை. உள்ளத்தில் அமைதி இல்லை. அழத்துடிக்கும் இதழ்களை ஷெண்பகத்தின் அதட்டலுக்காக கட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர். ஷெண்பகம் மிகவும் அன்பான பெண்மணிதான். ஆனால் ஈடு செய்யமுடியா இழப்பிற்கு என்ன செய்வது. அதோடு அழுதழுது இவர்களுக்கும் ஏதாவது ஆகிவிட்டால்? அதனாலேயே அவர்களை மிரட்ட வேண்டியதாயிற்று. அவர்களின் இந்த தாளமுடியா துயரத்திற்குக் காரணம் முகிலன்!

    முகிலனும் ஷெண்பகமும் உடன்பிறந்தவர்கள். முகிலன் தன் படிப்பை முடித்துவிட்டு சுயதொழில் பார்த்துக்கொண்டேஆதரவற்ற  குழந்தைகளுக்காக இந்த இல்லத்தை நடத்தி வந்தார்.

ஷெண்பகம் அவருக்கு ஐந்து வயது இளையவள். திருமணமாகி இதே சென்னையில்தான் வசிக்கிறாள். முகிலனுக்கு ஏனோ திருமணம் கூடவில்லை. அதற்குக் காரணமும் அவர்தான். இந்தக் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைக்க வேண்டும். திருமணத்திற்கு பின் குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதிக்க, அப்படிப்பட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட்டப் பெண் அவருக்கு நாற்பது வயதுவரை கிடைக்கவே இல்லை. அதன்பின் அவருக்கு அதில் விருப்பமில்லாமல் போய்விட்டது.

பெற்றோரைப் பார்த்தறியாத அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு முகிலன்தான்  அம்மா அப்பா. அவர்மேல் உயிரையே வைத்திருந்தனர். அவர் அந்த இல்லத்தை நெருங்கும்போதே அப்பா என்று ஓடி வந்துக் கட்டிக்கொள்வார்கள்.

 ஐம்பது வயதைக் கடந்திருந்த அவர் ஒரு வாரத்திற்கு முன்பு விஷக்காய்ச்சலில் இறந்துவிட்டார்.  அவர் தங்கை ஷெண்பகத்தை அழைத்து இல்லத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

அவர்களின் உயிருக்குயிரான அப்பாவை நினைத்து அழும் குழந்தைகளை என்ன சொல்லித் தேற்றுவது? உணவை முடித்துக்கொண்டு அனைவரும் படிக்கும் அறைக்குச் சென்றனர். அவர்களின் செல்ல அக்கா தமிழழகி வந்தாள். அவளைப் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினர்.

2.

   தமிழழகி முகிலனின் நண்பன் மகள். அவள் வாரத்திற்கு ஒருநாள் இங்கே வந்துவிட்டுச் செல்வாள். அப்படி வரும்போதெல்லாம் குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டோடும். அவளும் குழந்தைப்போல அவர்களுடன் விளையாடுவாள். பாடம் சொல்லிக்கொடுப்பாள். குழந்தைகள் அந்த வாரம் நடந்த அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துகொள்வார்கள். அவளும் சலிக்காமல் கேட்டுக்கொண்டு அவர்களை மகிழ்விப்பாள். முகிலனின் இறப்பு அவளையும் பெருமளவு பாதித்தது.  ஒரு வாரமாக அவள் தினமும் வருகிறாள்.

“அழாதீங்கடா! அப்பா உங்களோடுதான் இருக்கார். நீங்க அழுதா அவர் வருத்தப்படுவார்.” “இல்லை அக்கா. எங்களுக்கு யாருமில்லை. அப்பா இல்லை அம்மா இல்லை. எங்களை யாருக்கும் பிடிக்காது அக்கா.” என்று மனதின் ஏக்கமெல்லாம் கண்ணில் தேக்கிச் சொன்னது ஓர் ரோஜாமலர்.குழந்தைகள்  அவள் மடியில் படுத்துக்கொண்டு அழுது கரைந்தனர். “இல்லைடா அப்படிச் சொல்லக்கூடாது. நீங்க கடவுளோட குழந்தைங்க. அப்பா அப்படிச் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார் இல்லையா?” “அப்பா எங்கள வித்து போச்சு. நான் அப்பதிதான் சொல்லுவேன்!” என்றது மூன்று வயதுச் சிறுமி.

“இல்லை அக்கா நாங்க அப்படிச் சொல்லமாட்டோம். அப்படிச் சொன்னா அப்பா அழுவார். நாங்க கண்ணைத் துடைச்சிவிடுவோம். சிரிக்கவைப்போம். இப்போ அவர் அழுதா யார் கண் துடைப்பாங்க. யார் சிரிக்கவைப்பாங்க. அதுனால நாங்க அப்படிச் சொல்லல.? என்றது மற்றொரு பட்டாம்பூச்சி. என் செல்லங்களே! என்று அவர்களை அள்ளியணைத்து அழுதுவிட்டாள்.

    அவள் எவ்வளவோ சொல்லியும் அவர்களின் அழுகை நிற்கவில்லை. விளையாட மறுத்தனர். படிக்க மறுத்தனர். அவளால் அவர்களை இப்படிப் பார்க்கமுடியவில்லை. ஒரு வாரமாக தங்களை வருத்திக்கொண்டிருக்கும் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று மனம் துடித்தது. அப்போது அவள் அலைப்பேசி ஒலித்தது. திரையில் நிலவினி என்று ஒளிர்ந்தது.

நிலவினி தமிழழகியின் உயிர் தோழி. கல்லூரியில் ஏற்பட்ட நட்பு. எது அவளைச் செலுத்தியதோ? சட்டென்று ஒரு காரியம் செய்தாள் அவள். அவள் செய்யும் வேலை ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றியமைக்கப்போகிறது என்பதை உணராமல் அந்தக் காரியத்தைச் செய்தாள்.

தொடரும்


Friday, 3 July 2020

அமைதியும் ஓர் ஆயுதம்தான்.

 அழகாகவே விடிந்திருந்தது அவனின் காலைப்பொழுது. கணினிக்கு அருகிலிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டே நாவல் படித்தபடி உறங்கிப்போனான் மதியழகன். விடிந்ததும் கணினியை நிறுத்திவிட்டு டிவியை உயிர்ப்பித்து சுபவியின் புதுப்புது அர்த்தங்கள் கேட்டுக்கொண்டு அவன் அன்னை அங்கயர்க்கன்னி கொடுத்த டீயை அருந்தினான்.
 நேற்றிரவு அலைபேசியில் வந்த அழைப்புகளுக்கு பதிலளித்துவிட்டு பின் குளித்துவிட்டு பள்ளிக்கு தயாரானான். மதியழகன் அவன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறான்.
 ஆறடிக்கு சற்று குறைவான உயரம், செதுக்கிய முகம், நறுக்கிய மீசை, கவரக்கூடிய குறுநகையுமாய் மதியழகன் என்ற பெயருக்கேற்றபடி மதியும் அழகும் கொண்ட கம்பீரமான ஆண்மகன்.
 விழியில் ஒளி இல்லாவிடினும் அவன் முகத்தில் என்றும் அறிவுச்சுடர் வீசிக்கொண்டிருக்கும். ஆம் மதியழகன் பிறவியிலேயே பார்வையற்றவன். வாக்கிங் ச்டிக்கின் உதவியிலும், அது இல்லாவிட்டாலும் தனியே சென்று வருவான். அவன் வேலைகளை அவனே செய்து கொள்வான்.
 படிப்பில் மட்டுமல்லாமல் பொது அறிவிலும் கெட்டிக்காரன். எந்த துறையாக இருந்தாலும் அதைபற்றி மற்றவர்களோடு அவர்களுக்கு இணையாய் சளைக்காமல் விவாதிப்பான்.


