Thursday 21 October 2021

யாரோ அனுபவிச்சவன் எழுதுனது போல

வணக்கம் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து நான்கு மாதங்களாகுது. படிச்சு எழுதி அதற்கு மேலயே ஆகுது.

இந்த இடைப்பட்ட மாதங்கள்ள எனக்கு வேலை கிடைச்சிருக்கு. ஆன்லைன் ரேடியோ ரேடியோ ப்லாக்‌ஷீப்ல. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை அன்புடன் அபினு கவிதை ஷோ பண்ணேன். கவிதை சொல்லி அதுக்கு தொடர்பான விஷயங்கள பேசுறது. இப்போ ஆடியோ புக்ஸ் போடுற ஷோ குடுத்துருக்காங்க. அது  இன்னும் ஒலிபரப்பாக ஆரம்பிக்கல. ப்லே ஸ்டோர்ல bs value செயலி இன்ஸ்டால் பண்ணி உள்நுழைவு செய்து, மைக் லைவ் ரேடியோனு வரும், கிலிக் பண்ணா ரேடியோ பேனர் ப்லே இல்ல லைவ் ரேடியோ வரும். அத கிலிக் பண்ணனும். சர்வதேச உரிமம்.

சின்ன சின்ன மின்மினிகள் என்ற மின்நூல் வெளியிட்டேன். கவிதை தொகுப்பு. கூகுல்மீட்ல ஒரு சிறிய விழா நடத்தி வெளியிடப்பட்டது. அதன் அமேசான் லின்க் கீழே.

சின்னச் சின்ன மின்மினிகள்


முதல்ல ஒரு பழைய ஃபோன் வாங்கி தொலைச்சிட்டு மறுபடி புது ஃபோன் வாங்கியிருக்கேன். கிலப்ஹௌஸ், அலுவலகம்  மூலமா நிறைய புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. சொல்லிக்கிற அளவு இதுதான் நடந்தது.

கிலப்ஹௌஸ்ல அறிமுகமான ஒரு நண்பரின் கவிதையோடு இந்த பதிவை முடிக்கிறேன்.


யாரோ அனுபவிச்சவன் எழுதுனது போல 


என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது


எவனோ ஒருவன் போல் நான்

அமர்ந்து கொண்டிருக்கிறேன்


தாடி வளர்க்கும் வயதும் இல்லை

போடி என்று சொல்ல மனமும் இல்லை..


என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்


அவரோடு நின்று நிழற்படம் எடுத்துக் கொள்கிறாள்


கன்னத்தில் முத்தமிட மறுத்தவள்


அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டுக்

கொண்டிருக்கிறாள்


அழகான கூரைப் புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல்

இருக்கும் நெற்றியில்

நெற்றிச்சுட்டி


நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள்


அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது


அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை

அணிந்திருக்கிறாள்


அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல


யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள்


இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்


ஏமாந்தவன் எதிரிலே இருக்க


இன்னொருவனுடன் உனக்குத் திருமணம்


இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்து விட்டு எரிகிறது


அவள் கழுத்திலே தாலி கட்டப் போகும் கணவன் இருக்கிறான் பாசத்தோடு


உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்

கங்காராஜ் MA. B.ED. MPHIL

     

Thursday 3 June 2021

'மனம் புதிது'

புதிது, புதிது, புதிது, மனம் புதிது.

அதனினும் புதிது கடுகாய் சிறுத்தமனம்.

கண்ணுக்கு தெரியா மனமே,

கண்முன் நடக்கும் அநீதிகளை உள்வாங்கியும் உறங்கிக்கொண்டிருக்கும்

உன் குணம் புதிது.

உலகைஏ உலுக்கிப்போட வேண்டிய நீ

உன் சுற்றத்தின் சுகம் பேணும் நிலை புதிது.

நாள் மட்டும் புதிதல்ல

நொடிக்குநொடி உன் துடிப்பும்

புதிதென்பதை என்றுணர்வாய்.

ஆழ்மனம் அநீதியை எதிர்க்க துடிக்க

வெளிமனம் அதை வேடிக்கை பார்க்கும் விதத்தை

மாற்ற வேண்டும் என்பதை என்றுணர்வாய்.

குவலயத்தின் சுருக்கம்போல் குறுகிப்போகாமல்

விசாலமாகி விதியை மாற்றவேண்டும் என்பதை என்றுணர்வாய்.

கடுமையாய் உழைப்பவன் எவனோ

அதை எளிமையாய் கொள்ளை கொள்பவன் எவனோ.

எத்தனை பானங்கள் உலகிலிருந்தும்

உயிரை குடிப்பது ஏன்?

இனமே இனத்தை தின்பது ஏன்?

விரும்பிப்படற வேண்டிய வஞ்சிக்கொடி

வேட்டைக்கு உட்படுத்தப்படுகிறது.

மலர் மட்டுமா கசக்கப்படுகிறது

மொட்டுக்கள் கூட புசிக்கப்படுகிறது.

ஒரு ஆணை அவனிக்குக் கொடுப்பவளும் பெண்,

அவனைக் கட்டிக்கொண்டு கொண்டாடுபவளும் பெண்,

அவனைத் தந்தையாக்க தரணிக்கு வருபவளும் பெண்

இருந்தும் ஏன் இந்த தீராக்காமப்புண்

துடிப்பான பெண்ணை துடிக்கவைப்பதா ரசனை?

அழகுப்பதுமையை அழவைத்து சிரிப்பதா பெருமை?

எழுமனமே எழு.

இந்த வக்கிரங்களை வேறோடு சாய்க்க

வீறுகொண்டெழு.

அன்புக்குப் பஞ்சமுண்டு

அழிவுக்கு இட்டுச்செல்லும் லஞ்சத்திற்கு பஞ்சமில்லை

அதை வாங்கவும் கொடுக்கவும்

ஒருவரும் அஞ்சவில்லை

தலைமையில் பிழையிருந்தது அக்காலம்

தலைமையே பிழையாகிப்போனது இக்காலம்.

தலைவர்களின் கொள்கையெல்லாம் மேசைக்கு அழகூட்டும் அழகு சாதனம்.

வரவில்லை வரியுண்டு.

பணியில்லை  பரிட்சையுண்டு.

அறிவை வளர்க்க படித்தது அக்காலம்

அரக்க பறக்க படிப்பது இக்காலம்/

அம்மிக்குழவியின் தாளமும் ஆட்டுக்கல்லின் ராகமும் அழிந்தே  போனது.

குளிர்சாதனப்பெட்டியெல்லாம் குயவனுக்கு எதிரியானது.

குளீரூட்டப்பட்ட அறையெல்லாம் ஜன்னல் காற்றுக்கு ஜென்ம விரோதியானது.

துரித உணவெல்லாம் சத்துள்ள உணவை சப்பென்றாக்கிவிட்டது.

குளிர்பானங்கள் பழச்சாறை போ போ என்றது.

கடிதங்கள் குடும்பத்தின் அங்கமானது அக்காலம்.

மின்னஞ்சல் வேலைக்காரியானது இக்காலம்.

அம்மா அழைத்தால் அலட்சிய பார்வை

அலைபேசி அழைத்தால் அவசரப்பார்வை.

சில பாடல்கள் நம்மை உருகவைத்து உறையவைக்கும்.

சில பாடல்கள் நம்மை சலனப்படுத்தி சறுக்கவைக்கும்.

அறிவுக்கு தொடர்பற்ற நிகழ்ச்சிகளும் ஆபாச காட்சிகளும்

அழகு மனதை அழுகச் செய்யும்.

எழுமனமே எழு.

சீர்குலைந்திருப்பதை சீர்படுத்த

சினந்து எழு

அன்று பாப்பா விளையாட ஓடும்.

இன்று பாப்பா தொலைக்காட்சியை நாடும்.

அன்று பாப்பாவின் பிடிப்பு கல்வியில்.

இன்று பாப்பாவின் பிடிப்பு கணினியில்.

அன்று பாப்பாவுக்கு பால்புட்டி வேண்டும்.

இன்று பாப்பாவுக்கு சிரம் பேசி வேண்டும்.

அன்று பாப்பாவின் உணவு காய்கறி பழங்கள்.

இன்று பாப்பாவின் உணவு கடைவீதி பண்டங்கள்.

அன்று பாப்பாவின் முணுமுணுப்பு பாடப்பாடல்கள்.

இன்று பாப்பாவின் முணுமுணுப்பு படப்பாடல்கள்.

எழு மனமே எழு.

குழந்தை சிற்பத்தை  செதுக்க

பொங்கி எழு.

சுற்றித்திரியும் சிட்டுக்குருவி  எங்கே?

பட்டுப்பூச்சி தோட்டத்தில் உலவும் காட்சி எங்கே?

இயற்கை மருத்துவம் தந்த காடுகள் எங்கே?

இளைப்பாற மரங்கள் எங்கே?

மண்ணின் ஊர்வனத்திற்கு உணவாகும் அரிசிமாக்கோலங்கள் எங்கே?

மண்வாசம் அள்ளித்தரும் பொன்னான காற்று எங்கே?

நீரைத் தந்து பயிரை வளர்த்து

உயிர் வாழச் செய்யும்

மழைதான் எங்கே?

எழு மனமே எழு

இயற்கை இன்பத்தை மீண்டும் பெற

புதிதாய் பிறந்து எழு  

விழித்தெழு மனமே விழித்தெழு.

விடியலுக்காய் காத்திராமல்

அதை நீயே உருவாக்கு.

அழகு மனமே,

நீ அழிய பிறக்கவில்லை.

அநீதிகளை அழிக்க பிறந்தாய்.

அகக்குரூரங்கள் அகல அகல,

புறக்கொடுமைகள் புறங்காட்டி ஓடும்.

ஒருமுறை வீசி மறையும் தென்றல்

மறுமுறை வீசும்போது அந்த தென்றல் புதிது;

ஒருநாள் உதித்து மறையும் கதிர்

 மறுநாள் உதிக்கும்போது  அந்த கதிரவன் புதிது;

ஒருமுறை தேய்ந்து வளரும் நிலவு

மறுமுறை வளரும்போது அந்த நிலவு புதிது;

ஒருபொழுது பூத்து வாடும் மலர்

 மறுபொழுது பூக்கும்போது அந்த மலர் புதிது;

ஒருமுறை நீ உன் வக்கிரங்களை ஒழித்துவிட்டால், மனமே நீ என்றும் புதிது.

பொங்கட்டும் உள்ளம். பூக்கட்டும் புதுமை.













 

Saturday 17 April 2021

எமனுக்கோர் எச்சரிக்கைக் கடிதம்.


அறிவற்ற காலனே, அந்தக் கலைவாணரை உன் சொந்தமாக்கியபோது ஆறுதல் பரிசாய் ஆண்டவன்

இந்தச் சின்னக் கலைவானரைத் தந்தான்.

இதுவுமா உனக்கு வேண்டும்?

உனக்கென்ன அத்தனை உயிர்பசியா?

உரிய கருத்துக்களால் எம் நகைச்சுவைப் பசியாற்றியவரை நயவஞ்சகமாய் எடுத்துக்கொள்ள!

அவர் இதுவரைச் சிரிக்க மட்டுமே அனுமதியளித்தார். அழுவதற்கும் அனுமதிக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டுப் பறித்துக்கொண்டுப் போவதுதானே!

கதைக்கத் துணை வேண்டுமென்றா கவித்துவப் பேச்சாளரைக் களவு செய்தாய்!

நீ சிரிக்கத்தானா எல்லோர் நெஞ்சிலும் நெருப்பள்ளிக் கொட்டினாய்!

எமனே! எக்காளமிட்டுச் சிரிக்காதே! விவேக்கை ஜெயிக்க உனக்கு விவேகம் போதாது.

வெற்றிக்கொண்டது விவேக்கை அல்ல. போனால் போகட்டுமென்று அவரே உனக்குப் பிச்சையிட்ட பாழுடலை!

அழுகும் உடல் யாருக்கு வேண்டும். அழகான மனதும், அவர் சிரித்தப்பொழுதும், சிரிக்கவைத்தச் சுவடுகளும் என்றும் எமக்கே.

மாண்டவர் பிரிவுத் துயரில் சிக்கி மீளமுடியாதோரெல்லாம், மாபாதகா என்றுனைச் சபிக்கையில், அந்த சாம்பலின் தாப நெருப்பு என்றேனும் உன்னைத் தாக்காமலா போய்விடும்!

கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்து மண்ணுலகை ஆக்கிரமிக்க உனக்கென்ன மண்டைக்கணமோ!

கூற்றுவனே! எனக்கென்று நீயிருக்க உனக்கென்று ஒருவன் வராமலா போவான். காலக்கயிற்றால் எம்மைக்கட்டியிழுக்கும் உனக்கும் ஓர் காலன் கெடுவைப்பான். காத்திரு எந்த நொடியும்.

இப்படிக்கு. எந்த நொடியிலும் உன்னால் வஞ்சிக்கப்படலாம் என்ற நிஜத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும்  மண்ணுலகப் பிரதிநிதி. 

Wednesday 14 April 2021

'கலாவின் காலை வணக்கம்'.



விடியும்போதே கலா தன் காதலன் நினைவுடனே கண்களை மெல்லத் திறந்தாள். எதிரே நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் காதலன் புகைப்படத்தில் அவளைப்பார்த்தபடி காதலாக சிரித்தான்.

2 நிமிடம் அவள் அதன்மீதிருந்து கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பார்க்க பார்க்க கண்களிலும் இதழ்களிலும் சிரிப்பு வழிகிறது.

ஒரு  நிமிடம்தான் பின்பு பெருமூச்சுவிட்டுக்கொண்டாள். ச்செ இந்த கவின் ஏன் இப்படி செய்கிறான்? ஒரு காலத்தில் என்னை எப்படியெல்லாம் அன்போடு பார்த்துக்கொள்வான். தினமும் எனக்கு காலை வணக்கம் சொல்லி என்னை எழுப்பிவிடுவானே. இப்போது என்பொழுது அவன் நினைவுடனே தனிமையாக விடிகிறதே என்று நினைத்துக்கொண்டாள். அவன் முகம் அவளுக்கு ப்ரகாசத்தை கொடுத்தாலும் அவனின் நினைவுகள் அவள் மனதுக்கு வேதனையை கொடுத்தது.

