”போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ? உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்.” “தம்பி போன ஜென்மத்துல நீ செய்த புண்ணியம். உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு.” “ அத்தான், ஏழேழு பிறவிக்கும் நாமே கணவன் மனைவியா இருக்கணும்.” “அம்மா அடுத்த ஜென்மத்துலையும் நானே உன் மகனா பிறக்கணும்.”
இப்படி ஜென்மம் என்ற வார்த்தையும், அதைப் பற்றிய நினைவுகளும் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முந்தைய ஜென்மங்களில் என்னவாக இருந்திருப்போம் என்று தெரியாதபோதே அன்றாட நிகழ்வுகளுடன் ஜென்மங்களை பொருத்திப்பார்த்து சிலாகித்துக்கொள்கிறோம். முன் ஜென்ம நினைவுகள் வந்துவிட்டால்? நல்லவை நடந்திருந்து, நல்ல நினைவுகலிருந்தால் வாழ்க்கை மேலும் ஜெகஜோதியாக இருக்கும். துக்கமும் நிராசையும் இருந்திருந்தால்? வாழ்க்கை அதோகதிதான்!
கவிஞர் கண்ணதாசனுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் கறி குழம்பைப் போன்றது. புலமை மிக்கவர்களால் மட்டுமே படிக்கக்கூடியது. ஏழை வீட்டில் எப்போதும் கறி வேகுமா? அதனால்தான் நம் கவிஞர் கண்ணதாசன் கறி குழம்பின் உப்பு, புளி, காரம் குறையாமல், அதே சுவையில் ஏழை வீட்டின் ரசிகையான ரசமாக மாற்றிக்கொடுத்திருக்கிறார். பாமரன் வீட்டிலும் பாட்டு ஒலிக்குதென்றால் அதற்கு காரணம் கண்ணதாசனே!
பிறவி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது பெருங்கவியைப் பற்றி என்ன பேச்சு? காரணம் இருக்கிறதே! சரசுவின் சௌந்தரிய லஹரி என்ற புத்தகத்தின் ஆசிரியர் கண்ணதாசனாயிற்றே! காலையில் கடவுள் பஜனையும், மாலையில் நாத்திகப் பிரச்சாரமும் செய்யக்கூடிய ஒரே கவிஞர் அவரன்றி வேறு யாரு?
கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா, கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்ற பாடலை எழுதியதும் அவர்தான். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று கடவுளைச் செல்லமாக சாடி எழுதியதும் அவர் கைகள்தான். இந்த முரண்பாட்டையும் ரசிக்கவைத்தது இவரின் முத்தமிழ். சரசுவின் சௌந்தர்ய லஹரியை ஆத்திகனாக இருந்தபோது எழுதியிருக்கிறார்.
வடநாட்டில் ஒரு சிறுவனுக்கும், இளம் பெண்ணிற்கும் பூர்வஜென்ம நினைவுகள் வந்ததாக படித்தவர், தனக்கும் அப்படிமுன் ஜென்ம நினைவு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததன் விளைவே இந்நாவல். இதைப்போலவே இன்னொரு கதையும் எழுதியிருக்கிறார். இந்தக் கதை தினமணிகதிர் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கிறது.
தத்துவக் கதையாகவும் இல்லாமல், பகவத்கீதையின் முறையையும் கையாளாமல், ஒரு பிறவிக்கும் இன்னொரு பிறவிக்கும் இடையிலிருக்கும் ஜாடைகளையும் பின்பற்றாமல், தமிழ் ரசிகர்களுக்கு சுவையூட்டும் வகையில் மட்டுமே இந்தக் கதையை எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் ஒரு ராகத்தின் பெயரை வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு ஒரு சில அத்தியாயங்களுக்கு ஒரே பெயர் வைத்து நம்மைச் சோதித்திருக்கிறார்.
படித்துவிட்டு அந்தக் குறிப்பிட்ட நோக்கத்தைக் கண்டுபிடியுங்களேன்! ஒரு புத்தகம் எழுதும்வரைதான் எழுத்தாளருக்குச் சொந்தம். எழுதி வெளியிட்டபின், அதன் வெற்றியும் தோல்வியும் வாசகர்களுக்குச் சொந்தம் என்ற வாக்கியத்திற்கிணங்க, இந்தக் கதையின் போக்கு சரியா தவறா என்பதை படிப்பவர்களிடமே விட்டுவிட்டார்.
