Wednesday 29 July 2020

'சிரிங்க, ஆனா சிந்திக்காதீங்க.'

    

வணக்கம் நண்பர்களே.
ரொம்பநாளா நான் உங்களை சிரிக்கவைக்கலை இல்லையா? இன்னைக்கு சிரிக்கலாமா?

நான் முன்னாடி வேலை செய்த அலுவலக எம்டியும் அங்க வேலை செய்த இன்னும் சிலரும் சேர்ந்து எனக்கு கண் பார்வை வரவைக்கணும்ற நல்ல எண்ணத்துல பெயர் சொல்ல விரும்பாத ஹாஸ்பிட்டல்ல அப்பாயின்மெண்ட் வாங்கித்தர முடிவு பண்ணாங்க. கொஞ்சநாள் முன்னாடியே எங்களுக்கு தகவல் சொல்லிட்டாங்க. அதுனால எங்க அம்மா ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தாங்க.

“நல்லா சாப்பிடு இப்பவே. அடுத்த வாரம்லாம் ரொட்டியும் பாலும்தான் சாப்பிடனும்.” அப்படின்னு சொல்ல, அப்பா காரணம் கேட்டார். அதுதான் அவளுக்கு கண் ஆப்பரேஷன் பண்ணப்போறாங்களே ஹாஸ்பிட்டல்ல வேற என்ன கொடுக்குறதுன்னு சொன்னாங்க.


ஹாஸ்பிட்டலுக்கு போகிற நாள் வந்தது.  போனோம். காலையிலருந்து வெயிட் பண்ணி உள்ளப்போனோம். ஒரு லேடி டாக்டர் இருந்தாங்க. ரெண்டு கண்களையும் திறந்து திறந்து பார்த்தாங்க. லைட் அடிச்சிப் பார்த்தாங்க. இது தெரியிதா? அது தெரியிதான்னு கேட்டாங்க.
கடைசியா ஒரு கேள்வி கேட்டாங்க. பார்வை வராது வேற என்ன பண்ணனும்? நான் மனசுல நினைச்சிக்கிட்டேன் வேற என்னதான் பண்ணப்போறீங்க? அதையே கொஞ்சம் நாகரிகமா அவங்ககிட்ட கேட்டேன். செயற்கை கண் வைக்கலாம் அழகுக்குன்னு சொன்னாங்க. யோசிச்சி சொல்லுறோம்னு வந்தாச்சி. அம்மா எதிர்பார்ப்பு டொய்ங்னு ஆய்டிச்சு. அந்த டாக்டரை குறை சொல்வதற்கு இல்லை. பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை வரவைக்க முடியாதுதான். அது தெரிஞ்சிதான் அலுவலக அதிகாரிகளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சென்றோம். இது தெரிஞ்சும் எங்க அம்மா எதிர்பார்ப்பு அதுக்கு அந்த டாக்டர் வைத்த ஆப்பு. ஹா ஹா. அவங்க சொன்ன விஷயம் சரிதான். ஆனா சொன்னவிதம் சிரிப்பா இருந்தது.


இப்போ எல்லாரும் ஒவ்வொரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதுல வீடியோ போடுறாங்க. அது தப்பில்லை. ஆனா போடுற வீடியோ ஒழுங்கா இருக்கணும் இல்லையா? சமீபத்துல நான் டெலிகிராம் பயன்படுத்த கத்துக்க ஆரம்பித்ததும் யூடியூப்ல டெலிகிராம் பற்றி போட்டுருக்க வீடியோலாம் பார்த்துட்டு இருந்தேன். அதுல ஒரு வீடியோ ஆஹா அருமை அருமை. ஒருத்தர் டெலிகிராம் படிப்படியா எப்படி இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லிட்டே வந்தார். சரியா இன்ஸ்டால் பண்ணவும் செஞ்சாரு. பெயர் ஃபோன் நம்பர் ஓடீபி லாம் கொடுத்தாரு. கடைசியா என்ன சொன்னாரு தெரியுமா? இதுல வருத்தத்திற்குறிய விஷயம் என்னன்னா இது எனக்கு சப்போர்ட் பண்ணல. உங்க யாருக்காவது சப்போர்ட் பண்ணா எனக்கு தெரியப்படுத்துங்க. அவ்வளவுதான் வீடியோ.

 எதையோ புதுசா கத்துக்கப்போறோம்னு ஆர்வமா இருந்த எனக்கு எப்படி இருக்கும்? எனக்கு மட்டுமா அதை எத்தனை பேர் பார்க்கிறாங்க அவங்கலாம் என்ன நினைப்பாங்க? சப்போர்ட் பண்ணுமா பண்ணாதான்னு தெளிவா தெரிஞ்சிகிட்டு                                                                                         போடவேண்டாமா?

இப்போ நான் புதுசா ஆடியோ எடிட்டிங் பண்ணி விளையாட ஆரம்பிச்சிருக்கேன். நான் போய் விளையாடிவிட்டு அடுத்தப் பதிவை எழுதத் தொடங்குகிறேன். மறுபடியும் சந்திக்கலாம். வரட்டுமா?

Sunday 26 July 2020

’கடவுளின் பிரதிநிதி’ தொடர்ச்சி.

இதன் முந்தைய பகுதியைப் படிக்க்

3

அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் பார்த்து. “உங்களுக்கு உங்க அம்மாகிட்ட பேசனுமா?” “பேசனும்தான் ஆனா அம்மாதான் இல்லையே?” என்று ஆவலும் ஏக்கமும் நிறைந்தக் குரலில் கேட்டது ஒரு மழலை. ”இல்லை இருக்காங்க. அவள் பெயர் நிலவினி. அவதான் உங்களைப் பார்த்துக்கச்சொல்லி என்னை  இங்க அனுப்புனாங்க. அப்பாவை நினைச்சு அழக்கூடாது. அம்மா இருக்கேன். அப்பாவும் தெய்வமா இருந்து வழிநடத்துவார்னு சொன்னாங்க. சீக்கிரம் உங்களைப் பார்க்க வரேன்னு சொன்னாங்க.”

பிஞ்சு இதயங்கள் என்றும் பச்சைமண். அதில் எதை விதைத்தாலும் ஆழப்பதிந்துவிடும். அதிலும் பாசத்திற்காக ஏங்கும் இவர்களுக்கு பாசம் காட்ட இன்னும் ஒரு இதயம் இருக்கிறது என்று தெரிந்தால் மகிழ்ந்து போவார்கள் என்பதைப் புரிந்துகொண்டவள், “முகிலப்பா எப்படியோ அப்படித்தான் நிலவினி உங்களோட அம்மா. வெளியூரில் வேலையில் இருப்பதால் உங்களைப் பார்க்க வரவில்லை. பேசமுடியவில்லை. முகிலப்பா பார்த்துப்பார்னு நிம்மதியா இருந்தாங்க.” என்றாள்.

தங்களை வேலை காரணமாக பார்க்க வராத அம்மாவை அவர்களால் நம்பவோ ஏற்கவோ இயலவில்லை. அவர்கள் தமிழழகியை நம்பாத பார்வை பார்க்க, அதைப் புரிந்துகொண்டவள் ”நீங்க அவளை ஒருமுறை அம்மான்னு கூப்பிடுங்க. அவ உங்க அம்மா இல்லன்னா உங்ககிட்ட பேசமாட்டா. உங்க அம்மாவா இருந்தா எப்படி பேசுறான்னு நீங்களே பாருங்க.”

முகிலனைப்பற்றியும் இந்த இல்லத்தைப்பற்றியும் நிலவினிக்குத் தெரிந்திருந்ததால் நம்பிக்கையுடன் அவளை அழைத்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.

   ஃபோனை எடுத்த நிலவினி தமிழ் என்று சொல்லும் முன் அம்மா! என்று 15 குரல்களும் ஒரே நேரத்தில் கேட்டது. முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நின்றிருக்க, மீண்டும் அதே குரல்கள் இன்னும் சத்தமாய். அம்மா! அவள் அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள். மூன்றாம் முறையாக அம்மா! என்றதும் அவள் உடலும் மனமும் இனிய ஸ்வரங்களால் மீட்டப்பட்டதைப்போல் உணர்ந்தாள். வயிற்றை மென்மையாய் அழுத்திக்கொண்டாள். தாய்மையின் உணர்வுப் பிரவாகத்தில் அவள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது.

“அக்கா இவங்க எங்ககிட்ட பேசமாட்டுறாங்க. இவங்க எங்க அம்மா இல்.” “ஐயோ வேண்டாம்! அந்த வார்த்தையைச் சொல்லிடாதீங்க! என்னை அம்மான்னு கூப்பிட்ட வாயால அப்படி சொல்லாதீங்க. அம்மாதான்! நான் உங்க அம்மாதான்! நான் உங்க அம்மாவேதான்! உங்ககிட்ட பேசாம பார்க்காம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க!” என்று கதறினாள். அவள் கதறலில் அவர்கள் எதைக்கண்டனரோ அவள் தாய்மையிடம் தங்களை ஒப்படைத்து நின்றனர்.

”அழாதீங்கம்மா! ஏன் எங்களைப் பார்க்க வரல? ஏன் எங்ககிட்ட பேசல?” என்று அம்மாவைச் செல்லமாய் திட்டியதுஓர் குட்டி ஆண் சிங்கம். “வேலை அதிகமா இருந்ததுப்பா அதான் வரல. அதோட முகில் அப்பா உங்களைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிறார். என் குழந்தைங்க நிம்மதியா இருக்காங்கன்னு தோனுச்சு. அதான் வரல.” “அப்பா சாமிகிட்ட போயிட்டாங்கம்மா. நீங்க இங்க வாங்க அம்மா. ப்லீஸ். பயமா இருக்கும்மா வாங்க” என்று கெஞ்சியது ஓர் பெண் கிளி.

“கண்டிப்பா வரேன்மா. நீங்க எல்லாரும் நல்லா சாப்பிடனும். படிக்கனும். தூங்கனும். யாரையும் தொல்லை செய்யக்கூடாது. சரியா? ”சரி அம்மா” என்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனித்தனியே பேசினாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழழகியை உணவு எடுத்துவரச் சொல்லி ஊட்டச்சொன்னாள். அம்மாவின் அன்பில் நனைந்துகொண்டே ஒரு பருக்கைக்கூட மிச்சம் வைக்காமல் உண்டனர்.

“நிலா, இவங்கநிம்மதியா தூங்கி ஒரு வாரமாகுது. உங்கிட்ட பேசிய சந்தோஷத்துல அமைதியா தூங்கட்டும் ஒரு பாட்டுப்பாடுடி.” என்றாள் தமிழழகி.  “கண்டிப்பா பாடுறேன்டி.” அவள் மெல்லப்பாடினாள்.

