Thursday, 31 December 2020

கடந்த நிகழ்வுகள், கனக்கும் நினைவுகள்

வணக்கம் நண்பர்களே!

அனுபவ பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு இல்லையா? அதான் இந்த வருஷத்தோட கடைசி நாள் ஒரு பதிவு போடலாம்னு இதை எழுதினேன். என் மனசுல இருக்க ரீவைன் பட்டனை அழுத்தி ஜனவரி 2020க்கு போகலாம்.


நியூயர் செலிபிரேஷன் முடிஞ்ச மறுநாள் M.A. பரிட்சை. 2, 3, 4, 5. தொடர் பரிட்சைகள். 9ஆம் தேதி என் நெருங்கிய தோழியோட உடன் பிறந்த அண்ணன் இறந்துட்டார். 11ஆம் தேதி எனக்கு தெரிய வருது. அழுதுகிட்டே போய் கடைசி பரிட்சை எழுதி முடிச்சிட்டேன். 19, 20 தேதிகளில் அதே தோழியோட கல்யாணம்.

இப்போ அப்படியே ஃபெப்ரவரிக்கு போகலாம். காதலர்தினம் அன்று: என் குடும்பத்தாரால் காதலிக்கப்பட. நாங்கள் காதலிக்க இரண்டாவது குட்டி தேவதை அண்ணனின் குழந்தை இந்த உலகத்துக்கு வந்தா. அதே மாதம் அவளுக்கு பெயர் சூட்டும் வைபவம்.

அவ்வளவுதான். வாங்க மார்ச் மாதத்துக்கு போவோம். மார்ச் 3 நாங்க இந்த உலகத்துக்கு வர காரணமான பெற்றோரின் 35வது திருமணநாள். மார்ச் 24 எல்லோருக்குமே தெரிஞ்ச லாக்டௌன். அச்சோ ஏப்ரல் மே சொல்லிக்கிற அளவுக்கு ஒன்னுமில்லை.

ஜூன் 4ஆம் தேதி உங்கள் இதயத்தை கவர வலைப்பூ ஆரம்பித்தேன். ஜூலை மாதம் 4ஆம் தேதி ஒரு மாதக் குழந்தையின் பிறந்தநாள். எல்லா வலைப்பதிவர்களும் வந்து வாழ்த்தி. கேக் வெட்டி பிரியாணி சாப்பிட்டோம்.

ஜூலை 26ஆம் தேதி எனக்கும் என் அண்ணனுக்கும் ஒரேநாள்ல பிறந்தநாள். ஆகஸ்ட் மாதம் முழுவதுமே சோகமான மாதம். அந்த மாதம் 1ஆம் தேதி காலை எப்போதும் போலதான் விடிந்தது. மதியம் வரை ஆடிமாதம் கூழூத்துற விழாவிற்கு தயாராகிக்கிட்டு இருந்தோம்.

மதியம் 2 மணிக்கு இடியாய் அந்த தொலைப்பேசி அழைப்பு வந்தது. என் உயிருக்குயிரான உடன்பிறவா சகோதரி 21 வயது பூங்கொடி இந்த உலகத்தவிட்டு போய்ட்டா. பணத்துல ஏழைன்னாலும், குனத்துல கோடீச்வர குடும்பம் எங்க அம்மாவோட தம்பி குடும்பம். என்னைக் கண்ணுக்குக்கண்ணா பார்த்துக்கனும்னு எங்க மாமாவும் அவர் மனைவியும் அவங்க பிள்ளைகளுக்கு சொல்லிகொடுத்து வளர்த்தாங்க. அந்த பிள்ளைகளும் அப்படியே வளர்ந்தனர். அப்படி என்ன பார்த்துகிட்ட என்னோட கண் என்னைவிட்டு போய்டிச்சு. என் சந்தோஷத்தோட பூரணத்தையும் சேர்த்து எடுத்துக்கிட்டு போய்டிச்சு.

அதன்பிறகு போட்ட பதிவுகளெல்லாம் ஏதோ போடனும்னு போட்டேன். செப்டம்பர் 25ஆம் தேதி. நாம் சிரித்தால் மேலும் சிரிக்கத் தூண்டி, அழுதா மேலும் அழத் தூண்டி எல்லாரோட மனசை தன் குரலால் பிரதிபலிச்ச கண்ணாடி போய்டிச்சு. எப்படியாவது அவரைச் சந்திக்கனும்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்.

அக்டோபர் என் நண்பனோட அக்கா வீட்டுக்காரர் இறந்துட்டார். அதே மாதம் இன்னொரு நண்பனோட அம்மா இறந்துட்டாங்க. நவம்பர் எங்க வீட்டு மாடில ஒரு தாத்தா இறந்தார்.

நவம்பர் 29ஆம் தேதி கவிதை கட்டுரை போட்டிகளில் கலந்து 2000 ரூபாய் முதல் பரிசு வாங்கினேன். டிசம்பர் 6 கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகளில் அதே முதல் பரிசு ரூபாய் 2000. டிசம்பர் மாதம் 19ஆம் தேதி எங்க அண்ணியோட பாட்டி இறந்துட்டாங்க. சொன்ன இழப்புகள் சில. சொல்லாத இறப்புகள் பல.

இப்படி நிறைய கெட்டதும் கொஞ்ச நல்லதுமா 2020 முடிஞ்சது. நாளை 2021 வருஷம் தொடங்கப்போகுது. அந்த வருஷமாவது எல்லாருக்கும் ரொம்ப நல்ல வருஷமா அமையனும்னு விதிகிட்ட விண்ணப்பிக்கலாம்.

அட்வான்ஸ் ஹாப்பி நியூயர். வளமும் நலமும் பெற்று வாழிய வாழியவே.




 

Tuesday, 15 December 2020

இயற்கை தந்த சவால் வாழ்வின் சிறகுகளும் சிலுவைகளும்

முன்னுரை:

யாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை வா. இது வெறும் பாடல் வரிகளல்ல. வாழ்க்கைப் பாடங்கள். குறைகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைபாடுகளை? தீர்வு இருக்கும் விஷயத்திற்கு கவலைப்பட்டால் ஞாயம். தீர்க்கமுடியாத விஷயத்திற்கு கவலைப்பட்டால் என்ன பலன். உடல்குறைபாட்டிற்காகக் கவலைப்பட்டால் பின் கவலை ஒரு மனக்குறைபாடு ஆகிவிடும்.

உள்ளம் நல்லாருந்தா ஊனமொரு தடையில்ல. உள்ளம் ஊனப்பட்டா ஒடம்பிருந்தும் பயனில்லஎன்ற வைரமுத்து வரிகளுக்கு ஏற்ப உடல் குறைபாடுகளை ஒரு தடையாகக் கருதாமல் சாதித்துக்காட்டியவர்கள் ஏராளம். லூயிபிரையில், ஹெலென்கெல்லர், ஸ்டீபன் ஹாக்கின்ஸ், பீத்தோவன், மற்றும் பலரின் வெற்றியே ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லக் காரணமாக அமைந்தது.

இயல்பான மனிதர்களுக்கு வாழ்க்கையில் சவால்கள் இருக்கும். இயற்கைப் படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கோ வாழ்க்கையே சவாலாக இருக்கும். அந்த சவால்களைச் சந்தித்து வெற்றி பெறுபவர்களின் வாழ்விலிருக்கும்  சிறகுகளையும் சிலுவைகளையும் பற்றி அலசுவதே இந்தக் கட்டுரையின் சாராம்சமாகும்.

சிறகுகள்:

கற்றவர்களே கண்ணுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்றுவிட்டார் வள்ளுவர். கண்ணில்லாதவர்கள் எப்படி கற்கமுடியும்? அந்தக் கேள்விக்கு விடையளித்தார் லூயிபிரையில். எந்த ஊசி அவர் கண்களைப் பறித்ததோ, அதே ஊசியை வைத்தே பிரையில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்து, பார்வையற்றோர் முகத்திலிருந்த புண்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கண்களைப் பொருத்தினார்.

செவித்திரன் குறை உடையவர்களுக்கும், வாய் பேச இயலாதவர்களுக்கும் சிரப்பு பள்ளிகள் இருப்பதைப் போல பார்வையற்றவர்களுக்கும் சிறப்பு பள்ளிகள், பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்ட ஆசிரியர்கள் வரமாய் வழங்கப்பட்டது.

கல்விச் சிறகிற்கு அடித்தளம் அமைந்தபின் கட்டடம் கட்ட என்ன தடை? பிரையில் எழுத்துமுறை வந்தபின் பார்வையற்றோர் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. பார்வையற்றோருக்கு பிரையில் மற்றும் வெண்கோள் என்றால், செவித்திரன் குறைபாடு உடையவர்களுக்கு காது கேட்கும் எந்திரம், நடக்க இயலாதோர்க்கு சக்கர நாற்காளி என்ற வகையில் மாற்றுத்திறனாளிகளின் சிறகுகள் விரிவடைந்தது.

பள்ளிப்படிப்பிற்கே இத்தனைப் போராட்டம் என்றால், கல்லூரிக் கல்வி சும்மா கிடைக்குமா? அதற்கும் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் கிடைக்கப்பெற்றது. வருடங்கள் உருண்டோட தன்னார்வலர்களை நேரடியாக வாசிக்கவைத்து படித்தல், ஒலிப்பதிவு செய்து படித்தல், மின்நூல் என்று கல்வி படிப்படியாக உயர, அதற்கேற்ப வேலை வாய்ப்புகளும் வளர்ந்தது. ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர், வங்கி அலுவலகர், அரசு அலுவலகர், உயர் பதவி என்று அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையின் தடத்தைப் பதித்துவிட்டனர்.

கணிணியில் msoffice, இணயம், தட்டச்சு, தமிழ் மற்றும் ஆங்கிலம், மின்நூல் உருவாக்கம், கிண்டில், ஒலி மற்றும் ஒளி திருத்தம், ஆன்லைன் வகுப்பு மற்றும் கூட்டங்கள் நடத்துவது என்று தான் படிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் அளவுக்கு முன்னேறிவிட்டனர். Smart phone உபயோகப்படுத்தாத மாற்றுத்திறனாளிகள் மிகக்குறைவு. இதற்கு காறணம் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றுத்திறனாளிகளுக்கும் சாதகமாக இருப்பதுதான். மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் சேர்ந்து சிறப்பு பயிர்ச்சிகள், போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள், வேலை வாய்ப்பு முகாம்கள், இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்குவித்தல், விடுதி வசதி ஏற்படுத்துதல், கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடத்தி திறமையை மேம்படுத்துதல், உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்கள் நடத்துதல்  போன்ற சேவைகளைச் செய்துவருகின்றனர். அரசாணைகள், பயணச் சலுகைகள், உதவித்தொகை, ஆகியவையும் கிடைக்கின்றன. 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும்படியானது. ஊடகத்துறையில் வேலை செய்யமுடியாமல் போனாலும் யூடியூப் என்ற சிறிய ஊடகத்தை இருந்த இடத்திலிருந்தே உருவாக்கமுடிகிறது. அதில் குறைந்த அளவேனும் பணம் சம்பாதிக்கவும் முடிகிறது.

பொதுவாகவே வாசகர்களைவிட எழுத்தாளர்கள் அதிகமாகிவிட்டனர். அப்படி அதிகமான எழுத்தாளர்களுள் மாற்றுத்திறனாளிகளும் இருக்கிறார்கள் என்பது மகிழவைக்கும் விஷயம்.

சிலுவைகள்:

அதுதான் கல்வி, வேலை என்று அனைத்து சலுகைகளும் கிடைக்கிறதே! அப்புறம் என்ன சிலுவைகள் என்கிறீர்களா? அனைத்தும் கிடைக்கிறது! ஆனால் அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

1. அன்பு, பாசம்! வறுமையின் காரனமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ மாற்றுத்திறனாளிகள் பலரால் சிறு வயதிலிருந்தே பெற்றோருடன் வசிக்கமுடிவதில்லை. விடுதியே வாழ்க்கையாகிவிடுவதால் நட்பைப் பெறும் அளவு பாசத்தைப் பெறமுடிவதில்லை.

2. தற்சார்பு. பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்கள் மின்நூலாக கிடைக்காததால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை விரைவில் பெற்று பாடம் நடத்தவோ படிக்கவோ முடிவதில்லை. குறைந்த சதவிகித இடவொதுக்கீட்டால் போட்டித் தேர்வில் வெற்றிப்பெற்றும் வேலை கிடைப்பதில்லை. வழக்குப்போட்டு வேலை வாங்க வேண்டிய நிலை. I.A.s. தேர்ச்சிப்பெற்றால், I.r.s. கொடுக்கிறார்கள். என்ன கொடுமை இது?

அப்படியே வேலை கிடைத்தாலும் அவர்கள் சரியானவிதத்தில் நடத்தப்படுவதில்லை. சிலநிறுவனங்களே மாற்றுத்திறனாளிகளை சக மனிதர்களாகப் பார்க்கிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் திறமைப் பற்றிய விழிப்புணர்வே இல்லை. இந்தியாவில் மக்கள் தொகையைவிட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், ஒழுங்கற்ற சாலைகள் மற்றும் சாலைவிதிகளை மீறுவதாலும், நவீன வசதிகள் இல்லாததாலும், வாகன ஓட்டிகளின் வேகத்தாலும் மாற்றுத்திறனாளிகளால் தனியேநடப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

3. திருமணம்: திருமணத்திற்கு இருமணம் போதும் என்று மேடைகளில் முழங்கினாலும், வாழ்க்கை என்று வரும்போது புறத் தோற்றமே முன்னிலை வகிக்கிறது. இதனால் பல மாற்றுத்திறனாளிகள் திருமணம் ஆகாமலே தங்களின் இளமையைத் தொலைத்துவிடுகின்றனர். அப்படியே திருமணமானாலும் அடிப்படை காரணம் பணமாகவோ அல்லது குடும்ப உறவாகவோ இருக்கிறதே தவிர காதலாக இருப்பது மிகக் குறைவு.

