பிரியத்தோடு செஞ்சிதர பிரிஞ்சி பிடிக்கும்.
என் நாசியை துளைக்கும் மணத்தில் வறுக்கும் எறால் பிடிக்கும்.
முட்கள் வஞ்சிக்காத வஞ்சிரமீன் பிடிக்கும்.
காரசார கருணைக்கிழங்கு பிடிக்கும்.
உயிர்பிரியும் நொடியிலும் உருளைக்கிழங்கு வறுவல் பிடிக்கும்.
பிசியா இருந்தாலும் பிசிபிலாபாத் பிடிக்கும்.
தோணும்போதெல்லாம் தோசை சாப்பிட பிடிக்கும்.
மகிழ்ச்சியான தருணங்களில் மட்டன் பிரியானி பிடிக்கும்.
தளதளனு பெசஞ்சு தர தயிர்சாதம் பிடிக்கும்.
புள்ளையார் தம்பிகோவில் புலியோதரை பிடிக்கும்.
குட்டித்தொண்டைக்குள்ள கொடகொடையிர காரகுழம்பு பிடிக்கும்.
பாரமான மனதை லேசாக்குற சாம்பார் பிடிக்கும்.
காசில்லாத வீட்டின் ரசிகையான ரசம் பிடிக்கும்.
அம்மா பண்ணிதர குருமா அலுக்காம பிடிக்கும்.
மொத்ததுல உணவுக்காக வாழாம வாழ்க்கைக்காக உணவு உண்ணும் கொள்கை பிடிக்கும்.
இப்படிச் சொல்லும்போதே யூகித்திருப்பீர்கள் உணவு சம்பந்தப்பட்ட புத்தகம் என்று. ஒரு சிலருக்கு புத்தகத்தின் பெயர்கூட தெரிந்திருக்கலாம். ஆம் எழுத்தாளர் திரு. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உணவு யுத்தம்.
இது கட்டுரைத்தொகுப்பு. நாற்பது அத்தியாயங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேலான தகவல்களைக் கொண்டது இந்நூல். உணவுகள் பற்றிய புத்தகங்களுக்கு என்னென்னவோ பெயர்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கு ஏன் உணவு யுத்தம் என்று பெயர் வைத்திருக்கிறார்?
இது உணவுகளுக்கிடையே நடக்கும் யுத்தம். ஆரோக்கியமான உணவுகளை அழித்துவிட்டு, ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் உணவுகள் ஆட்சியில் அமரும் யுத்தம்.
உணவுக்கும் உடலுறுப்புகளுக்குமிடையே நடக்கும் யுத்தம். உடலுறுப்புகள் தன் இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்ளப் போராடுகிறது. சில உணவுகள் அதன் இயக்கத்தை நிறுத்தியேத் தீருவேன் என்று போராடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் இதில் எது ஜெயிக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து அறியப்படாத பலத் தகவல்களைத் தந்திருக்கிறார். இவர் செல்லும் சிறு பயணத்தில்கூட ஏதேனும் ஒரு தகவல் நிச்சயமிருக்கும். ஏன் இவர் பயணம் செல்வதே தகவல் திரட்டத்தான்.
உணவு வகைகள், உணவு அரசியல், உணவு வரலாறு,உலக உணவுகள், இலக்கியத்தில் உணவு. இப்படி உணவு உலகை ஒரு புத்தகத்தில் அடக்கிவிட்டார்.
எல்லா உணவுகளிலும் புகுந்து ஒரு விளாசு விளாசியிருக்கிறார். இட்லியில் ஆரம்பித்து இறுதியில் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் சொன்ன கதையோடு முடியும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது எனக்கு பயமாக இருந்தது. இதுவரை உண்டதெல்லாம் சரியா தவறா என்று யோசிக்கத் தூண்டியது. எதைத் தவிர்ப்பது? எதை உண்பது? என்ற ஆழ்ந்த குழப்பத்திலிருந்தேன்.
அந்தக் குழப்பத்தைப் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அவர் அதைத் தீர்த்துவைத்தார். ‘எல்லாமே உண்ணலாம். ஆனால் அளவோடு உண்ண வேண்டும்’ என்றார்.