இந்தக் கதையின் நாயகி சரசுவின் சந்தோஷமே சௌந்தர்யலஹரிதான். அவளுக்கு மிக பிடித்த, அதிகம் பயன்படுத்தக்கூடிய வார்த்தை கிருஷ்ணா கிருஷ்ணா என்பதுதான். இயல்பான ஆசைகள் அனைத்தையும் துறந்து இறைவனிடம் சரண்புகுந்திருக்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் பெற்றோருக்கு வேதனையாக இருந்தது. இளையவர்கள் 10 பேர் கூடி அரட்டையடிக்கும் இடத்தில் ஒரு முதியவர் வந்து அமர்ந்துகொள்ளும்போது ஏற்படுமே ஒரு சங்கடம், அத்தகைய சங்கடத்தைத்தான் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள் சரசு.
எப்போதடா இல்லறத்தின் இனிமையை அனுபவிப்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தங்கையை மேலும் கஷ்டப்படுத்தாமல், பிடிவாதமாக பெற்றோரிடம் சண்டையிட்டு திருமணத்தை நடத்திவைத்துவிட்டாள். அண்ணன் அண்ணியை பார்க்க வந்த மாப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான ஜெயச்சந்திரன் அவர்களைக் கொடைக்கானலுக்கு அழைக்க, சரசுவையும் உடனழைத்துச்செல்ல விரும்பினர். முதலில் மறுத்த சரசு கோவில்களைப் பார்க்கலாம் என்றதும் கிளம்பிவிட்டாள்.
கொடைக்கானலுக்கு சென்றவர்கள் சாது சன்யாசினியான சாரதாம்மையாரின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சித்தம் கலங்காமல் வீடு போய் சேர்ந்தால் போதும் என்றெண்ணி போன அவசரத்தில் வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இதற்குமேலும் அக்காவை தனியே விட விரும்பாத பாமா சரசுவையும் அவள் பெற்றோரையும் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினாள்.
சரசுவைப்போலவே கடவுள் பக்தி கொண்ட தணிகைவேலன் என்றவனை திருமணம் செய்துவைத்தனர். கணவனுக்கு ஏதோ தீராத நோயிருப்பது தெரிந்தும், தனக்கு விதித்தது இவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு சரசு சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள். 4, 5 மாதங்கள் கடந்தநிலையில்தான் அவளுக்கு தன் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வரத்தொடங்கியது.
கணவனையும் மாமியாரையும் சமயபுரத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும் அழைத்துச் சென்ற சரசு, 12 நூற்றாண்டிற்கு முன்பு தானொரு தாசி மகள் அபரஞ்சியாக பிறந்தாலும் உத்தமப்பெண்ணாக வளர்ந்ததையும், தன்னைத் தொட்ட முதல் ஆடவனான வணிகன் நவகோடியையே கணவனாக ஏற்று காதல் வாழ்க்கை வாழ்ந்ததையும், இது பிடிக்காத அவள் தாய் சிங்காரவடிவு அபரஞ்சியை அரசரின் உடமையாக்கியதையும், இளவரசன் தான் இறைஞ்சிக்கேட்டதையும் பொருட்படுத்தாமல் இழிசெயல் செய்ததையும், துர்கையின் ஆயுதத்தால் தன்னை மாய்த்துக்கொண்டு, தானில்லாத உலகில் வாழ விரும்பாத நவகோடி தன்னுடன் மரித்ததையும் நினைவுகூர்ந்தாள். அதன்பின் அபரஞ்சி மேட்டைத் தோண்டி, அபரஞ்சியின் நகைகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள்.
அடுத்து, கோபிச்செட்டிப்பாளையம் நோக்கி செல்லும் சரசு குடும்பத்தோடு நாமும் பயணிப்போம். ஊரைத் தாண்டியுள்ள ஒரு மலைப் பிரதேசத்தில் கார் நின்றதும் அங்கிருந்த ஏரியைப் பார்த்தாள் சரசு. அவள் சிந்தனை 600 ஆண்டுகள் முன் நோக்கிச் சென்றது. கொங்குநாட்டைப் பல்வேறு மன்னர்கள் ஆண்ட சமயமது. அந்த ஏரிக்கரைக்கு பக்கத்திலிருக்கும் பண்ணாரிமேட்டுப்பட்டி பஞ்சாயத்து சபைத் தலைவர் பார்த்திபனாருக்கும் அவரின் முதல் தாரமான அன்னபூரணிக்கும் மூத்த மகளாகப் பிறந்தாள் தங்கம்.
அழகுப் பதுமையாய் வளரும் வஞ்சிக்கொடியின் வயது ஏற ஏற, விவாகம் நடக்க வேண்டுமே என்ற வருத்தத்திற்கு உட்பட்டாள் அன்னை அன்னபூரணி. அதைப்பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அவள் கணவர் பார்த்திபனாரும் இரண்டாம் தாரமான மகேஷ்வரியும், அவர்கள் மகள் பொற்கொடிக்கு வணிகன் அரசநாராயணனை நிச்சயித்தனர்.