4. இரக்கம். மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் வீதியில் நடக்கும்போது பரிதாபங்களைச் சந்திக்காமல் இருப்பதில்லை. உதவி செய்பவர்களுள் சிலரும் பரிதாபத்தின் அடிப்படையில்தான் செய்கிறார்கள்.

முடிவுரை:

ஒரு மனிதனுக்கு ஏற்படும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அடுத்தவர் மட்டுமே பொறுப்பல்ல. அது அந்த மனிதனின் பொறுப்பும் கூட. சிலுவைகள் சிறகுகளாக மாற அரசு மட்டும் முயன்றால் போதாது. மாற்றுத்திறனாளிகளும் முயலவேண்டும்.

ஒதுக்கிவைப்பது தவறென்றால் மற்றவரிடமிருந்து  ஒதுங்கிப்போவதும் தவறுதானே? உதவி பெற வேண்டுமென்றால் உதவி செய்ய வேண்டும் என்பது உலகநியதிதானே?

சிரித்த முகமாக இருந்தால் இரக்கப்படத் தோன்றாது. கூடவே சேர்ந்து சிரிக்கத்தான் தோன்றும். நேர்மறைக் கருத்துக்களோடு, தேவைகளையும் வெளியிட்டு, தீர்வுகள் இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் அளித்தால் அது அடுத்தவர் மனதை தைக்காமலா போய்விடும்?

நாம் மற்றவருக்கு என்ன கொடுக்கிறோமோ அதுதான் திரும்ப கிடைக்கும். எனவே நல்லவைகளை கொடுப்போம். அதையே திரும்பப் பெறுவோம்.

  

Monday, 7 December 2020

இதுதான் என் அடையாளம்.

எத்தனையோ அடையாளங்கள்!

எடுத்துக்காட்டவே விதம்விதமாய் அட்டை வகைகள்!


சேய் என்று தாய் சொன்னாள்!

 செல்வமகள் என்று தந்தைச் சொன்னார்!


பசியாறும் முன்னே பெற்றவர் பெற்றார் என் பிறப்புச் சான்றிதழ்!

சாமிக்கு சான்றிதழில்லை!

சாதிக்கோ சான்றிதழ் ஏராளம்!


குடும்பத்தார் இவரென்று குடும்ப அட்டைச் சொன்னது!

குறைப்பாட்டுச் சான்றிதழும் கூடவே வந்தது!


படிக்கச் செல்லவும் அட்டை வேண்டும்!

பயணம் செய்யவும் அட்டை வேண்டும்!


வாக்கைப் பதிக்கவும் அட்டை வேண்டும்!

வறுமானத்தைக் கணிக்கவும் அட்டை வேண்டும்!


அலுவலகம் செல்லவும் அட்டை வேண்டும்!

ஆயுள் முழுமைக்கும் ஆதார் வேண்டும்!


பெண் இவளென்று இயற்கை சொன்னது!

பேசும் மொழி தமிழென்று சூழல் சொன்னது!


மண் இதுவென்று பாரதம் சொன்னது!

மதம் இந்து என்று மனிதன் சொன்னது!


மனிதம் எதுவென்று யார் சொல்வது?


என் தங்கை இவள் என்று தமயன் சொன்னாலும்,

என் மனைவி இவளென்று கணவன் சொன்னாலும்,


என் தாய் இவள் என்று குழந்தை சொன்னாலும்,

என் பாட்டி இவளென்று பெயரன் சொன்னாலும்,


எழுத்தாளர் இவளென்று நட்பு சொன்னாலும்,

பேச்சாளர் இவளென்று பெருமை கொண்டாலும்,


வானொலித் தொகுப்பாளர் இவளென்று வாழ்த்துச் சொன்னாலும்,

வாழ்வில் நான் ரசிக்கும் அடையாளம் டெய்லர் மகளென்பதே!


இது என் பள்ளி தந்த அடையாளம்!

இன்பத்தை அள்ளித்தந்த அடையாளம்!


இதுவும் ஓர் அடையாளம்!

இதுவே என் அடையாளம்!


 

Sunday, 29 November 2020

’என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்’

சிலிர்க்கவைக்கும் குளிரழகு,

வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு!


மலர்களின் மணமழகு,

மெய் தீண்டும் காற்றழகு!


வளர்ந்து நிற்கும் மரமழகு,

அந்த மரங்கள் தரும் நிழலழகு!


பறவைகளின் ஒலியழகு,

பாய்ந்துவரும் அலையழகு!


படிப்பென்றால் வரிகள் அழகு,

நடிப்பென்றால் வசனம் அழகு!


பேச்சென்றால் குரலழகு,

பாடும் பாட்டென்றால் ராகம் அழகு!


அநீதியற்ற நாடழகு,

அழுகுரலில்லா வீடழகு!


அள்ளிக்கொடுக்கும் உள்ளங்கை அழகு,

ஆபத்தில் உதவும் தோழமை அழகு!


இரவை நிறைக்கும் கனவுகள் அழகு,

இதயம் ததும்பும் நினைவுகள் அழகு!


உயிர் தந்த பெற்றோர் அழகு,

உடல் சுமக்கும் பூமித்தாய் அழகு!


உள்ளத்தை நேசிக்கும் உறவழகு,

உலகை வெல்லச்செய்யும் அறிவழகு!


மென்மை நிறைந்த பெண்மை அழகு,

அதை மேன்மைபடுத்தும் ஆண்மை அழகு!


நனைத்துச்செல்லும் மழையழகு,

நகைத்துப் பேசும் மழலை அழகு!


வறுமையில்லா இளமை அழகு,

அந்த வறுமையை விரட்டும் திறமை அழகு!


வார்த்தை மணியால் கோர்க்கப்படும் கவிதை அழகு,

அதை எழுத வித்திடும் கற்பனை அழகு!


மானிடர்க்கெல்லாம் மனம் அழகு,

அந்த மனமே என் அகவிழி காணும் பேரழகு!


அழகென்பது யாதெனில்,

கண்ணால் கண்டு ரசித்துவிட்டு கடந்து செல்வதல்ல.


உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!

ஆம்! அழகென்பது உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!

                                                                                             

Sunday, 1 November 2020

பாமர பக்தியும், பணக்காரன் யுக்தியும்


”போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ? உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்.” “தம்பி போன ஜென்மத்துல நீ செய்த புண்ணியம். உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு.” “ அத்தான், ஏழேழு பிறவிக்கும் நாமே கணவன் மனைவியா இருக்கணும்.” “அம்மா அடுத்த ஜென்மத்துலையும் நானே உன் மகனா பிறக்கணும்.”


இப்படி ஜென்மம் என்ற வார்த்தையும், அதைப் பற்றிய நினைவுகளும் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முந்தைய ஜென்மங்களில் என்னவாக இருந்திருப்போம் என்று தெரியாதபோதே அன்றாட நிகழ்வுகளுடன் ஜென்மங்களை பொருத்திப்பார்த்து சிலாகித்துக்கொள்கிறோம். முன் ஜென்ம நினைவுகள் வந்துவிட்டால்? நல்லவை நடந்திருந்து, நல்ல நினைவுகலிருந்தால் வாழ்க்கை மேலும் ஜெகஜோதியாக இருக்கும். துக்கமும் நிராசையும் இருந்திருந்தால்? வாழ்க்கை அதோகதிதான்!


கவிஞர் கண்ணதாசனுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் கறி குழம்பைப் போன்றது. புலமை மிக்கவர்களால் மட்டுமே படிக்கக்கூடியது. ஏழை வீட்டில் எப்போதும் கறி வேகுமா? அதனால்தான் நம் கவிஞர் கண்ணதாசன் கறி குழம்பின் உப்பு, புளி, காரம் குறையாமல், அதே சுவையில் ஏழை வீட்டின் ரசிகையான ரசமாக மாற்றிக்கொடுத்திருக்கிறார். பாமரன் வீட்டிலும் பாட்டு ஒலிக்குதென்றால் அதற்கு காரணம் கண்ணதாசனே!


பிறவி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது பெருங்கவியைப் பற்றி என்ன பேச்சு? காரணம் இருக்கிறதே! சரசுவின் சௌந்தரிய லஹரி என்ற புத்தகத்தின் ஆசிரியர் கண்ணதாசனாயிற்றே! காலையில் கடவுள் பஜனையும், மாலையில் நாத்திகப் பிரச்சாரமும் செய்யக்கூடிய ஒரே கவிஞர் அவரன்றி வேறு யாரு?

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா, கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்ற பாடலை எழுதியதும் அவர்தான். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று கடவுளைச் செல்லமாக சாடி எழுதியதும் அவர் கைகள்தான். இந்த முரண்பாட்டையும் ரசிக்கவைத்தது இவரின் முத்தமிழ். சரசுவின் சௌந்தர்ய லஹரியை ஆத்திகனாக இருந்தபோது எழுதியிருக்கிறார். 


வடநாட்டில் ஒரு சிறுவனுக்கும், இளம் பெண்ணிற்கும் பூர்வஜென்ம நினைவுகள் வந்ததாக படித்தவர், தனக்கும் அப்படிமுன் ஜென்ம நினைவு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததன் விளைவே இந்நாவல். இதைப்போலவே இன்னொரு கதையும் எழுதியிருக்கிறார். இந்தக் கதை தினமணிகதிர் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கிறது.


தத்துவக் கதையாகவும் இல்லாமல், பகவத்கீதையின் முறையையும் கையாளாமல், ஒரு பிறவிக்கும் இன்னொரு பிறவிக்கும் இடையிலிருக்கும் ஜாடைகளையும் பின்பற்றாமல், தமிழ் ரசிகர்களுக்கு சுவையூட்டும் வகையில் மட்டுமே இந்தக் கதையை எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் ஒரு ராகத்தின் பெயரை வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு ஒரு சில அத்தியாயங்களுக்கு ஒரே பெயர் வைத்து நம்மைச் சோதித்திருக்கிறார்.


படித்துவிட்டு அந்தக் குறிப்பிட்ட நோக்கத்தைக் கண்டுபிடியுங்களேன்! ஒரு புத்தகம் எழுதும்வரைதான் எழுத்தாளருக்குச் சொந்தம். எழுதி வெளியிட்டபின், அதன் வெற்றியும் தோல்வியும் வாசகர்களுக்குச் சொந்தம் என்ற வாக்கியத்திற்கிணங்க, இந்தக் கதையின் போக்கு சரியா தவறா என்பதை படிப்பவர்களிடமே விட்டுவிட்டார்.


இந்தக் கதையின் நாயகி சரசுவின் சந்தோஷமே சௌந்தர்யலஹரிதான். அவளுக்கு மிக பிடித்த, அதிகம் பயன்படுத்தக்கூடிய வார்த்தை கிருஷ்ணா கிருஷ்ணா என்பதுதான். இயல்பான ஆசைகள் அனைத்தையும் துறந்து இறைவனிடம் சரண்புகுந்திருக்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் பெற்றோருக்கு வேதனையாக இருந்தது. இளையவர்கள் 10 பேர் கூடி அரட்டையடிக்கும் இடத்தில் ஒரு முதியவர் வந்து அமர்ந்துகொள்ளும்போது ஏற்படுமே ஒரு சங்கடம், அத்தகைய சங்கடத்தைத்தான் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள் சரசு.


எப்போதடா இல்லறத்தின் இனிமையை அனுபவிப்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தங்கையை மேலும் கஷ்டப்படுத்தாமல், பிடிவாதமாக பெற்றோரிடம் சண்டையிட்டு திருமணத்தை நடத்திவைத்துவிட்டாள். அண்ணன் அண்ணியை பார்க்க வந்த மாப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான ஜெயச்சந்திரன் அவர்களைக் கொடைக்கானலுக்கு அழைக்க, சரசுவையும் உடனழைத்துச்செல்ல விரும்பினர். முதலில் மறுத்த சரசு கோவில்களைப் பார்க்கலாம் என்றதும் கிளம்பிவிட்டாள்.


கொடைக்கானலுக்கு சென்றவர்கள் சாது சன்யாசினியான சாரதாம்மையாரின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சித்தம் கலங்காமல் வீடு போய் சேர்ந்தால் போதும் என்றெண்ணி போன அவசரத்தில் வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இதற்குமேலும் அக்காவை தனியே விட விரும்பாத பாமா சரசுவையும் அவள் பெற்றோரையும் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினாள்.


சரசுவைப்போலவே கடவுள் பக்தி கொண்ட தணிகைவேலன் என்றவனை திருமணம் செய்துவைத்தனர். கணவனுக்கு ஏதோ தீராத நோயிருப்பது தெரிந்தும், தனக்கு விதித்தது இவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு சரசு சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள். 4, 5 மாதங்கள் கடந்தநிலையில்தான் அவளுக்கு தன் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வரத்தொடங்கியது.