அவள் அன்னை வட்சலா கலாவுக்கு காபியும் காலை உணவும் அவள் அறைக்கே எடுத்து வந்தாள்.

”ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா? பொம்பளப்பிள்ளையா லட்சனமா சட்டுனு எழுந்துக்காம இப்படி கவினைப்பாத்துட்டே எவ்ளோ நேரம்தான் படுத்துட்டுருப்ப? எழுந்து கிளம்பித்தொலை. எல்லாம் கல்யானத்துக்கு அப்பறம் பார்த்துக்கலாம்” என்றபடி உணவு மேசையில் வைத்துவிட்டு சென்றாள்.

”ஆமாம் உன் மாப்பிள்ளை மன்மதன் பாரு? அழகு சொட்டுது அதான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு தெரியும் போய் வேலையப்பாரும்மா” என்று கத்தினாள். 

கலாவும் கவினும் கல்லூரி காதலர்கள். அதோடு கலாவின் அப்பா ராகவனும் கவினின் அப்பா ராஜசேகரும் தொழில்முறை நண்பர்கள். வட்சலாவும் கவினின் அம்மா அபிராமியும் உயிர் தோழியர். குடும்ப நட்பும்,  இருவரும் ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம் என்று வளர்ந்ததால் அவர்களின் நட்பு கல்லூரியிலிருந்தே காதலாய் மாறியது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளப்போகின்றனர்.

 முன்பெல்லாம் கவினும் கலாவும் அலைப்பேசி நிருவனத்திற்கு பெருத்த லாபம் ஈட்டித்தருவார்கள். மணிக்கணக்கில் பேசுவார்கள். கலாவுக்கு காலை வணக்கம் சொல்லாமல் கவினின் பொழுதும் அதை கேட்காமல் கலாவின் பொழுதும் விடியாது. அதை கலா மிகவும் ரசித்தாள். போகப்போக பேசும் நேரம் மிகவும் குறைந்து போனது. காலை வணக்கம் சொல்வதும் நிறுத்தப்பட்டது.

 கவின் பெங்கலூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்திலும் கலா அதே நிறுவனத்தின்  சென்னைக்கிளையில் பணிபுரிந்ததால் பார்த்துக்கொள்ளும் நேரங்கள் குறைவுதான். தொலைப்பேசிதான் அவர்களுக்கு எல்லாம். ”நீ எனக்கு காலை வணக்கம் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது சொல்லு” என்று கவினுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவன் சொல்லவில்லை. நாட்கள் போகபோக அவள் மனம் வேதனையும் கோபமும் கொண்டது. அதனால்தான் இந்த சலிப்பெல்லாம்.

மனதில் எரிச்சல் மூண்டாலும், கடமையின் காரணமாக அலுவலகம் கிளம்பிச் சென்றாள் கலா. மாலையில் அவளை அழைத்த கவின் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு வெகுநேரம் பேசினான். அவள் மனதுக்கு நெருக்கமான வகையில் கலா நினைத்தபடி உன்மையான அன்பொழுக பேசினான். இதுதான் நேரம் என்று நினைத்து கலா கேட்டே விட்டாள்.

"கவின் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்று கொஞ்சும் குரலில் கேட்டாள். "என்னமா" என்றான் அவனும் அன்புடன். "உங்களுக்கு உன்மையாவே என்னை பிடிச்சிருக்கா? எனக்கு எது பிடிக்கும்னு சொன்னாலும் நீங்க செய்யறதில்ல. ஒரு காலை வணக்கம்கூட சொல்லுறதில்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கவின். நான் உங்கள் அன்பை பெரிதும் இழக்கிறேன்" என்றாள் அழுகையை அடக்கியபடி.

"ஒரு விஷயம் நடக்கலனா அது ஏன் நடக்கலனு யோசிச்சுப்பாரு. நான் உனக்கு உர்ச்சாகமான குரலில் காலை வணக்கம் சொல்லும்போது நீ மெதுவான குரலில் சோர்வாக சொன்னால்  எனக்கு எப்படி சொல்லத்தோனும்? நீ எந்த மனநிலையில் இருக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும். அதனால்தான் பெரும்பாலும் நான் சொல்வதில்லை." "சரி இதற்கு பதில்  நேரில் சொல்கிறேன்" என்றாள் கலா.

அதன்பிறகு 2 வாரங்கள் கழித்து ஒரு பூங்காவில் காலை 10 மணியளவில் இருவரும் சந்தித்தனர். சிறப்பான அலங்காரத்துடன் வந்திருந்தாள் கலா. கலாவின் கண்களுக்காக மட்டுமே தன்னை பார்த்து பார்த்து அழகு செய்துகொண்டு வந்திருந்தான் கவின். மல்லிகை பூச்சரத்தை நீட்டி காலை வணக்கம் சொல்லி கலாவை ஏறிட்டான் அவன்.

அவள் முகம் நானத்தால் சிவந்து விழிகள் மூடின. குரல் காற்றில் கலந்தபடி மெதுவான காலை வணக்கத்தை அவள் இதழ்கள் வெளியிட்டது. கவின் அந்த அழகு முகத்தையும் அவனுக்காகவே தேக்கிவைத்து வைத்து தினமும் காலை வெளியிட்ட அந்த மோன நிலையை அவன் அலைப்பேசியில் பதிவு செய்து கொண்டான். திரும்ப திரும்ப பார்த்தான். சே இதையா சோர்வு கவலை என்று நினைத்தேன்? கலாவின் கன்னத்தை கிள்ளி மன்னிப்பு வேண்டி இனி இந்த வெட்கத்திற்காகவே தினமும் சொல்கிறேன் என்ற வாக்குறுதி தந்தான்.

அன்றிரவு அந்த புகைப்படத்தை அவன் நாட்குறிப்பில் ஒட்டிவிட்டு, காதலியின் நானச்சிறையில் காலை வணக்கம் கூடவா அடைப்பட்டுவிட்டது? என்று எழுதினான்.

முற்றும்.












 

Saturday 10 April 2021

’மறுபடியும்’.

வணக்கம் நண்பர்களே! உங்களுக்கு இரண்டு சந்தோஷமான விஷயங்கள் சொல்லப்போறேன். 1. சென்ற மாதம் நூல்விமர்சனக் கட்டுரைகள் புத்தகத்தை அமேசானில் வெளியிட்டேன். அதன் லின்க்

மதிமாலை


2. மறுபடியும் நான் வானொலி தொகுப்பாளராகிவிட்டேன். ரேடியோ ப்லாக்‌ஷீப் என்ற ஆன்லைன் வெப்ரேடியோல திங்கள் முதல் சனிவரை இந்திய நேரப்படி இரவு 8 முதல் 9 மணிவரை என் நிகழ்ச்சி. அன்புடன் அபி. கவிதை நிகழ்ச்சி. சர்வதேச அலவில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம்.

உங்க ஃபோன்ல playstore போய் bs value செயலி instaul பண்ணுங்க. எந்த கட்டணமில்லாம இலவசமா கேட்கலாம்.

நிகழ்ச்சிப் பற்றிய கருத்துக்களை abi.idi.0603@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். instagram ல ரேடியோ ப்லாக்‌ஷீப் தேடினா என் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வரும். நாளையிலிருந்துதான் நிகழ்ச்சி ஆரம்பம்.

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள். தவராமல் நிகழ்ச்சியை கேளுங்கள். 

Saturday 3 April 2021

’உயிரிலே கலந்தவள்.’


காலை ஏழுமணிக்கே கண்விழித்து, முதல்வேலையாக தன் பக்கத்துவீட்டு உயிர் தோழியான கமலியைக் காணச் சென்றுவிட்டாள் லில்லி. பக்கத்து வீடு என்பதால் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே அவரவர் வீடு செல்வர். மற்றபடி, 5 வயது லில்லியும் 3 வயது கமலியும் இணைபிரியா தோழிகள். 7 வயது மகள் பூந்தளிரும் 5 வயது மகள் லில்லியும் பூவிழிராஜன் பூங்கொடி தம்பதியர் பெற்ற இரண்டு தங்கங்கள். பூவிழிராஜன் கூலிவேலை செய்ய, பூங்கொடி இல்லத்தரசியாக கோலோச்சுகிறாள்.

“வாடா லில்லிகுட்டி கமலி பாப்பா இன்னும் எழுந்துக்கலை. அவ எழுந்துக்குறதுகுள்ள நாம போய் பால் வாங்கிட்டு வரலாம் வா” என்று கமலியின் பெரிய அக்கா செவ்வந்தி அவளைத் தூக்கிக்கொண்டு பால் பூத்திற்குச் சென்றாள். கமலிக்கு ஒரு வயதாகியிருக்கும் நிலையில், உடல்நலக்கேட்டால் அவள் தந்தை முத்தழகன் தவறியிருக்க; நர்சிங் படித்த தாய் முல்லையோ ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து தன் மாமியாரின் உதவியுடன் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்கிறாள். பால் வாங்கிக்கொண்டு வந்தபோது கமலி தூங்கி எழுந்துவிட்டிருந்தாள். லில்லியை அவளுடன் விளையாடவிட்டுவிட்டு செவ்வந்தி அவள் முதல் தங்கை ரோஜாவுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.

காலையில் தொடங்கிய அவர்களின் விளையாட்டு மதியம் ஒருமணிக்கு கமலியின் பாட்டி குறிஞ்சி உணவு உண்ண அழைத்தபோதுதான் முடிவுக்கு வந்தது. சாதத்தில் சர்க்கரைக் கலந்து சாப்பிட வேண்டுமென்று கமலி அடம்பிடிக்க, லில்லி அவளை கேலி செய்து சிரித்தாள். லில்லியையும் பாட்டி சாப்பிடச்சொல்ல, அவள் தன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு வருவதாக சொல்லிவிட்டு ஓடினாள். வீட்டிற்கு வந்தவள் கமலி சாதத்திற்கு சர்க்கரைக் கேட்டதை தாய் பூங்கொடியிடம் சொல்லிச் சிரித்தபடி சாப்பிட்டு முடித்தாள்.

மீண்டும் தொடங்கிய விளையாட்டில் சிறிதுநேரத்திலேயே செவ்வந்தியும் ரோஜாவும் சேர்ந்துகொள்ள, இரவுவரை அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது. ஒருகட்டத்திற்குமேல் பொறுக்கமுடியாத கமலியின் பாட்டி தன் மூன்று பேத்திகளின் கண்களில் துளியோண்டு அமர்தாஞ்சலத்தைத் தடவ, அவர்கள் அழுதுகொண்டே உறங்கிவிட்டனர். அவர்கள் உறங்கிய பின்னரே வீட்டிற்கு வந்த லில்லியும் எப்போதடா காலை வரும் கமலியைப் பார்க்க என்று நினைத்தபடி உறங்கினாள்.

இப்படியே இரண்டு வருடங்களும் பசுமையாகக் கழிய, ஒருநாள் கமலியின் குடும்பம் அவர்கள் வீட்டைக் காலி செய்துகொண்டிருந்தனர். லில்லியால் அவர்களின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. கண்களில் ஏக்கம்வழியப் பார்த்திருந்தாள். இயல்பிலேயே லில்லிக்கும் கமலிக்கும் அபார ஞாபகசக்தி இருந்ததால் இந்த இரண்டு வருட நட்பும் அதன் நினைவுகளும் அவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பொருட்களனைத்தும் பேக் செய்துவிட்டதால் ரோஜா லில்லியின் கரும்பலகையைக் கேட்டாள். மறுக்காமல் லில்லி எடுத்துவந்து தந்தாள். அவர்கள் காலி செய்த சில மாதங்களிலேயே லில்லியின் குடும்பமும் காலி செய்துவிட, இரு குடும்பத்திற்கும் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிற்று.

லில்லி எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது கமலி தன் அன்னையுடன் லில்லியைக் காண வீட்டிற்கு வந்தாள். “இந்தக் கமலி பாப்பா லில்லியைப் பார்த்தே ஆகனும்னு அடம்பிடிச்சது. நீங்க இங்க பக்கத்து தெருவில்தான் இருக்கிங்கன்னு கேள்விபட்டேன். அதுதான் வந்தோம்” என்றாள் முல்லை. பூங்கொடி சிரித்தபடி அவர்களுக்கு தேநீர் கொடுத்தாள். “லில்லிக்கும் கமலின்னா கொள்ளைப் பிரியம். இன்னும் மறக்காம அவளைப் பற்றியே பேசிட்டிருப்பா” என்று தன் மகளின் தலையைச் செல்லமாகக் கோதினாள் பூங்கொடி. லில்லிக்கும் கமலிக்கும் தங்கள் நட்பை நினைத்துப் பெருமையாக இருந்தது.

பேசுவதற்கு நிறைய இருந்தாலும் இருவரையும் வெட்கம் தடுத்தது. புதிதாகப் பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. சிறிதுநேரத்தில் கமலி கிளம்பிவிட, லில்லிக்கு துக்கமாக இருந்தது. அதன்பிறகு பலவருடங்கள் தோழியர் இருவரும் சந்திக்கவே முடியவில்லை. லில்லி பள்ளிப்படிப்பும், பட்டப்படிப்பும் முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறாள். ஊடகத்துறையில் ஒளித்திருத்துபவரான முகிலரசனுடன் திருமணமாகியிருந்தது. 

லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. தன் நண்பர்கள் அனைவரிடமும் கமலியுடனான நட்பைச் சொல்லி மகிழ்வாள். வாடகை வீட்டில் வசித்ததால் ஊர் மாறி ஊர் சென்றதில் மறுபடியும் சந்திக்கமுடியவில்லை. முகவரியைத் தொலைத்தவர்களால் அகத்தில் மலர்ந்த நட்பைத் தொலைக்கமுடியவில்லை. கமலி என்ற பெயரைக் கேட்டாலே லில்லி அவர்களின் பின்னணியை விசாரித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள்.