‘கண்ணே கண்மணி எந்தன் பொன்மணி கண்ணுறங்கு
அன்னை மடியில் அலுப்புத் தீர கண்ணுறங்கு
கண்கள் முழுதும் கனவுகள் சுமந்தே கண்ணுறங்கு
அம்மா அதனை பலிக்க வைப்பேன் கண்ணுறங்கு
கட்டிக் கரும்பே கண்ணீர் நிறுத்திக் கண்ணுறங்கு
கவலைவிடுத்து இதழை மலர்த்திக் கண்ணுறங்கு
மரகத கல்லே மாணிக்கத் தேரே கண்ணுறங்கு
மார்பின் மெத்தையில் சுகமாய் நீயும் கண்ணுறங்கு. அபி

 அவள் பாடிக்கொண்டிருக்க குழந்தைகள் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் தூக்கம் கலையாதபடி தமிழழகி வெளியே வந்தாள். ஷெண்பகத்திடம் நடந்ததைச் சொல்லிவிட்டு நிலவினியின் வீட்டிற்குச் சென்றாள்.

4.

    “வா தமிழ்.” தமிழழகி அறைக்குள் வந்து நிலவினியைப் பார்த்தாள். அவள் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி தெரிந்தது. நீண்டகால தேடல் கிடைத்துவிட்ட நிம்மதி தெரிந்தது. அவள் அருகில் அமர்ந்த தமிழழகி. “நான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்லமாட்டேன் நிலா தெரிஞ்சிதான் செய்தேன்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்தபோது உன் ஃபோன் வந்தது. அனிச்சப்பூ மாதிரி இருக்க உன் மனம், மென்மையான குணம், கணிவான பேச்சு இது எல்லாம் அந்தக் குழந்தைகளை ஆறுதல்படுத்தும்னு நினைச்சேன். அந்தக் குழந்தைங்களுக்கு அப்பா இருந்தார், அத்தை ஷெண்பகம்மா இருக்காங்க, அக்கா நா இருக்கேன். அவங்க மனசுல நிறப்பப்படாத இடம் அம்மா. இதுவரை அவங்களுக்குக் கிடைக்காத அந்த உறவைக் கொடுக்கத் தோனுச்சி. அதுக்கு நீதான் சரியானவளா இருப்பேன்னு நினைச்சேன். கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொல்ற உனக்குள்ள இவ்வளவு தாய்மை உணர்வு இருக்கும்னு எனக்கு இன்னைக்குதாண்டி புரிஞ்சது.”

“மறுக்கப்படுற ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது பயமோ, ஏக்கமோ துயரமோ இருக்கும்டி. படிப்பு, விளையாட்டு வேலைன்னு 30 வருஷத்தை ஓட்டியாச்சு. வேலைக் கிடைக்கிறவர காதலைப் பத்தி யோசிக்கல. கல்யாணம்னு வரும்போது, மத்தவங்க வாழ்க்கை அனுபவங்களைக் கேட்கும்போதுதான் நானும் காதலிச்சிருக்கலாமோன்னு தோனுது. இத்தனை வருஷம் வராத காதல் இனிமேலா வரப்போகுது? பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி சபையில நிக்க வெச்சு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு அடுத்தப் பெண்ணைத் தேடிப்போற கல்யாணச் சடங்கை நினைச்சா எரிச்சலா இருக்கு. அதனாலதான் கல்யாண ஆசை இல்லன்னு சொல்றேன்.”

வெளிய அப்படிச் சொன்னாலும் உள்மனசுல கல்யாணம் என்ற அந்த வார்த்தைய கேட்கும்போதே வெட்கம், சந்தோஷம், வருத்தம் ஏக்கம் எல்லாம் வரும். யாராவது கல்யாண செய்தி சொன்னா, பத்திரிக்கை கொடுத்தா நாமும் இப்படி எல்லோருக்கும் கொடுப்போமான்னு தோனும்.

மண்டபத்துக்குப் போய் மேளச்சத்தம் கேட்டாலே மூச்சு முட்டுற மாதிரி இருக்கும். கச்சேரி கேட்டா கண்ணு கலங்கும்.  ஆனா இந்த ஏக்கங்களுக்காக மனசுக்கு பிடிக்காத ஒருத்தர மணமுடிக்க முடியுமா?” “ஆசை இல்லன்னு சொல்றதுக்கு பின்னாடி இவ்வளவு துயரமா!” தமிழின் கண்கள் கலங்கியது.

“கல்யாண ஆசைய மறைக்க முடிஞ்ச என்னால தாய்மைய மறைக்க முடியலடி. என் அக்கா குழந்தைங்க அவங்க அம்மாவைக் கூப்பிடும்போது என்னை அப்படிக் கூப்பிட யாரும் இல்லையேன்னு ஏக்கமா இருக்கும். சித்தின்னு கூப்பிடுற குழந்தைங்ககிட்ட அம்மான்னு கூப்பிட சொல்லமுடியுமா? குருவிக்கூடு மாதிரி இருக்கக் குடும்பங்களைப் பார்க்கும்போது எனக்கும் கவிதையா ஒரு குடும்பம் வேணும்னு தோனும்.

 யாராவது கர்பமா இருக்கேன்னு சொன்னா அந்த சந்தோஷம் எனக்கு கிடைக்காதான்னு தோனும். என் கைகள் என்னையும் அறியாம என் வயிற்றைத் தடவிப்பார்க்கும். காலமெல்லாம் தாய்மை வரம் கிடைக்காமலே போயிடுமோன்னு தோனும். எதிர்காலத்தை நினைச்சி, அப்போ என்னோட இருக்கப்போற தனிமைய நினைச்சு பயமா இருக்கும்.

அப்புறம்." “ஐயோ! போதும்டி இதுக்குமேல சொல்லாத என்னால தாங்கமுடியலடி. ஏன்? ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற?” “வருத்தத்தைதான் நீ போக்கிட்டியேடி. ஒரு குழந்தைக்கு தாயாக முடியாம ஏங்கிய என்னை 15 குழந்தைகளுக்கு தாயாக்கிட்டியே.” “அப்படின்னா? இனி என்ன செய்யப்போற? நீ என் வாசல் முன்னாடி ஏத்திவெச்சிருக்க தாய்மை என்ற அகல் விளக்கு காத்துல அணையாம காலமெல்லாம் பாதுகாக்கப்போறேன். இனி என் வாழ்நாளெல்லாம் நாந்தான் அவங்களுக்குத் தாய்.”

தமிழால் நிலவினி சொல்வதை மறுக்கவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. அவள் இந்த வழக்கைக் கடவுளிடமும் காலத்திடமும் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றாள். மறுநாள் முதல் நிலவினிக்குப் புது வாழ்க்கைத் தொடங்கியது. வாழ்வில் பற்றில்லாமல் இருந்தவள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். தன்னை அழகுபடுத்தி ரசித்தாள். நானும் அம்மாவாகிட்டேன் என்று மனதுக்குள் ஸ்ரீராமஜெயம் எழுதினாள்.

அவள் குழந்தைகளுக்கு தினமும் போன் செய்து பேசினாள். நேரில் வரச்சொல்லி அழும் அவர்களை வேலை இருப்பதாகக் காரணம் சொல்லிச் சமாளித்தாள். உண்மையில் அவர்களை நேரில் பார்க்க தயக்கமாக இருந்தது. எங்கே அந்தக் குழந்தைகள் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள். அந்தக் காரணத்தை நினைத்துத் துடித்தாள். குழந்தைகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று அறிவு சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது.

தினமும் சலிக்காமல் அன்பு முத்தங்களை வாரி வழங்குவாள். அந்த முத்தத்திற்காகவே அந்தக் குழந்தைகள் காலையில்  கண்விழிப்பர். அந்த அன்பு மயக்கத்திலே அவர்கள் கண் துயில்வர். அந்தப் பிஞ்சு உள்ளங்கள் ஷெண்பகத்திடம் பேசும் முதல் மற்றும் இறுதி வாசகம். ”எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தாங்க அத்தை” என்பதுதான். ஷெண்பகமும் நிலவினியின் தாய்மையில் நெக்குருகிப்போவார்.

நிலவினியின் வீட்டிற்கு இது தெரிய வந்தபோது அவள் தாய்மையின் உறுதிக்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேநேரம் அவர்களாலும் அந்தக் குழந்தைகளின் அன்பைத் தவிர்க்கமுடியவில்லை.

தொடரும்.

Thursday 23 July 2020

உலகத்தில் சிறந்தது எது?

’பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
பசித்த முகம் பார்த்து, பதறும்நிலைப் பார்த்து பழம் தரும் சோலையது
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவிலது
தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து அணைக்கின்ற தெய்வமது’
அது தூய்மை, அது நேர்மை, அது வாய்மை, அதன் பேர் தாய்மை.

கேள்வியையும் பதிலையும் மட்டும் தெரிந்துகொண்டால் போதுமா? அந்தப் பதில் அழுத்தமாக இருக்க வேண்டாமா? எதற்கும் ஒரு உதாரணம் இருந்தால்தானே அது அழுத்தமான பதிலாகும்? இதோ! அந்த உதாரணம் எழுத்தாளர் சிவசங்கரியின் ‘அம்மா’ என்ற குறுங்கதையில்.

வித்யா என்ற இந்தியப் பெண், அமெரிக்க வாழ் இந்தியனான ராஜுவை மணந்து அமெரிக்கா செல்கிறாள். லூயிவில்லின் அழகிலும், கணவன்மேல் கொண்ட அன்பிலும், வேலைப் பளுவைக் குறைக்கும் எந்திரங்கள் தந்த மயக்கத்திலும் அமெரிக்கா சென்றவள் அங்கு சென்ற சில மாதங்களிலே அந்த ஊர் கற்பித்த சோம்பேறித்தனத்தில், எந்திரங்களிடம் வீட்டு வேலைகளை சரியான முறையில் ஒப்படைக்கவும் ஒரு எந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தொடங்குகிறாள்.

இன்றைய தலைமுறையின் நிலைமை இதுதான். ஆரம்பத்தில் அழகாகத் தெரியும் அமெரிக்கா நாளாக நாளாக ஒரு சலிப்பைக் கொடுக்கிறது. ஆனாலும் வெளிநாட்டின் மோகம் விடவில்லையே! படிப்பு, வேலை, வாழ்க்கை, வாய்ப்புகள் இப்படி ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் தனிமையைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை எங்கிருந்தாலும் தொடர்பு கொள்கிறார்கள், கண்ணும் கருத்துமாக கண்காணிக்கிறார்கள், வருவோம் வருவோம் என்ற நம்பிக்கைத் தந்து, வந்தும் போகிறார்கள். ஆனால் பல பிள்ளைகள்? அதற்கும் ஆயிரம் காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோருக்கு வீடே ஒரு முதியோர் இல்லம்போல. அவர்களுள் சிலர் தங்களைத் தனிமையிலிருந்துக் காத்துக்கொள்ள சமூகச் சேவை செய்கிறார்கள்.

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பிள்ளைகள் மீதும் தவறு இருக்கிறது, பொறுப்பாகவும் பொறுப்பைப் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்த்தப் பிள்ளைகள் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டப் பொறுப்புகளைச் செய்யப் போகும்போது அதைப் புரிந்துகொள்ளாமல் தங்களை வருத்திக்கொள்ளும் பெற்றோர் மீதும் தவறு இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் இந்திய வாழ்க்கை வரும் காலங்களில் வெறும் நினைவாகவே இருக்கப்போகிறது. இங்கு இல்லாத வாய்ப்புகளா? அப்படியே வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாமே. அசிங்கத்தை அப்புறப்படுத்தாமல் அனைவருமே அந்த இடத்தைவிட்டுப் பறந்துவிட்டால் யார் அந்த வேலையைச் செய்வது? பள்ளத்தில் விழுந்துகிடப்பவனைக் கைக்கொடுத்துத் தூக்கிவிடுவதுதானே பலம்? என்னதான் வாய்ப்புகள் வெளிப்படையான காரணம் என்றாலும், வெளிநாட்டின் மீதுகொண்ட வெறித்தனமான ஆசையும் குடும்பச் சூழலிலிருந்துத் தப்பித்துக்கொள்வதும் ஒரு காரணம்தான்.

