Saturday 6 June 2020

நெருஞ்சிமுள்

"அப்பா, இங்க வாங்க ஒரு நிமிடம்."
"என்ன ஷாலினி," என்றான் நந்தகுமார்.
ஷாலினி நந்த குமாருக்கும் நந்தினிக்கும் பிறந்த ஒரே
செல்லப்பெண். அவள் ஒரு
தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு  படிக்கிறாள்.
மிகவும் குறும்புக்காரி. அவளுக்கு அவள் அப்பாதான் செல்லம்.
தோழனைப்போல பழகுவாள். தினமும் அவள் சந்தித்த  அனுபவங்களைப் பற்றியும்
பள்ளியில் நடந்ததைப்பற்றியும் பேசி மகிழ்வாள்.
நந்தகுமாருக்கும் அது சலிக்காது. அவள் அவனின் பொக்கிஷம் அல்லவா?
நந்தகுமார் ஒரு மென்பொருள்நிறுவனத்தில் பெரிய வேலையில் இருக்கிறான்.
பெரும்பாலும் ஷாலினிக்கு அவனே படிப்பும் சொல்லி கொடுப்பான். ஷாலினி
சொல்லும் பதில் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தால் அவளுக்கு பரிசும் முத்தமும் கொடுப்பான்.
அவளும் அதற்காகவே பதில்களை ஒழுங்காகச் சொல்வாள்.
"அப்பா, நாளைக்கு எங்கள் பள்ளியில் ஓவிய போட்டி, ஏதாவது வரைந்து தாங்க அப்பா,"
என்று கொஞ்சும் குரலில் கெஞ்சினாள் ஷாலினி.
"இங்கே பாரு ஷாலினி,  போட்டி என்பது உன் திறமையை சோதித்து அதற்கு பரிசளிப்பது.
நான் வரைந்து தந்தால் அது எப்படி உண்மையான போட்டியாகும்? நீயே உனக்கு
பிடித்த ஒன்றை கற்பனை செய்து வரை.  அதில் வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும்  கலங்காதே.
எப்படி அதை மேலும் வளர்ப்பது என்று யோசி அப்போதுதான் உன் திறமை மெறுகேரும்.”
என்றான் நந்தகுமார்.
”அப்பா, எனக்கு என்ன தெரியும்? நான் சின்ன பெண் இல்லையா?” என்றாள் ஷாலினி பரிதாபமாக.
”உனக்கு என்ன தெரியாது? நான் உன்னை எத்தனை இடங்களுக்கு அழைத்து
சென்றிருக்கிறேன்? உன் அம்மா உனக்கு எத்தனை கதைகள் சொல்லியிருப்பாள்? உன்
வாழ்வில் எத்தனை அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்? அவையெல்லாம் நினைத்து
பார்த்து ஒரு சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதற்கு உன் வயதில் என்ன
தீர்வு சொல்ல முடியும் என்பதை வரை. உனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்.”
என்று நந்தகுமார் தன் மகளை ஊக்குவித்தான்.
ஷாலினி தான் பெற்ற அனுபவங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஓர் அழகிய ஓவியம் வரைந்தாள்.
மேலே ஒரு தேசிய கொடி பறக்கிறது, அதில் சில கரைகள் படிந்திருக்கிறது, ஒரு
பிச்சைக்காரன் திருவோடு தாங்கியிருக்கிறான், சில முறட்டு ஆண்கள் ஒரு உயிரை
குடிக்கிறார்கள்,ஒருவன் கைநீட்ட மற்றொருவன் பணத்தை தினிக்கிறான். .
இதில் ஒவ்வொரு பிரச்சனையாக  மறைய மறைய தேசிய கொடியில் கரை நீங்கி பொலிவு வருகிறது.
ஷாலினி தன் ஓவியத்தை பெற்றோரிடம் காட்டினாள்.