கணவனையும் மாமியாரையும் சமயபுரத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும் அழைத்துச் சென்ற சரசு, 12 நூற்றாண்டிற்கு முன்பு தானொரு தாசி மகள் அபரஞ்சியாக பிறந்தாலும் உத்தமப்பெண்ணாக வளர்ந்ததையும், தன்னைத் தொட்ட முதல் ஆடவனான வணிகன் நவகோடியையே கணவனாக ஏற்று காதல் வாழ்க்கை வாழ்ந்ததையும், இது பிடிக்காத அவள் தாய் சிங்காரவடிவு அபரஞ்சியை அரசரின் உடமையாக்கியதையும், இளவரசன் தான் இறைஞ்சிக்கேட்டதையும் பொருட்படுத்தாமல் இழிசெயல் செய்ததையும், துர்கையின் ஆயுதத்தால் தன்னை மாய்த்துக்கொண்டு, தானில்லாத உலகில் வாழ விரும்பாத நவகோடி தன்னுடன் மரித்ததையும் நினைவுகூர்ந்தாள். அதன்பின் அபரஞ்சி மேட்டைத் தோண்டி, அபரஞ்சியின் நகைகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள்.


அடுத்து, கோபிச்செட்டிப்பாளையம் நோக்கி செல்லும் சரசு குடும்பத்தோடு நாமும் பயணிப்போம். ஊரைத் தாண்டியுள்ள ஒரு மலைப் பிரதேசத்தில் கார் நின்றதும் அங்கிருந்த ஏரியைப் பார்த்தாள் சரசு. அவள் சிந்தனை 600 ஆண்டுகள் முன் நோக்கிச் சென்றது. கொங்குநாட்டைப் பல்வேறு மன்னர்கள் ஆண்ட சமயமது. அந்த ஏரிக்கரைக்கு பக்கத்திலிருக்கும் பண்ணாரிமேட்டுப்பட்டி பஞ்சாயத்து சபைத் தலைவர் பார்த்திபனாருக்கும் அவரின் முதல் தாரமான அன்னபூரணிக்கும் மூத்த மகளாகப் பிறந்தாள் தங்கம்.


அழகுப் பதுமையாய் வளரும் வஞ்சிக்கொடியின் வயது ஏற ஏற, விவாகம் நடக்க வேண்டுமே என்ற வருத்தத்திற்கு உட்பட்டாள் அன்னை அன்னபூரணி. அதைப்பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அவள் கணவர் பார்த்திபனாரும் இரண்டாம் தாரமான மகேஷ்வரியும், அவர்கள் மகள் பொற்கொடிக்கு வணிகன் அரசநாராயணனை நிச்சயித்தனர்.


இந்தக் கொடுமையைக் காணப் பிடிக்காமல் தங்கத்தின் குடும்பத்தார் அன்னபூரணியின் தங்கையான தெய்வநாயகி வீடிருக்கும் ராயகௌண்டன்பட்டிக்கு சென்றனர். பாவம் அவர்களுக்கென்ன தெரியும். அதுதான் அரசநாராயணனின் ஊரென்று. புரவியில் வரும்போது பார்த்துவிட்ட தங்கத்தைத்தான் திருமணம் செய்வேனென்று பொற்கொடியுடனான திருமணத்தை நிறுத்தி, குறித்த முகூர்த்தத்தில் தங்கத்தின் கழுத்தில் தாலிகட்டிவிட்டான் அரசநாராயணன்.


பார்த்திபனார் பஞ்சாயத்தைக் கூட்டினார். தாயின் அறிவுரைப்படி தங்கம் தான் வயது வந்தவள் என்றும், தானே மனமுவந்து மணம்புரிந்துகொண்டதாக சொல்லிவிட, பஞ்சாயத்து பொடிப்பொடியானது. மரணத்தருவாயிலிருந்த மனைவி அன்னபூரணியைக் கண்டுகொள்ளாமல் பார்த்திபனார் வந்தவழியே திரும்பிவிட்டார். தாயைப் பறிகொடுத்த தங்கம் தன் கணவனுடனும், உடன்பிறந்தோருடனும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றபோது, பார்த்திபனார் ஆட்களின் கைவண்ணத்தில் கத்திக்குத்து பெற்றான் அரசநாராயணன்.


உயிர் பிழைத்துக்கொண்டவன் விட்டுவிடுவானா பார்த்திபனை? 12ஆம் நாளே கொன்று குவித்துவிட்டான். அக்கா மகேஷ்வரியின் கோலத்திற்குப் பழிவாங்க படையெடுத்தான் சித்திரன். அனைத்துக் காவலர்களையும் கொன்றுவிட்டு, அரசநாராயணனைக் கட்டிப்போட்டுவிட்டு, அவன் கண் முன்னே தங்கத்தை சிதிலப்படுத்திக் கத்தியால் குத்திக்கொன்றான்.


நினைவிலிருந்து மீண்ட சரசு, இப்போது மணந்திருக்கும் தணிகைவேலந்தான் போனஜென்மத்தில் அவளைச் சீரழித்தச் சித்திரன் என்று கூறி, அவனுடன் வாழ விருப்பமில்லை என்று திட்டிவிட்டுத் தன் கிராமத்திற்குப் புறப்பட்டாள். தங்கை பாமா கொடைக்கானலுக்குச் சென்றதை அறிந்ததும், கோபிச்செட்டிப்பாளையம் போய் அரசநாராயணனை பார்க்க விரும்பினாள்.

சாரதாம்பாளின் உபயத்தில் தங்கையின் கணவன் ராஜேந்திரந்தான் அரசநாராயணனென்றும், அவர் தம்பி ஜெயச்சந்திரந்தான் நவகோடி என்றும் தெரிந்துகொண்டாள் சரசு. அதுதான் அவள் வாழ்க்கை அதோகதியாவதற்கான முதல்படி. பின் படிப்படியாக என்ன நடந்திருக்கும் என்பதை படித்தே தெரிந்துகொள்ளுங்கள்.


பொழுதுபோக்கிற்காக இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் அவ்வளவே. ஏழேழு ஜென்மத்திலும் பெண்களுக்குத் துன்பங்கள்தான் நேரிடும் என்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது இக்கதை. முதலிரண்டு ஜென்மங்களில் துன்பங்கள் நேர்ந்திருந்தாலும், நிகழ்ஜென்மத்தில் சந்தோஷமாக வாழ்வதைப்போல படைத்திருக்கலாம்.


ஆண்மீகரீதியில் செல்லவேண்டும் என்பதற்காகவும், அவர் சொன்னபடி தமிழ் ரசிகர்களுக்குச் சுவையூட்டும்படி எழுதவேண்டும் என்பதற்காகவும், நிகழ்ஜென்மத்திலும் துயரங்களை எதிர்கொள்ளும் பெண்ணாக சித்தரித்திருக்கிறார். எல்லா காலங்களிலும் இப்படியும் சில ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்ன செய்வது! இந்தக் கதையிலிருந்து இன்னொரு விஷயமும் புரிகிறது. பக்தர்கள் தன்னிடம் சரண்புக கடவுள் கையாளும் யுக்தி கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என்று!


கண்ணதாசன் அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரத்தால் பக்திப் பற்றிய என் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்கிறேன். ஒரு விஷயத்தை அளவுக்கு மீறி நேசிக்கும்போதும், அதைப் பற்றியே யோசிக்கும்போதும், அது நம்மை அடிமைப்படுத்தி ஆட்கொண்டுவிடுகிறது. பக்தியும் அப்படியே. அதன் அளவை மீறும்போது அடுத்தவரைப் பாதித்துவிடுகிறது.


உரக்கப்பாடி சாமி கும்பிடும் சத்தமும், சாமியாடவைத்து குறிகேட்கும் சத்தமும் சுற்றுப்புறத்தை பாதிக்கும் என்ற எண்ணம் இன்றுவரை வந்தபாடில்லை. தோணும்போது ஆலயம் தொழுது, காசு இருப்பின் கற்பூரம் காட்டி, ஆசைப்பட்டால் அர்ச்சனை செய்து, வசதியிருந்தால் பசித்தவனுக்கு பிரசாதம் தருவதே போதுமான பக்தி! இதுவே பாமரனின் பக்தி. தங்கநகைப் பூட்டி, வெள்ளிவேல் சாற்றி, வேண்டுதல் பெயரில் வியாபாரம் செய்வது பணக்காரன் தன் பாவங்களைக் கரைக்கக் கையாளும் யுக்தி.


இப்போது பாமரனும் சரி, பணக்காரனும் சரி. பக்தியைவிட யுக்தியைத்தான் விரும்பிச் செய்கின்றனர். கண் போன்ற கல்விக்குச் செலவழிக்க மனமில்லாமல், கடன் வாங்கியேனும் காளியம்மன் வேண்டுதல் கணக்கை முடிக்க நினைக்கின்றனர்.


பக்திக்கும் பூர்வஜென்ம ஞாபகத்திற்கும் என்ன தொடர்பு? இரண்டுமே நம்பிக்கை தான். நிரூபிக்கப்பட்ட உண்மை இல்லை. இந்தப் புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், பூர்வஜென்ம ஞாபகங்களால் வரும் இடையூறுகள் ஆன்மிகரீதியில் எதிர்கொள்ளப்படுகிறதே அன்றி அறிவியல்பூர்வமாக அல்ல!


நூற்றில் ஒரு வாய்ப்பாக பூர்வஜென்ம ஞாபகங்கள் உண்மையாக வருமேயானால், சரசுவை போல சௌந்தர்ய லஹரி பாடிக்கொண்டு சாரதாம்மையாரின் பின்னால் போகாமல், சாதாரணப் பெண்ணாய் மனநல மருத்துவரை அணுகி அறிவுப்பூர்வமாக செயற்பட்டால், சிக்கல்களைப் பதமாய் நீக்கி வாழ்வைச் சீராக வைத்துக்கொள்ளலாம்.


கடவுளை கம்ளைண்ட் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கும் காவலதிகாரியாகப் பார்க்காமல், கைக்குலுக்கும் நண்பனாக நாம் எப்போது நினைக்கப்போகிறோம்? பக்தி என்பது பார்வைக்கு எட்டாத பரமாத்மாவிற்கு படையல் போடுவது மட்டுமல்ல. பக்தி என்றால் நேசம்.


தேசத்தை நேசிப்பவர்களை தேசபக்தர்கள் என்றுதானே சொல்கிறோம். இறைவனைப் போல, இறைவனைவிடவும் அதிகமாக இதயங்களை நேசிப்போம். ஆண் பெண்ணையும், பெண் ஆணையும், பெற்றோர் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும், மாணவர்கள் ஆசிரியர்களையும் பக்தி செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏழைத்தொழிலாளிகளை பணக்கார முதலாளிகள் பக்தி செய்தால், ஏற்ற தாழ்வுகள் ஓடிவிடும். வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடும்.


மனிதம் மலர்ந்திருக்கும் மனமெல்லாம் மாதவன் வாழும் ஆலயமென்று நான் மட்டும் சொல்லவில்லை. தன் வரிகளின் சுழலுக்குள் நிரந்தரமாய் சிக்கவைத்துச் சென்ற கவிஞர் கண்ணதாசனே சொல்லியிருக்கிறாரே!


இதோ இப்படி!


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும். 

நிலை உயரும்போது பணிவு கொண்டாள் உயிர்கள் உன்னை வணங்கும்.


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம். 

அன்பு நன்றி கருணைக் கொண்டவன் 

மனித வடிவில் தெய்வம்.


இதில் மிருகம் என்பது கள்ளமனம். உயர் தெய்வம் என்பது பிள்ளைமனம். இந்த ஆறு கட்டளை அறிந்தமனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம். 

        ஆம்! ஆறு கட்டளை அறிந்தமனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.


 

Friday, 16 October 2020

உண்மையின் உரத்த குரல்

சத்தியம்! இது சத்தியம்! எல்லாம்வல்ல இறைவனின் ஆணை! சொல்லப்போவது யாவையும் உண்மை -.

உண்மையை ஏற்பதும் எதிர்கொள்வதும் எல்லோருக்குமே ஒரு பெரிய சவால்தான். அந்த சவாலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், துக்கமும் சந்தோஷமும் சரிவிகிதத்தில் கிடைக்கும். வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டுமோ, அதே அளவு தைரியம் சாவதற்கும் வேண்டும். அதேபோலத்தான் பொய் சொல்வதற்கும் எந்தளவு துணிச்சல் வேண்டுமோ, அதைவிட பலமடங்கு துணிச்சல் உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் வேண்டும்.

உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வர். பலர் உண்மையை எதிர்கொள்ள தைரியமில்லாமல் ஓடி ஒளிவர், சிலர் தனக்கு மிகவும் நெருங்கியவரிடம் மட்டும் உண்மையை ஒப்புக்கொள்வர், இன்னும் சிலர் தன்னை நேசிக்கும் ஒருவரிடம் மட்டுமாவது நூறு சதவிகிதம் உண்மையைப் பகிர்ந்துவிட்டு நிர்மலமான மனதுடன் நிம்மதியாக வாழ்வர். ஆனால் இந்தப் புத்தகத்தை எழுதிய மனிதர் சற்று வித்தியாசமாக, தான் நேசிப்பவர்களிடமும், தன்னை நேசிப்பவர்களிடமும், தன் நடிப்பை ரசிக்கும் ரசிகர்களிடமும், தன் தொடரை வாசிக்கும் வாசகர்களிடமும் உண்மைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

சுமார் 13, 14 வருடங்களுக்குமுன் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதியதே இந்தப் புத்தகம். சொல்லாததும் உண்மை. நெகிழவைத்து, நெஞ்சை கலங்கவைத்து, அதிரவைத்து, அடுத்தது என்னவருமோ என்று எதிர்பார்க்கவைக்கும் உண்மைகள் அடங்கிய புத்தகம்.

கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை என்று, அடையார் சிக்னலில் கார் நின்ற கணங்களில் சந்தித்த இறுதி ஊர்வல நிகழ்வையும், அப்போது தோன்றிய நினைவுகளையும் விளக்குவதில் தொடங்கும் இந்நூல், திடுக்கிடவைக்கும் உண்மைகளோடு, தடுக்கிவிழ இருப்போரையும் சற்றே தன்னம்பிக்கையோடு நடமாடத் தூண்டும்படியாக அமைந்திருக்கிறது.

சிறுவயது பருவம், இளமையில் வறுமை, ஈடில்லா உழைப்பு, உறுதிகொண்ட நெஞ்சம், ஊக்கப்படுத்திய சுற்றம், எண்ணிலடங்கா சாதனைகள், ஏறி சென்ற ஏணிப்படிகள். இப்படி சராசரி வரலாற்றுத் தொகுப்பாக இல்லாமல், தான் செய்த தவறுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதன்மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், கசப்பும் இனிப்பும் கலந்தபடி கடந்துவந்த நிகழ்வுகள், நெஞ்சில் நிலைத்துவிட்ட நினைவுகள், விந்தையான மனிதர்கள், வாழ்வின்மேல் கொண்ட ஆசை என்று அனுபவங்களின் தொகுப்பாக எழுதியிருக்கும் புதுமையான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம், வியப்பை சம்பாதிக்கவோ, வெளிப்படைத்தன்மையை விளம்பரப்படுத்தவோ, வெற்றிப்பெற்ற வினாடிகளை வீரமுழக்கம் செய்யவோ, பரிதாபங்களை பார்சலில் பெற்றுக்கொள்ளவோ, செல்வாக்கை செழிக்கவைக்கவோ அல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தன் வாழ்வின் இன்ப துன்பங்களைக் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, தனக்கு தான்தான் சித்ரகுப்தன் என்று அவரே இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை என்றுதான் எனக்குத் தோன்றியது. தான்பட்ட கஷ்டங்களிலிருந்து மற்றவருக்குப் பாடம் சொல்வது ஒருவகை. தெரிந்தோ தெரியாமலோ தான் பிறரைக் கஷ்டப்படுத்தியதிலிருந்து மற்றவருக்கு பக்குவம் சொல்வது இன்னொருவகை. இதில் இந்தப் புத்தகம் இரண்டாவது வகை.

பிரகாஷ்ராஜ் யார்? இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நல்ல மகன், காதல் கணவர், பாசமான தந்தை, குணமான மனிதர். இவையனைத்தையும் தாண்டி அவர் ஒரு பயணி, Traveller. அவரின் மின்னஞ்சல் முகவரியும் அப்படித்தான் இருப்பதாகத் தெரிய வந்தது. பணத்தை சம்பாதிப்பதும் செலவழிப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்து ரசிப்பது. அப்படித்தான் வாழ்ந்தார், வாழ்கிறார், இனியும் வாழப்போகிறார். தாயின் கருவிலிருந்து ஒருமுறை மட்டுமே பிறந்தாலும், தனக்குத்தானே பலமுறை பிறவியெடுத்துக்கொள்கிறார். தன்னை எப்போதும் குழந்தையாக நினைத்துக்கொண்டு கவலை எனும் குப்பைக்கூளங்களை நெருப்பிலிட்டு குதூகலத்தை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்கிறார்.

இந்த புத்தகத்தில் பெரும்பாலான மனித உணர்வுகளை அழகாக கையாண்டிருக்கிறார். அதில் முதல் உணர்வு. பயம்! பயங்கரவாதத்தால் ஏற்படும் பயம்! பாதுகாப்பின்மையால் ஏற்படும் பயம்! செக்கிங் என்ற பெயரில் செய்யும் இம்சைகளால் வரும் பயம். குண்டுவெடிப்பைப்பற்றி அவருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் உரையாடல் நெஞ்சில் பல ஈட்டிகளை ஒன்றாகப் பாய்ச்சுகிறது.

குண்டுவெடிப்பவங்களைப் பார்த்தா சாமிக்கு பயமாப்பா? ஏன் அவங்க கண்ணைக்குத்தலை? நான் விடுற காத்தாடி பார்டர் தாண்டி பறந்தா என்ன பண்ணுவாங்கப்பா? மும்பை ட்ரையின்ல பாம்வெடிச்சாங்களே அங்கேயும் பார்டர் இருக்காப்பா? இந்தக் கேள்விகளுக்கு யாரால பதில் சொல்லமுடியும்? அப்படி முடிஞ்சிருந்தா பிரச்சனைகள் எப்பவோ பார்டர் தாண்டி பறந்திருக்கும். 

அடுத்தது காதல்!

காதலை ஒரு காலத்தில் காவியம் என்றனர். இன்று காலவிரயம் என்கின்றனர். பெற்றோருக்கு காதலைப்பற்றி தெரியவில்லை என்று பிள்ளைகள் ஆதங்கப்படுகிறார்கள். பிள்ளைகளுக்கு மட்டும் என்ன தெரிகிறது? எதற்காக உயிரே உயிரே என்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. எதற்காக உடனடி பிரேக் அப் செய்கிறார்கள் என்றும் புரியவில்லை. ஊரையே எதிர்த்து கல்யாணம் செய்து, கல்யாணத்திற்கு பிறகு காதலை கோட்டைவிடுகிறார்கள். அல்லது ஒருமுறைதான் ஒரு காதல்தான் என்று தற்கொலை செய்து பெற்ற பாவத்திற்கும், பழகிய பாவத்திற்கும் மற்றவர்களை தண்டிக்கிறார்கள்.

எதுதான் காதல்? எப்படி இருக்க வேண்டும் காதல்? எப்படிப்பட்டதாக காதல் இருக்கக்கூடாது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை நம் நடிகர் பிரகாஷ்ராஜ் உணர்வுப்பூர்வமான கதைகள், கவிதைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள்மூலம் விளக்கியிருக்கிறார்.அவர் காதலிகளை காதலிக்கவில்லை. காதலை காதலிக்கிறார். அதனால்தான் காதலிகள் மாறினாலும் காதலின் தீவிரம் அப்படியே இருக்கிறது. அவருக்கு காதல் உடலிலும் உள்ளத்திலும் நிகழும் அழகான மாற்றம். அது அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இவர் எப்படிப்பட்ட காதலர்? டாக்டர் க்ருதியா எழுதிய இந்த கஜல் பாட்டைப்போலவாம்.

காதல் என்பது காவியம்தான். அதில் நான்

எழுத்தாய் சிறைபட விரும்பவில்லை.


காதல் என்பது நூலகம்தான். அதில் நான்

பல பேர் கைப்பட விரும்பவில்லை.


காதல் என்பது சந்நிதிதான். அதில் நான்

சிலையாய் இருப்பதில் விருப்பமில்லை.


காதல் என்பது சொர்க்கம்தான். அதில்

போனவர் யாரும் திரும்பவில்லை. அதனால்

காதலை எப்படித்தான் நம்புவதோ?’ இந்த கேரக்டர்தான் பிரகாஷ்ராஜ். 

தாய்மை! 

கணவன் இல்லாமல் நர்ஸ் வேலை செய்து 3 பிள்ளைகளையும் வளர்த்து, கஷ்டமே தெரியாமல் பார்த்துக்கொண்டது மட்டுமல்லாமல் சுயமாக சிந்தித்து வாழவும் கற்றுத்தந்த அவர் தாயைப்பற்றிய நெகிழ்வான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். 77 வயதான தன்னை ஒரு தேவதைப்போல பார்த்துக்கொள்வதாக அவர் தாய் மகிழ்ச்சியாக பேட்டியளித்திருக்கிறார்.

தன் மகன் சித்தார்த்தன் இறந்தபோது, தாய்மையின் பலமெல்லாம் ஒன்று திரட்டி அவர் மனைவி அவர் கன்னத்தில் அறைந்ததை அவமானமாக எண்ணாமல், அவர்களுக்குத் தரமுடிந்த ஆறுதல் என்று தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். பத்துமாதம் சுமந்தவருக்கே இழப்பு அதிகம் என்றெண்ணி வேலைகளை ஒதுக்கிவிட்டு அவர் மனைவிக்கு அமைதியான ஆறுதலளித்தார்.

பிள்ளையின் இழப்பை இன்னொரு பிள்ளை கொஞ்சமேனும் மறக்கவைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தவருடமே ஒருவருக்கொருவர் ஒரு குட்டி தேவதையை பரிசளித்துக்கொண்டனர். தாய்மையை அவர் பூஜிப்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? 

நட்பு!

அறையில் தன் காதலியோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கதவு தட்டப்பட்டது. ஜன்னலில் எட்டிப்பார்த்தபோது வெளியே அவர் நண்பன் முகம்நிறைய சோகத்தைத் தாங்கியபடி நின்றிருந்தார். அந்தக் காதலியோ நண்பனின் தோழி. கதவை திறக்க வேண்டாம் என்று காதலி சொல்ல, நான் பிறகு பார்க்கிறேன். கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் என்று நண்பனை அனுப்பிவிட்டார். பிறகு பார்க்கவே முடியாமல் போனது. ஒருமணிநேரத்தில் ஃபோன் தான் வந்தது. நண்பன் தற்கொலை செய்துகொண்டார் என்று. நண்பனுக்கு கடைசி ஆறுதலைத் தரமுடியாத குற்ற உணர்ச்சி இன்னும் அவர் இதயத்தை வாள்கொண்டு அறுக்கிறது. அப்போதிலிருந்து யார் கஷ்டம் என்று வந்தாலும் 5 நிமிடம் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலாக பேசிவிட்டே செல்கிறார்.

இன்றைய அவசர உலகில் நாம் செய்யும் மாபெரும் தவறு இதுதான். நேரமில்லை, வேலை இருக்கு, பிறகு பார்க்கலாம்.இந்த 3 வார்த்தைகளையும் எப்போதும் உபயோகித்து நட்பையும் உறவையும் தள்ளிவைக்கிறோம். ஆனால் நாம் அருகில் செல்ல நினைக்கும்போது காலம் கடக்காமல் இருக்குமா? நிச்சயம் இல்லை. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நேரத்தையும் அன்பையும் நம்மைத் தேடி வருவோருக்கு தயங்காமல் பகிர்ந்தளிப்போம். 

பக்தி!

பெரும்பாலான நாத்திகர்கள் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையை எதுவும் சொல்வதில்லை. அந்த நம்பிக்கையால்  அடுத்தவருக்கு பாதிப்பு வரும்போதுதான் எதிர்க்கிறார்கள். பிரகாஷ்ராஜ் அவர்களும் அப்படித்தான். அம்மாவின் வாழ்வில் ஒரே ஒரு பிடிமானமான பிரார்த்தனையை அவர் மதிக்கிறார். மனைவியின் பூஜை முறைகளை எதிர்க்கவில்லை. மகளை பள்ளியில் சேர்க்கும்போது மதத்தை போடமாட்டேன் என்று கோர்ட்டில் வாதாடிதான் பள்ளியில் சேர்த்திருக்கிறார். மரணத்தின் விளிம்பைத் தொட்டபோதும் அவரைக் காப்பாற்றியவரைத்தான் நினைத்தாரே தவிர கடவுளை அல்ல. அதே பிரகாஷ்ராஜ் அவர்கள் விதவைகள் விசேஷங்களுக்கு போகக்கூடாது போன்ற மற்றவரை பாதிக்கும் மூட நம்பிக்கைகளை ஆதரிக்கவில்லை.

ஒரு நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டுமென்றால், அதற்கு ஈடாக இன்னொரு நம்பிக்கையைத் தரவேண்டும். இல்லையென்றால் அந்த நம்பிக்கையில் கைவைக்கக்கூடாது என்பதைக் கன்னட எழுத்தாளர் ஆனந்தன் எழுதிய ‘நான் கொன்ற பெண்’ கதையின் வழியே அழகாகச் சொல்லியிருக்கிறார்.

திமிர்! வெற்றி!

தோல்வியில் வரும் திமிர்தான் வெற்றிக்கு வழி செய்யும். வெற்றியில் வரும் திமிர் நம்மை அசிங்கமாக்கிவிடும். எனக்கு இருக்கும் பயம் வெற்றிதான் என்னும்போது உண்மையை ஏற்காமல் இருக்கமுடியுமா? ஆபாசபடங்களில், அருவா சண்டைக் காட்சிகளில் பெறும் வெற்றியைவிட அழகிய தீயே, மொழி, பொய் போன்ற படங்களின் வெற்றியே நிஜமான வெற்றி என்ற அழகான உண்மையை அற்புதமாக எழுத்தாக்கியிருக்கிறார்.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம். தான் இல்லாமல் எதுவும் நடக்காது என்றிருந்தவரை தான் நலமாக அழகாக இருந்தால் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறமும் அழகாக இருக்கும் என்று மாற்றிய அவர் கல்லூரி நாடக ஒத்திகை அனுபவம் சுவாரசியமானது.

காமம் கோபம்! 

