வணக்கம் நண்பர்களே. அனுபவம் பகிரலாமா? இந்த வருஷம் கொளுத்துற வெயில்லருந்து தப்பிக்க தேவகோட்டையிலிருக்கும் என் நண்பர்களான தர்மபாலன் மற்றும் லக்ஷ்மி ப்ரியா வீட்டுக்கு போயிருந்தேன். கணவன் மனைவி ரெண்டுபேருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். அதிலும் லக்ஷ்மி ப்ரியா என் கல்லூரி தோழி. இதுக்கு முன்னாடியும் பலமுறை போயிருக்கேன். எப்போபோனாலும் கொட்டமடிக்காம வரமாட்டேன். நான் செய்யும் குறும்பில் ரெண்டுபேரும் விழி பிதுங்கி நிற்கும் தருணத்தை வெகுவாக ரசிப்பேன். இந்த முறையும் சென்ற சில நாட்களுக்கு வேளைக்கு உணவு உண்டு உரங்கி வீணே பொழுதை கழித்தேன். அப்படியே இருந்துவிட்டால் அபிக்கு என்ன மதிப்பு? ஆரம்பித்தேன் அபியின் அடுக்களை அமர்க்களங்களை.
முன்னாடியே சாதம் வைக்க தெரிஞ்சதால ஆறுமணிக்கு எழுந்து அருசி களைந்து, தண்ணீர் நிறப்பி, அடுப்பை பற்றவைத்து, சாதம் வைப்பேன். உப்பு சேர்த்து மூடி வெச்சுடுவேன். அப்புறம் ஸ்கூல் போகும் தர்மபாலனுக்கு சுடுதண்ணி வைப்பேன். லெமன் சாதம் செய்யும்போது லெமன் பிழிந்து வைப்பேன். இதுவரைதான் பெரும்பாலும் என் அன்றாட வேலை. சாதம் வடிக்கத் தெரியாது. பயம் முயன்று பார்க்கவும். என் கைகள் ஓரளவுக்குமேல் சூடு பொறுக்காது. நெருப்பு கத்தி என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால பெரிய பெரிய வேலையெல்லாம் ப்ரியா தலையில கட்டிடுவேன். அவளும் என்னைப் புரிஞ்சிகிட்டு செய்வா.
காபி டீ போட்ட தருணங்களெல்லாம் மிகவும் சுவையானது. இதுக்கு முன்னாடி போனபோது கடுங்காப்பி கலக்குறேன்னு காபி பொடியை அதிகமா கொட்டிட்டேன். சர்க்கறை சொல்லவே வேண்டாம். காபி கலந்த நான் அதை குடிக்க முடியாமல் நைசா சின்கில் ஊத்திட்டேன். ஆனா பாவம் அவங்க வீணாக்கக்கூடாதுன்னு ஒரு சொட்டு மிச்சம் வெக்காம குடிச்சிட்டாங்க. அதிலும் தர்மபாலன் இனிமே வீட்ல எனக்கும் சேர்த்து காபி போடாதிங்கப்பான்னு கோபமா டம்பலரை வெக்கும்போது என்னால சிரிப்பை அடக்க முடியல.
இப்போ போனபோது பால் காபி போட்டேன். அருமையா வந்துச்சு. சிலநேரம்தான் கேவலமா இருந்துச்சு. இரண்டு முறைதான் டீ போட்டேன். இரண்டாம் முறை அவ்வளவா நல்லா இல்லைன்னு கமெண்ட் வந்துச்சு. முதல்முறை டீ போட்டு அதை வடிகட்டாம தர்மபாலனுக்கு கொடுத்துட்டேன். வடிகட்ட பயம். கீழ சிந்திட்டா? அதிலும் என் பட்டுக்கையில பட்டுட்டா மீ பாவமில்லையா? அதனால அப்படியே கொடுத்துட்டேன். ப்ரியா தூங்கிட்டு இருந்ததால அவ எஸ்கேப். குடிச்சவரோ சூப்பரா இருக்கு. நல்லா கொதிச்சிருக்கு ஆனா டீத்தூல்தான் அப்படியே இருக்குன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் தோணும்போதெல்லாம் காபி போடுவேன்.