 பள்ளியில் நுழைந்ததும் தன் தலைமை ஆசிரியை கண்டவுடன் குட்மார்னிங் மேடம், என்றான். அவரோ அவனை அவமதிக்கும் பொருட்டு அவனோடு உடன் வந்த ஆசிரியருக்கு மட்டும் பதில் வணக்கம் சொன்னார். இது இன்று நேற்று நடப்பவை அல்ல இவன் இந்த பள்ளிக்கு வந்தது முதல் நடந்துவரும் பணிப்போர். பார்ப்போம் யாருக்கு வெற்றி என்று.
 தலைமை ஆசிரியரான குணவதி மதியழகனை எப்போதும் கண்காணித்துக்கொண்டிருப்பார். அப்போதுதானே அவன்மீது குறை கண்டுபிடித்து வசைபாட முடியும். அதில் ஏனோ அவருக்கு ஒரு ஆனந்தம் போலும்.
 ஒருநாள் அவன் தன் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் அவனே அறியாதபடி அவன் வகுப்பறைக்குள் வந்து அமர்ந்துக்கொண்டார். வகுப்பு முடிந்ததும் அவனை அழைத்து மிச்டர் மதியழகன் வகுப்பில் பாடம் நடத்தும்போது நின்று பாடம் நடத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று பொறிந்து தள்ளினார். மாணவர்களை படிக்கசொல்லிவிட்டுத்தான் அவன் அமர்ந்துக்கொண்டான் என்பதை அவர் அறியாமல் இல்லை.
 மதியழகனுக்கு அவரோடு வார்த்தைக்கு வார்த்தை வாதிடுவது ஏனோ பிடிக்கவில்லை. காலம் பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான். வெகுவிரைவில் அவனே அவருக்கு பதில் சொல்ல நேரிடும் என்பது அவனுக்கு பிறகுதான் தெரிந்தது.
 என்னதான் அவர் அவனை குறை சொன்னாலும் அவன் எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் தன் கடமைகளைச் செய்ய தவறமாட்டான். தேர்வு தாள்களை திருத்தி சரியான நேரத்தில் மதிப்பெண்களை சமர்ப்பிப்பது முதல் பாடக்குறிப்புகள் எழுதுவதுவரை எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கும் என்ன பயன்?



 சராசரி மனிதனுக்கு இருப்பது போல அவனின் சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கும். குடும்பத்தில் மின்னல் போல் வந்து போகும் சின்னசின்ன சண்டைகள், சொல்லமுடியாத நெருடல்கள் மனதில் இருந்தபோதும் அவன் தன் வீட்டிலும், பள்ளியிலும் தன் நண்பர்களிடத்திலும் இதழ்விரிய புன்னகை பூத்தபடியேதான் பேசுவான்.
 எல்லாவற்றையும் வேறு கோணத்தில் பார்க்கும் இயல்பு அவனுக்கு. பள்ளி வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையையும் ஒன்றாய் கலந்துவிட கூடாது என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை.. அதிகமாகவே தெரிந்திருந்தது. அதுவே அவன் வெற்றிக்கு வழிவகுத்தது. 12ஆம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சிகளை கொடுத்தான்.
 ”மேடம்,” என்றபடி தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்தான். வேண்டுமென்றே வேலை செய்யும் பாவனையில் வெகுநேரம் காக்க வைத்தார். பிறகு ”என்ன வேணும் உங்களுக்கு?” என்று அலட்சியமாக கேட்டார். “எனக்கு ஒரு மணிநேரம் பெர்மிஷன் வேண்டும்” என்றான். ”அதெல்லாம் கொடுக்கமுடியாது” என்று கண்டிப்பாக மறுத்தார். ஆனால் மற்ற ஆசிரியர் கேட்டதும் கொடுத்துவிட்டார்.
 மதியழகன் ஒருநாள் தன்னைப்போலவே ஆசிரியையாக பணிபுரியும் ஒரு தோழியிடம் அலைபேசியில் தொடர்புகொண்டான். அவள் தன் வகுப்பறையில் நடக்கும் எல்லாவற்றையும் புலம்பி தீர்த்தாள். ”அண்ணா, என் வகுப்பில் யாரும் படிக்கமாட்டுறாங்க. யாருக்கும் ஒரு சின்ன விஷயம் கூட புரிவதில்லை. கஷ்டமா இருக்கு அண்ணா. நான்தான் சரியாக சொல்லித்தரவில்லையோ என்று கூட தோன்றுகிறது.” எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவன் அவளை ஊக்குவிக்கும் வழியில், ”பிடிப்பில்லா படிப்பும், முயற்சியில்லா தேர்ச்சியும், ஒழுங்கில்லா கல்விமுறையும் ஒருங்கே பெற்ற சமுதாயம் இது. இதில் யாரை குறை சொல்லி என்ன பயன். 100 சதவிகித குற்றத்தில் மாணவர்களுக்கும் பங்குண்டு. மற்றபடி அவர்களை மட்டுமே குறை காண முடியாது.” என்றான். இப்படித்தான் போறபோக்கில் எதையாவது சொல்லி அடுத்தவர்களை ஊக்குவிப்பான்.
 ஒருநாள் மதியழகன் தன் சக ஊழியரின் உதவியோடு தேர்வு தாள்களைத் திருத்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அங்கே வந்த தலைமை அன்னை அவனுடனிருந்த ஆசிரியரைப் பார்த்து, ”இங்க பாருங்க சார், உங்க வேலைய மட்டும் நீங்க பார்த்தா போதும். அடுத்தவங்க வேலையெல்லாம் செய்ய தேவையில்ல. போங்க” என்று கடுமையாக பேசினார். அதற்கு பிறகு அவர் மதியழகனோடு அந்த வேலையை தொடர முடியவில்லை. அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 தேர்வு தாள்களை ஒலித்து வைப்பது பாடக்குறிப்பு நோட்டை எடுத்து வைப்பது இப்படி எத்தனை இடையூறுகளைத் தரமுடியுமோ அத்தனையும் செய்தார் தலைமை அன்னை. ஆனால் மதியழகன் மீண்டும் நூறு விழுக்காடு தேர்ச்சிதான். இதைக்கண்டு அனைத்து ஆசிரியர்களும் வியந்தனர்.
 ”அண்ணா, உங்களை யார்யாரெல்லாம் அவமானப்படுத்தினாங்களோ அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டீங்க அண்ணா. உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு அண்ணா. உங்க மாணவர்களுக்கு உங்கள்மேல் நல்ல மதிப்பு இருக்கு அதான் இதற்கு காரணம்.” என்று பாராட்டினாள் அவன் தங்கை தமிழரசி. சின்ன புன்னகையுடன் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொன்னான்.



 சில நாட்கள் கழித்து பள்ளி ஆண்டுவிழாவிற்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த வருடம் அந்த விருதை யாருக்குக் கொடுப்பது என்று தலைமை அன்னை பள்ளி நிர்வாக அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தபோது அனைவருமே மதியழகன் பெயரை பரிந்துரைத்தனர். தலைமை அன்னைக்கோ என்னவோ போலாகிவிட்டது.
  சிறப்பு விருந்தினர்களைப் பற்றி அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மதியழகன் ஒரு நல்ல ஆலோசனை சொன்னான். ”பெரும்பாலும் அனைத்து பள்ளியிலும்மாவட்ட ஆட்சியர், மருத்துவர், காவல் அதிகாரி, வங்கியில் வேலை பார்ப்பவர்கள் என்றுதான் கூப்பிடுவார்கள். ஏன் நாம் சில பிரபல பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் அழைக்க கூடாது? அவர்கள் பேசும் பேச்சு மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி படைக்கும் திறனையும் சிந்தனை திறனையும் வளர்க்கும். அவர்கள் பறக்கும் காற்றாடிக்கு உதவும் நூல் போன்றவர்கள்.”
 ”அது சரி ஆனால் அப்படிப்பட்ட பிரபல எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் எங்கு போய் எப்படி அழைப்பது?” என்று ஒரு ஆசிரியர் வினவினார். ”எனக்கு சிலரை தெரியும் உங்களுக்கு விருப்பமெனில் நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. அவர்களை நான்தான் ஏற்பாடு செய்தேன் என்று தலைமை அன்னைக்கு தெரிய வேண்டியதில்லை.”மற்றொரு ஆசிரியர் அதை ஆமோதித்ததால் சொன்னபடியே மதியழகன் பிரபல எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான பூமிநாதன், கண்ணுக்கினியாள் ஆகியோரை அழைத்திருந்தான். அவர்களும் அவனின் அழைப்பிற்கிணங்கி மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டனர்.
 விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அனைத்து ஆசிரியரின் வீட்டிற்கும் தலைமை அன்னையே சென்றார். மதியழகனின் வீட்டிற்கும் சென்றிருந்தார். அவன் தன் மனதிலும் முகத்திலும் எந்த விரோதத்தையும் வெறுப்பையும் காட்டிக்கொள்ளாமல் சுமூகமாய் பேசி விருந்தளித்து தன் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்தான். அவன் அறையில் நிறைய புத்தகங்களையும் கணினியும் பார்த்ததும் வியப்பாக இருந்தது. அதிகம் பேசாமல் ”உங்கள் மகனுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்க இருக்கிறோம். அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும்” என்று அழைப்பிதழை கொடுத்துவிட்டு புறப்பட்டார்.