என்னதான் இந்தியர் அன்பு பாசம் நிறைந்தவர்களாக இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. கலாச்சாரம் நம்மை அப்படி செதுக்கிவைத்திருக்கிறது. கட்டுக்கோப்பான கலாச்சாரத்தில் பெற்றோரின் பாசச்சிறகுகளில் பொத்திவைத்து வளர்க்கப்பட்ட வித்யாவால் அமெரிக்க மக்களின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அவள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்க் டோரா தம்பதியருக்கு 4 பிள்ளைகள். இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். அந்தக் குடும்பத்திற்கு வித்யாவின் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். வித்யாவும் டோராவும் தோட்டத்தில் நின்றிருந்தபோது டோராவின் பெண் ஜென்னிக்கு விபத்து என்ற செய்தி வந்தது. இந்தியத் தாயான வித்யா பதைபதைக்க, அமெரிக்கத்தாயான டோராவோ சிலநொடிகள் வெறித்துப் பார்த்துவிட்டுப் பின் மெல்ல அந்த இடத்திற்குச் சென்றாள்.

அடிப்பட்டு இரத்த வெள்ளத்திலிருந்த ஜென்னியை வித்யா தூக்கப்போக, டோரா அதைத் தடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் வந்ததும் ஜென்னியை அனுப்பிவிட்டு மருத்துவமனைக்குப் போகவில்லை. வித்யா அதைப் பற்றிக் கேட்டதற்கு வீட்டிற்குச் சென்று மார்கிற்கு ஃபோன் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றாள். அதன்படியே மார்கிற்குத் தகவல் சொல்லிவிட்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கும் டோரா முதலில் கேட்ட கேள்வி ஜென்னிக்கு உயிர் இருக்கிறதா? இதைக் கேட்ட வித்யாவின் கோபம் உச்சத்தை எட்டியது. மார்க் வந்ததும் ஜென்னி ஆபத்தான நிலையில் இருக்கிறாள் அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு டோராவும் மார்க்கும் வீட்டிற்கு கிளம்பினர். வீட்டிற்கு வந்த வித்யா டோராவின் தாய் பாசத்தை விமர்சித்து கணவனிடம் விவாதித்தாள். ராஜுவும் அவளுக்கு எதார்த்தங்களைப் புரியவைக்க முயன்று தோற்றான்.

அடிப்பட்டிருப்பவரைத் தூக்கக்கூடாது என்பது அங்குள்ள விதி. தூக்கத் தெரியாமல் தூக்கி அதிலேயே உயிர் போய்விட்டால்? அதனால் முறையான அட்டெண்டர்களுடன் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். ஜென்னி அவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்ததால்தான் டோராவின் வாயிலிருந்து அப்படி ஒரு சந்தேகமான வார்த்தை வந்திருக்கும். ஒரு குழந்தைக்காக இருவருமே மருத்துவமனையில் இருந்துவிட்டால் வீட்டிலிருக்கும் 3 குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது? இதுதான் எதார்த்தங்கள். இதனைத் தப்பாக அர்த்தப்படுத்திக்கொண்ட வித்யா டோராவை பாசமற்ற ஜடம் என்றாள்.

குழந்தைகளின்முன் தன் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கும் டோராவின் தூய்மையான தாய் பாசத்தை வித்யா புரிந்துகொள்ளும் நேரமும் வந்தது.

இந்தியத் தாயான வித்யாவையே அமெரிக்கத் தாயான டோராவின் கால்களில் விழத்தூண்டிய நெகிழ்ச்சியான தருணமது. அது என்ன தெரியுமா? சிறுநீரகம் செயலிழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வளர்ப்புமகள் ஜென்னிக்கு டோரா தன் சிறுநீரக உறுப்பையே கொடுக்க முடிவு செய்ததுதான்!

வெள்ளைக்காரிகளெல்லாம் கெட்டவர்களும் இல்லை. இந்தியப் பெண்களெல்லாம் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்படவேண்டியவர்களுமில்லை. எல்லா நாட்டுப் பெண்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

பாரெங்கும் தாய் பாசம் ஒன்றுதான். அது வெளிப்படும் தன்மைதான் வேறு. பதற்றப்படாமல் புத்திசாலித்தனமாகவும், சொந்தப் பிள்ளை வளர்ப்புப் பிள்ளை என்ற பாகுபாடு பாராமல் பொதுநலமாகவும் முடிவெடுத்த டோரா பூஜையில் வைக்கப்படவேண்டிய மலர்களுள் ஒன்று.

இந்தக் கதையை அமேசானில் படிக்க



Sunday 19 July 2020

கடவுளின் பிரதிநிதி.


1.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்டுவரும் அந்த இல்லம் காலைப் பரபரப்பில் இருந்தது.

பெற்றோரை இழந்தவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சுமார் 15 பிள்ளைகள் இருந்தனர். அங்குப் பணிபுரியும் தாமரை என்ற பெண்மணி மணியடித்து அனைவரையும் காலை உணவு உண்ண அழைத்தாள். உணவு உண்ணும் முன்பு அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்காக வரிசையில் நின்றனர். நிர்வாகியான ஷெண்பகம் அங்கு வர, அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பிரார்த்தனை தொடங்கப்பட்டது.

கடவுளே, நாங்கள் சாப்பிடப்போகும் இந்த வேளையில், எத்தனையோ பேர் இந்த உணவு கூடக் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். எங்களுக்காக இன்றைய உணவை அளித்தமைக்கு நன்றி. எங்களைப்போலவே இருக்கும் அனைத்து ஆதரவற்ற மனிதர்களுக்கும், உணவு, உடை, உறைவிடம், படிப்பு ஆகியவை கிடைக்க அருள்புரிவீராக.”

 பிரார்த்தனை முடிந்ததும் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களின் முகங்களில் உணவு உண்ணப்போகும் மகிழ்ச்சி இல்லை. உள்ளத்தில் அமைதி இல்லை. அழத்துடிக்கும் இதழ்களை ஷெண்பகத்தின் அதட்டலுக்காக கட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர். ஷெண்பகம் மிகவும் அன்பான பெண்மணிதான். ஆனால் ஈடு செய்யமுடியா இழப்பிற்கு என்ன செய்வது. அதோடு அழுதழுது இவர்களுக்கும் ஏதாவது ஆகிவிட்டால்? அதனாலேயே அவர்களை மிரட்ட வேண்டியதாயிற்று. அவர்களின் இந்த தாளமுடியா துயரத்திற்குக் காரணம் முகிலன்!

    முகிலனும் ஷெண்பகமும் உடன்பிறந்தவர்கள். முகிலன் தன் படிப்பை முடித்துவிட்டு சுயதொழில் பார்த்துக்கொண்டேஆதரவற்ற  குழந்தைகளுக்காக இந்த இல்லத்தை நடத்தி வந்தார்.

ஷெண்பகம் அவருக்கு ஐந்து வயது இளையவள். திருமணமாகி இதே சென்னையில்தான் வசிக்கிறாள். முகிலனுக்கு ஏனோ திருமணம் கூடவில்லை. அதற்குக் காரணமும் அவர்தான். இந்தக் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைக்க வேண்டும். திருமணத்திற்கு பின் குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதிக்க, அப்படிப்பட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட்டப் பெண் அவருக்கு நாற்பது வயதுவரை கிடைக்கவே இல்லை. அதன்பின் அவருக்கு அதில் விருப்பமில்லாமல் போய்விட்டது.

பெற்றோரைப் பார்த்தறியாத அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு முகிலன்தான்  அம்மா அப்பா. அவர்மேல் உயிரையே வைத்திருந்தனர். அவர் அந்த இல்லத்தை நெருங்கும்போதே அப்பா என்று ஓடி வந்துக் கட்டிக்கொள்வார்கள்.

 ஐம்பது வயதைக் கடந்திருந்த அவர் ஒரு வாரத்திற்கு முன்பு விஷக்காய்ச்சலில் இறந்துவிட்டார்.  அவர் தங்கை ஷெண்பகத்தை அழைத்து இல்லத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

அவர்களின் உயிருக்குயிரான அப்பாவை நினைத்து அழும் குழந்தைகளை என்ன சொல்லித் தேற்றுவது? உணவை முடித்துக்கொண்டு அனைவரும் படிக்கும் அறைக்குச் சென்றனர். அவர்களின் செல்ல அக்கா தமிழழகி வந்தாள். அவளைப் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினர்.

2.

   தமிழழகி முகிலனின் நண்பன் மகள். அவள் வாரத்திற்கு ஒருநாள் இங்கே வந்துவிட்டுச் செல்வாள். அப்படி வரும்போதெல்லாம் குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டோடும். அவளும் குழந்தைப்போல அவர்களுடன் விளையாடுவாள். பாடம் சொல்லிக்கொடுப்பாள். குழந்தைகள் அந்த வாரம் நடந்த அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துகொள்வார்கள். அவளும் சலிக்காமல் கேட்டுக்கொண்டு அவர்களை மகிழ்விப்பாள். முகிலனின் இறப்பு அவளையும் பெருமளவு பாதித்தது.  ஒரு வாரமாக அவள் தினமும் வருகிறாள்.

“அழாதீங்கடா! அப்பா உங்களோடுதான் இருக்கார். நீங்க அழுதா அவர் வருத்தப்படுவார்.” “இல்லை அக்கா. எங்களுக்கு யாருமில்லை. அப்பா இல்லை அம்மா இல்லை. எங்களை யாருக்கும் பிடிக்காது அக்கா.” என்று மனதின் ஏக்கமெல்லாம் கண்ணில் தேக்கிச் சொன்னது ஓர் ரோஜாமலர்.குழந்தைகள்  அவள் மடியில் படுத்துக்கொண்டு அழுது கரைந்தனர். “இல்லைடா அப்படிச் சொல்லக்கூடாது. நீங்க கடவுளோட குழந்தைங்க. அப்பா அப்படிச் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார் இல்லையா?” “அப்பா எங்கள வித்து போச்சு. நான் அப்பதிதான் சொல்லுவேன்!” என்றது மூன்று வயதுச் சிறுமி.

“இல்லை அக்கா நாங்க அப்படிச் சொல்லமாட்டோம். அப்படிச் சொன்னா அப்பா அழுவார். நாங்க கண்ணைத் துடைச்சிவிடுவோம். சிரிக்கவைப்போம். இப்போ அவர் அழுதா யார் கண் துடைப்பாங்க. யார் சிரிக்கவைப்பாங்க. அதுனால நாங்க அப்படிச் சொல்லல.? என்றது மற்றொரு பட்டாம்பூச்சி. என் செல்லங்களே! என்று அவர்களை அள்ளியணைத்து அழுதுவிட்டாள்.