நந்தினி தன் மகளின் திறமை கண்டு அவளை முத்தம் கொஞ்சினாள்.
”ஷாலுமா, உனக்கு இன்னிக்கி என்ன இனிப்பு டா வேண்டும்? சொல்லு அம்மா செய்து
தரேன். அடடே என் கண்ணுக்குத்தான் எத்தனை திறமை? எத்தனை சமூக பொறுப்பு? என்
செல்லமே,” என்று பாராட்டினாள்.
”அடிப்போடி  லூசு. ஷாலினி என் மகள். என் செல்லம். அதனால்தான் அவளுக்கு
இத்தனை திறமை உன் மகளாக இருந்திருந்தால் அவள் மூளையும் வளராமல்தான்
இருந்திருக்கும்.” ”ஷாலினி,  இந்தாமா என் பரிசு“ என்றபடி ஒரு அழகிய பேனாவை நீட்டினான்.
நந்தினி ”என்னது, உங்களை, இருங்க என்ன செய்கிறேன் பாருங்க” என்று தன் கனவனை
அடிக்க செல்லமாய் கை உயர்த்தினாள்.
”அம்மா, அப்பா பாவம் கையால் அடிக்காதே உள்ளே பூரிக்கட்டை இருக்கும்ல அத
எடுத்துட்டு வந்து அடி.” என்று ஷாலினி அழகு காட்டிவிட்டு ஓடிப்போனாள்.
சில வருடங்கள் கழித்து ஷாலினி வளர்ந்து பெரியவளாகிவிட்டாள். அழகும்,
அன்பும், அறிவும், பண்பும் அவளோடு வளர்ந்தது.  பெண்கள் கல்லூரியில் இளங்கலை
தமிழ் படித்துக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் நந்தினி கோவிலுக்கு சென்றிருந்தாள்.
நந்தகுமார் தன் அறையில் மடிக்கணினியில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது ஷாலினி தன் தந்தையின் அருகில்  வந்து அமர்ந்து கொண்டாள். ”அப்பா,
நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?” என்றாள்.
  ”கேளு  ஷாலினி,
” என்றான் நந்தகுமார் மடிக்கணினியின் திரையைப் பார்த்தபடி.
”அப்பா, நெருஞ்சி முள் என்றாள் என்ன?”
”அது உன் அப்பா வாய்தான் ஷாலு சும்மாக்கெடக்காம சுருக்சுருக்னு குத்திட்டே
இருக்கும்.” என்று தன் கணவனை கேலி செய்து கொண்டு உள்ளே வந்தாள் நந்தினி.
  ”அடிப்போடி இவளே: உள்ள போய் வேலய பாரு. பசிக்கிது சீக்கிரம் ஏதாவது
செய்துத்தொலை.”  என்று நந்தினியை செல்லமாய் திட்டினான்.“
”அம்மா, சும்மா தேஞ்சிப்போன கிராமப்போன் மாதிரி தொனதொனனு பேசிட்டு இருக்காம
இன்னிக்கி எங்களுக்கு விடுமுறைநாள். இன்னிக்காவது எங்களுக்கு ருசியா
சமைத்துப்போடு போ போ.” என்றாள் ஷாலினி.
”இருடி இரு அப்பாவுக்கும் பெண்ணுக்கும் சாப்பாட்டுல உப்பும் காரமும் அதிகமா
கலந்து போடுறேன்.” என்றுவிட்டு நந்தினி உள்ளே சென்று சமையலை கவனித்தாள்.
”ஷாலினி, ஏனம்மா நெருஞ்சிமுள் மேல் திடீர் கவனம்?” என்றான் நந்தகுமார்.
”அப்பா, எங்கள் கல்லூரியில் நெருஞ்சிமுள் பற்றி ஒரு கட்டுரை
எழுதசொல்லியிருக்காங்க அதான் கேட்டேன் அப்பா. எனக்கு நெருஞ்சிமுள் பற்றி
ஒன்றும் தெரியாது. அதுவுமில்லாமல் அது ஒரு முள் காலில் குத்தினால் வலிக்கும்.
