லட்சங்களை
நேசிக்கும் இவ்வுலகில், லட்சியங்களை நேசிக்கும் பெண் சமூகச் சீர்திருத்தம் செய்யக்
கிளம்பினால்? அதுவும் குறுகிய மனப்பான்மையினர் வசிக்கும் கிராமத்திற்குச் சென்றால்?
வெறும் தோல்வியைத் தவிர வேறென்னக் கிடைக்கும்?
சமூகச்
சேவைச் செய்பவர்களெல்லாம் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை ஆதரிக்காவிட்டாலும் அவதூறாய்
பேசாமல் இருக்கலாம். பெண்களுக்குப் பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டாம், பழி சொல்லாமல்
இருக்கலாம்.
அன்னை
தெரெசா, அன்னிபெசன்ட், முத்துலட்சுமி ரெட்டி. இவர்களின் வெற்றிக்கதையை வரலாறு நமக்கு
உணர்த்திவிட்டது. வரலாற்றில் இடம்பெறாமல், வெற்றியும் அடையாமல், வேதனையைப் பரிசாய்
பெற்று தோல்வியில் தற்கொலை செய்துகொண்ட தேவதைகளின் கதையை எப்படி தெரிந்துகொள்வது? தெரிந்துகொள்ளலாம்
எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் பட்டுப்பூச்சி நாவலைப் படித்து.
சுகுனா
என்ற பட்டுப்பூச்சி தன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அந்தப் பட்டமளிப்பு விழாவில்
உரையாற்றிய பேரறிஞர் ஒருவரின் பேச்சை மனதில் பதித்து, சமூகச் சேவைச் செய்யமுடியும்
என்ற தன்னம்பிக்கையோடு அவள் தாயுடன் தாமரைக் குளம் என்ற கிராமத்திற்குச் செல்கிறாள்.
தானே
அலைந்து திரிந்து தேசிய வளர்ச்சித் திட்டத்தில் அவளுக்கு ஒரு வேலையைத் தேடிக்கொண்டாள்.
தாமரைக்குளம் என்ற கிராமத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்காக சர்க்கார் அமைத்திருந்த தேசிய
வளர்ச்சிப் பிர்க்காவின் தலைவியாக நியமிக்கப்பட்டாள்.
சென்ற
ஒரு வாரத்திலேயே அவள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு பணிபுரியும் கிராம தொண்டர்கள் அவர்களின்
அலுவல்களை சரியாக செய்யாமல், அதற்காக கொடுக்கப்பட்டிருந்த சைக்கிளில் உல்லாசப் பயணம்
மேற்கொள்வது பற்றியும், முதியோர் கல்விப் பள்ளிக்கூடம் ஒழுங்காக நடைபெறாமல் அந்த மண்
தரையில் எருக்கஞ்செடியும் எமபூண்டும் முளைத்திருப்பது பற்றியும், அரசாங்கத்திலிருந்து
பண உதவி பெறும் கோழிப்பண்ணைகளில் கசாப்புக்கடைக்கு போக வேண்டிய ஆடுகளை வளர்த்துக்கொண்டு
கோழிகள் வளர்ப்பதாக ஏமாற்றி மானியம் வாங்கிக்கொண்டிருந்த வடமலைப்பிள்ளை பற்றியும் தெரிந்துகொண்டாள்.
பட்டமளிப்பு
விழாவில் அந்தப் பேரறிஞர் சொன்னதைப் போல் மற்றவர்களின் அகக்கண்களை அவ்வளவு எளிதில்
திறக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்டாள்.
அந்தக்
கிராமத்து மக்கள் அப்பாவிகளாக பணத்திற்கும் பதவிக்கும் மதிப்புக் கொடுத்து சரியாக இருப்பதைத்
தவறாக கணிப்பவர்களாகவும், தவறாக இருப்பதைச் சரியாக கணிப்பவர்களாகவும் இருந்தனர்.
சுகுனா
முதல் சேவையாக அவளோடுப் பணிபுரியும் கிராம சேவகிகளின் பண்புக் குறைவான அலங்காரத்தைச்
சரி செய்ய முயன்றாள். அவளது அறிவுரையை விளக்க எழுத்தாளர் நா.பா குறிப்பிட்டிருந்த இந்த
வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. “பெண்ணுக்குத் தன் அழகே பகை. அதுவே நண்பன். பெண்ணின்
அழகு கவர்ச்சியினால் மற்றவர்களை அழிக்கும் போது ஆயுதம். அடக்கத்தினால் தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் போது அதுவே கவசம்.” இந்தரீதியில் அவள் உபதேசித்தபோது அவர்கள் அதைக் கேட்பதாக
இல்லை. தாமரைக் குளத்தின் சேரிக்குப் போய் ஏழை அரிஜனக் குழந்தைகளை அவளே பண்ணீராற்றுக்கு
அழைத்துச் சென்று குளிக்கவைத்து விட்டுவிட்டு வந்தாள்.