இந்தக் கொடுமையைக் காணப் பிடிக்காமல் தங்கத்தின் குடும்பத்தார் அன்னபூரணியின் தங்கையான தெய்வநாயகி வீடிருக்கும் ராயகௌண்டன்பட்டிக்கு சென்றனர். பாவம் அவர்களுக்கென்ன தெரியும். அதுதான் அரசநாராயணனின் ஊரென்று. புரவியில் வரும்போது பார்த்துவிட்ட தங்கத்தைத்தான் திருமணம் செய்வேனென்று பொற்கொடியுடனான திருமணத்தை நிறுத்தி, குறித்த முகூர்த்தத்தில் தங்கத்தின் கழுத்தில் தாலிகட்டிவிட்டான் அரசநாராயணன்.
பார்த்திபனார் பஞ்சாயத்தைக் கூட்டினார். தாயின் அறிவுரைப்படி தங்கம் தான் வயது வந்தவள் என்றும், தானே மனமுவந்து மணம்புரிந்துகொண்டதாக சொல்லிவிட, பஞ்சாயத்து பொடிப்பொடியானது. மரணத்தருவாயிலிருந்த மனைவி அன்னபூரணியைக் கண்டுகொள்ளாமல் பார்த்திபனார் வந்தவழியே திரும்பிவிட்டார். தாயைப் பறிகொடுத்த தங்கம் தன் கணவனுடனும், உடன்பிறந்தோருடனும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றபோது, பார்த்திபனார் ஆட்களின் கைவண்ணத்தில் கத்திக்குத்து பெற்றான் அரசநாராயணன்.
உயிர் பிழைத்துக்கொண்டவன் விட்டுவிடுவானா பார்த்திபனை? 12ஆம் நாளே கொன்று குவித்துவிட்டான். அக்கா மகேஷ்வரியின் கோலத்திற்குப் பழிவாங்க படையெடுத்தான் சித்திரன். அனைத்துக் காவலர்களையும் கொன்றுவிட்டு, அரசநாராயணனைக் கட்டிப்போட்டுவிட்டு, அவன் கண் முன்னே தங்கத்தை சிதிலப்படுத்திக் கத்தியால் குத்திக்கொன்றான்.
நினைவிலிருந்து மீண்ட சரசு, இப்போது மணந்திருக்கும் தணிகைவேலந்தான் போனஜென்மத்தில் அவளைச் சீரழித்தச் சித்திரன் என்று கூறி, அவனுடன் வாழ விருப்பமில்லை என்று திட்டிவிட்டுத் தன் கிராமத்திற்குப் புறப்பட்டாள். தங்கை பாமா கொடைக்கானலுக்குச் சென்றதை அறிந்ததும், கோபிச்செட்டிப்பாளையம் போய் அரசநாராயணனை பார்க்க விரும்பினாள்.
சாரதாம்பாளின் உபயத்தில் தங்கையின் கணவன் ராஜேந்திரந்தான் அரசநாராயணனென்றும், அவர் தம்பி ஜெயச்சந்திரந்தான் நவகோடி என்றும் தெரிந்துகொண்டாள் சரசு. அதுதான் அவள் வாழ்க்கை அதோகதியாவதற்கான முதல்படி. பின் படிப்படியாக என்ன நடந்திருக்கும் என்பதை படித்தே தெரிந்துகொள்ளுங்கள்.
பொழுதுபோக்கிற்காக இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் அவ்வளவே. ஏழேழு ஜென்மத்திலும் பெண்களுக்குத் துன்பங்கள்தான் நேரிடும் என்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது இக்கதை. முதலிரண்டு ஜென்மங்களில் துன்பங்கள் நேர்ந்திருந்தாலும், நிகழ்ஜென்மத்தில் சந்தோஷமாக வாழ்வதைப்போல படைத்திருக்கலாம்.
ஆண்மீகரீதியில் செல்லவேண்டும் என்பதற்காகவும், அவர் சொன்னபடி தமிழ் ரசிகர்களுக்குச் சுவையூட்டும்படி எழுதவேண்டும் என்பதற்காகவும், நிகழ்ஜென்மத்திலும் துயரங்களை எதிர்கொள்ளும் பெண்ணாக சித்தரித்திருக்கிறார். எல்லா காலங்களிலும் இப்படியும் சில ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்ன செய்வது! இந்தக் கதையிலிருந்து இன்னொரு விஷயமும் புரிகிறது. பக்தர்கள் தன்னிடம் சரண்புக கடவுள் கையாளும் யுக்தி கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என்று!
