Tuesday, 23 June 2020

அதுவும் ஓர் மனிதச் சமூகம்


நான் கொஞ்சநாள் முன்பு ஒரு குறும்படம் பார்த்தேன். அந்தப் படத்தின் பெயர் கற்பினியான திருநங்கை. திருத்தாயவளே.
அந்தப்படத்தில், திருநங்கை ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தன் குழந்தையைக் காணோமெனத் தேடியலைந்துக் கண்டுகொள்ளும் தாய் அந்தத் திருநங்கையைக் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறாள்.

பத்துமாதம் சுமந்திருந்தால்தானே உனக்குத் தாய்மையின் வலி புரியும் என்ற வார்த்தையைக் கேட்டு அவள் உடைந்து அழுகிறாள். உடனே ஓர் மருத்துவரை அனுகி தன்னால் தாயாக முடியுமா என்று ஆலோசிக்கிறாள்.

அந்த மருத்துவரோ வாடகைத்தாய் முறையைப் பரிந்துரைக்கிறாள். இங்கே பாவப்பட்டவர்கள் திருநங்கை மட்டுமல்ல. சூழ்நிலைக் காரணமாகத் தன் கருவறையை வாடகைக்கு விடும் அனைத்துப் பெண்களுமே பாவப்பட்டவர்கள்தான்.

தன்னால் தாயாக முடியாதநிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெறத் துடிக்கிறாள் ஒரு பெண். இது வாடகைத்தாய்மூலம் பிறந்தக்குழந்தை என்று மற்றவருக்குத் தெரிவிக்கப்போவதுமில்லை, வாடகைத்தாய் யாரென்று மற்றவருக்குக் காட்டப்போவதுமில்லை. தாய்மையின் முழு வீரியம் தெரியாமல் தனக்குப் பணம் கிடைத்தால் போதும், தன் பிரச்சனைகள் தீர்ந்தால் போதுமென்று அந்தப் பாவத்திற்கு உடன்படுகிறாள் ஒரு பெண்.

மசக்கையும், பிரசவ வலியையும் அனுபவித்துப்பெறும் குழந்தையை மயக்கம் தெளியும் முன் மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் கொடுமையை மருத்துவமும் அனுமதிக்கிறது, மனிதர்களும் அனுமதிக்கிறார்கள். ஒருவருக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயம் மற்றவருக்கு பெரும் துக்கத்தைக்கொடுக்கும் என்பதை உணருவதுமில்லை.

தாயாகத் துடிப்பவளுக்கும், தாயாக முடிந்தவளுக்கும் தாய் பாசம் என்ற உணர்வு ஒன்றுதான் என்பதையும் புரிந்துகொள்வதில்லை.

சரி இந்தத் திருநங்கை விஷயத்திற்கு வருவோம். மருத்துவரின் டெர்ம்ஸ்  அண்ட் கண்டிஷன்ஸ்கு ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக சம்மதிக்கிறாள். அதன்படி குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிடுகிறாள். ஆனால் தாய்மை அந்தக் குழந்தையைப் பார்க்கத்துடிக்கிறது.
மருத்துவரை  தொல்லை செய்து அதைத் தூரத்திலிருந்துப் பார்க்க அனுமதிப் பெற்று அந்தக் குழந்தையைத் தேடிச்சென்று பார்க்கிறாள். அந்தக் குழந்தை அவளை அம்மா என்று அழைக்கிறது.   இதோடு இந்தக் குறும்படம் முடிகிறது. அதன்
 லிங்க்.

ஆனால் திருநங்கை தனுஜாசிங்கம் அளிக்கும் பேட்டியில் உலகில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பில்லை என்று இந்தக் குறும்படத்தை வன்மையாகக் கண்டிக்கிறாள். பிறப்பில் ஆணாக இருக்கும் திருநங்கைகளுக்கு கர்பப்பை இருக்காது
என்கிறாள்.


மற்றொரு வீடியோவில் திருநங்கை பிறப்பால் அப்படியாவதில்லை. குறிப்பிட்ட வயதில் அப்படியாகிறார்கள். அவர்களின் மனநிலையின் அழுத்தம் பற்றியும், அவர்களை எப்படி அனுக வேண்டுமென்றும், சாதித்தத் திருநங்கைகளில் சிலரையும்

 உதாரணம் காட்டப்படுகிறது.

இப்படி அவர்களைப் பற்றிய ஆய்வு வீடியோக்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது நாம் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். இவ்வளவு விஷயம் இங்கே சொல்லப்பட்டதன் காரணம்? வாடாமல்லி.எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி புத்தகம்.

