Monday, 29 March 2021

’மது கிண்ணத்தில் மங்கையின் கண்ணீர்.’

நேரம் காலை பத்தை நெருங்கிக்கொண்டிருக்க, பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள். தாய் மாலதி கொடுத்த காலை டிஃபனையும் மறுத்துவிட்டாள். அவள் ஏனென்று கேட்டதற்கு ஃப்ரன்ஸ் பார்ட்டி கொடுக்குறாங்க என்று மட்டுமே சொல்லிவிட்டு ஓடினாள். சமீபத்தில் அவள் மேற்கொண்டிருக்கும் புதிய பழக்கம் இன்னும் வேகத்தையும் ஆர்வத்தையும் கூட்ட, தன் வெளிநாட்டுக் காரில் பறந்தாள் 25 வயதே பூர்த்தியான மதுமிதா.

மதுமிதா ராஜசேகரன் மாலதியின் ஒரே பெண். அடையாரில் பிரபலமான நகை வியாபாரி என்பதாலும், பரம்பறை சொத்தே கோடி பெறும் என்பதாலும் மதுமிதாவிற்கு பணத்தைச் செலவழிப்பதெல்லாம் தண்ணிப்பட்ட பாடு. ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் செலவழித்தபோதும், அவள் கண்களில் கண்ணீரோ நெஞ்சில் வருத்தமோ என்றுமே கொண்டதில்லை. அதற்காக ராஜசேகரனும் மாலதியும் நவீன நாகரீகத்தில் ஊறியவர்கள். பெண்ணிற்கு செல்லம் கொடுத்தே சீரழித்துவிட்டனர் என்றும் சொல்லிவிடமுடியாது.

நேர்மைக்குப் பேர்போன இருவரும், தங்கள் பெண்ணும் தங்களைப் போலவே இருப்பாள் என்று தப்புக்கணக்குப் போட்டனர். அளவுக்கு மீறிய சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு, அருமைமகள் அதைத் தப்பாகப் பயன்படுத்தமாட்டாள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையைத் தூள் தூளாக்கிய மதுமிதாவின் தவறா? அல்லது அளவான சுதந்திரத்தை அளிக்காத பெற்றோரின் தவறா? இவர்களில் யார் செய்த தவறோ, ஒரு குடும்பமே அழியக் காரணமாகிவிட்டது.

மனைவி தெய்வானைக் கொடுத்த பழைய சாதத்தையும் பச்சைமிளகாயையும் அமிர்தமாய் எண்ணி உண்டுமுடித்த நாச்சிமுத்து, அவளைத் தன் அருகில் இழுத்து ரகசியமாய் ஒரு பெரிய ஆசையை வெளியிட்டுவிட்டுக் கிளம்பினார். அவர் வெளி வாசலை அடைந்ததும், அவர் பெற்ற மூன்று செல்வங்களும் வழிமறித்து மனு கொடுக்க ஆரம்பித்தனர்.

”அப்பு, நாளைக்கு காலேஜ்ல சேர அப்லிகேஷன் வாங்கப் போவோமா? தேதி முடிஞ்சிடும். அப்புறம் சீட் கிடைக்காது அப்பு. கைல கண்டிப்பா ஒரு 2000ஆவது இருக்கனும் அப்பு” என்றான் அவரின் மூத்தமகன் முத்துப்பாண்டி. கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவன் தலையை வருடி, “சரிய்யா. கண்டிப்பா போவோம்” என்றார் கட்டிட வேலை செய்யும் நாற்பது வயதைத் தாண்டிய நாச்சிமுத்து.

“அப்பு, எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்க. ஒரு 500 ரூபா தரியா? நானும் டூர் போகவா? ஆசையா இருக்கு அப்பு” என்று எதிர்பார்ப்பே உருவாய் கேட்டான் இளயமகன் துரைச்சாமி. மூத்தமகனைப்போல், அவனையும் செல்லம் கொஞ்சிவிட்டு சரி என்று ஒப்புதலளித்தார். கடைக்குட்டி மல்லிகாவோ, கோடைக்காலத்திற்கு ஏதுவாய் பலாப்பழமும் நொங்கும் கேட்க, “என் செல்லச் சர்க்கரைக்கட்டி. நீ கேட்டு நான் மாட்டேனு சொல்வேனா? கண்டிப்பா வாங்கியாரேன் என்றார் சிரிப்புடன்.