 விழாநாள் வந்தது.தலைமை அன்னை வந்திருக்கும் விருந்தினர்களுக்கு வரவேற்புரை நிகழ்த்தி அவர்களுக்கு மரியாதை செய்தார். விழா குத்துவிளக்கு ஏற்றி இனிதே தொடங்கியது. மாணவ மாணவியர் தங்கள் கலைத்திறனைக் காண்பிக்கும் வண்ணம் இசை, நடனம், கவிதை, நாடகம் நடத்தினர். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. படிப்பிலும் விளையாட்டிலும் முதலாவதாக வந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 விழா தொடங்கிய சில நேரத்திலேயே தலைமை அன்னைக்கு ஓர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது. வந்த விருந்தினர்கள் யாவரும் மதியழகன் தங்களை அழைத்ததாகவும் அவனின் அன்பிற்கும் மரியாதைக்கும் இணங்கியும் அவன் சிறந்த ஆசிரியர் விருது வாங்க இருப்பதை தாங்கள் கண்டு தங்கள் கைகளால் தரவேண்டும் என்பதற்காகவும் வந்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
 தலைமை அன்னைஇதை கேட்டவுடனே ஆடிப்போய்விட்டார். அவனை அவமானப்படுத்திய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து வருந்தினார். முதல்முறையாக கண்களில் நீர் கோர்த்தது. இனி வாழ்வில் யாரையும் இப்படி நடத்தக் கூடாது என்று உணர்ந்தார். பார்வையற்றோரையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்குள்ளும் அறிவும் திறமையும் இருக்கிறது என்று புரிந்துகொண்டார்.
 மதியழகன் பேச தொடங்கினான். தலைமை அன்னை தன் மனதை ஒருமுகப்படுத்தி அவன் பேசுவதை கவனிக்க தயாரானார். ”அனைவருக்கும் என் முதல் வணக்கம். எனக்கு இந்த விருதை வழங்கியதற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். என் மாணவர்கள் நான் வகுப்பறையில் கற்பிக்கும் விதத்தை அழகிய நாடகமாக்கியிருந்தார்கள். அதற்கும் என் நன்றிகள். அந்த நாடகத்திலிருந்து நான் கற்பித்தது மாணவர்களுக்கு புரிந்திருக்கிறது என்பது தெரிகிறது. மிகவும் மகிழ்ச்சி.
 இங்கு நான் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. இப்போதைய ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாகலாம் .இப்போதைய மாணவர்கள் ஆசிரியர்களாகலாம். அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இதை சொல்கிறேன். ஆசிரியர்கள் மாணவர்களின் தலைமை. தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களின் தலைமை. ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்துவது போல தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களை வழிநடத்த வேண்டும். அவர்கள் செய்யும் நல்லதை ஊக்குவித்து நியாயமான தவறாக இருந்தால் திருத்த வேண்டும்.
 சின்னச்சின்ன விஷயத்தையும் வரவேற்க வேண்டும். கண்டிப்பைவிட கனிவும் பாராட்டலும்தான் நல்ல தலைமைப் பண்பு. முதலில் இந்த உறவுகளில் ஒற்றுமை வேண்டும். எல்லோருக்கும் சில சொந்த பிரச்சனைகளிருக்கும் அதையெல்லாம் மறந்துவிட்டு மறைத்துவிட்டுத்தான் பள்ளிக்கு வருகிறோம் ஒரு மாறுதலுக்காக. இங்கேயும் இடையூறுகள் தொடர்ந்தால் எப்படி?
 எனக்கு இந்த கல்விமுறையில் உடன்பாடு இல்லை. மதிப்பெண்கள் தாகத்தை மட்டும்தான் தீர்க்கும். அறிவு ஒன்றே வாழ்க்கையை மெறுகேற்றும். புரிதல் இல்லாத படிப்பு ஏட்டுச்சுறக்காய் போலத்தான். எத்தனையோ விஷயங்களை மாணவர்களுக்கு சொல்ல நினைத்திருந்தாலும் நேரமில்லாத காரணத்தால் சொல்லித்தர இயலவில்லை.
 படிக்காவிட்டாலும் தேர்ச்சியடைய முடியும் என்ற தைரியத்தில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. முகநூல் வாட்சப் இதிலிருக்கும் ஆர்வத்தை படிப்பில் காட்டுவதில்லை. ஒழுக்கக்கல்வி என்று ஒன்று இருப்பதையே அனைவரும் மறந்துவிட்டோம். அதனால்தான் மழலைமாறாத முகமும் விடலை பேச்சும் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.
 என் மாணவன் ஒருவன் நாடகத்தில் வகுப்பறையில் நான் சில பொதுக்கருத்துக்களைப் பாடத்திற்கு தேவையான விதத்தில் பொருத்தி சொல்வதாக சொல்லியிருந்தான். அது உண்மைதான். அது இங்கு அமர்ந்திருக்கும் நம் விருந்தினர்களின் கருத்துக்கள்தான். நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். தலைவர்களின் பேச்சுக்கள் கேட்கவேண்டும் என்பது என் கருத்து. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம் தரும்.
 தேவையில்லாமல் அடுத்தவரை புறம் சொல்வதை விட்டுவிட்டு நம் கடமைகளைச் செய்தாலே போதும். பாடப்புத்தகங்கள் போக இன்னபிற புத்தகங்களையும் படியுங்கள். மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு புரிந்து படிக்க தொடங்குங்கள்.
 ஒரு சின்ன கதையோடு என் உரையை முடிக்கிறேன். ஒரு தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்து பள்ளிக்கு அனுப்பினாள். சிறிது நேரம் கழித்து தன் குழந்தைக்கு அடிப்பட்டதாக அவளுக்கு தகவல் வந்தது. கதரியபடி ஓடிச்சென்று பார்த்தாள். தன் குழந்தை இல்லை என்றதும் திருப்தியடைந்தாள். ஆனால் அடிப்பட்ட அந்த குழந்தையை பற்றி அவளின் தாய் பாசம் நினைக்கவிடவில்லை. இப்படி தாயின் அன்பு கூட சில நேரங்களில் சுயநலமாகும். ஆனால் நம்மை போன்ற ஆசிரியரின் அன்பு பொதுநலமானது புனிதமானது. நமக்கு மாணவர்கள்தான் முதல் பிள்ளைகள். அப்படிப்பட்ட ஆசிரியர் பணிக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டுமென்று கூறி இந்த சிறந்த விருதையும் இந்த இனிய நேரத்தில் எனக்கு பேச வாய்ப்பையும் தந்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை கூறி என் உரையை முடிக்கிறேன் வணக்கம்.”
 மதியழகனை தொடர்ந்து மேலும் சில விருந்தினர்கள் பேசியபின் இரவு உணவு முடிந்து விழா இனிதே நிறைவேறியது. மதியழகன் குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்து அவனை பாராட்டினர்.