காமத்தைப்பற்றிய மனநல மருத்துவர், கவிஞர்கள் ஆகியோரின் கூற்றுகள் உண்மையாக இருப்பின், இவரின் கூற்றும் சரியே. நான் கோபக்காரந்தான். எனக்கு ஏன் கோபம் வரும்? எப்போது கோபம் வரும் என்று எனக்குத் தெரியாது. இதைப் புரிந்து என்னை அப்படியே ஏற்றுக்கொண்டால் மட்டுமே என்னோடு தொடர்ந்து நட்பு பாராட்டமுடியும் என்ற வார்த்தைகள் எனக்கே என்னை ஞாபகப்படுத்தியது. நான் என் நண்பர்களிடம் வைக்கும் முதலும் கடைசியுமான நிபந்தனை இதுதான். அவர்களும் இதைப் புரிந்து இன்றுவரை நட்பாக இருக்கிறார்கள்.

கணவன் மனைவி வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். எப்படி இருந்தால் வாழ்க்கையில் காதலின் தித்திப்பு குறையாமல் இருக்கும் என்பதையும் தான் படித்த, தான் அனுபவித்த அனுபவங்கள் மூலம் வார்த்தை ஓவியம் வரைந்திருக்கிறார். சொன்ன கையளவு உண்மைக்கே அவர் தண்டிக்கப்படுவதாகவும், இழப்புகளைச் சந்திப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவரின் இந்த வெளிப்படையான தைரியத்திற்காகவே உண்மைகளை ஏற்கலாம். 

எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும்போது மேலே குறிப்பிட்ட பாடலும், நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள், உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள் என்ற பாடலும்தான் நினைவு வந்தது.

செய்த உணவு சுவையாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்று தேவையான பொருட்களால் அலங்கரிப்பதுபோல, சொன்ன விஷயங்கள் மேலும் சுவையாக இருக்க இலக்கியத்தை இணைத்துச் சொல்லியிருப்பது இனிமையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நடிப்பு ஆர்வத்தோடு படிக்கும் ஆர்வமும் சரிவிகிதத்தில் இருப்பதும் புரிகிறது.

எல்லோரும் பிரகாஷ்ராஜ் ஆகமுடியாது என்றாலும், இந்த புத்தகத்தைப் படிக்கும்போதாவது, பொய் என்ற போலி முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, நமக்கு நாமே நம் வாழ்வின் அழகான பக்கங்களைப் புரட்டிப்பார்த்துக்கொள்வோம். செய்த தவறுகளும் புரியும். செய்ய வேண்டிய நன்மைகளும் தெரியும்.

             

Sunday, 9 August 2020

கடவுளின் பிரதிநிதி தொடர்ச்சி.

7.

    அதன்பின் வந்த நாட்களெல்லாம் நிலவினிக்கும் குழந்தைகளுக்கும் வசந்தகாலம்தான். அவளும் குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிட்டாள். குழந்தைகள் அவள் கைத்தொடும் தூரத்தில் ஓடி விளையாடுவார்கள். யாரேனும் இரு குழந்தைகள் நிலவினியின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி மற்ற குழந்தைகளிடமிருந்து தப்பித்து விளையாடுவார்கள். தமிழழகி வந்தால் அவளை ஒரு வழி செய்துவிடுவார்கள்.
        
“ஹேய் நிலா நீ குழந்தையா அவங்க குழந்தையாடி. ஏண்டி இப்படி அமர்க்களம் பண்ற?                                                                ” என்று தமிழ் கேட்டால், “ம்? அவங்க எனக்கு குழந்தைங்க. நான் அவங்களுக்கு குழந்தை. அப்படிதாண்டி என் பிள்ளைங்க எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கான்க.” என்று சிரிப்பாள். இவர்களைக் கட்டி மேய்ப்பதே ஷெண்பகத்திற்கு சுகமான சுமையாக இருக்கும்.

 ஷெண்பகத்திற்கு கணவன் பிள்ளைகள் என்று குடும்பம் இருப்பதால் காலையில் சீக்கிரம் இல்லத்திற்கு வந்து இரவு தாமதமாக வீட்டுக்குப் போய்விடுவார். அப்படியே போனாலும் அவருக்கு குழந்தைகள் நினைப்பாகவே இருக்கும். இப்போது நிலவினி வந்துவிட்டதால் நிதானமாக வந்து சீக்கிரம் சென்றுவிடுகிறார். ஏற்கனவே அங்கு வேலை செய்து அங்கேயே தங்கியிருக்கும் தாமரை மல்லிகாவோடு நிலவினிக்காக மேலும் இரு பெண்களைப் பணியில் அமர்த்தியிருந்தார் ஷெண்பகம். அவர்கள் நிலவினிக்கு இரவும் பகலும் துணையாக இருப்பர். வெளியில் செகியூரிட்டி இருப்பார்.

விளையாட்டுத்தனமாக இருந்தாலும் நிலவினி தன் தாய்மைக்குரிய கடமைகளிலிருந்து தவறமாட்டாள். சின்னக் குழந்தைகளைக் குளிக்கவைத்து உடை மாற்றி அலங்கரித்துவிடுவாள். அவள் வசதிக்கு ஏற்றபடி மல்லிகா உடைகளை செட் செடாக அடுக்கி வைத்திருப்பாள். அவள் ஊட்டிவிட, குழந்தைகள் சமத்தாக வந்து வாங்கிக்கொள்வார்கள். அன்பாக இருந்தபடியே அழுத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய அறிவுரைகளைப் பதிய வைத்துவிடுவாள். வேலைக்கே போகப் பிடிக்கவில்லை என்று பாசத்தில் சொன்னவள், வேலைக்குப்போய் வரும் சம்பளம் முழுவதையும் குழந்தைகளுக்கே செலவழிப்பாள். ஃபோனில் பாடிய தாலாட்டை நேரில் பாடி தூங்க வைப்பாள். நாளுக்கு ஒரு குழந்தை என முறை வைத்து குழந்தைகளை அவள் மடியில் படுக்கவைத்து தூங்கப் பண்ணுவாள். பக்கத்தில் படுக்கவைத்து அணைத்தபடி அவளும் உறங்கிப்போவாள். படிக்கவைக்க நிலவினி என்றால் எழுதவைக்க ஷெண்பகமும் தமிழும்.

தாய்மை உணர்வு நிலவினிக்கு இருந்தபோதும் தாழ்வு மனப்பான்மையால் அவள் தொலைக்கவிருந்த சந்தோஷத்தை குழந்தைகள் அவர்களின் பாசத்தால் மீட்டுக்கொடுத்துவிட்டனர். அன்று முகிலனின் நினைவுநாள். அனைவரும் அதை விசேஷ சிறத்தையோடு அனுசரித்தனர். நிலவினி இந்த வாழ்க்கையை தனக்குக் கொடுத்த முகிலனுக்கு கைக்கூப்பி நன்றி சொன்னாள். தான் பாதியில் விட்டுச் சென்ற ரோஜாத்தோட்டத்தை செழுமையாக வளர்த்துவரும் நிலவினியையும், அவளை ஏற்றுக்கொண்டு முழுமனதோடு நேசிக்கும் குழந்தைகளையும், நிலவினியை தன் மகளாகவே பார்த்துக்கொள்ளும் ஷெண்பகத்தையும், தோழிக்கு தக்க                                         நேரத்தில் நல்வாழ்வைத் தேடிவைத்த தமிழையும், மற்றும் அங்கு பணிபுரியும் அனைவரையும் முகிலன் ஆசீர்வதித்தார்.

Sunday, 2 August 2020

’கடவுளின் பிரதிநிதி தொடர்ச்சி’

                                                                                                                                                                                                                                                                                          5.

    ஒரு வாரம் கழித்துத் தமிழ் அந்த இல்லத்திற்குச் சென்றாள். அன்று விக்கி விக்கி அழுத குழந்தைகள் இன்று  விழிநிறைய குதூகலத்தோடு அவளை வரவேற்றார்கள். அவர்களின் சந்தோஷத்தில் அவளுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

“உங்க அம்மா உங்களுக்கு நிறைய திங்ஸ் வாங்கிக்கொடுத்துருக்கா” என்று சொல்லி அவர்களிடம் பைகளைக் கொடுத்தாள். “அக்கா, அம்மாவுக்கு எப்போ வேலை முடியும். ஏன் எங்களைப் பார்க்க வரமாட்டுறாங்க அக்கா.” என்றது ஒரு சின்னச் சிட்டு. “சீக்கிரமே முடிஞ்சிடும். கண்டிப்பா உங்களைப் பார்க்க வருவா. அதுவரை நீங்க சமத்தா இருக்கனும். சரி இப்போ வாங்க அம்மா கொடுத்ததைப் பார்க்கலாம்” என்று அவர்களின் மனதை திசைத் திருப்பிவிட்டாள்.

அந்த யுக்தி உடனே வேலை செய்தது. அவரவருக்கு வேண்டிய பொருட்களைத் தனித்தனிப் பைகளில் போட்டு அதில் அவர்களின் பெயர் எழுதிக் கொடுத்திருந்தாள். நிலவினி கொடுத்தப் பைகளைப் பிரித்துப் பார்க்க, அதில் அவர்களுக்கு உடைகள், இனிப்புகள், படிப்பதற்கு தேவையான பொருள்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. தமிழழகி ஒரு குழந்தையின் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தாள்.

என் செல்லக்கிளிக்கு அம்மா எழுதுவது.

இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளும் உணர்வுகளும் உனக்கு புரியுமா புரியாதா என்பதைப் பற்றியெல்லாம் அம்மாவுக்குக் கவலை இல்லை. ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தை உருவாகிய நாள்முதல் அந்தக் குழந்தையிடம் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டத் தொடங்கிவிடுவாள். அது அந்தக் குழந்தைக்குக் கேட்குமா கேட்காதா, புரியுமா புரியாதா என்பதைப் பற்றியெல்லாம் அவளுக்கு தேவையில்லை. அப்படித்தான் நானும் என் உள்ளத்து உணர்வுகளை, உன்மேல் நான் வைத்திருக்கும் பாசத்தை உன்னிடம் கொட்டத் துடிக்கிறேன்.

என்னை நீ அம்மா என்று அழைத்ததும் ஆயிரம் கூடை மலர்களை என் தலையில் கொட்டியதைப் போலிருந்தது. என் உடலும் உள்ளமும் இனிய ஸ்வரங்களால் மீட்டப்பட்டது. அடி வயிற்றில் தொடங்கிய குவா என்ற சத்தம் மேலெழும்பி என் காதுகளை நிறைத்தது.

மசக்கை கொண்டதில்லை, பிரசவ வலியும் கண்டதில்லை, மறு ஜனனம் எடுத்துவிட்டேன் உன் அம்மா என்ற ஒற்றைச் சொல்லில். வெறுமையும் தனிமையும் சூழ்ந்திருந்த என் வாழ்வை வண்ணமயமாக்க வந்த உறவே, உன்னை அணைத்து எனக்குள் தொலைத்துவிட வேண்டும். உன்னை யாரும் என்னிடமிருந்து கொஞ்சநேரம் கூட கொஞ்சுவதற்காகக்கூட பிரிக்கக்கூடாது.

காலியாக இருந்த என் அறை இப்போது மழலை தீபங்களால் நிரம்பிவிட்டது தெரியுமா? எனக்கு வேலைக்கு போகவே பிடிக்கவில்லை. குழந்தையை வீட்டில் விட்டு வேலைக்கு வந்த தாய் எப்படி தவிப்பாளோ, அதுபோலவே நீசாப்பிட்டாயா தூங்கினாயா என்று தவிப்பாக இருக்கிறது. உன்கிட்ட பேசும்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

 எனக்கு என் நொடிகளையெல்லாம் உன்கூட செலவழிக்கணும். உன்னைத் தொட்டு அந்த மிருதுவின் மிச்சத்தை என் உள்ளங்கையில செதுக்கிக்கணும். உன் வாசனையை என் சுவாசத்துல கலந்திடணும்.

எனக்கு ரொம்ப பிடிச்சஒரு பொருளை நீ உடைக்கணும். அத நான் மத்தவங்ககிட்ட பெருமையா சொல்லிக்கணும். ஆசையாய் அணிந்துவரும் என் உடையை அடுத்த நிமிடம் நீ அழுக்காக்கணும். உன் வளர்ச்சிய பக்கத்துலருந்து பாத்து ரசிக்கணும். இப்படி எவ்வளவோ ஆசைகள் அம்மாவுக்கு இருக்குடா பட்டு. ஆனால்.

சரி இதைவிடு நல்லா படி, எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இரு, நல்லா சாப்பிட்டுத் தூங்கு, உன் இஷ்டத்தையெல்லாம் நிறைவேற்ற அம்மா இருக்கேன்னு நினைச்சிக்கோ. குழந்தைப் பருவம் ஒரு பொக்கிஷம். அதை நீ சந்தோஷமா அனுபவிக்கணும்.

உன்னை மட்டுமே நினைச்சித் துடிக்கும், அம்மா.

தமிழழகி அந்தக் கடிதத்தை மீண்டும் குழந்தையிடமே கொடுத்தாள். அனைவருமே அதை பத்திரமாக எடுத்துச் சென்று முகிலன் புகைப்படத்திடமும், ஷெண்பகத்திடமும் காட்டி மகிழ்ந்தனர். கடிதத்தைப் படித்தத் தமிழழகிக்கும் ஷெண்பகத்துக்கும் நெஞ்சம் கனத்தது.