தன்னுடைய
பிர்க்காவைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாள். அப்பொழுது
கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் தன் சிந்தனையை ஒத்த இளைஞர் ரகுராமனைச் சந்தித்தாள்.
அவளைப் போலவே லட்சியங்களை உடைய மனிதர் என்ற
காரணத்தால் அவரோடு பண்பான முறையில் பேசிப்பழகினாள்.
கோழிப்பண்ணைகளில்
ஏமாற்றும் ஊழலும் இருக்கிறதால் சர்க்கார் அனுப்பும் உதவித் தொகையை நிறுத்தச் சொல்லியும்,
சேரிப்பகுதிகளில் தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகள் செய்துத்தரப்படுவதில்லை என்று பஞ்சாயத்து
போர்டைப் பற்றியும் மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தாள் சுகுனா. இதனால் சீற்றமடைந்த
வடமலைப் பிள்ளை, கிராம முன்சீப் மற்றும் பஞ்சாயத்து போர்ட் தலைவர் அவளை வஞ்சம் தீர்க்க
எண்ணினர்.
சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தபோது கன்னிகாபுர முதியோர் கல்விப் பள்ளிக்கூடத்தின் ஆண்டுவிழாவிற்கு
சென்ற சுகுனா மழையின் காரணமாக ரகுராமனின் தாயார் வீட்டில் தங்க நேர்ந்தது. இது போதுமே
அவர்களுக்கு. வதந்திகள் பரவின. ரகுராமனின் தாயார் சுகுனாவின் வீட்டிற்குச் சென்று சுகுனாவை இனிமேல் அவர்களின் ஊருக்கு வரவேண்டாம் என்றும், சமூகச் சேவையெல்லாம் பெண்களுக்குச் சரிவராது என்றும், மகளுக்கு திருமணம் செய்துவைக்கும்படியும் அவள் தாயாரைத் திட்டிவிட்டு சென்றார்.
விளைவு?
பழியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பட்டுப்பூச்சிப் பாதை மாறி பறந்துவிட்டது. இனி
கலகலப்பாக மாறப்போகும் பட்டினப்பூச்சி சந்தோஷமாக இருக்கவும், அவள்மேல் அள்ளித்தெளிக்கப்பட்டிருந்த
பழியின் கரைகள் நீங்கவும் நல்ல வரனாகப் பார்க்கசொல்லி எழுத்தாளர் இந்தக் குறுநாவலை
முடித்திருந்தார். எப்படி அவர் கற்பனை?
என்னது!
கற்பனையா? இதற்காகவா சமூகச் சேவை செய்யும் தேவதைகளைப் பற்றிச் சொன்னாய் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. வாழ்வில் சிலநேரங்களில் சில வினோதங்கள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நிகழும்.
அப்படித்தான் எழுத்தாளர் உருவாக்கியக் கற்பனைப் பாத்திரம் உண்மை சுகுனாவாய் உருபெற்று
அவர் முன் நின்றாள். உங்கள் கதாநாயகி என்று அவளை அறிமுகப்படுத்திக்கொண்டு அவள் வாழ்க்கையையும்
எழுத்தாளரின் கதைகளையும் ஒப்பிட்டு நடந்த உண்மை நிகழ்வுகளை அவரிடம் பகிர்ந்துகொண்டாள்.
கற்பனை
சுகுனா தாமரைக்குளம் என்றால், உண்மை சுகுனா அல்லியூரணியில் சேவை செய்தாள். அந்த சுகுனா
கல்லூரி முடித்த பெண் என்றால், இந்த சுகுனா கைம்பெண். அதுவும் பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்ட
கைம்பெண். அந்த சுகுனாவின் தோழர் ரகுராமன் என்றால், இந்த சுகுனா மறுமணம் செய்துகொள்ள
ஆசைப்பட்டது முருகனை.