    அவள் எவ்வளவோ சொல்லியும் அவர்களின் அழுகை நிற்கவில்லை. விளையாட மறுத்தனர். படிக்க மறுத்தனர். அவளால் அவர்களை இப்படிப் பார்க்கமுடியவில்லை. ஒரு வாரமாக தங்களை வருத்திக்கொண்டிருக்கும் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று மனம் துடித்தது. அப்போது அவள் அலைப்பேசி ஒலித்தது. திரையில் நிலவினி என்று ஒளிர்ந்தது.

நிலவினி தமிழழகியின் உயிர் தோழி. கல்லூரியில் ஏற்பட்ட நட்பு. எது அவளைச் செலுத்தியதோ? சட்டென்று ஒரு காரியம் செய்தாள் அவள். அவள் செய்யும் வேலை ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றியமைக்கப்போகிறது என்பதை உணராமல் அந்தக் காரியத்தைச் செய்தாள்.

தொடரும்


Wednesday 15 July 2020

எளிமையின் நாயகன்


தலைப்பைப் பார்த்ததுமே புரிந்திருக்கும் இது காமராஜர் பற்றியப் பதிவு என்று. இன்று காமராஜர் பிறந்தநாள் மட்டுமா? கல்வி வளர்ச்சி நாளாயிற்றே. படிக்காத மேதையைப் பற்றிப் படிக்காதவன் யாரும் மேதையாக இருக்க முடியுமா?

 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி சிவகாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் மறைவிற்கு பின் குடும்பச்சூழல் காரணமாகப் பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு, வேலை செய்து கொண்டே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

திருமணத்தை மறுத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். 1922ல் சாத்தூர் தாலுக்கா காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தந்தைப் பெரியார் வந்திருந்தார். அந்த மாநாட்டில்தான் காமராஜருக்கு தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி கிடைத்தது.

இதுதான் அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பம். இதன்பிறகு அவர் படிப்படியாகப் போராடி, பல பதவிகளைப் பெற்று, இரண்டுமுறை தமிழக முதல்வராகி 9 ஆண்டுகளைப் பொற்காலங்களாக்கிய நெகிழவைக்கும் நிகழ்வுகளெல்லாம் அனைவரும் அறிந்ததே. கையெழுத்துப்போடும் பெற்றோருக்குப் பிறந்தப் பிள்ளைகளைவிட கை ரேகையொற்றும் பெற்றோரின் பிள்ளைகளுக்குத்தான் படிப்பு முக்கியம் என்று ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தக் கருப்புக் காந்தியவர்.

1967ஆம் ஆண்டு தந்தைப் பெரியார் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தொண்டர் அவரிடம் வந்து தன் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னார். உடனே பெரியார் லண்டன், மாஸ்கோ என்று வெளிநாடுகளின் பெயராக வைத்தார். “என்னங்க ஐயா பெயர் வைக்கச் சொன்னால் நாடு பெயராச் சொல்றீங்களே.” என்றார் அந்தத் தொண்டர். விடுபவரா பெரியார்? “நீங்க மட்டும் பழனி, சிதம்பரம் வெக்கறீங்க? நீங்க தமிழக லெவல்ல யோசிக்கிறீங்க. நான் வெளிநாடு லெவலுக்கு யோசிக்கிறேன்.” என்றார். அந்தத் தொண்டர் கடவுள் பெயராக வைக்கச்சொல்ல, பெரியார் வைத்தப் பெயர் காமராஜர். கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தப் பெரியாரையே கடவுள் பெயர் வைக்கச் சொன்னதும், காமராஜர் பெயரை வைக்கத்தூண்டியக் கர்மவீரரவர்.

ஒருமுறை காமராஜர் தஞ்சையிலுள்ள ஒரு பழையக் கோவிலைப் பார்க்கச் சென்றிருந்தார். சிதிலமடைந்தக் கோவிலாக இருந்தபோதும் அதன் கட்டிடக்கலை அவரை ஈர்த்தது. உடனிருந்த அதிகாரிகளிடம் அந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என்று கேட்டார். அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. மேலே இருந்த டியூப்லைட்டைக் காட்டி, “பல காலம் நிலைத்திருக்கப்போகும் கோவிலைக் கட்டியவர் பெயர் தெரியவில்லை. ஒரு மாதம் எரியப்போகும் லைட்டில் உபயதாரர் பெயர் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் சொன்னதைக் கேட்டு உடன் இருந்தவர்கள் சிரித்தனர்.

தொழில்துறை அமைச்சராக இருந்த திரு இரா. வெங்கட்ராமன் காமராஜரின் தாயாரைப் பார்க்கச் சென்றிருந்தார். மே மாத வெயிலைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல் அவர் டேபிள் ஃபேனை வாங்கி காமராஜரின் தாயாருக்குக் கொடுத்துவிட்டு வந்தார். தாயாரைப் பார்க்கச் சென்ற காமராஜர், கோபமாக இது ஏது என்று விசாரிக்க, சிவகாமி அம்மையார் நடந்ததைச் சொன்னார். “இந்த நாட்டுல எத்தனையோ மூதாட்டிங்க கஷ்டப்படுறாங்க முதலமைச்சர் அம்மாவுக்கு மட்டும் என்ன தனிச் சலுகை.” என்று கத்திவிட்டு அதை எடுக்கச்சொன்னார். பல வருடங்களாக அந்த ஃபேன் துருப்பிடித்துப்போய் விருதுநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருக்கிறது. உயரிய பதவியில் இருந்தபோதும் தான் மட்டும் எளிமையாக வாழாமல் தன் தாயாரையும் கடைசிவரை எளிமையாக வாழவைத்த மக்கள் தலைவரவர்.

இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டேப் போகலாம். ஆனால் நான் இங்கே எதையும் குறிப்பிடப்போவதில்லை. காமராஜரின் பிறந்தநாளை ஒரு கட்டுரைப் பதிவோடு நிறுத்திவிடுவேனா? பிக்பூஸ்டர் யூடியூப் சேனலில், உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கும் வகையில், காமராஜர் பற்றிய ஒளிப்பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
சேனலை சப்ஸ்கிரைப் செய்து வீடியோவைக் கண்டுகளித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடவும்.

காமராஜரின் நலத்திட்டங்களடங்கியப் பாடல்

Sunday 12 July 2020

சதியால் மரணித்த சத்தியவதி


லட்சங்களை நேசிக்கும் இவ்வுலகில், லட்சியங்களை நேசிக்கும் பெண் சமூகச் சீர்திருத்தம் செய்யக் கிளம்பினால்? அதுவும் குறுகிய மனப்பான்மையினர் வசிக்கும் கிராமத்திற்குச் சென்றால்? வெறும் தோல்வியைத் தவிர வேறென்னக் கிடைக்கும்?


சமூகச் சேவைச் செய்பவர்களெல்லாம் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை ஆதரிக்காவிட்டாலும் அவதூறாய் பேசாமல் இருக்கலாம். பெண்களுக்குப் பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டாம், பழி சொல்லாமல் இருக்கலாம்.

அன்னை தெரெசா, அன்னிபெசன்ட், முத்துலட்சுமி ரெட்டி. இவர்களின் வெற்றிக்கதையை வரலாறு நமக்கு உணர்த்திவிட்டது. வரலாற்றில் இடம்பெறாமல், வெற்றியும் அடையாமல், வேதனையைப் பரிசாய் பெற்று தோல்வியில் தற்கொலை செய்துகொண்ட தேவதைகளின் கதையை எப்படி தெரிந்துகொள்வது? தெரிந்துகொள்ளலாம் எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் பட்டுப்பூச்சி நாவலைப் படித்து.


சுகுனா என்ற பட்டுப்பூச்சி தன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அந்தப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேரறிஞர் ஒருவரின் பேச்சை மனதில் பதித்து, சமூகச் சேவைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையோடு அவள் தாயுடன் தாமரைக் குளம் என்ற கிராமத்திற்குச் செல்கிறாள்.


தானே அலைந்து திரிந்து தேசிய வளர்ச்சித் திட்டத்தில் அவளுக்கு ஒரு வேலையைத் தேடிக்கொண்டாள். தாமரைக்குளம் என்ற கிராமத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்காக சர்க்கார் அமைத்திருந்த தேசிய வளர்ச்சிப் பிர்க்காவின் தலைவியாக நியமிக்கப்பட்டாள்.


சென்ற ஒரு வாரத்திலேயே அவள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு பணிபுரியும் கிராம தொண்டர்கள் அவர்களின் அலுவல்களை சரியாக செய்யாமல், அதற்காக கொடுக்கப்பட்டிருந்த சைக்கிளில் உல்லாசப் பயணம் மேற்கொள்வது பற்றியும், முதியோர் கல்விப் பள்ளிக்கூடம் ஒழுங்காக நடைபெறாமல் அந்த மண் தரையில் எருக்கஞ்செடியும் எமபூண்டும் முளைத்திருப்பது பற்றியும், அரசாங்கத்திலிருந்து பண உதவி பெறும் கோழிப்பண்ணைகளில் கசாப்புக்கடைக்கு போக வேண்டிய ஆடுகளை வளர்த்துக்கொண்டு கோழிகள் வளர்ப்பதாக ஏமாற்றி மானியம் வாங்கிக்கொண்டிருந்த வடமலைப்பிள்ளை பற்றியும் தெரிந்துகொண்டாள்.


பட்டமளிப்பு விழாவில் அந்தப் பேரறிஞர் சொன்னதைப் போல் மற்றவர்களின் அகக்கண்களை அவ்வளவு எளிதில் திறக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்டாள்.


அந்தக் கிராமத்து மக்கள் அப்பாவிகளாக பணத்திற்கும் பதவிக்கும் மதிப்புக் கொடுத்து சரியாக இருப்பதைத் தவறாக கணிப்பவர்களாகவும், தவறாக இருப்பதைச் சரியாக கணிப்பவர்களாகவும் இருந்தனர்.


சுகுனா முதல் சேவையாக அவளோடுப் பணிபுரியும் கிராம சேவகிகளின் பண்புக் குறைவான அலங்காரத்தைச் சரி செய்ய முயன்றாள். அவளது அறிவுரையை விளக்க எழுத்தாளர் நா.பா குறிப்பிட்டிருந்த இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. “பெண்ணுக்குத் தன் அழகே பகை. அதுவே நண்பன். பெண்ணின் அழகு கவர்ச்சியினால் மற்றவர்களை அழிக்கும் போது ஆயுதம். அடக்கத்தினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் போது அதுவே கவசம்.” இந்தரீதியில் அவள் உபதேசித்தபோது அவர்கள் அதைக் கேட்பதாக இல்லை. தாமரைக் குளத்தின் சேரிக்குப் போய் ஏழை அரிஜனக் குழந்தைகளை அவளே பண்ணீராற்றுக்கு அழைத்துச் சென்று குளிக்கவைத்து விட்டுவிட்டு வந்தாள்.


தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாள். அப்பொழுது கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் தன் சிந்தனையை ஒத்த இளைஞர் ரகுராமனைச் சந்தித்தாள். அவளைப் போலவே லட்சியங்களை உடைய  மனிதர் என்ற காரணத்தால் அவரோடு பண்பான முறையில் பேசிப்பழகினாள்.