பொதுவாக நாவல்கள் முதலில் சந்தோஷமாய் ஆரம்பித்துப் போகப்போகதான் வலிகளை உணர்த்தும். ஆனால் 43 அத்தியாயங்களைக் கொண்ட  இந்த நாவலில்  முதல் அத்தியாயத்திலிருந்து  இருதி அத்தியாயம்வரை வலி, வலி, வலி மட்டுமே.

எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் சுயம்பு அவனுக்குள் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் கஷ்டங்களைச் சகிக்க முடியாமல் ஊருக்குச் செல்கிறான். அவன் ஊர் சென்று சேரும்வரை அனுபவிக்கும் இன்னல்கள்தான் முதலிரண்டு அத்தியாயங்கள். பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் அவன், இயல்பாய் பேருந்தில்வரும் ஒரு பெண்ணின் பக்கத்தில் அமர்ந்து அவள் அழகை ரசிக்கிறான். பெண்போல் அவள்மேல் சாய்கிறான்.

அவனை ஆணாகவும் கெட்டவனாகவும் பாவிக்கும் மற்றவர்கள் அடித்துத் துன்புறுத்தி கீழே இறக்கிவிடுகிறார்கள். சாக நினைத்தும் முடியாமல் கஷ்டப்பட்டு ஊருக்குச் செல்கிறான்.
அங்கும் அவனுக்குத் துன்பமே. கல்லூரிக்கு போகமாட்டேன் என்றதும், அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்பதை உணராத பெற்றோர் அடித்து, கெஞ்சி அறிவுரைச் சொல்லிக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். பலன் என்னவோ பூஜியம்தான்.

அவனின் உடற்கோளாறுகளை உணராதவர்கள் மனநிலைப் பாதிக்கப்பட்டவன், பெண்களைக் கற்பழிக்க முயல்பவன் என்று விரட்டிவிடுகிறார்கள். இங்கே சில விஷயங்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

இந்த நாவல் வெறும் திருநங்கையின் கஷ்டங்களை மட்டும் உணர்த்தும் நாவலல்ல. எந்தநிலையிலும் சுயம்புவைக் கைவிடாத மூர்த்தி முத்துவின் நட்பு, என்னதான் சண்டை வந்தாலும் ஆபத்துக்கட்டத்தில் ஈகோப்பார்க்காமல் இணைந்து செயல்படும் மாணவர்களின் ஒற்றுமை,  தம்பியைப் படிக்கவைக்க பதிவாளர் காலில் விழும் அண்ணனின் பாசம், தன் பிள்ளைப் படிக்காமல் போனாலும் அவன் நண்பர்களைத் தன் பிள்ளைகளாக ஏற்கும் தந்தையின் பெருந்தன்மை, தாய்க்கும் மேலாக வளர்க்கும் அக்காவின் அன்பு என்று அனைத்து உணர்வுகளையும் அளவு குறையாமல் சரிசமமாய் உணர்த்துகிறது.

பெண்ணாக மாறும்  சுயம்பு தன் கல்லூரியில் படிக்கும் டேவிட்டைக் காதலிக்கிறாள். ஆணான சுயம்புவை அவன் ஊரில் வசிக்கும் மலர்கொடி காதலிக்கிறாள். இருவரின் காதலும் நிரைவேறப்போவதில்லை. ஆனால் இரண்டிலும் உன்னதமும் துயரமும் இருக்கிறது.

வீட்டிற்கு அழைத்து வந்த அவனை அடுத்த வருடமாவது கல்லூரிக்கு அனுப்பிவிடலாம் என்று பெற்றோர் கனவுகாண அந்தக் கனவிலும் மண்ணையள்ளிப்போடவைக்கிறது அவன் ஹார்மோன் மாற்றங்கள்.

சேலைக்கட்டிக்கொண்டுதான் தன் காதலன் டேவிட்டிற்கு கடிதம் எழுதவேண்டுமென்று சேலைக்கட்டி அடி வாங்குகிறான். செத்துப்போன சீத்தாலக்‌ஷ்மி பேய்தான் பிடித்திருக்கிறது என்று அதற்கான சடங்குகளைச் செய்ய, அந்த மூடத்தனமும் அவனுக்கு எதிராகவே அமைகிறது. சேலைக்கட்டியதால் ஊர் கலவரத்தை ஏற்படுத்தியவன், அந்தக் கலவரம் முடியும் முன்னமே மீண்டும் அந்தத் தவறைச் செய்கிறான்.

