Friday, 24 February 2023

எலும்பால் வந்த அலும்பு

                            

வயசு ஆக ஆக தான் நம்ம உயிர் வெல்லக்கட்டியா இனிக்கிறது. அதுவரை நீ உயிர் தானே ஒரு ஓரத்தில் கிட என்று கிடப்பில் போட்டுடுறோம். பெரிய பெரிய நோய் வந்தாலும் ஏதோ சளி காய்ச்சல் வந்த மாதிரி நினைச்சுகிட்டு நானெல்லாம் மழைக்கு கூட மருத்துவமனைக்கு போனதில்லன்னு கெத்து காட்டுவோம். வாழும்போது வைத்தியம் பாத்துக்காம சாகும்போது சங்கரா சங்கரான்னா சாமி கண்ண குத்தாம என்ன பண்ணும்?



சின்ன வயசுல அம்மா அப்பாக்கு டிமிக்கி கொடுத்துட்டு, அண்ணனுக்கும் அக்காக்கும் அல்வா கொடுத்துட்டு, தம்பி தங்கைக்கு டாட்டா காட்டிட்டு பல்லு விளக்காம சாப்பிடும்போது திருட்டு மாங்கா சாப்பிடுற மாதிரி ஜிவ்வுன்னு தான் இருக்கும். வளர வளர தான் தெரியும் விளைவு. சரி ரொம்ப மொக்கை போடாம விஷயத்துக்கு வரேன்.



தலைவலிக்குதுன்னு கவலையா யார் கிட்டையாவது சொன்னா தலையை கழட்டி வை சொல்லுவாங்க. ஆனா உண்மையா அதை செய்ய முடியாதே. அப்படியே செஞ்சாலும் எமன் வந்து டிக்கெட் கொடுத்து அள்ளிகிட்டு போய்டுவானே. ஆனா பல்லு வலிச்சா பல்லை கழட்டி வைக்கலாமில்லையா. அப்படி நினைச்சு அறியா புள்ள தெரியாம பல்லு கழட்டி வச்சி அப்புறம் ஐயோ பாவம் நான்னு வருத்தப்பட்டதெல்லாம் தனிக்கதை. அதுக்கப்புறம்தான் புரிஞ்சது சாகும்வரை சந்தோஷமா சாப்பிட்டுகிட்டே சாகனும்னா பல்லு வேணும்னு. கழட்டுவேனா இனி காப்பாற்றத் தான் பார்ப்பேன். காப்பாற்றியும் வந்தேன். கறியும் காயும் வளைச்சிகட்டி தின்னு தீர்த்து தீபாவளி தினம் தினம் கொண்டாடிக் கொண்டிருந்த போது என் தலையில் இடி வந்து விழுந்தது.



ஒரு சொத்தைப் பல் வாடகை தராம பல வருஷமா என் வாய் வீட்டுக்குள்ள குடியிருந்துச்சு. சரி இருந்து தொலைன்னு விட்டுட்டேன். அதுவும் எனக்கு எந்த தொந்தரவும் தராம இருந்துச்சு. நானும் அதை கண்டுக்காம இருந்துட்டேன். என்னோடு வாழ்ந்து போரடிச்சிருக்கும் போல ரத்து கேட்டு தொல்லை பண்ணுச்சு. நானும் எவ்வளவோ சமாதானம் செஞ்சுப்பார்த்தேன்.. மலையிறங்கமாட்டேன்னு முரண்டு பிடிச்சிச்சு. போய் தொலையட்டும் நாமளாவது நிம்மதியா சாப்பிடலாம்னு ரத்து கொடுக்க முடிவு பண்ணி டாக்டர்கிட்ட போனேன். அவங்களும் அப்படி கொஞ்சம் இப்படி கொஞ்சம் ஆட்டிப்பார்த்தாங்க. பாவி பல்லு பாசத்துல வரமாட்டேன்னு பாதியில விவகாரம் பண்ணுச்சு. இவளோடான உன் வாழ்க்கை முடிஞ்சது முடிஞ்சதுதான்னு ஒருவழியா வெளிய இழுத்து தள்ளிட்டாங்க. தள்ளினது மட்டுமில்லாம உங்க பொண்ணு வாயிலிருந்து முழுசா வந்திருக்கும் பல்லைப் பாருங்கன்னு வசனம் வேற. கூடவே வாழ்ந்த பல்லுக்கு பல்லை இளிச்சுகிட்டே கடைசியா டாட்டா காட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். காயம் கொஞ்சம் அதிகம். ஆற கொஞ்சம் லேட் ஆகும் சொன்னாங்க. கொடுத்த மாத்திரை எல்லாம் விழுங்கினேன். ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சது.