ஒருநாள் எனக்கும் ப்ரியாவுக்கும் வாய்க்கா தகறாரு வந்துடுச்சு. ரெண்டுபேருமே சாப்பிடல. ரெண்டுபேருக்கும் பயங்கற பசி வேற. என்னால பொறுக்கமுடியாம காபி போட்டு பிஸ்கேட் எடுத்துவந்து படுத்திருந்த அவகிட்ட வெச்சேன். திமிர்பிடிச்சவ. கோபத்துலயும் கொட்டிகிட்டா. அன்னைக்குன்னு பார்த்து காபி சூப்பரா வந்துச்சுப்பா. நானும் அப்படித்தான் என்ன சண்டை, கோபமா இருந்தாலும் சாப்பிடாம இருக்கமாட்டேன். சாப்பிட்டுட்டு சண்டை போடுவோம் என்ன கெட்டுப்போச்சு. யூடியூப் உபயத்துல லெமன் சாதம் மசாலா அறைத்து செய்தோம். புதினா சாதம், தேங்கா பால் சாதம் செய்தோம். ஆறுமணிக்கு ஆரம்பிப்போம். எட்டேகால் எட்டரைக்குள்ள முடிக்கணும். ரொம்பவே சேலஞ்சிங்கா இருக்கும்.
மசாலா கடல செய்தோம். எட்டுமணி நேரமா கடலப்பருப்பு ஊரவெச்சு, காயவெச்சு, உப்பு, மிளகாய் தூல், பூண்டு, கறுவேப்பிலை எல்லாம் சேர்த்து மசாலா ரெடி பண்ணி, கடலப்பருப்பை வறுத்து இதுல போட்டு மிக்ஸ் பண்ணோம். டேஸ்ட் ஓகே ஆனா கடிக்கவே முடியல. கஜினி முகமது படையெடுத்த மாதிரி விடாம எள்ளடை செய்ய ட்ரை பண்ணோம். அது எள்ளுப்பூரியாகி எங்களைப் பார்த்து கேலி செஞ்சது.
அந்த நேரத்தில் வந்த தர்மபாலன் நண்பர்கள். மச்சான் இது என்னடா கொஞ்சம் சாப்பிட்டு பாரேன். எள்ளடையா எள்ளுப்பூரியான்னு பட்டிமன்றம் நடத்தி, பால் விளையாடி, பல்லு போச்சேன்னு பயந்துகிட்டே சாப்பிட்டாலும் பயபுள்ளைங்க காலி செஞ்சிடுச்சிங்க.
அப்புறம் என்ன ஒரே குஷிதான். என்ன செஞ்சாலும் காலியாகுதேன்னு அடுத்த ஆட்டத்துக்கு தயாரானோம். நெய்யில்லாத மைசூர்பாக். நெய் போட்டு செய்யலாம்னு ப்ரியா சொன்னதுக்கு, வேண்டாம் நெய் திகட்டும். எண்ணெய்ல செய்யலாம் சொல்லிட்டேன். கடலெண்ணெயும் நல்லெண்ணெயும் சேர்க்கக்கூடாதுன்னு சொல்லாம விட்டுட்டேன். பாவிமக கடலெண்ணெய கலந்துட்டா. கலந்த பிறகு இது ரீஃபைண்ட் ஆயிலான்னு வடிவேல் பாணில கேட்டு என்ன யூஸ். விளைவு மைசூர்பாக் டேஸ்ட்ல இருந்தாலும் கடலெண்ணை வாசம் சும்மா கும்முன்னு தூக்குச்சு. பீஸ் போட்டு சாப்பிட வேண்டியதை உதிர்த்து சாப்பிட்டோம். அதை அதிகமா காலி பண்ணது சோதனை எலியான திரு தர்மபாலனே.