கோழிப்பண்ணைகளில் ஏமாற்றும் ஊழலும் இருக்கிறதால் சர்க்கார் அனுப்பும் உதவித் தொகையை நிறுத்தச் சொல்லியும், சேரிப்பகுதிகளில் தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகள் செய்துத்தரப்படுவதில்லை என்று பஞ்சாயத்து போர்டைப் பற்றியும் மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தாள் சுகுனா. இதனால் சீற்றமடைந்த வடமலைப் பிள்ளை, கிராம முன்சீப் மற்றும் பஞ்சாயத்து போர்ட் தலைவர் அவளை வஞ்சம் தீர்க்க எண்ணினர்.


சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது கன்னிகாபுர முதியோர் கல்விப் பள்ளிக்கூடத்தின் ஆண்டுவிழாவிற்கு சென்ற சுகுனா மழையின் காரணமாக ரகுராமனின் தாயார் வீட்டில் தங்க நேர்ந்தது. இது போதுமே அவர்களுக்கு. வதந்திகள் பரவின. ரகுராமனின் தாயார் சுகுனாவின் வீட்டிற்குச் சென்று சுகுனாவை இனிமேல் அவர்களின் ஊருக்கு வரவேண்டாம் என்றும், சமூகச் சேவையெல்லாம் பெண்களுக்குச் சரிவராது என்றும், மகளுக்கு திருமணம் செய்துவைக்கும்படியும்  அவள் தாயாரைத் திட்டிவிட்டு சென்றார்.


விளைவு? பழியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பட்டுப்பூச்சிப் பாதை மாறி பறந்துவிட்டது. இனி கலகலப்பாக மாறப்போகும் பட்டினப்பூச்சி சந்தோஷமாக இருக்கவும், அவள்மேல் அள்ளித்தெளிக்கப்பட்டிருந்த பழியின் கரைகள் நீங்கவும் நல்ல வரனாகப் பார்க்கசொல்லி எழுத்தாளர் இந்தக் குறுநாவலை முடித்திருந்தார். எப்படி அவர் கற்பனை?


என்னது! கற்பனையா? இதற்காகவா சமூகச் சேவை செய்யும் தேவதைகளைப் பற்றிச் சொன்னாய் என்று நினைக்கிறீர்களா? இல்லை. வாழ்வில் சிலநேரங்களில் சில வினோதங்கள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நிகழும். அப்படித்தான் எழுத்தாளர் உருவாக்கியக் கற்பனைப் பாத்திரம் உண்மை சுகுனாவாய் உருபெற்று அவர் முன் நின்றாள். உங்கள் கதாநாயகி என்று அவளை அறிமுகப்படுத்திக்கொண்டு அவள் வாழ்க்கையையும் எழுத்தாளரின் கதைகளையும் ஒப்பிட்டு நடந்த உண்மை நிகழ்வுகளை அவரிடம் பகிர்ந்துகொண்டாள்.


கற்பனை சுகுனா தாமரைக்குளம் என்றால், உண்மை சுகுனா அல்லியூரணியில் சேவை செய்தாள். அந்த சுகுனா கல்லூரி முடித்த பெண் என்றால், இந்த சுகுனா கைம்பெண். அதுவும் பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்ட கைம்பெண். அந்த சுகுனாவின் தோழர் ரகுராமன் என்றால், இந்த சுகுனா மறுமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டது முருகனை.


இந்த சுகுனா ஆசிரியராக பணியாற்றியப் பள்ளியில் தன்னுடன் பணியாற்றிய உயர்ந்த குணங்களைக் கொண்ட முருகன் தனக்கு வாழ்க்கைத் துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினாள். முருகனும் அவளுக்கு உறுதியான வாக்குகளைக் கொடுத்திருந்தான். ஆனால் புதுமைகளை விரும்பாத புளுத்த மனிதர்களான பள்ளி நிர்வாகிகள் முருகனின் கருத்துக்கள் பிடிக்காமல் அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். சுகுனாவைப் புரிந்துகொள்ளாமல் பெற்றத் தாயே பழிச்சொல்லிவிட்டாள். இருவரும் நிராசையோடு பிரிந்துவிட்டனர். காலப்போக்கில் முருகனுக்கு கல்யாணமாகி குழந்தைப் பிறந்தது. ஆனால் சுகுனா?


கைம்பெண்ணாகத்தான் எழுத்தாளரைக் காணச் சென்றிருந்தாள். அவள் வாழ்க்கையில் நடந்தவற்றையும், அவள் அடைந்த வேதனையையும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த காரணத்தையும், அவளுக்கு தோன்றிய சின்ன ஆசைகளையும் எழுத்தாளரின் ‘தெருவோடு போகிறவன்’ மற்றும் ‘முத்துச்சாவடி’ சிறுகதைகளோடு ஒப்பிட்டு விளக்கினாள்.


தெருவோடு போகிறவன்:
எனக்கு இளம் விதவைகளைப் பற்றி சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்தது. கல்கியின் கடிதமும் கண்ணீரும் படித்தபோது கூட அந்த ஆசை இருந்தது. இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் ‘தெருவோடு போகிறவன்’ சிறுகதையைப் படித்ததும் அந்த ஆசை எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டது. இதைவிட சிறந்தக் கதையைப் படைக்க என்னால் முடியாது என்று தோன்றுகிறது. இந்தக் கதையை ஜீரணிக்கவே எனக்கு அவகாசம் தேவை. முழுக்கதையுமே இதில் ஒரு அத்தியாயமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. படியுங்கள்.


அம்மா தன் ஆசைப்பெண்ணிற்கு ஐந்து வயதுமுதல் பூச்சூட்டி மகிழ்கிறாள். பட்டுடுத்திப் பார்த்து ரசிக்கிறாள். கண்ணாடி வளையல்கள் கலகலக்க குதூகலமாய் குதித்தோடும் பெண்ணைக் கண்டுகளிக்கிறாள். குங்குமமிட்டுக் கொஞ்சி மகிழ்கிறாள். அப்போதெல்லாம் உடனில்லாத கணவன் தாலிகட்டும் நேரத்தில் வருகிறான், தாலியை மட்டும்தான் தருகிறான், மிஞ்சிப்போனால் மிஞ்சி அணிவிக்கிறான்.


அவன் இந்த உலகைவிட்டுப் போகும்போது அதற்கு முன் அவள் அனுபவித்த அனைத்து சௌபாக்கியங்களையும் கையோடு கொண்டுபோய்விடுகிறான். கொடுத்ததைக் கேட்பது நியாயம். கொடுக்காததைக் கேட்பது என்ன நியாயம்? வசந்தத்தைத் தருவதுதானே வாழ்க்கைத் துணை? தான் வாழ்ந்து முடித்தபின் தன்னவளை இருட்டில் தள்ளிவிட்டுப் போவதா வாழ்க்கைத் துணை? தெரிந்தோ தெரியாமலோ ஒரு கைம்பெண் பூவோ பொட்டோ வைத்துக்கொண்டால், அபசகுனம், அறுத்த முண்டையா இருக்காளா, ஆண்கள வளைக்கிறான்னு எத்தனை அவதூறுகள்? ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணின் கணவனை இழந்துவிட்டால் அவள் விதவைக்கோலம் பூணும் முன் கடைசியாய் ஒருமுறைச் சுமங்கலியாய் பார்க்க நினைக்கிறது கொடுமை இல்லையா?


இப்போது பால்ய விவாக தடைச்சட்டமும், விதவை மறுமணச்சட்டமும் நடைமுறையில் இருக்கிறது. வெள்ளைச் சேலையும் மொட்டைத் தலையும் ஒழிந்துபோய்விட்டது. பூவும் பொட்டும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகிவிட்டது. இந்தச் சட்டங்களைக் கொண்டு வர எத்தனைப் போராட்டங்கள்? பெரியார் போன்ற மகத்தான தலைவர்கள் வாழ்ந்த காலத்திலும், அதற்கு பிறகு பிறந்த பெண்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் அதற்கு பதிலாக பாலியல் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. எத்தனைச் சட்டங்கள் வந்தும் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதை ஒழிக்க பெரியார் மீண்டும் ஓர் பிறவி எடுத்தால் நன்றாக இருக்குமே!


முத்துச்சாவடி:
இந்தக் கதையை நான் படித்ததும் இப்படி ஒரு துயரம் எழுத்தாளர் நா.பாவின் வாழ்வில் நடந்திருக்கிறதா என்று வேதனை அடைந்தேன். புத்தி சுவாதீனம் இல்லாத பெண், எழுத்தாளர்கள்மேல் கொண்டிருந்த தமிழ் பைத்தியத்தால் அவரைக் காண வந்தாள். ஆனால் அவர் அப்போது தனியாக இருந்ததால் இரவுநேரத்தில் அவளை தன்னோடு தங்கச் செய்வது முறையல்ல என்று நினைத்து அவளை திட்டி அனுப்பிவிடுகிறார். அவருக்கு அவள் மூளை வளர்ச்சிக்குன்றியவள் என்று தெரியாது. அப்போது எழுத்தாளர் ராமேஸ்வரத்திற்கு ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். கொடைக்கானலைச் சேர்ந்த அந்தப்பெண் எழுத்தாளரைப் பார்க்க தனியே ராமேஸ்வரம் சென்றவள் அவர் செய்த அந்த அறியாச் செயலில் இந்டோசிலோன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது பாம்பன் பாலத்தில் ரயிலின் கதவைத் திறந்து கடலில் குதித்துவிட்டாள். மீட்கமுடியவில்லை. இதிலிருந்து மீண்டு இந்தக் கதையை அவர் எழுத பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.


கைம்பெண்ணாக இருக்கும் சுகுனா அலங்கரித்துக்கொள்ள ஆசைக்கொண்டதையும் மறுமண ஆசை நிராசையாய் போனதில் ராமேஸ்வரம் சென்ற வேளையில் சரியாய் பாம்பன் பாலத்தைப் பார்த்ததும் தற்கொலைச் செய்துகொள்ள முயன்றதையும் நா.பாவிடம் சொல்லிவிட்டு அவர் மனைவி தந்த இரவு உணவை உண்டுமுடித்து, அவர் மனைவியுடன் தங்கி மறுநாள் புறப்பட்டாள். கிளம்பும்போது அவர்களை சுதந்திர தினத்தன்று அல்லியூரணிக்கு வந்து பக்குவப்பட்டிருக்கும் கிராமத்தைப் பார்க்கச் சொல்லி அழைப்புவிடுத்தாள். அன்று முதல் நா.பாவிற்கும் சுகுனாவிற்கும் சகோதர உறவு மலர்ந்தது.


சொற்பொழிவாற்ற கோவைக்குச் சென்றவர் விவேகானந்த மூர்த்தி என்ற இளைஞரைச் சந்தித்தார். அந்த இளைஞர் ஆண்கள் கைமை நோற்பதைப் பற்றி விவாதம் செய்தார். குறுஞ்சிமலரையும் பட்டுப்பூச்சியையும் பற்றிப் பேசினார். கற்பனைச் சுகுனாவைக் காதலிப்பதாகச் சொன்னார். அப்போது உண்மை சுகுனாவை மணந்துகொள்வாயா என்று கேட்க அந்த இளைஞர் அதற்கு மனப்பூர்வமாக கட்டுப்பட்டார். சுகுனாவிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டார் நா.பா. எல்லாமே சரியாக நடந்துவிட்டால் விதி என்ற ஒரு வார்த்தை வந்திருக்குமா?


