Sunday 19 July 2020

கடவுளின் பிரதிநிதி.


1.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்டுவரும் அந்த இல்லம் காலைப் பரபரப்பில் இருந்தது.

பெற்றோரை இழந்தவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சுமார் 15 பிள்ளைகள் இருந்தனர். அங்குப் பணிபுரியும் தாமரை என்ற பெண்மணி மணியடித்து அனைவரையும் காலை உணவு உண்ண அழைத்தாள். உணவு உண்ணும் முன்பு அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்காக வரிசையில் நின்றனர். நிர்வாகியான ஷெண்பகம் அங்கு வர, அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பிரார்த்தனை தொடங்கப்பட்டது.

கடவுளே, நாங்கள் சாப்பிடப்போகும் இந்த வேளையில், எத்தனையோ பேர் இந்த உணவு கூடக் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். எங்களுக்காக இன்றைய உணவை அளித்தமைக்கு நன்றி. எங்களைப்போலவே இருக்கும் அனைத்து ஆதரவற்ற மனிதர்களுக்கும், உணவு, உடை, உறைவிடம், படிப்பு ஆகியவை கிடைக்க அருள்புரிவீராக.”

 பிரார்த்தனை முடிந்ததும் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களின் முகங்களில் உணவு உண்ணப்போகும் மகிழ்ச்சி இல்லை. உள்ளத்தில் அமைதி இல்லை. அழத்துடிக்கும் இதழ்களை ஷெண்பகத்தின் அதட்டலுக்காக கட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர். ஷெண்பகம் மிகவும் அன்பான பெண்மணிதான். ஆனால் ஈடு செய்யமுடியா இழப்பிற்கு என்ன செய்வது. அதோடு அழுதழுது இவர்களுக்கும் ஏதாவது ஆகிவிட்டால்? அதனாலேயே அவர்களை மிரட்ட வேண்டியதாயிற்று. அவர்களின் இந்த தாளமுடியா துயரத்திற்குக் காரணம் முகிலன்!

    முகிலனும் ஷெண்பகமும் உடன்பிறந்தவர்கள். முகிலன் தன் படிப்பை முடித்துவிட்டு சுயதொழில் பார்த்துக்கொண்டேஆதரவற்ற  குழந்தைகளுக்காக இந்த இல்லத்தை நடத்தி வந்தார்.

ஷெண்பகம் அவருக்கு ஐந்து வயது இளையவள். திருமணமாகி இதே சென்னையில்தான் வசிக்கிறாள். முகிலனுக்கு ஏனோ திருமணம் கூடவில்லை. அதற்குக் காரணமும் அவர்தான். இந்தக் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைக்க வேண்டும். திருமணத்திற்கு பின் குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதிக்க, அப்படிப்பட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட்டப் பெண் அவருக்கு நாற்பது வயதுவரை கிடைக்கவே இல்லை. அதன்பின் அவருக்கு அதில் விருப்பமில்லாமல் போய்விட்டது.

பெற்றோரைப் பார்த்தறியாத அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு முகிலன்தான்  அம்மா அப்பா. அவர்மேல் உயிரையே வைத்திருந்தனர். அவர் அந்த இல்லத்தை நெருங்கும்போதே அப்பா என்று ஓடி வந்துக் கட்டிக்கொள்வார்கள்.

 ஐம்பது வயதைக் கடந்திருந்த அவர் ஒரு வாரத்திற்கு முன்பு விஷக்காய்ச்சலில் இறந்துவிட்டார்.  அவர் தங்கை ஷெண்பகத்தை அழைத்து இல்லத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

அவர்களின் உயிருக்குயிரான அப்பாவை நினைத்து அழும் குழந்தைகளை என்ன சொல்லித் தேற்றுவது? உணவை முடித்துக்கொண்டு அனைவரும் படிக்கும் அறைக்குச் சென்றனர். அவர்களின் செல்ல அக்கா தமிழழகி வந்தாள். அவளைப் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினர்.

2.

   தமிழழகி முகிலனின் நண்பன் மகள். அவள் வாரத்திற்கு ஒருநாள் இங்கே வந்துவிட்டுச் செல்வாள். அப்படி வரும்போதெல்லாம் குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டோடும். அவளும் குழந்தைப்போல அவர்களுடன் விளையாடுவாள். பாடம் சொல்லிக்கொடுப்பாள். குழந்தைகள் அந்த வாரம் நடந்த அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துகொள்வார்கள். அவளும் சலிக்காமல் கேட்டுக்கொண்டு அவர்களை மகிழ்விப்பாள். முகிலனின் இறப்பு அவளையும் பெருமளவு பாதித்தது.  ஒரு வாரமாக அவள் தினமும் வருகிறாள்.