சிறுவயது தோழி கமலியின்மீது வைத்துவிட்ட அலாதி பாசத்தினாலேயே லில்லிக்கு தன் அலுவலகத் தோழியான கமலியை ரொம்ப பிடிக்கும். அவள் என்ன தவறு செய்தாலும் அவளை மன்னித்து அப்படியே ஏற்றுக்கொள்வாள். முகநூலில் கமலியின் விவரங்களைப் பகிர்ந்தும் கமலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. தன் தோழி கமலி எங்கேயோ சந்தோஷமாக இருக்கிறாள். எப்படியாவது அவளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்போடு லில்லி தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தாள். தாய் வீட்டில் சிறிது நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாமென்று வந்திருந்த வேளையில் ஒருநாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. லில்லி நிதானமாக எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு காலை உணவையும் உண்டுவிட்டு டீவி பார்ப்பதும், அலைபேசியில் தன் கணவனுடன் சேட் செய்வதுமாக  நேரத்தை நகர்த்திக்கொண்டிருந்தாள். தந்தை பூவிழிராஜன் காலையிலேயே வெளியே சென்றுவிட்டிருக்க, தாய் பூங்கொடியும் லில்லியும் மட்டுமே வீட்டிலிருந்தனர். பூந்தளிரை விழுப்புரத்தில் தனியார் அலுவலகத்தில் பெரிய பதவியிலிருக்கும் பூவண்ணனுக்கு மணமுடித்திருந்தனர். மதியம் ஒருமணிக்குமேல் “லில்லியம்மா,” என்று அழைத்தபடி சிலர் உள்ளே வந்தனர். யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் போல என்று லில்லி தன் அறையில் அமர்ந்தபடி நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே அவர்கள் லில்லியின் அறைக்கே வந்துவிட்டிருந்தனர்.

“லில்லி, என்னை யார்னு தெரியுதா?” என்று கேட்டவளை லில்லி சற்றுநேரம் உற்றுநோக்கிவிட்டு தெரியவில்லை என்றாள். ”நாந்தான் ரோஜா கமலியின் அக்கா” என்றதும் லில்லியால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. இன்ப அதிர்ச்சி தாக்கியதில் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். “வாங்க அக்கா. எப்படி இருக்கிங்க?” “நல்லா இருக்கேன். நீ எப்படிமா இருக்க? இவன் என் தம்பி கணியமுதன். இவங்க என் குழந்தைகள்” என்று ரோஜா தன்னுடன் வந்தவர்களை அறிமுகபடுத்தினாள். லில்லிக்கு கணியமுதனைத் தெரியாதபோதும் அவர்களின் உறவுக்காரனாக இருப்பான் போல என்று எண்ணிக்கொண்டு ஒரு ஹாய் சொல்லிவைத்தாள். ”அம்மா வரலையா அக்கா?” “அவங்களுக்கு கொஞ்சம் வேலைம்மா. இன்னொருநாள் வரேன்னு சொன்னாங்க.”

ரோஜா லில்லியின் படிப்பு மற்றும் வேலைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்பொழுதே கணியமுதன் செவ்வந்திக்கும் ஃபோன் செய்ய, அவளும் தன் குழந்தைகளுடன் ஆவலாய் லில்லியைக் காண வந்தாள். அவர்களையும் லில்லி அன்போடு உபசரித்தாள். இத்தனை வருடம் கழித்தும் தன் கமலியின் குடும்பம் அவள்மேல் அதே நேசத்துடன் இருப்பதை எண்ணி பெருமையாக இருந்தது லில்லிக்கு. அவர்களைப் பற்றி கேட்டபோது இங்குதான் பக்கத்து தெருவில் அவர்களது மாமியார் வீடு என்றனர். எங்கெங்கோ அலைந்துவிட்டு மறுபடியும் பக்கத்து பக்கத்து தெருவிலிருந்தும் இத்தனை வருடம் பார்க்கமுடியவில்லை என்பதைச் சொல்லிச் சிரித்துக்கொண்டனர். ”நேத்து அம்மாவை கோவிலில் பார்த்தேன்மா. அதுதான் அவங்ககிட்ட வீடு எங்கேன்னு கேட்டேன். இங்கேயே இருந்ததால இன்னைக்கே உன்னைப் பார்க்கலாம்னு வந்தோம்” என்றாள் ரோஜா.

“நீ ரொம்ப வருஷமா தேடிட்டு இருந்த உன் தோழியை உன்கிட்ட கொண்டுவந்து சேர்த்துட்டேன் பார்த்தியா?” என்று சிரித்தாள் லில்லியின் தாய் பூங்கொடி. அனைவரும் சிரிக்க, நேரம் அழகாக கழிந்தது. ”கமலி எங்கே அக்கா? அவ ஏன் வரலை? என்னை மறந்துட்டாளா?” லில்லியின் ஆர்வத்தைப் பார்த்த ரோஜா சிரித்துக்கொண்டே, “அவ உன்னை மறக்குறதா? நீ வேறம்மா. அவ உன்னைப்பத்தி பேசாத நாளே இல்லை. அவளை தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருக்கோம். இன்னும் இரண்டு வாரம் கழிச்சு இங்க வருவா” என்றாள். “பாட்டி எப்படி இருக்காங்க அக்கா?” “பாட்டி இறந்துட்டாங்க” என்றான் கணியமுதன்.

“நான் கமலியை எங்கெல்லாமோ தேடினேன். முகநூலில் அவள் விவரங்களைப் பகிர்ந்தேன். ஆனால் முழுத் தோல்வி எனக்கு.” அதற்கு கணியமுதன், “கமலியும் அப்படித்தான். ஏதோ ஒருவிதத்தில் அவளைக் கவரும் பெண்களிடமெல்லாம் அவர்கள் பெயர் லில்லியா எனக் கேட்பாள். உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். வார்த்தையே வரவில்லை. அப்புறம் எனக்கு ஒரு காதலியிருக்கா. இன்னும் சில மாதங்களில் கல்யாணம். அவகிட்டையும் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கேன். அவளுமே உங்களைத் தேடினா. இப்போ அவகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா” என்றான். இவன் ஏன் இவ்வளவு ஆர்வமாக பேசுகிறான்? இவனை நான் இதற்கு முன் பார்த்ததாக நினைவே இல்லையே. இவனுக்கு எப்படி என்னைப்பற்றி தெரியும்? எப்படி என்னைப் பிடிக்கிறது? ஒருவேளை கமலி சொல்லியிருப்பாளோ என்று நினைத்துக்கொண்டாள் லில்லி.

அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்தாள் பூங்கொடி.  “கமலி ஃபோன் நம்பர் இருக்கா? தரமுடியுமா?” லில்லி ஆவலாய் கேட்டாள். கணியமுதன் எண்களைச் சொல்ல, அதை  சந்தோஷமாகவே தன் அலைபேசியில் பதிவு செய்துகொண்டாள். அதற்குமேல் லில்லியின் முழுகவணம் அவர்களிடத்தில் இல்லை. வெளியே கேட்பதற்கு மட்டும் பதில் உரைத்தாலும், உள்ளுக்குள் கமலியிடம் பேசும் தருணத்தைப்பற்றி கற்பனை செய்துகொண்டிருந்தாள். தன் குரலைக் கேட்டதும் கமலி எப்படி ரியாக்ட் செய்வாள். அவளிடம் என்ன பேசலாம்? என்று யோசித்தாள். “எல்லோரும் ஒருநாள் வெளியே சென்று வரலாம்” என்று செவ்வந்தி சொன்னபோது கமலியும் இங்க வரட்டும் சேர்ந்து போகலாம் என்றுவிட்டாள். “ஒருநாள் எங்க வீட்டுக்கு வாம்மா” என்று ரோஜா அழைத்தபோது கமலியுடன் அவர்கள் வீட்டில் செலவழிக்கப்போகும் நேரங்களை எண்ணி மகிழ்ந்தாள்.

பூங்கொடியிடம் சொல்லிவிட்டு கமலியின் குடும்பம் வாசலுக்குச் சென்றுவிட கணியமுதன் மட்டும் லில்லியின் அறையில் தேங்கிநின்றான். “லில்லி, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். யார்கிட்டையும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. உங்க அம்மா அப்பாகிட்ட கூட சொல்லக்கூடாது” என்று தயக்கமாகச் சொல்ல, லில்லிக்கு படபடப்பாக இருந்தது. “என்ன? என்ன சொல்லணும்?” என்றாள் பயத்துடன். “அது. வந்து. இப்போ கணியமுதன்தான் கமலி” என்றான். அவளுக்கு புரியவில்லை என்றாலும் ஏதோ விவரீதம் என்றுமட்டும் உள்ளுணர்வு சொல்லியது.

“என்ன சொல்றீங்க. எனக்கு புரியலை.” “கமலிதான்மா கணியமுதனா மாறியிருக்கா.” அப்பொழுதும் அவளால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒருவேளை கமலி இறந்துவிட்டாளா? அவள் ஆவி இவனுள் புகுந்துவிட்டதா? என்று நினைத்துக்கொண்டு, “ஏன் அப்படி?” எனக் கேட்டாள். “மருத்துவர்கள் ஆண்களுக்கான அறிகுறிகள்தான் அதிகம் தெரிகிறது. அதனால் அப்படி மாறிவிடுவதுதான் நல்லது என்றார்கள். எத்தனையோ மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே இந்த முடிவு” என்றபோதுதான் அவன் சொன்னதன் பொருள் புரிந்து அதிர்ந்தாள். உடல் நடுங்கியது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவனை நன்றாக பார்த்தாள். அவளால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் கண்களுக்கு அவன் ஒரு ஆணாக மட்டுமே தெரிந்தான்.கிட்டதட்ட 20 வருடங்களுக்குமேல் கடந்துவிட்டதால் லில்லிக்கு கமலியின் முகம் நினைவிலில்லை. அவள் பெயரும் அவளுடன் பழகிய நினைவுகளும் இதயத்தில் பதிந்த அளவு முகமோ சாயலோ பதியவில்லை.

திருநிறைச் செல்வி, திருமதி என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டிய என் கமலி திருநம்பியாக மாறிவிட்டாளா? கடவுளே என்ன கொடுமை இது? உள்ளுக்குள் வருந்தினாலும் மேலே விசாரித்தாள். “அப்போ கமலியைத் தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருப்பதாகச் சொன்னது?” ”அது. இந்த ஊர் உலகத்துக்கு. எங்க பேர் கெட்டுடக்கூடாதுன்னு அப்படி சொல்லி வெச்சுருக்காங்க. என்னால் உன்னிடம் பொய் சொல்லமுடியவில்லை. உனக்கு மட்டும் நான் என்னைக்கும் கமலிதான். உன்னைப் பார்த்ததும் கமலியா உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சிக்கணும் போல இருந்தது. நீ என்னைத் தேடினதைப் பற்றி தெரிஞ்சதும் கண் கலங்கிடிச்சு. ஆனா கணியமுதனா என்னால் எதையும் வெளிப்படுத்தமுடியலை.” “அப்போ நீங்க தந்த நம்பர்?” “அது என் நம்பர்தான்.” “நிஜமாவா?” “ஆமாம்மா. வேணும்னா அழைத்துப்பார்.”

சொல்லியவன் சாதாரணமாகக் கிளம்பிவிட, கேட்டவளோ பித்துப்பிடித்தவள் போல் அப்படியே அசையாமல் அமர்ந்துவிட்டாள். மேலே யோசிக்கவே பயமாக இருந்தது. இப்போ என்ன செய்வது? என்ற கவலை வேறு. தாய் பூங்கொடி அவளை சாப்பிட அழைத்தபோதுதான் சுயநினைவிற்கு வந்தவள் பாத்ரூமிற்குச் சென்று வெடித்து அழுதாள். நூற்றில் ஒன்றாக இது பொய்யாக இருக்கக்கூடாதா? கமலி என்னிடம் சும்மா விளையாடினேன் என்று சொல்லமாட்டாளா என்ற நப்பாசையில் வெளியே வந்து வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் கொடுத்த கமலியின் எண்ணிற்கு அழைத்தாள்.

கணியமுதன்தான் எடுத்தான். “சொல்லும்மா. இப்போ நம்புறியா?” “ம். என்னோட பழகிய நிகழ்வுகள் ஏதாவது ஞாபகம் இருக்கா?” “ஓ! இருக்கே!” “என்ன அது?” “நாம சின்ன வயசுல விளையாடும்போது கதவு லாக் பண்ணிட்டு திறக்கத் தெரியாம விழிச்சோம். கதவை ரொம்பநேரமா தட்டினோம். உங்க அப்பா வந்து சுவறேறி குதிச்சு திறந்துவிட்டு நம்மளை திட்டினார்.” இதற்குமேல் என்ன இருக்கிறது? என்னவென்று விசாரிப்பது? எப்படிப்பட்ட நிகழ்வு இது. எனக்கும் கமலிக்கும் மட்டுமான தனிப்பட்ட நிகழ்வு. இத்தனை வருடமானாலும் மறக்கமுடியாத நினைவு. அதை இவன் குரலில் கேட்கும்படி நேர்ந்துவிட்ட கொடுமையை என்னவென்று சொல்வது?  எங்கேயோ இருந்த தோழியைப் பக்கத்தில் காட்டிவிட்டு, என்பால் அவள் கொண்ட நேசத்தை நிறம் மாறாமல் திருப்பிக்கொடுத்துவிட்டு அதை முழுவதுமாக அனுபவிக்கமுடியாமல் செய்துவிட்டாயே விதியே! என்று வெதும்பினாள்.

”உன்னைப் பார்த்ததை எனக்கு தெரிந்த அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். என் வருங்கால மனைவி மலர்விழியிடமும் சொல்லிவிட்டேன். அவ உன்னைப் பார்க்க துடிக்கிறா. அப்புறம் எனக்கு தெரிஞ்ச ஒரு அக்காகிட்ட சொன்னேன். அவங்க என்னடா சின்ன வயசு தோழிய பார்த்த சந்தோஷக்களை அப்படியே உன் முகத்துல சொட்டுதேன்னு சொல்லி சிரிச்சாங்க” என்று சந்தோஷித்தான். லில்லியால் அவன் சந்தோஷத்தில் கலந்துகொள்ளமுடியாமல் வெறும் ம் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். “நானும்தான் என் நண்பர்களிடம் சொல்ல நினைத்திருந்தேன். ஆனா இப்போ என்னன்னு சொல்றது? சின்ன வயசு தோழி கிடைச்ச சந்தோஷத்தை சொல்றதா? அவ இப்படி ஆகிவிட்ட வருத்தத்தை சொல்றதா? எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டாள். என் கமலி எங்கேயோ ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு நினைச்சேனே! இப்படியாகுறவர எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ! யார் யாரெல்லாம் அவளைக் கேலி செஞ்சியிருப்பாங்களோ! அந்த நேரத்தில் நான் அவ பக்கத்தில் இல்லாமல் போனேனே!” என்று நினைத்து அழுதாள்.