மஞ்சள் பத்திரிக்கை மூலம் விதி சதி செய்துவிட்டது. பேனா மூலம் வாரி இறைக்கப்பட்ட அமிலத்தால் சுகுனா கடிதம் எழுதி எழுத்தாளர் நா.பாவிடம் சேர்ப்பித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள். தன்னோடு வாழ முடிவு செய்து வாழாமலே மரணித்துவிட்ட சுகுனாவிற்காக விவேகானந்தமூர்த்தி கைமை நோற்கிறார். அந்த இளைஞர் கேட்ட கேள்விகளுக்கு அவர்மூலமே விடைக் காண்பதை எண்ணி எழுத்தாளர் மனதுக்குள் கண்ணீர் வடித்தார்.
கற்பனையும், உண்மை நிகழ்வுகளும் சேர்த்து எழுதப்பட்டிருந்த இந்நாவலின் வேதனை நிறைந்த இறுதி அத்தியாயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.


இன்றளவும்வெளிப்படையாக பத்திரிக்கைகளில் வரவில்லை என்றாலும்,  இணையத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் இனிப்பான விருந்து இது. நடிகைகளின் மானத்தை உரியும் உத்தமர்களே, ஒரு நொடி. ஒரே ஒரு நொடி கூடவா அவர்களின் கவர்ச்சியில் உங்கள் மனம் சலனப்பட்டிருக்காது? உங்கள் கண்கள் அந்த அழகைக் கண்டு மயக்கம் கொண்டிருக்காது? அந்த ஒரு நொடியை ஏன் மறந்துவிட்டு எழுதுகிறீர்கள்?


ஒவ்வொருவருக்கும் தன் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். நடிப்பு அவர்களின் தொழில். அதில் சாதிக்க சிலக் கேடுகெட்டக் கண்களுக்கு விருந்தாக வேண்டியிருக்கிறது. இது முழுக்கமுழுக்க நடிகைகளின் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? இதைத் தவறென்றால் இதைச் செய்யத் தூண்டும் ஆண்களைப் பற்றி என்னவென்று எழுதுவது? நாகரிகத்தைக் கற்பிக்கவும் நாகரிகம் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் அநாகரிகமும், அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதும் ஒன்று என்பதை மீண்டும் நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பெண்களின் கண்ணீர் விலை மதிப்பற்றது. அதை குடித்துப் போதைக்கொள்ளாதீர்கள்.


தோல்வியுற்ற இலக்கியத்திலிருந்துதான் உயிர் பிரியும்வரைப் போராடிப் பார்க்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்கிறோம். அதைப்போல் தோல்வியடைந்த இந்தச் சமூக சேவகியின் கதையிலிருந்து, விமர்சனங்களை விரலில் சுண்டிவிட்டு வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.


Thursday 9 July 2020

அன்புக்கரங்கள்



புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும். மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும். என்ன புதுப்படம் பற்றிச் சொல்லப் போகிறேன்னு  நினைத்தீர்களா? இல்லை! போதைப் பழக்கம் சம்பந்தப்பட்ட புத்தகம்.

’நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம், இன்னிக்கி இராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்.’ இப்படி ஒவ்வொரு நாளும் பெண்களை ஏமாற்றி குடிக்கிறவரைக் குடித்துவிட்டு, கடைசியில் ‘போதை வந்தபோது புத்தி இல்லையே. புத்தி வந்தபோது நண்பரில்லையே.’ என்று பாடும் ஆண்கள்தான் எத்தனை!

மதுவை அனுமதிக்கின்ற அரசாங்கத்திடமும் தவறு இருக்கிறது, பாட்டிலில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு அதை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளும் மனிதர்களிடமும் தவறு இருக்கிறது. மது மெல்லக் கொல்லும் விஷம் என்றால், மற்ற போதைப் பொருட்கள் கொஞ்சம் வேகமாய் கொல்லும் விஷம். அப்படிப்பட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, தானும் சீரழிந்து தன்னைச் சுற்றியிருப்போரையும் சீரழிப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் நாவல்தான் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய “அவன்”.

பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்?
1. தங்களின் ஆசைகள் மற்றும் கனவுகளைப் பிள்ளைகள்மேல் திணிக்கக்கூடாது.
2. பிள்ளைகளின் நிறை குறைகளை மற்ற பிள்ளையோடு ஒப்பிட்டுத் திட்டக்கூடாது.
3. பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்கள் அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற உதவ வேண்டும்.
4. ஆரோக்கியமான இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
5. தானும் நல்ல கலாச்சாரத்தைப் பின்பற்றி, பிள்ளைகளுக்கும் அதைப் பின்பற்றச் சொல்லித்தர வேண்டும்.
6. நல்ல குணம், நல்ல பண்புகள், நல்ல வார்த்தைகள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், சுயக்கட்டுப்பாடு இவைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

இந்தத் தகுதிகள் எதுவுமே இல்லாத பெற்றோரின் பிள்ளைகள் போதைப் பழக்கத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகும் கொடுமையே இந்நாவல்.

நவீன நாகரிக வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாமல் தங்களின் ஆசைகளைப் பிள்ளைகளின்மேல் திணிக்கும் பெற்றோருக்குப் பிறந்த ப்ரேம், பணத்தை வாரி இரைக்கும் அப்பாவிற்கும், பூஜை புனஸ்காரத்தில் மூழ்கி பிள்ளைக்கு அதிக சுதந்திரம் கொடுக்கும் அம்மாவிற்கும் பிறந்த சுனில், வேறு வாழ்க்கையைத் தேடிப்போன அம்மாவிற்கும், விட்டேற்றியாய் ஊர் சுற்றும் அப்பாவிற்கும் பிறந்த பரத், கணவனை இழந்தாலும் பிள்ளைகளைக் கரை ஏற்றக் கஷ்டப்படும் தாய்க்குப் பிறந்த அப்புசாமி. இவர்கள் ஒரே கல்லூரியில் படித்து சுனிலின் தூண்டுதலால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட போதை பொருட்கள் தெரியுமா? கஞ்சா, ப்ரௌன் ஷுகர், மாத்திரை. இவர்களின் போதைப் பழக்கத்திற்கு பெற்றோர் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் மட்டுமே காரணமில்லை. தவறான நட்பு, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற சுயநல மனப்பான்மை, இளம் வயதிற்கே உண்டான அதீத ஆர்வம் மற்றும் இதுதான் ஆண்பிள்ளைத்தனம் என்ற அவர்களின் வரையறை. இவையும் அவர்களின் தீய பழக்கங்களுக்குக் காரணம்.

பிறகு ஏன் பெற்றோரின் தகுதிகளைக் குறிப்பிட்டேன் என்றால், மேலே குறிப்பிட்டிருக்கும் தகுதிகளை உடைய பெற்றோரின் பிள்ளைகள் தடம் மாறிப்போவது குறைவு. அப்படியே போனாலும் அதை அந்தப் பெற்றோரால் வெகுவிரைவில் சரி செய்யமுடியும். இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பதே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னதான் கவனமாக வளர்த்தாலும் எங்கேயோ தவறு நேர்ந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் ஐந்துப் பிள்ளைகளை எளிதாக வளர்த்தார்கள். இந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது. பாவம்! இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் முதலில் பிள்ளை வளர்ப்பில் கோட்டைவிட்டாலும், பிறகு அதை சரி செய்யத்தான் முயன்றார்கள். ஆனால் அப்படி முயலும் வேளையில் அனைத்தும் கைமீறிவிட்டது.

கொடிது கொடிது சிகரெட் கொடிது, அதனினும் கொடிது மது, அதனினும் கொடிது கஞ்சா, அதனினும் கொடிது ப்ரௌன் ஷுகர், அதனினும் கொடிது மாத்திரை. இதில் முதலிரண்டு கொடிதைப் பற்றி ஊரறிந்தும் உலகறிந்தும் யாரும் நிறுத்துவதாய் இல்லை. அதனால் அடுத்திருக்கும் மூன்று கொடிதைப் பற்றிப் பார்ப்போம்.

“க்ராஸ், பாட்வீட், மரிவானா என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த வஸ்துவை தமிழில் கஞ்சா என்பார்கள். காயவைத்து பொடி செய்யப்பட்ட இலைத்துகள்களான கஞ்சாவை, சிகரட்டை விரல்களால் உருட்டி அதில் அடைக்கப்பட்டிருக்கும் புகையிலை துகள்களை ஒரு பேப்பரில் கொட்டி, அதனோடு இந்த கஞ்சா துகள்களை கலந்து, சிகரெட் பேப்பரை விரல்களால் உருட்டி, கஞ்சா புகையிலைக் கலவைக்கு நேராக வாயில் வைத்து உறிஞ்சி அந்தக் கலவை இறுகிக்கொள்ள மேலும் ஒருமுறை உருட்டி ஜாயிண்ட் சிகரெட் தயாரித்துக் குடிக்கிறார்கள்.”

கஞ்சாசெடிப் பற்றியும், அந்தச் செடியில் இருக்கும் பிசினான ஹஷீஷ் பற்றியும், அதிலிருக்கும் ரசாயன பொருட்கள் பற்றியும் நாவலுக்குள் சென்று அறிந்துக் கொள்ளுங்கள்.

இந்நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனோதத்துவ நிபுணரான டாக்டர் தேவர் கொடுத்திருக்கும் தகவல்களை நாமும் தெரிந்துகொள்ளலாம். கஞ்சாவைப் பிடித்ததும் முதலில் உண்டாவது 'இலேஷன்' (elation), அதாவது சட்டென்று லேசாகி மனசாலும் உடம்பாலும் மிதக்கும் உணர்வு. அடுத்து ஸைனெஸ்தீஸியா (Synaesthesia)… ஒரு புலனின் வேலையை இன்னொன்று செய்ய முற்படுவது. அதாவது, 'பாட்டை நான் பார்க்கிறேன்' என்று கண் சொல்வது. உதாரணம் புரிகிறதா? 'ஐ கான் ஸீ தி ம்யூசிக்' (I can see the music) என்று சொல்லும் நபர்கள் ஏராளம், ஏராளம்.

கஞ்சாவை குடித்தபின் இனிப்பு சாப்பிட வேண்டும் போலிருக்குமாம். எனக்கு அதிசயமாகத் தோன்றிய தகவல் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு அபூர்வமாக மருத்துவர்கள் கஞ்சாவை பரிந்துரை செய்கிறார்களாம்.

