புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும். மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும். என்ன புதுப்படம் பற்றிச் சொல்லப் போகிறேன்னு நினைத்தீர்களா? இல்லை! போதைப் பழக்கம் சம்பந்தப்பட்ட புத்தகம்.
’நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம், இன்னிக்கி இராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்.’ இப்படி ஒவ்வொரு நாளும் பெண்களை ஏமாற்றி குடிக்கிறவரைக் குடித்துவிட்டு, கடைசியில் ‘போதை வந்தபோது புத்தி இல்லையே. புத்தி வந்தபோது நண்பரில்லையே.’ என்று பாடும் ஆண்கள்தான் எத்தனை!
மதுவை அனுமதிக்கின்ற அரசாங்கத்திடமும் தவறு இருக்கிறது, பாட்டிலில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு அதை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளும் மனிதர்களிடமும் தவறு இருக்கிறது. மது மெல்லக் கொல்லும் விஷம் என்றால், மற்ற போதைப் பொருட்கள் கொஞ்சம் வேகமாய் கொல்லும் விஷம். அப்படிப்பட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, தானும் சீரழிந்து தன்னைச் சுற்றியிருப்போரையும் சீரழிப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் நாவல்தான் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய “அவன்”.
பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்?
1. தங்களின் ஆசைகள் மற்றும் கனவுகளைப் பிள்ளைகள்மேல் திணிக்கக்கூடாது.
2. பிள்ளைகளின் நிறை குறைகளை மற்ற பிள்ளையோடு ஒப்பிட்டுத் திட்டக்கூடாது.
3. பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்கள் அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற உதவ வேண்டும்.
4. ஆரோக்கியமான இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
5. தானும் நல்ல கலாச்சாரத்தைப் பின்பற்றி, பிள்ளைகளுக்கும் அதைப் பின்பற்றச் சொல்லித்தர வேண்டும்.
6. நல்ல குணம், நல்ல பண்புகள், நல்ல வார்த்தைகள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், சுயக்கட்டுப்பாடு இவைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.
இந்தத் தகுதிகள் எதுவுமே இல்லாத பெற்றோரின் பிள்ளைகள் போதைப் பழக்கத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகும் கொடுமையே இந்நாவல்.
நவீன நாகரிக வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாமல் தங்களின் ஆசைகளைப் பிள்ளைகளின்மேல் திணிக்கும் பெற்றோருக்குப் பிறந்த ப்ரேம், பணத்தை வாரி இரைக்கும் அப்பாவிற்கும், பூஜை புனஸ்காரத்தில் மூழ்கி பிள்ளைக்கு அதிக சுதந்திரம் கொடுக்கும் அம்மாவிற்கும் பிறந்த சுனில், வேறு வாழ்க்கையைத் தேடிப்போன அம்மாவிற்கும், விட்டேற்றியாய் ஊர் சுற்றும் அப்பாவிற்கும் பிறந்த பரத், கணவனை இழந்தாலும் பிள்ளைகளைக் கரை ஏற்றக் கஷ்டப்படும் தாய்க்குப் பிறந்த அப்புசாமி. இவர்கள் ஒரே கல்லூரியில் படித்து சுனிலின் தூண்டுதலால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
அதுவும் எப்படிப்பட்ட போதை பொருட்கள் தெரியுமா? கஞ்சா, ப்ரௌன் ஷுகர், மாத்திரை. இவர்களின் போதைப் பழக்கத்திற்கு பெற்றோர் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் மட்டுமே காரணமில்லை. தவறான நட்பு, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற சுயநல மனப்பான்மை, இளம் வயதிற்கே உண்டான அதீத ஆர்வம் மற்றும் இதுதான் ஆண்பிள்ளைத்தனம் என்ற அவர்களின் வரையறை. இவையும் அவர்களின் தீய பழக்கங்களுக்குக் காரணம்.
பிறகு ஏன் பெற்றோரின் தகுதிகளைக் குறிப்பிட்டேன் என்றால், மேலே குறிப்பிட்டிருக்கும் தகுதிகளை உடைய பெற்றோரின் பிள்ளைகள் தடம் மாறிப்போவது குறைவு. அப்படியே போனாலும் அதை அந்தப் பெற்றோரால் வெகுவிரைவில் சரி செய்யமுடியும். இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பதே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னதான் கவனமாக வளர்த்தாலும் எங்கேயோ தவறு நேர்ந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் ஐந்துப் பிள்ளைகளை எளிதாக வளர்த்தார்கள். இந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது. பாவம்! இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் முதலில் பிள்ளை வளர்ப்பில் கோட்டைவிட்டாலும், பிறகு அதை சரி செய்யத்தான் முயன்றார்கள். ஆனால் அப்படி முயலும் வேளையில் அனைத்தும் கைமீறிவிட்டது.