லில்லியால் அந்த தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. கமலிக்கும் கணியமுதனிற்குமிடையில் அவள் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. இரண்டு மூன்றுமுறை கணியமுதனும் மலர்விழியும் லில்லியின் வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்தனர். கணியமுதன் சொன்னதைப் போல் மலர்விழிக்கும் லில்லியைப் பார்த்ததில் சந்தோஷமே.

கணியமுதனைப் பற்றி தெரிந்துகொள்ள லில்லி மலர்விழியிடம் தனியாக அலைபேசியில் பேச நினைக்க, கணியமுதனும் மலர்விழியின் எண்ணைக் கொடுத்தான்.. அந்த அலைபேசி உரையாடலில் கணியமுதனின் பதினைந்தாவது வயதில்தான் அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தது. மலர்விழிமேல்கொண்ட அலாதி காதலே கணியமுதனின் இந்த மாற்றத்திற்குக் காரணமென்று மலர்விழி சொல்ல, லில்லி கொதித்துப்போனாள். வேறு வழியில்லாமல் நடந்ததாக இதுவரை நினைத்திருந்தது வேண்டுமென்றே நடந்ததாக மலர்விழி சொல்வதை லில்லியால் ஏற்கமுடியவில்லை. “அப்படி அவளும் அவள் காதலும்தான் முக்கியமென்றால் அதன்பிறகு என்னை ஏன் சந்திக்க வேண்டும்? என்னை ஏன் இப்படி இரண்டிற்குமிடையில் தவிக்கவிட வேண்டும்? என் கமலி எங்கேயோ இருக்கான்னு நான் நிம்மதியா இருந்திருப்பேனே! அவன் காதல் என் நட்பை மறைச்சுடுச்சா? சே இவன் என் கமலி இல்லை! என் கமலியாக இருந்தால் இப்படி செய்வாளா?” என்று மனதிற்குள் கோபம் கொண்டாள்.

அதன்பின் வந்த நாட்களில் லில்லி கணியமுதனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க நினைத்தாள். பேசுவதைத் தவிர்த்தபோதும் லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. கமலி மட்டும் இருந்திருந்தால் இப்படியா வீட்டிலிருப்போம்? எப்படியெல்லாம் அரட்டையடிப்போம், ஊர் சுற்றுவோம், கடைக்குப்போவோம் என்று வருந்தினாள். லில்லியொன்றும் திருநம்பி திருநங்கைகளை தவறாக நினைக்கும் ரகமல்ல. சகமனிதர்களாக அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் மனம் கோனாமல் பழக வேண்டுமென்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் கமலியின் இடத்தில் கணியமுதனை வைத்துப்பார்க்க அவளுக்கு மனம்வரவில்லை. கமலிமேல் வைத்திருக்கும் அதே நேசத்தை கணியமுதன்மேல் வைக்கவும் முடியவில்லை. நன்கு யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள் லில்லி. அது. கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரிப்பது என்று!

கணியமுதனிற்கு அழைத்தாள். பரஸ்பர நலம்விசாரிப்பிற்கு பின் “கணியமுதன், நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” “கேளும்மா.” “நீங்க மலர்விழிக்காகவும் அவங்கமேல வெச்சிருக்க அன்புக்காகவும்தான் இப்படி மாறிட்டீங்களா?” “இல்லம்மா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. அவளும் அப்படித்தான் நினைச்சிருக்கா. ஆனா நான் மருத்துவர் சொல்றதைக் கேட்டுதான் இப்படி செஞ்சேன். வேற எந்த காரணமும் இல்லைம்மா.” லில்லிக்கு யார் சொல்வது உண்மை என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. இதைப் பற்றி மேலே ஆராயவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டாள். அவள்தான் புது முடிவை எடுத்துவிட்டாளே! அதை கணியமுதனின் மனதை புண்படுத்தாமல் சொல்ல வேண்டுமே என்ற யோசனை மட்டும்தான் அவளுக்கு.

“கணியமுதன், நான் ஒன்னு சொன்னா தவறா நினைச்சிக்கமாட்டீங்களே?” “சொல்லும்மா.” “அது. நான் கமலிமேல் நிறைய அன்பு வெச்சுருக்கேன். அவ என் தேவதை. இத்தனை வருஷமா என் கமலி எங்கேயோ சந்தோஷமா இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தேன். மன்னிச்சிடுங்க கணியமுதன். உங்களை என்னால் கமலியாக நினைத்துப்பார்க்கமுடியவில்லை. உங்களை நான் கணியமுதன் என்ற புதிய நண்பனாக நிச்சயம் ஏற்கிறேன். ஆனால் உங்களை கமலியாக நினைக்கவோ அல்லது அவள்மேல் வைத்திருக்கும் அதே அளவு பிரியத்தை உங்கள்மீது வைப்பதோ என்னால் முடியாது. என் கமலிக்குன்னு ஒரு தனி இடம் இதயத்தில் இருக்கு. அது அவளுக்கு மட்டும்தான். நா சொன்னது தவறா இருந்தா மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” “பரவாயில்லைமா நீ கமலிமேல் எவ்வளவு பாசம் வெச்சுருக்கன்னு புரியுது. அந்த பாசம்தான் உன்னை இப்படி பேசவைக்குது. நீ என்னை எப்படி நினைத்தாலும் எனக்கு பரவாயில்லை. உன்னைப் பார்த்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி. உன் நட்பு மட்டும் இருந்தால் அதுவே போதும்” என்றான். அவனுக்கும் அவள் மனநிலை நன்கு புரிந்தது. கமலியாக இருந்த தன்மேல் அவள்கொண்ட அலாதி அன்பை நினைத்து கண்கள் கலங்கியது.

சிறிதுநேரம் பேசிவிட்டு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு அலைபேசியை அணைத்தாள். மீண்டும் கமலியின் நினைவில் ஒருபாட்டம் அழுது தீர்த்தவள், கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரித்தாள். கணியமுதனை தன் புதிய நண்பன் என்று இதயத்திற்கு கட்டளைப் பிறப்பித்தவள், கமலியைத் தன் உயிரில் கலந்து கரைத்துவிட்டிருந்தாள். இனி அவள் இயல்பாக இருப்பாள். கணியமுதனுடன் சாதாரணமாக பேசி பழகுவாள். அவளைப் பொறுத்தவரை கணியமுதன் என்ற நண்பன் வேறு. உயிரோடு உயிராய் கலந்துவிட்ட அவள் தோழி கமலி  வேறு!



 

Monday 29 March 2021

’மது கிண்ணத்தில் மங்கையின் கண்ணீர்.’

நேரம் காலை பத்தை நெருங்கிக்கொண்டிருக்க, பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள். தாய் மாலதி கொடுத்த காலை டிஃபனையும் மறுத்துவிட்டாள். அவள் ஏனென்று கேட்டதற்கு ஃப்ரன்ஸ் பார்ட்டி கொடுக்குறாங்க என்று மட்டுமே சொல்லிவிட்டு ஓடினாள். சமீபத்தில் அவள் மேற்கொண்டிருக்கும் புதிய பழக்கம் இன்னும் வேகத்தையும் ஆர்வத்தையும் கூட்ட, தன் வெளிநாட்டுக் காரில் பறந்தாள் 25 வயதே பூர்த்தியான மதுமிதா.

மதுமிதா ராஜசேகரன் மாலதியின் ஒரே பெண். அடையாரில் பிரபலமான நகை வியாபாரி என்பதாலும், பரம்பறை சொத்தே கோடி பெறும் என்பதாலும் மதுமிதாவிற்கு பணத்தைச் செலவழிப்பதெல்லாம் தண்ணிப்பட்ட பாடு. ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் செலவழித்தபோதும், அவள் கண்களில் கண்ணீரோ நெஞ்சில் வருத்தமோ என்றுமே கொண்டதில்லை. அதற்காக ராஜசேகரனும் மாலதியும் நவீன நாகரீகத்தில் ஊறியவர்கள். பெண்ணிற்கு செல்லம் கொடுத்தே சீரழித்துவிட்டனர் என்றும் சொல்லிவிடமுடியாது.

நேர்மைக்குப் பேர்போன இருவரும், தங்கள் பெண்ணும் தங்களைப் போலவே இருப்பாள் என்று தப்புக்கணக்குப் போட்டனர். அளவுக்கு மீறிய சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு, அருமைமகள் அதைத் தப்பாகப் பயன்படுத்தமாட்டாள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையைத் தூள் தூளாக்கிய மதுமிதாவின் தவறா? அல்லது அளவான சுதந்திரத்தை அளிக்காத பெற்றோரின் தவறா? இவர்களில் யார் செய்த தவறோ, ஒரு குடும்பமே அழியக் காரணமாகிவிட்டது.

மனைவி தெய்வானைக் கொடுத்த பழைய சாதத்தையும் பச்சைமிளகாயையும் அமிர்தமாய் எண்ணி உண்டுமுடித்த நாச்சிமுத்து, அவளைத் தன் அருகில் இழுத்து ரகசியமாய் ஒரு பெரிய ஆசையை வெளியிட்டுவிட்டுக் கிளம்பினார். அவர் வெளி வாசலை அடைந்ததும், அவர் பெற்ற மூன்று செல்வங்களும் வழிமறித்து மனு கொடுக்க ஆரம்பித்தனர்.

”அப்பு, நாளைக்கு காலேஜ்ல சேர அப்லிகேஷன் வாங்கப் போவோமா? தேதி முடிஞ்சிடும். அப்புறம் சீட் கிடைக்காது அப்பு. கைல கண்டிப்பா ஒரு 2000ஆவது இருக்கனும் அப்பு” என்றான் அவரின் மூத்தமகன் முத்துப்பாண்டி. கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவன் தலையை வருடி, “சரிய்யா. கண்டிப்பா போவோம்” என்றார் கட்டிட வேலை செய்யும் நாற்பது வயதைத் தாண்டிய நாச்சிமுத்து.

“அப்பு, எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்க. ஒரு 500 ரூபா தரியா? நானும் டூர் போகவா? ஆசையா இருக்கு அப்பு” என்று எதிர்பார்ப்பே உருவாய் கேட்டான் இளயமகன் துரைச்சாமி. மூத்தமகனைப்போல், அவனையும் செல்லம் கொஞ்சிவிட்டு சரி என்று ஒப்புதலளித்தார். கடைக்குட்டி மல்லிகாவோ, கோடைக்காலத்திற்கு ஏதுவாய் பலாப்பழமும் நொங்கும் கேட்க, “என் செல்லச் சர்க்கரைக்கட்டி. நீ கேட்டு நான் மாட்டேனு சொல்வேனா? கண்டிப்பா வாங்கியாரேன் என்றார் சிரிப்புடன்.

மூவரின் மனுவையும் ஏற்றுக்கொண்டு, மனைவிக்கு என்ன வேண்டும் என்பதைப்போல் அவளைத் திரும்பிப்பார்க்க, அவள் கண்களில் காதலைத் தவிர வேறெதையும் அவரால் காணமுடியவில்லை. தன் இனிய குருவிக்கூட்டைக் கண் நிறைய நிறப்பிக்கொண்டு, வேலைக்குக் கிளம்பினார் அந்தப் பாட்டாளி.

வீட்டிலிருந்து சீறிப்பாய்ந்த மதுமிதாவின் கார் ஒரு உயர்தர மதுபாணக்கடையின் முன்பு நின்றது. ஆம்! சமீபத்தில் அவளுக்கு வந்திருக்கும் புதிய பழக்கம் மது அருந்துவதுதான்! அவளுக்காகவே காத்திருந்த இரண்டு ஆண் நண்பர்களும், 3 பெண் தோழிகளும் சேர்ந்து முடிந்தமட்டும் மது அருந்திவிட்டு மதியம் 3 மணிவரை கொட்டம் அடித்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், பீச், பார்க் டிஸ்கோதே என்று இரவு பத்துமணிவரை ஊர் சுற்றிவிட்டு கடைசியாய் ஒரு ரௌண்ட் மதுவையும் அருந்திவிட்டே கடனே என்று வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குக் கிளம்பிய மதுவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லியே அனுப்பிவைத்தனர் சற்று நிதானத்திலிருந்த நண்பர்கள். என்ன பயன்? காரை எடுத்த மதுவிற்கு நேரம் செல்ல செல்ல கண்கள் சொருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல தான் நிதானமிழக்கிறோம் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி காரை ஓட்டினாள். நிதானம் முழுவதுமாய் இழப்பதற்குள் வீட்டை அடைய வேண்டுமென்று நினைத்தவள் காரை முழுவேகத்தில் பறக்கவிட்டாள்.

கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற கார் நடைபாதையருகே அப்பாவியாய் நடந்து சென்றுகொண்டிருந்தவர்மேல் முழுவீச்சில் மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதைந்து, உறுப்புகள் ஆங்காங்கே சிதறி, பூமித்தாய்க்கு உடனடி இரத்த அபிஷேகம் நடக்க, துள்ளத்துடிக்க அந்த உடலைவிட்டு வெளியேறியது உயிர் பறவை. இடிக்கப்பட்டவர் இடுகாட்டில். இடித்தவளோ காற்றுப்பையில் பத்திரமாய். கார் மோதிய அடுத்தநொடி அதிலிருந்த ஏர்பேக் வெடித்து மதுவை தனக்குள் அடைத்துக்கொண்டு வெளியே குதித்து காப்பாற்றியது.

இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட கொடூரத்தில், மதுவின் போதை முழுவதுமாய் இறங்கிவிட்டிருக்க, அதிர்ச்சியில் சற்றுநேரம்  உரைந்திருந்தவள், கணநேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவள், எதுவும் நடக்கவில்லை என்று மனதிற்குள் உறுபோட்டவாரே உறங்கிவிட்டாள். பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்ததால் அந்நேரத்தில் அவளைக் கேள்விகளால் துளைக்கவும் ஆளில்லாமல் போயிற்று.