இரத்தம் வரும் அதை தவிர்த்து வேறு என்ன இருக்கு?” இதை வைத்து எப்படி அப்பா
கட்டுரை எழுதுவது?” என்றாள் ஷாலினி.
”ஷாலினி, நம் வாழ்க்கையின் வலியும் வேதனைகளும் நெருஞ்சிமுட்கள்தான்.
மறக்கமுடியாத சில வேதனைகள் இதயத்தின் உள்ளேயிருந்து
குடைந்துகொண்டிருக்கும். அதுதான் கண்ணீராய்   வெளிவரும்.
காலில் தைத்த முள்ளை எடுக்கமுடியும். ஆனால் இதயத்தில் தைத்துவிட்டால்
எப்படியம்மா எடுக்கமுடியும்?“
”அப்பா, உங்களுக்கு இதுபோன்ற வேதனைகள் இருக்கிறதா?”
”ஷாலினி, நான் இதை சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீ
சொன்னது உண்மைதான். எனக்கும் நெருஞ்சிமுள் இதயத்தில் இருக்கு.
சொல்கிறேன் ஒரு தோழனைப்போல்.”
”சொல்லுங்க அப்பா.” என்று ஷாலினி ஆர்வமானாள்.
”ஷாலினி, நான் ஒரு பெண்ணை மனதாற காதலித்தேன். உண்மையான உயர்ந்த காதல்.
தெய்வீக காதல் என்று கூட சொல்லலாம். ஆனால் அவள் வீட்டில்
ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு மதம், வேறு சாதி, பண வசதி குறைவு என்று என்னை
நிராகரித்துவிட்டார்கள்.
அவளும் தன் பெற்றோர் பேச்சை மீறமுடியாமல், மீற விரும்பாமல் வேறு வழியில்லை.
என்னை மன்னிச்சிடுங்க என்றுவிட்டு அவள் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணந்துகொண்டாள்.
சில வருடம் கழித்து என் பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் உன் அம்மாவை மணந்துகொண்டேன். இருந்தாலும் அந்த முதல் காதல் என் இதயத்தில் இன்னும்
நெருஞ்சிமுள்ளாய் குத்திக்கொண்டுதான் இருக்கிறது.”
”அப்பா, பெற்றோருக்கு எதிராக நடக்கக்கூடாது அல்லவா? அவர்கள் பாவம் இல்லையா?
அவர்கள்தானே நம்மை பெற்று, பெயர் வைத்து, உணவு உடையளித்து, படிக்கவைத்து,
வேலைக்கு அனுப்புகிறார்கள்?
அவர்களுக்காக காதலை விட்டுத்தந்தால் என்ன?”
ஷாலினி பேசப்பேச நந்தகுமார் மலைத்துப்போனான். தன்மீதும் தன் மனைவி மீதும்
அவள் வைத்திருக்கும் நம்பிக்கையும்  மதிப்பையும் கண்டு அவன் வியந்தான்.
இருந்தாலும் அவன் கருத்தை அவனால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. சொன்னான்.
”ஷாலினி, காதலும் உண்மையானது, நேர்மையானதுதான். காதல் ஒரு தீர்மானம். அது
ஒரு நம்பிக்கையின் பெயரில் எடுக்கும் ஒரு உடன்படிக்கை.
ஒரு முறை  எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. ஒருவனோ ஒருத்தியோ
உண்மையான காதலுடன் வந்தால், யாருக்காகவும் யாரையும் விட்டுக்கொடுக்க கூடாது.
அதிலும் அவள் ஒரு பெண். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து
அறிமுகமில்லாத வீட்டிற்குப்போகத்தான் போகிறாள். அதற்கு ஏற்கனவே அறிமுகமான
வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளலாமே? அதுமட்டுமல்லாமல் அவளுக்கு பெற்றோர்
மட்டும்தான் முக்கியமென்றால் அவள் காதலித்திருக்கவே கூடாது.”