முகிலனின் வழிகாட்டுதலிலும், நிலவினியின் தாய் பாசத்திலும், ஷெண்பகத்தின் அரவணைப்பிலும், தமிழழகியின் செல்லத்திலும் குழந்தைகளின் நாட்கள் மாதங்களாகி எப்படியோ மூன்று வருடங்களை கடந்துவிட்டது. இந்த மூன்று வருடங்களில் குழந்தைகள் படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல தேர்ச்சியடைந்திருந்தனர். அம்மாவின் அன்பிலும் அத்தையின் கண்டிப்பிலும் ஆரோக்கியமான உணவு மற்றும் தூக்கத்தைப் பெற்று கொழுகொழுவென்று அழகாக வளர்ந்திருந்தனர்.

ஒருநாள் நிலவினி ஃபோன் செய்யாவிட்டாலும், அவர்கள் முகிலனிடம் சென்று புகார் வாசிப்பார்கள். முகிலனும் அசரீரியாய் மாறி நிலவினியிடம் தூது செல்வார். அவள் உடனே ஃபோன் செய்வாள்.

அவர்கள் வெளியில் எவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தாலும் நிலவினியை பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். அது சிலநேரங்களில் அழுகை, பிடிவாதம் கோவம் இப்படியான உணர்வுகளாக வெடிக்கும். அப்போதெல்லாம் ஷெண்பகம் அவர்களைச் சமாளிக்க பெரும்பாடுபடுவார். நிலவினியின்மேல் கோவம்கூட வரும். அந்தநேரத்தில் குழந்தைகளைக் கண்டிக்காமல் ஆறுதல்படுத்தவே செய்வார். அம்மா பாசம் ஒரு வகையான பாசம். அத்தைப் பாசம் ஒரு வகையான பாசம். குழந்தைகள் அம்மா பாசத்தை நிலவினியிடம் உணர்ந்ததைப்போல் அத்தைப் பாசத்தை ஷெண்பகத்திடம் உணர்ந்தனர்.

6.

    குழந்தைகள் அழுவதைப் பொறுக்கமுடியாத ஷெண்பகம் ஒருநாள் காலையில் தமிழழகியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நிலவினியின் வீட்டிற்கே சென்றார். வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த நிலவினி வாசலை அடைந்தபோது அழைப்புமணி ஒலித்தது. அவள் தந்தை சென்று கதவைத் திறந்தார். தமிழழகியைத் தவிர வீட்டிற்குள் சென்றவர்கள் அப்படியே ஸ்தம்பித்துவிட்டனர்.

”இவதான் உங்க செல்ல அம்மா வினி” என்று தமிழ் அவர்களுக்கு நிலவினியை அறிமுகப்படுத்த, ஒருவர் வாயிலிருந்தும் வார்த்தையே வரவில்லை. “வாங்கம்மா. வா தமிழ். வாங்கடா செல்லம்.” என்பதைத் தவிர நிலவினியால் ஒன்றும் பேச இயலவில்லை. அவளுக்கு உடல் நடுங்கியது. முகம் வெளுத்து கைகள் சில்லிட்டது. நடக்கக்கூடாத நிகழ்வு நிகழுமோ என்ற அச்சம் அவள் உடலெங்கும் பரவியது. எங்காவது போய் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. குழந்தைகளின் மௌனம் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று தின்றது.

அவர்கள் நிலவினியைப் பார்வையால் வருடிக்கொண்டிருக்க, நிலவினிதான் அவர்களை பார்க்கவில்லை. பார்க்கவும் முடியவில்லை. பலருக்கு கண்கள் இருக்கும் பார்வை இருக்காது. ஆனால் நிலவினிக்கு கண்களே இல்லை. கருவிழிகள் இருக்க வேண்டிய இடத்தில் சிறு குழிகள் இருந்தன. அப்போதுதான் நிலவினி எழுதிய கடிதங்கள் கைகளால் எழுதப்படாமல் அச்சடிக்கப்பட்டிருந்தது ஷெண்பகத்தின் நினைவிற்கு வந்தது. அதுவும் நகலெடுக்காமல் ஒரிஜினலாகவே 15 கடிதங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி ஷெண்பகம் அன்று நிலவினியைக் கேட்டதற்கு அந்த உணர்வுகளை திரும்பத் திரும்ப எழுதிப்பார்க்க விரும்பினேன் என்றாள். இவளுக்குள் இத்தனைத் தாய்மை உணர்வா என்று வியப்பாக இருந்தது. ஷெண்பகத்திற்கு பரிதாபம் வரவில்லை. இத்தனைநாள் குழந்தைகளைப் பார்க்க வராததை எண்ணி பைத்தியக்காரத்தனம் என்று தோன்றியது. அதற்கேற்றார்போல் குழந்தைகள் அழ ஆரம்பித்தனர்.

தான் உயிராய் நினைத்திருக்கும் குழந்தைகள் தன்னைக் கண்டதும் எதுவும் சொல்லாமல் அழவும் அவளுக்கு துக்கமும் இயலாமையும் போட்டிப்போட்டுக்கொண்டு வர, “ஏன் அழறீங்க? இந்த பார்வையில்லாதவங்கதான் நமக்கு இத்தனை வருஷமா அம்மாவா இருந்தாங்களான்னு நினைச்சி அழறீங்களா? இனிமே இவங்க வேண்டாம்னு நினைச்சி அழறீங்களா?” என்று அழுகையுடன் கேட்க குழந்தைகளின் அழுகை அப்படியே நின்றுவிட்டது.

“இல்லை! இத்தனை வருஷமா ஒரு முட்டாள் அம்மாவுக்கு பிள்ளைகளா இருந்திருக்கோமேன்னு நினைச்சி அழறாங்க. அப்படித்தானே?” என்று ஷெண்பகம் கேட்க, குழந்தைகள் அனைவருக்கும் என்ன புரிந்ததோ ஒரே நேரத்தில் ஆம் என்பதுபோல் தலையசைத்தனர்.

“பாசத்துக்கும் பார்வைக்கும் என்னம்மா சம்பந்தம்? இவங்க முதல்முதலா உன் முகத்தைப் பார்த்தா பாசம் வெச்சாங்க? நீ அழுத அழுகை, கனிவான பேச்சி, உயிருருக கொடுக்கும் அன்பு முத்தம், உன் பாட்டு, கண்டிப்பு கவனிப்பு இதுக்குதானே இவங்களை உங்கிட்ட ஒப்படைச்சாங்க? இதுல எங்க பார்வை வந்தது? பார்வை இல்லைன்னு இவங்க வேண்டாம்னு நினைச்சிடுவாங்கனு நீ எப்படி நினைக்கலாம்?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் ஷெண்பகம். “இல்லைம்மா, அது வந்து.” “என்ன வந்து போய்? நீ அவங்களைப் பார்க்கலைன்னா என்ன? அவங்க உன்னை காலமெல்லாம் பார்த்துகிட்டே இருக்கப்போறாங்க. உன்னைப் பார்க்கனும்னு இவங்க இரவும் பகலும் தவிச்ச தவிப்பும், துடிச்ச துடிப்பும் உனக்கு தெரியுமா? இந்த ஒன்னுமில்லாத விஷயத்துக்குதான் நீ இவங்களை பார்க்க வராம கஷ்டப்படுத்துனேன்னு நினைச்சாலே கோவமா வருது. என்னம்மா நீ? இவங்களோட செல்ல வினியம்மாடா நீ. என்று கோவத்தில் தொடங்கி மென்மையான குரலில் கேட்டு முடித்தார் ஷெண்பகம்.

ஷெண்பகத்தின் ஆதங்கமான பேச்சும் கோவமும் நிலவினியைக் குளிர்வித்தது. இத்தனை காலம் அவளை ஆட்கொண்ட தாழ்வுமனப்பான்மை மறைந்து தாய்மை உணர்வு விழித்துக்கொள்ள, தேக்கிவைத்த பாசமெல்லாம் கண்ணீராய் வழிந்தது.

“அழாதம்மா வா நம்ம வீத்துக்கு போலாம். நா உன்ன நல்லா பாத்துக்குதேன். நீ என்ன பாத்துக்கோ” என்று வினியைக் கட்டிக்கொண்டு கண்களைத் துடைத்துவிட்டது ஒரு குட்டி தேவதை. மற்றக் குழந்தைகளும் ஓடி வந்து வினியை அணைத்துக்கொண்டனர். இத்தனைநாள் ஃபோனில் கொடுத்த அழுத்தமான முத்தத்தை, தன் இரத்தம், உடர்பொருள் ஆவியெல்லாம் உதட்டில் தேக்கி உயிருருகக் கொடுக்கும் அன்பு முத்தத்தை இன்று நேரில் குழந்தைகளுக்கு கொடுத்தாள். வழக்கம்போல் குழந்தைகள் அவள் பாசத்தில் மனம் மயங்கி நின்றனர்.

வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு நிலவினி அன்று முழுவதும் குழந்தைகளுடன் செலவழித்தாள். அவளும் குழந்தைகளும் வீட்டை ஒரு வழி செய்துவிட்டனர். மாலையில் ஷெண்பகம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு புறப்படத் தயாராக, குழந்தைகள் வர மறுத்து நிலவினியை தங்களுடன் அழைத்தனர்.

“ நிலா, இதுக்குமேலையும் குழந்தைங்களைப் பிரிஞ்சு நீயும் கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தணுமாடி? கொஞ்சநாள் நீ குழந்தைங்கக்கூட இருந்துட்டு வாடி. அப்புறம் என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.” என்றாள் தமிழழகி.  குழந்தைகளும் அவள் கையைப்பிடித்து இழுத்து வரச்சொல்லி அழ, அதுவரை இந்தப் பாசப் போராட்டத்தின் பார்வையாளராய் இருந்த ஷெண்பகம் நிலவினியின் பெற்றோரிடம் பேசினார்.

“உங்க மக புகுந்த வீட்டுக்குப் போறான்னு நினைச்சிக்கோங்க. என்கூட அனுப்பி வைங்க. என் மகளா நான் பாத்துக்குறேன். அவ இல்லாம குழந்தைங்க இந்த 3 வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. இருதரப்புமே ஒருத்தர்மேல் ஒருத்தர் உயிரையே வெச்சிருக்காங்க. கொஞ்சநாளாவது அவ குழந்தைங்கக்கூட இருக்கட்டும். அதுக்கப்புறம் அவளுக்கு வேற வாழ்க்க அமைச்சிக்கத் தோனுச்சின்னாலும் அமைச்சிக்கட்டும்.” என்றார். “எங்க பொண்ணு வேற வாழ்க்க அமைச்சிக்குவான்னு எங்களுக்கு தோனலம்மா. அவளுக்கு இந்தக் குழந்தைங்கதான் வாழ்க்க, உலகம் உயிர் எல்லாம். நாங்களே உங்ககிட்ட இதைப் பற்றிப் பேசலாம்னுதான் இருந்தோம். அவளும் குழந்தைங்களப் பிரிஞ்சி நிம்மதியா இல்ல. கூட்டிட்டுப் போய்டுங்க. அவ அங்க சந்தோஷமா இருப்பா” என்று நிலவினியின் தந்தை அவர் மனைவியை பார்க்க, அவரும் அதற்குச் சம்மதித்தார்.

நிலவினி தங்களுடன் வரப்போகிறாள் என்பதை புரிந்துகொண்ட குழந்தைகள் ஆவலாய் அவள் பொருட்களைப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினர். அதுவரை நடப்பதையெல்லாம் அமைதியாய் பார்த்திருந்த நிலவினி கதறியழுதாள். அனைவரும் அவளருகில் ஓடி வருவதற்குள் தமிழழகி அவளை நெருங்கிவிட்டிருந்தாள். “ஹேய் நிலா என்னடி ஆச்சி ஏன் அழற? சொல்லுடி. அழாதடி. “தமிழ், எனக்கு பார்வை இல்லன்னு நான் இதுவரைக் கவலைப்பட்டதே இல்லடி. ஆனா இதோ இந்த பிஞ்சு உள்ளங்கள் என்மேல் வெச்சிருக்க பாசத்தையும், எனக்காக துடிக்கிறத் துடிப்பையும் பார்க்கும்போது, இவங்க கண்ணுலத் தெரியிற தாய் பாசத்தைப் பார்க்கணும்னு தோனுதுடி.” தமிழழகி அவளைத் தட்டிக்கொடுத்தாள். சிறிது நேரத்தில் அனைவரும் புறப்பட்டனர்.

மாப்பிள்ளையுடன் மணப்பெண்ணாய் புகுந்த வீட்டிற்குப் புறப்பட வேண்டியவள், 15 குழந்தைகள் புடைசூழ ஒரு கன்னித்தாயாய் வீட்டைவிட்டுப் புறப்பட, அவள் பெற்றோர் அவளை மணமுவந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Wednesday, 29 July 2020

'சிரிங்க, ஆனா சிந்திக்காதீங்க.'

    

வணக்கம் நண்பர்களே.
ரொம்பநாளா நான் உங்களை சிரிக்கவைக்கலை இல்லையா? இன்னைக்கு சிரிக்கலாமா?