‘எல்லாமே’ என்று அவர் குறிப்பிட்டது தமிழ் உணவுகளை. தோசைக்குள் மசாலாவை வைத்து மசால் தோசை என்று தருவதைப் போல, தன் அனுபவங்களுக்குள் தகவல்களைப் புகுத்தி சுவாரசியமாக தருவதில் வல்லவர் அவர்.
உணவகங்களுக்குச் சென்று ‘மெனுகார்ட் ப்ளீஸ்’ என்று ஸ்டைலாகக் கேட்டுவிட்டு கார்ட் வந்ததும் அது ஏதோ பாடப்புத்தகம்போல பலமுறை படிக்கிறோம். அதில் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்குள் பாவம் சர்வரின் நிலை. ஆனால் அந்த மெனுகார்ட் எப்படி வந்தது தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள்.
''மெனு எனும் உணவுப் பட்டியலை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சீனர்கள். அந்தக் காலத்தில் சீன வணிகர்கள் பயண வழியில் உணவகங்களுக்கு வரும்போது அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து தங்களின் விருப்ப உணவைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நீண்ட உணவுப் பட்டியல் தரப்பட்டது.
மெனு என்ற சொல் பிரெஞ்சுகாரர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள Minutes. இதன் பொருள், 'சிறிய பட்டியல்’ என்பதாகும். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உணவுப் பட்டியல் ஃபிரான்ஸில் அறிமுகமானது.
உணவுப் பட்டியல் அறிமுகம் ஆவதற்கு முன்பாக உணவின் பெயர்களை ஒரு கரும்பலகையில் எழுதிப் போட்டிருப்பார்கள். இன்றும்கூட சிறிய உணவகங்களில் கரும் பலகைகளில்தானே உணவுப் பட்டியல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அது ஃபிரெஞ்சு நாட்டு மரபு. விரும்பிய சுவைக்கேற்ப பட்டியலில் உள்ள உணவைத் தேர்வு செய்தவன் பெயர் la carte.
ரெஸ்டாரென்ட் என்பதும் ஃபிரெஞ்சு சொல்லே. ஃபிரெஞ்சு புரட்சியின் பிறகே ஃபிரான்ஸில் நிறைய உணவகங்கள் உருவாக ஆரம்பித்தன. சமையல்காரரை செஃப் என அழைக்கிறோம், இல்லையா? Chefde cuisine என்ற ஃபிரெஞ்சு சொல்லில் இருந்தே அது உருவாகியது. அதன் பொருள் சமையலறையின் தலைவர் என்பதாகும்.
இதுதான் இந்தப் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் தகவல். எப்படி? முதல் தகவலே இப்படியென்றால் முழுதும் படித்தால்?
நம்மிடம் யாராவது என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் என்னசொல்வோம்? சாம்பார் சாதம், ஃப்ரைடுரைஸ். ஏன் தயிர் சோறு, புளிசோறு சொன்னா என்ன? சோறு என்று சொன்னா ஒழுங்கா பேசத்தெரியாதவங்க. லோக்கல் ஸ்லாங்னு நினைப்பாங்களா? சோறு என்பது தமிழ்ச்சொல். அந்தச் சொல்லிற்கு நிகரான வேறு சொற்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? அடிசில், கூழ், அழினி, அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் தமிழில் உள்ளன.
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக் கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்றுகூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.
இதுவும் இந்தப் புத்தகத்திலுள்ள முத்துமணிகள். அதைப் படித்துக் கோர்த்து, உங்கள் அறிவுக்கும் மனதுக்கும் மாலையாக்கிக்கொள்ளுங்கள்.
இட்லி செய்வது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். ஒரு சிலர் அவரவர் பக்கத்து இட்லிகளைச் செய்வார்கள். ஆனால் இட்லியின் வரலாறு? 30 வகையான இட்லியிருக்கிறது என்னும் குறிப்பு? இவையனைத்துமே இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
முனியாண்டி விலாஸ், பாரதவிலாஸ் தெரியும். மரணவிலாஸ்? சாலையோர மோட்டல்களாம். தரமில்லாத உணவை, தூய்மையற்ற இடத்தில் சாப்பிட்டால் அது மரணவிலாஸ்தானே.
இந்தியாவில் 2002 முதல் 2005ஆம் ஆண்டிற்குள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,500 என்ற புள்ளிவிவரம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போதே அப்படியென்றால் இப்போது? நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. பன்னாட்டு உணவகங்கள் பன்னாட்டு உணவு வகைகளின் பட்டியல்களைவிட அதிகம், விவசாயிகளின் தற்கொலையும் அதன் காரணங்கள் அடங்கியப் பட்டியல்கள்.