”அப்பா, எல்லா காதலுமே உண்மையானதா?”
”நியாயமான கேள்வி ஷாலினி. நாணயத்தின் இருபக்கங்கள் போல காதலிலும் நல்லது
கெட்டது இருக்கிறது. அதை நாம் புரிந்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.
அதனால்தான் படிக்கும் பள்ளி பருவத்தில் காதலிக்க கூடாது. அந்த பருவத்தில்
சரி எது, தவறு எது. என்று அறியும் மனப்பக்குவம் இருக்காது. அதுமட்டுமின்றி
பள்ளிப்பருவம் படிப்பதற்கான பருவம். அந்தப்பருவத்தில் படிப்பில் கவனம்
சிதறினால் பின் படிப்பில் நாட்டம் போய்விடும்
கல்லூரி பருவத்திலோ அல்லது வேலைக்கு செல்லும் பருவத்திலோ நமக்கு கொஞ்சம்
முதிர்ச்சி வந்துவிடும். நல்லது கெட்டதை நாம் யூகித்து அறிய முடியும்.
ஆனால் அப்பொழுதும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ச்சேட்டிங்கில் ஆரம்பித்து, டேட்டிங் வந்து, டிராப்பிங்கில் முடியும் காதலும் உண்டு.
இப்போது இருக்கும் டெக்னாலஜி அப்படி.
  நிலவில் களங்கம் இருக்கிறது என்று நம் முன்னோர்கள் சொல்வதுபோல காதலுக்கு
அது ஒரு தீராத களங்கம். ஆனால் உண்மையான காதல் இன்னும் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது. அதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அன்பும் அதிஷ்ட்டமும் இருந்தால் சிக்கும்.”
”அப்பா, ஒருமுறைதான் காதல் வரவேண்டும். அது ஆயுள் உள்ளவரை மறையக்கூடாது
என்பதை பற்றி உங்கள் கருத்து?”
”உண்மையான காதலாக இருந்தால் கடைசிவரை அந்த காதலை நினைத்துக்கொண்டிருக்கும்
தகுதி அந்த காதலுக்கு இருந்தால் ஒருமுறை காதல் போதும் ஷாலினி.”
”அப்பா, அந்த பெண் அவள் பெற்றோருக்காகக் காதலை விட்டுக்கொடுத்துட்டாங்கனு
சொன்னீங்களே, நீங்கள் மட்டும் உங்கள் பெற்றோரின் கட்டாயத்தின்பேரில்
அம்மாவை மணந்தது ஏன்? உங்கள் காதல் உண்மையானது இல்லையா? நீங்கள் அவளையே
கடைசிவரை நினைத்திருக்கக்கூடாதா?”
”இதுவும் சரியான கேள்விதான் ஷாலு. ஆனால் நான் அவளுக்காக என் பெற்றோரிடம்
முன்னாடியே பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். அவளுக்காகத்தான் காத்திருந்தேன்.
ஆனால் அவள் அப்படி செய்துவிட்டாள். அதன்பின் என் பெற்றோர் என்னிடம் கேட்ட நியாயமான  கேள்விக்கு நான் என் திருமணம் வழியாக பதில் சொன்னேன்.”
”அது என்ன கேள்வி அப்பா,” என்றாள் ஷாலினி ஆவலுடன்.
”நீதான் அவளை தேர்வு செய்தாய். உன் முடிவுக்கு நாங்கள் குறுக்கே வராமல் உன்
சந்தோஷத்திற்காக ஒத்துழைத்தோம். ஆனால் இது நடக்காமல் போனதற்கு அவளும் அவள்
பெற்றோர்மேல் வைத்த அன்பு மட்டுமே காரணம்.