உறங்கியவளை விதி விட்டுவிடுமா? சிசி டீவியின் உபயத்தால் அடுத்தநாள் காலையே மதுவின் ரகசியம் அம்பலமாகிவிட, தாய் தந்தையர் அவளை அடித்து துவைத்தனர். ஆனால் அழுதே பழகியிராத மதுவிற்கோ வலித்ததே தவிர, அழுகை வரவில்லை. அதற்கும் சேர்த்தே வாங்கிக்கட்டினாள்.

எவ்வளவு அடித்தும் ஆத்திரம் குறையாத ராஜசேகரன், தான் பெற்ற மகளின் மீது தானே வலிய சென்று புகார் கொடுத்துவிட்டார். தாய் மாலதியும் அதைத் தடுக்கவில்லை.  உள்ளே சென்ற மதுமிதாவோ சிறிது நாட்களிலேயே நண்பர்களின் செல்வாக்கில் வெளியே வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவளை கண்டுகொள்வாரில்லை. அவளின் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதால் வெளியே செல்லவும் வழியின்றி வீட்டு சிறையில் கைதியானாள்.

சிறைக் கைதிக்கு எதற்கு வகைதொகையான உணவு? எளிய உணவை மட்டுமே கொடுக்கும்படி வேலையாட்களுக்கு உத்தரவிட்டுவிட்டாள் மாலதி. பாலும் தயிரும், பருப்பும் நெய்யும் உண்டு பழகிய மதுவிற்கு காரசாரமான எளிய உணவு தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ததில், உணவு உண்பதையே முடிந்தவரை தவிர்க்க ஆரம்பித்தாள். இத்தனைத் துன்பத்திலும் மதுவின் கண்கள் மட்டும் நனையாமல் அப்படியே இருந்தது. அவள் தவறின் வீரியத்தை ஆழ்மனம் இன்னும் உணரவில்லை போலும்.

சிறிது நாட்கள் கழித்து ஓர் மாலை வேளையில் மதுவை பெற்றோர் அவர்களுடன் வெளியே அழைத்தனர். மறுப்பின்றி அவளும் அவர்களுடன் கிளம்பினாள். கார் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. மாலதி கதவை இரண்டுமுறை மெல்ல தட்டிவிட்டு காத்திருக்க, கதவைத் திறந்தாள் ஓர் சிறுமி. மதுவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் நின்று கொண்டனர் பெற்றவர்கள்.

உள்ளே சென்ற மது வீட்டைச் சுற்றி கண்களைச் சுழலவிட, மின்சாரம் தாக்கியதைப்போல் அதிர்ந்து நின்றாள். பயத்தில் இதயம் படபடவென்று அடித்தது. வீட்டின் ஒரு மூளையில் சட்டத்திற்குள்ளிருந்து தன் குடும்பத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் நாச்சிமுத்து. ஆம்! குருவிக்கூட்டின் தலைவனான அதே நாச்சிமுத்து! தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு, நண்பர் ஒருவரைச் சந்தித்து பிள்ளைகளின் தேவைக்காக பணம் ஏற்பாடு செய்துவிட்டு, கடைக்குட்டியான அவர் பெண் மல்லிகா கேட்ட பழங்களையும், காதல் மனைவிக்கு காதல் பரிசாய் மல்லிகைப்பூவையும் வாங்கிக்கொண்டு நிறைவான மனதுடன் வீட்டை அடைவதற்காய் நடந்து வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கோர விபத்து நடந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் வீதி விபத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, கருணையுள்ளம் கொண்ட ஓர் மனிதர் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஆம்புலன்சையும் போலீசையும் அழைத்தவர், அவர்களுடன் சேர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, நாச்சிமுத்து பர்சிலிருந்த முகவரிக்கு அவர் சடலத்தை எடுத்துச் சென்றார். விஷயத்தைக் கேட்ட அடுத்தநொடி வீடே அதிரும்படியான அழுகுரல் எழுந்தது. அன்புச் சங்கிலியின் முதல் கண்ணி அறுந்துவிட்டதே! ஆலமரத்தின் ஆணிவேர் சாய்ந்து அவர்களின் சந்தோஷத்தை அடியோடு வீழ்த்திவிட்டதே!

சடலத்தைச் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்ததெனப் புறப்படாமல், தெய்வானைக்குத் துணை நின்று இறுதிச் சடங்குகளை முடித்து, அவர்களுக்கு தன் முகவரியைக் கொடுத்துவிட்டு, உதவி வேண்டுமென்றால் தயங்காமல் அழைக்கும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கால் வயிறும் அரை வயிறுமாய் அவர்கள் நாட்களைக் கடக்க, ஒருநாள் மதுவின் பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். முதலில் கோவத்துடன் பேசிய அனைவரும், தங்களின் எதிர்காலத்தை எண்ணி பயத்தில் கதறினர். அவர்களைத் தேற்றி, தெய்வானைக்கு நல்ல சம்பளத்தில் முழுநேர வேலையும், மூத்தமகன் முத்துப்பாண்டிக்கு பகுதிநேர வேலையும் போட்டுக்கொடுத்துவிட்டு, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்ல வேண்டியதற்கான அவசியத்தையும் தைரியத்தையும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

அப்போது சென்றவர்கள்தான் இப்போது மகளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ”வாங்க ஐயா. வாங்கம்மா.” தெய்வானை அவர்களை அன்போடு உபசரித்தாள். அவர்களும் தெய்வானையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்களின் நலனை விசாரித்தவாரே உள்ளே வந்து அமர்ந்தனர். அதுதான் எளியவர்கள்! விரோதியாகவே இருந்தாலும் தங்களால் தரமுடிந்த மன்னிப்பை யாசிப்பவர்களிடம் ஒரு கட்டத்திற்குமேல் பகைமைப் பாராட்டமாட்டார்கள். வாழ்க்கையின் பின்னே ஓட சலிக்காதவர்களுக்கு பகையின் பின் ஓடுவது பெறும் சலிப்புதான். மகள் செய்த தவறுக்கு நேர்மையான பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம். அதுவுமில்லாமல் பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்துத் தன்மானத்தைச் சீண்டாமல், தாங்களே தங்கள் வாழ்வை வாழ வழிகாட்டியவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்தது.

தெய்வானையின் உபசரிப்பில் அதிர்விலிருந்து மீண்ட மதுமிதா “என்னை மன்னிச்சிடுங்க. தவறு நடந்துடுச்சு. தெரியாம செய்துட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் கல்யாண பொறுப்பை நான் ஏத்துக்குறேன்” என்றாள். அவள் பெற்றோரை இவர்களுக்கு முன்பே தெரிந்ததால் பண உதவிகள் செய்திருப்பார்கள் என்று நினைத்திருப்பாள் போலும்.

தெய்வானை சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் மௌனிக்க, அந்த இடைப்பட்ட வேளையில் முத்துப்பாண்டி மதுவிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினான். அவள் அதிர்ந்து என்ன இது? எனக் கேட்க, ”வாங்கிக்கோங்க. இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொன்னாங்க. நீங்க வருவிங்கன்னு உங்களுக்காக வாங்கி வெச்சோம். நல்ல சரக்கு. குடிங்க” என்றான். அவள் அதைக் கையில் வாங்கி வெறித்துப் பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பெற்றோரையும் தெய்வானையையும் மாறி மாறி பார்த்தாள்.

தெய்வானை மெல்ல வாய் திறந்தாள். “நீ சொன்ன படிப்பு, வேலை, கல்யாணம் இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். ஒரு பைசா செலவில்லாம செய்ய வேண்டிய விஷயத்தைச் சொல்றேன் செய்யறியாம்மா?” “சொல்லுங்க.” எங்க வீட்டுக்காரோட கடைசி ஆசையை நீ நிறைவேத்தி வைக்கனும். முடியுமா?” ”என்ன ஆசை?”

ஒரு நிமிஷம். தெய்வானை உள்ளே சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தாள். “இது என்ன தெரியுமா? நான் மணக்க மணக்க வெச்சிருக்க பச்சமொச்ச கச்ச கருவாட்டுக் குழம்பு. எங்க வீட்டுக்கார் போகும்போது. ”இந்தா புள்ள, நீ பச்சமொச்ச கச்ச கருவாட்டுக்குழம்பு வெச்சு எம்புட்டு நாளாச்சு. இன்னிக்கு வையி புள்ள. சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. நாள் முச்சூடும் மாடாட்டம் ஒழைச்சிட்டு சாயந்தரம் வந்து ஒங்கையால சோறு உங்குறது அலாதி சந்தோசம். நீ மணக்க மணக்க சோறாக்கி, மனசு நெறைய காதலோட பரிமாறனும். அதே மனசு நெறைய காதலோட உள்ளுக்குள்ள சப்புக்கொட்டி ருசிச்சாலும் வெளிய சின்ன சின்ன கொற சொல்லிகிட்டே சாப்பிடனும். ஏழைங்க நமக்கு இதவிட வேற என்ன புள்ள சந்தோஷம் இருக்கப்போகுது” என்று காதலாய் பார்த்தபடிச் சொல்ல, அந்தக் காதலுக்கு சற்றும் குறையாத காதலுடன் பார்த்தபடி. “சரிங்க செஞ்சி வெக்கறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்று விடைகொடுத்தாள்.

அவர் போனதுக்கு அப்புறம் நான் தினமும் இந்த குழம்பு செய்யறேன். அவர் சாப்பிடவே மாட்டுறார். நீ முடிஞ்சா அவரை ஒரு வாய் சாப்பிட வை. இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செஞ்சிட்டா மேலே சொன்ன மூனு விஷயத்தை செய்ய அவசியமே இருக்காது.” என்றுவிட்டு விம்மி வெடித்து அழுதாள். பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து அழ, அந்த கதறல் மதுவின் உயிரை உலுக்கியது. சிறிது சிறிதாய் மது ஊற்றி மதுமிதா வளர்த்த பாவமரம் அவர்களின் கதறல் சூறாவளியில் வேறோடு சாய்ந்தது. என்ன சொல்ல முடியும் இதற்கு மதுமிதாவால்? 

மதுமிதா அந்தக் குழம்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் அவள் அன்னை இந்த குழம்பு செய்ததும், அந்த மணம் அவளுக்கு பிடிக்காமல் தூக்கி வீசியதும் நினைவுக்கு வந்தது. வாழ்க்கை சின்ன சின்ன ஆசைகளாலும் சந்தோஷங்களாலும் நிறைந்தது. அதை அள்ளிக்கொடுக்கும் ஒரு உயிரின் இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற உண்மை அவள் மூளைக்கு ஏறி இதயத்தைத் தாக்கியது. இன்னமும் அவள் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணமும், தெய்வானை வைத்திருந்த குழம்பும் பூதாகரமாய் நின்று அவள் செய்த தவறின் முழு வீரியத்தை உணர்த்த, வாழ்க்கையில் முதல்முறையாக கண்ணீர் சிந்தினாள் மது. அவள் கண்களைத் தாண்டி சிதறிய கண்ணீர் துளிகள் மதுகிண்ணத்தில் விழுந்து மதுவோடு மதுவாய் கலந்தது.


 

Saturday 6 March 2021

- வாழ்க்கைத் தேர்வு

ஒரு மனிதனின் சாமர்த்தியமே அவன் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதில்தான் இருக்கிறது. சிலர் அதில் வெற்றி காணலாம். சிலருக்கு அது தோல்வியில் முடியலாம். சிலருக்கு அது எப்படி தேர்ந்தெடுப்பது என்றே தெரியாமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு பாதையை தேர்வு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பப் பாவம். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு பூவேலி இருக்கிறது. சில பெண்களுக்கு முள்வேலி இருந்தாலும் அதையே பூவேலியாக நினைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இதிலிருந்து அவர்களால் விடுபட முடியாது. விடுபடவும் விரும்பமாட்டார்கள். இந்தச் சமூகமும் இதிகாசங்களும், கலாச்சாரம் என்ற பெயரில் அவர்களை அப்படி பழக்கிவைத்திருக்கிறது? ஒருவேளை அவர்களைப் பிடிக்காமல் வலுக்கட்டாயமாக அந்த பூவேலியிலிருந்து வெளியேற்றினால், யாருமில்லா கானகத்தில் தொலைந்த குழந்தையாய் திக்குத் தெரியாமல், செய்வது அறியாமல் தவியாய் தவிப்பார்கள். மற்றொரு பாதையை வகுத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கண்ணீர் காவியம்தான் இல்லம்தோறும் இதயங்கள். எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய இந்நாவல் எல்லாகால பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். வாழ்க்கைப் பாடம். பெண்மையை மதிக்காதவர்களுக்கும், பெண்மைக்கு துரோகம் செய்பவர்களுக்கும் இது மறக்கமுடியாத, மறக்கக்கூடாத சாட்டையடி. ஆனால், இப்படிப்பட்ட சாட்டையடிகளுக்கு எல்லா அநியாயக்காரர்களும் பணிவார்களா? மிரண்டு பின்வாங்கி பெண்மையின் மேன்மைக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குவார்களா? இல்லை. என்ற பதிலிருப்பது வருத்தம்தான்.

எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நிகழத்தான் செய்கிறது. அப்போது வெளியே தெரியாமலும் கவணிக்கப்படாமலும் இருந்த கொடுமைகள் இப்போது தொழில்நுட்பத்தின் உதவியால் கவணிக்கப்படுகிறது. கவனிக்கத்தான்படுகிறதே தவிர குறைந்தபாடில்லை. எத்தனை புதுமைப் பெண்களும், புரட்சிப்பெண்களும் உருவானாலும், அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் சாதாரணநிலையில் இருப்பவர்கள்தான். அப்படித்தானே அநியாயக்காரர்கள் நினைக்கிறார்கள். இந்த விமர்சனத்தையும் நாவலையும் படிப்பவர்கள் அப்படி எண்ணிவிடாமல், உங்களையும் ஒருமுறை சுய அலசலில் ஈடுபடுத்தி நிறைகுறைகளைச் சரிபார்த்துக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி. எழுதப்படுகிற எல்லாப் படைப்புகளும் யாராவது ஒருவர் மனதிலாவது தைக்காதா? அவரை நல்வழிப்படுத்தாதா? என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்தான் எழுதப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பிற்கு செவிசாய்க்கலாமே!