நான் முன்னாடி வேலை செய்த அலுவலக எம்டியும் அங்க வேலை செய்த இன்னும் சிலரும் சேர்ந்து எனக்கு கண் பார்வை வரவைக்கணும்ற நல்ல எண்ணத்துல பெயர் சொல்ல விரும்பாத ஹாஸ்பிட்டல்ல அப்பாயின்மெண்ட் வாங்கித்தர முடிவு பண்ணாங்க. கொஞ்சநாள் முன்னாடியே எங்களுக்கு தகவல் சொல்லிட்டாங்க. அதுனால எங்க அம்மா ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தாங்க.

“நல்லா சாப்பிடு இப்பவே. அடுத்த வாரம்லாம் ரொட்டியும் பாலும்தான் சாப்பிடனும்.” அப்படின்னு சொல்ல, அப்பா காரணம் கேட்டார். அதுதான் அவளுக்கு கண் ஆப்பரேஷன் பண்ணப்போறாங்களே ஹாஸ்பிட்டல்ல வேற என்ன கொடுக்குறதுன்னு சொன்னாங்க.


ஹாஸ்பிட்டலுக்கு போகிற நாள் வந்தது.  போனோம். காலையிலருந்து வெயிட் பண்ணி உள்ளப்போனோம். ஒரு லேடி டாக்டர் இருந்தாங்க. ரெண்டு கண்களையும் திறந்து திறந்து பார்த்தாங்க. லைட் அடிச்சிப் பார்த்தாங்க. இது தெரியிதா? அது தெரியிதான்னு கேட்டாங்க.
கடைசியா ஒரு கேள்வி கேட்டாங்க. பார்வை வராது வேற என்ன பண்ணனும்? நான் மனசுல நினைச்சிக்கிட்டேன் வேற என்னதான் பண்ணப்போறீங்க? அதையே கொஞ்சம் நாகரிகமா அவங்ககிட்ட கேட்டேன். செயற்கை கண் வைக்கலாம் அழகுக்குன்னு சொன்னாங்க. யோசிச்சி சொல்லுறோம்னு வந்தாச்சி. அம்மா எதிர்பார்ப்பு டொய்ங்னு ஆய்டிச்சு. அந்த டாக்டரை குறை சொல்வதற்கு இல்லை. பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை வரவைக்க முடியாதுதான். அது தெரிஞ்சிதான் அலுவலக அதிகாரிகளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சென்றோம். இது தெரிஞ்சும் எங்க அம்மா எதிர்பார்ப்பு அதுக்கு அந்த டாக்டர் வைத்த ஆப்பு. ஹா ஹா. அவங்க சொன்ன விஷயம் சரிதான். ஆனா சொன்னவிதம் சிரிப்பா இருந்தது.


இப்போ எல்லாரும் ஒவ்வொரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதுல வீடியோ போடுறாங்க. அது தப்பில்லை. ஆனா போடுற வீடியோ ஒழுங்கா இருக்கணும் இல்லையா? சமீபத்துல நான் டெலிகிராம் பயன்படுத்த கத்துக்க ஆரம்பித்ததும் யூடியூப்ல டெலிகிராம் பற்றி போட்டுருக்க வீடியோலாம் பார்த்துட்டு இருந்தேன். அதுல ஒரு வீடியோ ஆஹா அருமை அருமை. ஒருத்தர் டெலிகிராம் படிப்படியா எப்படி இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லிட்டே வந்தார். சரியா இன்ஸ்டால் பண்ணவும் செஞ்சாரு. பெயர் ஃபோன் நம்பர் ஓடீபி லாம் கொடுத்தாரு. கடைசியா என்ன சொன்னாரு தெரியுமா? இதுல வருத்தத்திற்குறிய விஷயம் என்னன்னா இது எனக்கு சப்போர்ட் பண்ணல. உங்க யாருக்காவது சப்போர்ட் பண்ணா எனக்கு தெரியப்படுத்துங்க. அவ்வளவுதான் வீடியோ.

 எதையோ புதுசா கத்துக்கப்போறோம்னு ஆர்வமா இருந்த எனக்கு எப்படி இருக்கும்? எனக்கு மட்டுமா அதை எத்தனை பேர் பார்க்கிறாங்க அவங்கலாம் என்ன நினைப்பாங்க? சப்போர்ட் பண்ணுமா பண்ணாதான்னு தெளிவா தெரிஞ்சிகிட்டு                                                                                         போடவேண்டாமா?

இப்போ நான் புதுசா ஆடியோ எடிட்டிங் பண்ணி விளையாட ஆரம்பிச்சிருக்கேன். நான் போய் விளையாடிவிட்டு அடுத்தப் பதிவை எழுதத் தொடங்குகிறேன். மறுபடியும் சந்திக்கலாம். வரட்டுமா?

Sunday, 26 July 2020

’கடவுளின் பிரதிநிதி’ தொடர்ச்சி.

இதன் முந்தைய பகுதியைப் படிக்க்

3

அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் பார்த்து. “உங்களுக்கு உங்க அம்மாகிட்ட பேசனுமா?” “பேசனும்தான் ஆனா அம்மாதான் இல்லையே?” என்று ஆவலும் ஏக்கமும் நிறைந்தக் குரலில் கேட்டது ஒரு மழலை. ”இல்லை இருக்காங்க. அவள் பெயர் நிலவினி. அவதான் உங்களைப் பார்த்துக்கச்சொல்லி என்னை  இங்க அனுப்புனாங்க. அப்பாவை நினைச்சு அழக்கூடாது. அம்மா இருக்கேன். அப்பாவும் தெய்வமா இருந்து வழிநடத்துவார்னு சொன்னாங்க. சீக்கிரம் உங்களைப் பார்க்க வரேன்னு சொன்னாங்க.”

பிஞ்சு இதயங்கள் என்றும் பச்சைமண். அதில் எதை விதைத்தாலும் ஆழப்பதிந்துவிடும். அதிலும் பாசத்திற்காக ஏங்கும் இவர்களுக்கு பாசம் காட்ட இன்னும் ஒரு இதயம் இருக்கிறது என்று தெரிந்தால் மகிழ்ந்து போவார்கள் என்பதைப் புரிந்துகொண்டவள், “முகிலப்பா எப்படியோ அப்படித்தான் நிலவினி உங்களோட அம்மா. வெளியூரில் வேலையில் இருப்பதால் உங்களைப் பார்க்க வரவில்லை. பேசமுடியவில்லை. முகிலப்பா பார்த்துப்பார்னு நிம்மதியா இருந்தாங்க.” என்றாள்.

தங்களை வேலை காரணமாக பார்க்க வராத அம்மாவை அவர்களால் நம்பவோ ஏற்கவோ இயலவில்லை. அவர்கள் தமிழழகியை நம்பாத பார்வை பார்க்க, அதைப் புரிந்துகொண்டவள் ”நீங்க அவளை ஒருமுறை அம்மான்னு கூப்பிடுங்க. அவ உங்க அம்மா இல்லன்னா உங்ககிட்ட பேசமாட்டா. உங்க அம்மாவா இருந்தா எப்படி பேசுறான்னு நீங்களே பாருங்க.”

முகிலனைப்பற்றியும் இந்த இல்லத்தைப்பற்றியும் நிலவினிக்குத் தெரிந்திருந்ததால் நம்பிக்கையுடன் அவளை அழைத்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.

   ஃபோனை எடுத்த நிலவினி தமிழ் என்று சொல்லும் முன் அம்மா! என்று 15 குரல்களும் ஒரே நேரத்தில் கேட்டது. முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நின்றிருக்க, மீண்டும் அதே குரல்கள் இன்னும் சத்தமாய். அம்மா! அவள் அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள். மூன்றாம் முறையாக அம்மா! என்றதும் அவள் உடலும் மனமும் இனிய ஸ்வரங்களால் மீட்டப்பட்டதைப்போல் உணர்ந்தாள். வயிற்றை மென்மையாய் அழுத்திக்கொண்டாள். தாய்மையின் உணர்வுப் பிரவாகத்தில் அவள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது.

“அக்கா இவங்க எங்ககிட்ட பேசமாட்டுறாங்க. இவங்க எங்க அம்மா இல்.” “ஐயோ வேண்டாம்! அந்த வார்த்தையைச் சொல்லிடாதீங்க! என்னை அம்மான்னு கூப்பிட்ட வாயால அப்படி சொல்லாதீங்க. அம்மாதான்! நான் உங்க அம்மாதான்! நான் உங்க அம்மாவேதான்! உங்ககிட்ட பேசாம பார்க்காம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க!” என்று கதறினாள். அவள் கதறலில் அவர்கள் எதைக்கண்டனரோ அவள் தாய்மையிடம் தங்களை ஒப்படைத்து நின்றனர்.

”அழாதீங்கம்மா! ஏன் எங்களைப் பார்க்க வரல? ஏன் எங்ககிட்ட பேசல?” என்று அம்மாவைச் செல்லமாய் திட்டியதுஓர் குட்டி ஆண் சிங்கம். “வேலை அதிகமா இருந்ததுப்பா அதான் வரல. அதோட முகில் அப்பா உங்களைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிறார். என் குழந்தைங்க நிம்மதியா இருக்காங்கன்னு தோனுச்சு. அதான் வரல.” “அப்பா சாமிகிட்ட போயிட்டாங்கம்மா. நீங்க இங்க வாங்க அம்மா. ப்லீஸ். பயமா இருக்கும்மா வாங்க” என்று கெஞ்சியது ஓர் பெண் கிளி.

“கண்டிப்பா வரேன்மா. நீங்க எல்லாரும் நல்லா சாப்பிடனும். படிக்கனும். தூங்கனும். யாரையும் தொல்லை செய்யக்கூடாது. சரியா? ”சரி அம்மா” என்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனித்தனியே பேசினாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழழகியை உணவு எடுத்துவரச் சொல்லி ஊட்டச்சொன்னாள். அம்மாவின் அன்பில் நனைந்துகொண்டே ஒரு பருக்கைக்கூட மிச்சம் வைக்காமல் உண்டனர்.

“நிலா, இவங்கநிம்மதியா தூங்கி ஒரு வாரமாகுது. உங்கிட்ட பேசிய சந்தோஷத்துல அமைதியா தூங்கட்டும் ஒரு பாட்டுப்பாடுடி.” என்றாள் தமிழழகி.  “கண்டிப்பா பாடுறேன்டி.” அவள் மெல்லப்பாடினாள்.

‘கண்ணே கண்மணி எந்தன் பொன்மணி கண்ணுறங்கு
அன்னை மடியில் அலுப்புத் தீர கண்ணுறங்கு
கண்கள் முழுதும் கனவுகள் சுமந்தே கண்ணுறங்கு
அம்மா அதனை பலிக்க வைப்பேன் கண்ணுறங்கு
கட்டிக் கரும்பே கண்ணீர் நிறுத்திக் கண்ணுறங்கு
கவலைவிடுத்து இதழை மலர்த்திக் கண்ணுறங்கு
மரகத கல்லே மாணிக்கத் தேரே கண்ணுறங்கு
மார்பின் மெத்தையில் சுகமாய் நீயும் கண்ணுறங்கு. அபி

 அவள் பாடிக்கொண்டிருக்க குழந்தைகள் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் தூக்கம் கலையாதபடி தமிழழகி வெளியே வந்தாள். ஷெண்பகத்திடம் நடந்ததைச் சொல்லிவிட்டு நிலவினியின் வீட்டிற்குச் சென்றாள்.

4.

    “வா தமிழ்.” தமிழழகி அறைக்குள் வந்து நிலவினியைப் பார்த்தாள். அவள் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி தெரிந்தது. நீண்டகால தேடல் கிடைத்துவிட்ட நிம்மதி தெரிந்தது. அவள் அருகில் அமர்ந்த தமிழழகி. “நான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்லமாட்டேன் நிலா தெரிஞ்சிதான் செய்தேன்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்தபோது உன் ஃபோன் வந்தது. அனிச்சப்பூ மாதிரி இருக்க உன் மனம், மென்மையான குணம், கணிவான பேச்சு இது எல்லாம் அந்தக் குழந்தைகளை ஆறுதல்படுத்தும்னு நினைச்சேன். அந்தக் குழந்தைங்களுக்கு அப்பா இருந்தார், அத்தை ஷெண்பகம்மா இருக்காங்க, அக்கா நா இருக்கேன். அவங்க மனசுல நிறப்பப்படாத இடம் அம்மா. இதுவரை அவங்களுக்குக் கிடைக்காத அந்த உறவைக் கொடுக்கத் தோனுச்சி. அதுக்கு நீதான் சரியானவளா இருப்பேன்னு நினைச்சேன். கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொல்ற உனக்குள்ள இவ்வளவு தாய்மை உணர்வு இருக்கும்னு எனக்கு இன்னைக்குதாண்டி புரிஞ்சது.”

“மறுக்கப்படுற ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது பயமோ, ஏக்கமோ துயரமோ இருக்கும்டி. படிப்பு, விளையாட்டு வேலைன்னு 30 வருஷத்தை ஓட்டியாச்சு. வேலைக் கிடைக்கிறவர காதலைப் பத்தி யோசிக்கல. கல்யாணம்னு வரும்போது, மத்தவங்க வாழ்க்கை அனுபவங்களைக் கேட்கும்போதுதான் நானும் காதலிச்சிருக்கலாமோன்னு தோனுது. இத்தனை வருஷம் வராத காதல் இனிமேலா வரப்போகுது? பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி சபையில நிக்க வெச்சு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு அடுத்தப் பெண்ணைத் தேடிப்போற கல்யாணச் சடங்கை நினைச்சா எரிச்சலா இருக்கு. அதனாலதான் கல்யாண ஆசை இல்லன்னு சொல்றேன்.”