‘என்ன ருசி இல்லை இந்த தமிழ் உணவில்,
ஏன் மனதைச் செலுத்த வேண்டும் அயல் உணவில்,
ஒழுங்காய் உண்டுப் பாரு நம் உணவை,
நீளும் உன் ஆயுள் நூறுவரை.
நூடுல்ஸில் காய்கறிகள் இருக்கு. அது குழந்தைகளுக்குச் சத்து. சாதா மேகிதான் சாப்பிடக்கூடாது என்று நூடுல்சைக் குழந்தைகளுக்குக்கூட கொடுக்கிறோம். சமைக்க நேரமில்லாதவர்கள், சமைக்கத் தெரியாதவர்கள், உடனடியாக உணவு உண்ண வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கும் முதல் உணவு நூடுல்ஸ். இது சீன உணவு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதன் பின்னணி என்ன? இதை உண்பதால் வரும் கேடுகள் என்னென்ன? முதலில் அதைப் படித்துவிட்டு நூடுல்ஸை உண்ணலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.
தூக்கம் போகனுமா? டீ, புத்துணர்வு வர வேண்டுமா? டீ, தலைவலிக்கிறதா? டீ, டென்ஷனை விரட்டனுமா டீ. இப்படி நம்மை உயிர்ப்பிக்கப் பருகும் பாணம் டீ. இதிலும் நிறைய வகைகள் இருக்கின்றன.
பிளாக் டீ, க்ரீன் டீ, லெமன் டீ இப்படி எத்தனையோ டீ. இதில் எது நல்ல டீ? எல்லோருமே நல்ல டீயைக் குடிக்கிறோமா? நல்ல டீயை எப்படி தயாரிப்பது? அட!
இதையெல்லாம் நானே சொல்லிவிட்டால் அப்புறம் எழுத்தாளர் என்னைத் திட்டிவிடுவார். உங்களுக்கும் சுவாரசியம் இருக்காது. படித்துப்பார்த்துக் குடித்துக்கொள்ளுங்கள்.
அளவோடு குடித்து உடல்நலத்தைப் பேணுங்கள். நரைமுடிக்குச் சாயம் தீட்ட வேண்டிய வேலையிருக்காது. பித்தம் தலைக்கேறிச் சத்தமாக வாந்தி எடுக்க வேண்டி வராது.
உணவு விதிகள் பற்றியும், அந்த விதிகள் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் பற்றியும், கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கத்திப்படம் பார்த்ததிலிருந்து நான் குளிர்பானங்கள் குடிப்பதை விட்டுவிட்டேன். அதில் குளிர்பானங்கள் தயாரிக்க எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, அதனால் விவசாயிகளின் பாதிப்பு. இதைக் கேட்டபின் குடிக்க விரும்பவில்லை. ஒருகாலத்தில் நானொரு கோக் பைத்தியம். மற்ற பானங்களும் குடிப்பேன். சிறு வயதில் கோலிசோடா விரும்பிக் குடிப்பேன்.
நீண்ட வருஷங்களுக்கு பின் சமீபத்தில் ஒரு உணவகத்தில் கோலிசோடா குடித்தேன். யார் பேச்சைக் கேட்டுக் குளிர்பானம் குடிப்பதை விட்டேனோ, அவரே கோக் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் என்பதை மறக்கவுமில்லை.
இந்த புத்தகத்திலிருக்கும் பகீர் பானங்கள் அத்தியாயத்தைப் படிக்கும்போது பகீரென்று இருந்தாலும், அதை நான் நிறுத்திவிட்டதை எண்ணி சந்தோஷமாக இருக்கிறது.
