Thursday, 23 July 2020

உலகத்தில் சிறந்தது எது?

’பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
பசித்த முகம் பார்த்து, பதறும்நிலைப் பார்த்து பழம் தரும் சோலையது
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவிலது
தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து அணைக்கின்ற தெய்வமது’
அது தூய்மை, அது நேர்மை, அது வாய்மை, அதன் பேர் தாய்மை.

கேள்வியையும் பதிலையும் மட்டும் தெரிந்துகொண்டால் போதுமா? அந்தப் பதில் அழுத்தமாக இருக்க வேண்டாமா? எதற்கும் ஒரு உதாரணம் இருந்தால்தானே அது அழுத்தமான பதிலாகும்? இதோ! அந்த உதாரணம் எழுத்தாளர் சிவசங்கரியின் ‘அம்மா’ என்ற குறுங்கதையில்.

வித்யா என்ற இந்தியப் பெண், அமெரிக்க வாழ் இந்தியனான ராஜுவை மணந்து அமெரிக்கா செல்கிறாள். லூயிவில்லின் அழகிலும், கணவன்மேல் கொண்ட அன்பிலும், வேலைப் பளுவைக் குறைக்கும் எந்திரங்கள் தந்த மயக்கத்திலும் அமெரிக்கா சென்றவள் அங்கு சென்ற சில மாதங்களிலே அந்த ஊர் கற்பித்த சோம்பேறித்தனத்தில், எந்திரங்களிடம் வீட்டு வேலைகளை சரியான முறையில் ஒப்படைக்கவும் ஒரு எந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தொடங்குகிறாள்.

இன்றைய தலைமுறையின் நிலைமை இதுதான். ஆரம்பத்தில் அழகாகத் தெரியும் அமெரிக்கா நாளாக நாளாக ஒரு சலிப்பைக் கொடுக்கிறது. ஆனாலும் வெளிநாட்டின் மோகம் விடவில்லையே! படிப்பு, வேலை, வாழ்க்கை, வாய்ப்புகள் இப்படி ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் தனிமையைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை எங்கிருந்தாலும் தொடர்பு கொள்கிறார்கள், கண்ணும் கருத்துமாக கண்காணிக்கிறார்கள், வருவோம் வருவோம் என்ற நம்பிக்கைத் தந்து, வந்தும் போகிறார்கள். ஆனால் பல பிள்ளைகள்? அதற்கும் ஆயிரம் காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோருக்கு வீடே ஒரு முதியோர் இல்லம்போல. அவர்களுள் சிலர் தங்களைத் தனிமையிலிருந்துக் காத்துக்கொள்ள சமூகச் சேவை செய்கிறார்கள்.

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பிள்ளைகள் மீதும் தவறு இருக்கிறது, பொறுப்பாகவும் பொறுப்பைப் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்த்தப் பிள்ளைகள் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டப் பொறுப்புகளைச் செய்யப் போகும்போது அதைப் புரிந்துகொள்ளாமல் தங்களை வருத்திக்கொள்ளும் பெற்றோர் மீதும் தவறு இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் இந்திய வாழ்க்கை வரும் காலங்களில் வெறும் நினைவாகவே இருக்கப்போகிறது. இங்கு இல்லாத வாய்ப்புகளா? அப்படியே வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாமே. அசிங்கத்தை அப்புறப்படுத்தாமல் அனைவருமே அந்த இடத்தைவிட்டுப் பறந்துவிட்டால் யார் அந்த வேலையைச் செய்வது? பள்ளத்தில் விழுந்துகிடப்பவனைக் கைக்கொடுத்துத் தூக்கிவிடுவதுதானே பலம்? என்னதான் வாய்ப்புகள் வெளிப்படையான காரணம் என்றாலும், வெளிநாட்டின் மீதுகொண்ட வெறித்தனமான ஆசையும் குடும்பச் சூழலிலிருந்துத் தப்பித்துக்கொள்வதும் ஒரு காரணம்தான்.

என்னதான் இந்தியர் அன்பு பாசம் நிறைந்தவர்களாக இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. கலாச்சாரம் நம்மை அப்படி செதுக்கிவைத்திருக்கிறது. கட்டுக்கோப்பான கலாச்சாரத்தில் பெற்றோரின் பாசச்சிறகுகளில் பொத்திவைத்து வளர்க்கப்பட்ட வித்யாவால் அமெரிக்க மக்களின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அவள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்க் டோரா தம்பதியருக்கு 4 பிள்ளைகள். இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். அந்தக் குடும்பத்திற்கு வித்யாவின் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். வித்யாவும் டோராவும் தோட்டத்தில் நின்றிருந்தபோது டோராவின் பெண் ஜென்னிக்கு விபத்து என்ற செய்தி வந்தது. இந்தியத் தாயான வித்யா பதைபதைக்க, அமெரிக்கத்தாயான டோராவோ சிலநொடிகள் வெறித்துப் பார்த்துவிட்டுப் பின் மெல்ல அந்த இடத்திற்குச் சென்றாள்.

அடிப்பட்டு இரத்த வெள்ளத்திலிருந்த ஜென்னியை வித்யா தூக்கப்போக, டோரா அதைத் தடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் வந்ததும் ஜென்னியை அனுப்பிவிட்டு மருத்துவமனைக்குப் போகவில்லை. வித்யா அதைப் பற்றிக் கேட்டதற்கு வீட்டிற்குச் சென்று மார்கிற்கு ஃபோன் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றாள். அதன்படியே மார்கிற்குத் தகவல் சொல்லிவிட்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கும் டோரா முதலில் கேட்ட கேள்வி ஜென்னிக்கு உயிர் இருக்கிறதா? இதைக் கேட்ட வித்யாவின் கோபம் உச்சத்தை எட்டியது. மார்க் வந்ததும் ஜென்னி ஆபத்தான நிலையில் இருக்கிறாள் அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு டோராவும் மார்க்கும் வீட்டிற்கு கிளம்பினர். வீட்டிற்கு வந்த வித்யா டோராவின் தாய் பாசத்தை விமர்சித்து கணவனிடம் விவாதித்தாள். ராஜுவும் அவளுக்கு எதார்த்தங்களைப் புரியவைக்க முயன்று தோற்றான்.

அடிப்பட்டிருப்பவரைத் தூக்கக்கூடாது என்பது அங்குள்ள விதி. தூக்கத் தெரியாமல் தூக்கி அதிலேயே உயிர் போய்விட்டால்? அதனால் முறையான அட்டெண்டர்களுடன் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். ஜென்னி அவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்ததால்தான் டோராவின் வாயிலிருந்து அப்படி ஒரு சந்தேகமான வார்த்தை வந்திருக்கும். ஒரு குழந்தைக்காக இருவருமே மருத்துவமனையில் இருந்துவிட்டால் வீட்டிலிருக்கும் 3 குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது? இதுதான் எதார்த்தங்கள். இதனைத் தப்பாக அர்த்தப்படுத்திக்கொண்ட வித்யா டோராவை பாசமற்ற ஜடம் என்றாள்.

குழந்தைகளின்முன் தன் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கும் டோராவின் தூய்மையான தாய் பாசத்தை வித்யா புரிந்துகொள்ளும் நேரமும் வந்தது.

இந்தியத் தாயான வித்யாவையே அமெரிக்கத் தாயான டோராவின் கால்களில் விழத்தூண்டிய நெகிழ்ச்சியான தருணமது. அது என்ன தெரியுமா? சிறுநீரகம் செயலிழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வளர்ப்புமகள் ஜென்னிக்கு டோரா தன் சிறுநீரக உறுப்பையே கொடுக்க முடிவு செய்ததுதான்!

வெள்ளைக்காரிகளெல்லாம் கெட்டவர்களும் இல்லை. இந்தியப் பெண்களெல்லாம் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்படவேண்டியவர்களுமில்லை. எல்லா நாட்டுப் பெண்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

பாரெங்கும் தாய் பாசம் ஒன்றுதான். அது வெளிப்படும் தன்மைதான் வேறு. பதற்றப்படாமல் புத்திசாலித்தனமாகவும், சொந்தப் பிள்ளை வளர்ப்புப் பிள்ளை என்ற பாகுபாடு பாராமல் பொதுநலமாகவும் முடிவெடுத்த டோரா பூஜையில் வைக்கப்படவேண்டிய மலர்களுள் ஒன்று.

இந்தக் கதையை அமேசானில் படிக்க



18 comments:

  1. அபி
    அருமை.‌கதையை படிக்க ஆவலாக உள்ளது. எனக்கு சிவசங்கரி அவர்களை மிகவும் பிடிக்கும்.
    வித்யா

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். எனக்கும் பிடிக்கும். நல்ல எழுத்தாளர். அழுத்தமான நிகழ்வுகளால் வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைப்பவர்.