இந்த
சுகுனா ஆசிரியராக பணியாற்றியப் பள்ளியில் தன்னுடன் பணியாற்றிய உயர்ந்த குணங்களைக் கொண்ட
முருகன் தனக்கு வாழ்க்கைத் துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினாள். முருகனும்
அவளுக்கு உறுதியான வாக்குகளைக் கொடுத்திருந்தான். ஆனால் புதுமைகளை விரும்பாத புளுத்த
மனிதர்களான பள்ளி நிர்வாகிகள் முருகனின் கருத்துக்கள் பிடிக்காமல் அவனை வேலையை விட்டு
நீக்கிவிட்டார்கள். சுகுனாவைப் புரிந்துகொள்ளாமல் பெற்றத் தாயே பழிச்சொல்லிவிட்டாள்.
இருவரும் நிராசையோடு பிரிந்துவிட்டனர். காலப்போக்கில் முருகனுக்கு கல்யாணமாகி குழந்தைப்
பிறந்தது. ஆனால் சுகுனா?
கைம்பெண்ணாகத்தான்
எழுத்தாளரைக் காணச் சென்றிருந்தாள். அவள் வாழ்க்கையில் நடந்தவற்றையும், அவள் அடைந்த
வேதனையையும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த காரணத்தையும், அவளுக்கு தோன்றிய சின்ன
ஆசைகளையும் எழுத்தாளரின் ‘தெருவோடு போகிறவன்’ மற்றும் ‘முத்துச்சாவடி’ சிறுகதைகளோடு
ஒப்பிட்டு விளக்கினாள்.
தெருவோடு
போகிறவன்:
எனக்கு
இளம் விதவைகளைப் பற்றி சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்தது. கல்கியின்
கடிதமும் கண்ணீரும் படித்தபோது கூட அந்த ஆசை இருந்தது. இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும்
‘தெருவோடு போகிறவன்’ சிறுகதையைப் படித்ததும் அந்த ஆசை எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டது.
இதைவிட சிறந்தக் கதையைப் படைக்க என்னால் முடியாது என்று தோன்றுகிறது. இந்தக் கதையை
ஜீரணிக்கவே எனக்கு அவகாசம் தேவை. முழுக்கதையுமே இதில் ஒரு அத்தியாயமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
படியுங்கள்.
அம்மா
தன் ஆசைப்பெண்ணிற்கு ஐந்து வயதுமுதல் பூச்சூட்டி மகிழ்கிறாள். பட்டுடுத்திப் பார்த்து
ரசிக்கிறாள். கண்ணாடி வளையல்கள் கலகலக்க குதூகலமாய் குதித்தோடும் பெண்ணைக் கண்டுகளிக்கிறாள்.
குங்குமமிட்டுக் கொஞ்சி மகிழ்கிறாள். அப்போதெல்லாம் உடனில்லாத கணவன் தாலிகட்டும் நேரத்தில்
வருகிறான், தாலியை மட்டும்தான் தருகிறான், மிஞ்சிப்போனால் மிஞ்சி அணிவிக்கிறான்.
அவன்
இந்த உலகைவிட்டுப் போகும்போது அதற்கு முன் அவள் அனுபவித்த அனைத்து சௌபாக்கியங்களையும்
கையோடு கொண்டுபோய்விடுகிறான். கொடுத்ததைக் கேட்பது நியாயம். கொடுக்காததைக் கேட்பது
என்ன நியாயம்? வசந்தத்தைத் தருவதுதானே வாழ்க்கைத் துணை? தான் வாழ்ந்து முடித்தபின்
தன்னவளை இருட்டில் தள்ளிவிட்டுப் போவதா வாழ்க்கைத் துணை? தெரிந்தோ தெரியாமலோ ஒரு கைம்பெண்
பூவோ பொட்டோ வைத்துக்கொண்டால், அபசகுனம், அறுத்த முண்டையா இருக்காளா, ஆண்கள வளைக்கிறான்னு
எத்தனை அவதூறுகள்? ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணின் கணவனை இழந்துவிட்டால் அவள் விதவைக்கோலம்
பூணும் முன் கடைசியாய் ஒருமுறைச் சுமங்கலியாய் பார்க்க நினைக்கிறது கொடுமை இல்லையா?
இப்போது
பால்ய விவாக தடைச்சட்டமும், விதவை மறுமணச்சட்டமும் நடைமுறையில் இருக்கிறது. வெள்ளைச்
சேலையும் மொட்டைத் தலையும் ஒழிந்துபோய்விட்டது. பூவும் பொட்டும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகிவிட்டது.