“அழாதீங்கடா! அப்பா உங்களோடுதான் இருக்கார். நீங்க அழுதா அவர் வருத்தப்படுவார்.” “இல்லை அக்கா. எங்களுக்கு யாருமில்லை. அப்பா இல்லை அம்மா இல்லை. எங்களை யாருக்கும் பிடிக்காது அக்கா.” என்று மனதின் ஏக்கமெல்லாம் கண்ணில் தேக்கிச் சொன்னது ஓர் ரோஜாமலர்.குழந்தைகள்  அவள் மடியில் படுத்துக்கொண்டு அழுது கரைந்தனர். “இல்லைடா அப்படிச் சொல்லக்கூடாது. நீங்க கடவுளோட குழந்தைங்க. அப்பா அப்படிச் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார் இல்லையா?” “அப்பா எங்கள வித்து போச்சு. நான் அப்பதிதான் சொல்லுவேன்!” என்றது மூன்று வயதுச் சிறுமி.

“இல்லை அக்கா நாங்க அப்படிச் சொல்லமாட்டோம். அப்படிச் சொன்னா அப்பா அழுவார். நாங்க கண்ணைத் துடைச்சிவிடுவோம். சிரிக்கவைப்போம். இப்போ அவர் அழுதா யார் கண் துடைப்பாங்க. யார் சிரிக்கவைப்பாங்க. அதுனால நாங்க அப்படிச் சொல்லல.? என்றது மற்றொரு பட்டாம்பூச்சி. என் செல்லங்களே! என்று அவர்களை அள்ளியணைத்து அழுதுவிட்டாள்.

    அவள் எவ்வளவோ சொல்லியும் அவர்களின் அழுகை நிற்கவில்லை. விளையாட மறுத்தனர். படிக்க மறுத்தனர். அவளால் அவர்களை இப்படிப் பார்க்கமுடியவில்லை. ஒரு வாரமாக தங்களை வருத்திக்கொண்டிருக்கும் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று மனம் துடித்தது. அப்போது அவள் அலைப்பேசி ஒலித்தது. திரையில் நிலவினி என்று ஒளிர்ந்தது.

நிலவினி தமிழழகியின் உயிர் தோழி. கல்லூரியில் ஏற்பட்ட நட்பு. எது அவளைச் செலுத்தியதோ? சட்டென்று ஒரு காரியம் செய்தாள் அவள். அவள் செய்யும் வேலை ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றியமைக்கப்போகிறது என்பதை உணராமல் அந்தக் காரியத்தைச் செய்தாள்.

தொடரும்


22 comments:

  1. நல்லதொரு தொடக்கம் ஆர்வமுடன் தொடர்கிறேன் அபிநயா.
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      Delete
  2. ஆர்வமூட்டும் அருமையான தொடர்...சொல்லிச் செல்லும் விதம் அருமை...தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு நன்றி சார்.

      Delete
  3. பார்வையற்ற பாவை ஷ்யாமளா19 July, 2020 16:42

    நெடுங்கதையின் துவக்கம் என நினைக்கிறேன். எழுத்துநடை மிக அருமை. தொடரட்டும் தங்களின் படைப்பாற்றல்.

    ReplyDelete
    Replies
    1. என் அருமை பள்ளித்தோழியே மிக்க நன்றி.

      Delete
  4. சிறப்பான தொடக்கம் அபிநயா. தொடரில் இன்னும் தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete
  5. நல்லதொரு தொடக்கம்... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  6. அபி
    சிறப்பான தொடக்கம்
    வித்யா

    ReplyDelete
  7. நல்லதொரு தொடக்கம்.  தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. சுவாரசியமாகவும் உருக்கமாகவும் உள்ளது கதை அபி.
    தொடர்ந்து எழுது. தொடர்கிறோம்.

    ReplyDelete
  9. நல்ல தொடக்கம், தொடருங்கள்.

    ReplyDelete
  10. மனதைத் தொட்டுச் செல்லும் தொடக்கம். தொடர்கதையா...

    தொடர்கிறோம் அபி

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் சார் கீதா மேடம்.

      Delete