 காரில் செல்லும்போது குணவதிக்கு மனம் பொறுக்கவில்லை. நடந்ததை நினைத்து நினைத்து மனம் வெதும்பினார். ஏற்கனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்ததால் மதியழகனுக்கு சில மாதங்களில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலைக் கிடைத்தது.
 ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த மதியழகன் பள்ளி படிப்பு, இளங்கலை, முதுகலை, இளநிலை ஆசிரியர் படிப்பு,  இளநிலை ஆய்வுப்படிப்பையும் முடித்து  முதுநிலை ஆசிரியர் தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சிப்பெற்று இன்று  முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றப்போகிறான். தன் ரிலீவிங் ஆர்டரை வாங்க தலைமை அன்னையின் அறைக்கு சென்றான். குணவதி அவனை வருத்தத்துடன் நோக்கி, ”மதியழகன் நீங்கள் இங்கு பணி புரிந்தவரையில் நான் உங்கள் மனதை என்னால் இயன்றவரை எவ்வளவோ காயப்படுத்திவிட்டேன். அதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் இப்பொழுது செல்லும் பள்ளியில் உங்கள் பணியை செம்மையாக செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இங்கிருந்து இனிய நினைவுகளை மட்டும் எடுத்து செல்லுங்கள்” என்றார். ”அதெல்லாம் ஒன்றுமில்லை மேடம். பரவாயில்லை. வருத்தப்படாதீங்க” என்று மதியழகன் கணிவுடன் பேசினான்.
 சில நாட்களில் புதிய பள்ளியில் சேர்ந்து தன் பணியை தொடங்கினான். குடியிருக்க பக்கத்தில் ஒரு வீடும் கிடைத்துவிட்டது. எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த ஒருநாளில்தான் அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளி முடித்து அவன் வீடு வந்து உடை மாற்றி களைப்பாறிக்கொண்டிருந்தபோது அவன் அலைப்பேசி ஒலித்தது. திரையில் ஒளிர்ந்தது குணவதி. அதிர்ச்சியில் சிலநொடிகள் உறைந்துவிட்டு பின் மெல்ல சமாளித்து அழைப்பை ஏற்றான். ”வணக்கம் மேடம், நலமாக இருக்கிறீர்களா?” என்றான். மறுமுனையில் மிகவும் இயல்பான குரலில் ”என்ன மதியழகன் உங்க பள்ளி வாழ்க்கை எப்படி போகிறது? சக ஊழியரின் தோழமை, மாணவர்களின் அணுகுமுறை எல்லாம் பிடித்துவிட்டதா?” என்றார். ”பிடிச்சிருக்கு மேடம். எல்லாம் நல்லா இருக்கு.” மதியழகனும் மிகவும் இயல்பாகவே பேசினான். சிறிது நேர பேச்சுக்குப்பின் ”எதாவது தேவை என்றால் என்னை அழையுங்கள். நம் நட்பு இனிதே தொடரட்டும்” என்று அழைப்பை துண்டித்தார். அவனும் தன் தலைமை அன்னையின் மனமாற்றம் கண்டு மனம் மகிழ்ந்து தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டான். முற்றும்.

Saturday, 27 June 2020

கற்பக விரிட்சம்

அனிதா பள்ளியைவிட்டு நின்று 2 மாதங்கள் கடந்திருந்தது. அவள் வீட்டிற்கு அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தாய்மொழி தமிழாகவே இருந்தாலும், அதில் சரியாக படிக்கவோ எழுதவோ வராது.

இரண்டு வருடங்களாக அந்தப் பள்ளியில் பணிபுரியும் வதனிதான் அவள் வகுப்பில் தமிழாசிரியை. வதனி அவள் பெற்றோருக்குச் செல்லப்பெண், அதுவும் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் அவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து வளர்த்தனர். அதனால் அவளுக்கு அதிகக் கோவம் வரும்.
தான் எதிர்பார்ப்பதை மற்றவர் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அவள் கோவம் பலமடங்காக அதிகரிக்கும்.

 கோவக்காரியாக இருந்தாலும், திறமையும், மற்ற நல்ல குணங்கள் அனைத்தும் இருந்ததால் அவள் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தபோது உடனே தேர்வு செய்யப்பட்டாள்.  இரண்டு மாதங்கள் முன்புவரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்கொண்டிருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்,  எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும் அனிதா தமிழைச் சரியாக எழுதாததால் கோவத்தில் அவளை இரும்பு ஸ்கேலில் அடித்துவிட்டாள். வெண்மை நிறம்கொண்ட அனிதாவிற்கு உடனே தோல் கொஞ்சமாக பிதுங்கிவிட்டது. அப்போதும் வதனி வருத்தமெல்லாம் அடையவில்லை. அன்றைய நாளைக் கடந்துவிட்டாள்.
மறுநாள் அனிதாவிற்குப் பதிலாக அவள் பெற்றோர் பள்ளிக்கு வந்து வதனிமேல் புகாரளித்தனர். அனிதாவின் தோழிகளும் அதை உண்மை என்று சாட்சிக்கூறினர்.

எப்படிக் கையாள்வதென சிறிது யோசித்தத் தலைமை அன்னை, வதனியை அவர்களிடம் மன்னிப்புக் கேட்கச்சொன்னார். வதனி கேட்க மறுக்க, அந்தத் தவறுக்கு அவர்களிடம் வருத்தம் தெரிவித்தத் தலைமை அன்னை, அவர்களின் மகளை ஒழுங்காகப் படிக்கச்சொல்லுமாறு கண்டித்து அனுப்பினார்.

அதன்பின்னும் அனிதா பள்ளிக்கு வரவேயில்லை. நாளாக நாளாக வதனிக்கு வருத்தம் கூடியது. தன்னால் ஒரு மாணவியின் படிப்பு நின்றுவிடுமோ என்று பயந்தாள். அனிதாவின் தோழியிடம் அவளுக்கு போன் செய்து வரச்சொல்லுமாறு சொல்லிவிட்டிருந்தாள்.
அனிதா தன் காலை உணவை முடித்துக் கைக்கழுவிக்கொண்டிருந்தபோது தொலைப்பேசி ஒலித்தது. வேகவேகமாக சென்று போனை எடுத்தாள்.
“ஹலோ, நான் அனிதா பேசுறேன். யார் பேசுறது?” “ஹேய் அனி, நான் நிஷா பேசுறேண்டி. எப்படியிருக்க?” “நல்லா இருக்கேன் நிஷா. நீ எப்படியிருக்க?” “நல்லா இருக்கேண்டி. ஸ்கூலுக்கு வா அனி. படிப்பு போகுதுடி. வதனி டீச்சர்தான் உனக்கு போன் பண்ணி வரச்சொன்னாங்க வாடி.” “இல்ல நிஷா நான் வரமாட்டேன். இனி அந்த டீச்சர் முகத்துல விழிக்கமாட்டேன். எனக்கு படிப்பு வேண்டாம்.” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.
அவளின் தோழிகள் வீட்டிற்கேவந்து  அழைத்துப்பார்த்தும் அனிதா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

அனிதாவிற்கு சிறு வயதிலிருந்தே ஏதோ உடல்நலக் குறைபாடுகள் இருந்தது. அதை அவள் பெற்றோர் சரியாக கவணிக்காமல் விட்டுவிட்டனர்.
அதனால் அவளுக்கு பிக்ஸ் வந்து,இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினாள். இரண்டு பூக்களைப் பெற்ற அனிதாவின் பெற்றோர், ஒரு பூ மலர்ந்து மணம் பரப்பும் முன்னமே மறைந்துவிட்டதை எண்ணி வேதனையடைந்தனர்.

பள்ளிக்கு இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரியவந்தது. செய்தியைக் கேட்ட வதனி உடைந்துபோனாள். செய்யக்கூடாதக் குற்றத்தைச் செய்துவிட்டோம் என்று அழுது கரைந்தாள். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு வதனி பள்ளிக்கு வந்தபோது, தலைமை அன்னை அவளை அழைத்தார்.
அலுவலக அறைக்கு வந்த வதனியிடம் சிறிதுநேர நலம்விசாரிப்புக்குப் பின் வதனியின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்றைக் கேட்டார். எதற்குக் கேட்கிறார் என்று யோசித்தபடியே தன் பர்சிலிருந்தப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொடுத்தாள்.

