Saturday, 13 June 2020

குடும்பத்தின் தூண்.

வட இந்தியாவில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை மிகவும் பிரபலம். அந்த பண்டிகையன்று ஆண்கள் கைகளில் பெண்கள் ராக்கி என்ற பாசக்கையிறைக்கட்டி அண்ணனாக ஏற்றுக்கொள்வர். அதன் அர்த்தம்  எந்த சூழ்நிலையிலும் அந்த ஆண்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது.
அப்படி எந்த ராக்கிக்கயிறும் கட்டாமல், பெண்களுக்கு பாதுகாப்பையும் ஆண்களுக்கு நல்ல வழிக்காட்டுதலையும் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
எழுத்துலகில் தனித்தன்மை பெற்றவர். கவிதை, கதை, கட்டுரை, நாவல், நாடகம், சொற்பொழிவு என்று எல்லா வகையிலும் தன் எழுத்துத்திறனை காண்பித்தது மட்டுமன்றி தான் நினைக்கும் கருத்துக்களை எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லாமல் தைரியமாக வெளிப்படுத்தியவர். அதற்கு சிறந்த உதாரணம், அவர் தன் தலைவனாக ஏற்றுக்கொண்ட பெரியாரையே மறுத்து தன் கருத்தில் உறுதியாக இருந்தது.
அண்ணாவின் நூல்களில் பெண்களுக்கென்று ஒரு தனி இடமிருக்கும். அக்காலத்தில் பெண்களுக்காக தன் எழுத்தின்மூலம் குரல் கொடுத்தவர்.
ஒரு பெண் விலைமாதுவாகிவிட்டால் அவளை ‘விலைமாது’ என்று இந்த உலகம் தூற்றுகிறது. கல் எறிந்தும், தவறான வசவுகளைப் பேசியும் அவர்களை துன்புறுத்துகிறது. எத்தனையோ பெண்கள் இந்த இழிநிலையையும் சித்திரவதையையும் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.
பரிசுத்தத்தைப்பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசும் இந்தச் சமுதாயம்  பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்ட பெண்களின் பின்னணியில் இருக்கும் ஆண்களைப்பற்றி பேசுவதே இல்லை.
எத்தனையோ பெண்கள் தன் கணவனாலேயே இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய கணவனும், கணவானுமான ஒருவனின் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கும் நூல்தான் ரங்கோன் ராதா.
1947இல் திராவிட நாடு என்ற இதழில் வெளிவந்தது. பின்பு 1953 ல் சென்னையிலுள்ள பாரி நிலையம் நூலாக வெளியிட்டது. 2002 ல் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது.
1956ஆம் ஆண்டில் காசிலிங்கம் இயக்கத்தில், மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில், கலைஞரின் கதைவசனத்தில்,  சிவாஜிகணேசன் மற்றும் பானுமதி நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
இந்த நாவலின் கதாபாத்திரங்களான நாகசுந்தரமும் பரந்தாமனும் நண்பர்கள். நாகசுந்தரத்தின் பக்கத்து வீட்டில் ரங்கோனிலிருந்து ஒரு குடும்பம் குடிவருகிறார்கள். முதலில் அவர்களைப்பற்றி தெரியாத நாகசுந்தரம் ரங்கோனிலிருந்து வந்திருக்கும் பேரழகி ராதாவைப்பற்றி பரந்தாமனிடம் சொல்கிறான்.
பரந்தாமனுக்கும் ராதாவின்மேல் ஈர்ப்பு வருகிறது. ராதாவை பார்க்கத்துடிக்கிறான். அதைப்பற்றி நாகசுந்தரத்திடம் பேச,  அப்போது நாகசுந்தரம் ராதா தன் தங்கை என்றும், ராதாவின் தாய்தான் அவனுக்கும் தாய் என்றும், அவர்களை தாய் தங்கை என்று வெளியே சொல்லமுடியாதபடி அவன் தாய் தவறான பாதையில் போய்விட்ட பரிதாபக்கதையையும் சொல்கிறான்.