அப்படியிருக்கும்போது எங்களின் சந்தோஷத்திற்காகவும் உன் காயத்திற்கு
மருந்து போடும் விதத்திலும் நீ ஏன் இந்த கல்யானத்திற்கு
ஒத்துக்கொள்ளக்கூடாது? தன் பிள்ளைக்கு திருமணம் செய்து பார்த்து தன்வம்சத்தை விருத்தி செய்ய வேண்டுமென்பது எல்லா பெற்றோரின் இயல்பான ஆசைதானே?”
என்றார்கள். அவர்களின் சந்தோஷமும் சரியென்றுபட்டதால் திருமணம் செய்துகொண்டேன்.
”நல்ல முடிவுதான் அப்பா.”
நந்தினி இருவருக்கும் சாப்பிட நொறுக்குத்தீனி கொண்டு வந்து தந்தாள்.
”ஷாலு என்னடி வெறித்து பார்க்கிறாய்? என்ன வேண்டும்?” ”ஒன்றுமில்லை அம்மா.”
என்றாள் ஷாலினி. நந்தினி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு போனபின் ஷாலினி கேட்டாள்.
”அப்பா, உங்கள் இதயத்தில் அந்த நெருஞ்சிமுள் இருந்ததால் நீங்கள் அம்மாவுடன்
சந்தோஷமாய் இல்லையா? அதனால்தான் எனக்கு தெரியாமல் வேடிக்கையாக சண்டை போடுகிறீர்களா?”
”சேச்சே நான் அவளிடம் சண்டை போட்டு நீ எப்போது பார்த்தாய் ஷாலினி? நான்
அவளிடம் செல்லமாக மட்டும்தான் கோபித்துகொள்வேன். இது எங்களுக்கு வரும் செல்ல ஊடல்கள் ஷாலு.
அது மட்டுமல்ல எனக்கு இப்படி ஒரு நெருஞ்சிமுள் இருந்ததை நான் அவளை
பார்த்ததுமே சொல்லிவிட்டேன். அதன்பின் தான் நான் அவளை திருமணம் செய்து
கொண்டேன். அவளும் என் காயத்திற்கு அன்பால் மருந்து போட்டாள். உன்னைப்போல
ஒரு தேவதையை எனக்கு பரிசாய் தந்தாள். என்னை உண்மையாய் நேசிக்கிறாள். என்வாழ்வை மீண்டும் மலரச்செய்தாள். அந்த பாவத்திற்கு நான் எனக்குள் இருக்கும்
நெருஞ்சிமுள்ளை அவள் இதயத்தில் ஏற்றலாமா?”
”புரியவில்லை அப்பா?”
”என் பெற்றோரின் கட்டாயத்திற்காகத்தான் உன்னை மணந்தேன், மற்றபடி என்னால்
உனக்கு எந்த சந்தோஷமும் தரமுடியாது என்று ஒரு பெண்ணை துன்புறுத்தக்கூடாது.
அவளின் உன்மையான அன்பிற்கு மரியாதை தரவேண்டும். அதைவிடுத்து என் இதயத்தில்
இருக்கும் முள்ளை பதிலுக்கு அவளுக்குத் தரக்கூடாது. நாம் நினைத்த சந்தோஷம்
நமக்கு கிடைக்காமல் போனால் நம்மை சந்தோஷமாக பார்த்துக்கொள்பவளை நாம்
சந்தோஷமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தபின் கணவன் மனைவி சதா
சண்டை போட்டுக்கொண்டிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கும். பிஞ்சு இதயத்தை
வேதனையின் ஈட்டிகள் பதம்பார்த்துவிடும். எதிர்காலம் இருண்டு போய்
குழந்தைக்கு மனநோய் கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழந்தை
பெறும்வரையில்தான் கணவன் மனைவி பெரிய சண்டைகள் பிரிவுகளை அனுமதிக்க
வேண்டும். குழந்தை பிறந்தபின் கணவன் மனைவி பிரிவை கனவில் கூட நினைக்கக்கூடாது.”