 அந்தப் புகைப்படம் வதனி பிறந்த அன்று எடுக்கப்பட்டப் புகைப்படம். அதில் அவள் கொழுக்மொழுக்கென்று அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அதை வதனியிடமே தந்து அவளையும் பார்க்கச்சொன்னார்.
இரண்டு நிமிடம் அவளைப் பார்க்கவைத்தபின், வதனியின் கைகுட்டையால் அவள் கண்களைக் கட்டினார். அலமாரியிலிருந்த காட்டன் பஞ்சை எடுத்து அவள் காதுகளில் வைத்து அடைத்தார். மேசைமேலிருந்தப் பொருட்களை ஒதுக்கிவிட்டு, அவள் கைகளையெடுத்து மேசைமேல் வைத்தார்.
தன் வாட்டர் பாட்டிலிலிருந்தத் தண்ணீரை வதனியின் ஒரு கையில் ஊற்றிக்கொண்டே, மறுகையில் அவரின் விரல்களால் வாட்டர் என்று ஆங்கிலத்தில் எழுதினார். பின் தன் உதடுகளை அசைத்து ஏதோ பேசினார். அந்த அசைவுகளை வதனியின் விரல்களால் தொட்டு உணரவும் வைத்தார்.

பத்து நிமிடம் அவளை அதேநிலையில் உட்காரவைத்தபின் பழையபடி அவள் கண்களை அவிழ்த்து, காதுகளிலிருந்தப் பஞ்சை எடுத்துவிட்டுக் கேட்டார்.
“இங்கே என்ன நடந்தது வதனி? நீ எப்படி உணர்ந்தாய்?” ஒன்றுமே புரியவில்லை மேடம். “கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதைப் போலிருந்தது. உங்களின் எழுத்தசைவையோ, உதடசைவையோ உணர்ந்துப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றாள்.
பத்து நிமிடமே உன்னால் இப்படியிருக்க முடியவில்லை. எதையும் உணரமுடியவில்லை. பலவருடங்களாக அமெரிக்காவில் பிறந்தச் சாதனைப்பெண்மணி ஒருவர் இதைத்தான் செய்துகொண்டிருந்தார். அவள் திகைத்துவிழிக்க, தலைமையன்னை அந்தச் சாதனைப்பெண்மணியைப்பற்றிச் சொல்லத்தொடங்கினார்.

1880ஆம் ஆண்டு. ஜூன் 27ஆம் தேதி. அதாவது இதேநாளில், அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் உள்ள தஸ்காம்பியா என்ற சிற்றூரில் ஹெலன் கெல்லர் என்ற பெண் குழந்தைப் பிறந்தது.
பிறக்கும்போது அந்தக் குழந்தை நீ காட்டிய உன் புகைப்படத்தில் இருப்பதைப்போலவே அழகும் ஆரோக்கியமும் கொண்ட குழந்தையாகத்தான் பிறந்தது. பதினெட்டு மாதங்கள் கடந்தநிலையில், அந்த அழகுச்சிலைக்கு பெயர் தெரியாதக் காய்ச்சல் வந்தது. அந்தக் காய்ச்சலால் அவள் தன் வாழ்நாள் முழுவதும்  அனுபவிக்கும்படியானக் கொடூரங்கள் நிகழ்ந்தது. அந்தக் குழந்தை தன் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்துவிட்டது. கேட்கும் திறனை இழந்துவிட்டதால் பேசும் திறனும் பரிபோய்விட்டது.
ஏழுவயதுவரை இருண்ட உலகில் பயணித்த அந்தக் குழந்தையை அவள் பெற்றோர் வாஷிங்டனில் வசித்த தொலைப்பேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெலிடம் அழைத்துச் சென்றனர். அவர் காதுகேளாதோருக்கான கல்வியில் சிறந்து விளங்குபவர்.
அவர்தான் ஹெலன் கெல்லருக்கு ஆன்சலீவன் என்ற ஆசிரியரை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஆசிரியர்தான் ஹெலன் கெல்லர் என்ற தீபத்தை ஏற்றிவைத்தத் தீக்குச்சி.

அந்தத் தீக்குச்சித் தான் அணையும்வரை ஹெலன் கெல்லருடனே பயணித்துத் தன் இருதிநொடியை முடித்துக்கொண்டது. அந்த ஆசிரியர் ஹெலனின் ஒரு கையில் பொருளை தொட்டுக்காட்டியபடியே மறுகையில் அந்தப் பொருளுக்கான வார்த்தையை எழுதுவார்.
எட்டுவயதில் இந்த முறையில் கற்க ஆரம்பித்த ஹெலன் கெல்லர் சிறிதுநேரத்திலேயே 30 சொற்களைக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதக்கற்றுக்கொண்ட அவர், பார்வையற்றோர் உபையோகிக்கும் பிரைலிமுரையை கற்றார். பத்துவயது முடியும் முன்பு, லத்தீன், ஃப்ரென்ச், ஜெர்மன் மற்றும் கிரேக்க மொழியில் பிரையிலில் எழுதக்கற்றுக்கொண்டார்.

சாரஃபிலா என்ற ஆசிரியர் ஹெலனுக்குப் பேச்சுப்பயிர்ச்சியை அளித்தார். அந்த ஆசிரியரின் உதடு மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு அவர் பேசுவதைப் புரிந்து பேசப்பயின்றார்.
ஆன்சலீவனின் துணையோடு ஹெலன் ரெக்லிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1904ஆம் ஆண்டு இலங்கலைப் பட்டம் பெற்றார். தன் கல்லூரி வயதிலேயே the story of my life. என்ற சுய சரிதையை எழுதினார். அவருடைய வாழ்நாளில் அவர் 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

பிரையில் தட்டச்சு மற்றும் சாதா தட்டச்சைக் கற்றுக்கொண்டார். குதிரைச்சவாரியும் டேண்டம் பைசைக்கிள் ஓட்டவும் கற்றார்.
1919ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஹெலன் கெல்லர் திரைப்படத்தில் அவரே நடித்திருக்கிறார். அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட பார்வையற்றோர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.

உடல் ஊனமுற்றோருக்காக பேசிய அவரைப் பலநாடுகள் பேச அழைத்தன. 1930ஆம்  ஆண்டு தொடங்கி, 39 நாடுகளுக்குச் சென்று பேசினார். பேசிய இடங்களிலெல்லாம் பார்வையற்றோர் பல்கலைக்கழகத்திற்காக நிதி வசூலித்தார்.

1932ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டிலுள்ள கிலாஸ்கோ பல்கலைக்கழகம் ஹெலன் கெல்லருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது  உடலுறுப்புகள் இழந்தவர்களைச் சந்தித்து ஊக்கமூட்டினார். தம் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
1964ஆம் ஆண்டு தனிநபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதான அதிபரின் சுதந்திரப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றி விளக்கு 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி தன் ஜோதியை நிறுத்தியது.

தலைமையன்னை இதைச் சொல்லிமுடித்ததும் வதனியின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.. அவளை சிறிதுநேரம் அழவிட்டத் தலைமையன்னை மீண்டும் பேசினார்.
“ஹெலன் கெல்லரைப்பற்றி நீ இன்னும் நிறையப்படித்துத் தெரிந்துகொள்ளலாம். நான் இதை இப்போது உனக்குச் சொல்வது ஆன்சலீவனைப்பற்றி நீ புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
பொறுமையுடனும், புத்திசாலித்தனத்துடனும் தன் மாணவிக்குக் கற்பித்தது மட்டுமின்றிக் கடைசிவரை ஹெலனோடு பயணித்து அவரை வெற்றிச்சிகரத்தைத் தொடவைத்திருக்கிறார்.
ஆயிரம் மாணவர்களுக்கு ஏனோதானோவென்று கற்பிப்பதைவிட ஒரே ஒரு மாணவியை உயரத்தூக்கிப்பார்ப்பதுதான் ஓர் ஆசிரியருக்கு வெற்றி. நிதானம் பெண்ணின் பிறந்தவீட்டுச் சொத்து. அதைக் கைவிடாதே. அனிதாவின் இறப்பிற்கு நீ காரணமல்ல. அவளின் உடல் கோளாறுகள்தான் காரணம்.
அதேநேரம் உன் கட்டுப்பாட்டை இழந்து அவளை அடித்ததும் தவறு. ஆசிரியர் நம் நன்மைக்காகத்தான் அடிக்கிறார்கள் என்பதை உணராதவள் முட்டாள்தனமாக படிப்பை நிறுத்தியதும் தவறுதான்.