மூவரின் மனுவையும் ஏற்றுக்கொண்டு, மனைவிக்கு என்ன வேண்டும் என்பதைப்போல் அவளைத் திரும்பிப்பார்க்க, அவள் கண்களில் காதலைத் தவிர வேறெதையும் அவரால் காணமுடியவில்லை. தன் இனிய குருவிக்கூட்டைக் கண் நிறைய நிறப்பிக்கொண்டு, வேலைக்குக் கிளம்பினார் அந்தப் பாட்டாளி.

வீட்டிலிருந்து சீறிப்பாய்ந்த மதுமிதாவின் கார் ஒரு உயர்தர மதுபாணக்கடையின் முன்பு நின்றது. ஆம்! சமீபத்தில் அவளுக்கு வந்திருக்கும் புதிய பழக்கம் மது அருந்துவதுதான்! அவளுக்காகவே காத்திருந்த இரண்டு ஆண் நண்பர்களும், 3 பெண் தோழிகளும் சேர்ந்து முடிந்தமட்டும் மது அருந்திவிட்டு மதியம் 3 மணிவரை கொட்டம் அடித்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், பீச், பார்க் டிஸ்கோதே என்று இரவு பத்துமணிவரை ஊர் சுற்றிவிட்டு கடைசியாய் ஒரு ரௌண்ட் மதுவையும் அருந்திவிட்டே கடனே என்று வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குக் கிளம்பிய மதுவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லியே அனுப்பிவைத்தனர் சற்று நிதானத்திலிருந்த நண்பர்கள். என்ன பயன்? காரை எடுத்த மதுவிற்கு நேரம் செல்ல செல்ல கண்கள் சொருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல தான் நிதானமிழக்கிறோம் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி காரை ஓட்டினாள். நிதானம் முழுவதுமாய் இழப்பதற்குள் வீட்டை அடைய வேண்டுமென்று நினைத்தவள் காரை முழுவேகத்தில் பறக்கவிட்டாள்.

கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற கார் நடைபாதையருகே அப்பாவியாய் நடந்து சென்றுகொண்டிருந்தவர்மேல் முழுவீச்சில் மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதைந்து, உறுப்புகள் ஆங்காங்கே சிதறி, பூமித்தாய்க்கு உடனடி இரத்த அபிஷேகம் நடக்க, துள்ளத்துடிக்க அந்த உடலைவிட்டு வெளியேறியது உயிர் பறவை. இடிக்கப்பட்டவர் இடுகாட்டில். இடித்தவளோ காற்றுப்பையில் பத்திரமாய். கார் மோதிய அடுத்தநொடி அதிலிருந்த ஏர்பேக் வெடித்து மதுவை தனக்குள் அடைத்துக்கொண்டு வெளியே குதித்து காப்பாற்றியது.

இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட கொடூரத்தில், மதுவின் போதை முழுவதுமாய் இறங்கிவிட்டிருக்க, அதிர்ச்சியில் சற்றுநேரம்  உரைந்திருந்தவள், கணநேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவள், எதுவும் நடக்கவில்லை என்று மனதிற்குள் உறுபோட்டவாரே உறங்கிவிட்டாள். பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்ததால் அந்நேரத்தில் அவளைக் கேள்விகளால் துளைக்கவும் ஆளில்லாமல் போயிற்று.

உறங்கியவளை விதி விட்டுவிடுமா? சிசி டீவியின் உபயத்தால் அடுத்தநாள் காலையே மதுவின் ரகசியம் அம்பலமாகிவிட, தாய் தந்தையர் அவளை அடித்து துவைத்தனர். ஆனால் அழுதே பழகியிராத மதுவிற்கோ வலித்ததே தவிர, அழுகை வரவில்லை. அதற்கும் சேர்த்தே வாங்கிக்கட்டினாள்.