”அப்பா, கடைசிவரை பெற்றோர் சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது காதலை?”
”காதலிக்கவும் காதலைசொல்லவும் காதலிக்க வைக்கவும் பல ஆண்டுகள்
காத்திருக்கிறோம். அதுபோல  பல ஆண்டுகள் நம்மை வளர்த்த பெற்றோரின்
சம்மதத்திற்காகவும் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும். முடிந்தவரை போராட
வேண்டும் முடியவில்லையென்றால் திருமணம் செய்து கொண்டு தினமும் அவர்களை
சமாதானம் செய்யவேண்டும்.
அவர்களின் சந்தோஷமே நம் சந்தோஷம், அவர்கள் இல்லாமல் நம் வாழ்க்கை
தொடங்காது, வம்சம் விருத்தி பெறவும் நாம் சந்தோஷமாய் வாழவும் அவர்களின்
ஆசீர்வாதம் என்றும் வேண்டும் என்பதை புரியவைக்க வேண்டும்.
பாசமும் காதலைப்போல உண்மையானதுதான். பேசும் விதத்தில் பேசினால் கல்லும்
கரையும். கனிபோன்ற அவர்களின் இதயம் கரையாதா?”
”அப்பா, நீங்கள் என் அப்பாவாய் கிடைத்தது எனக்கு மிகவும் பெருமையாய்
இருக்கிறது.” நந்தகுமார் தன் மகளின் தலையை ஆதரவாய் கோதினான்.
”போதும் உங்கள் காதல் புராணம், சாப்பாடு தயார்.  இருவரும் வந்து
சாப்பிடுங்கள்.” என்றாள் நந்தினி.
”பார்த்தாயா ஷாலு? உன் அம்மா நாம் பேசியதை உற்றுக்கேட்டுவிட்டாள்.”
”ஆமாம் நீங்க பேசியது பெரிய சிதம்பர ரகசியம் பாருங்க, நான்ட்
சமையலரையிலிருந்தே உற்றுக்கேட்டேன். அடச்செ இந்த அரைக்கதவை
நெருங்கியபோதுதான் கேட்டது. சரி சரி சீக்கிரம் வாங்க” எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்றாள்.
”அப்பா, அம்மாவை நீங்க காதலிக்கிறீங்களா? அல்லது கடமை, கணவனாக இருப்பதால்
மனைவி மீது இருக்கும் பொறுப்பா?“ ”இதை நீ என் நந்துகுட்டிகிட்டயே கேளு
ஷாலினி.“ ”சொல்லுங்க அம்மா ப்லீஸ்.” என்றாள்.
”அவர் என்னை காதலிக்கிறார். என்னை மட்டுமே என்றென்றும் காதலிப்பார்.” என்று
நாணத்துடன் காதலாய் தன் கணவனை பார்த்தபடி சொன்னாள்.
”அவ்வளவு நம்பிக்கையா அம்மா, எப்படி? அவர்தான் வேறொரு பெண்ணை காதலிச்சாரே?
எப்படி உங்கள் மீது காதல்வரும்? உங்களுக்கு பொறாமையாய் வருத்தமாய் இல்லையா?”
”அச்சோ ஷாலுமா குடும்பத்தில் இப்படி கும்மியடிக்கிறியே. அப்புறம் யார் அவளை
மலையிறக்குவது?” என்றான் நந்தகுமார்.
”எதற்கு பொறாமை ஷாலு. அவர் எல்லாவற்றையும் கல்யாணத்துக்கு முன்னாடியே
என்கிட்டே சொல்லிட்டார். அவளும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாள். இது அவரோட
கடந்தகாலம். அதுக்கு நான் மரியாதை தரணுமே தவிர வருத்தமோ பொறாமையோ படக்கூடாது.