குளிர்பானங்களின் வரலாறு, சோடா வரலாறு, சோடாமூடி கண்டுபிடிப்பு, குளிர்பானங்களிலிருக்கும் வேதியல் பொருட்கள், அதனால் விளையும் தீமைகள், பழங்கால பானங்கள், குளிர்பானங்கள் பற்றிய புத்தகம். இவையனைத்தையும் காலவரிசைப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
மறக்கடிக்கப்படும் பானங்களான சர்பத், மோர், லஸ்சி, ஜிகிர்தண்டா, ஜல்ஜீரா, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றை ஞாபகப்படுத்தியிருக்கிறது இந்நூல். ஐஸ்கிரீம் பற்றிய வரலாறும் ஐஸ் ஹௌஸ் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பறித்துச் சாப்பிடும் பழங்களில் கலப்படம் பண்ணமுடியுமா? பண்ணமுடியும். அதில்தான் அதிகமாக கலப்படம் பண்ணமுடியும் என்கிறது இந்தப் புத்தகம்.
வாழைப்பழம், ஓட்ஸ், பிஸ்கட், பாயசம், பால்பௌடர், பீட்சா, பர்கர், ப்ராய்லர்கோழி, பரோட்டா, சமோசா, உருளைக்கிழங்கு, சிப்ஸ், வேர்க்கடலை, காஃபி, காய்கறிகள்.
இவைகளை இதுவரைச் சாப்பிடமட்டும்தான் செய்திருக்கிறோம். இனியாவது இவைகளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை தெரிந்துகொள்ளலாமே.
எனக்கு முன்பெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் என் பிறந்தநாளை கேக்வெட்டி விமரிசையாகக் கொண்டாடியதில்லை. இரண்டுமுறை என் தோழிகள் கேக் வாங்கி வந்து வெட்டச்சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவே. அம்மா செய்த கேசரி கேக், சாக்லேட். இவ்வளவுதான் என் பிறந்தநாள் கொண்டாட்டம்.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவே பிறந்திருக்கிறேன் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துப் பிறந்தநாள் காணும் பேர்வழிகள்தான் எத்தனை. பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்தவருக்குச் சந்தோஷம் என்பதைவிட பல நிறுவனங்களுக்கு வியாபாரம்.
கேக் வடிவமைப்பதே ஒரு கலையாகிவிட்டது இப்போது. மெழுகுவர்த்தி அதற்குமேல். பெயர் தாங்கியப் பிறந்தநாள் பாடல்களைக்கூட எடுத்துக்கொள்ளலாம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் துவக்கம் ஒன்று இருக்கும் அல்லவா? இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் துவக்கத்தைத் தெரிந்துகொள்ள. கேக் வரலாறு, ரொட்டி வரலாறு, பேக்கரி வரலாறுகளைத் தெரிந்துகொள்ளக் கொஞ்சம் இந்தப் புத்தகத்தைத் திறந்து 15 மற்றும் 16ஆவது அத்தியாயங்களைப் படியுங்கள்.
உணவுகளுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தில் யாருக்கு வெற்றி என்பது நம் கையில்தான் இருக்கிறது. பன்னாட்டு உணவு மோகத்தை விடுத்து இந்திய உணவுகளைத் தேர்வு செய்து உண்போம். முதலில் நாம் சாப்பிட வேண்டியதை நாமே முடிவு செய்வோம். வெற்றி ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்திய உணவிற்கும்தான்.
கடலலையில் நிற்கும்போது அதன் அழகிலும் குளிர்ச்சியிலும் மயங்கி ஆழத்திற்குச் சென்றுப் பார்க்க ஆசைக் கொள்வதைப்போல. ஆரோக்கியமான உணவுகளின் சுவையில் மயங்கி ஆர்வம்கொண்டு அதன் ஆழம் சென்று பார்த்திருப்பதன் வெளிப்பாடே இந்த உணவு யுத்தம். இந்த மதிப்புரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் இந்தப் புத்தகத்திலுள்ள சிறுதுளிகள். இதன் பெருந்துளிகளை இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நூல் குறிப்பு :
உணவு யுத்தம்,
எஸ் ராமகிருஷ்ணன்,
தேசாந்திரி பதிப்பகம்,
விலை ரூ.275
கடைசியாக இந்தப் புத்தகத்தில் நான் பெரிதும் ரசித்த கேள்வி பதில்கள்.:
பிரிக்க முடியாதது என்னவோ?
தியேட்டரும் பாப்கார்னும்!
சேர்ந்தே இருப்பது?
பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!
சேராமல் இருப்பது?
வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!
சொல்லக் கூடாதது?
பாப்கார்ன் விலை!
சொல்லக் கூடியது?
காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!
பாப்கார்ன் என்பது?
பகல் கொள்ளை!
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!