ஒரு பெண்ணின் உலகம் மிகச் சிறியது. திருமணத்திற்கு முன் பிறந்த வீடு. திருமணத்திற்கு பின் புகுந்த வீடு. என்னதான் பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியுலகத்தை எட்டிப்பார்த்தாலும், அவர்களின் பாதுகாப்பாக நினைப்பது இரண்டு வீடுகளைத்தான். சில பெண்கள் வெளியுலகத்தைக் காண விருப்பமில்லாமல் வீட்டையே உலகமாக எண்ணி மகிழ்வர். அப்படி மகிழ்ந்திருந்தவள்தான் மணிமேகலை.

மிராசுதார் அருணாச்சலத்தின் மகளான மணிமேகலை, தன் இளம் பருவத்தில் சொந்தக்காரனும் தோழனுமான வெங்கடேசன் மீது தோன்றிய மானசீகக் காதலை தந்தைக்காகவும் தமயனுக்காகவும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, எஞ்சினியர் ஜெயராஜை மணந்துகொண்டாள். அவளின் பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி. வளமான வீடுதான். செல்வத்திலும், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையிலும், வாய் பேச்சிலும் எந்த குறைச்சலும் சொல்லிவிடமுடியாது.

திருமணமாகி 3 வயது மகனிற்கு தாயாகும்வரை மணிமேகலை மகிழ்ச்சியாகவே இருந்தாள். கணவனின் காதல் மழையில் விடாது நனையத்தான் செய்தாள். ஆனால் என்ன செய்வது? வியாதிக்கு ஏழைப்பணக்காரன், மகிழ்ச்சியாக இருப்பவன், சோகமாக இருப்பவன் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாதே. அவளுக்கும் வந்தது தொழுநோய். ஆனால் அதனாலெல்லாம் அவள் பாதிக்கப்படவில்லை. பெருவியாதியைவிட ஒரு பெரும் வியாதியான சந்தேகம் இருக்கிறதே. அதனால்தான் அவள் பாதிக்கப்பட்டாள். ஆரம்பத்திலேயே அவளது நோய் கண்டுபிடிக்கப்பட்டு பூரணமாக குணமாகிவிட்டபோதும், தனக்கும் அது வந்துவிடுமோ என்ற சந்தேகத்தால் மணிமேகலை சித்திரவதை செய்யப்பட்டாள்.

நோயைப்பற்றி தெரிந்ததும் மணிமேகலையின் புகுந்த வீட்டார் அவளை அன்போடும் அனுதாபத்தோடும்தான் பார்த்துக்கொண்டனர். ஆனால் மணிமேகலையின் மாமியார் தம்பியான இராமபத்திரனின் மூளைச்சலவையால், மணிமேகலை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வேலை செய்யாமல் இருப்பதில் ஆரம்பித்து, கணவனின் புறக்கணிப்பு, நோய் பற்றிய சந்தேகப் பேச்சுகள், பெற்ற பிள்ளையை அவளிடம் கொடுக்க மறுப்பது, தனியறை, தனி தட்டு என்று முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வீட்டைவிட்டு விரட்டாத குறைதான்.

அதுவும் அவள் பிறந்த வீட்டிற்கு சென்று சிறிதுகாலம் தங்கிவிட்டு வருகிறேன் என்று போய்விட்டு வந்தபின் நடந்தேறிவிட்டது. பிறந்தவீட்டிலும் அவமானப்பட்டு வந்த மணிமேகலை புகுந்த வீட்டாராலும் துரத்தியடிக்கப்பட்டாள். எல்லா வீடுகளிலும் எந்த நிலையிலும் மாறாத அன்புகொண்ட இதயங்கள் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட இதயங்கள் மணிமேகலையின் வீடுகளிலும் இருந்தன. அவர்கள் மணிமேகலையை பெற்ற தந்தையும் மாமனாரும்தான். பாவம் வயது முதிர்ந்த அவர்களால் மணிமேகலைக்கு என்ன செய்யமுடியும் உள்ளுக்குள்ளே மருகி தவிப்பதைவிட?

பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே. அப்படித்தான் இருந்தது கம்பௌன்டர் மணியின் குணச்சித்திரம். மாத்திரைகள் வாங்கிவந்து கொடுப்பதிலும், மணிமேகலைக்காக அனுதாபப்பட்டு அவள் குடும்பத்தாரிடம் பரிந்து பேசுவதிலும், அரக்கோணத்திலிருந்து அவளைச் சென்னை அழைத்து வருவதிலும் உதவிய மணி, மணிமேகலையின் தனிமையானச் சூழலைப் பயன்படுத்திக்கப் பார்ப்பான். மன உறுதிகொண்ட மணிமேகலை தப்பித்துவிட்டாள். ஆனால் நிஜத்தில்? பெண்களின் மிகப்பெரிய பலவீனம் அன்பு. அவர்களின் மிகப்பெரிய பலமும் அதுதான். நேசிப்பதையும், நேசிக்கப்படுவதையும் உயிராய் மதிப்பவர்கள் பெண்கள்.

இதைத்தான் கயவர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் அனைவரையும் உலுக்கி உருக்குலைத்துப்போட்ட பொள்ளாச்சி கொடூரங்கள். பலவந்தப்படுத்தி பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது வேறு. ஆனால் பாசத்தையும் பலவீனத்தையும் பயன்படுத்திப் பெண்களைச் சிக்கவைப்பதை எப்படி தவிர்ப்பது?

இரண்டே வழிகள். வறண்டபூமிதான் மழைக்காக ஏங்கும். வறட்சியே இல்லாமல் பார்த்துக்கொண்டால்? அன்பும் பாசமும் கிடைக்காத பெண்கள்தான் அதைத் தேடித் திரிந்து தடுமாறி தடம் மாறுவார்கள். கொடுக்க வேண்டியவர்களே அதைக் கொடுத்துவிட்டால்? பெண்கள் பாதுகாப்பான சுதந்திரத்தோடு இருப்பார்கள் அல்லவா? இந்தக் காலத்துப் பெண்கள் பாசத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. காசு, பணம், கார், பங்களா, உயர் படிப்பு, வெளிநாட்டு உத்தியோகம் என்றுதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அதையெல்லாம் பெண்கள் வாழ்க்கையை வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தான் கேட்பார்களே தவிர, அதையே வாழ்க்கையாக எண்ணிவிடமாட்டார்கள்.

பணத்தைக்கூட பெண்கள் தனியாக சம்பாதித்துக்கொள்வார்கள். ஆனால் பாசம்? எல்லா ஆண்களும் இதை ஒரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட அரக்கியின் இதயத்திலும் பாசமெனும் ஊற்று கொஞ்சமாவது ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டால் பாதிக்குமேல் வெற்றிதான். இன்னொன்று, தவறு செய்பவரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டப் பெண்ணின் குண அலசலில் ஈடுபடுவது. பெண்ணை இழிவுப்படுத்துவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். என்ன தவறு செய்தாலும், அதனால் பாதிக்கப்படுவது பெண் என்ற திமிரில்தான் பல குற்றங்கள் நிகழ்கிறது. ஒரு பெண்ணைப்பற்றி இன்னொரு பெண்ணே இழிவாக பேசும் அழகு நம் கலாச்சாரத்திற்கு மட்டுமே உரியது.

முள்ளின்மேல் சேலை விழுந்தாலும், சேலையின்மேல் முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான் என்று எழுதிவைத்த புண்ணியவான் எவனோ. அல்லது புண்ணியவதி எவளோ?! அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வெறும் சேலைக்கு மட்டுமே பொருந்தும் இந்த வாக்கியத்தைப் பெண்ணுக்குப் பொறுத்தி அவர்களை நம்பவைத்து, அவர்கள்தான் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொடுமையை என்னவென்று சொல்வது? இது மாற வேண்டும். தன்னைச் சுற்றி என்ன தவறு நிகழ்ந்தாலும், அதைத் தைரியமாக வெளியில் சொல்லலாம் என்ற மன உறுதி வரவேண்டும். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்ற பாதுகாப்பும் உத்திரவாதமும் கிடைக்கவேண்டும். தவறு செய்பவர்களுக்கு பயமும் துன்பமுமே வாழ்க்கையாக வேண்டும். சேலைமேல் முள்விழுந்தால் முள்ளுக்குத்தான் சேதம் என்ற புதுமை வரவேண்டும்.

உடன்பிறந்த அண்ணனான இராமலிங்கமும், தம்பி சந்திரனும் காட்டத் தவறிய பாசத்தை, உடன்பிறவா அண்ணன்களான இரத்தினமும், கூத்து கோவிந்தனும் மணிமேகலைக்குக் கொட்டிக்கொடுத்தனர். கோவிந்தனின் உதவியால் மணிமேகலை ஒரு இச்த்தீரியா (hysteria) நோயாளியிடம் வீட்டு வேலைக்கு சேர்ந்தாள். ஒருநேரம் அன்பால் குளிப்பாட்டப்படுவதும், மற்றொரு நேரம் அடிகளாலும் வார்த்தைகளாலும் அபிஷேகிக்கப்படுவதுமாக அவளின் நாட்கள் கழிந்தன. காமாட்சியின் இந்த இருவேறுப்பட்ட ரூபத்தில், மணிமேகலை புரிந்துகொள்வதாக எழுத்தாளர் குறிப்பிட்ட விஷயம் என்னை மிகவும் கவர்ந்த ஓர் எதார்த்தம்.

பெண்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஓற் உண்மையும் கூட. ‘டார்லிங்’ என்று சொல்பவரைவிட என்னடி ‘இழவெடுத்தபய மவளே’ என்று சொல்பவரின் அன்பு மாறாத ஒன்றென்று எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் உண்மை. அன்பை அவரவர் அவரவருக்கு தெரிந்தவிதத்தில்தான் வெளிப்படுத்தமுடியும். தேனொழுக பேசுவது உண்மையான அன்புமில்லை. முரட்டுத்தனமாக நடப்பவர்களிடம் அன்பே இருக்காது என்பதுமில்லை. இனிப்பான பேச்சை பல ஆண்கள் பெண்களை தன் வலையில் விழவைக்கப் பயன்படுத்தும் யுக்தி. வாழவைக்கத் தெரிந்தவர்களுக்கு பேசத்தெரியாது. பேச்சு மட்டுமே இருப்பவர்களால் பெண்ணை வாழவைக்கமுடியாது.

மாத்திரை சரியாக எடுத்துக்கொள்ளாததால் மணிமேகலையின் நோய் மீண்டும் கூர்மை பெற, வெங்கடேசனால் செங்கை மாவட்டத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கியவர்களுக்காக ஒரு ஒதுங்கிய பகுதியிலுள்ள இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். திருமணமான பின்னும் தன்மேல் மாறாத அன்பைப் பொழியும் வெங்கடேசனின் அன்பால் மணிமேகலை உணர்ச்சிமயமானபோது, அவன் கம்பீரத்துடன் அவள் சொன்னதையே திருப்பிச் சொன்னான். அன்பு என்பது ஓர் மாபெரும் சக்தி. அதன் ரூபம் மாறுமே தவிர சக்தி மாறாது. நான் ரூபம்தான் மாறியிருக்கிறேனே தவிர என் அன்பு மாறவில்லை என்றபோது மணிமேகலை அந்த வார்த்தைகளில் உயிர்த்தெழுந்தாள்.

அந்த இல்லத்தின் நிர்வாகியான மதர், தேவதாசிகளைப்பற்றிய ஆய்வுப்படிப்பிற்காக தன் தமக்கை மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைச் சந்தித்தபோது, ஆயிரம் தேவதாசிகளைப்பற்றி ஆராய்வதைவிட ஒரு அபலைக்காவது ஆதரவளிப்பது பின்னாளில் உங்களுக்கே பாதுகாப்பாக அமையும் என்ற அறிவுரைப்படி, தேவதாசிகளைவிட தொழுநோயாளிகளுக்குத்தான் ஆதரவு தேவை. அவர்கள் வாழ விரும்பினாலும் வாழமுடிவதில்லை என்பதை அறிந்து தமிழ்நாட்டில் செங்கை மாவட்டத்தில் அந்த இல்லத்தைத் துவக்கினார். உறுப்புகள் சுகமாக இருப்பவர்களின் கைத்தொழில்களாலும், மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்களின் நன்கொடையாலும் அந்த இல்லம் இயங்கிக்கொண்டிருந்தது. மதரின் இறப்பிற்கு பின் மணிமேகலை தானாகவே முன் வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

பணநெருக்கடி வந்தபோது தன் தாலி முதற்கொண்டு அனைத்து நகைகளையும், சேமித்துவைத்திருந்த பணம் அனைத்தையும் இல்லத்திற்கே செலவிட்டாள். அதையும் மீறிய நெருக்கடி வந்தபோது, வெங்கடேசன், இரத்தினம், கூத்து கோவிந்தன் ஆகியோரின் உதவியுடன் கணவனிடம் போராடி 60 பவுன் நகைகளையும் ஜீவனாம்ச பணத்தையும் வாங்கினாள். அண்ணன் தம்பியுடன் போராடி அப்பா அவள் பெயரில் எழுதிவைத்த சொத்துக்களை வாங்கினாள். ‘அன்னை மார்கிரேட் அருளில்லம்’ என்ற புதிய பெயரில் இல்லத்தைச் சிறப்பாக நிர்வகித்தாள். தொழுநோயாளிகளின் குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு இல்லம் துவங்க வேண்டும் என்ற மணிமேகலையின் புதிய திட்டத்தோடு கதைமுடியும்.

என்னதான் நாம் குணக்குன்றாக இருந்தாலும், இருக்க முயற்சித்தாலும் சில இயல்புகளைத் தவிர்க்க முடியாது. துர்நாற்றம் பிடிக்காது, மற்றவர் உபயோகித்ததை உபயோகிக்கப் பிடிக்காது, வாந்தி பிடிக்காது, மனித கழிவுகளை சுத்தம் செய்யப் பிடிக்காது, இரத்தம் பிடிக்காது, தூய்மையாக இல்லாதவரிடம் பழகப்பிடிக்காது, நோயால் பாதிக்கப்பட்டவரிடம் நெருங்கிப்பழகப் பிடிக்காது. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் மனதில் ஏற்படும் சஞ்சலங்களைத் தவிர்க்கமுடியாது. மேலே குறிப்பிட்டவையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இருப்பவர்களும் இருக்கலாம். ஆனால் அந்த இயல்புகள் இருப்பது முற்றிலும் தவறு என்றில்லை.