எவ்வளவு அடித்தும் ஆத்திரம் குறையாத ராஜசேகரன், தான் பெற்ற மகளின் மீது தானே வலிய சென்று புகார் கொடுத்துவிட்டார். தாய் மாலதியும் அதைத் தடுக்கவில்லை.  உள்ளே சென்ற மதுமிதாவோ சிறிது நாட்களிலேயே நண்பர்களின் செல்வாக்கில் வெளியே வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவளை கண்டுகொள்வாரில்லை. அவளின் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதால் வெளியே செல்லவும் வழியின்றி வீட்டு சிறையில் கைதியானாள்.

சிறைக் கைதிக்கு எதற்கு வகைதொகையான உணவு? எளிய உணவை மட்டுமே கொடுக்கும்படி வேலையாட்களுக்கு உத்தரவிட்டுவிட்டாள் மாலதி. பாலும் தயிரும், பருப்பும் நெய்யும் உண்டு பழகிய மதுவிற்கு காரசாரமான எளிய உணவு தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ததில், உணவு உண்பதையே முடிந்தவரை தவிர்க்க ஆரம்பித்தாள். இத்தனைத் துன்பத்திலும் மதுவின் கண்கள் மட்டும் நனையாமல் அப்படியே இருந்தது. அவள் தவறின் வீரியத்தை ஆழ்மனம் இன்னும் உணரவில்லை போலும்.

சிறிது நாட்கள் கழித்து ஓர் மாலை வேளையில் மதுவை பெற்றோர் அவர்களுடன் வெளியே அழைத்தனர். மறுப்பின்றி அவளும் அவர்களுடன் கிளம்பினாள். கார் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. மாலதி கதவை இரண்டுமுறை மெல்ல தட்டிவிட்டு காத்திருக்க, கதவைத் திறந்தாள் ஓர் சிறுமி. மதுவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் நின்று கொண்டனர் பெற்றவர்கள்.

உள்ளே சென்ற மது வீட்டைச் சுற்றி கண்களைச் சுழலவிட, மின்சாரம் தாக்கியதைப்போல் அதிர்ந்து நின்றாள். பயத்தில் இதயம் படபடவென்று அடித்தது. வீட்டின் ஒரு மூளையில் சட்டத்திற்குள்ளிருந்து தன் குடும்பத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் நாச்சிமுத்து. ஆம்! குருவிக்கூட்டின் தலைவனான அதே நாச்சிமுத்து! தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு, நண்பர் ஒருவரைச் சந்தித்து பிள்ளைகளின் தேவைக்காக பணம் ஏற்பாடு செய்துவிட்டு, கடைக்குட்டியான அவர் பெண் மல்லிகா கேட்ட பழங்களையும், காதல் மனைவிக்கு காதல் பரிசாய் மல்லிகைப்பூவையும் வாங்கிக்கொண்டு நிறைவான மனதுடன் வீட்டை அடைவதற்காய் நடந்து வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கோர விபத்து நடந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் வீதி விபத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, கருணையுள்ளம் கொண்ட ஓர் மனிதர் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஆம்புலன்சையும் போலீசையும் அழைத்தவர், அவர்களுடன் சேர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, நாச்சிமுத்து பர்சிலிருந்த முகவரிக்கு அவர் சடலத்தை எடுத்துச் சென்றார். விஷயத்தைக் கேட்ட அடுத்தநொடி வீடே அதிரும்படியான அழுகுரல் எழுந்தது. அன்புச் சங்கிலியின் முதல் கண்ணி அறுந்துவிட்டதே! ஆலமரத்தின் ஆணிவேர் சாய்ந்து அவர்களின் சந்தோஷத்தை அடியோடு வீழ்த்திவிட்டதே!

சடலத்தைச் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்ததெனப் புறப்படாமல், தெய்வானைக்குத் துணை நின்று இறுதிச் சடங்குகளை முடித்து, அவர்களுக்கு தன் முகவரியைக் கொடுத்துவிட்டு, உதவி வேண்டுமென்றால் தயங்காமல் அழைக்கும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கால் வயிறும் அரை வயிறுமாய் அவர்கள் நாட்களைக் கடக்க, ஒருநாள் மதுவின் பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். முதலில் கோவத்துடன் பேசிய அனைவரும், தங்களின் எதிர்காலத்தை எண்ணி பயத்தில் கதறினர். அவர்களைத் தேற்றி, தெய்வானைக்கு நல்ல சம்பளத்தில் முழுநேர வேலையும், மூத்தமகன் முத்துப்பாண்டிக்கு பகுதிநேர வேலையும் போட்டுக்கொடுத்துவிட்டு, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்ல வேண்டியதற்கான அவசியத்தையும் தைரியத்தையும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

அப்போது சென்றவர்கள்தான் இப்போது மகளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ”வாங்க ஐயா. வாங்கம்மா.” தெய்வானை அவர்களை அன்போடு உபசரித்தாள். அவர்களும் தெய்வானையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்களின் நலனை விசாரித்தவாரே உள்ளே வந்து அமர்ந்தனர். அதுதான் எளியவர்கள்! விரோதியாகவே இருந்தாலும் தங்களால் தரமுடிந்த மன்னிப்பை யாசிப்பவர்களிடம் ஒரு கட்டத்திற்குமேல் பகைமைப் பாராட்டமாட்டார்கள். வாழ்க்கையின் பின்னே ஓட சலிக்காதவர்களுக்கு பகையின் பின் ஓடுவது பெறும் சலிப்புதான். மகள் செய்த தவறுக்கு நேர்மையான பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம். அதுவுமில்லாமல் பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்துத் தன்மானத்தைச் சீண்டாமல், தாங்களே தங்கள் வாழ்வை வாழ வழிகாட்டியவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்தது.

தெய்வானையின் உபசரிப்பில் அதிர்விலிருந்து மீண்ட மதுமிதா “என்னை மன்னிச்சிடுங்க. தவறு நடந்துடுச்சு. தெரியாம செய்துட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் கல்யாண பொறுப்பை நான் ஏத்துக்குறேன்” என்றாள். அவள் பெற்றோரை இவர்களுக்கு முன்பே தெரிந்ததால் பண உதவிகள் செய்திருப்பார்கள் என்று நினைத்திருப்பாள் போலும்.

தெய்வானை சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் மௌனிக்க, அந்த இடைப்பட்ட வேளையில் முத்துப்பாண்டி மதுவிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினான். அவள் அதிர்ந்து என்ன இது? எனக் கேட்க, ”வாங்கிக்கோங்க. இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொன்னாங்க. நீங்க வருவிங்கன்னு உங்களுக்காக வாங்கி வெச்சோம். நல்ல சரக்கு. குடிங்க” என்றான். அவள் அதைக் கையில் வாங்கி வெறித்துப் பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பெற்றோரையும் தெய்வானையையும் மாறி மாறி பார்த்தாள்.

தெய்வானை மெல்ல வாய் திறந்தாள். “நீ சொன்ன படிப்பு, வேலை, கல்யாணம் இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். ஒரு பைசா செலவில்லாம செய்ய வேண்டிய விஷயத்தைச் சொல்றேன் செய்யறியாம்மா?” “சொல்லுங்க.” எங்க வீட்டுக்காரோட கடைசி ஆசையை நீ நிறைவேத்தி வைக்கனும். முடியுமா?” ”என்ன ஆசை?”

ஒரு நிமிஷம். தெய்வானை உள்ளே சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தாள். “இது என்ன தெரியுமா? நான் மணக்க மணக்க வெச்சிருக்க பச்சமொச்ச கச்ச கருவாட்டுக் குழம்பு. எங்க வீட்டுக்கார் போகும்போது. ”இந்தா புள்ள, நீ பச்சமொச்ச கச்ச கருவாட்டுக்குழம்பு வெச்சு எம்புட்டு நாளாச்சு. இன்னிக்கு வையி புள்ள. சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. நாள் முச்சூடும் மாடாட்டம் ஒழைச்சிட்டு சாயந்தரம் வந்து ஒங்கையால சோறு உங்குறது அலாதி சந்தோசம். நீ மணக்க மணக்க சோறாக்கி, மனசு நெறைய காதலோட பரிமாறனும். அதே மனசு நெறைய காதலோட உள்ளுக்குள்ள சப்புக்கொட்டி ருசிச்சாலும் வெளிய சின்ன சின்ன கொற சொல்லிகிட்டே சாப்பிடனும். ஏழைங்க நமக்கு இதவிட வேற என்ன புள்ள சந்தோஷம் இருக்கப்போகுது” என்று காதலாய் பார்த்தபடிச் சொல்ல, அந்தக் காதலுக்கு சற்றும் குறையாத காதலுடன் பார்த்தபடி. “சரிங்க செஞ்சி வெக்கறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்று விடைகொடுத்தாள்.

அவர் போனதுக்கு அப்புறம் நான் தினமும் இந்த குழம்பு செய்யறேன். அவர் சாப்பிடவே மாட்டுறார். நீ முடிஞ்சா அவரை ஒரு வாய் சாப்பிட வை. இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செஞ்சிட்டா மேலே சொன்ன மூனு விஷயத்தை செய்ய அவசியமே இருக்காது.” என்றுவிட்டு விம்மி வெடித்து அழுதாள். பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து அழ, அந்த கதறல் மதுவின் உயிரை உலுக்கியது. சிறிது சிறிதாய் மது ஊற்றி மதுமிதா வளர்த்த பாவமரம் அவர்களின் கதறல் சூறாவளியில் வேறோடு சாய்ந்தது. என்ன சொல்ல முடியும் இதற்கு மதுமிதாவால்? 

மதுமிதா அந்தக் குழம்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் அவள் அன்னை இந்த குழம்பு செய்ததும், அந்த மணம் அவளுக்கு பிடிக்காமல் தூக்கி வீசியதும் நினைவுக்கு வந்தது. வாழ்க்கை சின்ன சின்ன ஆசைகளாலும் சந்தோஷங்களாலும் நிறைந்தது. அதை அள்ளிக்கொடுக்கும் ஒரு உயிரின் இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற உண்மை அவள் மூளைக்கு ஏறி இதயத்தைத் தாக்கியது. இன்னமும் அவள் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணமும், தெய்வானை வைத்திருந்த குழம்பும் பூதாகரமாய் நின்று அவள் செய்த தவறின் முழு வீரியத்தை உணர்த்த, வாழ்க்கையில் முதல்முறையாக கண்ணீர் சிந்தினாள் மது. அவள் கண்களைத் தாண்டி சிதறிய கண்ணீர் துளிகள் மதுகிண்ணத்தில் விழுந்து மதுவோடு மதுவாய் கலந்தது.


 

6 comments:

  1. அருமை. வாழ்த்துக்கள்
    கதை தலைப்பு அற்புதம்.
    வித்யா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்

      Delete
  2. மனதைத் தொட்ட சிறுகதை. பாராட்டுகள் அபி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  3. நெகிழ்வான கதை.  முத்துபாண்டிக்கு வேலை போட்டுக் கொடுக்காமல் படிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். இன்றைய விலைவாசிக்கு ஒருவர் சம்பளம் போதுமா? நாச்சிமுத்து ஏதாவது கடன் வைத்திருந்தால்? அதையெல்லாம் தாண்டி பகுதிநேர வேலைதானே மீதி நேரத்தில் படிக்கட்டுமே. வெளியுலகத்தை எதிர்கொள்ள பொறுப்பும் தைரியமும் வரட்டுமே என்பதால்தான்

      Delete