"உன் தாய் 20 வருடங்களுக்கு முன்னே இறந்துவிட்டதாக சொன்னாயே?" என்று பரந்தாமன் கேட்க, "ஆம். அவள் இறந்ததும் உண்மை, இப்போது இருப்பதும் உண்மை" என்று அந்த கொடுமையான கதையைச் சொல்கிறான்.
அது ரொம்பவும் கொடுமையான பகுதிதான். கல்லையும் கரைக்கும் பகுதி. ஆண்களைக்கூட அழவைக்கும் பகுதி. கணவனின் அரக்கத்தனத்தால் முழுவதுமாய் உடைந்துவிட்ட பேதை,  தானும் ஒரு கொடுமையை செய்துவிட்டு, தன் ஆசைக்குழந்தைக்காக தன்னைத்தானே சாகடித்துக்கொண்ட கொடுமையான சாவு அது!  அண்ணாவின் அற்புதமான எழுத்துக்கள் அவை. அதை நான் எழுதுவதைவிட நீங்களே படித்துப்பாருங்கள்.
கோட்டையூர் தர்மலிங்கமுதலியார் வீரராகவமுதலியாரின் பெரிய பெண்ணான ரங்கத்தை மணந்துகொள்கிறார்.
அவளை மணக்கும் சமயத்தில் வீரராகவமுதலியாருக்கு சொத்து எதுவும் இல்லாததால் ரங்கத்தை அன்பாகவே பார்த்துக்கொள்கிறார். சமூகத்தில் தர்மலிங்கம் அன்பான வள்ளல். மரியாதைக்குரியவர்.
சில வருடங்கள் இருவரும் இன்பமாக வாழ்கிறார்கள். அதன்பின் கேஸ்  போட்டிருந்த வீரராகவமுதலியாரின் சொத்துக்கள் அவர்பக்கம் தீர்ப்பாகிவிட தர்மலிங்கம் அவரின் இரண்டாவது பெண்ணையும் மணந்து மீதிப்பாதி சொத்தையும் அடைய திட்டமிடுகிறார்.
அதைத் தெரிந்துகொண்டு கண்டித்த ரங்கத்திற்கு பேய்பிடித்துவிட்டதாக ஊருக்குள் பரப்பிவிடுகிறார். அனைவரும் அதை நம்பி அவளை செய்யும் கொடுமைகள் எண்ணிலடங்காதது.
இதில் இன்னும் வருந்தவைக்கும் விஷயம் என்னவென்றால் ரங்கம் தன் மகள்போல் வளர்த்த அவள் தங்கை தங்கமும் அந்த திருமணத்தில் ஆசைக்கொண்டு ரங்கத்திற்கு எதிராக சதி செய்கிறாள்.
அந்த கொடுமைகளை படிக்கும்போது போலிப்பூசாரிகள் மற்றும்  மந்திரவாதிகளின் சேட்டைகள்  மட்டுமல்லாமல், பொதுவாக மக்கள்  பேய்பிடித்திருக்கிறது என்று கிளப்பிவிடும் வதந்திக்கு பின் இப்படி ஒரு கதை  இருந்தாலும் இருக்கும் என்பது தெரிகிறது.
தர்மலிங்கம் ரங்கத்தின் தங்கையான தங்கத்தை மணக்கிறார்.
சில மாதங்கள் கழித்து ரங்கத்திற்கு நாகசுந்தரம் பிறக்கிறான். அவன் பிறப்பின் பின்னும் சில கண்ணீர் கதைகள் இருக்கிறது.
நாகசுந்தரம் பிறந்து ஒரு வருடம் கழித்து ரங்கம் தன் கணவனைவிட்டு பிரிகிறாள். இல்லை கொடுமையான முறையில் பிரிக்கப்பட்டாள்.
பிரிந்தவள் எப்படி தவறான பாதைக்கு சென்றாள்? எப்படி ரங்கோன் சென்றாள்? ராதாவின் தந்தை யார்? ரங்கோன் சென்றபின் ரங்கம் சந்தோஷமாகதான் இருந்தாளா?
தன் தந்தையான தர்மலிங்கத்தை நாகசுந்தரம் என்ன செய்தான்? இந்த துயரக்கதையை கேட்டபின் பரந்தாமன் ராதாவை ஏற்றுக்கொள்வானா? இதை தெரிந்துக்கொள்ள இந்நாவலைப் படியுங்கள்.
ஒரு குடும்பத்தின் தூண் பெண்கள்தான். அந்த தூண் சாய்ந்துவிட்டால் குடும்பம் சிதறி சீரழிந்து போய்விடும்.
தர்மலிங்கம் போன்ற சில ஆண்கள் அந்த தூணை அவர்களே சாய்த்துவிட்டு பெண்கள்மேல் பழியைச் சுமத்திவிடுகிறார்கள்.
பெயரில் தர்மத்தை வைத்துக்கொண்டு அதர்மங்களை மட்டும் செய்துவரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையல்ல.  அவர்கள் வாழ்ந்த,  வாழ்கின்ற, இனியும் வாழப்போகிற நிஜங்கள்.