வெளிய அப்படிச் சொன்னாலும் உள்மனசுல கல்யாணம் என்ற அந்த வார்த்தைய கேட்கும்போதே வெட்கம், சந்தோஷம், வருத்தம் ஏக்கம் எல்லாம் வரும். யாராவது கல்யாண செய்தி சொன்னா, பத்திரிக்கை கொடுத்தா நாமும் இப்படி எல்லோருக்கும் கொடுப்போமான்னு தோனும்.

மண்டபத்துக்குப் போய் மேளச்சத்தம் கேட்டாலே மூச்சு முட்டுற மாதிரி இருக்கும். கச்சேரி கேட்டா கண்ணு கலங்கும்.  ஆனா இந்த ஏக்கங்களுக்காக மனசுக்கு பிடிக்காத ஒருத்தர மணமுடிக்க முடியுமா?” “ஆசை இல்லன்னு சொல்றதுக்கு பின்னாடி இவ்வளவு துயரமா!” தமிழின் கண்கள் கலங்கியது.

“கல்யாண ஆசைய மறைக்க முடிஞ்ச என்னால தாய்மைய மறைக்க முடியலடி. என் அக்கா குழந்தைங்க அவங்க அம்மாவைக் கூப்பிடும்போது என்னை அப்படிக் கூப்பிட யாரும் இல்லையேன்னு ஏக்கமா இருக்கும். சித்தின்னு கூப்பிடுற குழந்தைங்ககிட்ட அம்மான்னு கூப்பிட சொல்லமுடியுமா? குருவிக்கூடு மாதிரி இருக்கக் குடும்பங்களைப் பார்க்கும்போது எனக்கும் கவிதையா ஒரு குடும்பம் வேணும்னு தோனும்.

 யாராவது கர்பமா இருக்கேன்னு சொன்னா அந்த சந்தோஷம் எனக்கு கிடைக்காதான்னு தோனும். என் கைகள் என்னையும் அறியாம என் வயிற்றைத் தடவிப்பார்க்கும். காலமெல்லாம் தாய்மை வரம் கிடைக்காமலே போயிடுமோன்னு தோனும். எதிர்காலத்தை நினைச்சி, அப்போ என்னோட இருக்கப்போற தனிமைய நினைச்சு பயமா இருக்கும்.

அப்புறம்." “ஐயோ! போதும்டி இதுக்குமேல சொல்லாத என்னால தாங்கமுடியலடி. ஏன்? ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற?” “வருத்தத்தைதான் நீ போக்கிட்டியேடி. ஒரு குழந்தைக்கு தாயாக முடியாம ஏங்கிய என்னை 15 குழந்தைகளுக்கு தாயாக்கிட்டியே.” “அப்படின்னா? இனி என்ன செய்யப்போற? நீ என் வாசல் முன்னாடி ஏத்திவெச்சிருக்க தாய்மை என்ற அகல் விளக்கு காத்துல அணையாம காலமெல்லாம் பாதுகாக்கப்போறேன். இனி என் வாழ்நாளெல்லாம் நாந்தான் அவங்களுக்குத் தாய்.”

தமிழால் நிலவினி சொல்வதை மறுக்கவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. அவள் இந்த வழக்கைக் கடவுளிடமும் காலத்திடமும் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றாள். மறுநாள் முதல் நிலவினிக்குப் புது வாழ்க்கைத் தொடங்கியது. வாழ்வில் பற்றில்லாமல் இருந்தவள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். தன்னை அழகுபடுத்தி ரசித்தாள். நானும் அம்மாவாகிட்டேன் என்று மனதுக்குள் ஸ்ரீராமஜெயம் எழுதினாள்.

அவள் குழந்தைகளுக்கு தினமும் போன் செய்து பேசினாள். நேரில் வரச்சொல்லி அழும் அவர்களை வேலை இருப்பதாகக் காரணம் சொல்லிச் சமாளித்தாள். உண்மையில் அவர்களை நேரில் பார்க்க தயக்கமாக இருந்தது. எங்கே அந்தக் குழந்தைகள் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள். அந்தக் காரணத்தை நினைத்துத் துடித்தாள். குழந்தைகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று அறிவு சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது.

தினமும் சலிக்காமல் அன்பு முத்தங்களை வாரி வழங்குவாள். அந்த முத்தத்திற்காகவே அந்தக் குழந்தைகள் காலையில்  கண்விழிப்பர். அந்த அன்பு மயக்கத்திலே அவர்கள் கண் துயில்வர். அந்தப் பிஞ்சு உள்ளங்கள் ஷெண்பகத்திடம் பேசும் முதல் மற்றும் இறுதி வாசகம். ”எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தாங்க அத்தை” என்பதுதான். ஷெண்பகமும் நிலவினியின் தாய்மையில் நெக்குருகிப்போவார்.

நிலவினியின் வீட்டிற்கு இது தெரிய வந்தபோது அவள் தாய்மையின் உறுதிக்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேநேரம் அவர்களாலும் அந்தக் குழந்தைகளின் அன்பைத் தவிர்க்கமுடியவில்லை.

தொடரும்.

Thursday, 23 July 2020

உலகத்தில் சிறந்தது எது?

’பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
பசித்த முகம் பார்த்து, பதறும்நிலைப் பார்த்து பழம் தரும் சோலையது
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவிலது
தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து அணைக்கின்ற தெய்வமது’
அது தூய்மை, அது நேர்மை, அது வாய்மை, அதன் பேர் தாய்மை.

கேள்வியையும் பதிலையும் மட்டும் தெரிந்துகொண்டால் போதுமா? அந்தப் பதில் அழுத்தமாக இருக்க வேண்டாமா? எதற்கும் ஒரு உதாரணம் இருந்தால்தானே அது அழுத்தமான பதிலாகும்? இதோ! அந்த உதாரணம் எழுத்தாளர் சிவசங்கரியின் ‘அம்மா’ என்ற குறுங்கதையில்.

வித்யா என்ற இந்தியப் பெண், அமெரிக்க வாழ் இந்தியனான ராஜுவை மணந்து அமெரிக்கா செல்கிறாள். லூயிவில்லின் அழகிலும், கணவன்மேல் கொண்ட அன்பிலும், வேலைப் பளுவைக் குறைக்கும் எந்திரங்கள் தந்த மயக்கத்திலும் அமெரிக்கா சென்றவள் அங்கு சென்ற சில மாதங்களிலே அந்த ஊர் கற்பித்த சோம்பேறித்தனத்தில், எந்திரங்களிடம் வீட்டு வேலைகளை சரியான முறையில் ஒப்படைக்கவும் ஒரு எந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தொடங்குகிறாள்.

இன்றைய தலைமுறையின் நிலைமை இதுதான். ஆரம்பத்தில் அழகாகத் தெரியும் அமெரிக்கா நாளாக நாளாக ஒரு சலிப்பைக் கொடுக்கிறது. ஆனாலும் வெளிநாட்டின் மோகம் விடவில்லையே! படிப்பு, வேலை, வாழ்க்கை, வாய்ப்புகள் இப்படி ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் தனிமையைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை எங்கிருந்தாலும் தொடர்பு கொள்கிறார்கள், கண்ணும் கருத்துமாக கண்காணிக்கிறார்கள், வருவோம் வருவோம் என்ற நம்பிக்கைத் தந்து, வந்தும் போகிறார்கள். ஆனால் பல பிள்ளைகள்? அதற்கும் ஆயிரம் காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோருக்கு வீடே ஒரு முதியோர் இல்லம்போல. அவர்களுள் சிலர் தங்களைத் தனிமையிலிருந்துக் காத்துக்கொள்ள சமூகச் சேவை செய்கிறார்கள்.

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பிள்ளைகள் மீதும் தவறு இருக்கிறது, பொறுப்பாகவும் பொறுப்பைப் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்த்தப் பிள்ளைகள் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டப் பொறுப்புகளைச் செய்யப் போகும்போது அதைப் புரிந்துகொள்ளாமல் தங்களை வருத்திக்கொள்ளும் பெற்றோர் மீதும் தவறு இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் இந்திய வாழ்க்கை வரும் காலங்களில் வெறும் நினைவாகவே இருக்கப்போகிறது. இங்கு இல்லாத வாய்ப்புகளா? அப்படியே வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாமே. அசிங்கத்தை அப்புறப்படுத்தாமல் அனைவருமே அந்த இடத்தைவிட்டுப் பறந்துவிட்டால் யார் அந்த வேலையைச் செய்வது? பள்ளத்தில் விழுந்துகிடப்பவனைக் கைக்கொடுத்துத் தூக்கிவிடுவதுதானே பலம்? என்னதான் வாய்ப்புகள் வெளிப்படையான காரணம் என்றாலும், வெளிநாட்டின் மீதுகொண்ட வெறித்தனமான ஆசையும் குடும்பச் சூழலிலிருந்துத் தப்பித்துக்கொள்வதும் ஒரு காரணம்தான்.

என்னதான் இந்தியர் அன்பு பாசம் நிறைந்தவர்களாக இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. கலாச்சாரம் நம்மை அப்படி செதுக்கிவைத்திருக்கிறது. கட்டுக்கோப்பான கலாச்சாரத்தில் பெற்றோரின் பாசச்சிறகுகளில் பொத்திவைத்து வளர்க்கப்பட்ட வித்யாவால் அமெரிக்க மக்களின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அவள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்க் டோரா தம்பதியருக்கு 4 பிள்ளைகள். இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். அந்தக் குடும்பத்திற்கு வித்யாவின் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். வித்யாவும் டோராவும் தோட்டத்தில் நின்றிருந்தபோது டோராவின் பெண் ஜென்னிக்கு விபத்து என்ற செய்தி வந்தது. இந்தியத் தாயான வித்யா பதைபதைக்க, அமெரிக்கத்தாயான டோராவோ சிலநொடிகள் வெறித்துப் பார்த்துவிட்டுப் பின் மெல்ல அந்த இடத்திற்குச் சென்றாள்.

அடிப்பட்டு இரத்த வெள்ளத்திலிருந்த ஜென்னியை வித்யா தூக்கப்போக, டோரா அதைத் தடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் வந்ததும் ஜென்னியை அனுப்பிவிட்டு மருத்துவமனைக்குப் போகவில்லை. வித்யா அதைப் பற்றிக் கேட்டதற்கு வீட்டிற்குச் சென்று மார்கிற்கு ஃபோன் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றாள். அதன்படியே மார்கிற்குத் தகவல் சொல்லிவிட்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கும் டோரா முதலில் கேட்ட கேள்வி ஜென்னிக்கு உயிர் இருக்கிறதா? இதைக் கேட்ட வித்யாவின் கோபம் உச்சத்தை எட்டியது. மார்க் வந்ததும் ஜென்னி ஆபத்தான நிலையில் இருக்கிறாள் அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு டோராவும் மார்க்கும் வீட்டிற்கு கிளம்பினர். வீட்டிற்கு வந்த வித்யா டோராவின் தாய் பாசத்தை விமர்சித்து கணவனிடம் விவாதித்தாள். ராஜுவும் அவளுக்கு எதார்த்தங்களைப் புரியவைக்க முயன்று தோற்றான்.

அடிப்பட்டிருப்பவரைத் தூக்கக்கூடாது என்பது அங்குள்ள விதி. தூக்கத் தெரியாமல் தூக்கி அதிலேயே உயிர் போய்விட்டால்? அதனால் முறையான அட்டெண்டர்களுடன் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். ஜென்னி அவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்ததால்தான் டோராவின் வாயிலிருந்து அப்படி ஒரு சந்தேகமான வார்த்தை வந்திருக்கும். ஒரு குழந்தைக்காக இருவருமே மருத்துவமனையில் இருந்துவிட்டால் வீட்டிலிருக்கும் 3 குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது? இதுதான் எதார்த்தங்கள். இதனைத் தப்பாக அர்த்தப்படுத்திக்கொண்ட வித்யா டோராவை பாசமற்ற ஜடம் என்றாள்.

குழந்தைகளின்முன் தன் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கும் டோராவின் தூய்மையான தாய் பாசத்தை வித்யா புரிந்துகொள்ளும் நேரமும் வந்தது.

இந்தியத் தாயான வித்யாவையே அமெரிக்கத் தாயான டோராவின் கால்களில் விழத்தூண்டிய நெகிழ்ச்சியான தருணமது. அது என்ன தெரியுமா? சிறுநீரகம் செயலிழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வளர்ப்புமகள் ஜென்னிக்கு டோரா தன் சிறுநீரக உறுப்பையே கொடுக்க முடிவு செய்ததுதான்!

வெள்ளைக்காரிகளெல்லாம் கெட்டவர்களும் இல்லை. இந்தியப் பெண்களெல்லாம் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்படவேண்டியவர்களுமில்லை. எல்லா நாட்டுப் பெண்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

பாரெங்கும் தாய் பாசம் ஒன்றுதான். அது வெளிப்படும் தன்மைதான் வேறு. பதற்றப்படாமல் புத்திசாலித்தனமாகவும், சொந்தப் பிள்ளை வளர்ப்புப் பிள்ளை என்ற பாகுபாடு பாராமல் பொதுநலமாகவும் முடிவெடுத்த டோரா பூஜையில் வைக்கப்படவேண்டிய மலர்களுள் ஒன்று.

இந்தக் கதையை அமேசானில் படிக்க