      Delete
  2. அர்த்தராத்திரியில் குடைபிடிப்பது என்று சொல்வர் அதுபோல , இந்திய பண்பாடு கலாச்சாரம் நாக ரீகம் போன்றவற்றை அடியொரு காற்றில் பறக்கவிட்டு வெளி நாட்டத்திலுள்ள கலாச்சாரம், நடை, உடை பாவனைகள், வசதி வாய்ப்புகளை சுவீகரித்துக்கொண்டு நாமும் வெளி நாட்டவரும் ஒன்றுதான் என்று நினைத்து பொலிவாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதே சமயத்தில் வெளி நாட்டவரின் குண நலன்களை தவறுதலாக எடைபோட்டு ஒரு prejudiced கண்ணோட்டத்திலேயே அவர்களை தீர்மானிப்பவர்களும் உண்டு.

    இங்கே சொந்த மகன் வளர்ப்புமகன் என்ற பாகுபாடு பெரும்பாலும் கிடையாது.மேலும் வெளி நாடு சோம்பேறித்தனத்தை கற்றுத்தருவதாக சொல்வது ஏற்புடையதல்ல.இங்கே எத்தனை சிறுவர்களாக இருந்தாலும் உடன் செல்ல முடியவில்லை என்றபோதும், தைரியமாக ஆம்புலன்ஸில் அனுப்பிவிட்டு நிதானமாக ஹாஸ்பிட்டல் போகலாம், தேவையான எல்லா உதவிகையும் ஆம்புலன்ஸ் crew முன் நின்று செய்துவிட்டு மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டுதான் செல்வார்கள், இங்கே organ திருட்டு போன்ற இயக்கமற்ற செயல்கள் கிடையாது என்றே சொல்லலாம்.

    எனினும் தாயன்பு எல்லா தேசத்து அம்மாக்களுக்கும் ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். இந்திய கலாச்சாரத்தில் வாழ்ந்த எனக்கும் முதலில் இதைப் படித்தபோது வெளிநாட்டுப் பெண்ணின் நடவடிக்கைப் புதிதாகத்தான் தெரிந்தது. பிறகு படிக்க படிக்க வியப்பாக இருந்தது. அழுது புலம்பி ஊரைக்கூட்டி ஒன்றும் செய்யமுடியாமல் போவதற்கு நிதானமாக செயல்பட்டிருப்பது பிடித்திருந்தது. நோயாளியை அனுகிய விதம் நன்று. சிறுவர்கள் சொன்ன வேலையை மனமுவந்து செய்துகொடுத்துவிட்டு கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக் கொள்ளும் பாங்கு நன்று.

      Delete
    2. நான் சொல்ல நினைத்து வந்ததை கோ சொல்லிவிட்டார்...

      கீதா

      Delete
  3. இந்தக் கதை நான் படித்ததில்லை.  உங்கள் விவரிப்பு சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  4. நல்லதொரு அறிமுகம். நான் இந்தக் கதை படித்த நினைவில்லை. படிக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  5. நெகிழ்ச்சியூட்டும் மதிப்புறை.
    நிச்சயம் நூலை படிக்கிறேன்.

    ReplyDelete
  6. நல்லதொரு விமர்சனம்... இணைப்புக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  7. துவக்கத்தில் வரும் கவிதை அருமை.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஷா. அது கவிதையல்ல கண்ணதாசன் வரிகளில் வெளிவந்த பட்டினத்தில் பூதம் படப்பாடல்.

      Delete
  8. அபி உங்கள் விம்ரசனம் செமையா இருக்கு. ரொம்பவே உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க.

    கடைசியில் சொல்லியிருப்பது அருமை.

    கவிதை அருமை அபி

    வாழ்த்துகள்

    கீதா

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம். நூல் விமர்சனமும் நன்றாக எழுதுகின்றீர்கள். உங்கள் கவிதைதானே முதலில் வருவது? அருமை. வாழ்த்துகள்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் சார் கீதா மேடம். அது என் கவிதையல்ல கண்ணதாசனின் வரிகளில் வெளிவந்த பாடல். படம் பட்டினத்தில் பூதம். இந்தத் தலைப்பிற்கு ஏற்றதாக இருக்கும்னு போட்டது.

      Delete