ஆசிரியர் மாணவர்களை அடிக்கக்கூடாது, மாணவர்களும் ஆசிரியரை பணிந்துபோக வேண்டியதில்லை என்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. ஆசிரியரும் இன்னொரு அண்ணை என்பதை ஆசிரியர்களோ, மாணவர்களோ அல்லது பெற்றோரோ புரிந்துகொள்வதில்லை.
நகமும் சதையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர் மாணவர் உறவு, எலியும் பூனையுமாக மாறிக்கொண்டு வருகிறது.
உன் கோவத்தைக் குறை. இன்றுதான் புதிதாய் பிறந்திருக்கிறாய் என்று நினை. நன்கு யோசித்துவிட்டுத் தெளிவான மனநிலையோடு நாளை பள்ளிக்கு வா.” என்று அவளை அனுப்பி வைத்தார்.

பள்ளியிலிருந்துப் புறப்பட்டவள் நேரே அனிதா வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அவள் புகைப்படம் ஒன்றையும் வாங்கிக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். ஹெலன் கெல்லர் எழுதிய என் கதை என்ற புத்தகத்தைப் படித்தாள். அதில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும், அவள் நடந்துகொண்ட முறையையும் ஒப்பிட்டுப் பார்த்து வெட்கிப்போனாள்.
அனிதாவின் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியான கற்பகம் என்ற பெண்ணை அனைத்து ஆசிரியர்களும் தேற்றமுடியாதவள் என்று விட்டுவிட்டனர். அந்தப் பெண்ணை எப்படியாவது தேற்சியடையச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் வதனி.

குடும்பச்சூழல் காரணமாக மனநிலைப் பாதிக்கப்பட்டவளைப்போல் இருந்தவளுக்கு முடிந்தளவு அன்பைத் தந்தாள். இரவு பகல் பாராமல் அவளைப் படிக்கத் தூண்டினாள்.
என்னதான் படிக்கவைத்தும் கற்பகத்திற்குப் படிப்பு ஏறவில்லை. வதனிக்குக் கோவம் வரும்போதெல்லாம் ஆன்சலீவனையும்  ஹெலன் கெல்லரையும் நினைத்துக்கொள்வாள். அனிதாவின் புகைப்படத்தையும் பார்த்துக்கொள்வாள்.
 கற்பகத்திற்கு பாட்டு மற்றும் நடனத்தின்மீது ஆர்வமிருப்பதைத் தெரிந்துகொண்ட வதனி படிப்போடு கூடவே பரதமும் பாட்டும் கற்றுக்கொடுத்தாள். வதனிக்கு அவை இரண்டும் தெரிந்ததால் பாட்டிற்கும் பரதத்திற்குமுரிய சிறப்பு வகுப்புகளை அவளே எடுத்தாள்.  ப்லஸ்டூவில் ஓரளவு நல்ல மதிப்பெண்ண்ஓடு தேற்சியடைந்தாள் கற்பகம்.
பட்டப்படிப்பைத் தொடர விரும்பாத கற்பகத்தை வதனி அவள் வீட்டிற்கே அழைத்துச் சென்று தங்கவைத்து பரதத்திலும் பாட்டிலும் முழுமூச்சோடு கவனத்தைச் செலுத்தவைத்தாள்.
மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் கொண்ட வசீகரனை மணந்துகொண்டதால் வதனிக்கு இதைச் செய்வது எளிதாகவே இருந்தது. வசீகரன் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தான்.

குடும்பச்சுமை வதனியின் தலையில் ஏறாதபடியும், யாரும் அவளைக் கேள்விக் கேட்காதபடியும் பார்த்துக்கொண்டான்.
காலையில் தன் ஆசிரியர் பணியையும், மாலையில் கற்பகத்திற்கான நடன வகுப்பையும் எடுத்து வந்தாள். நடனத்திலும் பாட்டிலும் சிறந்து விளங்கினாள் கற்பகம். அவள் நடன அரங்கேற்றத்தை வதனி தன் செலவிலேயே பிரம்மாண்டமாக நடத்தினாள்.
கச்சேரிகளுக்குச் சென்று வந்தாள் கற்பகம். அவள் ஒவ்வொருமுறை மற்றவரிடமிருந்துப் பாராட்டைப் பெரும்போதும் வதனிக்குப் பெருமையாக இருக்கும். ஆறு வருடங்கள் வதனியுடனிருந்த கற்பகம் தன் சொந்த ஊரில் ஒரு நாட்டியப் பள்ளியைத் துவங்கப்போவதாகச் சொல்லி ஊருக்குக் கிளம்பினாள். களையென்று அனைவராலும் அகற்றப்பட்ட கற்பகத்தின் கலை ஆர்வத்தைக் கண்டறிந்து, அவளை சிறந்தக் கலைஞராக ஆக்கிவிட்டாள் வதனி.

அன்று ஆன்சலீவனால் ஹெலனின்மீது தூவப்பட்ட வெற்றி விதை விரிட்சமாக வளர்ந்தது. இன்று வதனியால் கற்பகத்தின்மேல் தூவப்பட்ட வெற்றி விதையும் விரிட்சமாகிவிட்டது.
வதனியும் வசீகரனும் கணிசமானத் தொகையைக் கற்பகத்தின் பள்ளிக்கு நண்கொடையாகக் கொடுத்தனர்..
 “மேடம், நான் இதை வாங்கிக்கனும்னா ஒரு நிபந்தனை.” “என்னம்மா?” “உங்க அலமாரியிலிருந்த என் கதைப் புத்தகத்தை நானும் படிச்சியிருக்கேன். அதில் வரும் ஆன்சலீவனாக நீங்க இருக்க நினைக்கும்போது. நான் ஏன் ஹெலன் கெல்லராக இருக்க நினைக்கக்கூடாது? உங்களின் கடமைகள் அனைத்தும்  முடிந்ததும் நீங்கள் என்னிடம் வந்துவிட வேண்டும். உங்களின் கடைசிக் காலங்களை நான் என்னுடன் பகிர விரும்புகிறேன். இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் இதைக் கொடுங்கள்.” என்று சொல்ல, வதனிக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
அன்றைக்கு சூழல் எப்படியிருக்குமோ? எல்லோராலும் ஆன்சலீவன் ஹெலன் கெல்லராக முடியுமா? சில விஷயங்களை நாம் நினைத்தாலும் அது நடப்பது காலத்தின் கையிலல்லவா இருக்கிறது? என்றெல்லாம் வதனி யோசித்தாலும் கற்பகத்தின் திருக்திக்காக வாக்குறுதியளித்தாள். அதன்பின்னே கற்பகம் அந்த நண்கொடையைப் பெற்றுக்கொண்டாள்.

ஆசிரியர் பணியிலும் குடும்ப வாழ்விலும் ஜெயித்துவிட்டத் தன் மனைவியைப் பெருமைப் பொங்கப் பார்த்தான் வசீகரன்.
வதனியின் ஐந்து வயது மகள் மதுவந்தியும், மூன்று வயது மகன் சுதாகரனும் கற்பகத்திற்கு கண்ணீரோடு விடைகொடுத்தனர். கற்பகமும் அந்த பூக்குவியல்களை அணைத்து விடுவித்தாள்.
பட்டுப்போகவிருந்த தன் வாழ்வை பூஞ்சோலையாக்கிவிட்ட இந்த இதயங்களின் பாசத்தைப் பெற என்ன தவம் செய்தோம் என்று நெகிழ்ந்தபடியே கற்பகம் பேருந்தில் ஏறினாள்.
கற்பகம் ஏறிய பேருந்துப் புறப்பட்டபோது வதனிக்கு நெஞ்சு கணத்தது. மதுவந்தியைப் புகுந்தவீட்டிற்கு அனுப்பும்போது எப்படி உணர்வாளோ அப்படிப்பட்ட துயரத்தை அவள் இதயம் அனுபவித்தது.

மாணவர்கள் தம் பள்ளிக்காலங்களை முடிக்கும்போதும், ஒவ்வொரு வகுப்பாகக் கடக்கும்போதும் பிரிவுத் துயர் அவர்களை மட்டுமா ஆட்கொள்கிறது? அதே அளவிலான பிரிவுத்துயரை ஆசிரியர் அனுபவித்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
எப்படிப்பட்ட மாணவக்குழுக்களாக இருந்தாலும் கடந்து செல்ல வேண்டியநிலை அவர்களுக்கு. சிற்பிக்குச் சிற்பங்களைச் செதுக்கும் உரிமை மட்டும்தான் இருக்கிறது. அதைத் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லையே.