ரொம்ப யோசிச்சு ஆராய்ச்சி பண்ணதுக்கு பிறகுதான் புரிஞ்சது போன பல்லு அந்த எலும்பையும் சேர்த்து உடைக்க வெச்சு என்னைப் பழி வாங்கிடுச்சுன்னு. சதிகார பல்லுக்கு சாபம் கொடுத்து சந்தோஷப்பட்டாலும் உண்மையாவே பயம் கோபம் அழுகையெல்லாம் போட்டிப்போட்டுட்டு வந்துச்சு. வலி ஒரு துளி கூட இல்லை. ஆனா எலும்பு தெரியிதே. சரியாகிடும்னு மூளை சொன்னாலும் மனசு கேட்கல. சாப்பிட கஷ்டப்பட்டேன். மெதுவா சாப்பிடுவேன். பிடிச்சதைக் கூட சாப்பிட பயமா இருக்கும். ஒரு வாரத்துக்குள்ள ஒரு வழியாகி எல்லார்கிட்டையும் சொல்லி சொல்லி அவங்களையும் பயம்காட்டி படுத்தி எடுத்தேன். இதுக்கு மேல தாங்காதுன்னு வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போனேன். அந்த டாக்டரும் நல்லா செக் பண்ணிப் பார்த்துட்டு எலும்புதான் உடைஞ்சிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருப்பாங்க அதான் இப்படி. காயம் இருக்கு. ஆறினதுக்கு பிறகு கூடிடும்னு சொன்னாரு. நம்பிக்கை இல்லைனா எக்ஸ்ரே எடுத்துக்க சொன்னாரு. அவர் மேல இருந்த நம்பிக்கையில் எக்ஸ்ரேலாம் எடுக்கல. பார்க்கலாம் கொஞ்சநாள் நினைச்சு வந்துட்டேன்.



நாட்கள் தான் கடந்ததே தவற எலும்பு இருந்த இடத்தைவிட்டு நகரல. சட்டமா சம்மணமிட்டு உட்கார்ந்துகுச்சு. நான் புது வேலைல சேரவேண்டிய நாள் நெருங்குச்சு. அது என்ன வேலைன்னு அப்புறம் தனியா சொல்லுறேன். வீட்ல மெதுவா சாப்பிடலாம். ஆஃபீஸ்ல சாப்பிட முடியுமா? சேருற நாளை தள்ளிப்போட மேனேஜர்கிட்ட கேட்டபோது வாய்ப்பில்ல சொல்லிட்டாரு. ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்துட்டாங்க எல்லாருக்கும்தான். இது போதுமே. அந்த கவலை முடிஞ்சது.



சாப்பாட்டைத் தவிற எதுவும் சாப்பிடமாட்டேன். அதுவும் சாப்பிட்டாகனும்னு கட்டாயத்துக்காக சாப்பிடுவேன். பிடிச்ச ஸ்னாக்ஸ் வீட்ல இருந்தும் ஒரு வாய் வெக்கமாட்டேன். கடைசிவரை நாம இப்படியே இருந்துடுவோமான்னு அழுவேன். பொத்தி பொத்தி பாதுகாத்தேன். கை கால்ல சாதாரண காயம்னா பரவாயில்லை விட்டுடுவேன். தோல் பிதுங்கினாலும் சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கும். முன்ன பின்ன எலும்பு முரிஞ்சியிருந்தாதானே தெரியும் பயப்படக்கூடாதுன்னு. பிடிச்சதை சாப்பிட முடியாத வருத்தம்தான் உண்மையாவே பெருசா தெரிஞ்சது. என்னடா இவ இப்படியே பேசுறான்னு நினைக்கலாம். ஆனா நோயாளிகளுக்கு மட்டுமே தெரியும் இந்த வருத்தம். சர்க்கரை, உப்பு, மிளகாய் எல்லாம் இருக்கு உங்களுக்கு. இனிமே இதையெல்லாம் சாப்பிடாதிங்கன்னு ஒரு பெரிய பட்டியல் தருவாங்களே. பாவம் மத்தவங்களுக்காகவும் தான் உயிர் வாழவும் சாப்பிடாம இருந்தாலும் மனசுக்குள்ள கண்டிப்பா பெரிய வலி இருக்கும். நல்லவேளை எனக்கு எப்பவும் அந்த பிரச்சனையெல்லாம் இருந்ததில்லை. அதுக்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லனும். சரி வழக்கம்போல டுவிஸ்டுக்கு வருவோம்.



இப்படியே இருந்தா வேலைக்காகாதுன்னு பல்லு எடுத்த டாக்டர்கிட்டையே காட்டலாம்னு அப்பாயின்மென்ட் கேட்டேன். மூனு நாள் ஆகும்னு சொன்னாங்க. சரி வெயிட் பண்ணலாம் வேற வழியில்லன்னு விட்டுட்டேன். அன்னைக்குன்னு பார்த்து பல்லு இருந்த இடத்துமேல ரொம்ப ஆசை வந்துச்சு. எலும்பை தொட்டு தொட்டு பார்த்தேன். வெட்கப்பட்டுகிட்டு பொசுக்குன்னு என் மடியில வந்து விழுந்துடுச்சு. அட கடங்கார எலும்பே! இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதுவேறயா? பகீர்னு இருந்துச்சு. இரத்தம் வேற லைட்டா வர மாதிரி தெரிஞ்சிச்சு. பயம் கிலோ கணக்குல ஏறுது. அம்மாவை கூப்பிட்டு காட்டினேன். அவங்களுக்கும் பாவம் ஒன்னும் புரியல. அப்பவும் ஒரு வலி இல்ல. இதுக்கு முன்னாடி போன வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு போனோம்.