இந்தச் சட்டங்களைக் கொண்டு வர எத்தனைப் போராட்டங்கள்? பெரியார் போன்ற மகத்தான தலைவர்கள்
வாழ்ந்த காலத்திலும், அதற்கு பிறகு பிறந்த பெண்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் அதற்கு பதிலாக பாலியல் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. எத்தனைச் சட்டங்கள் வந்தும்
பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதை ஒழிக்க பெரியார் மீண்டும்
ஓர் பிறவி எடுத்தால் நன்றாக இருக்குமே!
முத்துச்சாவடி:
இந்தக்
கதையை நான் படித்ததும் இப்படி ஒரு துயரம் எழுத்தாளர் நா.பாவின் வாழ்வில் நடந்திருக்கிறதா
என்று வேதனை அடைந்தேன். புத்தி சுவாதீனம் இல்லாத பெண், எழுத்தாளர்கள்மேல் கொண்டிருந்த
தமிழ் பைத்தியத்தால் அவரைக் காண வந்தாள். ஆனால் அவர் அப்போது தனியாக இருந்ததால் இரவுநேரத்தில்
அவளை தன்னோடு தங்கச் செய்வது முறையல்ல என்று நினைத்து அவளை திட்டி அனுப்பிவிடுகிறார்.
அவருக்கு அவள் மூளை வளர்ச்சிக்குன்றியவள் என்று தெரியாது. அப்போது எழுத்தாளர் ராமேஸ்வரத்திற்கு
ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். கொடைக்கானலைச் சேர்ந்த அந்தப்பெண் எழுத்தாளரைப் பார்க்க
தனியே ராமேஸ்வரம் சென்றவள் அவர் செய்த அந்த அறியாச் செயலில் இந்டோசிலோன் எக்ஸ்பிரஸ்
ரயிலில் சென்றபோது பாம்பன் பாலத்தில் ரயிலின் கதவைத் திறந்து கடலில் குதித்துவிட்டாள்.
மீட்கமுடியவில்லை. இதிலிருந்து மீண்டு இந்தக் கதையை அவர் எழுத பன்னிரெண்டு ஆண்டுகள்
தேவைப்பட்டன.
கைம்பெண்ணாக
இருக்கும் சுகுனா அலங்கரித்துக்கொள்ள ஆசைக்கொண்டதையும் மறுமண ஆசை நிராசையாய் போனதில்
ராமேஸ்வரம் சென்ற வேளையில் சரியாய் பாம்பன் பாலத்தைப் பார்த்ததும் தற்கொலைச் செய்துகொள்ள
முயன்றதையும் நா.பாவிடம் சொல்லிவிட்டு அவர் மனைவி தந்த இரவு உணவை உண்டுமுடித்து, அவர்
மனைவியுடன் தங்கி மறுநாள் புறப்பட்டாள். கிளம்பும்போது அவர்களை சுதந்திர தினத்தன்று
அல்லியூரணிக்கு வந்து பக்குவப்பட்டிருக்கும் கிராமத்தைப் பார்க்கச் சொல்லி அழைப்புவிடுத்தாள்.
அன்று முதல் நா.பாவிற்கும் சுகுனாவிற்கும் சகோதர உறவு மலர்ந்தது.
சொற்பொழிவாற்ற
கோவைக்குச் சென்றவர் விவேகானந்த மூர்த்தி என்ற இளைஞரைச் சந்தித்தார். அந்த இளைஞர் ஆண்கள்
கைமை நோற்பதைப் பற்றி விவாதம் செய்தார். குறுஞ்சிமலரையும் பட்டுப்பூச்சியையும் பற்றிப்
பேசினார். கற்பனைச் சுகுனாவைக் காதலிப்பதாகச் சொன்னார். அப்போது உண்மை சுகுனாவை மணந்துகொள்வாயா
என்று கேட்க அந்த இளைஞர் அதற்கு மனப்பூர்வமாக கட்டுப்பட்டார். சுகுனாவிடமும் பேசி சம்மதம்
வாங்கிவிட்டார் நா.பா. எல்லாமே சரியாக நடந்துவிட்டால் விதி என்ற ஒரு வார்த்தை வந்திருக்குமா?
மஞ்சள்
பத்திரிக்கை மூலம் விதி சதி செய்துவிட்டது. பேனா மூலம் வாரி இறைக்கப்பட்ட அமிலத்தால்
சுகுனா கடிதம் எழுதி எழுத்தாளர் நா.பாவிடம் சேர்ப்பித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.
