முன்னுரை:
யாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை வா. இது வெறும் பாடல் வரிகளல்ல. வாழ்க்கைப் பாடங்கள். குறைகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைபாடுகளை? தீர்வு இருக்கும் விஷயத்திற்கு கவலைப்பட்டால் ஞாயம். தீர்க்கமுடியாத விஷயத்திற்கு கவலைப்பட்டால் என்ன பலன். உடல்குறைபாட்டிற்காகக் கவலைப்பட்டால் பின் கவலை ஒரு மனக்குறைபாடு ஆகிவிடும்.
”உள்ளம் நல்லாருந்தா ஊனமொரு தடையில்ல. உள்ளம் ஊனப்பட்டா ஒடம்பிருந்தும் பயனில்ல” என்ற வைரமுத்து வரிகளுக்கு ஏற்ப உடல் குறைபாடுகளை ஒரு தடையாகக் கருதாமல் சாதித்துக்காட்டியவர்கள் ஏராளம். லூயிபிரையில், ஹெலென்கெல்லர், ஸ்டீபன் ஹாக்கின்ஸ், பீத்தோவன், மற்றும் பலரின் வெற்றியே ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லக் காரணமாக அமைந்தது.
இயல்பான மனிதர்களுக்கு வாழ்க்கையில் சவால்கள் இருக்கும். இயற்கைப் படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கோ வாழ்க்கையே சவாலாக இருக்கும். அந்த சவால்களைச் சந்தித்து வெற்றி பெறுபவர்களின் வாழ்விலிருக்கும் சிறகுகளையும் சிலுவைகளையும் பற்றி அலசுவதே இந்தக் கட்டுரையின் சாராம்சமாகும்.
சிறகுகள்:
கற்றவர்களே கண்ணுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்றுவிட்டார் வள்ளுவர். கண்ணில்லாதவர்கள் எப்படி கற்கமுடியும்? அந்தக் கேள்விக்கு விடையளித்தார் லூயிபிரையில். எந்த ஊசி அவர் கண்களைப் பறித்ததோ, அதே ஊசியை வைத்தே பிரையில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்து, பார்வையற்றோர் முகத்திலிருந்த புண்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கண்களைப் பொருத்தினார்.
செவித்திரன் குறை உடையவர்களுக்கும், வாய் பேச இயலாதவர்களுக்கும் சிரப்பு பள்ளிகள் இருப்பதைப் போல பார்வையற்றவர்களுக்கும் சிறப்பு பள்ளிகள், பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்ட ஆசிரியர்கள் வரமாய் வழங்கப்பட்டது.
கல்விச் சிறகிற்கு அடித்தளம் அமைந்தபின் கட்டடம் கட்ட என்ன தடை? பிரையில் எழுத்துமுறை வந்தபின் பார்வையற்றோர் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. பார்வையற்றோருக்கு பிரையில் மற்றும் வெண்கோள் என்றால், செவித்திரன் குறைபாடு உடையவர்களுக்கு காது கேட்கும் எந்திரம், நடக்க இயலாதோர்க்கு சக்கர நாற்காளி என்ற வகையில் மாற்றுத்திறனாளிகளின் சிறகுகள் விரிவடைந்தது.
பள்ளிப்படிப்பிற்கே இத்தனைப் போராட்டம் என்றால், கல்லூரிக் கல்வி சும்மா கிடைக்குமா? அதற்கும் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் கிடைக்கப்பெற்றது. வருடங்கள் உருண்டோட தன்னார்வலர்களை நேரடியாக வாசிக்கவைத்து படித்தல், ஒலிப்பதிவு செய்து படித்தல், மின்நூல் என்று கல்வி படிப்படியாக உயர, அதற்கேற்ப வேலை வாய்ப்புகளும் வளர்ந்தது. ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர், வங்கி அலுவலகர், அரசு அலுவலகர், உயர் பதவி என்று அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையின் தடத்தைப் பதித்துவிட்டனர்.
கணிணியில் msoffice, இணயம், தட்டச்சு, தமிழ் மற்றும் ஆங்கிலம், மின்நூல் உருவாக்கம், கிண்டில், ஒலி மற்றும் ஒளி திருத்தம், ஆன்லைன் வகுப்பு மற்றும் கூட்டங்கள் நடத்துவது என்று தான் படிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் அளவுக்கு முன்னேறிவிட்டனர். Smart phone உபயோகப்படுத்தாத மாற்றுத்திறனாளிகள் மிகக்குறைவு. இதற்கு காறணம் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றுத்திறனாளிகளுக்கும் சாதகமாக இருப்பதுதான். மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் சேர்ந்து சிறப்பு பயிர்ச்சிகள், போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள், வேலை வாய்ப்பு முகாம்கள், இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்குவித்தல், விடுதி வசதி ஏற்படுத்துதல், கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடத்தி திறமையை மேம்படுத்துதல், உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்கள் நடத்துதல் போன்ற சேவைகளைச் செய்துவருகின்றனர். அரசாணைகள், பயணச் சலுகைகள், உதவித்தொகை, ஆகியவையும் கிடைக்கின்றன. 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும்படியானது. ஊடகத்துறையில் வேலை செய்யமுடியாமல் போனாலும் யூடியூப் என்ற சிறிய ஊடகத்தை இருந்த இடத்திலிருந்தே உருவாக்கமுடிகிறது. அதில் குறைந்த அளவேனும் பணம் சம்பாதிக்கவும் முடிகிறது.