எல்லா நோயாளிகளுக்கு தன் நோயின் வீரியம் தெரியும். அவர்களே நெருங்கிப்பழக விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பது தானும் மனிதர்கள்தான் என்று தன்னைச் சுற்றியிருப்போர் நினைக்க வேண்டும். பரிவோடு ஒரு பார்வை, அனுசரணையான பேச்சு, குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதைத் தருவதால் நமக்கு என்ன நோய் தொற்று வந்துவிடப்போகிறது? வியாதியைப்பற்றி மருத்துவர் சொல்வதை முழுமையாக நாம் நம்புவது மட்டுமின்றி, நோயாளியையும் நம்பவைக்க வேண்டும். ஒரு நோயின் மிகச்சிறந்த மருந்து நம்பிக்கைதான்.

மணிமேகலையின் இல்லத்து நிர்வாகி உயிருடன் இருந்த வேளையில், சமூக சேவை செய்கிறேன் என்று சில பெண்கள் வருவார்கள். நயமாகப் பேசி நன்கொடையும் கொடுக்க முன்வருவார்கள். நிர்வாகி அவர்களுக்கு பழச்சாறு எடுத்துவரச் சொல்வார். முதலில் சரி என்றவர்கள், அங்கு சமைக்கப்படும் அனைத்துமே தொழுநோயாளிகள் சமைத்தது என்று சொன்னதும் ஒவ்வொரு காரணம் சொல்லி தெறித்து ஓடிவிடுவார்கள். மதரும் நாசூக்காக நன்கொடையை மறுத்துவிடுவார்.

சேவை என்பது கட்டாயத்திற்காகவோ, பேர் புகழிற்காகவோ, பகட்டிற்காகவோ செய்வது இல்லை. அது மனமுவந்து மற்றவருக்காக மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட குண இயல்புகளைக் கொண்டவர்களால் எல்லா சேவைகளையும் முகச்சுளிப்பில்லாமல் செய்யமுடியாது. மீறி செய்தால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாமல், நிறைவில்லாத சேவையாகதான் இருக்கும். எனவே நம்மால் என்னமுடியுமோ அதை நிறைவாக செய்தாலே போதும்.

கடவுள் பாவங்களைச் சுமக்க தைரியசாலிகள் யாரென்று பார்த்துதான் அதைக் கொடுப்பாராம். இதுவும் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம். மிகுந்த மனவுளைச்சலில் இருந்தபோது நான் படித்த இந்த வார்த்தைகள் எனக்கே ஒரு தெளிவையும் தைரியத்தையும் கொடுத்தது. மனக்கஷ்டங்களைத் தாங்கும் அளவுக்கு நான் தைரியசாலி என்று காலமும் கடவுளும் நினைத்திருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து கஷ்டங்களையும் தைரியமாக கடந்து, தன்னையும் காத்து, தன்னைப்போன்ற பிறநோயாளிகளையும் காக்கவேண்டும் என்ற வாழ்க்கைப்பாதையை மணிமேகலையால் தேர்வு செய்யமுடிந்தபோது ஏன் நம்மால் முடியாது? நமக்கான வாழ்வை நாமே தேர்வு செய்வோம். அதை வேட்கைக்கொண்டு வெற்றிபெறுவோம்.

 

Tuesday 26 January 2021

மீண்டுமோர் சுதந்திர காற்று

    

போராட்ட விளக்கினில் குருதி எண்ணை ஊற்றி, தியாகத் திரித்தூண்டி ஏற்றிவைத்த தீபவொளி சுதந்திரம்.


எத்தனை உயிர் பறவைகள் வானில் பறந்திருக்கும். எத்தனை உறுப்புகள் குருதியில் குளித்திருக்கும்.


எத்தனை சிறைவாசம் எத்தனை அன்னியாதவாசம், அதன்பின்னே கிடைத்ததிந்த சுதந்திர சுவாசம்.


தெரிந்த தியாகிகள் சிலர். தெரியாத தியாகிகள் பலர்.


தெரிந்த தியாகத்திற்கு எழுத்துக்கள் சாட்சி. தெரியாத தியாகத்திற்கு எது சாட்சி?


மென்மையும் மேன்மையும் பொருந்திய பெண்களில் புயலாய் புறப்பட்டு புதுமை செய்தவர்தான் எத்தனை.


ருசியறிந்து உண்ண உணவிருந்தும் பசிக்குக்கூட உண்ண மனமிருந்ததில்லை.


அரண்மனை அந்தப்புறங்கள் ஆயிரமிருந்தும் ஆழ்ந்த நித்திரை கொண்டதில்லை.


பட்டுப்பீதாம்பரங்கள் பலயிருந்தும் போட்டுக்கொள்ள பொழுதிருந்ததில்லை.


எழுதி தீர்க்க ஏராளமிருந்தும் எழுத்து சுதந்திரம் இருந்ததில்லை.


எடுத்துக்கூற கருத்துக்கள் இருந்தும் பேச்சு சுதந்திரம் பெற்றதில்லை.


அடிமைத்தனம், அடிமைத்தனம் ஆங்காங்கே அடிமைத்தனம். ஆங்கிலேயரின் அடிமைத்தனம்.


அரும்பாடுபட்டு இரவுப்பொழுதில் தூங்கும் வேளையில் வாங்கினோம் சுதந்திரத்தை வெள்ளையரிடம். அதை பகலில் விழித்துக்கொண்டிருக்கும்போதே பரிகொடுத்தோம் இந்தியக்கொள்ளையரிடம்.


இன்றும் இந்தியா குருதியில் குளிக்கத்தான் செய்கிறது.


இன்றும் இந்திய வளங்கள் சுரண்டத்தான்படுகிறது.


இன்றும் இந்தியப்பெண்கள் பாதுகாப்பின்றித்தான் நடமாடுகிறார்கள்.


இன்றும் இந்திய நாகரீகம் சீர்குலைந்துதான் போகிறது.


இன்றும் எழுத்துக்கும் பேச்சுக்கும் எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.


ஆனால் அதற்கு காரணம் வெள்ளையர்கள் அல்ல நம் இந்தியர்கள்.


அன்று இந்தியனுக்கு எதிரி வெள்ளையன். இன்று இந்தியனுக்கு எதிரி இந்தியன்.


அன்றைய சுதந்திரத்தை அவர்கள் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.


இலஞர்களே இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.

முயல்வோம் மீண்டுமோர் உண்மையான முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க.


இனி இந்தியரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவது இந்தியர் கையில்.


 

Wednesday 20 January 2021

‘நானே என் முதல் ரசிகன்’

சமீபத்தில் வாசிப்பைவிட எழுத்தும் பதிப்பும் அதிகமாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் பெண் எழுத்தாளர்கள் இணயத்தில் நிறைய எழுதுகிறார்கள். காதல், நட்பு, காமெடி, பாசம், குடும்பம் இப்படி உள்ளத்து உணர்வுகளைமையமாகவைத்து எழுதி வருகின்றனர். இதற்கெல்லாம் பெரிய முன்மாதிரி எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன் அவர்கள்தான்.

வீட்டு வேலை, படிப்பு, பணிச்சுமை இதற்கிடையில் பொழுதுபோக்காக ரமணி சந்திரன் நாவல்களைப் படித்து, அவர் எழுத்தில் கவரப்பட்டு, நாமும் இப்படி எழுதினால் என்ன? என நினைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்கள் எத்தனையோ பேர். இப்போது கிண்டிலில் பெண்கள் ராஜியம்தான் நடக்குது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறும் விஷயம் என்னவெனில், அப்படிப்பட்ட குடும்ப கதைகளுக்குள் நிச்சயம் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனை அடங்கியிருக்கும். பெயரைப் பார்த்துவிட்டு இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்று கடந்துவிடக்கூடாது.

எல்லா காலத்திலும் சமூகப் பிரச்சனைகளை ஒரு நாவலாக சித்தரிப்பது இருக்கிறதுதானே? எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், எழுத்தாளர் சிவசங்கரி போன்றவர்களைக் கூட எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட கதை என்று  கடந்துவிடமுடியாத கதைதான் எழுத்தாளர் ஸ்ரீகலாவின் தாயுமாணவன். குறுநாவல் என்றாலும் அனைவரும் வாசிக்கக்கூடிய வாசிக்க வேண்டிய கதை.

தாயுமானவன் என்ற பெயரைப் படித்ததும் முதலில் நமக்கு என்ன தோன்றும்? ஒரு தந்தை தன் குழந்தைமேல் தாயைப்போல் பரிவு காட்டுகிறார். அல்லது கணவன் மனைவியின் மீது செலுத்தும் அன்பு தாய்க்கு நிகரானது. இப்படித்தானே தோன்றும். ஆனால் இது எதுவுமே இல்லை!

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை கணவன், பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் சொல்வதில் தொடங்கி, மசக்கை அனுபவித்து, குழந்தையின் வளர்ச்சியை அனுஅனுவாய் ரசித்து, அதன் அசைவுகளை உயிருக்குள் சேமித்து, இரவும் பகலும் குழந்தைக்காக தன்னை கவணத்துடன் பார்த்துக்கொண்டு, பயம், கவலை, வேண்டுதல் போன்ற மனச்சுமைகளோடு பிரசவ வலியையும் தாங்கி குழந்தையை பெறுகிறாள்.

தன் இரத்தத்தை விருந்தாக்கி, முத்தத்தை மருந்தாக்கி, உடலுறுப்புகள் வளர்கிறதா, உணர்வுகள் புரிகிறதா, உரக்கம் வருகிறதா, உடல்நலம் சீராய் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து குழந்தையின் பாதுகாப்பு கவசமாகிறாள்.

முதல்நாள் பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கி, அன்றாட வாழ்வில் நடப்பவைகளைக் கேட்டு பூரிப்பதில் தோழியாகிறாள். பாடமும் பண்பும் பயிற்றுவித்து பிள்ளையை பெரியோர் போற்றும் புகழோனாக்குவதில் நல்ல ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறாள். இப்படியே குழந்தை வளர்ப்பு தெளிந்த நீரோடையாகவே இருந்துவிட்டால் சரி. ஆனால் விதி ஓடையில் கல்லெறிந்து கலைத்துவிட்டால்? இறுதிவரை போராட்டம்தான்.

அதுதான் நடந்தது இந்த கதையில் வரும் தாய் ரங்கநாயகிக்கும் மகன் சியாமள கிருஷ்ணனுக்கும். சியாமளகிருஷ்ணன் தன் 10 வயதுவரை கிருஷ்ணனாகதான் இருந்தான். அக்கா, அண்ணன், தம்பியுடன் சந்தோஷமாகவே வாழ்க்கையைக் கடத்தினான். அவனின் 11ஆவது வயதில் பெண்களுக்கு வரவேண்டிய மாதவிடாய் சுழர்ச்சி வரவே, தாய் தந்தையர் பயந்துபோய் மருத்துவரிடம் சென்றனர். அவரோ (intersex) இருபாலுடல் அமைப்பினன் என்று தீராத துன்பச் செய்தியை தன் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறினார்.

அதாவது இருபால் உடலமைப்பு என்றால் வெளிப்படையாக ஆணாக இருந்தாலும், உள்ளுறுப்புகளில் அதிகப்படியாக பெண்ணிற்கு  இருக்க வேண்டிய கர்பப்பை இருக்கும். அதனால் மாதவிடாய் போன்ற பெண்கள் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அன்றுமுதல் அவன் தந்தைக்கு வேண்டாதவனாகிவிட்டான். உடன்பிறப்புகள் ஒதுக்கும் பொருளானான். காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு எனும்போது கடவுளனுப்பிய பிரதிநிதியான தாய்க்கு மட்டும் அது பொருந்தாதா? ரங்கநாயகி தன் மகன் சியாமளகிருஷ்ணனை முழுமையான கிருஷ்ணனாக மாற்றவே தன் வாழ்நாளை செலவிட்டார்.

அவனைப் படிக்கவைத்தார். அவன் ஆயுள் முழுமைக்குமான தன்னம்பிக்கையைக் கொடுத்தார். காதல் கிட்டாத நிராசையில் அவன் கலங்கியபோது மகப்பேறு மருத்துவம் படிக்கச் சொன்னார். அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனாலும், அவனால் பிரசவம் பார்க்கப்படும் அனைத்து குழந்தைகளும் அவன் குழந்தைகள் என நினைக்கச் சொன்னார். சியாமளகிருஷ்ணனும் இதையெல்லாம் மனதில் கொண்டு பிரபலமான மகப்பேறு மருத்துவரானான்.

தாயின் அறிவுரைப்படி சாதித்துவிட்டான். இநி தாயுமானவனாக வேண்டாமா? குழந்தைக்காக சிகிச்சைப்பெற வந்த பெண்ணிற்கு கர்பப்பையில் பிரச்சனை இருப்பதால் அதை நீக்கும் நிலை வரவே, அவர்களிடம் தன்னைப்பற்றிச் சொல்லி தன்னிடம் அதிகப்படியான உறுப்பாக இருந்த கர்பப்பையை தானமாக கொடுத்தான். பின்னர் மேற்படி சிகிச்சைகளை மேற்கொண்டு, அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தான். தன் கர்பப்பை மூலம் உதித்த குழந்தைக்கு தானே மானசீக தாயானான். தாயுமானவனானான்.

விதி அனைவருக்கும் பூப்பாதையை விரித்துவைத்திருப்பதில்லை. பலருக்கும் முள்பாதையைத்தான் விரித்துவைத்திருக்கும். அந்த முள்பாதையைப் பூப்பாதையாக மாற்றுவது மனிதனின் பொறுப்பு. திறமையும், திடமான நம்பிக்கையும், சரியான வழிகாட்டுதலும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடலாம்.