அவரும் அன்பா விசாரிச்சாரு எலும்பு கூடிடுச்சா கேட்டாரு. இல்லை சொன்னேன். செக் பண்ணிப் பார்த்துட்டு சரியாகிடுச்சேன்னு சொன்னாரு. அப்போதான் அதை காட்டினோம். எதை?



உடைஞ்ச எலும்பை பேப்பர்ல மடிச்சு எடுத்துட்டு வந்ததை. அட இம்சை புடிச்சதுகளா எங்கயிருந்துதான் கிளம்பி வருவீங்களோன்னு எங்களை டாக்டர் மனசுக்குள்ள வறுத்தெடுத்துகிட்டு வெளிய கொஞ்சமா பொறுமையா சொன்னாரு. ஏம்மா இது ஒரு வேலைன்னு எடுத்துட்டு வந்திருக்கீங்களே தூக்கிப்போட்டுட்டு வேற வேலையைப் பாருங்க. இது தேவையில்லாத எலும்பு. காயம் ஆறி எலும்பு கூடிடுச்சு. விட்டுருந்தா அதுவே உதிர்ந்திருக்கும். இதை போய் பெருசு பண்ணிகிட்டு. சொன்னாரு. பயமா இருந்துச்சு சொன்னேன். எதுக்கு பயம்னு கேட்டுட்டு மருத்துவபாணியில் எனக்கு புரியிற மாதிரி விளக்கி சொன்னாரு. மறுபடியும் செக் பண்ணிட்டு ஒட்டியிருந்த கொஞ்ச எலும்பையும் எடுத்துவிட்டுட்டாரு.



உடம்பை அதன் போக்குல விட்டுடுங்க செய்ய வேண்டியதை அதுவே செஞ்சிக்கும். கூட வேண்டிய எலும்பெல்லாம் கூடியாச்சு. இது தேவையற்ற மிச்ச எலும்பு. அதான் உடைஞ்சிடுச்சுன்னு சொன்னாரு. வலியிருந்தாதான் கவலைப்படணும் வலியில்லாதவரை எதைப்பற்றியும் கவலைப்படாதீங்கன்னு சொன்னாரு.


நன்றி சொல்லிட்டு வந்துட்டோம். ஆனா அந்த டாக்டர் குணமும் பேச்சும் மனசுக்குள்ள பசுமையா தங்கிடுச்சு. அவருக்காகதான் இந்த பதிவை போடுறேன். அவர் பேர் தெரியாது இன்னமும். அந்த மருத்துவமனை பேர் போட்டு தான் சேவ் பண்ணி வெச்சுருக்கேன். தங்கமான மனுஷர். எவ்வளவு பொறுமையா கணிவா விளக்கிச் சொன்னாரு. மருத்துவரின் முக்கிய பண்பே இதுதானே. பேஷண்ட்கிட்ட புரியாத பாஷைல பேசிட்டு. தெரியாத நோய் பேரை சொல்லி பயப்படுத்தாம வேண்டியதை மட்டும் செஞ்சு கொடுக்குற டாக்டர்களைத் தான் மக்கள் எதிர்பார்ப்பது. அந்த டாக்டரின் கருணை மனசுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. வளமும் நலமும் பெற்று நன்றாக நீடூழி வாழட்டும் அவர்.



இப்படித்தான் நம்ம வாழ்க்கைல சில வினோத நிகழ்வுகளையும் வித்தியாசமான மனிதர்களையும் கடந்து வறோமில்ல? நிகழ்வும் நிகழ்வுக்கு சொந்தமானவங்களும் நினைவுகளா மனசுக்குள்ள தங்கிடுறாங்க. நினைத்தாலே இனிக்கும் பொக்கிஷங்கள் இவை. இந்த டாக்டருக்கு 5 ஸ்டார்ஸ் ரேட்டிங்ஸ் கொடுக்கலாம். இவர் போன்ற அன்பான மனிதர்கள் இந்த உலகத்துல இருக்கும்வரை அபியின் அலும்புக்கும் குறும்புக்கும் அளவே இருக்காது.             

3 comments:

  1. Brilliant piece of writing. பழகு தமிழில் எழுதப்பட்ட பக்காவான அனுபவ பதிவு. Keep rocking.

    ReplyDelete
  2. அபி நீங்க சொல்லிட்டு வரும் போதே தெரிஞ்சுடுச்சு....இது தேவையில்லாத எலும்புன்னு!! ஆனா நமக்கு முதல் தடவை அது பயமாகத்தான் இருக்கும்.

    பல்லுபுராணம் கஷ்டத்தையும் சுகமாக சுவையாக எழுதிட்டீங்க

    சில மருத்துவர்கள் ரொம்ப நல்லா பொறுமையா கவனிப்பாங்க அதுதானே முக்கியம் இல்லையா...உங்களைப் பார்த்த மருத்துவரும் நல்ல மருத்துவர்..

    கீதா

    ReplyDelete
  3. Brilliant best wishes
    Vidya

    ReplyDelete