பொதுவாகவே வாசகர்களைவிட எழுத்தாளர்கள் அதிகமாகிவிட்டனர். அப்படி அதிகமான எழுத்தாளர்களுள் மாற்றுத்திறனாளிகளும் இருக்கிறார்கள் என்பது மகிழவைக்கும் விஷயம்.
சிலுவைகள்:
அதுதான் கல்வி, வேலை என்று அனைத்து சலுகைகளும் கிடைக்கிறதே! அப்புறம் என்ன சிலுவைகள் என்கிறீர்களா? அனைத்தும் கிடைக்கிறது! ஆனால் அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
1. அன்பு, பாசம்! வறுமையின் காரனமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ மாற்றுத்திறனாளிகள் பலரால் சிறு வயதிலிருந்தே பெற்றோருடன் வசிக்கமுடிவதில்லை. விடுதியே வாழ்க்கையாகிவிடுவதால் நட்பைப் பெறும் அளவு பாசத்தைப் பெறமுடிவதில்லை.
2. தற்சார்பு. பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்கள் மின்நூலாக கிடைக்காததால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை விரைவில் பெற்று பாடம் நடத்தவோ படிக்கவோ முடிவதில்லை. குறைந்த சதவிகித இடவொதுக்கீட்டால் போட்டித் தேர்வில் வெற்றிப்பெற்றும் வேலை கிடைப்பதில்லை. வழக்குப்போட்டு வேலை வாங்க வேண்டிய நிலை. I.A.s. தேர்ச்சிப்பெற்றால், I.r.s. கொடுக்கிறார்கள். என்ன கொடுமை இது?
அப்படியே வேலை கிடைத்தாலும் அவர்கள் சரியானவிதத்தில் நடத்தப்படுவதில்லை. சிலநிறுவனங்களே மாற்றுத்திறனாளிகளை சக மனிதர்களாகப் பார்க்கிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் திறமைப் பற்றிய விழிப்புணர்வே இல்லை. இந்தியாவில் மக்கள் தொகையைவிட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், ஒழுங்கற்ற சாலைகள் மற்றும் சாலைவிதிகளை மீறுவதாலும், நவீன வசதிகள் இல்லாததாலும், வாகன ஓட்டிகளின் வேகத்தாலும் மாற்றுத்திறனாளிகளால் தனியேநடப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
3. திருமணம்: திருமணத்திற்கு இருமணம் போதும் என்று மேடைகளில் முழங்கினாலும், வாழ்க்கை என்று வரும்போது புறத் தோற்றமே முன்னிலை வகிக்கிறது. இதனால் பல மாற்றுத்திறனாளிகள் திருமணம் ஆகாமலே தங்களின் இளமையைத் தொலைத்துவிடுகின்றனர். அப்படியே திருமணமானாலும் அடிப்படை காரணம் பணமாகவோ அல்லது குடும்ப உறவாகவோ இருக்கிறதே தவிர காதலாக இருப்பது மிகக் குறைவு.
4. இரக்கம். மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் வீதியில் நடக்கும்போது பரிதாபங்களைச் சந்திக்காமல் இருப்பதில்லை. உதவி செய்பவர்களுள் சிலரும் பரிதாபத்தின் அடிப்படையில்தான் செய்கிறார்கள்.
முடிவுரை:
ஒரு மனிதனுக்கு ஏற்படும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அடுத்தவர் மட்டுமே பொறுப்பல்ல. அது அந்த மனிதனின் பொறுப்பும் கூட. சிலுவைகள் சிறகுகளாக மாற அரசு மட்டும் முயன்றால் போதாது. மாற்றுத்திறனாளிகளும் முயலவேண்டும்.
ஒதுக்கிவைப்பது தவறென்றால் மற்றவரிடமிருந்து ஒதுங்கிப்போவதும் தவறுதானே? உதவி பெற வேண்டுமென்றால் உதவி செய்ய வேண்டும் என்பது உலகநியதிதானே?
சிரித்த முகமாக இருந்தால் இரக்கப்படத் தோன்றாது. கூடவே சேர்ந்து சிரிக்கத்தான் தோன்றும். நேர்மறைக் கருத்துக்களோடு, தேவைகளையும் வெளியிட்டு, தீர்வுகள் இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் அளித்தால் அது அடுத்தவர் மனதை தைக்காமலா போய்விடும்?
நாம் மற்றவருக்கு என்ன கொடுக்கிறோமோ அதுதான் திரும்ப கிடைக்கும். எனவே நல்லவைகளை
கொடுப்போம். அதையே திரும்பப் பெறுவோம்.
முடிவுரையும் அருமை...
ReplyDeleteதொடர்க...
thank you sir
Delete
ReplyDeleteSuper abinaya
Each line is very true
Vidya
thank you madam
Deleteநல்ல விழிப்புணர்வூட்டும் கட்டுறை.
ReplyDeletethank you aravindh sir
Delete