  அடியும் சூடும் வாங்கியவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  மீண்டும் அதேத் தவறைச் செய்து அவன் அக்கா கல்யானத்தையும் நிறுத்திவிடுகிறான். அத்துடன் அவன் குடும்பத்தாரின் உறவையும், உயிராய் நினைத்த அக்காவின் அன்பையும் மனம்துடிக்க இழக்கிறான்.
அவன் சேர்க்கப்பட்ட மருத்துவமனையிலிருக்கும் திருநங்கை பச்சையம்மாளிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவனை மகளாக ஏற்றுக்கொள்கிறாள். வேறுவழியின்றி அவளுடன் சென்றவன் விபச்சார கேசில் மாட்டிக்கொள்கிறான். இங்கு பச்சையம்மாளின் உண்மையான அன்பும் பரிதவிப்பும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது.

அவனை வீட்டிற்குக் கொண்டுச் செல்லும் வழியில், தப்பித்து ரயிலேறி டெல்லிக்குச் செல்கிறான். இதற்கிடையில் சுயம்புவின் குடும்பம் நிலைக்குலைந்துபோய்விட்டது. தம்பியின் நினைப்பில் அக்கா படுத்தபடுக்கையாகிவிட்டாள். டேவிட்டும் முத்துவும் வந்து பார்த்துவிட்டு, டேவிட், அலி பற்றியும் பாலினமாற்றம் பற்றியும் விளக்குகிறான்.

டெல்லி செல்லும் முன் பச்சையம்மாவுடன் இருந்த நேரத்தில் கடைசி நம்பிக்கையாய் குடும்பத்திற்கு மணியார்டர் அனுப்ப, அது யாருக்கும் தெரியாமல் அவன் அண்ணி கோமளத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.
திருநங்கைகளின் பூஜை, வரலாறு என்று அவர்கள் சொல்லும் கடவுள் நம்பிக்கையுடைய கதை, மற்றும்  அவர்களின் சடங்குகளைப்பற்றியும்  விளக்கியிருக்கிறது இந்நாவல். பாதி ஆணாகவும், பாதிப் பெண்ணாகவும் இருப்பவர்களை முழுப்பெண்ணாக மாற்றச் சுயநினைவுடன் இருக்கும்போதே ஆநுறுப்பை வெட்டி அசால்ட்டாய் போடும் கொடும் சடங்கும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அன்னை இந்திராகாந்திதான்முதல்முதலாக  அலிகளையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அப்படிப்பட்ட அன்னையின் சாவிற்கு மகள்களான திருநங்கைகள் படும் துயரங்களையும், அந்தச் சமயத்தில் டெல்லியில் நடக்கும் கோரங்களையும் உருக்கமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சு. சமுத்திரம்.
டெல்லி சென்ற சுயம்பு மீண்டும் பச்சையம்மாவைச் சந்திக்கிறானா? இதில் வரும் கங்காதேவி,  மேகலை, நீலிமா, நசிமா இவர்கள் யார்? கடைசியில் சுயம்புவும் அவன் குடும்பமும் என்ன ஆனது? என்பதையெல்லாம் இந்நாவலைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நமக்கு என்னச் சொல்லித்தருகிறார்களோ, பெரும்பாலும் நாம் அதைத்தான் பின்பற்றுகிறோம். திருநங்கையர் அறுவறுப்பானவர்கள் என்று மற்றவர் சொல்ல, நாமும் அதையே கேட்டுவந்தோம். இந்த நாவலைப் படித்தபிந்தான் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் உடலூனமுற்றவர்களைவிட கொடுமை என்று புரிகிறது.

அவர்களும் மனிதப்பிறவிகள், அதுவும் ஓர் மனிதச்சமூகம் என்பதும் தெரிகிறது. நீங்களும் படித்து அவர்களைப் புரிந்து நேசிக்கவில்லை என்றாலும், அறுவறுப்பாய் நினைக்கக்கூடாது என்று எண்ணுங்கள்.

இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு 1994. Source Shodhganga தளத்தில் உள்ள ஆய்வுக் கட்டுரை.
இதன் முதல் பதிப்பை வானதி பதிப்பகம் ஜூன் மாதம் 1994ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போது இதன் விலை ரூபாய் 80. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.
இந்நூலிற்கு அமரர் ஆதித்தனார் ஐம்பதாயிரம் ரூபாய் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதில் பரிசுத்தொகை பத்தாயிரத்தை எழுத்தாளர் அலிகளின் நலனிற்காக கொடுத்துவிட்டார்.
விக்கிப்பீடியா தளத்தில் உள்ள பக்கத்தில் இவரது முழுமையான நூல்கள் பட்டியல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வாடாமல்லி இடம்பெறவில்லை.
வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

வாடாமல்லி
சு. சமுத்திரம்
சாரதா பதிப்பகம்
பக்கங்கள் : 359
பதிப்பு : 1
வெளியிடப்பட்ட ஆண்டு : 2015
விலை : ரூ.120

இந்நூலை அமேசானில் படிக்க:

23 comments:

  1. நன்றி மேடம்.