சிறு வயதிலிருந்தே தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட சுனில், பரத்தின் பிறந்தநாளன்று ப்ரேமையும் பரத்தையும் அவன் அறைக்கு வரவழைத்து கஞ்சாவை பழக்கிவிடுகிறான். ப்ரேமின் நிர்பந்தத்தால் அப்புசாமியும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். இதனால் ப்ரேம், பரத் மற்றும் அப்புவின் நடவடிக்கைகளில் நிறைய மாறுதல் ஏற்படுகிறது. அதைப் பற்றி பெற்றோர் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்கள்.
பிறகு கஞ்சாவை வாங்கப்போன இடத்தில், புதிதாய் ருசித்துப் பார்க்க மாத்திரையை வாங்குகிறார்கள். “மாத்திரை, ஆஸிட் என்று பலவிதமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் எல்.எஸ்.டி. – லைஸர்ஜிக் ஆஸிட் டைஈதைலமைட் (Lysergic Acid Diethylamide) – ஒருவிதக் காளானிலிருந்து தயாரிக்கப்படும் போதை மாத்திரையாகும். விழுங்கின இருபது நிமிஷத்திலிருந்து அரைமணிக்குள் நேராக மத்திய, ஆடோனாமஸ் நரம்புக் கூட்டத்தைப் பாதித்து, நிஜத்தை உடைத்து பங்கப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், இல்லாததை இருக்கிற மாதிரி கற்பனை பண்ண வைப்பதில் இது ராஜா.”

“இந்த மாத்திரைத் தரும் போதையை ட்ரிப் பயணம் என்பார்கள். அந்தப் பயணம் நல்லதாகவும் அமையலாம் கெட்டதாகவும் அமையலாம்.” இதை வாங்கிய இடத்திலேயே விழுங்கிவிட்டு வண்டியில் சென்ற பரத்தும் ப்ரேமும் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து விபத்துக்குள்ளாகிறார்கள்.

நியூயார்க்கில் பார்பரா என்ற பதினெட்டு வயது பெண் பேபி சிட்டர் வேலைக்கு சென்றிருக்கும்போது, குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தன் காதலன் ஷெராடோடு இந்த மாத்திரைகளை விழுங்கியது மட்டுமல்லாமல் குடிக்கவும் செய்கிறாள். சுயநினைவை இழந்த அவர்கள் உரித்தக் கோழியை அடுப்பில் வைப்பதற்கு பதிலாக உறங்கும் குழந்தையை அடுப்பில் வைத்துவிடுகிறார்கள். இரண்டுமணிநேரம் கழித்து வந்த குழந்தையின் தாய்க்கு கிடைத்தது கருகிய குழந்தைதான். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த உண்மை சம்பவத்தைப் படித்தபோது மனது கனத்துப்போனது. அதுவரைப் புரியாத போதை பழக்கத்தின் கொடூரம் புரிந்தது.

சுனில் ஊருக்கு சென்றிருப்பதாலும், பரத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், அப்புவின் குடும்பச்சூழல் காரணமாகவும் அவர்களால் கல்லூரி சுற்றுலாவிற்கு செல்ல இயலவில்லை. தனியே செல்லும் ப்ரேம் அவர்களின் கல்லூரியில் வேறு துறையில் படிக்கும் மாணவனான விஜய் மற்றும் அவன் நண்பன் மூலம் ப்ரௌன் ஷுகருக்கு அடிமையாகிறான்.

“ஹெராயின் அல்லது ப்ரௌன் ஷுகர், வெள்ளைப்பொடிபோல் இருக்கும். அதிலும் கலப்படம் செய்து பழுப்பு சர்க்கரையாக தயாரித்து விற்கிறார்கள். சில இடங்களில் இதை பள்ளிக் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் கலந்துகொடுத்து அப்பாவியான அவர்களின் வாழ்வை சீரழிக்கிறார்கள்.

இதை 4 வகையாக பயன்படுத்துகிறார்கள். சிகரெட்டில் அடைத்துப் புகைப்பது, மூக்குப்பொடிபோல் போடுவது, சேஸ் செய்வது மற்றும் தண்ணீரில் கலந்து ஊசிப்போட்டுக்கொள்வது. சிலர் இதன் தாக்கத்தால் உடனே இறந்துபோகிறார்கள். 4 நாட்களுக்குள் மனிதரைத் தன் வசப்படுத்தும் இந்த ப்ரௌன் ஷுகரை உடனே நிறுத்தினால் கோல் டர்க்கி வந்துவிடும்.”

கோல் டர்க்கி: விடாமல் தோன்றும் கொட்டாவிகள், உடலெங்கும் குத்தீட்டு நிற்கும் மயிர் கால்கள், மூக்கிலும் கண்ணிலும் வழியும் நீர், தொண்டை வறட்சி, வாந்தி மற்றும் மோஷன், உடலெங்கும் பரவும் வலி. இவையனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இம்சிப்பது. இது ப்ரௌன் ஷுகர் எடுத்துக்கொண்ட உடனே சரியாகிவிடும்.
ப்ரௌன் ஷுகரை உபயோகிக்கத் தொடங்கிய ப்ரேம் பணத்திற்காக வீட்டிலிருக்கும் பொருட்களை திருடி, வேலைக்காரன் மேல் பழி வந்தபோது வாய்மூடி மௌனியாகி, பரத்திற்கு பழக்கிவிட்டு, தெரிந்தவர் கடையில் திருடி,  தெரிந்தவர்களிடம் ப்ரௌன் ஷுகரை விற்று, அப்புசாமிக்கும் பழக்கிவிடுகிறான்.

ப்ரௌன் ஷுகர் சரியாக விற்காத காரணத்தால் கலப்படம் செய்து விற்றதில் கமலி என்ற அப்பாவி பெண் பலியாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைத் தெரிந்த ப்ரேம், அடுத்தப் போதைப் பொருளான நாய் கொடைகளைத் தேடி கொடைக்கானலுக்கு செல்கிறான். வீட்டைவிட்டுப் போகிறேன், என்னைத் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு சென்றதால் பெற்றோர் அவனைத் தேடி அலைகின்றனர்.

அப்போதுதான் ப்ரேமின் படிப்பு நின்றது, அவன் நண்பர்களின் நிலைப்பற்றி ப்ரேமின் பெற்றோருக்கு தெரியவருகிறது. பாம்புக்கடி, தேள்கடி இதன்மூலம் ஏறும் விஷத்தைக்கூட  போதையாக எடுத்துக்கொண்டவர்கள் இருக்கிறார்களாம். என்ன பயங்கரங்கள்! போதைப் பொருட்களைப் பற்றிய ஒரு குட்டி வரலாறும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதிலுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகள் போதை ஊசிகளை பயன்படுத்துகிறார்கள் என மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றினை நடத்தியது. 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 18 முதல் 75 வரை உள்ள பெரியவர்கள் என இரண்டு விதமாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 30 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறுகிறது ஆய்வறிக்கை. இது நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.3 விழுக்காடாகும். பெரியவர்களை பொறுத்தவரையில் 15 கோடியே 10 லட்சம் பேருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாசலப்பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் சரிபாதி ஆண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறதாம்.  10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேருக்கும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் பேருக்கும் கஞ்சா பழக்கம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகளும் 1 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் போதை ஊசி பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் 10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 1 கோடியே 10 லட்சம் பேரும் போதை மாத்திரைகளை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறிஞ்சும் வகையிலான போதை பொடிகளை 30 லட்சம் குழந்தைகளும் 60 லட்சம் பெரியவர்களும் பயன்படுத்துவதாக கூறுகிறது. 10 முதல் 17 வயது வரை உள்ள 2 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 10 லட்சம் பேரும் கொகைன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும்  வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் தினகரனில் வெளியிடப்பட்ட செய்தி இது.

ப்ரேமிற்கும் அவன் நண்பர்களுக்கும் என்ன ஆனது என்று 26 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறிய நூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். போதைப் பொருட்கள் பற்றிய நிறைய விஷயங்களை நம்மை அதிரவைக்கும்படி பல மனோதத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை சந்தித்து கலந்தாலோசித்து அறிய தகவல்களாக கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.

ஆர்வக்கோளாறில் செய்யும் செயல்கள்தான் வாழ்க்கையையே கோளாறாக்கிவிடுகிறது. போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது புதிய உலகில் சஞ்சரிப்பது போலத்தான் இருக்கும். அதன் விளைவைச் சந்திக்கும்போதுதான், ஏற்கனவே பழகிய எதார்த்தமான அழகான உலகைவிட்டு வெகுதூரம் பிரிக்கப்பட்டிருப்பது தெரியவரும். அப்படி நிதர்சனம் புரியும்போது, அதை ஏற்க உடலும் மனமும் ஒத்துழைக்காத நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இளைஞர்களே, பெரியவர்களே, பெண்களே, உலகின் மிகச் சிறந்த போதை எது தெரியுமா? அன்பு. அந்த அன்பிற்கு அடிமையாகிவிட்டால், அளவோடு அடிமையாகிவிட்டால், மற்ற எந்தப் போதைப் பொருட்களும் தேவையே இல்லை. விஷத்தை உறிஞ்சும் சக்தி தண்ணீருக்கு இருப்பதுபோல் அதே தன்மை மனரீதியாக அன்பிற்கும் இருக்கிறது.

போதைப் பழக்கத்திலிருந்து மீளத்துடிப்போருக்கு யோசிக்காமல் அன்புக் கரங்கள் நீட்டி அவர்களை அந்தப் புதைகுழியிலிருந்து மீட்போம்.

இந்நூலை அமேசானில் படிக்க:


பின் குறிப்பு:
பிக் பூஸ்டர் என்ற யூடியூப் சேனலில் என் கவிதை மற்றும் முல்லா கதைகளை  அப்லோட் செய்கிறேன்.சப்ஸ்க்ரைப் செய்து பார்க்கவும்.

Saturday 4 July 2020

'ஒரு மாதக் குழந்தை'