எனக்கு என் காதல் மீது நம்பிக்கை இருந்தது. அவர் மனசை ஜெய்க்கமுடியும்னு
உறுதி இருந்தது. அவரும் யாரையும் துன்புறுத்தமாட்டார். அப்படியிருக்க என்னை
புரிஞ்சிக்குவார்னு தெளிவு இருந்தது. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்பறம்
சொல்லியிருந்தாலும் நான் அவரையும் அவரின் கடந்தகாலத்தையும் மதித்திருப்பேன்.
நம் காதல் காதலிப்போரை மதிக்க வேண்டும். அவர்களின் நுண்ணிய உணர்வுகளை
புரிந்துகொள்ள வேண்டும். எப்படிப்பட்ட நிலையையும் அமைதியாய் எதிர்கொள்ள
வேண்டும். ஆர்பாட்டம் செய்து அவர்களை அவமானப்படுத்தக்கூடாது.”
தன்னை முழுமையாய் புரிந்துவைத்திருக்கும் தன் மனைவியைப் பெருமையாய் பார்த்தான் நந்தகுமார். இவள் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டான்.
”அம்மா, அப்பா, நீங்க ரெண்டுபேரும் ரொம்ப லக்கி. நீங்க எனக்கு பெற்றோரா
கிடைச்சதுல நானும் லக்கி.” என்றாள் ஷாலினி.
மூவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டனர் ஒருவரை ஒருவர் கேலி செய்தபடி.
ஷாலினி தன் தந்தை சொன்னவற்றையெல்லாம் மனதில் ஏற்றி அந்த கட்டுரையை
எழுதினாள். முதல் பரிசும் பெற்றாள்.
இப்படி எல்லோரின் வாழ்விலும் ஒரு நெருஞ்சிமுள் நிச்சயம் இருக்கும்
இருந்தாலும் சிரித்து மகிழுங்கள். அன்பென்னும் களிம்புகொண்டு காயத்திற்கு
மருந்து போடுங்கள். மற்றவருக்கும் அந்த முள்ளை கொடுத்துவிடாதீர்கள். என்று
ஷாலினி கட்டுரையை முடித்ததை படித்துவிட்டு நந்தகுமாரும் நந்தினியும் மனம்
நெகிழ்ந்து சிரித்தனர்.
முற்றும்.

10 comments:

  1. வித்யா
    அருமை

    ReplyDelete
  2. "இப்படி எல்லோரின் வாழ்விலும் ஒரு நெருஞ்சிமுள் நிச்சயம் இருக்கும்" ஆம் நிறைய‌ நெருஞ்சி முட்கள் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. அதையெல்லாம் பற்றி எழுதத்தானே வலைப்பக்கம். எழுதி தீர்த்துவிடுவோம்.

      Delete
  3. வாழ்த்துக்கள். பதிவுகள் தொடரட்டும் சகோதரி.

    ReplyDelete
  4. நல்ல கருத்துள்ள கதை. அம்மா மனத்திலும் ஒரு நெறிஞ்சி முள் இருக்கவேண்டும். அதனால்தான் கணவனின் கடந்த காலத்தை மதிக்கும் பக்குவம் அடைந்திருப்பாள்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கொலைவெறி அரவிந் சார் உங்களுக்கு. ஒரு பெண்ணை நல்லவளா சித்தரிக்க விடமாட்டீங்களே.
      என் கதாநாயகி என்னை போல மென்மையான குணமுள்ளவள். அதான் இப்படி.

      Delete
  5. super and meaningful story "இப்படி எல்லோரின் வாழ்விலும் ஒரு நெருஞ்சிமுள் நிச்சயம் இருக்கும்
    இருந்தாலும் சிரித்து மகிழுங்கள். அன்பென்னும் களிம்புகொண்டு காயத்திற்கு
    மருந்து போடுங்கள். மற்றவருக்கும் அந்த முள்ளை கொடுத்துவிடாதீர்கள்."Fact Fact.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஃபெர்நாண்டோ

      Delete