மிகுந்த மனபாரத்துடன் கற்பகத்தை வழியனுப்பிவிட்டு வந்த வதனிக்கு தன் பழைய நினைவுகள் மனதை ஆக்கிரமித்தது. தன் பையிலிருந்த அனிதாவின் புகைப்படத்தை எடுத்துப்பார்த்தாள்.
அதில் அனிதாவின் இதழ்கள் வதனியைப் பார்த்து பெருமிதப்புன்னகைச் சிந்தியது. அதேநேரம் அவள் கண்கள் தான் செய்த மடத்தனத்தால் வதனிக்கு ஏற்பட்ட கரும்புள்ளிக்காக மந்னிப்பை யாசித்தது.

Sunday, 21 June 2020

மேதையின் சைக்கிள் பயணம்.



தந்தையர் தினத்தை முன்னிட்டு ராஜுவின் மகள் நாகேஷ்வரி அவருக்கு ஒரு சைக்கிளைப் பரிசளித்து வாழ்த்தினாள்.
சாவியைக் கையில் வாங்கியபோது அந்தச் சாவி கணமாக இருப்பதுபோல் அவருக்குத்  தோன்றியது. அது சாவியின் கணமா அல்லது சாவியைப்பிடித்திருக்கும் இதயத்தில் சுகமாய் உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளின் கணமா என்பதை அந்த இரு இதயங்கள் மட்டுமே அறியும்.
“அப்பா, என் பரிசு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” “என்னம்மா! இந்தக் கேள்வியை நீ கேட்கலாமா? பதில் தெரிந்தக் கேள்வியைக் கேட்டு நேரத்தை வீணடிக்காதே. தயாராகி வா. இருவரும் இதில் ஏறி ஒரு பயணம் சென்று வரலாம்.” இப்படிச் சொல்லும் அந்த மனிதரின் வயது 60ஐ கடந்திருக்கும்.
இருவரும் தயாராகி வெளியே வந்துச் சைக்கிளில் ஏறி அமர்ந்தனர். பெடலில் காலை வைத்து அவர் மிதிக்கத் தொடங்க அடுத்த அடி எடுத்து வைக்காதபடி நினைவுகள் அவரைத் தடுத்து நிறுத்தியது.
பல வருடங்களுக்கு முன்:
தன் மகளை பேருந்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்த ராஜு சைக்கிள் கடையில் நல்ல சைக்கிளாக வாங்க வேண்டுமென்று சைக்கிள்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இன்றுதான் அவர் மகள் பள்ளிக்கு செல்லும் முதல்நாள். முதல்நாளே அவர் மகள் பேருந்தில் ஏற கஷ்டப்படுவதையும், அவளுடன் ஏறும் பயணிகள் அவளை ஏறமுடியாதபடி தடுமாறவைப்பதையும் பார்த்தவர் இனி ஒருநாள்கூட தன் மகள் பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தார்.
 அவளை யாரும்  தொந்தரவு செய்யமுடியாதபடி பார்த்துக்கொள்ளவும்,  தன் மகளை தானே சுமக்கவும்   இந்த இரண்டுச் சக்கரக் காரை வாங்குகிறார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்து, குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி, ஒரு கடையில் உடைகளுக்குப் பொத்தான் தைக்கும் பையனாக  வேலையில் சேர்ந்து, தொழிலைக் கற்றுக்கொண்டு தையல்காரராக உயர்ந்திருக்கும் அவருக்கு இது நிச்சயம் கார்தான்.
ஏழுரூபாய் சம்பளத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் இப்போதுதான் பலநூறுகளையும், சில ஆயிரங்களையும் பார்க்கிறார்.
சைக்கிளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். “ஏற்கனவே இடுப்புவலின்னு சொல்றீங்க. மருந்துச் சாப்பிடுறீங்க. இதில் நாளெல்லாம்உட்கார்ந்தபடி மெஷினை   மிதிக்கனும். கத்தரிப்பிடிச்சி துணி வெட்டனும். வயசு நாற்பதாகப்போகுது. இவ்வளவு கஷ்டத்துல உங்கப்பொண்ணை சைக்கிள்ள கூட்டிட்டுப்போகனுமா? உடம்பு என்னாகுறது.  பஸ்ல போக அவ  பழகிடுவா. வேண்டாமே” என்றார் அவர் மனைவி.
அவர் மனைவியின் பேச்சைக் கேட்பதாக இல்லை. மறுநாள் பயணத்திற்கு தன்னையும் தன் சைக்கிளையும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய மகளுக்கு ஒரே சந்தோஷம். அவர் எதிர்பார்ப்பதும் அதைத்தானே.
மறுநாள் அவரின் சைக்கிள் பயணம் இனிதே தொடங்கியது. மெஷின் பெடலை மிதித்தக் கால்கள் சைக்கிள் பெடலை மிதிக்கத் தயாராயின. கத்தரிப்பிடித்து காப்புக்காய்ச்சியிருந்தக் கைகள் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டிருந்தன.
பின்னால் அமர்ந்திருந்தவள் விழாமலிருக்க  அவள் அப்பாவைப் பிடித்துக்கொண்டாள். பயணம் தொடங்கிய இடம் நந்தனம் ஹௌசிங் போர்டிலிருக்கும் ஐந்தாவது மெயின் ரோடு. சென்று சேர வேண்டிய இடம் ஜெமினி பிரிட்ஜிற்கு பக்கத்திலிருக்கும் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி.
சைக்கிள் ஓட ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் கடந்ததும் தன் மகளிடம் இது சர்ச் என்று வந்திருக்கும் இடத்தை விளக்கினார். சிறிது தூரம் சென்றதும் இது சிவாஜி வீடு என்றார். இப்படியே அவர்கள் கிளம்பிய இடத்திலிருந்து பள்ளி சென்று சேரும்வரை வழியில் கடந்து செல்லும் இடங்களையெல்லாம் அவளுக்கு விளக்கிக்கொண்டே சென்றார்.
அவளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். இப்படித்தான் அவர்களின் ஒருநாள்  பயணம் இருக்கும். மாலையில் பள்ளி வாசலுக்கே பேருந்து வருவதால் அவள் அன்னை அழைத்து வந்துவிடுவார்.
பயணத்தின்போது அவருக்கு அவர் பெண்ணிடம் பேசிக்கொண்டே வரவேண்டும். ஒருநாள் அவள் முகத்தைத் தூக்கிக்கொண்டால் அந்தப் பயணமும் அன்றைய நாளும் அவருக்கு கசந்துவிடும். அதற்காக அவர் மகளின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை நிரைவேற்றிவிடுவார்.
அவர்களின் ஆத்மார்த்தமான பாசத்திற்கு சாட்சி பழைய பாடல்கள். கண்ணதாசன் வரிகளும் சௌந்தராஜன் சுஷீலா குரல்களும்தான் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவள் கண்விழிப்பதும், இரவு கண்மூடி உறங்குவதும் அந்தப் பாடல்களைக் கேட்டபடிதான்.
பயணத்தின்போதும் ராஜு மகிழ்ச்சியாக அந்தப் பாடல்களை தன் மகளின் காதில் கேட்கும்படி முனுமுனுத்தபடி செல்வார்.
 வீட்டுச்சூழல், வேலைப்பளு, கடன் சுமை, பிள்ளைகளின் எதிர்காலம், உடல்நலக்குறைவு இவையனைத்தையும் மறந்து முகத்தில் புன்னகையோடும் மனதுக்கு நிம்மதியோடும் அவர் பயணிக்கும் அழகான தருணமது.
பள்ளிக்குள் சென்று இறங்கும்போது, அவர் மகள் அவர் கையைத் தொட நேரிடும். அப்போது அவள் தன் கைகளில் வியர்வையின் பிசுபிசுப்பையும் ஈரத்தையும் உணர்வாள். ஓர் உழைப்பாளியும் பாசவெறி கொண்ட மனிதனுமான தன் தந்தையின் உன்னதத் துளிகள் அவை என்பதை அந்தப் பேதை நெஞ்சமும் புரிந்துக்கொள்ளும்.
எப்போதாவது அவர் மாலையில் அவளை அழைக்க வரும்போது வழியில் இருக்கும் தேனீர்கடையில் அவளுக்கு காஃபி பட்டர்பிச்கட்வாங்கிக்கொடுத்துவிட்டு அவரும் தேனீர் அருந்திவிட்டு அழைத்து வருவார்.
அவர் மகள் மதிய உணவை மறந்துவிட்டு வரும்போதும், கோபத்தில் சாப்பிடாமல் பிடிக்காதச் சாப்பாட்டை வீட்டில் விட்டுவிட்டு வரும்போதும், மதிய வேளையில் வெயிலைப் பொருட்படுத்தாமல், சைக்கிளில் பள்ளிக்கு வந்து அவளுக்குப் பிடித்த உணவை வாங்கிக்கொடுத்துவிட்டுச் செல்வார்.
காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் சைக்கிளில் பள்ளிக்கும் வீட்டிற்கும் மாறி மாறிச் சென்ற நாட்களும் உண்டு.
சிலநேரம் அவர் மகள் தூங்கிக்கொண்டே வருவாள். அப்படி அவள் தூங்கி வழியும் வேளையில், அவள் விழாதபடி தன்னையும் தன் சைக்கிளையும் பேலன்ஸ் செய்வார். அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சைக்கிளை ஓட்டுவார்.
அவள் தூங்காமலிருக்க அவளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே வருவார். குறிப்பாக பள்ளியில் நேற்று நடந்ததைப்பற்றியும், இன்று நடக்கப்போவதைப்பற்றியும் கேட்பார். “இதோ வந்துடிச்சும்மா. இன்னும் கொஞ்ச தூரம்தான். தூங்காதே.” என்று அன்பாகச் சொல்வார்.
பந்தபாசத்தைத் துறந்து கன்னியாகவே வாழ்ந்து உலகிற்கு சேவை புரிவோம் என்று உறுதிகொண்ட நெஞ்சங்களிலும் பாசத்தின் ஈரத்தைச் சுறக்கச் செய்தப் பயணமது.
அவள் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைத் தைத்தும், அங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு உடைகள் தைத்தும் தன் தொழிலில் முன்னேறினார்.
பெண்களை மரியாதையுடன் பார்க்கும் அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. அவரின் பாசத்திற்காகவே அவரை மதித்தனர்.
அவர் மகளை டெய்லர் மகள் என்று கொண்டாடினர். தன் மகளைப்போல் மற்றவரையும்    பாசத்தோடு வருடும் அவர் குரலும் செய்கையும் அங்கு படிக்கும் மாணவமாணவிகளை பெரிதும் கவர்ந்தது. அங்க்கிள் அங்க்கிள் என்று அன்போடு அழைத்தனர்.
ஒருநாள் அவர் மகள் தான் கவிதைப் போட்டியில் கலந்திருப்பதாகவும், ஒரு கவிதைச் சொல்லித்தர வேண்டுமென்றும் அவரைக் கேட்டாள். 5ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர்,  அவள் பள்ளியில் இருப்போரால் அவருக்குக் கிடைத்த நன்மைகளை வைத்து, ‘வானம்தான் எங்கள் பள்ளி அதிலிருக்கும் நட்சத்திரம்தான் எங்கள் ஆசிரியர்கள்’ என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொடுத்தார்.
அவள் அந்தக் கவிதையைச் சொல்லி இரண்டாம் பரிசைப் பெற்றாள். அடுத்தமுறை கவிதைக் கேட்டபோது அவளையே எழுதிக்கொள்ளச்சொல்லி அவள் கவித்திறனைத் தூண்டிவிட்டார்.
மேடையில் பேச வேண்டியவற்றை அவள் ஆசிரியர்கள் அவளுக்கு எழுதிக்கொடுப்பார்கள். அவள் அப்பா அதைப் படித்து அவளுக்குச் சொல்லிக்கொடுப்பார். தங்குத் தடையின்றி அவள் பேசிக்காட்டும்வரை அவளை திரும்பத் திரும்பச் சொல்ல வைப்பார்.
தமிழ்தான் அவருக்குப் படிக்கமுடியும். ஆங்கிலப் பேச்சையும் அவளைப் பேசச் சொல்வார். அதையும் அவள் தடையில்லாமல் சொல்ல வேண்டும். இலக்கணப்பிழை வராமலும், ஒரு வரியைக்கூட  விடாமல் பேசவும் அவள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேடையில் பேசும் நாளன்று, அவள் பேசிமுடித்து மற்றவரிடம் கைத்தட்டல்களும், வாழ்த்துக்களும் வாங்கும்வரை நின்று பார்த்துவிட்டு தன் சைக்கிளில் வீடு திரும்புவார்.
பரிட்சை நேரங்களில் சைக்கிளில் பயநிக்கும்போது, “இன்னைக்கு என்னம்மா பரிட்சை?” ”தமிழ்.” “படிச்சியா?” “படிச்சேன்.” “நல்லா எழுதுவியா?” “ம்.” “நீ எழுதிடுவம்மா என் பெண்ணாச்சே.” இப்படித்தான் இவர்களின் உரையாடல்கள் இருக்கும்.
ஏதோ ஒருநாள் அவள் அப்பா அதைக் கேட்காவிட்டால் அவளுக்கு அந்தப் பரிட்சை நன்றாக இருக்காது. அதை அவள் அப்பாவிடமும் சொல்வாள். அவரும் அதைப் புரிந்துகொண்டு  மறக்காமல் கேட்டுவிடுவார். மறக்கும் சமயங்களில் மனதுக்குள் கேட்டுக்கொண்டதாக மகளிடம் சொல்வார்.
இவர்களின் சைக்கிள் பயணம் 13 வெயில் காலங்களையும், 13 மழைக்காலங்களையும் 13 குளிர் காலங்களையும் சந்தித்திருக்கிறது. படிப்பில் பெண்ணவள் மனம் சலித்து விடுமுறை எடுத்தாலும் தந்தையவர் உடல் சலிக்காமல் விடுமுறைகளை தவிர்த்துவிட்டு அழைத்துச் செல்வார். ஒருநாள்கூட அவள் தாமதமாக செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கடைசிவரை அதைக் கடைபிடிக்கவும் செய்தார்.
ப்லஸ்டூ படிக்கும்போது அவள் படிப்பிற்காக ஹாஸ்டலில் சேர்ந்தாள். வாழ்க்கைநிலையில் ஏற்பட்ட மாறுதல்களாலும் வயது மூப்பினாலும் அதற்குமேல் அவர்களால் அந்த சைக்கிள் பயணத்தைத் தொடர இயலவில்லை.
பல வருடங்கள் கழிந்தும், அந்தப் பல வருடங்களில் அவர்கள் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் வந்தபோதும், அந்த நினைவுகள் மட்டும் அவர்கள் இதயத்தில் பசுமையாய் இருக்கிறது.
அவர் சைக்கிளைவிட்டு இறங்கினார். அவளும் இறங்கி உள்ளே சென்றுவிட்டாள். அவர் மகள் அவருக்குப் பரிசளித்தப் பொக்கிஷத்தைப் பத்திரமான இடத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு அவரும் உள்ளே சென்றார்.
வாழ்க்கையில் இழந்துவிட்டப் பருவங்களையும், கடந்துவிட்டத் தருணங்களையும்  மீண்டும் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் அந்த நினைவுகளின் கணமும், ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பும்,  சோகம் கலந்த சுகமும் குறைந்து காணாமல் போய்விடும்.
அதனால்தான் நம்மிடமிருந்து எது பரிக்கப்படுகிறதோ, அது அதுவாகவே திரும்பக் கிடைப்பதில்லை.
இவர்களுக்கும் தங்களின் நினைவுகளின் கணத்தைக் குறைக்கவோ இறக்கி வைக்கவோ விருப்பமில்லை.
வாழ்நாள் முழுதும் அந்த நினைவுகளின் பாரத்தைச் சுகமாய் சுமக்க நினைக்கிறார்கள்.
சுமக்கட்டுமே!
பின் குறிப்பு:
இந்தக் கதையை என் தந்தைக்கும், அவரைப்போலவே பிள்ளைகள் மேல் பாசத்தைப் பொழியும் அனைத்துத் தந்தையர்க்கும் சமர்ப்பிக்கிறேன்.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.