22 comments:

  1. அபி
    அருமை
    கதையை படிக்க ஆவலாக உள்ளது
    வித்யா

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. thank you sir. keep reading and give your feedback.

      Delete
  3. நல்லதொரு விமர்சனம். நல்லதொரு நூல். நானும் படித்திருக்கிறேன். எனது பக்கத்திலும் எழுதி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் வாசிக்கலாம்....

    https://venkatnagaraj.blogspot.com/2014/04/blog-post_9.html

    ReplyDelete
  4. தில்லையகம் வழி வருகிறேன்.
    அழகான விமர்சனம் வாழ்த்துகள். கற்பு என்பது ஆண்-பெண் இருவரையும் சாரும்.

    விபச்சாரன் அழிந்து விட்டால் விபச்சாரி ஒழிந்து விடுவாள் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சார். வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும். மிகவும் கொடுமையான செயல் ஒருவரின் பலகீனத்தையும் சூழ்நிலையையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது. அதனால்தான் பெரும்பாலான குற்றங்கள் நிகழ்கிறது.

      Delete
  5. Thillaiakathu Chronicles வலைப்பூ மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்கிறேன். எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சார். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

      Delete
  6. நல்ல மதிப்புறை. புத்தகம் படித்து நிச்சயம் படத்தையும் பார்க்கிறேன். தொடரட்டும் உன் உன்னதப் பணி. அறிஞரின் பணத்தோட்டம் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்த நூல். அதையும் வாசிக்கவும். freetamilebooks தளத்தில் இலவசமாக கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார். நிச்சயம் வாசிக்கிறேன்.

      Delete
  7. அபிநயா, உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு அறிவில்லை. உங்களை வணங்குகிறேன் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நவீன். நான் கத்துக்க வேண்டியதே இன்னும் நிறைய இருக்கு. நீங்க துர்காமாதா புத்தகம் ஆங்கிலத்துல மொழிப்பெயர்த்திருக்கீங்க. ஆங்கிலம் கத்துக்கொடுக்கிறீங்க. ஆங்கில மொழிப்பெயர்ப்பு சின்ன விஷயம் இல்ல நவீன். எனக்கு பிரம்மிப்பா இருக்கு. வாழ்த்துக்கள். என்னை வணங்கவெல்லாம் வேண்டாம். வாழ்த்தே போதும்.

      Delete
  8. விமர்சனம் நன்று...

    தொடர்கிறேன்...

    சகோதரி கீதா அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  9. விமர்சனம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அபிநயா. பெண்கள் குடும்பத்தின் தூண் மிகவும் உண்மை. வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா

    பெண்கள் சில சமயம் சூழ்நிலைக் கைதிகளாகிவிடுகிறார்கள் என்பது வேதனை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. துளசிதரன் சாருக்கும் கீதா மேடமிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.பெண்கள் நாட்டின் கண்கள் என்கிறார்கள். அந்தப்பெண்களைக் கண்களாய் மதிக்காவிட்டாலும் கைதிகளாக்காமல் இருக்கலாம்.

      Delete
  10. அற்புதமான விமர்சனம். நீங்கள் பெண்கள் வீட்டின் தூண்கள் என வர்ணித்திருப்பது அழகு. எழுத்தாளர் இந்துமதி, தன்னுடய பைசாநகரத்து கோபுரங்கள் என்ற புதினத்தில், பெண்களை கோபுரங்களாக உவமைப் படுத்தி ிருப்பார். தூண்களும் கோபுரங்களும் கோவில்களில்தானெ பெரும்பாலும் ிருக்கும்? அப்படியெனில் பெண்கள் ிருக்கும் ிடம் கோவில்தானே?

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண்ணை தூண், கோபுரம், அவள் இருக்கும் இடம் கோவில் என்பதெல்லாம் அவள் தனக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்வதில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த உவமைகள் பொருந்தும். அப்படிப்பட்டப் பெண்களையாவது ஆண்கள் மதிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. வாழ்த்துக்கு நன்றி ஃபெர்நாண்டோ.

      Delete
    2. நல்ல விமர்சனம்.

      Delete
    3. நன்றி வினோத்.

      Delete