கொடிது கொடிது சிகரெட் கொடிது, அதனினும் கொடிது மது, அதனினும் கொடிது கஞ்சா, அதனினும் கொடிது ப்ரௌன் ஷுகர், அதனினும் கொடிது மாத்திரை. இதில் முதலிரண்டு கொடிதைப் பற்றி ஊரறிந்தும் உலகறிந்தும் யாரும் நிறுத்துவதாய் இல்லை. அதனால் அடுத்திருக்கும் மூன்று கொடிதைப் பற்றிப் பார்ப்போம்.
“க்ராஸ், பாட்வீட், மரிவானா என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த வஸ்துவை தமிழில் கஞ்சா என்பார்கள். காயவைத்து பொடி செய்யப்பட்ட இலைத்துகள்களான கஞ்சாவை, சிகரட்டை விரல்களால் உருட்டி அதில் அடைக்கப்பட்டிருக்கும் புகையிலை துகள்களை ஒரு பேப்பரில் கொட்டி, அதனோடு இந்த கஞ்சா துகள்களை கலந்து, சிகரெட் பேப்பரை விரல்களால் உருட்டி, கஞ்சா புகையிலைக் கலவைக்கு நேராக வாயில் வைத்து உறிஞ்சி அந்தக் கலவை இறுகிக்கொள்ள மேலும் ஒருமுறை உருட்டி ஜாயிண்ட் சிகரெட் தயாரித்துக் குடிக்கிறார்கள்.”
கஞ்சாசெடிப் பற்றியும், அந்தச் செடியில் இருக்கும் பிசினான ஹஷீஷ் பற்றியும், அதிலிருக்கும் ரசாயன பொருட்கள் பற்றியும் நாவலுக்குள் சென்று அறிந்துக் கொள்ளுங்கள்.
இந்நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனோதத்துவ நிபுணரான டாக்டர் தேவர் கொடுத்திருக்கும் தகவல்களை நாமும் தெரிந்துகொள்ளலாம். கஞ்சாவைப் பிடித்ததும் முதலில் உண்டாவது 'இலேஷன்' (elation), அதாவது சட்டென்று லேசாகி மனசாலும் உடம்பாலும் மிதக்கும் உணர்வு. அடுத்து ஸைனெஸ்தீஸியா (Synaesthesia)… ஒரு புலனின் வேலையை இன்னொன்று செய்ய முற்படுவது. அதாவது, 'பாட்டை நான் பார்க்கிறேன்' என்று கண் சொல்வது. உதாரணம் புரிகிறதா? 'ஐ கான் ஸீ தி ம்யூசிக்' (I can see the music) என்று சொல்லும் நபர்கள் ஏராளம், ஏராளம்.
கஞ்சாவை குடித்தபின் இனிப்பு சாப்பிட வேண்டும் போலிருக்குமாம். எனக்கு அதிசயமாகத் தோன்றிய தகவல் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு அபூர்வமாக மருத்துவர்கள் கஞ்சாவை பரிந்துரை செய்கிறார்களாம்.
சிறு வயதிலிருந்தே தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட சுனில், பரத்தின் பிறந்தநாளன்று ப்ரேமையும் பரத்தையும் அவன் அறைக்கு வரவழைத்து கஞ்சாவை பழக்கிவிடுகிறான். ப்ரேமின் நிர்பந்தத்தால் அப்புசாமியும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். இதனால் ப்ரேம், பரத் மற்றும் அப்புவின் நடவடிக்கைகளில் நிறைய மாறுதல் ஏற்படுகிறது. அதைப் பற்றி பெற்றோர் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்கள்.
பிறகு கஞ்சாவை வாங்கப்போன இடத்தில், புதிதாய் ருசித்துப் பார்க்க மாத்திரையை வாங்குகிறார்கள். “மாத்திரை, ஆஸிட் என்று பலவிதமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் எல்.எஸ்.டி. – லைஸர்ஜிக் ஆஸிட் டைஈதைலமைட் (Lysergic Acid Diethylamide) – ஒருவிதக் காளானிலிருந்து தயாரிக்கப்படும் போதை மாத்திரையாகும். விழுங்கின இருபது நிமிஷத்திலிருந்து அரைமணிக்குள் நேராக மத்திய, ஆடோனாமஸ் நரம்புக் கூட்டத்தைப் பாதித்து, நிஜத்தை உடைத்து பங்கப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், இல்லாததை இருக்கிற மாதிரி கற்பனை பண்ண வைப்பதில் இது ராஜா.”
“இந்த மாத்திரைத் தரும் போதையை ட்ரிப் பயணம் என்பார்கள். அந்தப் பயணம் நல்லதாகவும் அமையலாம் கெட்டதாகவும் அமையலாம்.” இதை வாங்கிய இடத்திலேயே விழுங்கிவிட்டு வண்டியில் சென்ற பரத்தும் ப்ரேமும் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து விபத்துக்குள்ளாகிறார்கள்.
நியூயார்க்கில் பார்பரா என்ற பதினெட்டு வயது பெண் பேபி சிட்டர் வேலைக்கு சென்றிருக்கும்போது, குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தன் காதலன் ஷெராடோடு இந்த மாத்திரைகளை விழுங்கியது மட்டுமல்லாமல் குடிக்கவும் செய்கிறாள். சுயநினைவை இழந்த அவர்கள் உரித்தக் கோழியை அடுப்பில் வைப்பதற்கு பதிலாக உறங்கும் குழந்தையை அடுப்பில் வைத்துவிடுகிறார்கள். இரண்டுமணிநேரம் கழித்து வந்த குழந்தையின் தாய்க்கு கிடைத்தது கருகிய குழந்தைதான். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த உண்மை சம்பவத்தைப் படித்தபோது மனது கனத்துப்போனது. அதுவரைப் புரியாத போதை பழக்கத்தின் கொடூரம் புரிந்தது.
சுனில் ஊருக்கு சென்றிருப்பதாலும், பரத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், அப்புவின் குடும்பச்சூழல் காரணமாகவும் அவர்களால் கல்லூரி சுற்றுலாவிற்கு செல்ல இயலவில்லை. தனியே செல்லும் ப்ரேம் அவர்களின் கல்லூரியில் வேறு துறையில் படிக்கும் மாணவனான விஜய் மற்றும் அவன் நண்பன் மூலம் ப்ரௌன் ஷுகருக்கு அடிமையாகிறான்.
“ஹெராயின் அல்லது ப்ரௌன் ஷுகர், வெள்ளைப்பொடிபோல் இருக்கும். அதிலும் கலப்படம் செய்து பழுப்பு சர்க்கரையாக தயாரித்து விற்கிறார்கள். சில இடங்களில் இதை பள்ளிக் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் கலந்துகொடுத்து அப்பாவியான அவர்களின் வாழ்வை சீரழிக்கிறார்கள்.
இதை 4 வகையாக பயன்படுத்துகிறார்கள். சிகரெட்டில் அடைத்துப் புகைப்பது, மூக்குப்பொடிபோல் போடுவது, சேஸ் செய்வது மற்றும் தண்ணீரில் கலந்து ஊசிப்போட்டுக்கொள்வது. சிலர் இதன் தாக்கத்தால் உடனே இறந்துபோகிறார்கள். 4 நாட்களுக்குள் மனிதரைத் தன் வசப்படுத்தும் இந்த ப்ரௌன் ஷுகரை உடனே நிறுத்தினால் கோல் டர்க்கி வந்துவிடும்.”
கோல் டர்க்கி: விடாமல் தோன்றும் கொட்டாவிகள், உடலெங்கும் குத்தீட்டு நிற்கும் மயிர் கால்கள், மூக்கிலும் கண்ணிலும் வழியும் நீர், தொண்டை வறட்சி, வாந்தி மற்றும் மோஷன், உடலெங்கும் பரவும் வலி. இவையனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இம்சிப்பது. இது ப்ரௌன் ஷுகர் எடுத்துக்கொண்ட உடனே சரியாகிவிடும்.
ப்ரௌன் ஷுகரை உபயோகிக்கத் தொடங்கிய ப்ரேம் பணத்திற்காக வீட்டிலிருக்கும் பொருட்களை திருடி, வேலைக்காரன் மேல் பழி வந்தபோது வாய்மூடி மௌனியாகி, பரத்திற்கு பழக்கிவிட்டு, தெரிந்தவர் கடையில் திருடி, தெரிந்தவர்களிடம் ப்ரௌன் ஷுகரை விற்று, அப்புசாமிக்கும் பழக்கிவிடுகிறான்.