    ReplyDelete
  2. நல்லதொரு நூல் விமர்சனம், உங்களின் கதைசொல்லும் பாங்கு அருமை. நீங்கள் குறிப்பிட்ட அந்த குறும் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. 2012 I worked in Madurai srivilliputtur to Madurai travel solid 2 hrs... kallupatti la vaidegi she is transgen daily avangalum antha bus la varuvanga she usually sits with me first time she asked permission may I sit here I told why not she is working in NGO 1 and half travel neraiyo share pannipanga but ippo touch la illa thank you abi for this article...heart touching

    ReplyDelete
    Replies
    1. thank you so much madam. happy to here your memories.

      Delete
  4. நல்லதொரு பகிர்வு. இந்தக் கதை படித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கள்.

      Delete
  5. அற்புதமாக விளக்கி இருக்கின்றீர்கள். ஆவலைத் தூண்டிய விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
    2. நேரம் கிடைக்கும்போது அமேசானில் படித்துப்பாருங்கள் சார். விருவிருப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்.

      Delete
  6. நல்லதொரு படைப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    திருநங்கைகளுக்கு கருப்பை கிடையாது

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். ஆனா அந்தச் சிகிச்சைப் பன்றாங்களே. அது எந்தளவு உண்மைன்னுதான் புரியல. முதல்ல அந்தக் குறும்படம் பார்த்தபோது நம்பிட்டேன். அப்புறம் தனுஜா சொல்லும்போது யோசிக்கத் தோனுது.

      Delete
  7. அட! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டே படிக்கவில்லை.
    இவ்வளவு ஆழமான அழுத்தமான நூல் என்று நீ சொல்லித்தான் தெரிந்தது. நன்றி. நிச்சயம் படிக்கிறேன்.
    நடு வயதில் பாலினம் மாறுவதும் விவரிக்க இயலாத கொடுமை.
    கோபி ஷங்கர் அவர்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற நூலை படி. இதன் அடுத்தக்கட்ட நிலையில் உலகில் உள்ள பல பாலின வகைகள் குறித்து பேசும் நூல் அது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார். நிச்சயம் படிக்கிறேன். எனக்கும் இது சம்பந்தமா நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கத் தோனுது.

      Delete
  8. நல்லதொரு நூல் அறிமுகம்.

    சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அபிநயா... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார். ஒருவகைல உங்க ரங்கோன் ராதா விமர்சனம் எனக்கு தூண்டுதல். அதாவது இன்னும் நிறைய தகவல்கள் கொடுக்கத் தூண்டியது. அதற்கும் என் நன்றிகள்.

      Delete
  9. நல்ல்தொரு நூல் அறிமுகம். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

    துளசிதரன்

    அபி நல்லா எழுதியிருகீங்க. விமர்சனமும் உங்கள் பதிவும்.

    நூலறிமுகம் நல்லாருக்கு. நான் சில திருநங்கைகளைச் சந்தித்தது பற்றி பதிவும் எழுதியிருக்கிறேன். நண்பர் ஆவியின் மூலம் அறிமுகமான ஒருவர் திருநங்கைகள் குறித்து குறும்படம் எடுத்தார். அப்போது அவர் பப்லிஷ் பண்ணியிருக்கவில்லை. அதன் பின் தெரியவில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசிதரன் சார். கீதா மேடம் உங்க தளத்தில் நான் நிச்சயம் அந்தப் பதிவை படிக்கிறேன். உங்களுக்கு என் நன்றி மேடம்.

      Delete
  10. நன்று.
    சமுகம் இவர்களை அனுகுவதைப் பற்றி குறிப்பிட்டிர்கள்.ஆனால் சமயங்கள்....?

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஷா. எந்தச் சமயமாக இருந்தாலும் இவர்களை மனிதர்களாக நடத்த வேண்டும். எல்லா மதத்திலும் மனிதநேயம் ஒன்றுதான். மற்றபடி சில நம்பிக்கைகள் சடங்குகளெல்லாம் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை.

      Delete
  11. அற்புதமான விமர்சனம். புதினத்தை மீண்டும் புதிதாய் படித்த உணர்வு. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete