Thursday, 3 June 2021

'மனம் புதிது'

புதிது, புதிது, புதிது, மனம் புதிது.

அதனினும் புதிது கடுகாய் சிறுத்தமனம்.

கண்ணுக்கு தெரியா மனமே,

கண்முன் நடக்கும் அநீதிகளை உள்வாங்கியும் உறங்கிக்கொண்டிருக்கும்

உன் குணம் புதிது.

உலகைஏ உலுக்கிப்போட வேண்டிய நீ

உன் சுற்றத்தின் சுகம் பேணும் நிலை புதிது.

நாள் மட்டும் புதிதல்ல

நொடிக்குநொடி உன் துடிப்பும்

புதிதென்பதை என்றுணர்வாய்.

ஆழ்மனம் அநீதியை எதிர்க்க துடிக்க

வெளிமனம் அதை வேடிக்கை பார்க்கும் விதத்தை

மாற்ற வேண்டும் என்பதை என்றுணர்வாய்.

குவலயத்தின் சுருக்கம்போல் குறுகிப்போகாமல்

விசாலமாகி விதியை மாற்றவேண்டும் என்பதை என்றுணர்வாய்.

கடுமையாய் உழைப்பவன் எவனோ

அதை எளிமையாய் கொள்ளை கொள்பவன் எவனோ.

எத்தனை பானங்கள் உலகிலிருந்தும்

உயிரை குடிப்பது ஏன்?

இனமே இனத்தை தின்பது ஏன்?

விரும்பிப்படற வேண்டிய வஞ்சிக்கொடி

வேட்டைக்கு உட்படுத்தப்படுகிறது.

மலர் மட்டுமா கசக்கப்படுகிறது

மொட்டுக்கள் கூட புசிக்கப்படுகிறது.

ஒரு ஆணை அவனிக்குக் கொடுப்பவளும் பெண்,

அவனைக் கட்டிக்கொண்டு கொண்டாடுபவளும் பெண்,

அவனைத் தந்தையாக்க தரணிக்கு வருபவளும் பெண்

இருந்தும் ஏன் இந்த தீராக்காமப்புண்

துடிப்பான பெண்ணை துடிக்கவைப்பதா ரசனை?

அழகுப்பதுமையை அழவைத்து சிரிப்பதா பெருமை?

எழுமனமே எழு.

இந்த வக்கிரங்களை வேறோடு சாய்க்க

வீறுகொண்டெழு.

அன்புக்குப் பஞ்சமுண்டு

அழிவுக்கு இட்டுச்செல்லும் லஞ்சத்திற்கு பஞ்சமில்லை

அதை வாங்கவும் கொடுக்கவும்

ஒருவரும் அஞ்சவில்லை

தலைமையில் பிழையிருந்தது அக்காலம்

தலைமையே பிழையாகிப்போனது இக்காலம்.

தலைவர்களின் கொள்கையெல்லாம் மேசைக்கு அழகூட்டும் அழகு சாதனம்.

வரவில்லை வரியுண்டு.

பணியில்லை  பரிட்சையுண்டு.

அறிவை வளர்க்க படித்தது அக்காலம்

அரக்க பறக்க படிப்பது இக்காலம்/

அம்மிக்குழவியின் தாளமும் ஆட்டுக்கல்லின் ராகமும் அழிந்தே  போனது.

குளிர்சாதனப்பெட்டியெல்லாம் குயவனுக்கு எதிரியானது.

குளீரூட்டப்பட்ட அறையெல்லாம் ஜன்னல் காற்றுக்கு ஜென்ம விரோதியானது.

துரித உணவெல்லாம் சத்துள்ள உணவை சப்பென்றாக்கிவிட்டது.

குளிர்பானங்கள் பழச்சாறை போ போ என்றது.

கடிதங்கள் குடும்பத்தின் அங்கமானது அக்காலம்.

மின்னஞ்சல் வேலைக்காரியானது இக்காலம்.

அம்மா அழைத்தால் அலட்சிய பார்வை

அலைபேசி அழைத்தால் அவசரப்பார்வை.

சில பாடல்கள் நம்மை உருகவைத்து உறையவைக்கும்.

சில பாடல்கள் நம்மை சலனப்படுத்தி சறுக்கவைக்கும்.

அறிவுக்கு தொடர்பற்ற நிகழ்ச்சிகளும் ஆபாச காட்சிகளும்

அழகு மனதை அழுகச் செய்யும்.

எழுமனமே எழு.

சீர்குலைந்திருப்பதை சீர்படுத்த

சினந்து எழு

அன்று பாப்பா விளையாட ஓடும்.

இன்று பாப்பா தொலைக்காட்சியை நாடும்.

அன்று பாப்பாவின் பிடிப்பு கல்வியில்.

இன்று பாப்பாவின் பிடிப்பு கணினியில்.

அன்று பாப்பாவுக்கு பால்புட்டி வேண்டும்.

இன்று பாப்பாவுக்கு சிரம் பேசி வேண்டும்.

அன்று பாப்பாவின் உணவு காய்கறி பழங்கள்.

இன்று பாப்பாவின் உணவு கடைவீதி பண்டங்கள்.

அன்று பாப்பாவின் முணுமுணுப்பு பாடப்பாடல்கள்.

இன்று பாப்பாவின் முணுமுணுப்பு படப்பாடல்கள்.

எழு மனமே எழு.

குழந்தை சிற்பத்தை  செதுக்க

பொங்கி எழு.

சுற்றித்திரியும் சிட்டுக்குருவி  எங்கே?

பட்டுப்பூச்சி தோட்டத்தில் உலவும் காட்சி எங்கே?

இயற்கை மருத்துவம் தந்த காடுகள் எங்கே?

இளைப்பாற மரங்கள் எங்கே?

மண்ணின் ஊர்வனத்திற்கு உணவாகும் அரிசிமாக்கோலங்கள் எங்கே?

மண்வாசம் அள்ளித்தரும் பொன்னான காற்று எங்கே?

நீரைத் தந்து பயிரை வளர்த்து

உயிர் வாழச் செய்யும்

மழைதான் எங்கே?

எழு மனமே எழு

இயற்கை இன்பத்தை மீண்டும் பெற

புதிதாய் பிறந்து எழு  

விழித்தெழு மனமே விழித்தெழு.

விடியலுக்காய் காத்திராமல்

அதை நீயே உருவாக்கு.

அழகு மனமே,

நீ அழிய பிறக்கவில்லை.

அநீதிகளை அழிக்க பிறந்தாய்.

அகக்குரூரங்கள் அகல அகல,

புறக்கொடுமைகள் புறங்காட்டி ஓடும்.

ஒருமுறை வீசி மறையும் தென்றல்

மறுமுறை வீசும்போது அந்த தென்றல் புதிது;

ஒருநாள் உதித்து மறையும் கதிர்

 மறுநாள் உதிக்கும்போது  அந்த கதிரவன் புதிது;

ஒருமுறை தேய்ந்து வளரும் நிலவு

மறுமுறை வளரும்போது அந்த நிலவு புதிது;

ஒருபொழுது பூத்து வாடும் மலர்

 மறுபொழுது பூக்கும்போது அந்த மலர் புதிது;

ஒருமுறை நீ உன் வக்கிரங்களை ஒழித்துவிட்டால், மனமே நீ என்றும் புதிது.

பொங்கட்டும் உள்ளம். பூக்கட்டும் புதுமை.













 

12 comments:

  1. அபி நல்லாருக்கு. எல்லார் மனதிலும் இருப்பவை உங்களின் எழுத்தில் கவிதையாய். ஆழகாய். சீற்றமாய்..

    சில விஷயங்கள் காலத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதவை. தொழில்நுட்ப வளர்ச்சி இதோ இப்படி உங்கள் கவிதையை என்னால் வாசித்திருக்க முடியுமா! ஆனால் வளர்ச்சியிலும் இயற்கையை அழிக்காமல் என்ன எப்படிச் செய்ய முடியும் என்று மனிதன் யோசிப்பதில்லை. சுயநலம்.

    நல்லாருக்கு கவிதை

    பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசிதரன் சார் கீதா மேடம். நீண்டகாலத்திற்குப் பிறகு தங்களின் இனிய கருத்தைக் காண்பதில் மகிழ்ச்சி. நல்வரவு.

      Delete
  2. நல்லதொரு கவிதை. உங்கள் சீற்றம் நியாயமானது. இப்படிச் சில களைகள் இருப்பது வேதனையான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். இருக்கும் களைகள் களையப்படுவதில்லை. இன்னும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அதுதான் மிகுந்த வருத்தம்.

      Delete
  3. அவலங்களை அடுக்கியவிதம் அருமை...கொப்பளித்த கோபமும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். வாருங்கள். நல்வரவு.

      Delete
  4. அம்மா...டி..  எத்தனை வரிகள் தொடர்ச்சியாய் சொல்லிச்சொல்லி சீற, ஆற்றுப்போக...   அத்தனையும் உண்மை.  மிக அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.  பாராட்டுகள். நிறைய வரிகள் மீண்டும் மீண்டும் வாசித்து ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

      Delete
  5. அருமையான உணர்வு பொங்கிய கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரவிந் சார்

      Delete
  6. அருமையாய் - கவிதையாய் தங்களின் சீற்றம் பாராட்டுக்குரியது. எழுக மனமே!

    ReplyDelete
    Replies
    1. ஹலோ சார் வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க. ரொம்பநாளாச்சு உங்களோட கருத்துக்கள் படிச்சு. எனக்கும் ப்லாக் படிக்க நேரம் இருக்குறதில்ல. அதுனாலதான் படிக்கமுடியல. நல்வரவு. மிக்க நன்றி சார்.

      Delete