கண்ணதாசன் அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரத்தால் பக்திப் பற்றிய என் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்கிறேன். ஒரு விஷயத்தை அளவுக்கு மீறி நேசிக்கும்போதும், அதைப் பற்றியே யோசிக்கும்போதும், அது நம்மை அடிமைப்படுத்தி ஆட்கொண்டுவிடுகிறது. பக்தியும் அப்படியே. அதன் அளவை மீறும்போது அடுத்தவரைப் பாதித்துவிடுகிறது.
உரக்கப்பாடி சாமி கும்பிடும் சத்தமும், சாமியாடவைத்து குறிகேட்கும் சத்தமும் சுற்றுப்புறத்தை பாதிக்கும் என்ற எண்ணம் இன்றுவரை வந்தபாடில்லை. தோணும்போது ஆலயம் தொழுது, காசு இருப்பின் கற்பூரம் காட்டி, ஆசைப்பட்டால் அர்ச்சனை செய்து, வசதியிருந்தால் பசித்தவனுக்கு பிரசாதம் தருவதே போதுமான பக்தி! இதுவே பாமரனின் பக்தி. தங்கநகைப் பூட்டி, வெள்ளிவேல் சாற்றி, வேண்டுதல் பெயரில் வியாபாரம் செய்வது பணக்காரன் தன் பாவங்களைக் கரைக்கக் கையாளும் யுக்தி.
இப்போது பாமரனும் சரி, பணக்காரனும் சரி. பக்தியைவிட யுக்தியைத்தான் விரும்பிச் செய்கின்றனர். கண் போன்ற கல்விக்குச் செலவழிக்க மனமில்லாமல், கடன் வாங்கியேனும் காளியம்மன் வேண்டுதல் கணக்கை முடிக்க நினைக்கின்றனர்.
பக்திக்கும் பூர்வஜென்ம ஞாபகத்திற்கும் என்ன தொடர்பு? இரண்டுமே நம்பிக்கை தான். நிரூபிக்கப்பட்ட உண்மை இல்லை. இந்தப் புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், பூர்வஜென்ம ஞாபகங்களால் வரும் இடையூறுகள் ஆன்மிகரீதியில் எதிர்கொள்ளப்படுகிறதே அன்றி அறிவியல்பூர்வமாக அல்ல!
நூற்றில் ஒரு வாய்ப்பாக பூர்வஜென்ம ஞாபகங்கள் உண்மையாக வருமேயானால், சரசுவை போல சௌந்தர்ய லஹரி பாடிக்கொண்டு சாரதாம்மையாரின் பின்னால் போகாமல், சாதாரணப் பெண்ணாய் மனநல மருத்துவரை அணுகி அறிவுப்பூர்வமாக செயற்பட்டால், சிக்கல்களைப் பதமாய் நீக்கி வாழ்வைச் சீராக வைத்துக்கொள்ளலாம்.
கடவுளை கம்ளைண்ட் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கும் காவலதிகாரியாகப் பார்க்காமல், கைக்குலுக்கும் நண்பனாக நாம் எப்போது நினைக்கப்போகிறோம்? பக்தி என்பது பார்வைக்கு எட்டாத பரமாத்மாவிற்கு படையல் போடுவது மட்டுமல்ல. பக்தி என்றால் நேசம்.
தேசத்தை நேசிப்பவர்களை தேசபக்தர்கள் என்றுதானே சொல்கிறோம். இறைவனைப் போல, இறைவனைவிடவும் அதிகமாக இதயங்களை நேசிப்போம். ஆண் பெண்ணையும், பெண் ஆணையும், பெற்றோர் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும், மாணவர்கள் ஆசிரியர்களையும் பக்தி செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏழைத்தொழிலாளிகளை பணக்கார முதலாளிகள் பக்தி செய்தால், ஏற்ற தாழ்வுகள் ஓடிவிடும். வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடும்.
மனிதம் மலர்ந்திருக்கும் மனமெல்லாம் மாதவன் வாழும் ஆலயமென்று நான் மட்டும் சொல்லவில்லை. தன் வரிகளின் சுழலுக்குள் நிரந்தரமாய் சிக்கவைத்துச் சென்ற கவிஞர் கண்ணதாசனே சொல்லியிருக்கிறாரே!
இதோ இப்படி!
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும்போது பணிவு கொண்டாள் உயிர்கள் உன்னை வணங்கும்.
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.
அன்பு நன்றி கருணைக் கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்.
இதில் மிருகம் என்பது கள்ளமனம். உயர் தெய்வம் என்பது பிள்ளைமனம். இந்த ஆறு கட்டளை அறிந்தமனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.
ஆம்! ஆறு கட்டளை அறிந்தமனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.