ப்ரௌன் ஷுகர் சரியாக விற்காத காரணத்தால் கலப்படம் செய்து விற்றதில் கமலி என்ற அப்பாவி பெண் பலியாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைத் தெரிந்த ப்ரேம், அடுத்தப் போதைப் பொருளான நாய் கொடைகளைத் தேடி கொடைக்கானலுக்கு செல்கிறான். வீட்டைவிட்டுப் போகிறேன், என்னைத் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு சென்றதால் பெற்றோர் அவனைத் தேடி அலைகின்றனர்.
அப்போதுதான் ப்ரேமின் படிப்பு நின்றது, அவன் நண்பர்களின் நிலைப்பற்றி ப்ரேமின் பெற்றோருக்கு தெரியவருகிறது. பாம்புக்கடி, தேள்கடி இதன்மூலம் ஏறும் விஷத்தைக்கூட போதையாக எடுத்துக்கொண்டவர்கள் இருக்கிறார்களாம். என்ன பயங்கரங்கள்! போதைப் பொருட்களைப் பற்றிய ஒரு குட்டி வரலாறும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதிலுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகள் போதை ஊசிகளை பயன்படுத்துகிறார்கள் என மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றினை நடத்தியது. 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 18 முதல் 75 வரை உள்ள பெரியவர்கள் என இரண்டு விதமாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 30 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறுகிறது ஆய்வறிக்கை. இது நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.3 விழுக்காடாகும். பெரியவர்களை பொறுத்தவரையில் 15 கோடியே 10 லட்சம் பேருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாசலப்பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் சரிபாதி ஆண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறதாம். 10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேருக்கும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் பேருக்கும் கஞ்சா பழக்கம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகளும் 1 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் போதை ஊசி பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் 10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 1 கோடியே 10 லட்சம் பேரும் போதை மாத்திரைகளை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறிஞ்சும் வகையிலான போதை பொடிகளை 30 லட்சம் குழந்தைகளும் 60 லட்சம் பெரியவர்களும் பயன்படுத்துவதாக கூறுகிறது. 10 முதல் 17 வயது வரை உள்ள 2 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 10 லட்சம் பேரும் கொகைன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் தினகரனில் வெளியிடப்பட்ட செய்தி இது.
ப்ரேமிற்கும் அவன் நண்பர்களுக்கும் என்ன ஆனது என்று 26 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறிய நூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். போதைப் பொருட்கள் பற்றிய நிறைய விஷயங்களை நம்மை அதிரவைக்கும்படி பல மனோதத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை சந்தித்து கலந்தாலோசித்து அறிய தகவல்களாக கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.
ஆர்வக்கோளாறில் செய்யும் செயல்கள்தான் வாழ்க்கையையே கோளாறாக்கிவிடுகிறது. போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது புதிய உலகில் சஞ்சரிப்பது போலத்தான் இருக்கும். அதன் விளைவைச் சந்திக்கும்போதுதான், ஏற்கனவே பழகிய எதார்த்தமான அழகான உலகைவிட்டு வெகுதூரம் பிரிக்கப்பட்டிருப்பது தெரியவரும். அப்படி நிதர்சனம் புரியும்போது, அதை ஏற்க உடலும் மனமும் ஒத்துழைக்காத நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இளைஞர்களே, பெரியவர்களே, பெண்களே, உலகின் மிகச் சிறந்த போதை எது தெரியுமா? அன்பு. அந்த அன்பிற்கு அடிமையாகிவிட்டால், அளவோடு அடிமையாகிவிட்டால், மற்ற எந்தப் போதைப் பொருட்களும் தேவையே இல்லை. விஷத்தை உறிஞ்சும் சக்தி தண்ணீருக்கு இருப்பதுபோல் அதே தன்மை மனரீதியாக அன்பிற்கும் இருக்கிறது.
போதைப் பழக்கத்திலிருந்து மீளத்துடிப்போருக்கு யோசிக்காமல் அன்புக் கரங்கள் நீட்டி அவர்களை அந்தப் புதைகுழியிலிருந்து மீட்போம்.
இந்நூலை அமேசானில் படிக்க:
பின் குறிப்பு:
பிக் பூஸ்டர் என்ற யூடியூப் சேனலில் என் கவிதை மற்றும் முல்லா கதைகளை அப்லோட் செய்கிறேன்.
சப்ஸ்க்ரைப் செய்து பார்க்கவும்.