தன்னோடு வாழ முடிவு செய்து வாழாமலே மரணித்துவிட்ட சுகுனாவிற்காக விவேகானந்தமூர்த்தி
கைமை நோற்கிறார். அந்த இளைஞர் கேட்ட கேள்விகளுக்கு அவர்மூலமே விடைக் காண்பதை எண்ணி
எழுத்தாளர் மனதுக்குள் கண்ணீர் வடித்தார்.
கற்பனையும்,
உண்மை நிகழ்வுகளும் சேர்த்து எழுதப்பட்டிருந்த இந்நாவலின் வேதனை நிறைந்த இறுதி அத்தியாயங்களை
உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
இன்றளவும்வெளிப்படையாக
பத்திரிக்கைகளில் வரவில்லை என்றாலும், இணையத்தில்
ஆண்களுக்கு கிடைக்கும் இனிப்பான விருந்து இது. நடிகைகளின் மானத்தை உரியும் உத்தமர்களே,
ஒரு நொடி. ஒரே ஒரு நொடி கூடவா அவர்களின் கவர்ச்சியில் உங்கள் மனம் சலனப்பட்டிருக்காது?
உங்கள் கண்கள் அந்த அழகைக் கண்டு மயக்கம் கொண்டிருக்காது? அந்த ஒரு நொடியை ஏன் மறந்துவிட்டு
எழுதுகிறீர்கள்?
ஒவ்வொருவருக்கும்
தன் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். நடிப்பு அவர்களின் தொழில். அதில்
சாதிக்க சிலக் கேடுகெட்டக் கண்களுக்கு விருந்தாக வேண்டியிருக்கிறது. இது முழுக்கமுழுக்க
நடிகைகளின் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? இதைத் தவறென்றால் இதைச் செய்யத் தூண்டும்
ஆண்களைப் பற்றி என்னவென்று எழுதுவது? நாகரிகத்தைக் கற்பிக்கவும் நாகரிகம் இருக்கிறது
என்பதை மறக்காதீர்கள். அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் அநாகரிகமும், அடுத்த
வீட்டுப் பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதும் ஒன்று என்பதை மீண்டும் நான் உங்களுக்கு
நினைவூட்டுகிறேன். பெண்களின் கண்ணீர் விலை மதிப்பற்றது. அதை குடித்துப் போதைக்கொள்ளாதீர்கள்.
தோல்வியுற்ற
இலக்கியத்திலிருந்துதான் உயிர் பிரியும்வரைப் போராடிப் பார்க்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையைக்
கற்றுக்கொள்கிறோம். அதைப்போல் தோல்வியடைந்த இந்தச் சமூக சேவகியின் கதையிலிருந்து, விமர்சனங்களை
விரலில் சுண்டிவிட்டு வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
நீண்டதொரு விமர்சனம் - நூலைப் படிக்க ஆவல் ஏற்படுகிறது. அமேசானில் பார்க்கிறேன்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் வாசிப்பு.
மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteநீண்ட விமர்சனம். படித்தேன், ரசித்தேன்.
ReplyDeletethank you sir.
Deleteஆழ்ந்த விமர்சனம்... அருமை...
ReplyDeleteவாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.
Deleteஅபி
ReplyDeleteவிமர்சனம் அருமை.கண்களில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.
வித்யா
ஹா ஹா நன்றி மேடம். உங்களுக்கும் சுகுனா போல மென்மையான மனசு அதான் அழுக வருது.
Deleteஅசுர வேகத்தில் அருமையான நூல்களை அரிமுகம் செய்கிறாய்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அபி.
எப்படி இவ்வளவு சிறப்பான நூல்களை வரிசையாக தேர்ந்தெடுக்கிறாய் என்ற தொழில் ரகசியத்தை சொல்.
நன்றி அரவிந் சார். அதுதான் தொழில் ரகசியம்னு நீங்களே சொல்லிட்டீங்களே. அப்புறம் எப்படி சொல்லுறது?
Deleteஅழகான மற்றும் ஆழமான விமர்சனம். நிச்சயம் படிக்கிறேன். நல்ல நல்ல நூல் அறிமுகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeletethanks a lot fernando
DeleteWidow ah irunthalum single parent womeb ah irunthalum intha society treat panra way sollavay thevai illa easy ah simple ah oru word la mudichiduvanga avalukenna...this is our so called society...
ReplyDeletethank you amudha. ippo ellaam maarittatha solrangka. irunthalum kandippaintha pazhamaikal engayavathu irukkum.
Delete