Wednesday, 13 January 2021

'நான் காணும் உலகம்'

சுருங்கிவிட்ட உலகம் சுயநலத்தின் கூடம்!

கொடூரப்புள்ளிகளால் இடப்பட்ட கோலம்!

நாட்டிலோ தந்திர ஆட்சி!

வீட்டிலோ எந்திர ஆட்சி!

பாசத்தைப் பங்குவைக்க ஆளில்லை!

பணத்தைப் பந்திவிரிக்க பாய்ந்து வருவோர் ஏராளம்!



இலையுதிர காணேன்!

ஈசலைப்போல் கொலையுதிரக் கண்டேன்!

அள்ளிக்கொடுக்கக் காணேன்!

வேறோர் பொருள் மட்டும் கொள்ளையடிக்கக் கண்டேன்!


பெண்ணுள்ளம் மதிக்கும் மனிதன் காணேன்!

பேதையவள் உடல் தின்னும் மிருகம் கண்டேன்!

அள்ளிப்பருகக் குடிநீர் காணேன்!

ஆறாய் பாயும் குறுதி கண்டேன்!


சாலைவிதிகள் மதிக்கக் கானேன்!

சாரை சாரையாய் விபத்துகள் கண்டேன்!

பாப்பாக்கள் ஆடும் ஆட்டங்கள் காணேன்!

அவை பாதுகாப்பு வளையத்தில் சிறைப்படக் கண்டேன்!


பிஞ்சை ரசிக்கும் நெஞ்சங்கள் காணேன்!

அதையும் புசித்து ரசிக்கும் ராட்சதம் கண்டேன்!

பசியும் பஞ்சமும் மறையக் காணேன்!

லஞ்சமும் வஞ்சமும் நிறையக் கண்டேன்!


வியாதிகளில்லா வீடுகள் காணேன்!

விதம்விதமாய் நோய்கள் கண்டேன்!

சுயநலம் பேணாத் தலமைக் காணேன்!

சூழ்ச்சிகள் நிறைந்த ஆட்சியைக் கண்டேன்!


அறிவை வளர்க்கும் கல்வியைக் காணேன்!

அரசியல் பேசும் கல்வியைக் கண்டேன்!

எழில் கொஞ்சும் இயற்கைக் காணேன்!

ஏய்ச்சிப்பிழைக்கும் செயற்கைக் கண்டேன்!


மூர்க்கங்கள் யாவும் முகவிழியால் காணேன்!

மூடியவிழிக்கு நன்றிகள் சொல்வேன்!


இயற்கையே! எனையாளும் விதியே! இறையே!

உம் மூவர் மீதில் ஆணை!


எப்போது அரக்கம் ஒழியக் காண்பேனோ!

எப்போது இரக்கம் பிரக்கக் காண்பேனோ!

எப்போது இதயம் மதிக்கக் காண்பேனோ!

எப்போது இல்லாமை விலகக் காண்பேனோ!


எப்போது எல்லாரும் எல்லாம் பெறக் காண்பேனோ!

எப்போது சமத்துவம் சமநீதி காண்பேனோ!

எப்போது அன்பும் அமைதியும் மலரக் காண்பேனோ!

எப்போது பண்பும் பொதுநலமும் மிளிரக் காண்பேனோ!


எப்போது மாண்புற வாழக் காண்பேனோ!

எப்போது மனிதம் சிறக்கக் காண்பேனோ!


அப்போதே என் விழிகள் திறக்கக் கேட்பேன்!

சாட்சிகளே, பதில் சொல்லுங்கள்!

இந்தத் தரணி சிறக்குமா?

என் விழிகள் என்றேனும் திறக்குமா?


பின் குறிப்பு:

வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை கொளுத்திவிட்டு புதியவைகளை புகுத்துவதற்கு பதில் நாட்டிற்கு தேவையில்லாத கொடூரங்களை கொளுத்திவிட்டு  அன்பும் அமைதியும் புகுத்துவோம்.

அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!


 

10 comments:

  1. Nice lines keep doing wish you the same

    ReplyDelete
  2. வருத்தம் தரும் பல உண்மைகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் என்ன செய்வது. இந்த வருத்தமான உண்மைகள் என்றைக்கு அழியுதோ அன்னைக்குதான் உண்மையான சுதந்திரம்

      Delete
  3. Abinaya
    அனைத்தும் உண்மை
    வித்யா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம். பார்ப்போம் எப்போது இது அனைத்தும் மறைந்து அமைதி பிறக்கும் என்று

      Delete
  4. மனதை தொட்ட கவிதை. இன்றைய நிதர்சனத்தை சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  5. நிதர்சனத்தை காட்டும் கவிதை.
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார்

      Delete