என்ன இவ்வளவு லேட் பண்றீங்க. சீக்கிரம் ஹால் ரெடி பண்ணுங்க. அவங்க எல்லாம் வர நேரமாகிடிச்சி. ”அபி. இந்த கொரோனா நேரத்துல இது தேவையாடி?” “தேவைதான் மகி. எல்லாம் சும்மா ஜாலிக்குதானே. நீ போய் ரெடி பண்ணு. நான் அவங்க எல்லாரையும் வரவேற்கிறேன்.” நான் வாசலுக்கு வந்தேன். என் தோழியர் ஹாலை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். சிறிதுநேரத்திலே ஒரு கார் வந்தது. அதிலிருந்து ஒருவர் இறங்கினார்.
வாங்க வித்யா மேடம். வாங்க வாங்க.” “வாழ்த்துக்கள் அபி. ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு. நீங்க இதைவிட பெரிய பெரிய விழாலாம் கொண்டாடனும்.” “ரொம்ப நன்றி மேடம். ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க வந்ததுல.” நான் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றொரு கார் வந்தது.
அடடே வாங்க வெங்கட் சார் எப்படி இருக்கீங்க? என் அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி.” “ம். நல்லா இருக்கேன். வரலேன்னு சொன்னா மட்டும் விடவாப்போறீங்க? எனிவே வாழ்த்துக்கள்.” “நன்றி சார். உள்ள வாங்க.” அவர் உள்ளே சென்றதும் சிறிது நேரத்தில் வரிசையாக கார்கள் வரத் தொடங்கியது.
வாங்க கில்லர்ஜி சார். வாங்க வாங்க. “வாழ்த்துக்கள் அபி. ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலயா?” “ஹா ஹா தெரியலயே. என்ன சார் பண்றது இதைக் கொண்டாடனும்னு தோனிச்சு அதான். உள்ள வாங்க சார்.” அவரும் உள்ளே சென்றார்.
வாங்க துளசிதரன் சார். வாங்க கீதா மேடம்.” “அபி எங்களுக்கு கேக் கிடைக்கிதோ இல்லையோ. கைக்கழுவ சேனிடைசர் கிடைச்சது. முகக்கவசம் அணிஞ்சிருக்கோமான்னு செக் பண்ணாங்க. ஹப்பா. கூட்டம் கூடாதுன்னு சொல்லுற இந்த நேரத்துல உங்களுக்கு ஏங்க இந்தக் கொலைவெறி.” “ஹா ஹா வாங்க கீதா மேடம். வாழ்க்கைய இப்ப வாழலன்னா எப்போ வாழ்வது. என் ஃபோனுக்கே பிறந்தநாள் கொண்டாடினேன். இதுக்கு கொண்டாடலன்னா எப்படி?” “ம். உங்க ஒரு மாத ப்லாகிற்கு பிறந்தநாளா? உங்க குறும்புக்கும் கற்பனைக்கும் அளவே இல்லை.” என்று சிரித்தார் துளசிதரன் சார். இருவரும் என்னை வாழ்த்திவிட்டு உள்ளே சென்றனர்.
 வாங்க ஸ்ரீராம் சார்.”"அபி இதெல்லாம் டூ டூ மச். வாழ்த்துக்கள்.” “ஹாஹா நன்றி ஸ்ரீராம் சார்.அடுத்த முறை இதைவிட அமர்க்களப்படுத்தி ஃபோர் மச் ஆக்கிடுறேன்.” பேசிக்கொண்டிருந்தபோதே ராஜி மேடம் வந்தார்கள். “ஹாய் ராஜி மேடம், வாங்க வாங்க.” “என்ன அமைதியின் சிகரமே. எப்படி இருக்கீங்க? எல்லாம் ரெடியா?” “நல்லா இருக்கேன் மேடம். எல்லாம் ரெடி.” “உங்க குட்டித் தொண்டையில காரக்குழம்பு குடையிதோ இல்லையோ. உங்க குட்டி மூளைக்குள்ள நிறைய சிந்தனைகள் குடையிது. அதுவும் கொரோனா நேரத்துல கூட்டம் கூட்டி கேக் வெட்டனும்ற வில்லங்கச் சிந்தனைகள்.” “ஹா ஹா வாங்க மேடம்.” அவர்களும் உள்ளே சென்றதும் அமுதா மேடம் வந்தார்கள்.
அதன் பின் திருப்பதி மகேஷ் ஒரு பெரிய குழுவாக வந்திருந்தான். அதில். அரவிந் சார், நவீன், பாஷா, பரத்,  ஃபெர்நாண்டோ வினோத் ஆகியோர் இருந்தனர். “ஹாய் ஹாய் வாங்க வாங்க, எப்படி எல்லாரும் ஒன்னா வந்தீங்க?” “ம், தனித்தனியா வரவேற்றா உனக்கு வாய்வலிக்குமே. அதான் ஒன்னா வந்து வரவேற்க வெச்சிட்டோம்.” வினோத் கலாய்த்தார். சிறிதுநேரம் மகேஷ் குழு முடிந்தமட்டும் என்னைக் கேலி செய்துவிட்டு உள்ளே சென்றனர்.
வாங்க கோயில்பிள்ளை சார், வாங்க விசு சார். விசு சார் நீங்க எனக்கு பின்னூட்டம் போடாததால நான் கொஞ்சம் நல்லா எழுதலியோ. இன்னும் என்னை வளர்த்துக்கனுமோனு தோனிச்சு. உங்கள் கருத்துக்கள்தானே எங்க வளர்ச்சிக்கு ஆதாரம்.” “நீங்க போட்ட அனுபவப் பதிவுகளப் பார்த்துட்டு அரண்டு போயிருப்பார்.” கோயில்பிள்ளை சார் சொல்ல, விசு சார் சிரித்துவிட்டார். இருவரும் உள்ளே சென்றதும் திண்டுக்கல் தனபாலன் சார் வந்தார்.
வாங்க தனபாலன் சார்.” “வாழ்த்துக்கள் அபி. எல்லாரும் வந்தாச்சா?” “நன்றி சார். எல்லாரும் வந்துட்டாங்க.” தனபாலன் சார் உள்ளே சென்றதும் ரம்யா மேடம் வந்தார். அவரும் உள்ளே சென்றதும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா வந்தார்.
வாங்க ஐயா. என் அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்தமைக்கு ரொம்ப நன்றி.” “உங்களின் எழுத்துக்கள் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்.” “நன்றி ஐயா.” ராஜேஷ்வர கௌதம், முனியபிள்ளை,யாதொரமணி, லத்தா டீச்சர் மற்றும் பல வாசகர்கள் வந்ததும் விழாத் தொடங்கியது.
 ஹாப்பி பர்த்டே டூ யூ. ஹாப்பி பர்த்டே டூ யூ. ஹாப்பி பர்த்டே டூ அபி ப்லாக் ஹாப்பி பர்த்டே டூ யூ. என்று வாழ்த்திப்பாட, கேக் வெட்டப்பட்டது. அபியின் தோழியரும் பெற்றோரும் அனைவருக்கும்  கேக், மிக்சர், சாக்லேட்டோடு ஜூசும் பரிமாறினார்கள்.
சிற்றுண்டியை உண்டபடியே அனைவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கப்பட்டது. சிறிதுநேரத்தில் நான் இந்த ஒரு மாத எழுத்து அனுபவங்களை ஷேர் பண்ணுவதற்காக எழுந்து நின்றேன். “ஒரு மாசமா பெரியப் பெரிய பதிவாப் போட்டு வாசிக்க வெச்சிக் கொல்லுற. இப்போ பேசிக் கொல்லப்போறியா? வேண்டாம் அபி. ப்லீஸ்.” அரவிந் சார் போலியாய் கெஞ்ச அனைவரும் சிரித்தனர். இருந்தாலும் நான் விடாமல் என் கடமையில் கண்ணானேன்.



என் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றோடு நான் வலைப்பூ ஆரம்பித்து ஒரு மாதம் ஆகுது. இந்த ஒரு மாத காலமும் நல்ல அனுபவமா இருக்கு.
சுவாரசியமா இருக்கு. ஒவ்வொருவரின் கருத்துக்களைப் படிக்கும்போதும் சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்னாடியும் எழுதுவேன் ஆனா பெருசா எங்கையும் பப்லிஷ் பண்ணதில்ல. நட்புக்குள்ளதான் தெரியும். இப்போ எல்லா இடங்களிலிருந்தும் எனக்கு வாசகர்கள் இருக்காங்கன்னு நினைக்கவே பெருமையா இருக்கு. இன்னும் அதிக வேகத்தோட எழுதத் தூண்டுது.
ஒவ்வொரு பதிவை எழுதி முடிச்சு பப்லிஷ் பண்ணும்போதும் எதையோ சாதிச்ச சந்தோஷம். இன்னும் நிறைய படிக்கணும், நிறைய விஷயங்கள கத்துக்கணும், எழுத்து வன்மையை மேலும் பெருக்கணும். சீக்கிரமா அமேசானில் புத்தகமா வெளியிடணும். இதுதான் என்னோட நோக்கம் லட்சியம் எல்லாம். எதாவது கான்செப்ட் பத்தி யோசிச்சா கனவுல அந்த கான்செப்ட் தொடர்பா எதாவது வருது.
எல்லாரோட பதிவைப் படிக்கிறதும் சுவாரசியமா இருக்கு. பாசிடிவ் நெகட்டிவ் கருத்துக்கள் வருது. இது இரண்டையும் கேட்கும்போதும் இன்னும் எப்படியெல்லாம் எழுதினா நல்லா இருக்கும்னு யோசிக்க வைக்கிது. எப்பவும் எழுத, படிக்கன்னு பாதிநேரம் அழகாவே கழியிது. மனசெல்லாம் சிந்தனை மயம்தான்.
ஒரு புத்தகத்தை நாங்க நோட்பேட்ல மாத்தி இன்சர்ட் டௌன் ஏரோ கொடுத்துப் படிப்போம். அப்போ பத்தி, கேப், எழுத்துரு, கலர், இதெல்லாம் கவனிக்கப்படாது. எல்லா உச்சரிப்புக்களும் ஒரே மாதிரி ஒலிக்கிறதால ந், ன், ண், கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டம். இப்போ நீங்க எல்லாரும் படிக்கும்போதுதான் என்னென்ன தவறுகள் இருக்குன்னு தெரியவருது. மாற்றுத்திறனாளியா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை தவறு தவறுதான். சலுகைகள் கூடாது.
ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் சரி செய்துவிடுகிறேன். ராஜி மேடம் எழுத்துருவை பெருசாக்கச் சொல்லியிருந்தார். அதன்படி நானே இந்தப் பதிவில் எழுத்துருவை சரி செய்திருக்கிறேன். சரியாக வந்திருக்கிறதா என்று கருத்தில் சொல்லுங்கள். கில்லர்ஜி சார் சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, சரி செய்ய சொல்லியிருந்தார். ’அமைதியும் ஓர் ஆயுதம்தான்கதையில் அதை சரி செய்து எழுதியிருக்கிறேன். கீதா மேடம் தொலைப்பேசியில் பத்திப் பிரித்து எழுதச் சொல்லியிருந்தார். ms word ல் எழுதும்போது எனக்கு அடிக்கடி சிஸ்டம் ஹேங் ஆகும். கம்ஃபர்டபிளா இருக்காது அதுனால நோட்பேடில் எழுதுவேன். அதுல பத்திப் பிரிக்க முடியாததால கேப்விட்டு எழுதுறேன். அதுவும் சரியா என்று சொல்லுங்கள்.
இதைப் பற்றியெல்லாம் வித்யா மேடமிடம் தொலைப்பேசியில் கேட்டதற்கு எல்லாம் கரக்டா இருக்கு என்றார்கள். என் எழுத்துக்கள் இன்னும் உங்கள் பார்வைக்கு விருந்தாக அழகாக அமைவதற்கான வழிமுறைகளை நீங்களும் சொல்லுங்கள். பொதுவில் சொல்லத் தயங்கினால் abi.idi.0603@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
என்னை எழுதத் தூண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், ப்லாக் ஆரம்பித்துத் தந்த மகேஷிற்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சரி. ரொம்ப மொக்கப்போடுறேன். வாங்க எல்லாரும் சாப்பிடப் போகலாம். “ஒரு மாசத்துக்கே இந்த அக்கப்போரு பண்றாங்களே. இன்னும் ஒரு வருஷம் பல வருஷமெல்லாம் ஆனா நாமெல்லாம் என்ன கதிக்கு ஆளாவோமோ. கடவுளே, இதைக் கேட்பாரே இல்லையா!” என்று பாஷா புலம்ப அனைவரும் சிரித்துக்கொண்டே சாப்பிடச் சென்றனர்.
மட்டன் பிரியாணி, வெஜ்பிரியாணி, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, தயிர் பச்சடி எல்லாம் மணக்க மணக்க அவர்களை வரவேற்றது.

பின் குறிப்பு:
என்னை நானே பன்மையில் சொல்வது நீங்கள் உங்கள் கருத்துகளில் என்னை அப்படி குறிப்பிடுவதால் மட்டுமே.