மைசூர்பாக் செய்யும்போது தெரியாத வேலையெல்லாம் செய்ய சொல்றாளேன்னு ப்ரியா புலம்பிகிட்டே செஞ்சா. ஜாலியா இருந்தது. செய்முறையை சொல்ல சொல்ல அவ செய்வா. மாவு பிசையிறது, அடுப்பு வேலையெல்லாம் அம்மையார் தலையில கட்டிட்டு, அடியேன் இப்படி செய், அப்படி செய்னு சொல்லி, பேசிகிட்டே செய்வோம். செய்யிற பண்டத்தைவிட செய்யிற அனுபவம் சுவையா இருக்கும். எள்ளடை செய்யும்போது, நாங்க தட்டி தட்டி தர, தர்மபாலனோட தம்பி எண்ணெய்ல போட்டு எடுத்தாரு. எத்தனை நாள்தான் தனியா செய்யிறது? அதான் அவரையும் இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்தோம்.
லஸ்ஸி, பூந்தி ரைத்தா செய்தோம். இதெல்லாம் கொஞ்சம் பரவால்லாம வந்தது. ஒருநாள் ப்ரியா சிஸ்டம்ல வேலையா இருந்தா. எனக்கு போரடிச்சது. வத்தல் வறுக்க கூப்பிட்டேன். வரமாட்டேன் சொன்னா. போடி நானே செஞ்சிக்குறேன்னு வீம்பா போயி அடுப்பை பற்றவைத்து, எண்ணெய் சட்டில எண்ணை காயவைத்து வத்தல் கூட போட்டுட்டேன். ஆனா அது படபடன்னு பொறியறதைப் பார்த்துப் பயம் வந்துடிச்சு. அப்புறம் என்ன? அவ வந்துதானே ஆகணும். புலம்பிகிட்டே வந்து செஞ்சா. அட நானும் ஹெல்ப் பண்ணேனே கவர்ல இருந்து வத்தல் எடுத்து எண்ணெய்ல போட்டேன். எப்புடி.
அடுப்பில்லாம ஸ்வீட் செய்யலாம்னு யூடியூப்ல பார்த்தேன். உடனே பொட்டுக்கடலை, சர்க்கறை சேர்த்து அறைத்து, ஏலக்கா போட மறந்து, நெய்யிலேயே மாவு பிசைந்து பால்கோவா போல தட்டி காயவெச்சோம். கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிட்டா பால்கோவா போலவே சுவையா இருந்தது. இதையும் அதிகமா சாப்பிட்டது சோதனை எலிதான். எனக்கும் ப்ரியாக்கும் ஸ்வீட் பிடிக்காது.
ஐஸ்கிரீம் செய்யலாம்னு அடுத்த லூட்டிக்கு தயாரானோம். அதை எடு, இதை எடுன்னு டார்ச்சர் பண்ணதுல ப்ரியா கடுப்பாகி. போடி இதுக்கப்புறம் எதையாவது செய்ய சொன்னா செய்யமாட்டேன்னு போய்ட்டா. எனக்கும் கோவத்துல அவளைக் கூப்பிட விருப்பமில்லாம நானே அடுப்புல வெச்சு கிண்டிட்டு இருந்தேன். நான் எதையாவது எடுக்க சொல்லாதன்னுதான சொன்னேன். அடுப்புல வெக்க கூப்பிடாதன்னு சொன்னேனா. எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு எப்படியோ போன்னு சொல்லிட்டு போயிட்டா. நானே செஞ்சு, ஆறவெச்சு, மிக்சியில அடிச்சு. இதுவரைக்கும் எல்லாமே நல்லாதாம்ப்பா போச்சு. டிஃபன் பாக்ஸ்ல ஊத்தும்போது நிறைய கீழ சிந்திடுச்சு. அழுகைன்னா அழுகை அப்படி ஒரு அழுகை வந்துச்சு. மிச்சம் இருந்ததை ஃப்ரிட்ஜ்ல வெச்சேன். நைட் சாப்பிடும்போது சூப்பரா இருந்துச்சு. எல்லாரும் விரும்பியே சாப்பிட்டாங்க.