பெண் என்பவள் தோற்றுக்கொண்டே ஜெயிப்பவள். எத்தனைத் தோல்விகளைச் சந்தித்தபோதும் மீண்டும் ஜெயிக்க என்னவழி என்று தேடித்தேடி அதை கையாள்பவள். இயல்பிலேயே பெண்ணின் குனம் இதுவாக இருக்க, அவளே தாயாக இருந்தால்? சிறந்த தாயானவள் தன் மகன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனை சரியான பாதையில் வழிநடத்திச்சென்று இலக்கை அடையச் செய்வாள்.

இந்தக் கதையில் வரும் ரங்கநாயகியும் அப்படித்தான். ஊரும் உறவும் தன் மகனை ஒதுக்கிவிட்டபோதும், அவன் என்மகன். ஜெயிக்கப்பிறந்தவன். எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவன் என்று தானும் போராடி அவனையும் உலகத்தோடு போராடவைத்து இலக்கை அடையச் செய்தாள். இந்த உலகில் எத்தனையோ ரங்கநாயகிகள் வாழ்ந்து, மறைந்து, மீண்டும் பிறந்து, இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தன்னிடம் இருந்த குறையான கர்பப்பையை தானமாக கொடுத்து, தன் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கி மற்றவருக்கும் வாழ்வின்மேல் ஒரு பிடித்தத்தைக் கொடுத்து தாயுமானவனான சியாமளகிருஷ்ணனைப் போல ஏன் மற்றவரால் இருக்கமுடியாது? தானம் என்ற ஒரு சிறு செயல் எத்தகைய விந்தைகளை நிகழ்த்தியிருக்கிறது.

ஆறு மாதம் முன்பு விகடனில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சக்ரவர்த்தியின் கட்டுரை வெளிவந்தது. அதில் அவர் இருபால் உடலினன் என்றும், பலவித போராட்டங்களைச் சந்தித்து ஊடகத்துறையில் 20 வருஷங்களுக்குமேல் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முழு காரணமும் அவர் அம்மாதான் என்று பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.

 

Wednesday 13 January 2021

'நான் காணும் உலகம்'

சுருங்கிவிட்ட உலகம் சுயநலத்தின் கூடம்!

கொடூரப்புள்ளிகளால் இடப்பட்ட கோலம்!

நாட்டிலோ தந்திர ஆட்சி!

வீட்டிலோ எந்திர ஆட்சி!

பாசத்தைப் பங்குவைக்க ஆளில்லை!

பணத்தைப் பந்திவிரிக்க பாய்ந்து வருவோர் ஏராளம்!



இலையுதிர காணேன்!

ஈசலைப்போல் கொலையுதிரக் கண்டேன்!

அள்ளிக்கொடுக்கக் காணேன்!

வேறோர் பொருள் மட்டும் கொள்ளையடிக்கக் கண்டேன்!


பெண்ணுள்ளம் மதிக்கும் மனிதன் காணேன்!

பேதையவள் உடல் தின்னும் மிருகம் கண்டேன்!

அள்ளிப்பருகக் குடிநீர் காணேன்!

ஆறாய் பாயும் குறுதி கண்டேன்!


சாலைவிதிகள் மதிக்கக் கானேன்!

சாரை சாரையாய் விபத்துகள் கண்டேன்!

பாப்பாக்கள் ஆடும் ஆட்டங்கள் காணேன்!

அவை பாதுகாப்பு வளையத்தில் சிறைப்படக் கண்டேன்!


பிஞ்சை ரசிக்கும் நெஞ்சங்கள் காணேன்!

அதையும் புசித்து ரசிக்கும் ராட்சதம் கண்டேன்!

பசியும் பஞ்சமும் மறையக் காணேன்!

லஞ்சமும் வஞ்சமும் நிறையக் கண்டேன்!


வியாதிகளில்லா வீடுகள் காணேன்!

விதம்விதமாய் நோய்கள் கண்டேன்!

சுயநலம் பேணாத் தலமைக் காணேன்!

சூழ்ச்சிகள் நிறைந்த ஆட்சியைக் கண்டேன்!


அறிவை வளர்க்கும் கல்வியைக் காணேன்!

அரசியல் பேசும் கல்வியைக் கண்டேன்!

எழில் கொஞ்சும் இயற்கைக் காணேன்!

ஏய்ச்சிப்பிழைக்கும் செயற்கைக் கண்டேன்!


மூர்க்கங்கள் யாவும் முகவிழியால் காணேன்!

மூடியவிழிக்கு நன்றிகள் சொல்வேன்!


இயற்கையே! எனையாளும் விதியே! இறையே!

உம் மூவர் மீதில் ஆணை!


எப்போது அரக்கம் ஒழியக் காண்பேனோ!

எப்போது இரக்கம் பிரக்கக் காண்பேனோ!

எப்போது இதயம் மதிக்கக் காண்பேனோ!

எப்போது இல்லாமை விலகக் காண்பேனோ!


எப்போது எல்லாரும் எல்லாம் பெறக் காண்பேனோ!

எப்போது சமத்துவம் சமநீதி காண்பேனோ!

எப்போது அன்பும் அமைதியும் மலரக் காண்பேனோ!

எப்போது பண்பும் பொதுநலமும் மிளிரக் காண்பேனோ!


எப்போது மாண்புற வாழக் காண்பேனோ!

எப்போது மனிதம் சிறக்கக் காண்பேனோ!


அப்போதே என் விழிகள் திறக்கக் கேட்பேன்!

சாட்சிகளே, பதில் சொல்லுங்கள்!

இந்தத் தரணி சிறக்குமா?

என் விழிகள் என்றேனும் திறக்குமா?


பின் குறிப்பு:

வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை கொளுத்திவிட்டு புதியவைகளை புகுத்துவதற்கு பதில் நாட்டிற்கு தேவையில்லாத கொடூரங்களை கொளுத்திவிட்டு  அன்பும் அமைதியும் புகுத்துவோம்.

அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!


 

Monday 4 January 2021

கலையாத கனவு.

அந்த அரசுப் பள்ளியிலுள்ள கடிகாரம் சரியாய் 9 முறை அடித்து ஓய்ந்த வேளை தாய் துர்காவின் கையைப்பிடித்தபடி உள்ளே நுழைந்தாள் ஏழு வயது சிறுமி அனுபமா.அவள் ஜீவா துர்காவின் ஒரே செல்லப் பெண்.


ஏழ்மையிலும் இனிமை காணும் குடும்பம். அத்தைமகன் மாமன் மகளென்பதால் மாமியார் மறுமகள் சண்டைக் காட்சிகளெல்லாம் இல்லை.அனு பிறந்தபோது மட்டும் சற்று துவண்ட குடும்பம் அதன்பின் தேறிக்கொண்டது.


அனைவரிடமும் அனுவைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு துர்கா கிளம்ப, தன் இருக்கையில் அமர்ந்தாள் அனு.அவள் பக்கத்து இருக்கையில் அவள் வயதை ஒத்த ஒரு பெண். அவள் அனுவிடம் மெல்ல பேசத் தொடங்க, இருவரும் சற்று நெருங்கினர்.


பள்ளியில் அனுவிற்குக் கிடைத்த முதலும் கடைசியுமான தோழியவள். இடைவேளை நேரத்தில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, அனு மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்.ஏன் நானும் மற்றவரைப் போல் இல்லை என ஏங்கினாள்.


“நானும் விளையாட வரட்டுமா மீனா?” என்று ஆசைப் பொங்கக் கேட்ட அனுவை தான் இப்போது வருவதாகச் சொல்லி சென்றுவிட்டாள் அனுவின் ஒரே தோழி மீனா. சற்று நேரத்தில் ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, தான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை அனுவிற்கு.


அப்படியும் “நான் என்ன மிஸ் செய்யனும்?” என்று கேட்கத்தான் செய்தாள். ஆனால் அவரோ இதென்னடா நமக்கு வந்த தொல்லை என்று நினைத்தபடி “நீ அப்புறம் பிள்ளைங்ககிட்ட கேட்டு எழுதிக்கோம்மா” என்றுவிட்டார்.


யாருக்குமே தன்னைப் பிடிக்காதபோது யாரிடம் கேட்பது என்று வருந்தினாள் அனு. தன் அவசரத் தேவைக்குக் கூட யாரையும் கேட்க முடியாத தன் நிலையை நினைக்கும்போது அவளுக்கு கண்ணீர் பொங்கியது.


வீட்டிற்கு வந்து அனு தன் தாய் துர்காவிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவளைப் போகப் போக சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்திவிட்டு தனிமையில் தன் மகளை நினைத்து கண்ணீர் சிந்தினாள்.


மறுநாள் பள்ளியில் அனுவின் எழுதுகோள் பெட்டியை ஒரு பையன் மெல்லத் திருடிக்கொண்டான். அனு அதை உணர்ந்தாலும் கேட்க பயமாக இருந்தது. தோழி மீனாவிடம் சொன்னாள்.


அவள் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொடுத்தாள். ஆனால் மீனா அந்த பக்கம் நகர்ந்ததும் அவன் மறுபடியும் அதை எடுத்துக்கொண்டான்.இந்தமுறை அனுவே தைரியமாக அவனைக் கேட்க, அவன் அது அவனுடையது என்று சொல்லி ஏமாற்றினான்.அனுவின் மனதில் ஓர் பாதுகாப்பின்மை தோன்றியது.


இதை துர்காவிடம் அவள் சொல்ல, புது எழுதுகோள் பெட்டி வாங்கிக் கொடுத்தாள்.மகளை சமாதானப்படுத்தினாலும், வாய்விட்டே அழுதாள் துர்கா.மாமியார் தனம் அவளைத் தேற்றினார்.


“காக்கா அவ கண்ணைக் குத்திடுமோன்னு மூடி மூடி வைச்சேனே! கடவுள் குத்திடுவார்னு நினைக்கலயே அத்தை! நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணோம்னு நமக்கு இந்த சோதனை அத்தை!” எனக் கதறித் தீர்த்தாள். ”அழாதம்மா மரத்த வெச்சவன் நிச்சயம் தண்ணி ஊத்துவான்” என்று தன் வாக்கு விரைவில் பலிக்கப்போவது தெரியாமல் இயல்பாய் சொன்ன அந்த நொடியில் வானத்து தேவதைகள் ததாஸ்து சொல்லிச் சென்றனர்.


மகளைப் பற்றிய கவலையுடன் அன்றைய உரக்கத்தில் ஆழ்ந்திருந்த துர்காவிற்கு கனவு வந்தது. வெண்ணிற ஆடையணிந்த ஒரு மனிதர் வந்தார். கையில் துர்கா இதுவரைப் பார்த்திராத பொருட்களை வைத்திருந்தார்.


“மகளே! நான் சொல்லும் இடத்திற்கு உன் மகளை அழைத்துச் செல். அவளுக்கான படிப்பும் பாதுகாப்பும் காத்திருக்கிறது.” என்றுவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் சொன்ன வார்த்தைகள் அப்படியே மனதில் தங்கிவிட்டது.


கனவை நம்பி உடனே செயற்பட மனது இடம் தராததால் அதை அப்படியே தனக்குள் புதைத்துக்கொண்டாள். நாளாக நாளாக அனுவின் கஷ்டங்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.


அவளால் அந்த பள்ளியில் பொருந்த முடியாத நிலை வரவே துர்கா பள்ளிக்கே சென்று புகார் செய்தாள். ஆனால் அந்த ஆசிரியரோ ”இதோ பாரும்மா உங்க பெண்ணைப் பார்த்துக்க எங்களுக்கு தெரியலை. அது மட்டுமே எங்க வேலையுமில்லை. நீங்க வேற பள்ளியில் சேர்த்துக்கோங்க” என்று திடமாக சொல்லிவிட்டார்.


வேறு வழியின்றி அனுவை அழைத்துக்கொண்டு துர்கா வெளியே வர, அவளைத் தடுத்து நிறுத்தியது ஒரு பெண்மணியின் குரல். “அம்மா எனக்கு தெரிஞ்ச ஒரு பள்ளி இருக்கு. அங்கே உங்க பொண்ணு மாதிரி குழந்தைங்க படிக்கிறாங்க. விலாசம் தரேன் கூட்டிட்டு போய் பாருங்க.” என்று தன் கையில் வைத்திருந்த விலாசத்தை நீட்டினார்.


நன்றி சொல்லி அதை வாங்கிய துர்கா படித்துப் பார்க்காமலே பத்திரப்படுத்தினாள். வீட்டிற்கு வந்தவள் எந்திரத்தனமாகவே நாளை ஓட்டினாள். அன்று இரவு மீண்டும் அதே கனவு. அட்சரம் பிசகாமல் அதே வார்த்தைகள்.


அதைக் கேட்ட துர்காவிற்கு ஏதோ தோன்ற, உடனே எழுந்துபோய் தன் கைப்பையில் வைத்திருந்த விலாசத்தைப் பார்த்தாள். பார்த்தவள் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. காலையில் கணவனிடம் அந்த பெண்மணியைப் பற்றி மட்டும் சொல்லி அந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.


பார்வையற்றோருக்கான சிறப்புப்  பள்ளி கட்டிடம் அவர்களை வரவேற்றது. உள்ளே சென்ற அவள் தலைமை ஆசிரியரிடம் தங்களைப் பற்றிச் சொல்ல, அவர் அனுவிற்கு சில சோதனைகளை வைத்து புத்திசாலி பெண் என்று சிலாகித்து பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.


சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தைப் பற்றி இயல்பாய் கேட்டாள் துர்கா. “அவர்தான் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரையில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரையில்” என்று அவரைப் பற்றி சொல்ல, அவள் மனம் இனிய அதிர்வை உள் வாங்கியது.


தலைமை அன்னைக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர். அன்று இரவு துர்கா உரங்க செல்லும் முன் தன் அலைப் பேசியில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு உரங்கினாள்.


 நள்ளிரவில் அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது துர்காவின் குரல். “உம் விழியின் ஒளியை இழந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உம்மையும் ஒளிமையமாக்கி, மற்றவர் வாழ்க்கையையும் ஒளிமையமாக்கிய உமக்கு கோடி நன்றி.”


பின் குறிப்பு: இன்று பிறந்தநாள் காணும் பிரெயில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரெயில் அவர்களுக்கு இந்தக் கதையைக் காணிக்கையாக்குகிறேன். உடல் மரித்தும் உயர்ந்து நிற்கும் நின் பேரும் புகழும் இன்றுபோல் என்றும் ஒளி மங்காதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.