Wednesday 10 June 2020

வற்றா வறுமை.

நதி வற்றிப்போய் உயிரினங்கள் கதியற்று போயின!
நிலத்தடி நீர் வற்றிப்போய் தாவரங்கள் தலைசாய்ந்துவிட்டன!
குளம் குட்டையே வற்றிவிட்டது,   வற்றாத ஜீவநதி வறுமை மட்டுமே!
எத்தனை உணவு வகை இருந்தும் என்ன?   ஏழையின் தட்டு இன்னும் காலியாகத்தான்   இருக்கிறது!
பேரிரைச்சலுக்கு மத்தியில்  பிச்சைக்காரனின் குரல் தனித்து ஒலிக்கிறது !
பால் பொருட்கள் வியாபாரம், பச்சிளம் குழந்தைக்கு எங்கே ஆகாரம்?
ஊரும் உணவும் சார்ந்திருந்த காலமென்ன, ஒரு பருக்கைக்கூட கிடைக்காமல்   உயிரைவிடும் காலமென்ன!
ஆசைக்கு உணவுண்ட வேளையென்ன,   , காசுக்கு உணவுண்ணும் வேளையென்ன!
விரோதிக்கு விருந்தோம்பிய நாட்களென்ன,  விருந்தினரையே விழையா நாட்களென்ன!
பாஸச்சிறைக்கு ஏங்குவோரை பசிச்சிறை பிடித்துக்கொள்கிறது!
பறக்க துடிப்போரை பட்டினி இறக்கத்தூண்டுகிறது!
சத்துள்ள உணவுக்கு பங்களாவாசம், சேற்றில் உழலும் மனிதருக்கோ வடிகஞ்சியே வாழ்நாள் சுவாசம்!
 பணம்கொடுத்தால் பண்டமாம்; இங்கே பணமே முடக்கமாம்!
வறுமையின் நிறம் சிவப்பென்றார் அவர்
பாவம் அவரால் நிறத்தைத்தான் தரமுடிந்தது, நிரந்தர முடிவை தரமுடியவில்லை!
இறைவனாலே  முடியாதபோது, இயக்குனரால் எப்படி முடியும்?
உலகே,  விட்டுவிடு வீணான ஏக்கம்.
வரியோரின் வயிறும் வடிக்கின்ற கண்ணீரும் வற்றிவிட்டால் வாழ்வில் பிடிப்பேது.
வேட்கை கொண்டு வெற்றிப்பெறாவிட்டால் இதயத்தில் துடிப்பேது.
வறுமையே வருந்தும் காலம்வரும்;
வணங்காமுடியை வணங்கவைக்க நேரம்வரும்;
காத்திருப்போம் விடியும்வரை அல்ல, விடியல் வரும்வரை.

18 comments:

  1. படிக்கையில் நெஞ்சு கனக்கின்றது. எனக்கு என்னமோ விடியல் கண்ணுக்கு தெரியவில்லை :(

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். என்ன செய்வது? வந்து பிறந்துவிட்டோம். நம்பிக்கையோடு வாழ்வதைவிட வேறு வழியில்லையே.

      Delete
  2. அபி
    அருமை. விடியல் விரைவில் வரும்
    வித்யா

    ReplyDelete
  3. உருக்கமான பதிவு. ஏன் இவ்வளவு சீரியஸ்..I appreciate you

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டின் உண்மைநிலை இப்படி உருகவைக்குது. பாராட்டிற்கு மிக்க நன்றி நவீன்.

      Delete
  4. காலம் வரும். காத்திருப்போம்

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம். உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete
  5. வறுமை.... என்று தீரும் இந்தக் கொடுமை.

    நம்பிக்கை கொள்வோம். நல்லதே நடக்கும் என்று.

    ReplyDelete
    Replies
    1. நிச்சையம் சார். உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  6. விடியாத பொழுதேது?! காத்திருப்போம் தோழி

    ReplyDelete
  7. விடியல் நிச்சயம் வரும் என நம்புவோம். உள்ளத்தை உருகவைத்த உண்மை பதிவு. "வறுமையின் நிறம் சிவப்பென்றார் அவர்
    பாவம் அவரால் நிறத்தைத்தான் தரமுடிந்தது, நிரந்தர முடிவை தரமுடியவில்லை!
    இறைவனாலே  முடியாதபோது, இயக்குனரால் எப்படி முடியும்?" ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஆழ்ந்து படிக்கிறீங்க. சந்தோஷம்.

      Delete
  8. கவிதையின் சிறப்பு கடைசியில் நம்பிக்கையுடன் முடித்ததே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  9. வற்றாத ஜீவ நதி வறுமை மட்டுமே….

    விடிவதற்கும் விடியலுக்குமுள்ள வித்தியாசம் விளக்கும் சிந்தனை.பெரும்பான்மையான திரைப்படங்கள் முழுக்க முழுக்க வியாபாரமே, எனவே அவற்றில் மூழ்கி முத்தெடுக்க முயலவேண்டாம் - அவற்றின் தலைப்புகளில் தீர்வுகள் தேடவேண்டாம்.விடியலும் ஒரு விடிவுகாலமும் வரும் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். படத்தின் தலைப்புக் கவிதைக்கான தீர்வு அல்ல. கவிதையின் அழகை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்ட ஒப்பனை மட்டுமே. வியாபார நோக்கையும் தாண்டி சில நல்ல படங்களும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது என் கருத்து.

      Delete