ஒருநாள் மிளகா கிள்ளி சாம்பார் வெச்சோம். இன்னொரு நாள் மண் சட்டி பாண வாங்கி வெச்சிருந்தேன். அதுல சமைக்கலாம்னு மாடிக்கு எடுத்துட்டு போய் அடுப்பு பற்ற வெச்சா எரியவே இல்ல. அருசி பருப்பு வீணாக கூடாதுன்னு கீழ வந்து கேஸ்ல வெச்சேன். பாணை அளவு தெரியாம அருசி பருப்பு அதிகமா போட்டதால தண்ணி பத்தாம சாதம் வேகல. வேற பாத்திரத்துல மாத்தி தண்னி அதிகமா வெச்சு வேக வெச்சா ப்ரியா. நானே இரண்டுமுறை உப்பு போட்டிருந்தேன். சதிகாரி அதை கவணிக்காம திரும்பவும் உப்பு போட்டுட்டா. ஆசையா வாயில வெச்சா, சே என்ன கொடுமை. உப்புல சாதம் கொஞ்சம் கம்மி. அப்புறம் என்ன குப்பை தொட்டிதான் நாங்க செஞ்சதை சாப்பிட்டுச்சு.
கேழ்வரகு கஞ்சி செய்யலாம்னு நினைச்சோம். கேட்ட பொருளையெல்லாம் எடுத்துக்கொடுத்துட்டு ப்ரியா துணி துவைக்க போயிட்டா. நானே ஆரம்பிச்சு நானே செஞ்சேன். கஞ்சிக்கும் களிக்கும் இடைப்பட்ட நிலைல வந்துச்சு. சுவையாதான் இருந்துச்சு. டம்பலர்ல ஊத்தி குடிக்க வேண்டியதை தட்டுல போட்டு சாப்பிட்டோம். கடைசியா நான் சென்னைக்கு வர அன்னைக்கு செஞ்சது தேங்காபால் சாதம். தேங்கா பால் எடுக்க தேங்கா அறைக்கும்போது பாதிக்குமேல கீழ சிந்திடுச்சு. தேங்கா பால்ல தண்ணி கலந்து செஞ்சாலும் டேஸ்டாவே இருந்துச்சு. தேங்கா பால் சிந்தினது கவலையா இருந்துச்சு.
காய்கறில சிலது கட் பண்ணுவேன். சிலது கட் பண்ணமாட்டேன். தோல் சீவ வராது. பூண்டு உரிக்கிறது இஞ்சி பூண்டு பேஸ்ட் அறைக்கிறதுலாம் செய்வேன். மாங்கா மாம்பழம் கட் பண்ண கத்துகிட்டேன். ப்ரியாதான் சொல்லி தந்தா. வெண்டக்கா ஃப்ரை பண்ணோம். நல்லாதான் இருந்துச்சு. நாலுபேருக்கு லெமன் ஜூஸ் போடணும். நாற்பது பேருக்கு போட்டு, பத்துநாளா வெச்சு வெச்சு குடிச்சோம். டேங்கு வாங்கி கலந்து குடிச்சோம். சாப்பாடு, நொறுக்கு தீனி எல்லாம் பத்தாம. அடிக்கடி சத்துமாவு கிண்னம் கிண்ணமா சாப்பிடுவோம்.
இப்படியே கோடைக்காலம் குளிர்ச்சியா கழிஞ்சது. யார் எங்க இருந்தாலும் மறக்கமுடியாத நினைவுகள் இது. இப்படி செஞ்சோம் அப்படி செஞ்சோம்னு சொல்லிட்டு, எப்படி செஞ்சோம்னு ரெசிபி சொல்லலையேன்னு பார்க்கறீங்களா. போங்கப்பா ரெசிபியெல்லாம் யூடியூப்ல பாத்துக்கோங்க. நாங்க மட்டும் யூடியூப் பாத்து கஷ்டபட்டு செஞ்சோம். நீங்க என்கிட்டருந்து சுட்டுக்குவீங்களா. முடியாது. எங்க நட்பின் இலக்கணத்தை கிட்சன்ல கிருக்கியிருக்கோம். எப்படி?