Saturday 17 April 2021

எமனுக்கோர் எச்சரிக்கைக் கடிதம்.


அறிவற்ற காலனே, அந்தக் கலைவாணரை உன் சொந்தமாக்கியபோது ஆறுதல் பரிசாய் ஆண்டவன்

இந்தச் சின்னக் கலைவானரைத் தந்தான்.

இதுவுமா உனக்கு வேண்டும்?

உனக்கென்ன அத்தனை உயிர்பசியா?

உரிய கருத்துக்களால் எம் நகைச்சுவைப் பசியாற்றியவரை நயவஞ்சகமாய் எடுத்துக்கொள்ள!

அவர் இதுவரைச் சிரிக்க மட்டுமே அனுமதியளித்தார். அழுவதற்கும் அனுமதிக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டுப் பறித்துக்கொண்டுப் போவதுதானே!

கதைக்கத் துணை வேண்டுமென்றா கவித்துவப் பேச்சாளரைக் களவு செய்தாய்!

நீ சிரிக்கத்தானா எல்லோர் நெஞ்சிலும் நெருப்பள்ளிக் கொட்டினாய்!

எமனே! எக்காளமிட்டுச் சிரிக்காதே! விவேக்கை ஜெயிக்க உனக்கு விவேகம் போதாது.

வெற்றிக்கொண்டது விவேக்கை அல்ல. போனால் போகட்டுமென்று அவரே உனக்குப் பிச்சையிட்ட பாழுடலை!

அழுகும் உடல் யாருக்கு வேண்டும். அழகான மனதும், அவர் சிரித்தப்பொழுதும், சிரிக்கவைத்தச் சுவடுகளும் என்றும் எமக்கே.

மாண்டவர் பிரிவுத் துயரில் சிக்கி மீளமுடியாதோரெல்லாம், மாபாதகா என்றுனைச் சபிக்கையில், அந்த சாம்பலின் தாப நெருப்பு என்றேனும் உன்னைத் தாக்காமலா போய்விடும்!

கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்து மண்ணுலகை ஆக்கிரமிக்க உனக்கென்ன மண்டைக்கணமோ!

கூற்றுவனே! எனக்கென்று நீயிருக்க உனக்கென்று ஒருவன் வராமலா போவான். காலக்கயிற்றால் எம்மைக்கட்டியிழுக்கும் உனக்கும் ஓர் காலன் கெடுவைப்பான். காத்திரு எந்த நொடியும்.

இப்படிக்கு. எந்த நொடியிலும் உன்னால் வஞ்சிக்கப்படலாம் என்ற நிஜத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும்  மண்ணுலகப் பிரதிநிதி. 

7 comments:

  1. காலனுக்கு ஒரு கடிதம் - நல்ல தலைப்பு. விவேக் அவர்களின் இழப்பு அளவிடமுடியாதது. எத்தனை பேரை அழைத்துக் கொண்டாலும் இந்தக் காலனின் ஆவல் அடங்காது போல!

    அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார். காலன் ஆவலும் அடங்காது கொரானா ஆவலும் அடங்காது. பையனும் இல்லாம கணவரும் இல்லாம. பாவம் அவர் மனைவி.

      Delete
  2. யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு.  எதிர்பாராதது.  மனம் கலங்கிய நிகழ்வு.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு கலைஞரும் மக்களும் அவரைப் பற்றி சொல்லும்போது கஷ்டமா இருக்கு. spb கு அவர் இரங்கல் தெரிவிச்சார். இப்போ அவருக்கு தெரிவிக்கிறாங்க. என்ன கொடுமையான இயற்கை விதியோ சார்.

      Delete
  3. மன்னுலகின் பிரதிநிதியின் கோபம் நம் உள்ளத்தின் பிரதிபலிப்பு.
    பேரதிர்ச்சி அவர் மறைவு, என்ன சொல்வது என்றே தெரியலை

    ReplyDelete
  4. அவரது மறைவு எதிர்பாரா ஒன்று அதிர்ச்சியும் கூட..மனதைப் புரட்டிய ஒன்று.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  5. எதிர்பாராததும் ஏற்க மறுக்கும் நிகழ்வும் அது. திரு விவேக் குறித்த எமது பதிவை பார்க்கவும்.
    http://koilpillaiyin.blogspot.com/2020/09/blog-post_10.html

    ReplyDelete